வாழ்க்கையிலே எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன; எத்தனை எத்தனையோ
அனுபவங்கள், புலன் உணர்ச்சிகள் உண்டாகின்றன. அவைகளெல்லாம் மனத்திலே எங்கேயோ பதுங்கிக்
கிடக்கின்றன. சிலவற்றை நினைத்த உடனேயே அவை நினைவுக்கு வந்துவிடுகின்றன. சில அவ்வளவு
விரைவிலே நினைவுக்கு வருவதில்லை. சில மறந்தே போகின்றன; எவ்வளவு நேரம் முயன்று நினைத்துப்
பார்த்தாலும் நினைவுக்கு வருவதேயில்லை.
சென்ற வாரம் செவ்வாய்க்கிழமையன்று உண்ட பொரியல் அல்லது சாம்பார் நினைவில் இருக்கிறதா?
அது மறந்தே போகிறது. அப்படி மறந்து போவதும் நல்லதுதான். தேவையற்ற பலவற்றை நினைவில்
வைத்திருந்தால் மனத்திற்கு அவை வீண் சுமைதானே?
ஆனால் அந்தச் செவ்வாய்க்கிழமையன்று உண்ட பொரியல் வயிற்றுக் கோளாறு ஏற்பட்டுத்
தொல்லை கொடுத்திருந்தால் அந்தப் பொரியலைப் பற்றிய நினைவு அவ்வளவு எளிதாக மறந்துபோவதில்லை.
“அப்பா, அந்த பொரியலைச் சாப்பிட்டு என் வயிறே கெட்டுப் போச்சு” என்று பல நாள் சொல்லிக்கொண்டே
இருக்கிறோம்.
நமக்குத் துன்பத்தையோ, இன்பத்தையோ அளித்தவை நினைவில் இருக்கின்றன. அவற்றிலுங்கூடத்
துன்பந் தந்தவை கொஞ்சம் விரைவிலே மறந்து போகின்றன. இன்ப நினைவுகள் நன்கு மனத்திலே பதிந்து
நிற்கின்றன. துன்பந் தந்தவை நினைவிருந்தாலும் அவை இப்பொழுது கூர்மை மழுங்கியிருக்கின்றன;
அவற்றின் வேகம் வரவரக் குறைந்து போகின்றது.
இளமைப் பருவத்திலே தான் படித்த பள்ளிக்கூடம், கல்லூரி ஆகியவற்றை ஒருவன் பெருமையோடும்
மகிழ்ச்சியோடும் சென்று பார்த்து வருகின்றன். அங்கு பெற்ற இன்ப அனுபவங்களெல்லாம் அப்பொழுது
நினைவுக்கு வருகின்றன. அங்கு பட்ட துன்பங்களெல்லாம் மறந்து போய்விடுகின்றன. நினைவிற்கு
வந்தாலும், “அப்பா, அந்தக் கணக்கு வாத்தியாரா! ரொம்பப் பொல்லாதவர். சரியான அடி கொடுப்பார்.
இருந்தாலும் நல்லவர். அவர் அப்படியெல்லாம் சொல்லிக் கொடுக்காமலிருந்தால் எனக்குக் கணக்கே
வந்திருக்காது” என்றுதான் பொதுவாகச் சொல்லத் தோன்றும்.
சில பேருக்கு நினைவாற்றல் மிக அதிகமாக இருக்கும். ஒரு தடவை கேட்டதை அப்படியே
திருப்பிக் கூறக்கூடியவர்கள் உண்டு. ஏகசந்தக் கிராகிகள் என்போர் ஒருமுறை சொல்வதை அப்படியே
திருப்பிக் கூறிவிடுவார்களாம். மாம்பழக் கவிச்சிங்க நாவலருக்கு வைசூரி கண்டு இளமையிலே
கண் குருடாகி விட்டது; ஆனால் அவருடைய நினைவு ஆற்றல் மிகவும் வியக்கத்தக்கது. ஒரு நூல்
முழுவதையும் யாராவது ஒருமுறை படித்துக் காட்டினல் உடனே அவர் அதைத் திருப்பிக் கூறிவிடுவாராம்.
சிலருக்கு நினைவு ஆற்றல் மிகக் குறைவாக இருக்கும். வெகு விரைவிலே மறந்துவிடுவார்கள்.
வயதாக ஆக நினைவாற்றல் குறைவதும் உண்டு. ஆனால் நினைவாற்றலே இல்லாதவர்கள் கிடையாது. யாருக்காவது
அவருடைய தாயார் மறந்து போகிறதா? அந்த அளவுக்காவது நினைவாற்றல் இருக்கும்.
மனம் மிக மாயமானது என்று சொன்னேனல்லவா? அது சில வேளைகளிலே அதற்குப் பிடிக்காதவற்றை
மறந்துவிடும். எப்படியோ அவை நினைவில் வராமல் செய்துவிடும். எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான்.
அவனுக்கு மற்றவர் கொடுத்திருக்கிற கடனைப் பற்றி உண்மையாகவே நினைவு வராது; ஆனால் எப்பொழுதாவது
அவன் ஒரு எட்டணாச் சில்லறை கொடுத்துவிட்டால் அதை மனத்தில் வைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டே
இருப்பான்!
வாழ்க்கையின் முற்போக்குக்கு நினைவாற்றல் மிகத் தேவை. நாம் அடைந்த அனுபவங்கள்
தனித்தனியாக நினைவில் இல்லாமற் போனலும் அவற்றின் விளைவாக நாம் எதிர்கால வாழ்க்கையை
நல்ல முறையில் அமைத்துக்கொள்ள வேண்டுமல்லவா? நெருப்பைத் தொட்டால் சுடும் என்று குழந்தைக்கு
முதலில் தெரியாது. ஒரு தடவை அல்லது இரண்டு தடவை நெருப்பு அனுபவம் ஏற்பட்ட பிறகாவது
மறுபடியும் நெருப்பைத் தொடாமல் இருக்க வேண்டுமல்லவா?
நினைவிலே இரண்டு வகையுண்டு. சொந்த அனுபவத்தைப் பற்றிய நினைவு ஒருவகை. பிறருடைய
அனுபவத்தைப் பற்றித் தெரிந்துகொண்டு அதை நினைவில் வைத்திருப்பது ஒருவகை. சிவாஜியினுடைய
வீரச் செயல்களைப் பற்றிக் கேட்டிருக்கிறோம்; படித்திருக்கிறோம். அவை நமது சொந்த அனுபவமல்ல.
இருந்தாலும் அவையும் நினைவில் இருக்கின்றனவல்லவா? இந்த இருவகை நினைவும் தேவையானவையே.
வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு ஊக்கமும், உற்சாகமும், ஊட்டமும் அளிப்பவற்றை
நினைவில் வைத்திருப்பது எவ்வளவு நன்மை பயக்குமோ அது போலவே அவற்றிற்கு மாறானவற்றையும்,
தளர்ச்சியும் தோல்வி மனப்பான்மையும் தருவனவற்றையும் மறந்துவிடுவதும் நன்மை பயக்கும்.
சொந்த அனுபவங்களையும் பிறர் அனுபவங்களையும் நினைவில் கொண்டு அவற்றில் பயனடையக்கூடிய
திறமை பெரியதோரளவில் மனிதனுக்குத்தான் உண்டு. விலங்குகள் முதலான மற்ற உயிர்கள் சொந்த
அனுபவங்களால் ஒரளவிற்கே பயனடையும்; வேறு ஓர் உயிரின் அனுபவங்களால் அவை பயனடைவதே பெரும்பாலும்
இல்லை. நினைவிற்கும் கற்பனைக்கும் தொடர்பு உண்டு. ஆனால் இரண்டும் வேறுவேறு. நேற்று
பூஞ்சோலையிலே கண்ட அழகிய நங்கையை மனக்கண் முன்பு கொண்டுவரலாம். அவளுடைய தோற்றம் தெளிவாக
மனக்கண் முன்பு தோன்றுவதற்கு நினைவாற்றல் உதவுகிறது. நாமே ஒர் ஒப்பற்ற அழகுவாய்ந்த
நங்கையைக் கற்பனை செய்யலாம். இந்தக் கற்பனை நங்கையை அழகுபடுத்த நமது நினைவாற்றல் உதவுகிறது.
பல இடங்களிலே பலவேறு நங்கையரிடத்திலே கண்டு போற்றிய அழகுகளையெல்லாம் நமது நினைவாற்றல்
திரட்டி இந்தக் கற்பனை நங்கையை உருவாக்க உதவி செய்கிறது. ஒரு நங்கையின் கண்கள் மிக
அழகாக இருக்கும். மற்றொருத்தியின் இதழ்கள் கோவைப்பழம் போல இருக்கும். நினைவிலிருந்த
இவற்றையெல்லாம் சேர்த்துத் திரட்டி அந்தக் கற்பனை உருவாகிறது.
சில சமயங்களிலே எது கற்பனை, எது நினைவு என்று தெரியாமற் போவதுண்டு. ஒருவன் புதிதாக
ஒரு கதை கற்பனை செய்வதாக எண்ணிக்கொண்டிருப்பான். ஆனால் உண்மையில் அவன் எப்பொழுதோ படித்த
கதையாகவே அது இருக்கும். அதுபோல நினைவில் சொல்லுவதாக ஒன்றை ஒருவன் சொல்லுவான். ஆனால்
அது வெறுங் கற்பனையாகவே இருக்கும்.
நினைவிலே இப்படிப் பல தவறுகள் ஏற்படுவதுண்டு. காலம் செல்லச் செல்ல ஒரு நிகழ்ச்சியைப்
பற்றிய நுணுக்கமான விவரங்கள் மறைந்து போகின்றன. அந்த இடத்தைக் கற்பனை நிறைவு செய்துவிடுகிறது.
ஒரு நிகழ்ச்சியைப் பற்றிப் பிறருக்கு எடுத்துச் சொல்லும்போது சாதாரணமாகத் தம்மையறியாமலேயே
சிலவற்றை மிகப்படுத்தியும், சிலவற்றை மேற்போக்காகவும் சொல்லுவதுண்டு. சொல்லுவது எல்லாருடைய
கவனத்தையும் கவரவேண்டும் என்ற மறை முகமான ஆசையே இதற்குக் காரணம். மேலும் நமக்குப் பிடித்தமானவற்றையே
மனம் நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறது. அதனாலும் ஒரு நிகழ்ச்சியைப் பற்றி நினைவுபடுத்திக்
கூறுவதிலும் தவறு ஏற்படுகிறது.
நினைவாற்றல் மனத்தின் ஒரு சிறப்பு. அது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருப்பதால் அதன் தன்மையை அறிந்துகொள்வது நல்லது.
Comments
Post a Comment