Skip to main content

கடைசி நோய் | சாந்திகுமார் மொரார்ஜி

ஆகாகான் சிறையில் கஸ்தூர்பா நோய்வாய்ப்பட்டபோது அவருக்கு வேண்டிய மருந்து, டாக்டர், வைத்தியர் முதலியோரைச் சந்திக்கவோ சிறையினுள் போய்ப் பார்க்க அனுப்பவோ வேண்டிய பொறுப்பு பர்ணகுடிப் பிரேமலீலா பஹனையும் என்னையும் சேர்ந்திருந்தது. நான் பர்ணகுடியில் அத்தை பிரேமலீலா பஹனுடனேயே தங்கி எல்லா ஏற்பாடுகளுக்கும் உதவி புரிந்துவந்தேன்.
டாக்டர் ஸுசீலாவும் டாக்டர் கில்டரும் ஆகாகான் சிறையில் கூடவே இருந்துவந்தார்கள். ஸர்க்கார் டாக்டர்களும் இருந்தார்கள். டாக்டர் மருந்துகளால் குணம் காணவில்லை என்றதும் நாட்டு வைத்தியம் பார்க்கத் தீர்மானித்தார்கள். டாக்டர் கில்டருக்கும் ஸுசீலா நய்யாருக்கும் நாட்டு வைத்தியத்தில் நம்பிக்கை கிடையாது. கடைசியில் வேறு வழியில்லாமல் அவர்களும் ஒப்புக்கொண்டார்கள்.
இதற்குப் பிறகு ஆயுர்வேதத்தில் பிரசித்திபெற்ற சிவசர்மா வைத்தியர் அழைக்கப்பட்டார். அவர் வந்து கஸ்தூர்பாவைப் பரிசோதித்துப் பார்த்து மருந்து கொடுக்கத் தொடங்கினார். அவர் பர்ணகுடியில் தங்கிப் புனா நகரத்திலுள்ள வைத்தியர்களிடமிருந்து தினமும் மருந்து, பச்சிலைகள், மூலிகைகள் வரவழைத்து மருந்து தயார் செய்து கொண்டுவந்து கொடுப்பார்.
கஸ்தூர்பாவின் நோய் முற்றிப்போயிருந்ததால் பல தடவை அவரால் தாங்கமுடியாதபடி கஷ்டம் ஏற்படும். அப்போது வைத்தியருக்கு இரவிலும் வீடு போக மனம் வராது. இரவிலும் வைத்தியர் சிறையினுள் தங்க அனுமதி கொடுக்க வேண்டுமாகத் தேவதாஸ் பாயும் ராம்தாஸ் பாயும் ஸர்க்காருக்கு விண்ணப்பம் செய்தும் மன்றாடிக் கேட்டுக்கொண்டும் மறுப்பைத் தெரிவித்தும் எந்த முயற்சியும் பலிக்கவில்லை. ஆதலால் வைத்தியர் பல தடவை இரவில் ஆகாகான் சிறைவாசலுக்கு வெளியே மோட்டார் வண்டியிலேயே தூங்கியிருக்கிறார்.
ஒருநாள் இரவு பாவின் உடல்நிலை மிகவும் சீர்குலைந்துவிட்டது. அப்போது சிறை அதிகாரி ஸ்ரீ கடேலி வெளியே வந்து வண்டியில் தூங்கிக்கொண்டிருந்த சிவசர்மா அவர்களை எழுப்பி உள்ளே அழைத்துச் சென்றார். சில நாட்களுக்குப் பிறகு இவருடைய மருந்தும் நோயைக் கண்டிக்காததால் அவர் திரும்பிப் போய்விட்டார்.

