மழை , தூறல்களைத் தெளித்துக் கொண்டிருந்ததை அந்த நதி காட்டியது. கரைப்பக்கமாக வண்ண மலர்கள் பசுமையில் கலந்து, மஞ்சளும் குங்குமமும் பூசிக்கொண்டவைபோல் மலர்ந்திருந்தன. வைர ஊசிகள் போல் உதிர்ந்த மழைத்தூறல்கள் புற்களில் சிதறிக்கிடந்தன. துறையில் சில ஓடங்கள் தென்பட்டன. தொலை விலிருந்து ஓடக்கார வாலிபன் ஒருவன் உல்லாசமாக இசைக்கும் இனிய பருவப்பாட்டு ஒலிக்கத் தொடங்கியது. கடப்பமரக் கூட்டங்களிடையே ஒரு மயில் தோகை விரித்துக் காத்திருந்ததது.
மூன்று பெண்கள் நதிக்கரைக்கு மேலே மேட்டுத்திடலில் ஆலமரத்தடியில் அமர்ந்திருந்தார்கள். முதலாமவள் தன் மேனி வண்ணத்துக்கு ஒப்ப குங்குமப்பூ நிறத்தில் சேலை உடுத்தியிருந்தாள். அவள் கூந்தலில் செண்பகப்பூ பொலிந்தது. இரண்டாமவள் சற்று இளம் பிராயத்தினள். கண்களுக்கு மை தீட்டிக் கவர்ச்சியைக் கூட்டி யிருந்தாள். தோற்றமும் தோரணையும் 'இவள் ஓர் அரசகுமாரி' என்பதைக் காட்டின. மூன்றாமவள் மற்ற இருவருக்கும் பணிப்பெண். மழைத்திவலைகள் பட்டுவிடாதிருக்க, இருவருக்குமாக அவள் பட்டுக் குடையைத் தாழ்த்திப் பிடித்துக் கொண்டிருந்தாள். ஆலமரத்திற்குக் கீழே சிறு ஏரி. கரையோரம் கோரை மண்டியிருந்தது. நீர்ப்பரப்பில் தாமரை பரவலாக மலர்ந்திருந்தது. குங்குமப்பூவண்ண சேலைக்காரி - வயது இருபத்தைந்து இருக்கும் - கன்னிப்பெண் என்பதை வகிட்டில் செந்தூரமில்லாததைக் கொண்டு ஊகிக்க முடிந்தது. அவள் துறவு பூண்டவளுமில்லை - கூந்தலில் செருகியிருக்கும் செண்பக மலர் சான்று. இந்தக்குழப்பம் அந்த வாலிபனுக்கும் ஏற்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால், பக்கத்துப் பலாச மரத் தோப்பில் நின்றுகொண்டு அவன் எதற்காக வியப்புடன் அந்தப் பெண்ணை உற்றுப் பார்க்க வேண்டும்? அவன் தன்னிலைக்கு வர சில கணங்கள் ஆயின. சட்டென்று அந்த வாலிபன் பார்வையைத் திருப்பி, ஆற்றங்கரைப் பக்கம் விரைந்தான்.
கருமுகில் கூட்டத்தில் மின்னல் பளிச்சிட்டது. குங்குமப்பூ வண்ணப் புடவைக்காரி - நதியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந் தவள் - பேசத் தொடங்கினாள். "மழை வரப் போகிறது."
மற்றவள் ஏதும் பதில் சொல்லவில்லை. அவள் இப்போது வெள்ளை ஆடை அணிந்து இளமைத் தேகம் பொலியும் அந்த வாலிபனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அந்த இளைஞன் சிராவஸ்தி நகரத்துக் குருகுலத்தில் பயிலும் இறுதியாண்டு மாணாக்கன் ; கௌதம நீலாம்பரன் என்று பெயர். பலாச மரத்தோப்பிலிருந்து நீதித்துறைக்கு வந்து சேர்ந்தான். பிரும்மச் சாரியானதால் கையில் குடை இல்லை. கால்களுக்குப் பாதரட்சையும் இல்லை . கேசக்குழைகள் கழுத்திலும் பிடரியிலும் புரண்டு அலைவது அழகாக இருந்தது. வானத்தைப் பார்த்தான். வாடிய முகமானாலும் அழகாக இருந்தது. இந்திரனின் படை வேழங்களைப்போல் கரிய மேகங்கள் வான முகட்டிலிருந்து கிளம்பி அணிவகுத்து முன்னேறிக் கொண்டிருந்தன. சோலை பார்க்க ரம்மியமாக இருந்தது. நதி, படகுகள், கடப்ப மரத்தடியில் தோகை விரித்து நிற்கும் மயில்; ஆல் மரத்தடியில் மூன்று அழகிய பெண்கள் ; மழைச்சாரலில் சந்திர பிம்பம் போல் அவர்கள் முகம் பொலிந்தது. சிராவஸ்தி நகரம் அங்கிருந்து ஐம்பது காத தூரம். கௌதம நீலாம்பரன் சுற்றுப்புற எழிலை நின்று ரசித்தான். பிறகு ஆற்றில் குதித்தான். திளைந்து குளிப்பதில் தனி சுகம். குளிர்ந்த ஆற்றுநீர், லேசான அலைவரிசை, மழைத்தூறல் - எல்லாம் அவன் மேனிக்கு இதமளித்தன. கரைப் பக்கமாக நீந்தினான். நீந்தியே கரையேறவேண்டும்.
''இந்த மாணாக்கர்களின் வாழ்க்கையே கடினமானதுதான் தோணியில் கூட ஏறக்கூடாதாம்." பணிப்பெண் அனுதாபத்துடன் சொன்னாள்.
