Skip to main content

நான் நாஸ்திகனாக இருந்தேன் | கி.ரா.

(படம்: நவசக்தி ஆண்டுமலர், டிச. 1944 - ஜன. 1945)

நான் சென்னைக்கு வந்ததும், நான் புகுந்த ஆசிரிய கோஷ்டியினர் சிறந்த லட்சியவாதிகள். டி.எஸ்.சி., வ.ரா., சிவராமன். கு. ஸ்ரீனிவாசன், பி. எஸ். ராமையா எல்லோரும் பாரதியாரின் சீர்திருத்தக் கனலில் மூழ்கி, அந்த கொள்கைகளின்படியே வாழ்க்கையை வகுத்துக்கொண்டவர்கள். குறிப்பாக வ. ரா. பாரதியாருக்காகவே வாழ்ந்தார் என்று சொல்லலாம். ஏனென்றால், அவர் எங்கு இருந்தாலும், வீட்டிலும், கடற்கரையிலும், காரியாலயத்திலும், எப்போதும் பாரதியாரைப்பற்றியே பேசுவார். அவருடைய கவிதையின் மேன்மையைப் பற்றியும், அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த சாதாரணமான சம்பவங்களைப் பற்றியும் சலிப்பின்றிப் பேசிக்கொண்டேயிருப்பார்.

ஆகவே அந்தச் சூழ்நிலையின் வேகத்தினால் தாக்குண்ட நான் பாரதியாரைவிடச் சிறந்த கவி தமிழில் இல்லையென்றே எண்ணியிருந்தேன். அதனால் பாரதியாருக்கு முன் வாழ்ந்த கவிகளைப்பற்றி ஒன்றுமே அறியாமல் இருந்ததோடு, அறியவேண்டிய அவசியமே இல்லை என்ற அசட்டையுடன் இருந்தேன்.

சில சமயங்களில் ஆனந்த விகடனில் பி.ஸ்ரீ. அவர்கள் எழுதிவந்த கம்ப சித்திரத்தைப் படித்துப் பார்த்ததுண்டு. ஆனால் அப்போது எல்லாம் ‘என்ன இவ்வளவு கரடுமுரடான பாஷையில் கம்பர் பாடியிருக்கிறாரே, இதுவும் தமிழா? என்று எண்ணுவதுண்டு.

அந்த சமயத்தில்தான் புதுமைப்பித்தனின் உயரிய நட்பு எனக்குக் கிடைத்தது. சில ஆண்டுகள் அவருடன் கூட ஒரே வீட்டில் வசிக்கும் நல்வாய்ப்பு கிடைத்தது.

அப்போது எல்லாம் ஓய்வு கிடைத்தபோது இருவரும் தமிழ் இலக்கியத்தைப்பற்றி விவாதிப்போம்.

பொதுவாக வ.ரா.வின் கொள்கையை அவர் கண்டித்துப் பேசுவார். “பாரதியாருக்கு முன்னால் இருந்த கவிகளைப்பற்றி வ.ரா. ஒரே அடியாக கண்டித்துப் பேசுகிறார். ஆனால் கம்பன் ஒருவன் மட்டும் பிறக்கவில்லை என்றால் தமிழில் இலக்கியமே இல்லையென்று சொல்லவேண்டும்” என்று அடிக்கடி சொல்லுவார்.

அப்போதும் எனக்கு கம்பனிடத்தில் நம்பிக்கை ஏற்படவில்லை. “ராமனை ஒரு அவதார புருஷனாக வைத்து கம்பன் பாடியிருக்கிறான். அதை ஒரு பக்தி இலக்கியம் என்றுதான் சொல்லவேண்டும். பக்தியில்லையென்றால் கம்பராமாயணத்துக்கு மதிப்பு ஏது? என்று நான் சொல்லுவேன்.

