Skip to main content

மனமும் அதன் விளக்கமும் | மாறுபட்ட கருத்துகள் | பெ. தூரன்

ளவியல் என்பது ஒரு தனிப்பட்ட விஞ்ஞானத் துறையாக அண்மையில்தான் பிரிந்து வளர்ந்து வருகிறது. மனத்தின் தன்மைகளைப் பற்றியும் அதன் அமைப்பைப் பற்றியும் ஆராய்ச்சி செய்தவர் பலர். பொதுவாக அவர்கள் எல்லாரும் மனத்தை ஒரே இயல்புள்ள ஒரு முழுப் பொருளாகவே கருதி வந்தார்கள். முதன் முதலில் மனத்தில் வெளி மனம் (நனவு மனம்), மறை மனம் (நனவிலி மனம்) என இரு பகுதிகள் இருப்பதாக சிக்மண்ட் பிராய்டு என்பவரே தமது ஆராய்ச்சியின் பயனாகக் கண்டு கூறினார். அவ்விரண்டும் வேறுவேறாகப் பிரிக்கப்பட்ட இரண்டு பகுதிகள் அல்ல எனினும் அவற்றின் தன்மைகள் வேறுபட்டவை என்பது அவர் கருத்து.
மறைமனத்தில் பதிந்துள்ள எண்ணங்களைப் பற்றியும், அனுபவங்களைப் பற்றியும் அறிந்து, அவைகளின் மூலம் சில நோய்களை ஜோசர் ப்ரூயர் என்ற வியன்னா நகரத்து மருத்துவர் குணப்படுத்தினர். அவர் அறிந்தவற்றை நூல் வடிவமாகத் தொகுத்து வெளியிடும்படி பிராய்டு தூண்டினார். அவ்வாறு அவர் வெளியிட்ட போதிலும் பின்னால் அவர் தொடர்ந்து மறை மனத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யவில்லை. சிக்மண்ட் பிராய்டுதான் தனியாக அதை நடத்தி வந்தார். தொடக்கத்தில் அவருடைய எண்ணங்களுக்கு வன்மையான எதிர்ப்பிருந்தது. ஒருவரும் அவருடன் சேர்ந்து ஒத்துழைக்க முன்வரவில்லை. ஆனால் 1902-ஆம் ஆண்டிற்குப் பிறகு சிலர் அவரோடு சேர்ந்து ஆராய்ச்சிகள் நடத்த முன்வந்தார்கள்.
மறைமனத்தைப் பற்றி விரிவாக ஆராயத் தொடங்கவே பல புதிய உண்மைகள் வெளியாயின. மறைமன ஆராய்ச்சியே தனிப் பகுதியாகப் பிரியத் தொடங்கியது. பிராய்டு அதற்கு உளப் பகுப்பியல் (Psychoanalysis) எனப் பெயரிட்டார்.
மறை மனத்தைப் பற்றிய உண்மை தெரிந்தது முதல் உளவியலுக்கு ஒரு தனி உயர்வு பிறந்திருக்கிறது. மனிதனுடைய நடத்தைக்கு முக்கிய காரணமாக இருப்பது இம் மறை மனமே என்பது சிலருடைய கருத்து. மனம் ஒரு பனிக்கட்டியாலான குன்று போன்றதென்று அவர்கள் கூறுகிறார்கள். பனிக்கட்டிக் குன்று கடலிலே மிதக்கும்போது அதன் ஒரு சிறு பகுதி மட்டுமே வெளியில் தோன்றும். மற்றப் பகுதியெல்லாம் நீர் மட்டத்திற்கு உள்ளே மறைந்திருக்கும். அது போலவே மனத்தின் ஒரு பகுதிதான் வெளிப்படையாகத் தோன்றி வெளி மனமாக இருக்கிறதென்றும், மற்றப் பகுதி மறைந்து நின்று மறை மனமாக இருக்கிறதென்றும் அவர்கள் விளக்கஞ் செய்கிறார்கள். இப்படி மனத்தின் பெரும் பகுதி மறைந்திருந்தாலும் அப்பகுதிதான் ஆதிக்கம் செலுத்துகிறதாம்.
சிக்மண்ட் பிராய்டும் அவரைப் பின்பற்றுவோரும் கூறுவதாவது:- வெளி மனத்தால் நினைப்பவையெல்லாம் மறை மனத்தால் பாதிக்கப்படுகின்றன; ஆனால் அவை எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை அறிந்துகொள்வது மிக அரிது.
பிராய்டின் கருத்துகளை எல்லா உளவியலறிஞர்களும் ஏற்றுக்கொள்வதில்லை. உளப் பகுப்பியலார்களிலும் சிலர் அவற்றை முழுமையாக ஒத்துக்கொள்வதில்லை. ஆல்பிரடு ஆட்லர், டாக்டர் யுங் என்பவர்கள் அவர்களில் முக்கியமானவர்கள்.
பொதுவாக, சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத உணர்ச்சிகளும், காம இச்சைகளுமே மறை மனத்தில் அழுந்திக் கிடப்பதாக பிராய்டு கூறுகிறார். அவ்வுணர்ச்சிகள் மேலெழுந்து ஆதிக்கம் செலுத்த முயல்கின்றனவென்றும் மனிதன் அவற்றை அடக்க முயல்வதால் மனத்தில் ஒரு போராட்டம் நிகழ்கின்றதென்றும் அதன் விளைவின்படி அவனுடைய தன்மையும் நடத்தையும் அமைகின்றனவென்றும் அவர் விளக்கம் செய்கிறார். ஆட்லர் கூறுவது வேறு. அவர் கூறுவதாவது:- ஒவ்வொரு மனிதனுக்கும் தான் ஏதாவதொரு துறையில் தலைமைப் பதவி வகிக்கவேண்டுமென்ற ஆர்வம் இருக்கின்றது. அந்த ஆர்வமே அவனுடைய குறைபாடுகளை நீக்கிக்கொள்வதற்கு வேண்டிய ஆற்றலைக் கொடுக்கின்றது. அந்த ஆற்றலின் விளைவாக அவனுடைய தன்மையும் நடத்தையும் அமைகின்றன. டெமாஸ்தனிஸ் முதலில் திக்குவாயாக இருந்தார். ஆனால் பெரிய பேச்சாளராக வேண்டும் என்று உறுதியோடு முனைந்து அதில் வெற்றியுமடைந்தார் என்பது யாவரும் அறிந்த உண்மை. இவருடைய வரலாறு ஆட்லரின் கருத்தை மெய்ப்பிக்கத்தக்க சான்றாக இருக்கிறது. மனிதனுக்கு ஒரளவு அதிகாரம் செலுத்தக்கூடிய வாய்ப்பில்லாவிட்டால் அவன் தாழ்மை உணர்ச்சியால் பீடிக்கப்படுகிறான் என்பது ஆட்லரின் கருத்து.
மனிதனுக்குள்ளே விவரிக்க முடியாத ஓர் உயிர் வேகம் இருக்கிறது. அதிலிருந்துதான் பல இயல்புகள் பிறக்கின்றன என்பது டாக்டர் யுங்கின் எண்ணம். எல்லாத் துறைகளிலும் மனம் விரிவடையாமல் ஏதாவது ஒரு துறையில் மட்டும் அது வளர்வதாலேயே மறை மனக் கோளாறுகள் ஏற்படுவதாக அவர் கருதுகிறார். மக்களை இரு வகையாகப் பிரிக்கலாம். உள்ளக் கிளர்ச்சி மிகுந்தவர்கள் ஒரு வகை, சிந்தனை ஆற்றல் மிகுந்தவர்கள் மற்றொரு வகை. உலகத்திலே ஒரு வகையான செயல் புரிய உள்ளக் கிளர்ச்சி மிகுதியாக வேண்டியிருக்கும்; மற்றொரு வகையான செயல் புரிய சிந்தனை மிகுதியாக வேண்டியிருக்கும். ஆதலால் அவற்றிற்கு ஏற்றவாறு தன்மை அமைந்த மனிதர்கள் அச்செயல்களைச் செய்யவேண்டும். ஆனால் பல சமயங்களில் மனிதன் தன் இயல்புக்கு ஒவ்வாத பணியைச் செய்யவேண்டி நேரிடுகிறது. அப்பொழுதுதான் அவன் மனத்தில் போராட்டம் நேர்ந்து மறை மனக் கோளாறுகள் உண்டாகின்றன. மேலும் மறை மனம் தனிப்பட்ட மனிதனுடைய செய்கைகளால் மட்டும் அமைவதில்லை என்று யுங் கருதுகிறார். வழிவழியாக வந்த பாரம்பரியத்தாலும் மறைமனக் கோளாறுகள் உண்டாகின்றன என்று அவர் சொல்லுகிறார்.
உளப் பகுப்பியலார்களுக்குள்ளே சிறுசிறு கருத்துகளில் மாறுபாடுடைய வேறு சிலரும் இருக்கிறார்கள். இப்படிக் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் உளவியல் ஆராய்ச்சியிலே உளப் பகுப்பியல் ஒரு முக்கியமான முன்னேற்றத்திற்குக் காரணமாக இருக்கிறதென்பதை யாரும் மறுக்கமுடியாது, உளப் பகுப்பியலின் அடிப்படையாகவுள்ள கொள்கைகள் உண்மையானவையென்பதில் யாதொரு ஐயமுமில்லை.