மை தீட்டிய கண்களுடன் விளங்கிய அரசகுமாரி - அவள் பெயர் நிர்மலா - ஆற்றின் பிரவாகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அங்கு அந்த வாலிபன் எதிர் நீச்சல் போட்டுக்கொண்டு ஆற்றைக் கடந்து கொண்டிருந்தான். அவள் பணிப்பெண்ணின் அனுதாபப் பேச்சுக்குப் பதில் சொல்லவில்லை. இப்போது அவளுக்குத் தன் அண்ணன் நினைவு வந்தது. அவனும் இவனைப் போலவே பல நதிகளையும், சம வெளியையும், மலைப்பாதைகளையும் கடந்து சென்று, தக்ஷசிலா நகருக்குச் சென்றான்; பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னும் திரும்பி வரவில்லை. நிர்மலாவுக்குத் தமையனின் நினைவு வந்தததுமே வேதனையும் படர்ந்தது. ,
பணிப்பெண் இதை ஊகித்துக் கொண்டாள். அவள் நினைத்தாள்: 'அரசகுமாரர் தக்ஷசிலாவிலிருந்து திரும்பி வந்தா ரானால், குமாரி சம்பகா அவரை மணந்து கொண்டிருப்பாளோ? இப்போது அவள் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறாள். கடல் கடந்து வரும் வெளிநாட்டு யாத்திரிகர்களுடன், குறிப்பாக சீன யாத்திரிகர் களுடன் நீண்ட நேரம் கலந்துரையாடுகிறாள். என்ன பயன்? பணிப்பெண்ணுக்கும் விசனமாகத்தான் இருந்தது.
அரசகுமாரி நிர்மலா தண்ணீர்ப்பக்கம் குனிந்து பாசி இலை ஒன்றைப் பறித்தாள். மயில், கழுத்தைத் திருப்பிப் பெண்கள் அமர்ந் திருந்த பக்கம் ஒயிலாகப் பார்த்துவிட்டு, வாழைத் தோட்டத்திற்குள் கர்வத்துடன் நுழைந்தது.
கெளதமன் ஆற்றின் நடுப்பக்கத்தில் இருந்தான். மாரிக்காலம் காரணமாக சரயூ நதியின் கரைகள் அகன்று விட்டன. கௌதமன் திரும்பி எதிர்க்கரைப் பக்கம் பார்த்தான். படித்துறைப் பக்கம் பெண்கள் அமர்ந்திருப்பது தெரிந்தது. மறுகரையில் பிரம்புத் தகடுகள், நீண்ட புற்கள், நீல மலர்கள் நிறைந்து பாசிச் செடிகள் மண்டியிருந்தன.
கரையேறியதும் கெளதமன் ஆடைகளைப் பிழிந்து உடுத்திக் கொண்டான். கவலை கவிந்தவனாக அருகில் இருந்த கோவிலுக்குள் புகுந்தான். சண்டீதேவியின் சிறு கோவில் அது. அறைகுறைக் கட்டிடம். அங்கு ஒரு மூலையில் தான் கொண்டு வந்திருந்த கட்டுச் சோறு முடிப்பை வைத்துவிட்டுத்தான் அவன் அருகிலிருந்த அயோத்தி நகருக்குச் சென்றான்.
எவ்விதச் சந்தடியும் இல்லை. உள்ளே மண்டபத்தை அடைந்த போது அவனுக்கே அச்சம் எழுந்தது. உருவமற்ற பரப்பிரும்மம் ஏதாவதொரு உருவத்தை மேற்கொண்டு வெளிப்படுமானால், அதைப் பார்த்துப் பயப்படுவானேன்? மனிதனுக்கு மற்றொரு ஜீவனின் இருக்கையில் நம்பிக்கை கிடையாதோ ? கெளதமன் பல இரவுகளைத் தன் பய உணர்ச்சியை ஆராய்ந்து பார்த்தவாறே கழித்திருக்கிறான். வாழ்க்கையைப் பார்த்துப் பயமா? ரிக் வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது: "முதலில் நான் (அஹம் இருந்தது. இது மனித உருவில் வெளிப்பட்டது. சுற்றிலும் பார்த்தது. தன்னைத்தவிர வேறு யாரையும் காணவில்லை. அப்போதுதான் அது தன்னை 'நான்' என்று அழைத்துக்கொண்டது. தனியாக இருக்கிறோமே என்கிற அச்சம் ஏற்பட்டது. பிறகு நான் என்பதற்குத் தோன்றலாயிற்று: இங்குதான் வேறு யாரும் இல்லையே எதற்காகப் பயப்பட வேண்டும்? பயம் விலகியது. ஆனால் மகிழ்ச்சி ஏற்படவில்லை." தனிமை சுணக்கத்தையும் சலிப்பையும் ஏற்படுத்தியது.
"நான் என்னுடைய ஆத்மாவின் தனிமையைக் கண்டு அஞ்சக் கூடாது". கௌதமன் தனக்குள் சொல்லிக்கொண்டான். ஆல மரம், அரசமரம், இரண்டும் காற்றைச் சலசலப்புடன் வெளிப்படுத்தின. அத்துடன் வயல்வெளி முடிகிறது. அப்பால் தேக்கு மரக்காடு, தொடர்ந்து பலாச மரங்கள், ஆறுகள், சிற்றாறுகள். இவற்றைத் தாண்டித்தான் அவனுடைய ஆசிரமத்திற்குச் செல்லவேண்டும். கோவிலிலிருந்து இறங்கி வந்ததும், கிராமத்தை நோக்கி நடந்தான். அயோத்தி நகரின் விளக்கொளிகள் சரயூ நதியில் மின்மினிகளைப் போல் மினுக்கிக் கொண்டிருந்தன. மழைச்சாரலில் வெளிக்காட்சிகள் மங்கலாகத் தென்பட்டன.
கெளதமன் அந்தப் பேட்டைக்குச் சென்றதும் முதல் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டினான். வாசல் பக்கம் அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. பின் பிராயத்தைச் சேர்ந்த பெரியவர் அந்த வெளிச்சத்தில் ஏதோ படித்துக்கொண்டிருந்தார். உள் கூடத்திற்கு வெளியே இருட்டு கவிந்திருந்தது. கெளதமனின் குரலைக்கேட்டு அவர் விளக்கை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். பிரும்மச் சாரியின் வெண்ணிற ஆடையைக் கண்டார்.
"இங்கு சாக்கிய முனிவர் புத்தர் பிரானின் சீடர்களான பிக்கு களின் கூட்டம் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதைச் சேர்ந்தவர் நீங்கள் என்று நினைத்தேன். பெரியவர் கௌதமனைப் பார்த்துச் சொல்லிவிட்டு, பொதுவாகவும் கருத்துத் தெரிவித்தார்: “இப்போது இப்படியொரு புது மோகம் கிளம்பியிருக்கிறது. பையன்கள் ஓடுவது கிடக்கட்டும். பெண்களும் கூட வீடு வாசலைத் துறந்து பெளத்த சங்கத்தில் சேரத் தொடங்கியிருக்கிறார்களே! வீட்டைவிடக் காடு தான் இவர்களுக்குப் பிடித்திருக்கிறது!''