அதன் பிறகு அவர்: “கம்பன் வெறும் பக்திக் கவி மட்டும் இல்லை. உலகத்திலேயே மிகச் சிறந்த இலக்கிய மேதை. அவன் உண்மையான கவி. எந்த கொள்கையையும் தத்துவத்தையும் அவன் பிரசாரம் செய்யவில்லை.” என்று சொல்லி கம்பனுடைய தெய்வ வணக்கப் பாடல்களை எடுத்துக்காட்டி விளக்குவார். அவருடைய கருத்து, கம்பன் ஒரு தனி வழி வகுத்துக்கொண்ட தத்துவ ஞானி என்பதுதான்.

ஒரு சமயம் இருவரும் குடும்பமின்றி ஒரே அறையில் பலமாதங்கள் தங்கியிருந்தோம். அப்போது தினசரி இரவு வெகுநேரம் வரையில் கம்பராமாயண விளக்கம் நடைபெறும். முக்கியமான பாடல்களை எடுத்து விளக்குவதோடு நில்லாமல், ஒவ்வொரு காண்டமாக எனக்குப் படித்துக் காட்டுவார். அப்படி ராமாயணம் முழுவதும் இருமுறைகள் நான் அவரிடம் கேட்டிருக்கிறேன்.

அதன் பயனாக எனக்கு கம்பனிடம் ஓர் பக்தி ஏற்பட்டதோடல்லாமல் ‘பைத்தியமே’ ஏற்பட்டுவிட்டது! உடனேயே சொந்தமாக ஒரு புஸ்தகம் வாங்கி வைத்துக்கொண்டேன். ஒழிந்தபோது எல்லாம் சுயமாகப் படித்துச் சுவைக்கத் தொடங்கினேன்.

அவர் முதலில் எனக்குக் கற்றுக்கொடுத்தது சுயமாகக் கம்பனை எப்படிப் படிக்கவேண்டும் என்பதுதான். அதாவது செய்யுளை எளிதாகப் பதம் பிரிக்கக் கற்றுக்கொண்டுவிட்டால் பொருள் உடனே விளங்கிவிடும் என்று சொல்லுவார்.

அதைத் தவிர, கம்பனுடைய சிறப்புக் குணங்களை எடுத்து விளக்குவார். உதாரணமாக நாடகச் சுவை நிரம்பிய கட்டங்களை எடுத்துக் காட்டுவார். பிறகு சொற்களை எப்படி பிரயோகம் செய்திருக்கிறான், தேவை ஏற்படும்போது புதுப்புதுச் சொற்றொடர்களை எப்படி அனாயாசமாக சிருஷ்டி செய்கிறான் என்பதையெல்லாம் தெளிவாக எடுத்துச் சொல்லுவார்.

ஓர் கவிதையை ரசிப்பதற்கு முன்னர் அந்தக் கவியின் இதயத்தை உணரவேண்டும் என்று சொல்வார். அப்படியே கம்பனுடைய உள்ளச் செறிவையும், அவனுடைய நடையின் சிறப்பான தனி இயல்பையும் நான் அறியும்படி செய்தார்.

எல்லா விஷயங்களிலும் போலவே கம்பனுடைய விஷயத்திலும் அவருக்குச் சில தனியான கொள்கைகள் உண்டு. அதாவது கம்பன் முதலில் யுத்த காண்டத்தைப் பாடிய பிறகுதான் மற்றக் காண்டங்களைப் பாடினான் என்பது அவருடைய கருத்து. ஏனென்றால், அந்தக் காண்டத்தில் உள்ள சொல் வளமும், நாடகச் சுவையும் வேறு காண்டங்களில் இல்லை. ஆரம்பத்திலேயே இரணிய நாடகத்துடன் தொடங்கி, விஸ்தாரமான நிலைக்களத்தில் கதை செல்லுகிறது. ஒரு மாபெரும் போரை முன்வைத்து, வாழ்க்கையின் தத்துவங்களையெல்லாம் அள்ளிக் கொட்டியிருக்கிறான் கம்பன் என்பது அவருடைய கருத்து. இராவணன் என்ற ஒரு மாவீரனுடைய வீழ்ச்சியைக் காட்டும் அந்தக் காண்டத்தை அதற்கு உண்டான கௌரவத்தோடு, கண்ணியத்தோடு பாடியிருக்கிறான் கம்பன் என்று சொல்லுவார்.

கம்பனைத் தவிர, இன்னும் பல சில்லறைப் பிரபந்தங்களையும் நான் அறிந்தது புதுமைப்பித்தனுடைய நட்பினால்தான். ‘குற்றாலக் குறவஞ்சி’, ‘குற்றாலத்தலபுராணம்’, ‘கலிங்கத்துப் பரணி’ முதலிய பாடல்களைப் படித்துச் சொல்வார்.

செயங்கொண்டானிடம் அவருக்கு ஈடுபாடு அதிகம். “கம்பனுடைய காவியத்துக்கு முன் வழிகாட்டி செயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணிதான்” என்று அடிக்கடி சொல்லுவார். அதில் உள்ள சில பாடல்களை எடுத்து கம்பனுடைய பாடல்கள் சிலவற்றுடன் ஒப்பிட்டுக் காட்டுவார்.

புதுமைப்பித்தனுடைய நட்பு எனக்குக் கிடைக்காமலிருந்திருந்தால் தமிழ் இலக்கியத்தின் வளத்தையும் மேன்மையையும் அறியாத நாத்திகனாகவே இருந்திருப்பேன் என்பதில் ஐயம் இல்லை. அந்த வகையில் அவர் எனக்கு ஆசிரியனாக இருந்து, வழிகாட்டியதை நான் மறக்கவே முடியாது.

பிற்காலத்திலும் நான் ஜெமினி ஸ்தாபனத்தில் ‘ஔவையார்’ திரைப்படத்திற்கு வசனம் எழுதியபோதும், சங்க இலக்கியப் பெருங்கடலுக்குள் நீந்திக் கரையேற உதவியவரும் புதுமைப்பித்தன்தான்.

மற்ற பண்டிதர்கள் பாடஞ் சொல்வதற்கும் புதுமைப்பித்தன் பாடஞ் சொல்வதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. சம்பிரதாயமாகப் பாடம் சொல்லுவோர் பெரும்பாலும் தங்களுடைய பாண்டித்யத்தைக் காட்டும் எண்ணத்துடனேயேதான் பாடம் சொல்லுவார்கள். அதனால் பாடம் கேட்போருக்கு ஓர் சிறுமை மனப்பான்மை ஏற்பட்டுவிடும். ஆனால் புதுமைப்பித்தனிடம் பாடம் கேட்கும்போது அந்த விதமான உணர்ச்சி ஏற்படவே இராது. பாடம் கேட்கிறவனும் நம்மைப் போன்ற அறிவு உடையவன்தான் என்று எண்ணி, சகஜமாக பாடல்களை எடுத்து விளக்கிக் காட்டுவார்.

புதுமைப்பித்தனும் ராஜாஜியும்

1936-ல் என்னுடைய உறவினரும் காந்திஜியின் ‘ஹரிஜன்’ பத்திரிகையின் ஆசிரியருமான ஆர். வி. சாஸ்திரி அவர்களின் இல்லத்தில் இலக்கிய ரசிகர்கள் கூடிப் பேசுவது வழக்கம். ராஜாஜி, கல்கி, டி.கே.சி. முதலிய அன்பர்கள் அங்கு கூடுவதுண்டு. ஞாயிற்றுக்கிழமைகளில் நானும் அங்கு சென்று பொழுதுபோக்குவதுண்டு.

பொதுவாக தற்காலச் சிறுகதைகளைப் பற்றியும் குறிப்பாக ‘மணிக்கொடி’யில் வெளியாகும் சிறுகதைகளைப் பற்றியும் ராஜாஜி அவர்கள் விமர்சனம் செய்வார்.

அந்தச் சமயம் புதுமைப்பித்தன் மணிக்கொடியில், ‘பக்த குசேலா - நவீன மாடல்’ என்று ஒரு சிறு நாடகம் எழுதியிருந்தார். இந்தக் காலத்தில் கிருஷ்ண பக்தி உள்ள ஒரு பிராமணனுக்கு இருபத்தேழு குழந்தைகள் இருந்தால் அதன் விளைவு என்ன ஆகும் என்பதுதான் அந்த நாடகத்தின் மையக் கருத்து. அந்த விஷயத்தை வைத்துத் தற்காலப் பொருளாதார வாழ்க்கையை நையாண்டி செய்திருக்கிறார். அது உண்மையில் மிகவும் ரசமான நையாண்டி நாடகம்.

அதைப் படித்திருந்த ராஜாஜி நான் போயிருந்தபோது என்னிடம், “ஏன் ஸார், இந்த புதுமைப்பித்தன் என்கிறவர் சூனா-மானாக்காரரோ? என்று கேட்டார்.

நான், “இல்லையே ரொம்ப நல்லவர். நான் அழைத்துக்கொண்டு வருகிறேன். நீங்களே பாருங்கள்” என்று பதில் சொன்னேன்.

அதே போல அடுத்த வாரம் நானும் புதுமைப்பித்தனும் பி. எஸ். ராமையாவும் திரு. சாஸ்திரியின் இல்லத்துக்குச் சென்றோம். ராஜாஜி வந்தார். அறிமுகப் படலம் ஆயிற்று. பிறகு ராஜாஜி கேட்டார்.

“ஏன் ஸார், உங்க கதை படிச்சேன். ஆனால் உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்!”

புதுமைப்பித்தன் வழக்கம்போல் தன்னுடைய பெரிய பல்லைத் திறந்து காட்டிச் சிரித்துக்கொண்டே பதில் சொன்னார்:

“எனக்கு யார் மேலும் கோபம் இல்லை. உண்மையை சொன்னேன். சில சமயம் உண்மை கசப்பாய் இருக்கிறது.”

“நான் உங்களுடைய கற்பனையை ரசிக்கிறேன். உங்களுக்கு நிறைய கற்பனை இருக்கிறது. ஆனால் அந்தக் கற்பனையை எல்லாம் பயன் ஏற்படும் வழியிலே செல்லணும். அதுதான் நல்லது.”

“எது பயன் உள்ள வழி?

“இப்போ, நாட்டிலே பெரிய நதி வெள்ளம் போல வருது. அதனாலே யாருக்கும் பயன் இல்லை. அதை ஒரு எஞ்ஜினீர் வந்து அணை கட்டித் தேக்கினால் பலன் உண்டு, அதன் மூலம் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் செழிப்பும் வளமும் அடைகின்றன. அதைப்போல கற்பனா சக்தியையும் அணை போட்டுத் தேக்கிப் பாய்ச்சினால்தான் பலன் உண்டு.”

“உண்மை, ஆனால் மலை உச்சியிலிருந்து விழுந்து மண்ணையும் மரத்தையும் அடித்துக்கொண்டு கரைபுரண்டு வரும் காட்டாறு எவ்வளவு அழகாய் இருக்கிறது! அந்த அழகை நான் ரசிக்க விரும்புகிறேன். காட்டில் வாழும் கொடிய விலங்குகளான சிங்கம், புலிகளிடத்திலும் ஓர் தனி அழகு இருக்கிறது, அந்த அழகை எடுத்துக்காட்டுவது சரியில்லையா?

இப்படியே விவாதம் வெகுநேரம் நடந்தது. இருவரும் ஒத்துப்போகும் இடமேயில்லை. முடிவு ஏற்படாமலே விவாதம் ‘பேசித் தீர்க்கப்பட்டது’.

***

எழுத்து இதழ் 7, ஜூலை 1959 (புதுமைப்பித்தன் நினைவு ஏடு)

Comments

Most Popular

இலக்கியத்தில் உருவங்கள் | க. நா. சுப்ரமண்யம்

இலக்கியத்தில் பல பல உருவங்கள் உண்டு. அவை முதல் முதலாகப் பல பல மொழிகளில் தோன்றி இலக்கிய உருவம் பெற்று சிறப்பாகச் சில மொழிகளில் பிரமாதமான இலக்கிய அந்தஸ்து பெற்றவை. இந்த உருவம் இந்த மொழியைச் சேர்ந்தது என்று யாரும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அப்படிச் சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. கிணற்றுத் தவளைகள்தான் இந்த மாதிரிப் பெருமை தேடிக்கொண்டு, தங்கள் தங்கள் மொழியே உலகிலுள்ள எல்லா இலக்கியத்துக்கும் ஆதாரம் என்று கட்சி கட்டிக்கொண்டு பெருமை பாராட்டிக்கொண்டிருக்க முடியும். இன்றைய தமிழ் இலக்கியாசிரியன் உலகிலுள்ள எல்லா மொழி இலக்கியங்களுக்கும் உருவங்களுக்கும் வாரிசு. தெரிந்தோ தெரியாமலோ அவன் தமிழ்ப் பழமைக்கெல்லாம் வாரிசாகிறான். - சிலப்பதிகாரத்தையும், சங்க நூல்களையும், கம்பராமாயணத்தையும், தேவாரம் திருவாச கத்தையும் அறிந்தோ அறியாமலோ, அவன் மனம் அந்த மரபிலேதான் சமைகிறது. தமிழனாகப் பிறந்த தோஷத்தினால் அவன் விடுகிற மூச்சே தமிழ் மரபு மூச்சு என்றுதான் சொல்லவேண்டும். இதிலே பிற மொழிகளின் மரபு எங்கே எப்படி வருகிறது என்று கேட்கலாம். சம்ஸ்கிருத முதல் நூலை அறிந்ததாகக் காட்டிக்கொள்கிற கம்பனும், ஐரோப்பிய நாவ...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

காந்திஜி குடும்ப மூதாதையர் வரலாறு

[மகாத்மா காந்தி தமது 'சுயசரிதை'யில் தம் குடும்ப வரலாற்றைச் சொல்லும்போது, தமது பாட்டனாரைப் பற்றி மாத்திரமே குறிப்பிட்டிருக்கிறார். ஆகையால், காந்தி குடும்பத்தைப் பற்றிய முந்திய வரலாற்றையும் அறிய விரும்புவோருக்குப் பயனுள்ளதாக இருக்கட்டும் என்பதற்காக அக்குடும்ப வரலாற்றைக் குறித்து, ஸ்ரீ பிரபுதாஸ் காந்தி எழுதியிருக்கும் "காந்தியுடன் என் குழந்தைப் பருவம்'' என்ற நூலிலிருந்து....] நான் சேகரிக்க முடிந்த தகவல்களிலிருந்து, எங்கள் குடும்ப சரித்திரத்தில் லால்ஜி காந்தியின் பெயர்தான் முதல் முதல் தெரிகிறது. லால்ஜி காந்தி குடும்பத்தில் ஐந்தாவது தலைமுறையாகப் பிறந்தவரான உத்தம சந்திர காந்தியே, காந்தி குடும்பப் பெயருக்குக் கௌரவத்தையும் கீர்த்தியையும் தேடித் தந்தார். ஏழாவது தலைமுறையில் பிறந்தவரே, மகாத்மா காந்தி. லால்ஜி காந்தியின் குமாரர் ராம்ஜி காந்தி. இவர் தப்தாரியாக வேலை பார்த்தார். ஆகவே, போர்பந்தர் சமஸ்தான திவானுக்கு வலக்கரம்போல் இருந்தார். இப்பொழுது மந்திரி சபையில் உள்நாட்டு மந்திரிக்கு என்ன பொறுப்புக்கள் உண்டோ அவையே தப்தாரியின் பொறுப்புக்களாகும். ராம்ஜி காந்தியின் மகன் ர...