Comments

Most Popular

இரு சகோதரர்கள்

  [ அ. கி. கோபாலன், அ. கி. ஜயராமன் நேர்காணல் ] நேர்கண்டவர்: எஸ். குரு படங்கள்: திரு. சுதாகர் நோபல் பரிசு பெற்ற நாவல்களைப் பதிப்பித்த அ. கி. கோபாலன் நீங்கள் பதிப்பாளரானது எப்படி ? தென்னாற்காடு மேலக்குமாரமங்கலம் என் சொந்த ஊர். எங்கள் கிராமத்தில் நான்காவது வகுப்பு படித்தேன். கிராமத்தில் எங்கள் அப்பா விவசாயம் செய்துகொண்டிருந்தார். நிறைய நஞ்சை நிலம் இருந்தது. பங்காளிக் காய்ச்சலினால் எங்கள் சொத்துகள் பறிபோயின. முதலில் என் அண்ணன் அ. கி. ஜெயராமன் சென்னைக்கு வந்து ஒரு ஹோட்டலில் சர்வராகச் சேர்ந்துவிட்டு , அப்புறம் என்னை ஊரிலிருந்து வரவழைத்து , என்னையும் சர்வராகச் சேர்த்துவிட்டார். சைனா பஜார் பழைய ஆரிய பவனுக்கு எதிரே ஆனந்த லட்சுமி பவன் என்று இருந்தது. அங்குதான் சர்வராகச் சேர்ந்தோம். இட்லி அரையணா , காபி முக்காலணா , பீடா காலணா , ஸ்பெஷல் பீடா அரையணா விற்ற காலம் அது. ஹோட்டலுக்கு அருகில் ச. சு. சங்கரலிங்கக் கவிராயர் என்ற நாடகாசிரியர் தங்கியிருந்தார். சங்கரலிங்கக் கவிராயர் , சங்கரதாஸ் சுவாமிகளுக்கு இணையானவர். அவரிடம் நாடகப் பாடல்கள் கேட்டேன். ஹோட்டலில் சக ஊழியர்களிடம் சொல்லிவிட்டு , ஆ...

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந...