Skip to main content

பல ரூபங்களில் காந்தி: துப்புரவுத் தொழிலாளி | அனு பந்தோபாத்யாயா


இளம் வயதில் காந்திஜி ராஜ்கோட்டில் வசித்து வந்த காலத்தில் அவரது வீட்டில் ஊக்கா என்ற பெயர் கொண்ட ஒரு துப்புரவுத் தொழிலாளி பணியாற்றி வந்தார். காந்திஜி ஊக்கா மீது பட்டுவிட்டால் உடனடியாக புத்லிபாய், காந்திஜியைக் குளித்துவிட்டு வரும்படி கூறுவது வழக்கம். தாய் சொல்லைத் தட்டாத காந்திஜிக்கு இந்த விஷயத்தில் மட்டும் சற்றுத் தயக்கம் ஏற்படும். தன் தாயுடன் "நான் ஏன் குளிக்க வேண்டும்?'' என்று தர்க்கம் செய்யத் தொடங்குவார். ஊக்கா துப்புரவுப் பணி செய்கிறார். அழுக்குகளை அகற்றுகிறார். அவரைத் தொட்டதால் தீட்டு எப்படி வந்துவிடும்? நான் உங்களது வார்த்தையை மீறமாட்டேன். ராமாயணத்தில் ராமர் கீழ்ச் சாதியைச் சேர்ந்த குகனைக் கட்டி அனைத்துக்கொண்டாரே, ராமாயணத்தில் தப்பாகவா சொல்லி இருக்கிறார்கள்?'' என்றெல்லாம் புத்லிபாயை கேள்விகளால் துளைத்தெடுத்துவிடுவார் காந்திஜி. இந்தக் கேள்விகளுக்கு புத்லிபாயிடம் பதில் கிடைக்காது.
துப்புரவுத் தொழிலை காந்திஜி தென் ஆப்பிரிக்காவில் பயின்றார். அவருடைய நண்பர்கள் அவரைச் செல்லமாக "மகா துப்புரவாளர்'' என்று அழைத்து வந்தனர். மூன்று ஆண்டுகள் வாசத்திற்குப்பின் தனது மனைவியையும் மகன்களையும் அழைத்துச் செல்வதற்காக அவர் இந்தியா திரும்பினார். அன்றைய பம்பாய் மாகாணத்தில் அப்போது பயங்கரமான பிளேக் நோய் பரவி இருந்தது. அந்த நோய் ராஜ்கோட்டிற்கும் பரவிவிடும் அபாயம் இருந்தது. காந்திஜி உடனடியாக ராஜ்கோட்டில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளத் தாமாகவே முன்வந்தார். ஒவ்வொரு வீட்டையும் பார்வை இட்டு கழிப்பறையைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். துர்நாற்றத்துடனும் பூச்சி புழுக்களுடனும் ஆங்காங்கே தேங்கிக் கிடந்த சாக்கடைகள் அவருக்கு அருவருப்பை ஊட்டின. சில பணக்கார வீடுகளில்கூட பின்புறம் தேங்கிக் கிடந்த சாக்கடைகள் கழிப்பறையாகவும் பயன்படுத்தப்பட்டன. அவற்றிலிருந்து தாங்கமுடியாத துர்நாற்றம் வீசிற்று. அங்கு வசித்த மக்களுக்கு இதைப்பற்றி எவ்வித உணர்வும் இல்லை. தீண்டத்தகாதவர்களாக முத்திரை குத்தப்பட்டிருந்த ஏழை மக்கள் வசிக்கும் பகுதி சுத்தமாக இருந்தது. அங்கு வசித்த மக்கள் காந்திஜியின் வார்த்தைகளை மதித்தனர். சிறுநீருக்கும் மலத்திற்கும் தனித்தனி வாளிகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற காந்திஜியின் அறிவுரை அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ராஜ்கோட்டில் காந்திஜியின் குடும்பம் எல்லோருக்கும் தெரிந்த பிரபலமான குடும்பங்களில் ஒன்று ஆகும். காந்திஜியின் தந்தையும் பாட்டனாரும் பக்கத்துப் பக்கத்து சமஸ்தானங்களில் திவானாகப் பணியாற்றி வந்தனர். கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன் ஒரு சமஸ்தானத்தின் முதல் மந்திரியின் மகன், ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று கழிப்பறையைப் பார்வையிட்டது சாதாரண விஷயம் அன்று. தேவைப்பட்ட சமயங்களில் எல்லாம் மனத்திண்மையையும், துணிவையும் காட்டுவதற்கு காந்திஜி தயங்கியதே இல்லை. பல மேற்கத்திய பழக்க வழக்கங்களை காந்திஜி சாடி வந்தார். ஆனால், அவர் பல தடவைகளில், தான் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் மேலை நாட்டினரிடம் கற்றதாகக் கூறியுள்ளார். அம்மாதிரி ஒரு சுகாதாரச் சூழலை இந்தியாவில் அறிமுகப்படுத்த காந்திஜி விரும்பினார்.
தென் ஆப்பிரிக்காவிலிருந்து இரண்டாவது முறை இந்தியாவுக்கு வந்தபோது கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாட்டில் அவர் கலந்துகொண்டார். தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு இழைக்கப்பட்டுவந்த இன்னல்களை எடுத்துக் கூறுவதற்காக அவர் அங்கு வந்தார். அவர் கண்டது அங்கு நிலவிய வர்ணனைக்கு அப்பாற்பட்ட சுகாதாரச் சீர்கேட்டை! மகாநாட்டிற்கு வந்திருந்த சில பிரதிநிதிகள் தங்களது அறைக்கு வெளியே இருந்த வெராண்டாவையே கழிப்பறையாகப் பயன்படுத்தினர். அதுபற்றி யாரும் எவ்வித ஆட்சேபனையும் எழுப்பவில்லை! காந்திஜி இதைக் கடுமையாக ஆட்சேபித்தார். கட்சித் தொண்டர்களிடம் காந்திஜி வெராண்டாவை சுத்தம் செய்யும்படி கேட்டபோது, ''இது தோட்டிகளின் பணி, எங்களது பணி அல்லவே,'' என்று கூறிவிட்டனர். காந்திஜி ஒரு துடைப்பத்தைக் கையில் எடுத்து, தாமே துப்புரவுப் பணியை மேற்கொண்டார். அப்போது அவர் மேலை நாட்டு உடைகளை அணிந்திருந்தார். காந்திஜி அந்த உடையுடன் தோட்டி வேலை செய்ததைக் கண்டு, தொண்டர்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தார்கள்; ஆனால், ஒரு தொண்டர்கூட காந்திஜியுடன் சேர்ந்து துப்புரவுப் பணி செய்ய முன்வரவில்லை.
பல ஆண்டுகளுக்குப் பின்பு காந்திஜி காங்கிரஸ் கட்சியின் பெருந்தலைவரானார். அப்போது, அவர் காங்கிரஸ் கூட்டங்கள் நடக்கும் இடங்களில் எல்லாம் ஒரு தோட்டிகள் குழு அமைத்து துப்புரவுப் பணி ஆற்றிவந்தார். சில சந்தர்ப்பங்களில் பிராமணர்கள் தோட்டிகளாகப் பணியாற்றினர். ஹரிபுரா காங்கிரஸில் இரண்டாயிரம் ஆசிரியர்களும் மாணவர்களும் தோட்டிப் பணிக்காக விசேஷப் பயிற்சி பெற்று பணியாற்றினர். "தீண்டத் தகாதவர்கள்" என்று முத்திரை குத்தப்பட்ட சில நபர்கள்தான் துப்புரவுப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்பதை காந்திஜி ஒப்புக்கொள்ளவில்லை. தீண்டாமையை இந்தியாவிலிருந்து அகற்றுவதற்கே காந்திஜி பாடுபட்டு வந்தார்.
தென்ஆப்பிரிக்க வெள்ளையர்கள் இந்தியர்களை அவர்களது சுகாதாரக் குறைவான வாழ்க்கை முறைகளின் காரணமாகவே வெறுத்தனர். காந்திஜி இந்தியர்களின் வீடுகளுக்குச் சென்று சுத்தம் மற்றும் சுகாதாரத்தைப் பேணிக்காப்பதின் அவசியத்தைப் பற்றி வலியுறுத்தி வந்தார். இதுபற்றி பொதுக் கூட்டங்களிலும் பேசினார். பத்திரிகைகளிலும் கட்டுரைகள் எழுதி வந்தார். டர்பனில் காந்திஜியின் வீடு மேற்கத்தியப் பாணியில் அமைக்கப்பட்டிருந்தது. குளியலறையிலிருந்து தண்ணீர் வெளியேறுவதற்கான மார்க்கம் இல்லை. சிறுநீர் கழிப்பதற்கென்று பானைகள் பயன்படுத்தப்பட்டன. தன்னுடன் பணியாற்றிய குமாஸ்தாக்கள் பயன்படுத்திய சிறுநீர்ப் பானைகளை காந்திஜியே சில சமயங்களில் சுத்தம் செய்து வந்தார். ஒரு தடவை அவர் அன்னை கஸ்தூர்பாவை சிறுநீர்ப் பானையை சுத்தம் செய்து வைக்கும்படி பணித்தார். தனது மகன்களையும் அவர் அப்பணியில் பழக்கி இருந்தார். ஒருதடவை ஒரு கீழ்ச்சாதி ஊழியர் பயன்படுத்தியிருந்த சிறுநீர்ப் பானையை சுத்தம் செய்ய கஸ்தூர்பா தயங்கிய போது, காந்திஜி அவரைக் கண்டபடி திட்டி வீட்டைவிட்டு வெளியேறும்படி கூறிவிட்டார். காந்திஜியின் நெருங்கிய நண்பர்களேகூட அவர் சபர்மதி ஆசிரமத்தில் ஹரிஜனங்களை அனுமதித்ததைக் கண்டித்து அவரைப் புறக்கணித்தது உண்டு.
தென் ஆப்பிரிக்க சிறைவாசத்தின் போது காந்திஜி தாமாகவே கழிப்பறைகளை சுத்தம் செய்ய முன்வந்தார். அடுத்த தடவை சிறைச்சாலையில் துப்புரவுப் பணி காந்திஜிக்கு வழங்கப்பட்டது.
இருபது ஆண்டுகள் தென் ஆப்பிரிக்க வாசத்திற்குப் பின் தனது 46வது வயதில் 1915ம் ஆண்டு காந்திஜி தனது குழுவினருடன் இந்தியா திரும்பினார். அந்த ஆண்டு ஹரித்வாரில் கும்பமேளா நடந்தது. அங்கு காந்திஜியும் அவரது துப்புரவுப் படையும் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டது. அதே ஆண்டில் அவர் பூனாவில் இந்தியத் தொண்டர் கழகத்தில் அலுவலகத்திற்குச் சென்றார். அந்தக் குடியிருப்பில் இருந்தவர்கள் ஒரு நாள் காலை நேரத்தில் காந்திஜி கழிப்பறைகளைச் சுத்தம் செய்வதைக் கண்டனர். அவர்களுக்கு காந்திஜியின் இப்பணி சற்றும் பிடிக்கவில்லை. காந்திஜியோ இது போன்ற பணிகள்தான் நாட்டை சுயாட்சிக்கு இட்டுச் செல்லும் என்று நம்பினார்.
காந்திஜி பல தடவைகள் இந்தியா முழுவதையும் சுற்றிப் பார்த்திருக்கின்றார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் சுகாதாரக் கேட்டினைக் கண்டார். ரயில் நிலையங்களிலும் சத்திரம் சாவடிகளிலும் இருந்த சிறுநீர்கழிக்கும் இடங்களும் கழிப்பறைகளும் சகிக்க முடியாத துர்நாற்றத்துடன் சுத்தம் செய்யப்படாமல் இருந்தன. கிராமத்து சாலைகளும் சரியாக பராமரிக்கப்படாது இருந்தன. பல புனிதமான தீர்த்தஸ்தலங்களில் தண்ணீர் மிகவும் அசுத்தமாக இருந்தது பற்றி கவலைப்படாமல் ஜனங்கள் அவற்றில் முழுகி எழுந்ததை காந்திஜி கண்டார். நதிக்கரைகளை மக்களே அசுத்தம் செய்தனர். சலவைக்கல் தளத்துடன் அமைந்திருந்த காசி விசுவநாதர் கோயிலும் அசுத்தத்தின் உறைவிடமாகவே விளங்கியது. இவ்வளவு பெரிய புகழ்பெற்ற கோவில்களில் நுழைவதற்கு நாம் ஏன் அசுத்தம் நிறைந்த சந்து பொந்துகளின் வழியாகச் செல்ல வேண்டியுள்ளது என்று காந்திஜி வியப்படைவதுண்டு. ரயில் வண்டிகளிலும் பயணிகள் அசுத்தம் செய்து வந்தது பற்றி காந்திஜி மிகவும் வருந்தினார். இந்தியாவில் நிறையப்பேரிடம் செருப்பு அணியும் அளவிற்கு வசதி இல்லை. ஆனால், வெறுங்கால்களுடன் அவர்கள் அசுத்தம் நிறைந்த தெருக்களின் வழியாக நடந்து செல்ல வேண்டியுள்ளதே என்று காந்திஜி வருந்தினார். பம்பாய் போன்ற பெரிய நகரங்களில் கூடதெருக்களில் நடக்கும்போது வீடுகளிலிருந்து யாரும் தம்மீது துப்பிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன்தான் நடக்க முடிந்தது.
