Skip to main content

கொள்ளையோ கொள்ளை | கிழக்கு இந்தியக் கம்பெனி வழிமறித்தல் | ஜே. சி. குமரப்பா


இக்கம்பெனியார் இங்கு வந்த காலத்தில் கையில் கிடைத்ததை எல்லாம் பிடுங்கி வெளியேற்றி வந்தார்கள். கபடமான முறையில் திருட வேண்டுமென்று ஏற்படவில்லை. வெட்ட வெளிச்சமாகவே கொள்ளையடித்து வந்தார்கள். பிளாஸி யுத்தத்திற்குப் பிறகு இருந்துவந்த நிலைமையை மெகாலே கீழே கூறியுள்ளவாறு வர்ணிக்கிறார்:-
இக்கம்பெனியின் மீதும், அதன் அதிகாரிகள் மீதும் தனமானது மழையைப் போல் கொட்டிக்கொண்டேயிருந்தது. எட்டு லட்சம் பவுன்கள் பெறுமானமுள்ள வெள்ளி ரூபாய்கள் மூர்ஷிதாபாத்தினின்று கல்கத்தாவிலுள்ள வில்லியம் கோட்டைக்கு நதி மார்க்கமாக அனுப்பப்பட்டது. அதுவரை காய்ந்து கிடந்த கல்கத்தா இப்பணம் கிடைத்தவுடன் ஒளிபெற்று, ஆடம்பரமடைந்துவிட்டது. உடனே இங்கிலாந்திலும் சுறுசுறுப்பு உண்டாயிற்று. தலைகீழாகப் படுத்திருந்த வியாபாரங்கள் மறுபடியும் ஆரம்பிக்கப்பட்டன. ஆங்கில ஜனங்களுக்கு மீண்டும் மூச்சு வந்துவிட்டதாகவே காணப்பட்டது. எங்கும் பண நடமாட்டம் அதிகமாயிற்று. தன் மனம் திருப்தி அடையும் வரை கிளைவும் திரவியம் சேகரித்துக்கொண்டார். இவரைத் தடுக்கவோ, எதிர்க்கவோ அங்கு யாரும் கிடையாது.
ஆங்கில சாம்ராஜ்யத்திற்கு இந்தியாவில் அடிகோலிய இக் கிளைவ் இங்குக் கொள்ளை அடிக்கும் முறையை முதலில் ஆரம்பித்து நடத்திவைத்தான். இவ்விடம் கொள்ளை கொண்ட திரவியம் முழுவதும் இங்கிலாந்து சென்றடைந்தது. அந்நாட்டிற்கும் போதுமான மூலதனம் கிடைத்தது. மூன்றே வருஷத்திற்குள் சீர்திருத்தப்பட்ட தரி (Fly Shuttle) வெளிக்கொண்டுவரப்பட்டது. அடுத்த நான்கு வருஷங்களுக்குள் புதிய நூல் நூற்கும் இயந்திரம் (Hargreaves Spinning Jenny) வெளிவந்தது. 1768ல் வாட் என்பவர் நீராவி என்ஜினை நிர்மாணித்தார். 1778ல் கிராம்டன் என்பவர் கண்டுபிடித்த மியூல்என்ற நெசவு இயந்திரம் வெளிவந்தது. விசையினால் இயக்கப்படக்கூடிய தரி 1785-ல் பேடன்ட்’ (Patent) செய்துகொள்ளப்பட்டது. இதுவே இங்கிலாந்தில் கைத்தொழில் முன்னேற்றத்திற்கும் இந்தியாவின் கைத்தொழில் பிற்போக்கிற்கும் அடிப்படையான இதிகாசச் சுருக்கமாகும். ஆராய்ச்சியாளர்களின் யுக்திகளைக் காரியாம்சத்தில் செய்து பரீட்சிக்கத் தேவையான மூலதனம் இவ்வாறு இந்தியாவினின்றே கொள்ளையிட்டுக் கொண்டுபோகப்பட்டது.
"உலகம் தோன்றிய நாள் முதல் எத்தகைய தொழிலும் பிரிட்டிஷார் இந்தியாவில் நடத்திய கொள்ளையைப்போல் இவ்வளவு அளவற்ற லாபத்தை அளித்ததே கிடையாது; சுமார் ஐம்பது வருஷங்கள் வரை இவர்களுக்கு ஒருவிதமான போட்டியும் இல்லாது ஏகபோகமாக அனுபவிக்க முடிந்தது.''
1750-ல் இங்கிலாந்தில் ஒரு வட்டிக்கடையும் இருக்கவில்லை. ஆனால் 1790-லோ ஒவ்வொரு வியாபார ஸ்தலத்திலும் ஏராளமான வட்டிக்கடைகள் ஏற்பட்டுவிட்டன.
வங்காளத்திலிருந்து வந்த ஏராளமான வெள்ளியின் மூலம் இங்கிலாந்தின் தனம் அதிகரித்ததோடு அல்லாமல் பணத்தின் நடமாட்டமும் பெருகிற்று. 1759-ல் 10, 15 பவுன்களுக்கு நோட்டுகள் அச்சடித்து வெளியிடப்பட்டன. கிராமாந்தரங்களிலும் இந்த நோட்டுகள் ஏராளமாகப் புழக்கத்திற்கு வந்தன.
ஏறக்குறைய பிளாஸி யுத்தம் ஆரம்பித்தது முதல் வாடர்லூ யுத்தம் முடியும் வரை சுமார் பத்தாயிரம் லட்சம் பவுன்கள் மதிப்புள்ள இந்திய திரவியம் இங்கிலாந்து பாங்குகளுக்குச் சென்றிருக்கின்றது. அந்தச் சமயத்து ரூபாய்களுக்குத் தற்கால ரூபாய்களைவிடப் பல மடங்கு அதிகமான மதிப்பு இருந்துவந்தது. ஆகவே இவர்கள் கொண்டு சென்ற இந்தக் கணக்கற்ற தொகையின் மதிப்பை ஊகித்துப் பாருங்கள். இவ்வளவு தொகையையும் கொண்டு போனார்களே, அவைகளைத் திருப்பிக் கொடுக்கும் எண்ணத்துடன் எடுத்துச் சென்றார்களா? அதுதான் இல்லை. ஏனெனில் இவ்வளவு தொகையையும் அவர்களின் நாட்டுக்கு வேண்டிய கடனாகஎடுத்துச் சென்றிருந்தால் இவர்களின் தேசியக் கடன் ஏராளமாக இருக்க வேண்டாமா? 1815-ம் வருஷத்துப் புள்ளிவிவரப்படி இந்நாட்டாரின் தேசியக் கடன் சுமார் 8610 லட்சம் பவுன்கள் என்று கணக்குக் காட்டுகிறார்கள். அதற்கு முன் 50 வருஷமாக இந்தியாவிலிருந்து எடுத்துச் சென்ற தொகையில் இது மிகச்சிறு அளவேயாகும்.
முதல் விழுங்குதல்
மேலே சொன்னவை எல்லாம் வெட்ட வெளிச்சமாக, சற்றும் கூச்சமின்றிக் கொள்ளை கொண்ட காலம். இவ்வளவு கொள்ளை அடித்துப் பணக்காரர்கள் என்ற கௌரவமான பட்டம் கிடைத்திருக்கிறது. முன்போல தங்கள் வேலையை வெளிப்படையாகச் செய்துவர சங்கோசப்பட்டார்கள். ஆகவே இந்த இரண்டாவது முறையைக் கையாளத் தொடங்கினார்கள். இந்தியாவில் கிடைத்த வரி வகைகளைக் கொண்டு வியாபாரச் சரக்குகளை வாங்கி இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்துவந்தார்கள். இந்த வியாபாரச் சரக்குகள் முழுதும் கம்பெனியார்களின் சொந்தப் பொருள்களாகக் கருதப்பட்டன. முதலில் சொன்ன முறைக்கும், இந்தப் புதிய முறைக்கும் வித்தியாசம் என்ன என்றால், முன்பு பணமாகக் கொண்டுபோனார்கள் என்பதே. இரண்டும் சந்தேகமில்லாமல் கொள்ளைதான்.
கம்பெனியார்கள் இவ்வளவு ஏராளமான திரவியங்களை இங்கிருந்து அள்ளிச்செல்ல முடிந்ததானால் இந்தியாவுக்குப் பொதுக்கடன் உண்டாகியிருக்கக் காரணமே இல்லை. சற்று கௌரவமான முறையில் இந்திய திரவியங்கள் யாவற்றையும் இங்கிலாந்து பாங்குக்குக் கொண்டு சேர்த்தார்கள். கம்பெனியார் இந்தியாவின் அரசாங்கம் நடத்தும் பொறுப்பு ஏற்றிருந்தார்கள். குடிபடைகளிடமிருந்து வசூலிக்கப்படும் வரியானது திரும்ப அவர்களின் நலனிற்காகவும் தேச முன்னேற்றத்திற்காகவும் செலவு செய்யப்படவேண்டும். நாட்டின் வரியை மனம் போனபடி செலவு செய்தல் நீதியான அரசுமுறை ஆகாது. அப்படி இருக்க கிடைத்த வரி யாவற்றையும் வியாபாரச் சரக்குகளாக மாற்றி வெளிநாடு அனுப்பிவைப்பது என்பது மிக்க கொடுமையான தேசத் துரோகமாகும். இதனால் குடிபடைகள் மிகவும் அல்லலுற்றார்கள். ஒவ்வொரு தடவையும் வரி செலுத்தினார்களே ஒழிய அதற்குப் பிரதி உபகாரமாக அரசாங்கத்தாரிடமிருந்து யாதொரு நலனையும் பெற்றார்களில்லை. 1793 முதல் 1812 வரையில் வருஷம் ஒன்றுக்குச் சராசரி 130 லட்சம் பவுன்கள் வீதம் இவ்வரிப்பணம் நாடுகடத்தப்பட்டிருக்கிறது.

கொள்ளையோ கொள்ளை மின் நூலை வாங்க,
https://tinyurl.com/KollayoKollai

Comments

Most Popular

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

க.நா.சு.வின் புதிய நூல்கள்

க.நா.சு.வின் தொகுக்கப்படாத, மறுபதிப்பு காணாத படைப்புகள் அழிசி வெளியீடாக வெளியாகிக்கொண்டிருக்கின்றன. சென்ற ஆண்டு ராணிதிலக் தொகுத்த ‘விசிறி’ சிறுகதைத் தொகுப்பும் ‘விமரிசனக்கலை’  கட்டுரைத் தொகுப்பும் வெளியாயின. அவற்றைத் தொடர்ந்து இன்னும் சில க.நா.சு. நூல்கள் வெளிவருகின்றன. 1. எமன் சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள், தழுவல்கள் என இதுவரை தொகுக்கப்படாத பல்வகை படைப்புகளைத் தேடித் தொகுத்திருக்கிறார் 'காவிரி' இதழ் ஆசிரியர் விக்ரம். இந்நூலின் பின்னிணைப்பில் க.நா.சு.வின் அரிய புகைப்படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. 2. சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் எழுத்து இதழில் க.நா.சு. எழுதிய தொடர் முதன்முறை நூலாகிறது. நிறைவுபெறாத இத்தொடரில் க.நா.சு. கட்டுரைகளுக்கு அப்போது வெளியான எதிர்வினைகளும் க.நா.சு. தேர்ந்தெடுத்த கதைகளும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளன. 3. புதுமையும் பித்தமும்: ஆளுமை – படைப்பு – விவாதம் புதுமைப்பித்தன் பற்றி க.நா.சு. எழுதியவற்றின் தொகுப்பு. ஏற்கெனவே 2006ஆம் ஆண்டு வெளியான நூலின் விரிவாக்கப்பட்ட மறுபதிப்பு. புதிய கட்டுரைகளுடன் பு.பி. - க.நா.சு. இருவரும் பங்குகொண்ட விவாதப் பதிவுகள

பாண்டியர் நிறுவிய தமிழ்ச் சங்கம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்க காலத்திலே, மதுரை மாநகரத்திலே பாண்டிய மன்னர் மூன்று தமிழ்ச் சங்கங்களை நிறுவித் தமிழை ஆராய்ந்தார்கள் என்று இறையனார் அகப்பொருள் உரை முதலிய நூல்கள் கூறுகின்றன. அச்சங்கங்களில் இயல், இசை, நாடகம், என்னும் முத்தமிழ்கள் ஆராயப்பட்டன. பத்துப் பாட்டு, எட்டுத் தொகை முதலிய செய்யுள்கள் கடைச் சங்கப் புலவர்களால் பாடப்பட்டன. கடைச் சங்கம் கி.பி. 300க்கு முன்பு இருந்தது என்று சரித்திரம் கூறுகிறது. ஆனால், இக்காலத்தில் சிலர், தமிழ் வரலாற்றினையும், நாட்டு வரலாற்றினையும் நேர்மையாகவும் சரியாகவும் ஆராய்ந்து பாராமல், தமிழ்ச் சங்கம் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது என்றும், அந்தத் தமிழ்ச் சங்கத்தில் தொல்காப்பியம் தோன்றியது என்றும் கூறுகின்றனர்; எழுதுகின்றனர். இவ்வாறு பிழைபட்ட ஆராய்ச்சியைக் கூறுகிறவர்களில் முதன்மை யானவர் அண்மையில் காலஞ்சென்ற திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள். வையாபுரிப் பிள்ளையவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சித் துறைத் தலைவராக இருந்தபடியால், அவர் கூறுவன எல்லாம் உண்மை என்று பாமர மக்கள் நினைக்கிறார்கள். பாமர மக்கள் மட்டும் அல்லாமல் படித்தவர்கள் கூட, ஆராய்ந்து பார்த்