***
கஸ்தூர்பாவின் புதல்வர்களில் முதல்வரான ஹரிலால் பாயின் வரலாறு யாவரும் அறிந்ததே. ஆகாகான் சிறையில் தங்கிவந்தபோது இறுதி நோய்க்கு நடுவில் கஸ்தூர்பாவுக்கு ஹரிலாலைப் பார்க்க வேண்டும் என்ற தீவிர விருப்பம் உண்டாயிற்று. தினமும் இதுபற்றி ராம்தாஸ் பாயி, தேவதாஸ் பாயி முதலியவர்களிடம் சொல்லிவந்தார். அவர்கள் வெளியே வந்து என்னையும், ஸ்வாமி ஆனந்தையும் ஹரிலால் பாயை எப்படியேனும் தேடிக்கொண்டு வரும்படி சொல்லிச் செல்லுவார்கள்.
கடைசியில் ஸ்வாமி ஆனந்த் பம்பாயில் ஏதோ ஒரு சந்தில் அவர் அகப்பட்டதாகத் தேடிக் கொண்டுவந்து சேர்த்தார். இரண்டு தினம் கஸ்தூர்பாவை அவர் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

***
கஸ்தூர்பாவின் நோய் முற்றிக்கொண்டு வந்தது. நானும் பிரேமலீலா அத்தையும் சிறைத் தலைமை அதிகாரி அங்கு வரும்போதெல்லாம் அவரிடம் கஸ்தூர்பாவைப் பார்க்க அனுமதிக்கும்படி வேண்டிக்கொண்டிருந்தோம்.
“மிக மிக சீர்கெட்டுப் போகும்போது அனுமதி கொடுக்கப்படும்” என்றார் அவர்.
“கடைசி தருணத்தில் அவர் மெய்ம்மறந்து கிடக்கும் பொழுது அனுமதிப்பதால் என்ன பயன்?” என்றோம்.
கடைசி நிமிஷம் வரை எங்களை அனுமதிக்கவே இல்லை! தில்லியைக் கேட்காமல் ஆகாகான் சிறையிலுள்ள மரத்து இலைகூட அசைய முடியாது.

***
டாக்டர்கள் பென்ஸிலின் கொடுப்பதாக யோசனை செய்தார்கள். அப்போதுதான் அது புதிதாக வெளிவந்திருந்தது. அமெரிக்க ராணுவத்தில் உள்ளவர்களுக்காக அது தில்லியில் வைக்கப்பட்டுவந்தது. அதை ஆகாய விமானத்தில் வரவழைத்தார்கள்.
தேவதாஸ் பாயி, “கொடுப்போம்” என்றார். காந்திஜி அதைக் கொடுக்க விரும்பவில்லை.
“பாவை ஏன் அநாவசியமாகக் கஷ்டத்திற்கு ஆளாக்க வேண்டும்? சும்மாப் படுத்துக் களைப்பாறட்டும்” என்று கூறிவிட்டார். கடைசி வரை அது கொடுக்கப்படவில்லை.
சிவராத்திரி அன்று மாலை கஸ்தூர்பாவின் சடலத்தை விட்டு ஆவி பிரிந்தது!

***
இறுதியாக, கஸ்தூர்பா இறந்த பிறகு பிரேம்லீலா அத்தைக்கும் எனக்கும் சிறைக்குள் போக அனுமதி கிடைத்தது.
நாங்கள் போய்ச் சேர்ந்தபோது கஸ்தூர்பாவைக் குளிப்பாட்டி வளையல் அணிவித்து, பொட்டிட்டுப் பூமாலை சாத்திப் படுக்க வைத்திருந்தார்கள். காந்திஜி ஒரு பக்கம் வீற்றிருந்தார். கீதாபாராயணம் நடந்துவந்தது.
“பாபுஜி கையால் நூற்று நெய்யப்பட்ட புடவையையே எனக்கு அணிவிக்க வேண்டும்” என்ற பாவின் விருப்பப்படி அணிவித்திருந்தார்கள். கங்கைத் தீர்த்தத்தையும் துளஸி மாலையையும் முன்னமேயே பிரேமலீலா அத்தை அனுப்பியிருந்தாள்.

***
மறுநாள் காலையில் ஆகாகான் மாளிகை எல்லைக்குள் மஹாதேவ்பாயின் இறுதிச்சடங்கு நடந்த இடத்திற்குப் பக்கத்திலேயே சடலத்திற்குத் தீ இடப்பட்டது. காலையில் சிறைக்குள் வருவதற்கு நூறு பேர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இச்செய்தியை அதிகார வர்க்கத்தினர் நகரத்தில் வெளியிட்டிருந்தார்கள். அதனால் ஸ்ரீ கர்வே, ஸீனியர் ரேங்க்ளர் பராஞ்ஜபே, இந்திய ஊழிய ஸங்கத்தினர். கேஸரி பத்திரிகைக் காரியாலயத்தார் முதலியோர் - முக்கியமாக காந்திஜியுடன் அரசியலில் கொள்கை வேறுபாடு உள்ளவர்களே - அதிகமாக வந்திருந்தனர்.

***
சிதை அடுக்குவதற்காக விறகுக் கட்டையைத் தவிர ஸர்க்கார் மூலமாகச் சந்தனக்கட்டையும் நெய் முதலியனவும் வந்திருந்தன. சிதையைப் புனாவாசிகளே அடுக்கியிருந்தார்கள். பிணம் சீக்கிரம் எரியமுடியாதபடி சிதை எப்படியோ அடுக்கப்பட்டிருந்தது. இவ்விஷயத்தில் எனக்கு அதிக அநுபவமுண்டு. ஆகையால் நான் அதைப் பற்றிப் புனாவாசிகளிடம் எச்சரிக்கை செய்தேன். ஆனால் அவர்கள் நான் சொன்னதற்குச் செவிசாய்க்கவே இல்லை.
“இது எங்கள் புனா முறை” என்றார்கள்.
நான் பிறகு ஒன்றும் பேசவே இல்லை.
10 மணிக்கு இந்தப் புனாவாசி பிராம்மணர் மூலம் இறுதிச்சடங்கு நடந்தேறியது. தேவதாஸ் பாயிதான் கொள்ளி வைத்தார். ஒரு மூங்கிலைப் பிளந்து ஒரு குழாய் செய்து, மந்திர கோஷடத்துடன் அதன் வழியாக நெய்யைத் தாரையாக வாயில் விட்ட பிறகுதான் சிதை எரியத் தொடங்கியது.
பன்னிரண்டு மணி ஆகிவிட்டது. ராமதாஸ்பாயின் வரவை எதிர்பார்த்திருந்தும் அவர் வந்துசேரவில்லை. இங்கே பாவின் சடலத்தின் மீது நெய் ஏராளமாக விடப்பட்ட பிறகும் இரண்டு மணி அடித்தும் அது எரியவில்லை. அங்கே தில்லியில் ஸர்க்கார் உயர்தர அதிகாரிகள் டெலிபோன் மூலம் செய்தியை எதிர்பார்த்து நின்றனர். தந்தியும் பறந்தது.
ஆனாலும் கஸ்தூர்பாவின் சடலம் எரிந்தபாடில்லை.
காந்திஜி பக்கத்திலிருந்த மரத்தின் கீழே நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். எல்லோரும் அவரை,
‘தயவு செய்து இனி உள்ளே செல்லுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்கள்.
“ஆயுள் முழுவதும் கூடவே இருந்து இப்பொழுதா அரைமணி நேரத்திற்காக விட்டுப் போகவேண்டும்?” என்றார் அவர்.
எல்லோரும் பேசாமல் இருந்துவிட்டனர்.
ஆனால் இன்னும் கஸ்தூர்பா சடலம் சரியாக எரியவே இல்லை!
கடைசியில் நான்,
“என்னிடம் ஒப்பியுங்கள்” என்றேன்.
“சரி, ஒப்பித்தோம்” என்றனர்.
கன்யா, பொங்கல், சிதை இம்மூன்றையும் திருப்பவோ அசைக்கவோ கூடாது என்றார்கள். நான் சிதையை மேல் கீழாகக் குலுக்கினேன். உடனே நெருப்பு ஒளிவிட்டு எரியத் தொடங்கியது.
காந்திஜி,
“தேவதாஸ், குடும்பியாயிருந்தும் சிதையை அவனுக்கு எரியவிடத் தெரியவில்லை! உங்களுக்கு இது எப்படித் தெரிந்தது?” என்றார்.
“என் பாட்டி அம்மா என்னை முதலிலிருந்தே இறந்த வீடுகளுக்கும் சுடுகாட்டிற்கும் போகும்படி பழக்கப்படுத்தி இருந்தார்கள். உற்றார் உறவினர் இறந்தால் அவர்கள் வீட்டிற்குத் தப்பாமல் என்னை அனுப்புவார்கள். கடைசி வரை ஸ்மசானத்தில் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆதலால் சீக்கிரம் எரியவிடக் கற்றுக்கொள்ள வேண்டும். அதை நான் சரியாகக் கற்றுக்கொண்டேன். எங்கும் இந்த வேலையை நான் ஏற்றுக்கொண்டதால் இதில் தேர்ச்சி அடைந்திருக்கிறேன்.” என்றேன்.
மூன்று மணிக்குச் சிதை எரிந்து தணிந்தது. அதே சமயம் ராம்தாஸ் பாயும் வந்துசேர்ந்தார்!
பிறகு எல்லோரையும் சிறைக்கு வெளியே கிளப்பினார்கள்.

***
மறுநாள் ஆகாகான் சிறைக்குள் காந்தி குடும்பத்தினர் மாத்திரமே அனுமதிக்கப் பெற்றார்கள். அஸ்தி ஸஞ்சயம்-எலும்புகளைப் பொறுக்கி எடுத்துவைக்கும்போது- சாம்பலிலிருந்து கஸ்தூர்பா அணிந்திருந்த நான்கு வளையல்கள் மாத்திரம் அப்படியே முழுதாகக் கிடைத்தன. எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். இவ் வளையல்கள் நெருப்பில் எரியா (Fire Proof) வளையல்கள் என்றார்கள் சிலர். ஆனால் பாவின் வளையல்களைச் சேர்ந்தவற்றையே மனு பேனும் அணிந்திருந்தார். அவர் அதை நெருப்பில் போட்டதில் அவை உடனே பஸ்பமாகிவிட்டன!
பதிபக்தி பராயண ஸௌபாக்கியவாதிகளான ஸ்திரீகளுடைய வளையல்கள் தீக்கு இரை ஆகா என்று இன்றும் கருதப்படுகிறது.

(சாந்திகுமார் மொரார்ஜி குஜராத்தியில் எழுதி, ஹரிஹர சர்மாவால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, கலைமகள் காரியாலயம் வெளியிட்ட, 'காந்திஜியின் நினைவுகள்' என்ற நூலிலிருந்து)

தொடர்புடைய பதிவு:

மகாத்மா போற்றிய வளையல்கள் | எஸ். வி. ராமகிருஷ்ணன்

Comments

Most Popular

ஐரோப்பியர் வருகை - மயிலை சீனி. வேங்கடசாமி

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, மேல் நாட்டார் நமது இந்தியா தேசத்துடன், சிறப்பாகத் தென் இந்தியாவுடன், வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிகிறது. யவனர் (உரோமர், கிரேக்கர்) என்னும் ஐரோப்பிய ஜாதியார், சேர நாட்டின் கடற்கரைப் பட்டினங்களிற் பண்ட சாலைகள் அமைத்து, அவற்றில் நமது நாட்டுச் சரக்குகளைச் சேமித்து வைத்துக் கப்பல்கள் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டு போனார்கள். மதுரை, புகார், (காவிரிப்பூம் பட்டினம்) முதலிய நகரங்களிலும் யவனர் வசித்து வந்ததாகத் தமிழ் நூல்களினால் அறிகிறோம். கி.மு. 22 இல் மதுரையில் அரசாண்டிருந்த பாண்டிய மன்னன், அகஸ்தஸ் ஸீஸர் (Augustus Ceasar) என்னும் யவன அரசனிடம் தூதுவர்களை அனுப்பினான் என்று ஸ்த்ராபோ (Starbo) என்னும் மேல் நாட்டாசிரியர் எழுதியிருக்கிறார். தமிழருக்கும் யவனருக்கும் இருந்த இவ்வர்த்தகத் தொடர்பு, கி.பி. 47 முதல் மேன்மேலும் அதிகப்பட்டது. ஏனென்றால், அந்த ஆண்டில் ஹிப்பலஸ் (Hippalus) என்பவர், இந்து சமுத்திரத்தில் வீசுகிற வட கிழக்கு தென் மேற்குப் பருவக் காற்றைக் கண்டுபிடித்தார். இப்பருவக் காற்று வீசுகிற காலங்களில் பிரயாணம் செய்வதால் மாலுமிகள் விரைவாகக் க...

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...