பல நகராட்சிகள் காந்திஜியைப் பேசுவதற்கு அழைப்பது உண்டு. அக்கூட்டங்களில் எல்லாம் "நீங்கள் அகன்ற சாலைகளையும், அழகிய பூங்காக்களையும், ஒளி விளக்குகளையும் அமைத்துள்ளது பற்றி உங்களைப் பாராட்டுகிறேன். ஆனால், சரியான முறையில் கழிப்பறைகளை அமைக்காமலும் தெருக்களை அசுத்தமாகவும் வைத்திருக்கும் நகராட்சிகள் நாட்டுக்குத் தேவை இல்லை" என்று உரையாற்றி வந்தார் காந்திஜி. நகராட்சிகள் தீர்க்கவேண்டிய தலையாய பிரச்சினை சுகாதாரச் சீர்கேடுதான். துப்புரவுப் பணியாளர்களின் வாழ்க்கை பற்றி நகராட்சிகள் அக்கறை காட்டுவதில்லை என்று காந்திஜி வருந்தினார்.
"நீங்களே கைகளில் துடைப்பத்தையும் வாளியையும் தூக்காதவரை உங்களது நகரங்களும் கிராமங்களும் அசுத்தமாகத்தான் இருக்கும்" என்று ஜனங்களிடம் காந்திஜி கூறி வந்தார். ஒரு மாதிரிப் பள்ளியைப் பார்வையிடச் சென்ற காந்திஜி ஆசிரியர்களிடம் "உங்கள் பள்ளி உண்மையிலேயே ஒரு மாதிரிப் பள்ளியாக விளங்க வேண்டுமானால் நீங்கள் மாணவர்களுக்குக் கல்வி புகட்டினால் மட்டும் போதாது, மாணவர்களைச் சிறந்த சமையல்காரர்களாகவும் துப்புரவுப் பணியாளர்களாகவும் உருவாக்க வேண்டும்" என்று கூறினார். மாணவர்களிடம் பேசும்போது "உங்களது சுற்றுப்புறத்தை நீங்கள்தான் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ராணுவத்தில் சேர்ந்து போரில் வீரதீரச் செயல்களுக்காக அளிக்கப்படும் பதக்கத்தைக் காட்டிலும் ஒரு சிறந்த துப்புரவுப் பணியாளன் என்பதற்கான பதக்கம்தான் மேலானது" என்றார் காந்திஜி.
சபர்மதி ஆசிரமத்தின் பக்கத்துக் கிராமங்களில் வசித்த மக்கள் கழிவுகளை மண்ணால் மூடிவைப்பதற்கு மறுத்தனர். "இது தோட்டியின் வேலை. மனிதக் கழிவுகளைக் கண்ணால் பார்ப்பதோ, அதன் மீது மண்ணைப் போடுவதோ பாவச் செயல்'' என்று கிராமவாசிகள் கூறினர். காந்திஜி கிராமங்களின் துப்புரவுப் பணியைத் தாமே முன்னின்று மேற்பார்வை செய்தார். நல்லதோர் முன் உதாரணமாக தாமே கையில் துடைப்பத்தையும் வாளியையும் ஏந்தி பல நாட்கள் கிராமங்களில் துப்புரவுப் பணியை அவர் மேற்கொண்டார். நண்பர்களும் விருந்தினர்களும் அவருடன் சென்றனர். வாளிகளில் கழிவுகளையும் குப்பைகளையும் கொண்டுவந்து குழிகளில் புதைத்தனர். குப்பைகளை அகற்றுவதும் ஒரு அறிவியல் பாடம் என்றே காந்திஜி கருதினார்.
ஆசிரமத்தில் அனைத்து துப்புரவுப் பணிகளையும் ஆசிரம வாசிகளே மேற்கொண்டனர். காந்திஜி அவர்களை வழிநடத்தி வந்தார். வெவ்வேறு நாட்டினரும், வெவ்வேறு மதத்தினர், வெவ்வேறு ஜாதியினர், வெவ்வேறு நிறத்தினர் ஆசிரமத்தில் இருந்தனர். ஆசிரமத்தில் எங்குமே அசுத்தத்தைக் காணமுடியாது. எல்லா குப்பைகளும் பூமியில் புதைக்கப்பட்டன. காய்கறிகள் வெட்டிய பின் எஞ்சிய கழிவுகளும் சாப்பாட்டுக்குப்பின் எஞ்சிய கழிவுகளும் தனியாக ஒரு உரக்குழியில் போடப்பட்டன. மனித கழிவுகளும் தனியாக புதைக்கப்பட்டு சிறிது காலத்திற்குப்பின் நல்ல உரமாகப் பயன்படுத்தப்பட்டது. கழிவு நீர் தோட்டதிற்கு நீர்பாய்ச்சப் பயன்பட்டது. நிலையான சாக்கடை வாய்க்கால்கள் இல்லாமலேகூட ஆசிரமம் சுத்தமாகவும், ஈக்கள் மொய்க்காமலும் இருந்தது. துப்புரவுப் பணிகளைக் காந்திஜியும் சகஊழியர்களும் தாமே செய்து வந்தனர். வாளி, வாய்க்கால் போன்ற அமைப்பிலும் கழிப்பறைகளை காந்திஜி அமைத்திருந்தார். பெருமையுடன் எல்லோருக்கும் தனது கண்டுபிடிப்புகளை அவர் காட்டி வந்தார். ஏழைகளும் பணக்காரர்களும், தொண்டர்களும் தலைவர்களும், இந்தியர்களும் வெளிநாட்டினரும் எவ்விதப் பாகுபாடும் இன்றி அக்கழிப்பறைகளை பயன்படுத்தி வந்தனர். இந்தப் பரிசோதனையின் காரணமாக துப்புரவுப்பணி மீது இருந்த அருவருப்புணர்வு ஆசிரம ஊழியர்கள் மற்றும் பெண்களின் மனதிலிருந்து அகன்று விட்டது.
தனக்கு துப்புரவுப்பணி செய்யும் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் காந்திஜி மகிழ்ச்சி அடைந்தார். மக்களுடைய சுகாதாரத்தின் துலாக்கோல் அவர்கள் பயன்படுத்தும் கழிப்பறைதான் என்பது காந்திஜியின் கருத்து. தனது 76வது வயதில் அவர் பெருமையுடன் இவ்வாறு குறிப்பிட்டார். "நான் பயன்படுத்தும் கழிப்பறை எவ்வித துர்நாற்றமும் இன்றி பரிசுத்தமாக இருக்கிறது. அதை நானே சுத்தம் செய்து வருகிறேன்.'' பல தடவைகளில் அவர் தன்னை ஒரு தோட்டி என்றே கூறிக்கொண்டார். ஒரு தோட்டியாகவே தாம் இருக்க விரும்புவதாகவும் கூறிவந்தார். மிகவும் ஆச்சாரம் பாராட்டிய இந்துக்களிடம் தன்னையும் மற்ற தீண்டத்தகாதவர்களை அவர்கள் ஒதுக்குவது போல ஒதுக்கிவைக்கும்படி கேட்டுக்கொண்டார்.
துப்புரவுப் பணியாளர்கள் வசிக்கும் இடங்களுக்கு அவர் அடிக்கடி விஜயம் செய்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்து வந்தார். அவர்கள் செய்யும் பணி மேலானது என்றும் அதுபற்றி தாழ்வு உணர்வு கொள்ள வேண்டாம் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தி வந்தார். குடிப்பழக்கத்தையும், இறந்த பிராணிகளின் புலால் உண்ணும் பழக்கத்தையும் விட்டு விடும்படி அவர்களைக் கேட்டுக்கொள்வார். காந்திஜி துப்புரவுப் பணியாளர்களின் வேலை நிறுத்தத்தை அவர் ஆதரிக்கவில்லை. அப்பணியாளர்கள் ஒருநாள்கூட தங்களது பணியைச் செய்யத் தவறக்கூடாது என்று கூறிவந்தார்.
ஒரு மாதிரித் துப்புரவுப் பணியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி அவர் ஹரிஜன் பத்திரிகையில் இவ்வாறு எழுதினார். "நல்லதொரு கழிப்பறை எப்படிக் கட்டப்பட வேண்டும்? எப்படி சுத்தம் செய்யப்பட வேண்டும் என்பது பற்றி அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். கழிவுகளிலிருந்து வீசும் துர்நாற்றத்தை எப்படி அகற்றுவது, அதற்காக எந்தப் பொருளை பயன்படுத்தவேண்டும் என்பதும் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். மலஜலத்தை எப்படி உரமாக மாற்றுவது என்பது அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்'' துப்புரவுப் பணி கட்டாயத்தின்பேரில் ஊதியத்திற்காகச் செய்யப்படும் பணி என்ற நிலையை மாற்றி அதை சமுதாயத்திற்கு அவசியமானதோர் பணி என்ற நிலைக்கு உயர்த்த வேண்டும் என்பது காந்திஜியின் அவா.
கதர்ப் பிரச்சாரத்திற்காக காந்திஜி சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த சமயத்தில் அவர் பேசுவதாக இருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் துப்புரவாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காந்திஜிக்கு இவ்விஷயம் தெரியவந்ததும் கோபத்துடன் அவர் கூறினார். ''உங்களுடைய பணமுடிப்புகளையும் பேச்சுக்களையும் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். நான் துப்புரவாளர்கள் வசிக்கும் இடத்திற்குச் சென்று பேசப் போகிறேன். விருப்பம் உள்ளவர்கள் அங்கே வரலாம்!"
காந்திஜி அமரராவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்பாக சில நாட்கள் பம்பாய் மற்றும் டில்லி நகரங்களில் அவர் பங்கி காலனியில் (துப்புரவாளர்கள் வசிக்கும் குடியிருப்பில்) தங்கினார். அவர்கள் இருப்பது போன்ற இடத்திலேயே இருந்து அவர்கள் உண்ணும் உணவையே தாமும் உண்ண விரும்பினார். ஆனால், இதுபோன்ற பரிசோதனைகளைத் தாங்கும் வயது அல்லவே அது! அதன் காரணமாக சில சலுகைகள் அவர்மீது (தொண்டர்களால்) திணிக்கப்பட்டன.
காந்திஜி ஒருமுறை கவர்னர் ஜெனரலைச் சந்திப்பதற்காக சிம்லா சென்றார். தனது சக ஊழியர்களில் ஒருவரை முன்னதாகவே துப்புரவாளர்கள் வசிக்கும் குடியிருப்பிற்கு அனுப்பி இருந்தார். சக ஊழியர், மிருகங்கள் வசிப்பதற்குக்கூட அக்குடி இருப்புக்கள் லாயக்கற்றவை என்று காந்திஜியிடம் தெரிவித்தார். அதைக்கேட்ட காந்திஜி சோகத்துடன் கூறினார் "இன்று நாம் துப்புரவுத் தொழிலாளிகளை மிருகங்களின் நிலைக்குத் தள்ளிவிட்டோம். தனது தன்மானத்தை விற்று அவர்கள் சிறிதளவு சம்பாதிக்கிறார்கள். ஒரு துப்புரவுத் தொழிலாளி உணவ அருந்தும்போது அவனைப் பார்! கழிப்பறைச் சுவர்களின் நிழலில், குப்பை கூளங்களுக்கிடையே கூனிக்குறுகிய வண்ணம் அமர்ந்து உணவு உண்கிறார். ஒருவரது இதயத்தைப் பிளப்புதற்கு இதுவே போதும்!" மனிதக் கழிவுகளைத் தலையில் சுமந்த வண்ணம் ஒரு துப்புரவுத் தொழிலாளி நடந்து செல்வதைப் பார்த்து காந்திஜி ரொம்பவும் சங்கடப்பட்டார். சில எளிய உபகரணங்களின் உதவியுடன் இதைத் தவிர்க்க இயலும் என்று அவர் கூறிவந்தார். அது ஒரு கலை. தன்மீது சிறிதுகூட அசிங்கம் படாவண்ணம் இப்பணியைச் செய்ய முடியும் என்றும் அவர் சொன்னார்.
ஒரு வெளிநாட்டவர் காந்திஜியிடம் ஒரு முறை "உங்களை ஒரு நாளுக்கு (மட்டும்) இந்நாட்டின் கவர்னர் ஜெனரலாக நியமித்தால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டதற்கு "கவர்னர் ஜெனரலுடைய மாளிகையின் அருகே அமைந்துள்ள துப்புரவுத் தொழிலாளிகளின் குடியிருப்பைச் சுத்தம் செய்வேன்'' என்று காந்திஜி பதில் அளித்தார்.
"உங்களை மேலும் ஒருநாள் அப்பதவியில் நீட்டித்தால்?''
"மறுநாளும் அதே பணியைத்தான் செய்வேன்"
- தமிழில்: எம். ஆர். ராஜகோபாலன்

Comments

Most Popular

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர