Skip to main content

பல ரூபங்களில் காந்தி: மருத்துவர் | அனு பந்தோபாத்யாயா


ராஜ் கோர்ட்டில் உள்ள அல்ஃப்ரெட் உயர்நிலைப் பள்ளியிலிருந்து காந்திஜி பத்தாம் வகுப்பில் தேறினார். அதற்குப் பின் அவரது அண்ணனும் பெரிய தகப்பனாரும் அவரை சட்டப் படிப்பிற்காக இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர். காந்திஜி, மருத்துவப் படிப்புப் படிக்க தாம் விரும்புவதாகக் கூறினார். அவருடைய அண்ணன் "ஒரு வைஷ்ணவக் குடும்பத்தில் பிறந்தவர். பிராணிகளின் உடலை அறுத்து ஆராய்ச்சி செய்யும் படிப்பைப் படிக்கக் கூடாது" என்று சொல்லிவிட்டார். காலம் சென்ற காந்திஜியின் தந்தைக்கும், தன் மகன் மருத்துவம் படிப்பதில் விருப்பம் இல்லை.
தனது 39வது வயதில் காந்திஜி தென் ஆப்பிரிக்காவிலிருந்து மறுபடியும் இங்கிலாந்து சென்றார். அப்போதும் மருத்துவப் படிப்பு படிக்கும் ஆவல் அவருக்கு ஏற்பட்டது. பிராணிகளின் உடலை அறுப்பது அவரது விருப்பத்திற்குத் தடை போட்டுவிட்டது. பரிசோதனை என்ற பெயரில் பிராணிகளை அறுத்துக் கொல்வது, தடுப்பு ஊசி மருந்து தயார் செய்வதற்காக பிராணிகளை சித்திரவதை செய்வது போன்ற பழக்கங்களில் அவருக்கு உடன்பாடு இல்லை. எந்த மதமும் பிராணிகளைக் கொல்வதை அனுமதிக்கவில்லை. எல்லா மதங்களுமே மனிதனின் நலத்திற்காகப் பல உயிர்களைக் கொல்வது பாவம் என்றுதான் கூறுகின்றன. காந்திஜி அலோபதி மருத்துவர்களை சாத்தானின் சீடர்கள் என்று கருதி வந்தார். அதே சமயம் பரிசோதனை முறைகளைத் தவிர்க்கும் ஆயுர்வேத வைத்தியர்களையும் அவர் கன்டனம் செய்தார். ஹோமியோபதியும் அவரை ஈர்க்கவில்லை. நோயுற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற அவருடைய ஈடுபாடு அவரைக் கடைசியாக ஒரு இயற்கை வைத்தியராக உருவெடுக்க வைத்துவிட்டது.
இயற்கை வைத்தியத்தில் நிபுணரான குஹ்னே என்பவரின் நூல்களைக் காந்திஜி படித்தார். அவரது நீர்ச் சிகிச்சை முறை காந்திஜியை மிகவும் கவர்ந்தது. முதலில் தன்மீதே சில பரிசோதனைகளை காந்திஜி செய்துகொண்டார். பிறகு தனது மனைவியையும் மகன்களையும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார். அதற்குப்பின், தண்ணீர், மண், காற்று, சூரிய ஒளி ஆகியவற்றின் உதவியுடன் வைத்தியம் செய்யும் ஆற்றலை அவர் பெற்றார். மாத்திரைகளையும் மருந்தையும் பயன்படுத்தி உடலுக்கு விஷச் சிகிச்சை தருவதைத் தவிர்த்து, உபவாசம். சரியான உணவு முறைகள் மற்றும் பச்சிலைகள் மூலம் எவ்வித வியாதியையும் குணப்படுத்தலாம் என்று அவர் நம்பினார்.
நோய்க்கான காரணங்களை சரியான முறையில் கண்டறிந்துகொள்ளும் திறமை அவருக்கு இருந்தது. இதன் காரணமாக பல நோயாளிகளுக்கு அவர் உரிய சிகிச்சையை அளித்து குணப்படுத்தினார். தென் ஆப்பிரிக்காவில் முதல் கட்டத்தில் "கூலி பாரிஸ்டர்'' என்று அழைக்கப்பட்ட காந்திஜி இப்போது ''கூலி (சற்று அரைகுறை) டாக்டராகவும்" விளங்கினார். பல ஐரோப்பியர்களும் இந்தியர்களும் மருத்துவ ஆலோசனைக்கு அவரை அணுகினார்கள். நிறையப் பேருக்கு அவர் குடும்ப மருத்துவராகவும் ஆகிவிட்டார். அந்தக் கால கட்டத்தில் காந்திஜியின் சிகிச்சை முறைகள் எந்த மருத்துவ முறைக்கும் - மருத்துவ நூல்களுக்கும் அப்பாற்பட்டவைகளாக இருந்தன. இருப்பினும், சிறிது காலத்திற்குப் பின் அவரது சிகிச்சை முறைகளில் சிலவற்றை வைத்தியர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர்.
அவருடைய மகன் டைஃபாய்ட் ஜுரத்தினால் அவதியுற்றபோது டாக்டர்கள் அவனுக்கு முட்டையும் சிக்கன் சூப்பும் உணவாகத் தரப்பட வேண்டும் என்று கூறினர். காந்திஜி மறுத்துவிட்டார். சைவ உணவு மட்டுமே கொடுத்தார். தாமே பையனுக்கு சிகிச்சையை மேற்கொண்டு தண்ணீரையும் ஆரஞ்சுப்பழ ரசத்தையும் மட்டுமே உணவாகக் கொடுத்தார். பையன் ஜுரத்தின் வேகத்தால் பிதற்றத் தொடங்கியபோது காந்திஜிக்குச் சற்று பயம் ஏற்பட்டது. இருப்பினும் அவர் இயற்கை சிகிச்சையை நிறுத்தாமல் தொடர்ந்தார். வெற்றியும் பெற்றார். இதைப் பார்த்து நிறைய டைஃபாய்ட் நோயாளிகள் அவரிடம் சிகிச்சைக்கு வந்தனர். ஊசிகள் இன்றி அவர்களை காந்திஜி குணப்படுத்திவிட்டார்.
டாக்டரின் உத்தரவை மற்றொரு சந்தர்ப்பத்திலும் அவர் மீறியுள்ளார். கஸ்தூர்பா அன்னையார் ஒருமுறை மோசமான ரத்தசோகை நோயால் பீடிக்கப்பட்டிருந்தார். டாக்டர்கள் அவருக்கு பசுமாட்டின் புலாலிலிருந்து தயாரிக்கப்பட்ட சூப் தர வேண்டும் என்று கூறினார்கள். இதை காந்திஜி மட்டுமின்றி அன்னையும் ஏற்கவில்லை. காந்திஜி தொடர்ந்து பல நாட்களுக்கு அன்னையாருக்கு எலுமிச்சம்பழ ரசத்தை மட்டுமே கொடுத்து குணப்படுத்திவிட்டார். அன்னையாருக்கு பருப்பையும் உப்பையும் உணவையும் சேர்த்துக்கொள்ள வேண்டாம், என்று யோசனை கூறினார் காந்திஜி. ஒரு கணம் அன்னையாருக்கே தன் கணவர் எவ்வளவு திடசித்தம் வாய்ந்தவர் என்பது மறந்துவிட்டது போலும்! "எனக்கு உப்பு சாப்பிடாதே, பருப்பு சாப்பிடாதே என்று புத்தி சொல்லும் உங்களால் உப்பையும், பருப்பையும் விட்டுவிட முடியுமா?'' என்று கணவரைக் கேட்டுவிட்டார். "நிச்சயமாக! டாக்டர் யோசனை சொன்னால் அவற்றை விட்டுவிடுவேன். ஆனால், இப்போது மருத்துவரின் யோசனை இல்லாமலேயே ஒரு ஆண்டிற்கு பருப்பையும், உப்பையும் உட்கொள்ளப்போவதில்லை" என்று காந்திஜி சொல்லிவிட்டார். அம்மையாரின் கண்ணீரும், வேண்டுகோளும் காந்திஜியின் பிடிவாதத்திற்கெதிரே பயனற்றுப் போயின. நோயாளியான அம்மையாரும், வைத்தியரான காந்திஜியும் உப்பையும், பருப்பையும் துறந்துவிட்டனர்.
மற்றொரு சந்தர்ப்பத்தில், பதினைந்து நாட்களுக்கு கஸ்தூரிபா அன்னையார். வேப்பிலைச் சாறு குடிக்க வேண்டி இருந்தது. குடலைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று காந்திஜி வற்புறுத்தி வந்தார். குறிப்பாக மலக்குடலில் மலம் தங்கிவிடுவது விஷம் போன்றது. அதைத் தவிர்ப்பதற்கு, உபவாசம், அரை நாள் உபவாசம், எனிமா போன்ற முறைகளை மேற்கொள்ள வேண்டும். தலைவலி, அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற நோய்கள், நாம் அதிகமாக உண்பதாலும் சரியான உடற்பயிற்சி மேற்கொள்ளாததாலும் ஏற்படுகின்றன என்று அவர் கூறி வந்தார். நீண்ட, துரிதமான நடை உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியம் என்று அவர் கூறி வந்தார். சிறைவாசத்தின் போது காலை, மாலை வேளைகளில் அவர் வெகுநேரம் நடை பயில்வது வழக்கம். மேலும் சரியான சுவாசப் பயிற்சிகளையும் மேற்கொள்ளும்படி அவர் சிறைவாசிகளுக்கு போதனை செய்து வந்தார். உடலின் ஆரோக்கியம், மனக்கவலை காரணமாகப் பாதிப்பு அடைகிறது என்பதை காந்திஜி அறிந்திருந்தார். ராம நாமத்தை ஜெபம் செய்வதன் மூலமும் அசைக்க முடியாத தெய்வ நம்பிக்கையினாலும் எல்லா கவலைகளும் மறந்துவிடும் என்று காந்திஜி கூறிவந்தார். அது ஒரு சர்வரோக சஞ்சீவினி.
தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோது, ஒருமுறை, காந்திஜியை ஒரு பட்டாணியன் நன்றாக அடித்துவிட்டான். உதட்டிலும், விலா எலும்புகளிலும், நெற்றியிலும் ஏற்பட்டிருந்த காயங்களுக்கு காந்திஜி மண்ணையே பிசைந்து தடவினார். வீக்கம் வடிந்து காயங்களும் ஆறிவிட்டன.
ப்ளேக், டைஃபாய்ட் ஜுரம், மலேரியா, அஜீரணம், மஞ்சள் காமாலை, ரத்த அழுத்தம், தீக்காயங்கள், பெரியம்மை மற்றும் எலும்பு முறிவு எல்லாவற்றிற்கும் காந்திஜி மண்சாந்து சிகிச்சையை சிபாரிசு செய்தார். ஒரு பயணத்தின் போது அவரது மகனின் கை உடைந்துவிட்டது. காந்திஜி மண்ணைக் குழைத்துப் பூசி கட்டுப் போட்டார். காயம் ஆறிவிட்டது. இந்தச் சிகிச்சை முறையில் நிறையப் பேர்களை காந்திஜி குணப்படுத்தி வந்தார். இருப்பினும் தமது சிகிச்சை முறைகள் பரீட்சார்த்தமானவையே அன்றி முற்றிலும் சரியானவை அல்ல என்றும் எச்சரித்து வந்தார். 'ஆரோக்கியத்திற்கான வழிகாட்டி' என்ற தமது நூலில் குறிப்பிடப்பட்டுள்ள சிகிச்சை முறையை மேற்கொள்வதில் ஆபத்தும் இருக்கிறது என்றும் தமது யோசனைகள் துணிச்சலானவை என்றும் காந்திஜியே சொல்வதுண்டு. மருத்துவமனைகளையோ, மகப்பேறு மனைகளையோ, மருந்து விற்பனைக் கூடங்களையோ நிறையக் கட்டிவைக்க வேண்டும் என்று அவர் சொன்னதில்லை. மாறாக மக்களுக்கு சுத்தத்தையும் சுகாதாரத்தையும் போதிப்பதுதான் முக்கியம் என்று கூறி வந்தார். நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதைவிட நோய் வராமல் தடுப்பது முக்கியம் என்றும் அவர் கூறிவந்தார்.
அலோபதி மருந்துகளை ஒரேயடியாக ஒதுக்கி விடுவதற்கில்லை. ஒரு முறை சேவாகிராமில் காலரா நோய் பரவி இருந்தபோது காந்திஜியே ஆசிரமவாசிகளையும் கிராமத்து மக்களையும் காலரா தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளும்படி அறிவுறுத்தினார். ஒரு சிறைவாசத்தின் போது குடல்வால் நோய்க்காக (அப்பெண்டிசைட்டிஸ்) காந்திஜி அறுவை சிகிச்சையை ஏற்றுக்கொண்டார். பொதுமக்கள் அவருக்கு கண்டனக் கடிதங்களை அனுப்பினார்கள். தான் அலோபதி சிகிச்சையை ஏற்றுக்கொண்டது தவறுதான் என்று காந்திஜி ஒப்புக்கொண்டார்.
இயற்கை வைத்தியத்தை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்த முடியாது என்பதை காந்திஜி அறிந்திருந்தார். இருப்பினும் பல காரணங்களுக்காக அச்சிகிச்சை முறையை அவர் வலியுறுத்தி வந்தார். ஏழை மக்கள் அதை எளிதாக மேற்கொள்ள முடியும் என்பது முதல் காரணம். அது நூற்றுக்கு நூறு சுதேசி முறை என்பது இரண்டாவது காரணம். தனது 77வது வயதில் அளவற்ற உற்சாகத்துடன் உருளிகாஞ்சன் என்ற கிராமத்தில் (மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளது) இயற்கை மருத்துவமனை ஒன்றை காந்திஜி நிறுவினார். அதில் விலை உயர்ந்த மருத்துவ சாதனங்கள் கிடையாது. ஒரு லட்சிய மருத்துவர் மருத்துவத்தைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். மேலும் தான் அறிந்துள்ளதை மக்களுடன் இலவசமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று காந்திஜி கூறினார். மருத்துவர்களுக்கு வருடாந்திர ஊதியம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துவிட்டால் அவர்கள் நோயாளிகளிடம் பணத்தை எதிர்பார்க்கமாட்டார்கள் என்றும் அவர் நம்பினார். சில நாட்களில் காந்திஜியே நோயாளிகளைப் பரிசோதனை செய்து சிகிச்சை முறை பற்றி சீட்டில் எழுதிக்கொடுப்பது உண்டு. ராஜு என்பவருடைய சீட்டில் "சூரிய ஒளிக்குளியல், இடுப்புக் குளியல் மற்றும் ஒத்தடம்; பழரசம், தண்ணீர் கலந்த மோர், பால் கூடாது; மோர் செரிக்கவில்லை என்றால் மேலும் பழரசமும் கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீரும் கொடுக்கவும்" என்று எழுதப்பட்டிருந்தது. மற்றொரு சீட்டு பார்வதி என்ற நபருடையது. அதில் ''சாத்துக்குடி ரசம் மட்டுமே கொடுக்க வேண்டும். இடுப்புக் குளியல், ஒத்தடம், வயிற்றின் மீது மண்சாந்து பூசவும்; சூரிய ஒளிக் குளியல் தினந்தோறும், இதையெல்லாம் செய்தால் அவருக்கு சரியாகிவிடும். மேலும் ராம நாமத்தை உச்சரிக்கும்படி அவருக்கு அறிவுரை கூறுங்கள்".
அவருடைய ஆசிரமவாசிகள் வேடிக்கையாக இப்படிச் சொல்வதுண்டு: "காந்திஜி உன்னை நெருங்கிவந்து உன்னுடன் பேசவேண்டும் என்றால் நீ ஒரு நோயாளியாக மாறவேண்டும்." நோயாளிகளின் சிறு தேவைகள் பற்றிக்கூட காந்திஜி அறிந்து வைத்திருந்தார். தினந்தோறும் மாலையில் உலாவிவிட்டுத் திரும்பும் சமயத்தில் ஒவ்வொரு நோயாளியையும் சந்தித்துப் பேசுவார். நோயாளியின் உணவு எப்படி தயாரிக்கப்பட வேண்டும், ஒத்தடம் எப்படிக் கொடுக்க வேண்டும், எனிமாவில் எந்த அளவிற்கு உப்பு சேர்க்கப்பட வேண்டும் போன்ற விஷயங்கள் பற்றி விபரமான அறிவுரைகளை காந்திஜி வழங்கி வந்தார். சேவாகிராமத்தில் தினந்தோறும் ஒரு மணிநேரம் நோயாளிகளுக்காக அவர் ஒதுக்கி இருந்த சமயத்தில் ஆசிரம வாசிகள் மட்டுமின்றி பக்கத்து கிராமங்களிலிருந்தும் கூட்டமாக ஜனங்கள் வரத்தொடங்கினர். அவர் எல்லோருக்கும் கொடுத்து வந்த அறிவுரை: ''காய்கறிகளைச் சாப்பிடுங்கள்; மோர் அருந்துங்கள்; மண்ணைப் பூசிக்கொள்ளுங்கள்.'' சில சமயங்களில் அவர் நோயாளிகளின் மலத்தையும் சோதனை செய்து பார்ப்பது உண்டு. நோயாளிகள் பலகீனமாக இல்லாவிடில் அவர்களை திறந்தவெளியில் உட்கார்ந்திருக்கும்படி அறிவுரை சொல்வார். நோயாளியை முற்றிலுமாக சோதனை செய்த பின்புதான் சிகிச்சை முறை பற்றி அவர் தீர்மானிப்பார்.
அவருடைய சக ஊழியர் ஒருவர் மன உளைச்சல் காரணமாக அதிகமான ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். நோயின் அடிப்படைக் காரணத்தைக் கண்டறிவதற்காக ஒரு உரையாடலுக்கு முன்னும் பின்னும் அவரது ரத்த அழுத்தத்தைப் பதிவு செய்தார். அடுத்த நாள் அந்த நபரிடம் ஒரு ரம்பத்தைக் கொடுத்து ஒரு மரக்கட்டையை அறுக்கச் சொன்னார். அவரது ரத்த அழுத்தம் மரத்தை அறுப்பதற்கு முன்பும் பின்பும் பதிவு செய்யப்பட்டது. மூன்றாவது நாள் அவரை ஒரு பர்லாங் தூரம் (200 மீட்டர்) ஓடச்சொல்லி ஓடுவதற்கு முன்பும் பின்பும் ரத்த அழுத்தம் பதிவு செய்யப்பட்டது. மூன்றாவது நாள் அவரது ரத்த அழுத்தம் குறைந்துவிட்டது. முதல் இரண்டு நாட்களில் குறையவில்லை. காந்திஜி வழங்கிய அறிவுரை: ''உங்களது ரத்த அழுத்தம் கூடும்போதெல்லாம் நீங்கள் நடை பயிலுங்கள்.'' காந்திஜி எவ்வளவு முக்கியமான பணியில் ஈடுபட்டிருந்தாலும், யாருக்காவது உணவு பற்றியோ, நோய் பற்றியோ அறிவுரை தேவைப்பட்டால் அவரைத் தொந்தரவு செய்ய அனுமதி உண்டு. நாட்டின் பெருந்தலைவர்களுக்குக்கூட இவ்விஷயத்தில் விதிவிலக்கு அளிக்கப்படவில்லை. சிறைவாசத்தின்போது சிறையில், கூட இருந்தவர்களுக்கு காந்திஜி சிகிச்சை அளித்து வந்தார்.
ஒரு தடவை ஆஸ்துமா நோயினால் அவதியுற்ற சக ஊழியர் ஒருவர் காந்திஜியின் உதவியை நாடினார். காந்திஜி அவரைப் புகை பிடிக்கும் பழக்கத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அறிவுறுத்தினார். மூன்று நாட்கள் கழிந்தன. எவ்வித முன்னேற்றமும் இல்லை. ரகசியமாக ஒன்றிரண்டு சிகரெட்டுகள் பிடிப்பதை அவரால் தவிர்க்க முடியவில்லை. ஒரு நாள் இரவு அவர் தீக்குச்சியைப் பற்றவைத்தபோது அவர் முகத்தில் டார்ச் விளக்கின் ஒளி விழுந்தது. காந்திஜி அவருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தார். அந்த நபர் தாம் சிகரெட் பிடித்ததற்காக காந்திஜியிடம் மன்னிப்பு கேட்டார். கூடவே சிகரெட் பிடிக்கும் பழக்கத்தையும் விட்டுவிட்டார். ஆஸ்துமா நோயும் அவரை விட்டு விலகிவிட்டது.
பாத்ஷா கானுக்கு (எல்லை காந்தி) தலையில் பிரச்சினை. காந்திஜி அவருக்கு சிபாரிசு செய்த சிகிச்சை, பாத்ஷா கானுக்கு நோயைவிட மோசமாகத் தொந்தரவு அளித்தது.
ஒரு தடவை வல்லப்பாய் பட்டேலின் காலில் முள் ஒன்று தைத்துவிட்டது. காந்திஜி அவருக்கு அயோடினுக்கு பதிலாக ஒரு செடியின் கொட்டையை அரைத்துத் தடவ முற்பட்டார். பட்டேல் காந்திஜியிடம் கூறியது: ''நீங்கள் அளித்துள்ள சிகிச்சையைக் காட்டிலும் தைத்துள்ள முள்ளின் உபத்திரவம் மிகவும் குறைவுதான்".
- தமிழில்: எம். ஆர். ராஜகோபாலன்

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