கெளதம நீலாம்பரன் பெரியவர் பேச்சைப் பொருட்படுத்தாமல், "எனக்குக் கொஞ்சம் பருப்பு வேண்டும்,'' என்றான்.
பெரியவருக்குப் பேச்சுப்பித்து, தொடர்ந்து பேசிக்கொண் டிருந்தார். எதிர்ப்பக்கத்து நகரில் ஒரு அழகான பெண் இருக்கிறாள்; ராணி ரேணுகா போல் அவ்வளவு அழகு ! என் வீட்டுக்காரி நேற்று கடைவீதிப் பக்கம் போயிருந்தபோது கேள்விப்பட்டாளாம். அந்தப் பெண்ணும் பௌத்த சங்கத்தில் சேரப்போகிறாளாம். அந்தப்புரத்துப் பணிப்பெண்கள் சொன்ன தகவல். காலம் எப்படி அலங்கோலமாகப் போய்க்கொண்டிருக்கிறது, பார்த்தீர்களா!"
இதற்குள் அவருடைய மனைவி மாவும் பருப்பும் எடுத்து வந்தாள். கெளதமன் உத்தரீயத் தலைப்பை நீட்டி அதைப் பெற்றுக் கொண்டான். அப்போதும் பெரியவர் பேசிக்கொண்டிருந்தார் : ''இப்படியுமா ஒரு காலம்! நான் நிச்சயமாகச் சொல்லுவேன் : இப்போதெல்லாம் பெற்றவர்கள் கூடத் தம் பெண்பிள்ளைகளுக்குக் காலா காலத்தில் கலியாணம் செய்துவைக்க வேண்டுமென்கிற அக்கறை குறைந்துவிட்டது; கவலையில்லாமல் இருக்கிறார்கள் ! பெண்களோ நிர்வாண' (முக்தி) நிலையைத் தேடிக்கொண்டு கிளம்பியிருக்கிறார்கள்!"
பெரியவர் சொல்லி முடித்துவிட்டோம் என்கிற திருப்தியுடன் கைவிளக்கை எடுத்துக்கொண்டு உள்ளே திரும்பினார். கௌதமன் தூணில் சாய்ந்து கொண்டான். பௌத்த பிக்குகளின் கூட்டமொன்று இந்தப்பக்கம் வந்திருப்பதையறிந்து மகிழ்ச்சி கொண்டான். சந்திக்க முடிந்தால் இரவுப்பொழுது இலகுவாகக் கழியும். அளவளாவியே பொழுதைப் போக்கலாம். "பகவான் உங்களுக்குப் பசுச் செல்வத்தையும் நல்ல சந்ததிகளையும், செல்வச் செழிப்பையும் அருள்வாராக!'' பெரியவரையும் அவருடைய மனைவியாரையும் பார்த்து வாழ்த்தி விட்டு, கெளதம நீலாம்பரன் கோயிலை நோக்கிப் புறப்பட்டான்.
விளக்குடன் நின்று கொண்டிருந்தவர் கெளதமனை வழியனுப்பி விட்டு உள்ளே சென்றார். கெளதமன் அந்த வீட்டை நிதானமாகப் பார்த்தான். உள்ளே குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன. வீட்டுத் தலைவி அடுப்படியில் அமர்ந்து சமையலில் ஈடுபட்டிருந்தாள். வாசல் பக்கம் தொங்கிய ஒரு கூண்டில் மைனா அடைபட்டிருந்தது. அந்த அமைதியான சூழ்நிலையிலும் அவனுக்கு அச்ச உணர்வுதான் ஏற்பட்டது. அடுப்புத் தீயின் மங்கிய வெளிச்சத்திலும் அந்த இளம் பெண்ணின் மேனிவளம் பொலிவாகத் தெரிந்தது. வெளிமுற்றத்தில் வாழை இலைகள் தாழ்ந்து தொங்கின. இறக்கைகளுக்கிடையே அலகைச் செருகியபடி மைனா உறங்கிக்கொண்டிருந்தது. மூலையில் கணப்பில் எரிந்து கொண்டிருந்த வீட்டுத்தீ ஒருநாள் சிதைக் கொள்ளியாக மாறும். அதைத் தீயிலிருந்து மற்றொரு குடும்பத்தின் அடுக்களைக்கு நெருப்பு கிடைக்கும். துறவியின் குடிலில் இந்த அக்கினியாத்திரை தொடங்குகிறது. இத்தகைய கணங்கள் - தருணங்கள் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் வரத்தான் செய்யும். இந்தக் கௌதம நீலாம்பரனின் வாழ்விலும் எதிர்ப்படலாம். இதற்கெல்லாம் பொருள் உண்டா? எந்தக் காட்சிக்குத்தான் பொருள் இருக்கிறது?
சிராவஸ்தியில் அவன் தந்தைக்கு மூன்று மாடி மாளிகை இருந்தது. வெளிக்கூடத்தின் தூண்களில் யானைமுகம் துதிக்கையுடன் செதுக்கப் பெற்றிருக்கும். இது அவனுக்கு இறுதியாண்டுப் படிப்பு. படிப்பு முடிந்ததும் இந்த உலகமே அவனுக்கு எதிரே பரந்து இருக்கும் - காலடியில் சிதறிக்கிடப்பதைப் போல. எல்லா நேரமும் அவன் விருப்பத்திற்கு ஏற்பக் காத்திருக்கும். எல்லாத் தத்துவ சாஸ்திரங்களையும் வேதாந்த நூல்களையும் அவன் ஆய்ந்து ஊன்றிப் படித்தவன். எனினும் சில பெளதிகப் பொருள்களைக் கண்டு பயப்படுகிறானே! நீதித்துறையில் மழைத்தூறலில் நனைந்து கொண்டு அமர்ந்திருந்த இளம் பெண்கள், ஆலமரத்தோப்பு, காஷாய உடை தரித்த பிக்குகள் கூட்டம், இந்த இல்லறத்தாரின் இளம் மனைவி - இவர்கள் யாவரும் பிரும்மத்தின் சொரூபங்கள் - பூரண பிரும்மங்கள் !
புல்தரையில் கிடந்த வில்வப்பழம் ஒன்றை கெளதமன் எடுத்துக் கொண்டு கோயிலுக்கு வந்து சேர்ந்தான். சிறு பள்ளம் பறித்து அடுப்பாக அமைத்துக்கொண்டான். மண்கலயத்தில் அரிசியைக் களைந்து வைத்தான். எதிரே நதியையும் மறைத்துக்கொண்டு இருள் கவிந்திருந்தது. மதியும் மேக மூட்டத்துள் மறைந்திருந்தது. காற்றில் புதிதாக இதழ் விரித்த மலர்களின் நறுமணம் கமழ்ந்தது. இருள் கவிந்த சூழ்நிலை. கெளதமனின் கவனம் கலைந்தது. யாரோ வரும் காலடியோசை கேட்டது. இருட்டில் யாரோ சிரிப்பது கேட்டது. பிறகு அமைதி. கௌதமன் சுவர்ப்பக்கம் சாய்ந்து அமர்ந்தான். மனித உருவம் எட்டிப் பார்ப்பது தெரிந்தது. கரிய மேகங்கள் நெருக்கமாக விழுமியிருந்தன. "நீ யாரப்பா? இருளில் தனியாக உட்கார்ந் திருக்கிறாயே!" கீழேயிருந்து ஓர் ஆண் குரல் கேட்டது.
"நான்தான்" கௌதமன் பதில் சொன்னான். "நல்லது. உனக்குப் பெயர் ஏதும் இல்லையா?"
''நான்! இதற்கு வேறு பெயர் தேவையா? மனித ஆத்மாவுக்கு என்ன பெயர் சூட்டுவது வழக்கம்?"
அமைதி, கெளதமனுக்கு ஏமாற்றமாக இருந்தது. சிறிது நேரம் காத்திருந்துவிட்டு அவனே பேசத்தொடங்கினான்: ''நான் இந்த முறை பிறவி பெற்றதும். சிராவஸ்தி நகரத்துப் பண்டிதர்கள் எனக்கு ஜாதகம் கணித்து, என்னைக் 'கௌதம நீலாம்பரன்' என்று அழைக்குமாறு பணித்தார்களாம். வாழ்வின் ரகசியங்களை, வருங் காலப் புதிர்களை அறிந்த தைவக்ஞர்களாம் அவர்கள்!''
''நீல வண்ண வானவெளிக்கு உரிய கெளதமனே! கொஞ்சம் தரைக்கு இறங்கி வாயேன்!' புதிய குரல் ஒலித்தது.
"தரை ஈரமாக இருக்கிறது. பாம்புகள் நடமாடும். நீங்கள் மேலே வரக்கூடாதா?"
"மேல்-கீழ் என்பது சிந்தனை மாறாட்டத்தின் பிரதிபலிப்புகள். நீயிருக்கும் மேலிடமே பாதளத்தைவிடத் தாழ்ந்தது என்பது உனக்குத் தெரியுமா?"
"நீங்கள் வைணவ பக்தரோ? கெளதமன் சுவர்ப்பக்கத்திலிருந்து கீழே எட்டிப்பார்க்காமலேயே இந்தக் கேள்வியை விடுத்தான்.
"எந்தக் கேள்விக்கும் இறுதியான முடிவான பதிலைத் தந்துவிட முடியாது" - கீழேயிருந்து குரல் வந்தது.
'சரிதான்; யாரோ வாயாடியான சமணத்துறவி வந்திருக்கிறார்; என்று நினைத்தான். பாடலிபுத்திரத்து அரச குடும்பம் இப்போ தெல்லாம் சமணர்களை அதிகம் ஆதரித்து வருகிறது. இல்லை , இவர் பெளத்த பண்டிதரோ? கெளதமனுக்குப் பெளத்தர்களுடன் வாக்குவாதம் செய்வது பிடித்தமான பொழுதுபோக்கு. காடுகளிலும் சோலைகளிலும் பௌத்த பிக்குகள் நிரம்பியிருக்கிறார்கள். அங்கெல்லாம் வாத விவாதங்களுக்குப் பஞ்சமில்லை. குதர்க்க வாதிகள், சந்தேகவாதிகள், நாஸ்திகர்கள் அந்தக் கூட்டத்தில் நிறைய இருக்கிறார்கள். கடந்த நூற்றாண்டில்தான், கபிலவஸ்துவின் அரச குமாரன் சித்தார்த்தன் காட்டுக்குச் சென்று, தவம் கிடந்து, இந்தப் புது சமயத்தைத் தோற்றுவித்தான். அவனுடைய புரட்சிகரமான கண்டுபிடிப்பு இது! காட்டிலே வாழ்வதென்பது அவன் காட்டிய வழி. அவன் காலத்திலேயே 62 மதங்கள் பலப்பல உட்பிரிவுகளுடன் நாட்டில் நிலவி வந்தன. அவை போதாதென்று, சாக்கிய குலத்தில் வந்த அந்தச் சித்தார்த்தன் துறவியாகித் தனி மதம் ஒன்றைத் தன் பெயரில் தோற்றுவித்தான்.
அறுபத்திரண்டு மாறுபட்ட கொள்கைகள் சமய நோக்குகள்! இவ்வளவுக்கும் வாழ்க்கை ஒன்றுதான்; மனிதனும் தனிப்பட்டவன் தான் - ஒருவன்தான்!
"வழிப்போக்கரே! நீர் யார்?" கெளதமன் மறுபடியும் குரல் கொடுத்தான். இனந்தெரியாத கிலி அவனைத் திரும்பவும் சூழ்ந்து கொண்டது.
"பெயர் என்பது சில ஒலிகளின் சேர்க்கை . என்னை அறிந்தவர் களாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் ஹரிசங்கர் என்று சொல்லி அழைப்பார்கள். ஆனால் அவர்கள் என் பெயரை மட்டும்தான் அறிந்திருப்பவர்கள்." "இந்த இடத்திற்குப் புதியவர்தானே?''
இந்தக் கேள்விக்குப் புதியவனிடமிருந்து பதிலில்லை. கொஞ்சம் வெட்கப்பட்டிருக்கவேண்டும். "வட மேற்குப்பகுதியிலிருந்து இப்போது தான் வந்திருக்கிறேன்." என்றான்.
நீர் எங்கே படித்தீர்?" கெளதமனுக்குப் புதிய ஆர்வம் கிளர்ந்தது.
"தக்ஷசிலத்தில்”
"தக்ஷசிலா! ஆஹா! எனக்கு அங்கே போகவேண்டுமென்று வெகுநாட்களாக ஆசை. அருமையான இடம்."
"போக முடியவில்லையே என்று விசனிக்க வேண்டியதில்லை. எதிலும் அடிப்படை வித்தியாசம் கிடையாது. தக்ஷசிலாவும் அப்படித் தான்."
"ஹரிசங்கர்! நீ படிப்பை முடித்துவிட்டாயா?" கெளதமனுக்கு நெருக்கவுணர்வு வளர்ந்தது. நட்புரிமை பாராட்டிக்கொண்டு வினவினான்.
"முடிந்தது. பிறகு நான் நதிகளையொட்டியே நீண்ட யாத்திரையை மேற்கொண்டிருக்கிறேன். மதுரா சென்றேன். பிரும்மா வர்த்தத்தில் ஹஸ்தினாபுரத்தின் இடிபாடுகளைக் கண்டேன். சொந்த ஓடம் ஒன்றை வாங்கி அதில், கிழக்கே வெகுதூரம் வரைக்கும் சென்றேன். ஒவ்வொரு இடத்திற்கும் காலம் என்னைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. கெளதமா! இந்தக் காலம் என்பது மிகப் பயங்கரமானது; என் ஊகம் இது. நீ எப்போதாவது காலத்தைக் கண்டு பயந்திருக்கிறாயா?"
"நீ கௌதம புத்தரை ஏற்றுக்கொண்டிருப்பவன்தானே?" இதற்குப் பிறகு அந்த வாலிபன் கீழே இறங்கி, கோயில் மண்டபத்திற்கு வந்தான். வெளித்திண்ணையில் உட்கார்ந்து கொண்டான்.
"நீ காசியிலே படிக்கிறவன், இல்லையா?” கெளதமனின் வெள்ளை வேட்டியைப் பார்த்துக்கொண்டு கேட்டான்.
"சிராவஸ்தி குருகுலத்தில் எனக்கு இது இறுதியாண்டு. காசி யிலுள்ள கல்விக்கூடங்கள் மகா பண்டிதர்களை உருவாக்குவதோடு சரி.” கௌதம நீலாம்பரனின் பேச்சில் கர்வம் தொனித்தது.
"உன் வாழ்க்கை இலட்சியம் என்ன?''
"நீயும் இந்த இருளிலிருந்து வந்துவிட்டு, என்னைப் பார்த்து இதே கேள்வியைக் கேட்கத் தோன்றுகிறதாக்கும்!'' கெளதமனுக்குச் சற்று எரிச்சலாக இருந்தது.
காற்றில் சிலிர்ப்பூட்டும் சில்லிப்பு தெரிந்தது. இளம் நிலவில் கெளதமன் புதிய நண்பனை உற்று நோக்கினான். அந்த அழகிய முகம் முன்பு எங்கோ பார்த்ததாகத் தோன்றியது.
'இந்த முகத்தை நான் இதற்குமுன் எங்கே பார்த்திருக்கிறேன்? அண்மையில்தான் பார்த்திருக்கிறேன்...'' கெளதமன் தெளிவு பெற முடியாமல் தவித்தான். சுருள் சுருளான கேசத்தை மழித்துவிட்டால், ஒருவேளை வேறு நபர் மாதிரி தோற்றமளிக்கலாம்.
"தலையை மொட்டையடித்துக் கொள்ளவில்லையா நீ? இப்படியுமா ஒரு பிக்கு இருப்பார்! பெளத்த சங்கத்தின் நெறிமுறை களைக் கடைப் பிடிப்பதில்லையோ?''
'நான் சுதந்திரமானவன்; மேலும் சுதந்திரத்தை நாடிச் சென்று கொண்டிருக்கிறேன்." தொலைவில் மினுக்கிக் கொண்டிருந்த அயோத்திமா நகரின் விளக்குகளின் ஒளிக்கூட்டத்தைப் பார்த்தவாறே பேசினான்.
"அப்படியானால் வேதங்களில் உனக்கு நம்பிக்கை கிடையாது, சிறிது இடைவெளிக்குப்பிறகு கெளதமன் வினவினான். கெளதம் புத்தரின் சீடனுடன் முறையாக விவாதம் நடத்த இது பூர்வ பீடிகை முறையான சீண்டல் என்பதைக் கெளதம நீலாம்பரன் உணர்ந்திருந்தான்.
"சாக்கிய முனிவர் புத்தரும் இந்தக் கோசல நாட்டைச் சேர்ந்தவர்தான். தியாகத்தை அடிப்படையாகக் கொண்ட சமயக் கோட்பாடும், அதற்கு நீங்கள் தரும் இலக்கண விளக்கமும் உப் நிடதங்களில் உள்ளவைதான். நீங்கள் புதிதாக ஒன்றையும் படைத்து விடவில்லை ! சாக்கிய முனிவரே கபிலரின் சாங்கிய மதக்கோட்பாடு களிடமிருந்து செல்வாக்குப் பெற்றவர்தானே! உலகில் எந்தக் கருத்தும் எப்போதுமே சமமாகவோ, தொடர்பு இல்லாததாகவோ இருக்காது. கருத்துக்களுக்குத் தூய உருவம் என்பதும் கிடையாது. சொற்களை ஏன் பயன்படுத்துகிறாய் ? சொற்கள் தொடர்புள்ள பொருள்களுடன் சம்பந்தத்தை ஏற்படுத்துகின்றன. இதைச் சொன்னதும், கெளதமனுக்கு அந்த இல்லறத்தலைவர் குறை கூறியது நினவு வந்தது: அயோத்தி மாநகர் அரண்மனையிலிருந்து ஓர் அரசகுமாரி சுகபோக வாழ்வைத் துறந்து, கானக வாசத்தை மேற்கொண்டதாகத் தகவல். கௌதமன் அதைப் பொதுவாக விமரிசித்தான்; "மேலும், இப்போதெல்லாம் பெண்களுக்கும் இந்தப் புது மோகம் தொற்றிக்கொண்டு வருகிறது." இதைச் சற்றுச் சினத்தோடு சொன்னான்.
ஹரிசங்கர் சிரித்தான். "ஏன் சிரிக்கிறாய்? உன் மகிழ்ச்சி நிலை என்னவாயிற்று?' கெளதமன் மேலும் சினந்தான்.
"நீயே போகப்போகத் தெரிந்து கொள்வாய்? பிக்கு நிதானமாகச் சொல்லிவிட்டு, தரையில் படுத்தான்.
"நீ எதற்காகத் திரிந்து கொண்டிருக்கிறாய்? வீட்டை விட்டு ஏன் ஓடி வந்தாய்?''
"நீ எதைத் தேடி அலைகிறாய்?" ஹரிசங்கர் பதிலைக் கேள்வியாக அளித்தான்.
"நீ பெரிய கல்வி. குருடன் மற்றொரு குருடனுக்கு வழிகாட்ட விழைவதுபோல், ஞானிகளாகத் தம்மை நினைப்பவர்கள் அகந்தை செருக்கு எனும் பிரமையில் சிக்கி, ஒரே பகுதியில் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.''
"பொருளற்ற சொற்கள்" - ஹரிசங்கர்.
"நீ பாணினியின் இலக்கண நூலைப் படித்திருக்கிறாயா? சொற்களின் எல்லைகளைத் தகர்க்காத வரைக்கும், அவற்றின் உட்பொருளை உன்னால் உணரவே முடியாது," சூளுரைப்பதுபோல் குரல் திடமாக ஒலித்தது.
"சொற்களின் இறுதி விளக்கத்திற்கு வரும்போது மூல - அல்லது முதல் அர்த்தம் மறைந்து விடுகிறது; பல மாறுதல்களைக் காணமுடிகிறது. பொருள் நுணுக்கத்தை ஆராயப்புகுந்த நான் திக்கு திசை தெரியாமல் எங்கோ போய்க்கொண்டிருக்கிறேன்."
கெளதமன் திடமாக வாதிட்டான் : "சொல் நிலையானது. சொல் கடவுள். 'ஓம்' எனும் பிரணவத்திலுள்ள மூன்று எழுத்துக் களுக்கும், குறில், நெடில், இடை எனும் மூன்று ஒலிகளான ஸ்வரங் களுக்கும் இடையில்தான் பிரபஞ்சப் படைப்பின் எல்லா அமைப்பு களுமே கட்டுண்டு இருக்கின்றன, இயங்குகின்றன. ஒலி வானத்தின் ஒரு தன்மை ."
"உன் பெயருள்ள முனிவரான கெளதம் மகரிஷி சொல்லியிருக் கிறார்: ஒலிசாசுவதமானதென்றால், முகத்திலிருந்து வெளிப்படுவதற்கு முன்பே தொனி ஒலிக்க வேண்டும். சொற்கள் வெளிப்பட வேண்டும். ஏனென்றால் வானவெளிக்கும் நம் காதுகளுக்கும் இடையே எவ்விதத் தடையும் இல்லையல்லவா?"
"நீ என்ன தத்துவவாதி? சொற்களில் நம்பிக்கை வைக்காதவன். சொற்களின் வழித்துணை இல்லாமல் நீ எப்படித் தூய சிந்தனைகளை எட்டிப்பிடிப்பாயாம்? தொனி - உள்ளுரைக் கருத்து சொல்லின் இயற்கைச் சிறப்பு பொருள் - அகப்பொருளோ , புறப்பொருளோ - யாவும் நிலையானவை; பொருள்தான் பிரும்மம்."
"காலத்தை நித்தியமாக எண்ணிக்கொண்டு நீங்கள் வீண் குழப்பங்களைப் பரப்பி வருகிறீர்கள்."ஹரிசங்கர் உத்வேகத்துடன் குறை கூறினான். "நீ வேதாந்தத்தைத் தாண்டி முன்னேறவில்லை என்பதைக் காணும்போது வியப்பாக இருக்கிறது."
“முடிவிற்கு அப்பால் வேறு என்ன இருக்க முடியும்?" "உனக்குத் தெரிந்திருக்க வேண்டுமே" ஹரிசங்கர்.
"பரமாத்மா - ஜீவாத்மா இரண்டும் அவித்தை காரணமாக இரண்டாகப் பிரிகின்றன; இதுதான் துவைதம். இதனால் சப்தம் - அசப்தம் (சப்தமில்லாத எனச்சொற்கள் இருவகைப் பிரும்மங்களா கின்றன. சப்தத்தைத் தியானம் செய்து அறிந்து கொண்டபின்தான் அசப்தத்ததை வெளிப்படுத்த முடியும்.''
"நீ சொல்லும் அந்த அசப்தம்தான் சொல் அல்லாதது) நான்."
கெளதமன் பேசவில்லை . ஹரிசங்கர் தொடர்ந்தான்: "கெளதமா! காரிய - காரணத்தின் முறைநெறி முழுமையானது. ஒரு பொருள் மற்றதைப் போல் இருப்பதில்லை. சிறிதுநேரம் அல்லது சிறிது காலம் சேர்ந்து இருப்பதைத் தவிர, அல்லது பொதுமையாக இருப்பதைத்தவிர ஒரு பொருளுக்கு மற்றதுடன் சம்பந்தம் ஏதும் கிடையாது. எல்லாமே நிலையற்றவைதாம்; யாவுமே துன்பம் - விபத்து - கேடுகளுக்கு இலக்காகு பவையே. ஸர்வம் துக்கம், துக்கம்!' என்கிறார்கள்; சரீரம், ஆத்மா இரண்டுமே அழிவுள்ளவை. இரண்டும் இணைந்துவிடுவதாலேயே சாசுவதமான எதையும் ஏற்படுத்தி விட முடியாது. ஆத்மா அமரத் துவம் கொண்டதன்று. மனிதன் விளக்கைப் போல் எரிந்து ஒளிர்ந்து, மங்கி, புகைந்து, அழிந்துவிட வேண்டியவன்தான். எஞ்சியிருப்பன வெல்லாம் நிகழ்சிகளும் தன்மைகளும்தான்... கெளதமா! தூங்குகிறாயா?"
"இல்லை ; சொல்லிமுடி!''
"இசைக்குப் புகழ்பெற்ற அயோத்தியில் ஒரு பெண் இருந்தாள். அவள் என்னைச் 'சாசுவதமான தன்மை உண்டு பொருளுக்கு' என நம்பவைக்க மிகவும் முயன்றாள். அவளும் மேகம் முழங்கினால் கூட இடத்தையும் காலத்தையும் மூடி போட்டுவிடுவாள்."
"ஹரிசங்கர்! நீ கீதத்தையும் சொல்லையும் மறுத்து விட்டாய். ஆனால் ஒன்றை நீ உணர்ந்து கொள் : ஒலி என்றும் இருந்து கொண் டிருக்கும்; அது அழிவற்றது." ''என் அனுபவத்தைக் கூறுகிறேன். வட கோசல நாட்டின் எல்லைக்கு நான் வந்து சேர்ந்தேன். எல்லைக் காவலர்கள் மறைவிடங் “களிலிருந்தவாறே என்னை உரக்கக் கேட்டார்கள் : நீ எங்கிருந்து வருகிறாய்? நான் பதில் சொன்னேன்: நான் இங்கிருந்து போனேன், இப்போது இங்கே திரும்பி வந்திருக்கிறேன். எல்லோருமே இந்த இடத்தில் மடிய வேண்டியவர்கள்தாம்! இதைக்கேட்டதும் ஒரு காவலாளி தன் சகாவுடன், 'இந்த ஆள் என்ன பிதற்றுகிறான்?'' என்று கேட்டான். 'யாரோ ஞானப்பித்து என்று தோன்றுகிறது. என்றான் மற்றவன். பிறகு இருவரும் தாயக்கட்டம் ஆடத் தொடங்கிவிட்டார்கள். பிறகு நான் அயோத்திக்கு வந்ததும் உணர்ந்து கொண்டேன் : ஒலி குரல் முடிவற்றது. கெளதமா ! வாழ்க்கையின் பரப்பு மிகப்பெரியது. நாடுகள், குடியிருப்புகள், புதிய புதிய மக்கள், பல்வேறு மொழிகள் - நான் நீண்ட பயணம் செய்திருக்கிறேன். ஆனால் மேகங்களின் ஒலி என்னை எல்லா இடங்களுக்கும் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக் கிறது! நீ என்னிடம் சொற்களும் ஒலிகளும் அழிவற்றவை என்று வாதாடுகிறாய்! என்னிடம் கேட்டுத் தெரிந்துகொள்! நான் நன்கு அறிவேன். இதெல்லாம் வெவ்வேறு இடங்களுக்குள்ள மகிமை - மாயமான மகிமை. உண்மை எதுவும் இல்லை . எல்லாம் துக்கமயம்!''
கெளதமன் சலனமின்றிக் கேட்டுக்கொண்டிருந்தான்.
"புனிதமான சரயூ - ரிக்வேதத்தில் இடம்பெற்றுள்ள இந்த நதி எனக்குத் தாய்! இன்று இரவு வியப்பில் ஆழ்ந்தவாறு உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அயோத்தி மாநகரமே ! உன்னிடம் இந்த விளக்குகள் எதுவரைக்கும் ஒளி வீசிக்கொண்டிருக்கும்? இன்றைய அயோத்தி பிரும்மா படைத்தது; மாற்றார் எவராலும் வெற்றி கொள்ள முடியாதது. இந்த வைபம் உன்னைவிட்டு என்றோ ஒருநாள் போய்விடுமா? போகாமல் இருக்குமா? போய்த்தான் ஆக வேண்டுமா? எதுவுமே சாசுவதம் இல்லையோ? அந்த மலரைச் சண்பகப்பூ என்கிறார்கள் - நிறமும் அழகும் அப்படிச் சொல்ல அடையாளம் காட்டுகின்றன. இதே இடத்தில் என் வீட்டார் என்னை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். என் தாய், தந்தை, சகோதரி. என் சகோதரியின் பாசத்தையும் மற்ற பாச நேசங்களைப் போல் புறக்கணித்துவிட்டு, இதயத்தைக் கடினமாக்கிக்கொண்டு என் வழிப்பயணத்திற்குத் திரும்பி வந்தேன். ராமபிரான் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்துவிட்டுத் திரும்பி வருவதாக வாக்களித்தான். நானும் இப்போது திரும்பி வந்திருக்கிறேன். ஆனால் சாக்கிய முனிவர் சித்தார்த்தர் என்னை வாக்களிப்பு எனும் பிணைப்பிலிருந்து விடுதலை செய்திருக்கிறார். சொற்கள் என்னை வஞ்சித்து விட்டதைப் பார்!” மனச் சோர்வுடன் சொல்லி முடித்தான் ஹரிசங்கர்.
மழை பொழிந்து கொண்டிருந்தது.
காற்றில் அகல்விளக்கு அணைந்து விட்டது. ஹரிசங்கர் செங் கல்லைத் தலையணையாகவைத்துக்கொண்டு படுத்தான். கௌதமன் வெள்ளை உத்தரீயத்தை இழுத்துப் போர்த்திக்கொண்டு, சுவர்ப் பக்கமாக ஒருக்களித்துப் படுத்தான். விழிப்பிலேயே இருவரும் மெளனமாகப் படுத்திருந்தார்கள். கீழைக்காற்று அவர்களைத் துயிலில் ஆழ்த்தியது.
அன்று இரவு கெளதமனுக்கு விசித்திரக் கனவுகள் தோன்றின. கோவில் கருவறையிலிருந்து சண்டிதேவி இளம்பெண்ணாக வெளியே வருகிறாள். பிறகு நதிக்கரையில் பார்த்த காவியுடை தரித்த பெண்ணாக மாறிவிடுகிறாள். பிறகு அவள் வடிவம் வேறுவிதமாக மாறுகிறது. முதலில் மணப்பெண்ணாகத் தோன்றியவள் மங்கல நங்கையாகத் தெரிந்தாள். சில கணங்களில் கிழவியாகி, பிறகு காளிதேவியைவிடப் பயங்கரமாகக் காட்சியளித்தாள். உடனே கெளதமனின் தலைமாட்டில் வந்து உட்கார்ந்து உரக்க அழத்தொடங் கினாள். "அம்மா! என் தாயே!" கௌதமன் அலறிவிட்டான். அந்தக் கிழவி நீண்ட பற்கள் அதிகம் தெரிய , மறுப்புத் தெரிவித்தாள். நான் உன் அம்மா இல்லை ; நான் வைசாலி நகரின் ..''
"தாயே! என் அம்மா!!" கெளதமன் உணர்ச்சிவசப்பட்டான். வில்வமரத்திலிருந்து ஒரு காய் கீழே விழுந்தது. கெளதமன் விழித்துக் கொண்டான். கலவரத்துடன் எழுந்து உட்கார்ந்தான். பக்கத்தில் ஹரிசங்கர் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான். மழை நின்றிருந்தது. கௌதமன் வேத மந்திரங்களை ஜபித்தான். வெகுநேரம் கழித்துத் தூக்கம் வந்தது.
விடியற்காலையில் - இருள் பிரிவதற்கு முன்பு ஹரிசங்கர் விழித்துக் கொண்டான். கௌதமன் சண்டீஸ்துதி பாடிக்கொண் டிருந்தான். துறையில் சில அந்தணர்கள் செருமியும் கனைத்தும் காலைக்கடன்களுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள் . மாந்தோட் டத்தில் புள்ளினங்களின் கலகலப்பு ஒலி எழுந்தது. கௌதமன் துர்க்கை சன்னிதியிலிருந்து வெளியே வந்தான். ஹரிசங்கர் அவனைப் பார்த்து முறுவலித்தான். கெளதமன் வினவினான்: 'வைசாலியில் யார் இருக்கிறார்?''
ஹரிசங்கர் பதில் சொல்லவில்லை; சிரித்துக்கொண்டான். கெளதமனுக்கு எரிச்சலாக வந்தது. இருவரும் கோவிலிருந்து படிகள் வழியாக இறங்கி சோலைக்குள் வந்தார்கள். "சிராவஸ்திக்குத் திரும்பிப் போகிறாயா?'' - ஹரிசங்கர் கேட்டான்.
"ஆமாம். நீயும் என்னுடன் வா. ஆவணி மாதத்தில் என்னுடன் ஆசிரமத்தில் தங்கலாம்.''
"மகரிஷிகளே எச்சரித்திருக்கிறார்கள்; துறவுப்பாதை கத்தி முனையைப் போன்றது. நீ என் வழியில் வர முயலாதே. எச்சரிக்கிறேன்!''
"சரி, பாதை குறுகலாக- ஒற்றையடிப் பாதையாக இருந்து, அதில் எதிரும் புதிருமாக இரு வழிப்போக்கர்கள் வந்து நிற்கும்போது, ஒருவர் விலகி மற்றவருக்கு இடம் கொடுத்தாக வேண்டும்; இல்லா விட்டால் இருவருமே பள்ளத்தில் விழவேண்டியதுதான், இல்லையா?"
"ஆமாம்"
இருவரும் சிராவஸ்தி நகரை நோக்கிச் சென்றார்கள்.
வானம் துப்புரவாக இருந்தது. காற்றில் மலர் மொக்குகளின் மணம் கலந்து வந்தது. மாலை நெருங்கியபோது இருவரும் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தார்கள். அங்கு மயில் வளர்ப்பு அதிகம். கிணற்று மேடையில் இருவரும் உட்கார்ந்தார்கள். கிராமம் முழு வதும் அவர்கள் வந்த செய்தி பரவியது.
ஹரிசங்கர் கண்களை மூடியவாறு உட்கார்ந்திருந்தான். அழகிய இளம்பெண் ஒருத்தி இருமயில் தோகை விசிறிகளுடன் அவர்களைத் தரிசிக்க வந்தாள். கெளதமன் காணிக்கையாக ஒரு விசிறியை வாங்கிக் கொண்டான்; அதைத் திருப்பிப் பார்த்தான். வனப்பு, வண்ணக் கவர்ச்சி, கலைத்திறன் பொருந்திய விசிறி. இவை எங்கெல்லாம் விற்பனைக்குப் போகின்றன ; வெளியூர் - வெளிநாடுகளில் லெல்லாம் இவற்றுக்கு வரவேற்பு இருக்கும். நான் தடவிப் பார்த்து, மென்மையை அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த விசிறியே அயோத்தி மாநகரின் கடைவீதியில் விற்பனைக்குப் போகும். இதையே ஒருகால் சண்பகப் பூ விற்கும் அந்தப் பெண் விரும்பி வாங்கிக் கொண்டாலும் கொள்வாள்.' கெளதமன் தோகை விசிறியைத் திருப்பிக் கொடுத்தான்.
பாருள்களை வைத்துக்கொள்ள எங்களுக்கு அனுமதி கிடையாது. அந்த அழகிய தோகை விசிறிகளை நீயே வைத்துக்கொள், எங்களுக்கு வேண்டாம். காடுகளில் இந்தத் தோகைகளை மயில்களின் மேனிகளிலே பார்த்தே பரவசமடைகிறோம்."
தோகைகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு. அந்தப் பெண் இருவரையும் வணங்கினாள்.
"உன் பெயர் சுஜாதாதானே?" கௌதமன் சிரித்துக்கொண்டே கேட்டான், பிறகு ஹரிசங்கரைப் பார்த்தான். அவன் கண்களை மூடியவாறு உட்கார்ந்திருந்தான்.
"இல்லை , என் பெயர் நந்தலாலா . சுஜாதா என் அக்காள்.'' இயல்பாகப் பதில் சொன்னாள். பிறகு கிராமத்தை நோக்கி நடந்தாள்.
"கெளதமா! வாழ்க்கைப் பாதையில் எந்த யுகத்திலும் உனக்கு நந்தபாலாவோ சுஜாதாவோ எதிர்ப்படுவாள். அவள் உன் அருகில் வந்து, உன்னை ஆராதிக்கவும் போற்றவும் விரும்புவாள். இப்போதும் காலதாமதமாகி விடவில்லை ; விழிப்பாக இரு; விழித்துக்கொள்!'' ஹரிசங்கர் அறிவுறுத்தினான்.
மறுநாள் காலையில் இருவரும் தம் பயணத்தைத் தொடர்ந் தார்கள். சிராவஸ்தி நெருங்கிக்கொண்டிருந்தது. சிறு காடு குறுக் கிட்டது; பிறகு சில கிராமங்கள் நடந்து கொண்டிருக்கையில், ஹரி சங்கர் சட்டென்று நின்றான். உடனே அவனுக்குச் சொல்லத் தோன்றியது. "கெளதமா! வைசாலியில் அம்பாபாலி என்றொரு பேரழகி - பொதுமக்கள் இருந்தாள். அவள், உன் சம்பகா, சுஜாதா, நந்தபாலா எல்லாரும் ஒரே வகை. நீ உன் உள்ளத்தை விகாரங் களிலிருந்து விடுவித்துக்கொள். பாச பந்தம் பொல்லாதது!''
ஹரிசங்கர் சட்டென்று திரும்பி, காட்டுப்பாதையில் நடக்கலானான். கெளதமன் பலமுறை அழைத்தான். எப்படியாவது தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்பினான். ஹரிசங்கர் திரும்பிப் பார்க்கவில்லை. காட்டுப் பாதையில் அவன் உருவம் மறைந்து விட்டது.
Comments
Post a Comment