Skip to main content

பல ரூபங்களில் காந்தி: ஆசிரியர் | அனு பந்தோபாத்யாயா


காந்திஜியின் திருமணம் அவரது 13வது வயதில் நடந்தது. அப்போது, அவருடைய மனைவி கஸ்தூர்பாவின் வயதும் 13 தான். அன்னைக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அந்த வயதிலேயே காந்திஜி தம் மனைவிக்குக் கல்வி கற்பிக்க முயன்று தோற்றுப் போனார். 1914ம் ஆண்டில் இங்கிலாந்துக்குக் கப்பல் பயணமாகச் சென்றபோது, தனது நண்பர் கல்லன்பாக்கிற்கு தினமும் ஒருமணி நேரம் குஜராத்தி மொழி கற்றுக்கொடுத்தார். தம் மனைவி கஸ்தூர்பாவுக்கு கீதையையும் ராமாயணத்தையும் படித்துக் காண்பித்து விளக்கமும் கொடுத்தார். அன்னையார், குஜராத்திப் பாடம் கற்பிக்கும் போதும் உடன் இருப்பார். கஸ்தூர்பா தமது 73வது வயதில் ஆகாகான் அரண்மனையில் (சிறையில்) காந்திஜியுடன் இருந்தார். அப்போது காந்திஜிக்கு ஓய்வு நேரம் கிடைத்தது. கீதையிலும் ராமாயணத்திலும் எளிய விளக்கங்களுடன் தம் மனைவிக்கு வகுப்பு எடுத்தார். தினமும் மனைவிக்கு பூகோளம், குஜராத்தி, இலக்கியம் மற்றும் இலக்கணம் ஆகியவற்றையும் கற்றுத்தர முயற்சித்தார். வயது கூடிவிட்டதாலும் மனதில் சற்று சோகம் இருந்ததாலும் அன்னையாருக்கு அப்பாடங்களில் விருப்பம் ஏற்படவில்லை! சிறைவாசத்தின்போது மற்றொரு சைனா நாட்டுச் சிறைவாசிக்கு ஆங்கில மொழியைக் கற்றுக்கொடுத்தார். அயர்லாந்து நாட்டவர் ஒருவருக்கு குஜராத்தி மொழியைக் கற்றுத்தந்தார். தமது பேரப்பிள்ளைகளுக்கு சரித்திரம், பூகோளம் மற்றும் வடிவியலில் (ஜாமெட்ரி) பாடங்கள் எடுத்தார். தமது 74வது வயதிலும் அவரால் வடிவியல் உருவங்களைக் கச்சிதமாக வரைய முடிந்தது.
காந்திஜிக்கு தமது கற்பிக்கும் திறமையில் அசாத்திய நம்பிக்கை இருந்தது. ஆனால், கல்வி கற்பிப்பதில் அவருடைய அணுகுமுறை முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. தென் ஆப்பிரிக்காவில் ஒரு முடி திருத்துபவர், ஒரு குமாஸ்தா மற்றும் ஒரு கடைக்காரர் ஆகிய மூவரும் ஆங்கிலம் கற்க விரும்பினர். அவர்களிடம் ஆசிரியருக்குக் கொடுப்பதற்கான பணமோ, வகுப்புக்குச் செல்வதற்கான நேரமோ இல்லை. காந்திஜி தாமே அவர்கள் பணியில் இருந்த இடங்களுக்குச் சென்று எட்டே மாதங்களில் அவர்களுக்கு ஆங்கில மொழியை மட்டுமின்றி கணக்குகள் வைத்துக்கொள்ளும் முறை மற்றும் தொழில் சம்பந்தமான கடிதங்கள் எப்படி எழுத வேண்டும் போன்ற விஷயங்களையும் கற்றுக்கொடுத்துவிட்டார்.
கொஞ்ச காலத்திற்குத் தன் மகன்களுக்கு வாய்வழிக் கல்வி கற்பித்தார், காந்திஜி. அவரிடம் நேரம் குறைவாக இருந்ததால் வெளியே உலாவச் செல்லும்போதும், கடைகளுக்குச் செல்லும்போதும் மகன்களைக் கூடவே அழைத்துச் சென்று, இலக்கியம், கவிதைகள் ஆகியவற்றைக் கற்பித்து வந்தார். சில மாதங்களுக்கு ஒரு ஆங்கில ஆசிரியையை அமர்த்தி, தன் மகன்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்தார். அவரது ஆங்கில நண்பர்களிடமிருந்தும் மகன்கள் சிறிது ஆங்கிலம் பயின்றனர்.
ஃபீனிக்ஸ் குடியிருப்பில் இருந்த சமயத்தில் பண்ணையில் தம்முடன் பணியாற்றிய ஊழியர்களின் குழந்தைகளுக்காக ஒரு ஆரம்பப் பள்ளியைக் காந்திஜி தொடங்கினார். அப்பள்ளியில், அவர் தலைமை ஆசிரியரானார். ஊழியர்களில் சிலர் ஆசிரியர்களாகப் பணியாற்றினர். மாணவர்கள் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். ஆசிரியர்கள், இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாட்டவர்கள். ஆசிரியர்களுக்குத் தினந்தோறும் கடினமான உடலுழைப்புப் பணி மேற்கொள்ள வேண்டி இருந்ததன் காரணமாக, தோட்டங்களிலிருந்தும் வயல்களிலிருந்தும் கைகால்களில் புழுதியுடன் நேராக வகுப்பெடுக்க வந்துவிடுவார்கள். காந்திஜி, சில சமயங்களில், கைகளில் ஒரு சிறு குழந்தையை ஏந்திய வண்ணம் வகுப்பு எடுப்பார். தாம் செய்யாத, தம்மால் செய்ய இயலாத எதையும் செய்யும்படி மாணவர்களிடம் அவர் சொல்லமாட்டார். பயந்த சுபாவம் உள்ள ஒரு ஆசிரியரால் தைரியசாலிகளான மாணவர்களை உருவாக்க முடியாது என்று கூறுவார். காந்திஜி, ஆசிரியர் மாணவர்களுக்குத் தாமே ஒரு முன் உதாரணமாக விளங்க வேண்டும் என்று வற்புறுத்துவார். அவர் பல்வேறு துறைகளைப் பற்றிய புத்தகங்களைப் படித்து வந்தார். அவ்வப்போது புதிய விஷயங்களையும் தெரிந்து கொள்வார். தனது 65வது வயதில் வான் இயல் பற்றி படிக்கத் தொடங்கினார்.
ஃபீனிக்ஸ் குடியிருப்பில் இருந்த பள்ளி பரீட்சார்த்த முறையில் பல கடுமையான சட்டதிட்டங்களுடன் நடத்தப்பட்டது. நடைமுறைகள் எளிமையாகவும் அதேசமயம், சற்றுக் கடினமாகவும் இருந்தன. தேநீர், காப்பி, கோக்கோ போன்ற பானங்கள் தடைசெய்யப்பட்டிருந்தன. காரணம் அவை அடிமைகளைக் கொண்டு பயிரிடப்படுபவை. பெரும்பாலான மாணவர்கள் ஆசிரமத்திலேயே வசித்தவர்கள். காந்திஜி, அபூர்வமாகவே புத்தகங்களைப் பயன்படுத்தினார். தனது இளமைப் பருவத்தில், தன்னை ஆசிரியர்கள் பாடங்களை நெட்டுருப் போடச் சொல்லி கட்டாயப்படுத்தியது அவருக்கு நன்றாக நினைவில் இருந்தது. இதன் காரணமாக படிப்பில் ஆர்வம் குறைந்துவிடுகிறது. எழுத்தறிவு, படிப்பறிவு மற்றும் கணிதம் ஆகிய மூன்றின் அடிப்படைக் கல்வி முறையில் காந்திஜிக்கு ஈடுபாடு கிடையாது. மாணவர்களின் மனதில் பண்பாட்டையும் நன்னடத்தையையும் வளர்ப்பது முக்கியம் என்று கருதினார்.
மாணவர்கள் எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர். ரம்ஜான் மாதத்தின்போது முஸ்லீம் மாணவர்களுடன் சேர்ந்து இந்து மாணவர்களும் விரதம் அனுசரித்தனர். சில மாதங்களுக்கு சில முஸ்லீம் மாணவர்கள் இந்து குடும்பங்களுடன் வசித்தனர். அம்மாணவர்கள் சைவ உணவை அக்குடும்பங்களுடன் சேர்ந்து உண்டனர். ஆசிரமத்தின் எல்லா மாணவர்களும் சர்வமத பிரார்த்தனையில் கலந்துகொண்டனர். தோட்டவேலை, துப்புரவுப் பணி, செருப்புத் தைக்கும் பணி, தச்சு வேலைகள் மற்றும் சமையல் பணியிலும் மாணவர்கள் பங்கேற்றனர். சங்கீதத்தை ரசிக்கவும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. தினந்தோறும் பஜனைகளும், பாடல்களும் பக்கவாத்தியங்களுடன் பாடப்பட்டன. டென்னிஸ் அல்லது கிரிக்கெட் விளையாடுவதற்கு பதிலாக மாணவர்கள் உடல் உழைப்பின் மூலம் உடலை வலுவாக வைத்துக்கொள்ள முடியும் என்று கூறிவந்தார். டால்ஸ்டாய் பண்ணையிலும் சபர்மதி ஆசிரமத்திலும் காந்திஜி செருப்பு தைக்கும் கலையை மாணவர்களுக்குப் பயிற்றுவித்தார். ஆரம்பப் பாடங்கள் உருது மற்றும் தமிழ் மொழியில் கற்றுத்தரப்பட்டன. தாய்மொழியில் பாடங்கள் நடத்தப்பட்டன. காந்திஜிக்கு குஜராத்தி, மராட்டி, இந்தி, உருது, தமிழ், ஆங்கிலம், ஃபிரஞ்சு மற்றும் லத்தீன் ஆகிய மொழிகள் தெரியும்.
சபர்மதி ஆசிமத்தில் கல்விக்குக் கட்டணம் கிடையாது. பெற்றோர்கள் தாமாகவே முன்வந்து நன்கொடை அளித்தனர். நான்கு வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் பள்ளியிலேயே தங்கிப் படிக்க வேண்டும். சரித்திரம், பூகோளம், கணிதம், பொருளாதாரம் ஆகிய பாடங்கள் தாய்மொழியிலேயே கற்பிக்கப்பட்டன. சமஸ்கிரதம், இந்தி மற்றும் ஒரு திராவிட மொழி ஆகியவற்றை மாணவர்கள் கட்டாயம் பயில வேண்டும். ஆங்கிலம் ஒரு சார்பு மொழியாகக் கற்றுத்தரப்பட்டது. உருது, தமிழ், தெலுங்கு மற்றும் வங்கமொழிகளின் எழுத்துக்களும் மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டன. தினமும் மூன்று முறை எளிமையான, காரம்-மசாலா இல்லாத உணவு தரப்பட்டது. எளிமையான சீருடைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. சுதேசி கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டன. பையன்களும் பெண்களும் ஒரே பள்ளியில் ஒன்றாகப் படிப்பது நல்லது என்று அவர் நம்பினார். அப்போதுதான் பால் உணர்வு பற்றிய பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ள முடியும். நாம் இந்த விஷயத்தில் கண்களுக்குத் திரை போட்டுகொண்டு பிரச்சினையைத் தவிர்க்க முயல்வது சரியல்ல. பையன்கள், பெண்களிடையே எப்போதாவது சிறு தவறுகள் நிகழ்ந்தால் காந்திஜி உண்ணாவிரதம் மேற்கொண்டுவிடுவார்.
நூற்பைத் தவிர பஞ்சை சுத்தம் செய்வதிலும் பட்டை போடுவதிலும் மாணவர்கள் பயிற்சி பெற்றனர். இளைஞர்கள் ஏதாவது ஒரு தொழிலில் பயிற்சி பெற்று அதிலிருந்து கிடைக்கும் வருவாயில் இருந்து கல்விச் செலவில் ஒரு பகுதியை ஈடு செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார். அவர்களுக்கு வாராந்திர விடுப்போ நீண்ட விடுமுறையோ அளிக்கப்படவில்லை. வாரத்தில் இரண்டு நாட்கள், மாணவர்களது சொந்தப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டது. வருடத்தில் மூன்று மாதங்களுக்கு அவர்களது உடல் நிலை அனுமதித்தால் பாதயாத்திரை மேற்கொள்ளலாம். குஜராத் வித்யாபீடத்தில் பைபிளின் உதவியின்றியே மாணவர்களுக்கு புத்தகத்தின் புதிய ஏற்பாடு மற்றும் ஆங்கில இலக்கியப் பாடல்களை அவர் எடுப்பது உண்டு. அப்போதையக் கல்வி முறை ஒரு சில மத்தியதரக் குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் அமைந்திருந்தது. அதனை அனைத்து மக்களின் தேவைகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் முற்றிலுமாக மாற்றி அமைத்திட காந்திஜி விரும்பினார். தாய்மொழியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அயல்நாட்டு மொழியான ஆங்கில மொழியைக் கற்பதற்காக மாணவர்கள் எவ்வளவு நேரத்தை வீணடிக்க வேண்டி இருக்கிறது என்று எண்ணி அவர் வருந்தினார். இதன் காரணமாக இந்தியக் கலாச்சாரம், இந்திய மொழிகள். இந்திய இலக்கியம் எல்லாவற்றிலுமிருந்தும் அந்த மாணவர்கள் ஒதுங்கிவிடுகிறார்கள். உயர் கல்வியும் மாணவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்கவில்லை. படிப்பு முடிந்ததும் என்ன செய்யப் போகிறோம் என்ற கவலை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை வாட்டுகிறது. இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்களையும், மரபுகளையும் மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும். மேலும், அவற்றை இன்றைய சூழலுக்கு ஏற்ப எப்படி அனுசரிக்க வேண்டும் என்பதும் அவர்களுக்குத் தெரியவேண்டும் என்பது காந்திஜியின் வாதம். மாணவர்கள் நல்ல உடல் ஆரோக்கியம், நன்னடத்தை மற்றும் நல்லறிவுடன் கூடிய கிராமவாசிகளாக உருவாகி அவர்கள் வாழ்வதற்கான வருமானத்தையும் ஈட்டிக்கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். ஒரு குழந்தைக்கு எழுத்தறிவுக்கு முன்பாக படிப்பறிவு வழங்கப்பட வேண்டும். மாணவர்களின் கையெழுத்து நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று அவர் கூறிவந்தார். தனது கையெழுத்து நன்றாக இல்லை என்பதில் அவருக்கு எப்போதுமே சற்று வருத்தம்தான். மாணவர்களுக்கு முதலில் நேர்கோடுகள், வளைவுகள், முக்கோணங்கள். பறவைகள், மலர்கள், இலைகள் ஆகியவற்றை வரைவதைக் கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்குப் பின்புதான் அவர்களுக்கு எழுதக் கற்றுத்தர வேண்டும் என்று காந்திஜி ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது, வழக்கில் இருந்த ஆரம்பக் கல்வித்திட்டம் அபத்தமானது. ஏனெனில், இந்தியாவின் கிராமவாசிகளின் தேவைகளை அது பூர்த்தி செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
வெறும் எழுத்தறிவினால் பயனில்லை. மாணவர்கள் நல்ல பிரஜைகளாக உருவாக வேண்டும் என்று காந்திஜி விரும்பினார். கல்வியைப் பற்றி முப்பது ஆண்டுகளுக்குச் சிந்தனை செய்தபின் தொழில் அடிப்படையிலான ஒரு கல்வி முறையை அவர் அறிமுகப்படுத்தினார். தனது 63வது வயதில் சிறைவாசத்தின் போது தனது புதிய கல்வித் திட்டத்தை அவர் உருவாக்கினார். அதுதான் பிற்பாடு நயிதாலீம் அல்லது வார்தாக் கல்வித் திட்டம் என்ற பெயரில் புகழ் பெற்று விளங்கியது.
காந்திஜி, குழந்தைகளுக்கு கடும் தண்டனை விதிப்பதை வெறுத்தார். ஒரே ஒரு தடவை ஒரு குறும்புக்கார மாணவனை காந்திஜி குச்சியால் அடித்துவிட்டார். உடனேயே தாம் சுயகட்டுப்பாட்டை இழந்ததற்காக வருந்தினார். அம்மாணவனோ காந்திஜி தன்னை அடித்ததற்காக அழவில்லை. மாறாக, தன்னால் காந்திஜிக்கு வருத்தம் ஏற்பட்டுவிட்டதே என்று அவன் வருந்தினான்.
காந்திஜி மாணவர்கள் விளையாட்டில் போட்டி போடுவதை ஆதரித்தார். ஆனால், படிப்பில் போட்டியை அவர் ஆதரிக்கவில்லை. அவர் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கிய முறை சற்று வித்தியாசமாக இருந்தது. ஒரு மாணவனின் படிப்புத்திறமையை வகுப்பில் சிறந்த மாணவனின் திறமையுடன் அவர் ஒப்பிடவில்லை. அதேசமயம் ஒரு மாணவன் தன் படிப்பிலும் வீட்டுப் பாடத்திலும் முன்னேற்றம் காட்டினால் அவனுக்கு அவர் அதிக மதிப்பெண்களை வழங்கினார். அவர் மாணவர்களை முற்றிலுமாக நம்பினார். தேர்வுகள் நடக்கும்போது மேற்பார்வை அனாவசியம் என்று அவர் கூறுவார். ஆசிரமப் படிப்பில் மாணவர்களின் சுதந்திர உணர்வு முதலிடம் வகித்தது. "மிகவும் சிறிய குழந்தைக்குக்கூட தனது முக்கியத்துவம் பற்றிய உணர்வு வரவேண்டும்'' என்று அவர் விரும்பினார்.
ஒவ்வொரு கிராமத்திலும் ஆதாரப் பள்ளிகள் நிறுவப்பட வேண்டும்; அப்பள்ளிகள் சுயதேவைப் பூர்த்தி பள்ளிகளாக விளங்கவேண்டும் என்றும் அவர் எண்ணினார். ஆதாரப்பள்ளி மாணவர்களுக்குத் தொழிற்கல்வி அவசியம். குறைந்தபட்சம் நூற்புப் பயிற்சியாவது அளிக்கப்பட வேண்டும். உலகில் சமத்துவமும் சமாதானமும் நிலவவேண்டுமானால் நாம் அதற்கான முயற்சிகளை மாணவர்களிடம்தான் தொடங்க வேண்டும் என்றும் அவர் எண்ணினார். அடிப்படைக் கல்வியான எழுத்தறிவு. படிப்பறிவு மற்றும் கணிதத்தை மட்டும் பயின்று உடலுழைப்பில் ஈடுபடுவது வெட்கத்திற்குரியது என்று எண்ணும் மாணவர்களை உருவாக்குவதைக் காட்டிலும், அவர்கள் படிப்பறிவின்றி கல்லுடைப்பதில் ஈடுபடுவதே மேல் என்று அவர் கூறுவார். தனது பேரப்பிள்ளைக்கு பருத்தி எப்படி பயிராகிறது, தக்ளியில் நூல் எப்படி நூற்கப்படுகிறது, சிட்டத்தில் சுற்றுக்கள் எப்படி எண்ணப்படுகின்றன, துணி தறியில் எப்படி நெய்யப்படுகிறது போன்ற விஷயங்களை போதித்து வந்தார். மேலும் அவர்களுக்கு பூகோளம், இயற்கை, கணிதம், வடிவியல், நாகரிகங்களின் வளர்ச்சி ஆகிய விஷயங்கள் பற்றியும் எடுத்துக்கூறுவார்.
சற்று மூத்த மாணவர்களுக்கு, நூற்பு மற்றும் நூற்பு சார்ந்த துறைகளில் காந்திஜி நடத்திய தேர்வுகள் சற்று கடினமானவைதான். இத்துறையின் அடிப்படைகளையும் செயல்களையும் நன்கு கற்றறிந்த மாணவன்தான், அத்தேர்வில் வெற்றி பெறமுடியும். ஆதாரக் கல்வி மூலம் மட்டுமே மாணவர்கள் சிறிதளவு பொருள் ஈட்டும் திறமையைப் பெற முடியும் என்றும் அவர் கூறிவந்தார். இக்கல்வி முறையின் நோக்கம் மாணவர்களுக்குத் தொழிற்கல்வியை அளிப்பது மட்டும் அல்ல; மாறாக மாணவனுள் ஒளிந்திருக்கும் மனிதனை உரியமுறையில் வெளிக்கொணர்வதுதான் என்றும் அவர் சொல்வார். தன்னை நாற்காலியில் உட்காரச் சொன்னால் பெருமிதம் கொள்வதும், கையில் துடைப்பத்தைக் கொடுத்தால் அவமானம் அடைவதும் மாணவர்களுக்கு அழகல்ல. ஏட்டுப் படிப்பு மாணவர்களிடம் நேர்மை உணர்வையோ நற்குணங்களையோ வளர்ப்பதில்லை என்பதும் அவரது வாதம்.
காந்திஜி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையேயும், பட்டமளிப்பு விழாக்களிலும் பல தடவைகள் உரையாற்றி வந்துள்ளார். படிப்பறிவு மற்றும் நிச்சயமான வேலை வாய்ப்புக்கேற்ற கல்வியினால் மட்டும் பயன் கிடையாது; தேசிய நீரோட்டத்துடன் கலந்து நாட்டிற்காகப் போராடவும் மாணவர்களுக்குத் தெரியவேண்டும். மேலும், அவர்கள் கிராம மக்களின் வாழ்க்கை நிலையை அறிந்து அதை மேம்பாடுறச் செய்வதற்கும் பாடுபட வேண்டும். நாட்டின் கோடிக்கணக்கான மக்களிடையே நிலவும் அச்சத்தையும் மூடநம்பிக்கைகளையும் அகற்றிட வேண்டுமானால் முதியோர் கல்வி மிகவும் அவசியம் என்றும் அவர் கூறிவந்தார்.
கல்வி பற்றிய காந்திஜியின் கருத்துக்களில் ரஸ்கின், டால்ஸ்டாய் மற்றும் தாகூரின் பாதிப்பு இருந்தது. ஒரு கல்வி வித்தகர் என்ற முறையில் அவர் உலகின் தலைசிறந்த பரிசோதனையாளர்களின் வரிசையில் வைக்கப்பட வேண்டியவர். பீகாரில், பல பள்ளிகளை அவர் தொடங்கினார். ஒரு தேசியக் கல்லூரியை வங்காளத்தில் நிறுவினார். அகமதாபாத்தில் ஒரு பல்கலைக்கழகத்தையும் அவர் நிறுவினார். இவ்வளவு சாதனைகளைப் புரிந்த இம்மனிதர் தனது இளம் வயதில் மாதம் ரூ. 75 ஊதியம் தரக்கூடிய ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தபோது அவருக்கு அப்பணி கிடைக்கவில்லை! ஏனெனில், அப்போது அவர் பட்டம் பெற்றிருக்கவில்லை. பத்தாவது வகுப்பு (லண்டன் மெட்ரிகுலேஷன்) மட்டுமே படித்திருந்தார்.
- தமிழில்: எம். ஆர். ராஜகோபாலன்

Comments

Popular posts from this blog

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

சிறுகதை என்றால் என்ன? | க. நா. சுப்ரமண்யம்

சி றுகதை என்றால் என்ன ? உருவத்தால் சிறியதாக இருக்கவேண்டும் என்றும் , கதையாக இருக்கவேண்டும் என்றும் சட்டென்று பதில் கூறிவிடலாம். ஓரளவு திருப்தி தருகிற பதில் மாதிரித்தான் இருக்கிறது. ஆனால் யோசித்துப் பார்க்கும்போது தோன்றுகிறது - உருவத்தில் சிறியது என்றால் எவ்வளவு சிறியது என்றும் , கதை என்றால் என்ன என்றும் கேள்விகள் தோன்றுகின்றன. இரண்டாவது கேள்விக்குப் பதில் முதலில் சொல்லிப் பார்க்கலாம். அத்தைப் பாட்டி கதையிலிருந்து , கம்பராமாயணத்தின் கருப்பொருள் வரையில் , ஏசாப்புக் கதைகளிலிருந்து மஹாபாரதத்து குருக்ஷேத்திரம் வரையில் , எல்லாமே கதையை ஆதாரமாகக் கொண்டவைதான். நாவல் , நாடகம் என்கிற இலக்கியத் துறைக்கும் ஆதாரமான விஷயம் கதைகள்தான். சிறுகதைக்கு ஆதாரமான கதை என்ன ? எப்படியிருக்க வேண்டும் ? ஓ. ஹென்றியின் கதைகளிலே பல சம்பவங்கள் அடுக்கடுக்காக வந்து கடைசியில் ஒரு திருப்பம் திரும்பி ஒடித்து வக்கிரமாக நிற்கும். மோபஸான் கதைகளிலே அடுக்கடுக்காகப் பல விஷயங்கள் சொல்லப்பட்டு , ஒரு சம்பவத்தைச் செயற்கை முத்தைப்போல உருட்டித் திரட்டித் தரும். சம்பவங்களை நம்புகிற இந்த இரண்டு கதைகளுக்கும் அப

தமிழில் வசனநடை | க. நா. சுப்ரமண்யம்

எல்லா மொழிகளிலுமே இலக்கிய ரீதியாகக் கவனிக்கும்போது கவிதை என்பதை ஒட்டிப் பின்னர்தான் வசன நடை என்பது எழுந்திருக்கிறது என்பது வெளிப்படை . தமிழும் அதற்கு விலக்கல்ல . தமிழ்க் கவிதை கி . மு . ஐந்தாயிரத்தில் தோன்றியது என்று வைத்துக்கொண்டால் , கவிதை தோன்றி ஆறாயிரத்து எழுநூற்றிருபது வருஷங்களுக்குப் பிறகுதான் வசன நடை தோற்றிற்று . தமிழ்க் கவிதை தோன்றியது கி . பி . மூன்றாம் நூற்றாண்டை ஒட்டியே என்று ஏற்றுக்கொண்டால் , வசனம் தோன்றியது ஒரு ஆயிரத்தி நானூறு வருஷங்களுக்குப் பிறகு என்றுதான் சொல்ல வேண்டும் . நான் இந்த இரண்டாவது காலவரையே நியாயமானது என்று எண்ணுபவன் . எஸ் . வையாபுரிப் பிள்ளை அவர்களின் ஆராய்ச்சிகளும் இதையே வற்புறுத்துகின்றன என்று தான் சொல்லவேண்டும் . உரை என்று சொல்லப்படுவதும் வசனமும் ஒன்றுதான் என்று அபிப்பிராயம் தெரிவித்துக்கொண்டிருப்பதில் சாரமில்லை . உரை இருந்திருக்கிறது . தமிழர்கள் ஊமைகள் அல்ல , ஆரம்ப காலத்திலிருந்தே உரையாடிக்கொண்டுதான் வந்திருக்கிறார்கள் என்று சொல்வது ஹாஸ்யமாகப் பொருத்தமாக இருக்கும் . உ