Skip to main content

பல ரூபங்களில் காந்தி: நூற்பவர் | அனு பந்தோபாத்யாயா


காந்திஜி முதலில் பழகியது துணி நெசவுதான். கைத்தறியில் நெய்வதற்கு அவர் மில் நூலையே பயன்படுத்தினார். அதில் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. காரணம், அதை சுயதேவைப் பூர்த்தி என்று சொல்ல முடியாது. அவர் துணி தயாரிக்கும் தொழிலில் முதல் படியில் தொடங்கி முற்றிலுமாக நிபுணத்துவம் பெற விரும்பினார். முதலில் பருத்தி பயிரிட வேண்டும். பருத்தியிலிருந்து பஞ்சுக் காய்களைப் பறித்து சுத்தம் செய்து, பட்டை தயார் செய்து, நூல் நூற்று நெசவும் செய்ய வேண்டும். நூல் நூற்பதற்கான சர்க்கா அவருக்கு எளிதில் கிடைக்கவில்லை. அதனால் பயன் ஏதும் இல்லை என்ற காரணத்தினால் கிராம மக்கள் சர்க்காக்களை எப்போதோ தூக்கி எறிந்துவிட்டிருந்தனர். பல கிராமங்களில் தேடிய பின்பு ஒரு கிராமத்தில் ஒரு பெண்மணி இன்னமும் ராட்டையில் நூற்றுக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நூற்பில் தேர்ச்சி பெற்ற ஒருவர் மூலமாக ஆசிரமவாசிகளுக்கு சர்க்காவில் எப்படி நூற்க வேண்டும் என்று சொல்லித்தரப்பட்டது. ஒரு முறை அவர் நோயிலிருந்து மீண்டுகொண்டிருந்த தருணத்தில் ராட்டைகளின் ஒலி அவருக்கு சங்கீதம் போல் கேட்டது. அவரும் விரைவில் ராட்டையில் நூல் நூற்கப் பழகிவிட்டார். தினந்தோறும் குறைந்தது அரைமணி நேரத்திற்காவது நூற்காமல் உணவு உட்கொள்ளப்போவதில்லை என்று ஒரு சபதம் எடுத்துக்கொண்டார் காந்திஜி. நூற்பை அவர் ஒரு புனித வேள்வியாகவே கருதினார். அடுத்த 30 ஆண்டுகள் வரை - அதாவது தனது வாழ்நாள் முழுதும் அவர் தமது சபதத்தைக் கடைப்பிடித்தார். ரயில் மற்றும் கப்பல் பயணங்களின் போதும்கூட அவர் ராட்டையில் நூற்பதை நிறுத்தவில்லை. சில நாட்களில் நாள் முழுவதும் பல தலைவர்களுடன் கூடிப்பேச வேண்டி இருந்ததனால் அன்றைக்கு நூற்க வேண்டிய நூலின் அளவை நூற்று முடிப்பதற்காக நடு இரவில் நூற்கத் தொடங்கிவிடுவார். பல மாதங்கள் வரை அவருக்கு வலது கையில் வலி ஏற்பட்டது. ஆனால் காந்திஜி இடது கையை பயன்படுத்தி நூற்பு வேள்வியைத் தொடர்ந்தார்.
பொதுக் கூட்டங்களில், மேடையில் அமர்ந்தபடியே அவர் ராட்டையில் நூற்று வந்தார். தாகூர் ஒருமுறை அவருடன் நீண்ட நேரம் வரை பேசிக்கொண்டிருந்தார். காந்திஜி, தனது  நேரத்தை நூல் நூற்பதின் மூலம் வீணடிப்பதாக தாகூர் கூறினார். காந்திஜி பதிலளித்தார்: "நான் நமது பேச்சில் எவ்விதத் தடங்கலும் ஏற்படாவண்ணம் நூற்றுள்ளேன். நூல் நூற்பதன் மூலம் நாட்டின் செல்வத்தைப் பெருக்குவதாக நான் எண்ணுகிறேன். ஒரு கோடி மக்கள் தினமும் ஒரு மணி நேரம் நூற்பில் ஈடுபட்டால் நாட்டின் செல்வம் ரூ.50,000 அளவிற்குக் கூடும். இந்த ராட்டையினால் நாட்டின் எந்த ஒரு ஆண்மகனோ பெண்மணியோ தன் வேலையை இழந்துவிடமாட்டார்கள்.''
"ஏழை மக்கள் தங்களுக்குத் தேவையான துணியை நெய்வதற்கான நூலைத் தாங்களே நூற்பதின் மூலம் சுயதேவைப் பூர்த்தி செய்துகொள்ளலாம். பணக்காரர்கள் நூற்பை ஒரு கடமையாகவோ நற்பணியாகவோ மேற்கொண்டு தாங்கள் நூற்ற நூலை ஏழைகளுக்கு நன்கொடையாக வழங்கலாம்'' என்று கூறிவந்தார் காந்திஜி. எந்த ஒரு இந்தியனும் இந்தக் கர்ம வேள்வியைச் செய்யத் தவறக்கூடாது என்றார் அவர். தாகூரையும் சி. வி. ராமனையும்கூட அவர் சர்க்காவில் நூற்கும்படி கேட்டுக்கொண்டார். ராஜகுமாரன் ஆனாலும் சரி. ஏழையானாலும் சரி. இருவருக்கும் உணவும் உடையும் அவசியமானவை. இவற்றிற்காக இருவருமே உழைக்க வேண்டும். நான் நூற்கும் ஒவ்வொரு இழையிலும் இந்நாட்டின் எதிர்காலமே அடங்கியுள்ளது. இந்தியாவின் தலைவிதி ராட்டையில்தான் உள்ளதுஎன்பார் அவர். மாணவர்களிடம் ''நீங்கள் அணியும் ஒவ்வொரு மீட்டர் காதியும் கொஞ்சம் பணத்தை ஏழைகளுக்குக் கிடைக்கச் செய்கிறது. கரடுமுரடான கதர்த் துணிதான் வாழ்வில் எளிமையின் சின்னம்; காதிக்கு ஒரு ஆத்மா உள்ளது.''
அவருடைய ஆயுட்காலத்தில் கதரின் தரம் குறைய அவர் அனுமதிக்கவில்லை. சில வாடிக்கையாளர்களின் விசித்திரமான வேண்டுகோள்களுக்கேற்ப கதரில் மாற்றம் செய்யவும் அவர் இணங்கவில்லை. கதரை வெள்ளாவி மூலம் வெளுப்பதை (ப்ளீச்சிங் செய்வதை) அவர் விரும்பவில்லை. கதர் விற்பனை நிலையங்கள் மக்களின் பகட்டான விருப்பங்களைப் பூர்த்தி செய்ய முயலக் கூடாது; மாறாக நம் தயாரிப்புகளை அப்படியே ஏற்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி வந்தார்.
வருடத்தில் நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு வேலையற்றிருக்கும் கிராமத்து மக்கள் ராட்டை நூற்பின் மூலம் பயனடையலாம். எந்திர யுகத்தில் காந்திஜி சர்க்காவுக்குப் புத்துயிர் கொடுத்து பழக்கத்தில் கொண்டுவர முயற்சி செய்ததைச் சிலர் கிண்டல் செய்தனர். காந்திஜி அவர்களுக்குக் கொடுத்த பதில்: தையல் மெஷின் வந்ததனால் ஊசியும் நூலும் வழக்கொழிந்து போய்விடவில்லை. தட்டச்சு எந்திரம் வந்ததனாலும் நாம் கையினால் எழுதும் பழக்கத்தை விட்டுவிடவில்லை. அப்படியேதான் நூற்பு ஆலைகளும் சர்க்காக்களும் இயங்கிவரும். சர்க்காக்களை குக்கிராமங்களுக்குக்கூட எடுத்துச் செல்ல இயலும். எல்லா கிராமங்களிலும் நூற்பாலைகளை நிறுவிட முடியாது.
1921ம் ஆண்டில் காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தையும் அயல் நாட்டுத் துணி பஹிஷ்கார இயக்கத்தையும் தொடங்கியதை நாம் அறிவோம். அந்த காலகட்டத்தில் அவரைக் காணச் சென்றவர்களிடம் தானும் தனது மனைவியும் ராட்டையில் நூற்று அந்த நூலை நெய்து தயாராகும் துணியையே உடுத்தும் விஷயத்தைக் கூறிவந்தார். தினமும் ராட்டை நூற்பையும் கதர் நெசவையும் பற்றியே, காண வருபவர்களிடமும் பொதுக் கூட்டங்களிலும் பேசி வந்தார். நாடு முழுவதுமே காந்திஜியின் பேச்சினால் கவரப்பட்டது. மோதிலால் நேரு தன்னிடம் இருந்த அயல் நாட்டுத் துணிகளை எரித்துவிட்டு, கதர்த் துணியை உடுத்திக்கொண்டு அலஹாபாத் நகரில் தெருத்தெருவாக கதர் வியாபாரமும் செய்தார். ஆயிரக்கணக்கானோர் அவருடைய அடிச்சுவட்டைப் பின்பற்றினர்.
1925ம் ஆண்டு சர்க்கா சங்கம் துவக்கப்பட்டபோது 50,000 சர்க்காக்கள் 1500 கிராமங்களில் இயங்கிக்கொண்டிருந்தன. கூடவே எண்ணற்ற நெய்வோர்களுக்கும், சாயமிடுவோருக்கும், அச்சுப் பதிப்போருக்கும், தையற்காரர்களுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைத்தன. தக்ளி மற்றும் சர்க்கா தயாரிப்பில் கிராமத்து தச்சர்களுக்கும் கொல்லர்களுக்கும் வேலைவாய்ப்புக் கிடைத்தது. சர்க்கா, ஏழை மக்களுக்கு உயிர் கொடுத்தது; பெண்களின் மானம் காத்தது, பசித்த வயிறுகளுக்கு உணவை அளித்தது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் கதரின் உற்பத்தியும் விற்பனையும் மேலும் அதிகரித்து ஒரு லட்சம் நூற்போருக்கு வேலைவாய்ப்பு கிட்டியது. காதி ஊழியர்களுக்கு கதர் உற்பத்தியின் எல்லா அம்சங்களிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. காந்திஜி கூறுவார்: "இந்த சிறு நூற்பாலைக்கு ஈடாக உலகில் எதையுமே நான் கண்டதில்லை. மிகவும் குறைந்த மூலதனத்தில் 18 ஆண்டுகளில் லட்சக்கணக்கான ஏழை எளிய மக்களிடம் நான்கு கோடி ரூபாயைச் சென்றடையச் செய்த வேறு ஏதாவது தொழிலையோ தொழில் நிறுவனத்தையோ யாராவது அடையாளம் காட்ட முடியுமா?'' ஒரு பைசா மட்டுமே கட்டணமாகச் செலுத்தி எவ்வளவோ குடும்பங்கள் நூற்புப் பணியைத் தொடங்கின. அடுத்த நாளே தாங்கள் நூற்ற நூலை விற்றபோது அவர்களுக்கு இரண்டு பைசா கிடைத்தது. குறுகிய காலத்திற்குள், அவர்களுக்குத் தேவையான துணி அவர்களது உழைப்பின் மூலமே அவர்களுக்குக் கிடைத்தது.
சர்க்காவில் சில மாற்றங்களைச் செய்து அதிக நூலை நூற்பதற்கு யாரேனும் வழிவகுத்தால் அவருக்கு ரூ. ஒரு லட்சம் சன்மானம் தரப்படும் என்று காந்திஜி அறிவித்தார். பெட்டி ராட்டையை காந்திஜியே அறிமுகப்படுத்தினார். எரவாடா சிறையில் இருந்தபோது இதனை தயாரித்ததால் இதற்கு எரவாடா ராட்டை என்றும் பெயர் உண்டு. சில மாற்றங்களுடன் வில் தக்ளியும் (தனுஷ் தக்ளி) புழக்கத்திற்கு வந்தது. அதையும் காந்திஜியே பிரபலப்படுத்தினார். ராட்டையைப் போலவே வில் தக்ளியிலும் வலுவான மற்றும் தரமான நூலைத் தயாரிக்க முடியும் என்பதை காந்திஜி அனுபவத்தில் அறிந்துகொண்டார். சாதாரணத் தக்ளியிலும் அவர் நூற்றார். அவரது நூலிழை, சன்னரகமாக இருக்காது; ஆனால், வலுவாகவும் ஒரே சீரான முறுக்குடனும் இருக்கும். தாம் நூற்ற நூலைக் கொண்டு நெய்த புடவையை அவர் அன்னைக்கு வழங்கினார். அன்னையும் நூல் நூற்று வந்தார்.
நூற்பிற்கென்று ஒரு தனி மதிப்பு உள்ளது. இதைப் பற்றி ஆதாரக் கல்வி ஆசிரியர்களுக்கு உரையாற்றிய போது காந்திஜி இவ்வாறு குறிப்பிடுகிறார்: "நீங்கள் தச்சு வேலை, பொம்மை தயாரிப்பு, படம் வரைதல் போன்று நூல் நூற்பையும் எண்ணிவிடாதீர்கள். நூற்புத் தொழில் சூரியனைப் போன்றது. ஏனைய தொழில்கள் சூரியனைச் சுற்றிவரும் கிரஹங்களைப் போன்றவை. சிட்டத்தின் சுற்றுக்களை எண்ணுவதன் மூலம் மாணவர்களுக்கு கணக்கு சொல்லித்தரலாம். பருத்திச் செடிகளை நாம் எப்போது வளர்க்க ஆரம்பித்தோம், அது எங்கே பயிராகிறது, எப்படிப் பயிராகிறது, அதிலிருந்து பஞ்சு எப்படி தயாராகிறது, பஞ்சு எந்த நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு எந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்ற விபரங்கள் வாயிலாக இயற்கை மற்றும் பூகோள அறிவு மாணவர்களுக்குக் கிடைக்கும். அதேபோல் இரும்பினால் செய்யப்படும் தக்ளியின் தண்டில் ஏன் குறிப்பிட்ட அளவிலான பித்தளை விட்டம் பொருத்தப்படுகிறது என்பதை மாணவர்களுக்கு விளக்குவதன் வாயிலாகவும் அவர்கள் கணித அறிவைப் பெறுவார்கள்."
காங்கிரஸ்காரர்களும் பொதுமக்களும் காந்திஜியின் பிறந்த நாளைக் கொண்டாடி வந்தனர். அந்த நாளில் சர்க்கா ஜெயந்தியையும் கொண்டாடினால் தான் தனது பிறந்த நாளைக் கொண்டாடலாம் என்று காந்திஜி அறிவுறுத்தினார். ராட்டையில் நூற்பதையும் கதரையும் பரப்புவதற்கு எல்லா விதமான முயற்சிகளையும் அவர் மேற்கொண்டார். அவர் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றபோது ஊழியர்களிடம் சந்தாத் தொகையாகிய நாலணாவை (25 காசு) பணமாகச் செலுத்தாமல் அதற்குரிய கதர் நூலைக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு அங்கத்தினரும் நாள்தோறும் குறைந்தது அரைமணி நேரமாவது நூற்க வேண்டும் என்றும் அவ்வாறு நூற்கும் நூலை மாதம் ஒரு முறை கதர் வாரியத்திற்கு அனுப்பிவிடவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தன் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் சர்க்கா சங்கத்தினரிடம் கதர்த் துணி வாங்க வருபவர் ஒவ்வொருவரிடமும் குறைந்தபட்சமாகவாவது அவர்கள் கையினால் நூற்ற நூலைத் தரும்படி கேளுங்கள் என்று அறிவுறுத்தினார். கதர் வாங்கி வந்தவர்களில் சிலர் முணுமுணுத்தபோது, காந்திஜி அவர்களை "நீங்களே நூற்காவிட்டால் கதர்த் துணி எங்கிருந்து வரும்?'' என்று கேட்டார்.
இந்தியாவில் துணிப் பஞ்சம் நிலவுகிறது என்ற கருத்தை அவர் ஏற்கவில்லை. "இந்தியா தனது தேவைக்கு அதிகமான பருத்தியை உற்பத்தி செய்கிறது. மேலும் மனித ஆற்றலுக்கும் இங்கு குறைவு இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் சிறியதோர் மில் போல ராட்டைகளையோ, தக்ளிகளையோ நிறுவுவதன் மூலம் துணித் தட்டுப்பாடு நீங்கிவிடும்" என்று கூறுவார் அவர். நூற்பு அவருக்கு ஆத்மார்த்த திருப்தியை அளித்து வந்தது. "நூற்புதான் ஏழைகளிலும் பரம ஏழைகளான மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தியது. அவர்களின் மூலமாக கடவுளுடனும் நெருக்கம் ஏற்பட்டது" என்று அவர் கூறியுள்ளார். அவர் உறுதிபடக் கூறினார்: "சர்க்கா மெதுவாகத்தான் சுழல்கிறது (அது மாற்றங்களை விரைவில் கொண்டு வராது) என்ற தோல்வி மனப்பான்மை எவ்வளவு ஜென்மங்கள் எடுத்த பின்பும் என்னிடம் தோன்றாது. நீங்கள் எல்லோருமே என்னைக் கைவிட்டாலும் சரி, ஏன் என்னைக் கொன்றாலும்கூட, சர்க்காவை நான் கைவிடமாட்டேன்".
- தமிழில்: எம். ஆர். ராஜகோபாலன்

Comments

Most Popular

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு