Skip to main content

கிண்டிலில் எழுத்து


‘எழுத்து’ இதழ்களை அமேசான் கிண்டிலில் மின்னூலாகப் பதிவேற்றும் பணி இன்று அவ்விதழின் ஆசிரியர் சி. சு. செல்லப்பா அவர்களின் பிறந்தநாளில் ஆரம்பமாகிறது. இதற்காக இதழியலாளர் சு. அருண் பிரசாத் உதவியுடன் சி. சு. செல்லப்பாவின் மகன் திரு. சுப்ரமணியன் அவர்களை அணுகி அனுமதி கோரியபோது, மகிழ்ச்சியுடன் இசைவு தெரிவித்தார். இதழ்களைத் திரட்டவும் பெருமுயற்சி எடுத்துக்கொண்டவர் அவர்தான்.  
'எழுத்து' 11 ஆண்டுகளைக் கடந்து 112 இதழ்கள் வெளியானது. இரட்டை இதழ்களாக வந்தவை 7. இதனால் இதழ் எண் 119 வரை செல்கிறது. முதல் இதழ் ஜனவரி 1959ல் வெளியானது. 12ஆம் ஆண்டின் முதல் ஏடாக ஜனவரி 1970ல் வெளியான இதழே கடைசி இதழாகவும் அமைந்தது.

ஆரம்ப இதழ்கள் சிலவும் இடையிடையே சில இதழ்களும் தவிர்த்து, 83 ஏடுகள் தமிழிணையம் (https://www.tamildigitallibrary.in/) இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.  அந்தத் தளத்தில் விடுபட்டிருக்கும் இதழ்களில் பெரும்பாலானவற்றை திரு. சுப்ரமணியன் அவர்களே தனது சேகரிப்பிலிருந்து எடுத்து அனுப்பினார். பைண்ட் செய்யப்பட்ட தொகுப்பைப் பிரித்து பக்கம் பக்கமாக பொறுமையாக ஸ்கேன் செய்து அனுப்பிவைத்தார். 21 மற்றும் 22வது இதழ்கள் அவரிடமும் சேதமடைந்திருந்தன. பலரிடம் விசாரித்து புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் நூலகத்திலிருந்து அந்த இதழ்களையும் பெற்றுத் தந்தார்.
விடுபடல் ஏதேனும் இருக்கிறதா என்று அறிய எல்லா இதழ்களையும் வரிசையாகப் பார்வையிட்டபோது தமிழிணையம் இணையதளத்திலிருந்து எடுத்துக்கொண்ட சில இதழ்களில் ஓரிரு பக்கங்கள் இல்லாமலிருப்பதும் சில பக்கங்களில் எழுத்து தெளிவில்லாமல் இருப்பதும் தெரிந்து, அவை சரிசெய்யப்பட்டன.
கணிசமான எண்ணிக்கையிலான இதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றி பேருதவி புரிந்திருக்கிறது தமிழிணையம் இணையதளம். இதழ்களில் விடுபட்டவற்றைப் பெறவும் சீர்செய்யவும் உதவியவை புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் நூலகமும் சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமும். இவற்றின் நிர்வாகிகளுக்கும் எல்லா வகையிலும் துணை நிற்கும் சி. சு. செல்லப்பாவின் மகன் திரு. செ. சுப்ரமணியன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
-
அச்சில் வெளியான இதழை மின்னூல் வடிவில் தரும்போது அதன் அமைப்பில் சில மாற்றங்களைச் செய்யவேண்டியிருக்கிறது. அவை பற்றிய விளக்கங்கள் வருமாறு:
(1) அச்சில் பக்க அமைப்பு வசதிக்காக ஒரு படைப்பை வெவ்வேறு பக்கங்களில் பிரித்து அமைப்பது வழக்கம். மின்னூலாகத் தயாரிக்கும்போது ஒவ்வொரு படைப்பும் முடிவுற்ற பிறகே அடுத்த படைப்பு இடம்பெறும் வகையில் அமைக்கப்படும். (2) ஒரு படைப்பிற்குள் இடையில் கவிதையோ அறிவிப்போ விளம்பரமோ வேறு ஏதேனும் குறிப்போ இடம்பெற்றிருந்தால் அவையும் அந்தக் குறிப்பிட்ட படைப்பு நிறைவுற்ற பின், அதற்கு அடுத்த இடத்தில் வைக்கப்படும். (3) விளம்பரங்கள் பெரும்பாலும் எழுத்துரு வடிவுக்கு மாற்றப்படாது. இதழில் இடம்பெற்ற வடிவத்திலேயே சேர்க்கப்படும். (4) அச்சுப்பிழை போன்ற சிறிய பிழைதிருந்தக் குறிப்பு ஏதேனும் இருந்தால், தேவையான திருந்தம் செய்யப்பட்டு அந்தக் குறிப்பு நீக்கப்படும்.
-
ஒவ்வொரு இதழும் 49 ரூபாய். அக்டோபர் 2ஆம் தேதியிலிருந்து ஒவ்வொரு இதழும் 3 நாட்கள் இலவசமாகக் கிடைக்கும். வாசகர்கள் தங்கள் கருத்துகளை எழுதியும் இதழ்களின் சுட்டிகளைப் பகிர்ந்தும் துணை நிற்கவேண்டும்.
-
எழுத்து இதழ்த் தொகுப்பு 

Comments

Most Popular

ஐரோப்பியர் வருகை - மயிலை சீனி. வேங்கடசாமி

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, மேல் நாட்டார் நமது இந்தியா தேசத்துடன், சிறப்பாகத் தென் இந்தியாவுடன், வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிகிறது. யவனர் (உரோமர், கிரேக்கர்) என்னும் ஐரோப்பிய ஜாதியார், சேர நாட்டின் கடற்கரைப் பட்டினங்களிற் பண்ட சாலைகள் அமைத்து, அவற்றில் நமது நாட்டுச் சரக்குகளைச் சேமித்து வைத்துக் கப்பல்கள் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டு போனார்கள். மதுரை, புகார், (காவிரிப்பூம் பட்டினம்) முதலிய நகரங்களிலும் யவனர் வசித்து வந்ததாகத் தமிழ் நூல்களினால் அறிகிறோம். கி.மு. 22 இல் மதுரையில் அரசாண்டிருந்த பாண்டிய மன்னன், அகஸ்தஸ் ஸீஸர் (Augustus Ceasar) என்னும் யவன அரசனிடம் தூதுவர்களை அனுப்பினான் என்று ஸ்த்ராபோ (Starbo) என்னும் மேல் நாட்டாசிரியர் எழுதியிருக்கிறார். தமிழருக்கும் யவனருக்கும் இருந்த இவ்வர்த்தகத் தொடர்பு, கி.பி. 47 முதல் மேன்மேலும் அதிகப்பட்டது. ஏனென்றால், அந்த ஆண்டில் ஹிப்பலஸ் (Hippalus) என்பவர், இந்து சமுத்திரத்தில் வீசுகிற வட கிழக்கு தென் மேற்குப் பருவக் காற்றைக் கண்டுபிடித்தார். இப்பருவக் காற்று வீசுகிற காலங்களில் பிரயாணம் செய்வதால் மாலுமிகள் விரைவாகக் க...

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...