Skip to main content

கன்னத்தில் பலமான அறை | ஜி. டி. பிர்லா


1933ஆம் வருஷம் ஏப்ரல் 29ஆம் தேதி. அந்நாட்களில் ஹரிஜனப் பிரச்சினை காந்தியடிகளை மிகுந்த யோசனையிலாழ்த்தி வந்தது. எரவாடா ஒப்பந்தத்திற்குப் பிறகு தேசத்தில் ஒரு புதிய ஊக்கம் உண்டாகியிருந்தது. பல விதங்களிலும் ஆயிரக்கணக்கான வருஷங்களாக ஹரிஜனங்களுக்குச் செய்த கொடுமையை எண்ணி உயர்ந்த ஜாதி ஹிந்துக்கள் பச்சாத்தாபப்படத் தொடங்கினார்கள். ஹரிஜன சேவா சங்கம் பலமாகத் தன் சேவைகளை விஸ்தரித்து வந்தது. காந்தியடிகளின் வியாஸங்கள் ஹரிஜன வேலையில் ஓர் புதிய எழுச்சியை உண்டாக்கின. சத்யாக்கிரஹம் ஓய்ந்துவிட்டது. காந்தீயம் இனி என்றும் எழாதவாறு அழிந்துவிடப் போவதாக வில்லிங்டன் நம்பியிருந்தார். ஆனால் பிரதம மந்திரி ராம்ஸே மாக்டனால்டின் தீர்ப்பை எதிர்த்து காந்தியடிகள் மேற்கொண்ட மரணம் வரை உபவாஸமானது, ஒரே நொடியில் தேசத்தில் பரவியிருந்த சோர்வை நீக்கி, மக்களிடை புத்துயிரை உண்டாக்கிவிட்டது. மக்கள் சத்யாக்கிரஹத்தை அப்படியே விட்டுவிட்டு, ஹரிஜன வேலையில் மும்முரமாய் இறங்கினார்கள். இது தெய்வீகச் செயலாகும். பல வருஷங்களாக காந்தியடிகள் ஹரிஜன வேலைக்குப் பிரசாரம் செய்து வந்தார். ஆனால் உயர் வருண ஹிந்துக்களின் இதயத்தைத் தட்டியெழுப்ப முடியவில்லை. பல ஆண்டுகளில் நடைபெறாத இவ்வேலை, திடீரென்று வெகு வேகத்துடன் நடந்தேறியது. ஒவ்வொரு காரியத்திலும் நேருவது போல், ஹரிஜன வேலையிலும் நன்மையுடன் தீமையும் வளர்ந்தது. ஒரு பக்கத்தில் ஹரிஜனங்களுடன் ஆழ்ந்த அனுதாபம் வளர்ந்தது; மற்றொரு பக்கம் குறுகிய மனமும் குருட்டு நம்பிக்கையும் உள்ளவர்களிடையில் பிடிவாதம் மிகுந்தது.
ஹரிஜனங்கள் விஷயத்தில் நடந்து வந்த அநியாயங்களை நவீன கருத்துக்கள் கொண்ட நகரவாசிகள் கற்பனைகூடச் செய்ய இயலாது. இந்த ஏழு வருஷங்களில் உயர்ந்த வருண ஹிந்துக்களின் கருத்துக்களில் எதிர்பாராத மாறுபாடு ஏற்பட்டிருக்கிறது. அந்நாட்களிலோ நிலைமை மிகவும் பயங்கரமாயிருந்தது. தக்ஷிணத்திலோ தீண்டாமை மட்டுமல்ல; சில வகை ஹரிஜனங்களைப் பார்ப்பதே பாபமாகக் கருதப்பட்டுவந்தது. ஹரிஜனங்கள் விசேஷ தினங்களில் ஹல்வா செய்யக் கூடாதென்பது, நெய்யில் பூரி செய்யக்கூடாதென்பது, அவர்களைக் காலில் வெள்ளிக் காப்பு அணியாமல் தடுத்தல், குதிரை சவாரி செய்யக் கூடாதெனல், ஓட்டு வீடு கட்டக்கூடாதெனல்இந்த கொடுமைகள் அநேகமாக நாட்டின் எல்லா பாகங்களிலும், எல்லா மாகாணங்களிலும் அப்பொழுது சாதாரணமாயிருந்தன; இப்பொழுது மிகவும் குறைந்துவிட்டன.
இந்த விழிப்பின் காரணமாக, ஹரிஜனங்கள் சிறிது துணிவு பெறவே, பழைய பிடிவாதக்காரர்களுடைய கோபம் பொங்கியெழுந்தது. பல இடங்களில் ஹரிஜனங்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர். இந்தச் செய்திகளெல்லாம் சிறையிலிருந்த காந்தியடிகளுக்கு எட்டி வந்தது. இவ்விபரீத நிகழ்ச்சிகளினால் அவருடைய துக்கம் அதிகரித்தது. தீண்டாமை ஹிந்து மதத்தில் ஓர் களங்கம். உயர்ந்த வருணத் தலைவரின் மேல் இப்பாபத்தின் பொறுப்பு இருக்கிறதென்று காந்தியடிகள் விடாமல் கூறி வந்திருக்கிறார். ஹரிஜனங்களிடம் நேர்மையாக நடந்து நாம் பாபத்திற்குப் பரிகாரம் செய்வோமென்று காந்தியடிகள் எப்பொழுதும் சொல்வது வழக்கம். காந்தியடிகள் தாமே மேல் வருணத்தவராகையால் இக்கொடுமை அவரை மிகவும் துன்புறுத்தி வந்தது. அவர் இதயத்தில் ஒரு புயல் எழுந்தது. செய்யவேண்டுவதைப் பற்றி பற்பல யோசனைகள் எழுந்தன. பண்டிதர்களுடன் கடிதப் போக்குவரவு நடந்துகொண்டிருந்தது. ''கடவுள் ஏன் இந்தக் கொடுமையை நடக்கும்படி விடுகிறான். ராவணன் ராட்சஸன்; ஆனால் தீண்டாமை ராட்சஸியோ ராவணனை விடக் கொடியவள். இந்த ராசக்ஷஸியை தருமத்தின் பெயரால் நாம் பூஜிக்கும் பொழுது நமது பாபத்தின் சுமை இன்னும் அதிகமாகிவிடுகிறது. இதைக் காட்டிலும் நீக்ரோக்களின் அடிமைத்தனம் எவ்வளவோ சிறந்தது. இந்த தருமத்தின்இதைத் தருமமென்று கூறின்துர்நாற்றம் என் மூக்கைத் துளைக்கிறது. இது ஹிந்து மதமேயல்ல. நான் ஹிந்து மதத்தின் மூலமாகவே, கிருஸ்தவ மதம், முஹம்மதிய மதம் இவற்றை மதிக்கக் கற்றேன். இந்தப் பாபம், ஹிந்து மதத்தின் அங்கமாக எவ்வாறு ஆகமுடியும்? ஆனால் என்ன செய்யலாம்?'' என்று மனம் நொந்தார்.
இம்மாதிரி நினைந்து நினைந்து காந்தியடிகள் ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி இரவு சிறையில் தூங்கினார். சிறிது நேரமே தூங்கியிருப்பார். இதற்குள் இரவு பதினொன்று மணியடித்தது. சிறை நிசப்தமாயிருந்தது. காவற்காரர்கள் மட்டும் விழித்துக்கொண்டிருந்தார்கள். பதினோரு மணிக்குச் சிறிது நேரத்திற்குப் பிறகு காந்தியடிகள் விழித்தெழுந்தார். தூக்கம் பறந்துவிட்டது. மனதில் பெருங்கடலில் எழுவது போன்ற ஒரு வகைக் கொந்தளிப்பு உண்டாயிற்று. குழப்பம் மிகுந்தது. இதயத்தினுள் ஒரு போர் நடந்துகொண்டிருப்பது போல் தோன்றிற்று. இதற்கிடையில் ஒரு குரல் கேட்டது. இக்குரல் தூரத்திலிருந்து வருவது போல் தோன்றிற்று; யாரோ அருகிலிருந்து கூறுவது போலுமிருந்தது. ஆனால் அக்குரலின் கட்டளையை மீறுதல் சாத்தியமில்லாதிருந்தது, ''உபவாஸமிரு'' என்றது அக்குரல். காந்தியடிகள் இதைக் கேட்டார். அவருக்கு சந்தேகமில்லை. இது கடவுளின் குரல் என்று அவருக்கு நிச்சயமாய்த் தோன்றிற்று. உடனே மனப்போர் ஓய்ந்தது. குழப்பம் கலைந்தது. காந்தியடிகள் நிம்மதியடைந்தார். உபவாஸம் எவ்வளவு தினங்கள் வரை செய்ய வேண்டும், எப்பொழுது தொடங்க வேண்டும் என்பதைத் தீர்மானித்துவிட்டு இதைப் பற்றி ஒரு அறிக்கையும் எழுதி முடித்தார். பிறகு அயர்ந்து தூங்கினார்.
காந்தியடிகள், பொழுது விடிய நான்கு நாழிகைக்கு முன்னர் எழுந்து ஸ்ரீ வல்லபபாய் படேல், ஸ்ரீ மகாதேவ தேசாய் இவர்களுடன் பிரார்த்தனை செய்தார்.
விழித்தெழு, யாத்திரி! விடிந்தது பொழுது,
கழிந்த பின்னிரவும் கண்துயில் ஆமோ?”
இந்தப் பாட்டை ஸ்ரீ மகாதேவ தேசாய் அநாயாசமாகப் பாடினார். காந்தியடிகள் ஸ்ரீ மகாதேவைப் பார்த்து "நீ இரவில் விழித்திருக்கிறாய், ஆதலால் சிறிது களைப்பாறு" என்று கூறினார். ஸ்ரீ மகாதேவ் படுத்துறங்கினார். காந்தியடிகள் செய்திருந்த பயங்கரமான தீர்மானத்தைப் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது. தாம் தயாரித்திருந்த அறிக்கையை காந்தியடிகள் ஸ்ரீ வல்லபபாயிடம் தந்தார். சர்தார் அதை ஒரு முறை படித்து, பிரமித்துப் போனார். இதில் வாதிப்பதற்கு ஒன்றும் இடமில்லை. மேலும் சர்தாருக்கோ காந்தியடிகளின் சுபாவம் நன்றாகத் தெரியும். நயகரா நீர்வீழ்ச்சியைத் தடுப்பதற்குச் செய்யும் முயற்சி வீண். மகாதேவ், இவரைக் காட்டிலும் அதிகப் புனிதமும், புத்தியுமுள்ளவர் யார்? யாராவது இருந்தால் அவர் இவரோடு தர்க்கம் செய்யட்டும். என்னால் முடியாதுஎன சர்தார் ஸ்ரீ மகாதேவிடம் கூறிவிட்டு, கடவுள் கட்டளை என்றெண்ணி சும்மா இருந்தார்.
கடவுள் விருப்பமே வலுத்தது.
ஸ்ரீ மகாதேவ தேசாய் காந்தியடிகளுடன் சாதாரணமாக வாதம் செய்து பார்த்தார். ஆனால் கடைசியில் கடவுளின் மேல் பாரத்தைப் போட்டு சும்மா இருந்துவிட்டார். மறுநாள் எல்லா இடங்களிலும் செய்தி பரவிவிட்டது. நாடு முழுவதும் திடுக்கிட்டது. நான் ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவன். என்னிடமும் செய்தி வந்தது. அதில் காந்தியடிகள் என்னைப் பூனா வரவேண்டாமென்றும்,  இருக்குமிடத்திலேயே என் கடமையைச் செய்யும்படியும் கூறியிருந்தார். இச்செய்தியைக் கேட்டு எனக்கும் தக்கர் பாபாவுக்கும் விசேஷக் கவலை உண்டாகவில்லை. காந்தியடிகள் இதற்கு முன் பல கொடிய ஆபத்துக்களிலிருந்து தப்பியது போல் இச்சோதனையிலிருந்தும் தப்பிவிடுவாரென்று எனக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது. "கடவுள் நன்மை செய்வார். நாங்கள் தங்களுக்காக அல்லும் பகலும் பிரார்த்தனை செய்கிறோம். தங்களது உபவாஸம் வெற்றி பெற்று யாவருக்கும் நன்மை செய்க'' என்று பதில் எழுதினேன்.
ஆனால் ராஜாஜிக்கு இவ்வளவு சீக்கிரத்தில் எங்கே சமாதானம் உண்டாகிறது? காந்தியடிகளுடன் மிகவும் வாதாடினார். ஒன்றும் பயனில்லை. தேவதாஸும் மிகுந்த விசனத்துடன் வேண்டினார். ஆப்பிரிக்காவிலிருந்து ஜெனரல் ஸ்மட்ஸும் இவ்விதம் செய்ய வேண்டாமென ஒரு நீண்ட தந்தியனுப்பினார். ஆனால் கடவுளின் கட்டளையை மீறி காந்தியடிகள் எவர் சொல்வதையும் கேட்பாரா? உபவாஸம் நடந்துகொண்டிருப்பதை அரசாங்கம் அறிந்ததும் அவரை லேடி டாகர்ஸி இல்லமான 'பர்ணகுடி'யில் சேர்த்துவிட்டது.
இந்த இருபத்தோரு நாட்களின் உபவாஸம் ஒரு சிரம சாத்தியமான விஷயம். இதற்குச் சில மாதங்களுக்கு முன்னரே ஒரு உபவாஸம் நடந்திருந்தது. அதனால் காந்தியடிகளுக்கு மிகுந்த பலஹீனமுண்டாயிருந்தது. அந்த முன் உபவாஸத்தில் சிற்சில தினங்களிலேயே அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிட்டது. ஆகையால் இந்த உபவாஸத்திலிருந்து பிழைப்பாரா என்று அநேகருக்குச் சந்தேகமிருந்தது. ஆனால் காந்தியடிகளோ, ''எனக்கு மரணத்தில் ஆசையில்லை. நான் ஹரிஜன சேவைக்காக உயிர் வாழ விரும்புகிறேன். ஆனால் இறக்க வேண்டியிருப்பினும் கவலை ஏன்? தீண்டாமையின் களங்கம் நான் அறிந்ததை விட அதிக ஆழமானது. ஆகையால் நானும் என் தோழர்களும் உயிர் வாழவேண்டின், இருப்பதை விட அதிகப் புனிதமாக வேண்டும். நான் ஹரிஜனங்களுக்குச் சேவை புரிய வேண்டுமென்பது கடவுளின் கருத்தாயின், எனது உடலுக்கு உணவு நின்ற பின்னரும், கடவுள் ஆன்மீக உணவினால் இவ்வுடலை நிலைக்கச் செய்வார். மேலும் எல்லோரும் தங்கள் வேலையைச் செய்துகொண்டிருந்தால், அதுவும் எனக்கு உணவுபோல் உதவும். ஒருவரும் தன்னிடத்தை விட்டு, நகர வேண்டாம். எவரும் உபவாஸத்தை நிறுத்தும்படி என்னிடம் கூறவேண்டாம்'' என்று கூறினார்.
1933 மே மாதம் 8ஆம் தேதி உபவாஸம் தொடங்கி, 29ஆம் தேதி ஆண்டவனருளால் வெற்றியுடன் முடிவு பெற்றது. உபவாஸம் முடிந்து பல தினங்கள் சென்ற பின்னர், ''இந்த உபவாஸம், நான் இருபத்தோரு தினங்கள் ஓயாது நடத்திய பிரார்த்தனையாகும். இதனால் நான் பெற்ற நற்பயனை இப்பொழுது உணருகிறேன். இந்த உபவாஸத்தினால் வயிறு உணவில்லாமலிருப்பதோடு, எல்லா இந்திரியங்களும் உணவின்றி இருக்கின்றன. கடவுளிடம் மனம் ஐக்யமாகிவிட்டால் உடலின் செயல்கள் எல்லாவற்றையும் நாம் மறந்துவிடுகிறோம். அதன் எல்லையைத் தொடும்பொழுது கடவுளைத் தவிர மற்றெல்லாவற்றையும் மறந்துவிடுகிறோம். இந்நிலை ஓயாத முயற்சி, வைராக்கியம் இவைகளினாலேயே கிட்டும். ஆகையால் இத்தகைய உபவாஸத்தை ஒருவிதமான கலப்பற்ற கடவுள் பக்தியென்று கூறவேண்டும்'' என்று காந்தியடிகள் சொன்னார்.
1924ஆம் வருஷ கோடை காலம். காந்தியடிகள் சிறையிலிருந்து விடுதலை பெற்று வந்திருந்தார். அபெண்டிஸைட்டிஸ் (வயிற்று ரணம்)க்காக சஸ்திர சிகிச்சை நடைபெற்றது. உடல் சிறிது மெலிந்திருந்தது. ஆகையால் ஆரோக்கிய விருத்திக்காக ஜூஹூவில் தங்கியிருந்தார். நான் தினந்தோறும் அவருடன் உலாவுவது வழக்கம். அருகில் அமர்ந்திருப்பேன். பல மணிநேரம் பற்பல விஷயங்களைப் பற்றி அவருடன் வாதிப்பேன். ஒருநாள் கடவுளைப் பற்றி பேச்சு வரவே, ''தாங்கள் கடவுளை கண்ணால் கண்டதாக ஒப்புக்கொள்கிறீர்களா?” என்று வினவினேன்.
''இல்லை. நான் அவ்வாறு நம்பவில்லை. நான் ஆப்பிரிக்காவிலிருந்தபொழுது கடவுளை அண்டிவிட்டதாக எனக்குத் தோன்றிற்று. ஆனால் அதற்குப் பிறகு எனது நிலை உயரவில்லையெனத் தோன்றுகிறது. இது மட்டுமல்ல; யோசித்துப் பார்த்தால், பின்னே சென்றுவிட்டதாகவும் தோன்றுகிறது. எனக்குக் கோபம் வருவதில்லை என்றல்ல. நான் கோபத்திற்கு சாக்ஷியாயிருக்கிறேன். ஆகையால் கோபத்தினால் ஏற்படும் தீமைகள் என்னிடம் நீடித்திருப்பதில்லை. ஆனால் எனது முயற்சி அதிதீவிரமானது. இந்த ஜன்மத்திலேயே கடவுளை தரிசித்துவிடலாம் என்ற ஆசை கொண்டிருக்கிறேன். முயற்சி செய்துகொண்டிருக்கிறேன், முடிவு கடவுள் கையில் இருக்கிறது'' என்றார்.
இப்பேச்சு நிகழ்ந்து இன்று பதினாறு வருஷங்கள் ஆகிவிட்டன. இதன் பிறகு எனக்கு இவ்வித ஆசை எழவுமில்லை; இத்தகைய கேள்வி கேட்டதுமில்லை. ஆனால் கடவுளிடம் அவருக்குள்ள பற்றும், தன்னம்பிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
''இப்பொழுது என்னால் அதிக தர்க்கம் செய்ய முடியவில்லை. எனக்கு மெளனம் மிகவும் பிடித்தமாயிருக்கிறது. மெளன பாஷையினால் ஒன்றும் பயனில்லை என நான் நம்பவில்லை. உண்மையில் வாய்ப் பேச்சை விட, மெளனப் பேச்சுக்கு மிகவும் அதிகமான சக்தியுண்டு. ஜனங்கள் சத்யாக்கிரகம் என்கிறார்கள். சத்யாக்கிரகம் தொடங்கினால், முன்பு யாத்திரைகளும் உபந்நியாஸங்களும் செய்ய நேர்ந்தது போல் இப்பொழுது அவசியமில்லை என்று நிச்சயமாய் நம்புங்கள். நான் சேவாக்கிராமத்தில் இருந்துகொண்டே, தலைமையேற்று நடத்துவேன் என்ற நம்பிக்கை உண்டாகிவிட்டது. எனக்குக் கடவுளின் கரிசனம் கிட்டிவிடுமானால் இதுவும் செய்ய வேண்டிய அவசியமிராது. நான் எண்ணிய மாத்திரத்தில் எதுவும் கைகூடும். அந்நிலை எய்துவதற்காகவே நான் முயன்றுகொண்டிருக்கிறேன்'' என்று ஒரு சமயம் எவருடனோ பேசிக்கொண்டிருக்கையில் சொன்னார். இவை இதயத்தைக் கவரும் வாக்கியங்கள். கடவுளென்று மறுபெயரிட்டழைக்கத்தக்கதாக நம்முன் எவ்வளவு சொல்லறிய சக்தி புதைந்திருக்கிறதென்பதை இச்சொற்கள் நினைவுறுத்துகின்றன.
குறிப்பிட்டதோர் செயல் கடவுளின் கருணையால் நிகழ்ந்தது என்று காந்தியடிகள் பலமுறை கூறியிருக்கிறார்கள். ஆனால் நேருக்கு நேராக ஆகாயவாணியைக் கேட்டது இதுதான் முதல் அனுபவம் போலும். அவரது அளவற்ற கடவுள் பற்றிற்கு இது தலை சிறந்த அத்தாக்ஷி என்பது என் கருத்து. நான் அவருடன் இந்த ஆகாயவாணியின் விநோதத்தைப் பற்றி நீண்ட நேரம் பேசினேன். தெளிவு பெற இவ்விஷயத்தை எனக்கு விளக்குவதற்கு அவரிடம் சுலபமான சொற்களில்லை என்று எனக்குத் தோன்றிற்று. எவ்வளவு இலேசாக விளக்கினாலும், எவ்வளவு கம்பீரமான சொற்களைக் கையாண்டாலும், பேச்சிற்குப் புறம்பான பொருளை ஒருவன் எவ்வாறு அறிவுறுத்துவது? ஒரு குரல் கேட்டதென்று கூறுங்கால், நாம் வெறும் மனித பாஷையில் சொல்லுகிறோம். கடவுளுக்கு உருவம் இருக்க முடியாது. ஒலி, உணர்ச்சி, உரு, ருசி, மணம் இவ்வைந்திற்கும் கடவுள் அப்பாற்பட்டவர். ஆகவே அவருக்குக் குரலேது, உருவந்தானேது? ஆயினும் குரல் கேட்டதுண்டு! அதன் பாஷை எத்தகையது? ''நாம் பேசும் பாஷைதான்.'' இதன் பொருள் என்னவெனில் நம்மிடம் யாரோ ஏதோ கூறுவது போல் தோன்றும். ஆனால் இத்தகைய பிரமையும் உண்டாகலாமல்லவா?'' ''ஆம், பிரமையும் உண்டாகலாம்; ஆனால் இது பிரமையல்ல.'' அக்குரலைக் கேட்பதற்குத் தகுதி வேண்டுமென்பதும் இதிலிருந்து தெளிவாகிறது. ஒரு மனிதனுக்கு பிரமை உண்டாகலாம். அதை அவன் ஆகாயவாணி என்று கூறுவானானால், அவன் வீணாகக் குருட்டு நம்பிக்கையை வளர்ப்பவனாவான். மற்றொருவன் தகுதி பெற்றவன், விழிப்பெய்தியவன். இது பிரமையல்ல என்று அவனே கூறத்தக்கவன். ஆகாயவாணியையும், மற்றவைகளைப் போன்று, தகுதியுள்ளவனே கேட்கக்கூடும். சூரியனது நிழல் கண்ணாடியில் தெரியுமேயன்றி கல்லில் தெரியாது.
இந்த இருபத்தோரு நாளைய ஆன்மீக உபவாஸம் காந்தியடிகளின் அநேக உபவாஸங்களில் ஒன்று. சிறிய உபவாஸங்களைக் கணக்கில் சேர்க்காவிடிலும், உயிரையே பணயமாய் வைத்த பெரிய உபவாஸங்கள் பத்து அல்லது பன்னிரண்டு நடந்திருக்கின்றன.
மற்ற குணங்களைப் போலவே இந்த உபவாஸ முறை எவ்வாறு உதித்ததென்று கூற முடியாது. முதலில் உண்டானது ரோஜாப் புஷ்பமா அல்லது அதன் மணமா? எந்த குணம் முதலில் உதித்தது, எது பின்னர் உண்டாயிற்று என்று அறிவது கஷ்டமாயினும், இவருடைய தாய்க்கு உபவாஸத்திலிருந்த பற்று இவரிடத்திலும் உபவாஸ எண்ணத்தைத் தூண்டிற்றென்று அறிகிறோம்.
இவரது தாய் மிகுந்த மதப்பற்றுள்ளவர். உபவாஸங்களில் அவருக்கு மிகவும் நம்பிக்கையிருந்தது. வருஷம் முழுதும் சிறிதும் பெரிதுமாக ஏற்ற உபவாஸங்கள் பல. சாதுர்மாஸத்தில் ஒரே வேளை உணவருந்துவார். சாந்திராயண விரதம் இவரது தாய் பலமுறை செய்துள்ளார். ஒரு சாதுர்மாஸத்தில், இவருடைய தாய், சூரிய தரிசனம் செய்யாமல் உணவு கொள்வதில்லை என்ற விரதம் ஏற்றிருந்தார். மாரிகாலத்தில் சில சமயங்களில் பல தினங்கள் வரையில் சூரியனே தென்படுவதில்லை. தெரிந்தாலும் சில நிமிஷங்கள் வரையில்தான் தெரியும். குழந்தை காந்தி கூரையில் ஏறிக்கொண்டு, கவனமாகச் சூரியனை எதிர்பார்த்துக்கொண்டிருப்பான். சூரியன் தென்பட்டதும், தாய்க்கு அறிவிப்பான். ஆனால், சில சமயங்களில் பாவம், தாய் போய்ச் சேருவதற்குள், மேகம் சூழ்ந்த வானத்தில் சூரியதேவன் மறைந்துவிடுவான். ஆனால் தாய்க்கு இதனால் அதிருப்தி உண்டாவதில்லை. ''குழந்தாய், கவலைப்படாதே, நான் இன்று உணவு கொள்ள வேண்டாமென்பது கடவுளின் சித்தம்'' என்று கூறிவிட்டு தம் வேலையில் ஈடுபட்டுவிடுவார்.
குழந்தை காந்தியின் மனதில் இது எவ்வாறு பதிந்திருக்குமென்று நாம் சுலபமாக ஊகித்துக்கொள்ளலாம். முதல் உபவாஸம் ஆப்பிரிக்காவில் டால்ஸ்டாய்ப் பண்ணையில் நடந்தது. இவர் சில தினங்கள் வரை வெளியே சென்றிருந்தார். பிறகு ஆச்சிரமவாசிகள் இருவர் முறை தவறியதாக அறிந்தார். இதனால் மனம் நோவது இயற்கை; இத்தவறின் பொறுப்பு ஒரு அளவுக்கு ஆச்சிரமத்தின் தலைவனைச் சாருமென்று இவருக்குத் தோன்றிற்று. ஆச்சிரமத்தை நடத்துவோர் காந்தியடிகளாகையால் இச்சம்பவத்தில் தம் பொறுப்பையும் உணர்ந்தார். இதன் பொருட்டு காந்தியடிகள் ஏழு நாட்கள் உபவாஸமிருந்தார். இதன் பின்னர் சில தினங்களுக்குள் இதே நிகழ்ச்சியையொட்டிப் பதினான்கு நாட்கள் வரை மற்றொரு உபவாஸமிருக்க நேர்ந்தது.
இதற்குப் பின்னர் இன்னும் அநேக உபவாஸங்கள் நடந்திருக்கின்றன. தம் நாடு திரும்பிய பின்னர் இதே போன்ற சம்பவங்களுக்காக ஒன்றிரண்டு உபவாஸங்கள் செய்தார். அஹமதாபாத்தின் மில் வேலை நிறுத்தத்திற்காக ஒரு உபவாஸம் நடத்தினார். ஹிந்து-முகம்மதிய ஒற்றுமைக்காக இருபத்தோரு தினங்கள் உபவாஸமேற்றார். ஹரிஜனங்களின் ஸ்தானங்களைப் பற்றி பிரதம மந்திரி மாக்டனால்டின் தீர்ப்பை எதிர்த்து மரணம் வரை உபவாஸமேற்றார்; மீண்டும் ஹரிஜன பிராயச்சித்தத்திற்காக ஓர் உபவாஸம் நடத்தினார். ஹரிஜனப் பிரசார வேலை சம்பந்தமாக அரசாங்கம் அவருக்கு நிர்ப்பந்தங்களை அமைக்கவே மற்றொரு உபவாஸம் செய்தார். ஹரிஜன யாத்திரை முடிந்ததும் சில ஹரிஜன ஊழியர்கள் சகிப்பின்றி நடந்துகொண்டதற்குப் பரிகாரமாக வர்தாவில் ஏழு நாட்கள் உபவாஸமிருந்தார். ராஜகோட்டில் ஒரு உபவாஸம் நடந்தது.
பிரதம மந்திரியின் தீர்ப்பை எதிர்த்து ஏற்ற உபவாஸம் வெற்றியுடன் முடிந்ததில் எனக்கும் சிறிது பங்குண்டு. இந்த உபவாஸத்தை அருகிலிருந்து கண்ணால் கண்டு ஆராய எனக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த நாட்களில் காந்தியடிகள் சிறையிலேயேதான் இருந்தார். சத்யாக்கிரஹம் நடந்து வந்தது. ஆயினும் மக்களிடை சோர்வு வளர்ந்து வந்தது. திடீரென்று ஒரு வெடிகுண்டு வந்து விழுந்ததுகாந்தியடிகள் மரணம் வரை உபவாஸம் செய்யத் தீர்மானித்திருப்பதாக ஜனங்கள் கேள்விப்பட்டார்கள். நாலா பக்கங்களிலும் கொந்தளிப்பேற்பட்டுவிட்டது. நானோ இச்செய்தியைப் பத்திரிகைகளில் படித்ததும் திடுக்கிட்டேன். காந்தியடிகளுக்குத் தந்தியடித்து என்ன செய்ய வேண்டும்? நான் திகிலடைந்துவிட்டேன்என்று கேட்டேன். "கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. சந்தோஷத்திற்குரிய விஷயந்தான். மிகவும் தாழ்த்தப்பட்டோருக்காகக் கடைசி பலியிடுவதற்கு ஆண்டவன் எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளித்திருக்கிறான். உபவாஸத்தை நிறுத்த முடியாது என்ற விஷயமாக எனக்கு ஒரு சந்தேகமும் இல்லை. இங்கிருந்து ஏதாவது குறிப்போ, ஆலோசனையோ அனுப்புவதற்கு சக்தியற்றவனாயிருக்கிறேன்'' என்று உடனே பதில் வந்தது. செய்வதென்னவென்று ஒருவருக்கும் தெரியவில்லை. எல்லோருடைய மனமும் பூனாவின் பக்கம் திரும்பிற்று. ஒவ்வொருவராக அங்கு போய்ச் சேர்ந்தனர்.
ராஜாஜி, தேவதாஸ், நான் மூவரும் சீக்கிரத்தில் பூனாவை அடைந்தோம். பூஜ்யர் மாளவியாஜி, ஸர் தேஜ்பஹதூர் ஸப்ரூ, ஸ்ரீ ஜயகர், ராஜேந்திர பாபு, ராவ்பஹதூர் எம். ஜி. ராஜா ஆகியவர்களும் ஒருவர் பின்னொருவராக பம்பாய்க்கு வந்து பூனாவை அடையத் தொடங்கினர். பின்னர் டாக்டர் அம்பேட்கரும் அழைக்கப்பட்டார். அரசாங்கத்தின் அனுமதி பெற்று ஸர். புருஷோத்தமதாஸ் தாகூர்தாஸ், ஸர். சுன்னீலால் மேதா, ஸ்ரீ மதுரதாஸ் வஸன்ஜீ, நான் எல்லோரும் முதன் முதலில் காந்தியடிகளை சிறையில் கண்டோம். ஜெயில் சூப்பரிண்டெண்டெண்டின் அறையில் காந்தியடிகளைச் சந்திக்க ஏற்பாடாயிற்று. உபவாஸம் இன்னும் ஆரம்பமாகவில்லை அறை முதல் மாடியிலிருந்தது. அதனுடைய ஜன்னல்களின் வழியாகச் சிறையின் பெரும் பகுதி தெரிந்தது. தூக்குப்போடும் சதுக்கமும் ஜன்னலிலிருந்து தென்பட்டது. காந்தியடிகள் வரும் பாதை அச்சதுக்கத்தின் சுவரையொட்டி இருந்தது. நான் காந்தியடிகளை ஏறக்குறைய ஒன்பது மாதமாகப் பார்க்கவில்லை. திடீரென்று காந்தியடிகள் வேகமாக எங்களை நோக்கி வருவதை ஜன்னல் வழியாகப் பார்த்தேன். நான் எல்லாக் கவலைகளையும் மறந்தேன். ஒன்றும் விசேஷம் நடைபெறாதது போலல்லவா காந்தியடிகள் ஓட்டமாய் வந்துகொண்டிருக்கிறார். அவருக்கருகில் தூக்குமேடையிருந்தது. அங்கு இரண்டு மூன்று தினங்களுக்கு முன்புதான் ஒருவனைத் தூக்கிலிட்டதாகக் கூறினார்கள். என் மனம் தத்தளித்தது. இந்த மனிதருக்கு இந்த இடமா! நான் மிகுந்த பக்தியுடன் பாதங்களில் வணங்கினேன். பிறகு முக்கிய விஷயங்களைப் பற்றிப் பேச்சுத் தொடங்கிற்று. அவர் மிகவும் ஸாவதானமாக எல்லா விஷயங்களையும் வரிசைக்கிரமமாக எங்களுக்கு விளக்கினார். உபவாஸம் எவ்விதம் நிறுத்தப்படலாம்அதாவது தொடங்கிய பின்பு எவ்வாறு நிறுத்தப்படலாம்இதற்குரிய நிபந்தனைகளை முறையே குறிப்பிட்டார். இச்சம்பாஷணைக்கு முன்பு அவரது இக்காரியத்தை தேவைக்கு அதிகமான கடுமை வாய்ந்ததென்று நாங்கள் நினைத்திருக்க, பேச்சு முடிந்ததும் இதுவே தருமம், கடமையுமாகும் என்று தோன்றிற்று. அவரது உருவை மனதில் பதித்துக்கொண்டு நாங்கள் பம்பாய் திரும்பி வந்து பூஜ்யர் மாளவியாஜியிடமும், மற்ற தலைவர்களிடமும் முழு விவரத்தையும் தெரிவித்தோம்.
அச்சமயத்தில் நமது தலைவர்கள் மிகுந்த குழப்பத்திலாழ்ந்து செய்ய வேண்டியது யாதெனத் தெரியாது திகைத்தனர். காந்தியடிகளின் உபவாஸம் ஒருவருக்கும் பிடிக்கவில்லை. அவர் கூறும் ஆலோசனையின் உபயோகத்தையும் ஒருவரும் உணரவில்லை. காலத்தைக் கடத்தல், காந்தியடிகளின் உயிருக்கு ஆபத்தென்பதையும் ஒருவரும் அறிந்தாரில்லை. 'அவர் இப்படிச் செய்திருக்கக் கூடாது. இது அவர் செய்யும் பலாத்காரமாகும்.' 'இப்பொழுதாவது உபவாஸத்தை விட்டுவிடும்படி அவரிடம் வற்புறுத்த வேண்டும்' என்று அடிக்கடி கூறப்பட்டது. அவர் உபவாஸத்தை விட முடியாதென்றோ, இது குறை கூறுவதற்கேற்ற சமயமல்லவென்றோ ஒருவரும் உணரவேயில்லை. காந்தியடிகளின் உயிரைக் காப்பது எவ்வாறு என்பதே எங்கள் முன்னிருந்த பிரச்சினை. தலைவர்களில் ஒருவருடைய புத்தி சிறிது நிர்மாண முறையில் வேலை செய்து வந்தது. அவர்தான் ஸர். தேஜ்பஹதூர் ஸப்ரூ. ஆனால் காந்தியடிகளின் உயிரைக் காக்கும் பொறுப்பை, உண்மையில் கடவுள் ஏற்றிருந்தார். நாங்கள் வீணில் குழம்பிக்கொண்டிருந்தோம்.
காந்தியடிகள் உபவாஸம் தொடங்கு முன் போதிய அவகாசம் கொடுத்திருந்தும், அதைப் பயன்படுத்திக்கொள்ள எங்களால் முடியவில்லை. அவர் எல்லா நடவடிக்கைகளையும் தாமே ஏற்று நடத்தியிராவிடில் ஏதாவது உபயோகமான வேலை நடந்திருக்குமா என்பது எனக்குச் சந்தேகமே. உபவாஸம் ஆரம்பமானதும் அரசாங்கம் சிறைக் கதவுகளைத் திறந்துவிட்டது. இதன் பயனாக தங்கு தடையின்றி காந்தியடிகளைச் சந்திப்பது சாத்தியமாயிற்று. ஆகையால் இக்காரியத்தின் சூத்திரம் காந்தியடிகளிடமே இருந்தது. ஹரிஜனங்களுக்கும், உயர்ந்த வருண ஹிந்துக்களுக்கும் இடையில் எத்தகைய ஒப்பந்தம் ஏற்பட்டாலும் அதை ஒப்புக்கொள்வதாக அரசாங்கம் கூறிற்று. ஆகையால் உயர்ந்த வருணத்தவரும், ஹரிஜனங்களும் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டியதே உசிதமான வேலையாயிற்று. நாங்கள் இரவு பகலாக ஒப்பந்தத்தைப் பற்றிய பேச்சில் ஈடுபட்டிருந்தோம். ஆனால் ஜீவாதாரமான விஷயங்களை இரண்டே மனிதர்கள் தீர்மானிக்க வேண்டும். ஒரு பக்கம் காந்தியடிகள் மறுபக்கம் டாக்டர் அம்பேட்கர். ஆனால் இந்த முரண்படும் முக்கிய விஷயங்களிடையே ஒரு ஒற்றுமையைக் கண்டுபிடிக்கவேண்டியிருந்தது. இதில் ஸர். தேஜ்பகதூர் ஸப்ரூ எங்களுக்கு மிகவும் உதவியளித்தார். காந்தியடிகள் வரவர பலஹீனமடைந்து வந்தாலும், அவரது மனத்தின் சாவதானத்தில் ஒரு குறைவும் ஏற்படவில்லை என்பதைக் கண்டேன். இடைவிடாமல் நாள் முழுவதும், உயர்ந்த வருணத் தலைவர்களுடனும், ஸ்ரீ அம்பேட்கருடனும் அவர் ஆலோசனை நடத்திக்கொண்டே இருந்தார்.
ராஜாஜியும், தேவதாஸும் நானும் காரியத்தைத் துரிதப்படுத்தி வந்தோம். சூத்திரம் முழுவதும் காந்தியடிகளின் கையிலிருந்தது. காந்தியடிகளின் தைரியம், அவரது எல்லையற்ற நம்பிக்கை, அவரது பயமின்மை, பற்றின்மை, ஆகியவையெல்லாம் அப்பொழுது பார்க்கத்தக்கவையாயிருந்தன. யமன் வாயிலில் நின்றான். அரசாங்கம் அதன் கொடுமை விளங்க, நடுநிலைமை வகித்தது. ஸ்ரீ அம்பேட்கரின் இதயம் கைப்பு நிரம்பியிருந்தது. மற்ற ஹிந்துத் தலைவர்கள் இரவு பகலாக முயன்றும் ஒப்பந்தம் முடிவதாயில்லை. ராஜாஜிக்கும், தேவதாஸுக்கும், எனக்கும் சில சமயங்களில் ஆத்திரமுண்டாகும். ஆனால் காந்தியடிகள் எல்லாக் கவலைகளையும் கடவுளிடம் ஒப்புவித்து நிம்மதியாய்ப் படுத்திருந்தார்.
ஒரு நாள் சிறைக்குள் மந்திராலோசனை நடைபெற்றுக்கொண்டிருக்கையில், காந்தியடிகள் சில ஹிந்துத் தலைவர்களிடம் ''கனச்யாமதாஸ் எனது கருத்தொன்றை உங்களிடம் தெரிவித்திருப்பாரே?'' என்று சொன்னார். ஒரு தலைவர் அவசரமாக ''இல்லை. எங்களுக்கு ஒன்றும் தெரியாதே'' என்றார். காந்தியடிகள் சிறிது கோபத்துடன், “இது என் துரதிர்ஷ்டம்என்றார். எனக்குப் பகீரென்றது. காந்தியடிகளின் முழுக் கருத்தையும் நான் அவர்களிடம் தெரிவித்திருந்தேன். அதை இத்தலைவரும் அறிவார். ஆனால் காந்தியடிகளைக் காரியவாதியல்ல என்றும், காற்றில் பறப்பவரென்றும் கருதுவோருக்கு காந்தியடிகளின் கருத்தைக் கேட்கவும் சமயமில்லை. அக்கருத்தை அவர்கள் கேலி செய்து புறக்கணித்துவிட்டார்கள். நான் எல்லா விஷயங்களையும் நினைவுறுத்தவே, அத்தலைவர் தமது தவறைத் திருத்திக்கொண்டார். ஆனால் காரியம் கெட்டது கெட்டதுதான். இதைப் போலவே ஏதோ ஒரு சிறிய விஷயத்தில் காந்தியடிகளுக்கு தேவதாஸிடமும் சிறிது கோபம் வந்தது. இரவு ஒன்பது மணிக்குத் தூங்கும் சமயத்தில் காந்தியடிகளுக்கு துக்கமுண்டாயிற்று. ''நான் ஆத்திரமடைந்து உபவாஸத்தின் மகிமையைக் குறைத்துவிட்டேன்'' என்றார். அது கோபமல்ல, ஒரு நொடி இருந்து மறைந்த உணர்ச்சியாகும். ஆனால் காந்தியடிகளின் சுபாவத்திற்கு இதுவும் ஒப்பவில்லை. தம் குற்றம் எள்ளளவாயினும் மலையளவாகக் கருதுவதும், பிறர் குற்றம் மலையளவாயினும், அதை எள்ளளவாகக் கருதுவதும் அவரது வாழ்க்கைத் தத்துவமன்றோ? பீஹாரில் பூகம்பம் உண்டான பொழுது அதை ''நமது பாபங்களின் பயன்'' என்று எண்ணினாரல்லவா?
காந்தியடிகள் உடனே ராஜாஜியை அழைத்து அவரிடம் தமது வருத்தத்தைத் தெரிவித்தார். கண்ணீர் பெருக்கெடுத்தோடிற்று. இரவு பதினொரு மணிக்கு ஜெயிலதிகாரிகளின் மூலமாக எங்கள் ஜாகையிலிருந்து தேவதாஸும் நானும் அழைக்கப்பட்டோம். நான் தூங்கிவிட்டேன். தேவதாஸ்மட்டில் சென்றார். காந்தியடிகள் அவரிடமும் மன்னிப்புக் கேட்டார். தந்தை தனயனிடம் மன்னிப்புக் கேட்பது எவ்வாறு? ஆனால் மஹாத்மாவான தந்தை தம் நடத்தையை நூற்றுக்கு நூறு புனிதமாக வைத்துக்கொள்ளாவிடில் உலகத்திற்கு என்ன கற்றுக்கொடுக்க முடியும்!
ராஜாஜி, தேவதாஸ் இருவரிடமும் காந்தியடிகள் தமது வருத்தத்தைத் தெரிவித்த பின்னர் ''இப்பொழுதே சென்று கனச்யாமதாஸிடம் எனது வருத்தத்தைத் தெரிவியுங்கள்'' என்று கூறினார். அவர்கள் என்னை எழுப்புவது சரியென்று எண்ணவில்லை; ஏனெனில், இவ்விஷயத்தை நாங்கள் ஒரு சிறிதும் பொருட்படுத்தவில்லை. ஆனால் இதுவே காந்தியடிகளின் பெருமையாகும். சில மாதங்களுக்குப் பிறகு நடந்த ஆகாயவாணிஉபவாஸத்தின் பொழுது இதே போன்று ராஜாஜியிடமும், சங்கர்லாலிடமும் அவருக்குச் சிறிது கோபமுண்டாயிற்று. அதற்காக அவர் ராஜாஜியிடம் மன்னிப்பு வேண்டி ஒரு கடிதம் எழுதினார். ராஜாஜியோ அது அநாவசியமென்று கருதி வினோதமாக பதிலெழுதினார். ஏனெனில், காந்தியடிகள் கோபமென்று நினைப்பதை நாங்கள் கோபமென்று கருதுவதில்லை.
இரண்டாவது உபவாஸத்தின் விஷயங்கள் இடையில் புகுந்துவிட்டன. மேலே குறிப்பிட்ட நம் முன்னுள்ள உபவாஸம் நடந்துகொண்டிருந்தது. பொழுது விடிவதும், மாலையாவதுமாயிருந்ததே ஒழிய ஒரு சிறிதாவது காரியம் முன்னேறக் காணோம். ஒரு நாள் தேவதாஸ் பரிதவித்து அழத் தொடங்கிவிட்டார். காந்தியடிகளின் நிலைமை அதிக கவலைக்கிடமாய்க்கொண்டிருந்தது. ஒருபுறம் கல் மனதுடன் ஸ்ரீ அம்பேட்கர் பேசிக்கொண்டிருந்தார்; மற்றொரு புறத்தில் ஹிந்துத் தலைவர்கள் அற்ப விஷயங்களில்கூட பிடிவாதங்காட்டினர். அநேகமாகப் பெரிய விஷயங்களெல்லாம் தீர்ந்துவிட்டன. ஆனால் ஒரு விஷயம் பாக்கியிருந்தாலும், முடிவான ஒப்பந்தம் ஆவது அசாத்தியமாயிருக்க, ஒப்பந்தம் ஏற்படாத வரையில் காந்தியடிகளின் உயிரைக் காத்தலும் சாத்யமானதாயில்லை.
ஹரிஜனங்களுக்கு எவ்வளவு ஸ்தானங்கள் கொடுக்கப்பட வேண்டுமென்பது ஸ்ரீ அம்பேட்கருடன் நிச்சயமாகிவிட்டது. மாகாணவாரியாக ஹரிஜனங்களின் எண்ணிக்கையும், அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய ஸ்தானங்களின் தொகையும் தக்கர் பாபாவுக்கு நன்றாய்த் தெரிந்திருந்தது, அச்சமயத்தில் எங்களுக்கு உதவியாயிருந்தது. தேர்தலின் முறையைப் பற்றியும் ஸ்ரீ அம்பேட்கருடன் ஒப்பந்தம் ஆகிவிட்டது. ஆனால் இந்த ஏற்பாடு எத்தனை வருஷங்கள் வரை அமுலில் இருக்கவேண்டும் என்பதைப் பற்றி வாத விவாதம் நடந்து வந்தது. ஸ்ரீ அம்பேட்கர் இத்தேர்தல் முறை பத்து வருஷங்களுக்குப் பிறகு மாறவேண்டுமென்றும், ஹரிஜனங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள ஸ்தானங்கள், தனியாகவே இருப்பதா, அல்லது உயர்ந்த வருண ஹிந்துக்களுடைய ஸ்தானங்களுடன் இணைக்கப்பட்டு எல்லோருக்கும் கூட்டுத் தொகுதி முறையில் தேர்தல் நடத்துவதா என்ற விஷயத்தைப் பதினைந்து வருஷங்களுக்குப் பிறகு ஹரிஜனங்களுடைய வாக்கெடுத்துக் தீர்மானிக்க வேண்டுமென்றும் கருதினார். ஹிந்துத் தலைவர்களோ இதை எதிர்த்தனர். அவர்கள் இந்த முறையையே குறிப்பிட்ட காலத்திற்குப் பின், அதாவது பத்து வருஷங்களுக்குப் பிறகு, மாற்றிவிட வேண்டுமென்று விரும்பினார்கள். அவர்கள், தீண்டாமை ஒரு களங்கமாகையால் பத்து வருஷங்களில் அதை ஒழித்த பிறகு, ராஜ்யத்தில் தீண்டுவோன், தீண்டப்படாதவன் என்ற வித்தியாசமே இல்லாதவாறு, கூட்டுத் தொகுதி ஏற்பட வேண்டுமென்றார்கள்.
ஸ்ரீ அம்பேட்கர் இதைப் பிடிவாதமாக மறுத்துவிடவே, பிரச்சினை மீண்டும் சிக்குண்டது. காந்தியடிகளின் கருத்தோ வேறு. ஸ்ரீ அம்பேட்கர் இவ்விஷயமாகச் சிறையில் சென்று காந்தியடிகளிடம் வாதம் புரியும் பொழுது, அவர், ''டாக்டர் அம்பேட்கரே, நான் ஹரிஜனங்களுடைய இஷ்டத்திற்கு விரோதமாக எல்லா ஸ்தானங்களையும் இணைக்க விரும்பவில்லை. ஐந்து வருஷங்களுக்குப் பிறகு ஹரிஜனங்களுடைய அனுமதியை வேண்டி வாக்கு எடுப்போம். அவர்களுடைய இஷ்டப்படி முடிவு செய்வோம்'' என்றார். ஆனால் பத்து வருஷங்களுக்கு முன் எக்காரணத்தைக் கொண்டும் அவர்களது அனுமதி வேண்டி வாக்கு எடுத்தலாகாதென்று டாக்டர் அம்பேட்கர் பிடிவாதம் பிடித்தார். இந்த வாக்குவாதம் வெகுநேரம் வரை நடந்துகொண்டேயிருந்தது. ஹிந்துக்கள் ஐந்து வருஷங்களுக்குள்ளேயே ஹரிஜனங்களைத் தங்களோடு சேர்த்துக்கொள்ள வேண்டுமென்பது காந்தியடிகளின் தீவிரமான எண்ணம். இதைவிட அதிக காலம் கழியச் செய்தல் அவர் நினைக்கவே முடியாதிருந்தது. ராஜாஜியும் நானும் கவலையுடன் காந்தியடிகளின் முகத்தை நோக்கிக்கொண்டிருந்தோம். 'உயிர் பணயமாயிற்றே; காந்தியடிகள் ஏன் இவ்வளவு பிடிவாதம் செய்கிறார்?' என்று நான் நினைத்தேன். காந்தியடிகளுக்கோ வாழ்வும் சாவும் சமமாயிருந்தது. பேச்சு நடந்துகொண்டிருந்தது. கடைசியில் காந்தியடிகள் திடீரென்று ''அம்பேட்கர், ஐந்து வருஷ முடிவில் ஹரிஜனங்களுடைய அபிப்பிராயப்படி முடிவாகத் தீர்மானிப்போம். இல்லையேல் நான் உயிரை விட்டுவிடுகிறேன்'' என்றார். காந்தியடிகள் அம்பை எய்துவிட்டாரே, இனி என்ன செய்வது? என்று நாங்கள் பிரமிப்படைந்தோம்.
பெருமூச்செறிந்துகொண்டு நாங்கள் தங்குமிடம் வந்தோம். ஸ்ரீ அம்பேட்கரிடம் சொல்லிப் பார்த்தோம். அவரோ, அசைந்து கொடுக்கவில்லை. அவருடைய ஹரிஜன நண்பர் டாக்டர் ஸோலங்கிக்கும் அவரின் பிடிவாதம் பிடிக்கவில்லை.
ராஜாஜி, ஐந்து வருஷமென்ன? பத்து வருஷமென்ன? வருங்காலத்தில் எப்பொழுது விரும்பினும் ஹரிஜனங்களின் அனுமதி பெற்று இத்தீர்மானத்தை மாற்றலாம் என்பதில் என்ன ஆட்சேபம் இருக்கக்கூடும்?” என்று ராஜாஜியிடம் நான் கேட்டேன். ''காந்தியடிகள் சம்மதிக்கவேண்டுமே'' என்றார் ராஜாஜி.
''நாமும் கொஞ்சம் பொறுப்பேற்போமே. அவரைக் கேட்கச் சமயம் எங்கிருக்கிறது?'' என்றேன். ராஜாஜி தலையையசைத்து "கல்லெறிந்து பார், காய் விழுந்தால் சரி'' என்றார்.
நான் இவ்வாலோசனையை ஸ்ரீ அம்பேட்கரிடம் தெரிவித்தேன். அவர் ஒப்புக்கொண்டார். எல்லோரும் இதை ஆதரித்தனர். ஒரு காரியம் முடிந்தது. காந்தியடிகளின் அனுமதி பெறுவது பாக்கியிருந்தது. ராஜாஜி சிறைக்குச் சென்று காந்தியடிகளிடம் நடந்ததைத் தெரிவித்தார். அவர் ஒப்பந்தத்தின் இப்பகுதியை ஒரு முறை இரு முறை படிக்கச் சொல்லி கவனமாய்க் கேட்டார். கடைசியில் மெள்ள வெகு நன்றுஎன்று ஒத்துக்கொண்டார். எல்லோருடைய முகங்களிலும் சந்தோஷம் தாண்டவமாடிற்று. அவரது அனுமதி பெற்ற பின்னர் அவரிடம் சென்று பாதங்களில் வணங்கினேன். பிரதியாகக் கன்னத்தில் பலமான அறை ஒன்று கொடுத்தார். உபவாஸத்தை நிறுத்துவதற்குள் இன்னும் இரண்டு தினங்கள் கழிந்துவிட்டன. ஏனெனில், ஏரவாடா ஒப்பந்தத்தை ஏற்பதில் அரசாங்கத்திற்கு இரண்டு நாட்கள் பிடித்தன. 1932ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி உபவாஸ ஆரம்பம். 24ஆம் தேதி எரவாடா ஒப்பந்தம் தயாராயிற்று. 26ஆம் தேதி அரசாங்கத்தின் சம்மதம் கிடைக்க, உபவாஸம் நிறுத்தப்பட்டது.

('பாபூ அல்லது நானறிந்த காந்தி' நூலிலிருந்து)

Comments

Most Popular

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு