Skip to main content

பல ரூபங்களில் காந்தி: பணியா | அனு பந்தோபாத்யாயா


காந்திஜி ஒரு தடவை சொன்னார் "நான் ஒரு பணியா. என்னுடைய பேராசைக்கு அளவே கிடையாது". அவர் ஒரு வியாபாரி குடும்பத்தில் பிறந்தவர். தந்தையின் அடிச்சுவட்டைப் பின்பற்றி சுதேச சமஸ்தானம் ஒன்றில் திவானாகப் பணி செய்வதற்கு குடும்பத்துப் பெரியவர்கள் அவரைத் தயார் செய்தனர், காந்திஜியோ திவான் பதவிக்குச் செல்லாமல் பரதேசி கோலம் பூண்டுவிட்டார். இருப்பினும் அவருடைய ரத்தத்தில் வியாபாரத் தந்திரம் ஊறி இருந்தது.
எப்போதுமே, அவர் சிக்கனத்தைக் கடைப்பிடித்து வந்தார். குறைந்த விலையில் தரமான பொருள்களை வாங்குவது அவருக்குக் கைவந்த கலை. பிற்பாடு, அவர் ஆடம்பரப் பொருள்கள் அனைத்தையும் துறந்துவிட்டார். கதர் அரையாடையும் மேலே போர்த்திக் கொள்வதற்கு ஒரு சால்வையுமே அவருடைய உடைகள். கையினால் தயாரிக்கப்பட்ட செருப்பைத்தான் அவர் அணிவார். பல அயிட்டங்கள் நிறைந்த சாப்பாட்டை அவர் சாப்பிடுவதில்லை. ஒன்றிரண்டு சப்பாத்திகள், சாதம், வேகவைக்கப்பட்ட காய்கள், பச்சை இலைகள், ஆட்டுப்பால், வெல்லம் மற்றும் தேன் தான் அவர் ஏற்றுக்கொண்ட உணவுப் பொருள்களின் மொத்தப் பட்டியல். இப்பட்டியலிலிருந்து நாள் ஒன்றுக்கு ஐந்து அயிட்டங்களுக்கு மேல் உண்ணமாட்டார்.
நாள் ஒன்றுக்கு ஒரு அணா (ஆறு பைசா) அல்லது அதற்குக் குறைவாக ஊதியம் பெறும் கோடிக்கணக்கான ஏழைகள் வசிக்கும் நாட்டில் ஏராளமான பணத்தை நகைகளாகவும் அலங்காரப் பொருள்களாகவும் குவித்து வைப்பது பெரும் குற்றமாகும் என்று காந்திஜி கருதினார். அவரது மனனவியிடம் ஆபரணம் எதுவும் கிடையாது.
தன்னுடைய நான்கு மகன்களையும் அவர் பள்ளிக்கோ கல்லூரிக்கோ அனுப்பவில்லை. நிறைய பணச் செலவு செய்து தங்களது மக்களைப் படிக்கவைக்க இயலாத நிலையில் நாட்டின் கோடிக்கணக்கான ஏழை மக்கள் இருந்த நிலையில் தனது மகன்களின் படிப்பிற்காகப் பணம் செலவழிப்பதை அவர் விரும்பவில்லை. தானே தன் மகன்களுக்கு ஆசானாக மாறினார். வீட்டில் உதவிக்கு வேலைக்காரர்களை வைத்துக்கொள்ளவில்லை எல்லா வேலைகளையும் தாமே செய்தார். அவர் மண் குடிசைகளில் வசிக்க விரும்பினார். இந்தியாவில் பல தடவைகள் ரயில் பயணம் மேற்கொண்ட அவர் எப்போதும் மூன்றாம் வகுப்பிலேயே பயணம் செய்தார். பயணத்தின்போது அவரது மாற்றுடைகள் மற்றும் சில காகிதங்கள் அடங்கிய பை அவரது தலையணையாகப் பயன்பட்டது. அவரது படுக்கையில் சில சுதேசிக் கம்பளிகளும் கதர் விரிப்புகளும் இருந்தன. ஒரு முறை கொசுவலையைத் தவிர்க்க அவர் முயற்சித்தார். உடல் முழுவதையும் படுக்கை விரிப்பினால் மூடிக்கொண்டு முகத்தின் மீது மண்ணெண்ணையைப் பூசிக்கொண்டார். கொசுவலை வாங்க இயலாத ஏழை மக்கள் அப்படித்தான் செய்கிறார்கள் என்று அவர் கேள்வியுற்றிருந்தார்.
ஆங்கிலேயர்கள் உண்மையிலேயே இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்கப்போகிறார்களா என்பதைத் தெரிந்துகொள்வதற்காக அவர் இங்கிலாந்திற்கு நான்காவது முறையாகக் கப்பல் பயணம் மேற்கொண்டார். குறைந்த கட்டணத்துடன் கூடிய கீழ்வகுப்பிலேயே அவர் பயணம் செய்தார். உடன் பயணம் செய்த சக ஊழியர்கள் பெட்டி பெட்டியாக உடைகளையும் ஏனைய பொருட்களையும் கொண்டு வந்தனர். காந்திஜியோ அதனைத் தடுத்து ஒரு சில இந்திய உடைகளை மட்டும் (வேஷ்டி, சட்டை, கால் செருப்பு) கொண்டுவந்தால் போதும் என்று கூறிவிட்டார். பயணத்தின்போது ஒரு அன்பர் ரூ. 700 பெறுமான சால்வை ஒன்றை காந்திஜிக்கு அளித்தார். காந்திஜி அதை ஏலம் விட்டபோது ரூ.7,000 கிடைத்தது. "ஏழை மக்களின் ஒரே பிரதிநிதியாய் இதைத்தான் செய்ய இயலும்" என்று காந்திஜி கூறினார். ''நண்பர்களால் எனக்குப் போர்த்தப்படும் சால்வைகளைக் கொண்டு ஒரு கடையையே திறந்திருக்கலாம் போல் இருக்கிறது'' என்று அவர் சொல்வது உண்டு.  இம்மாதிரி விற்பனையில் கிடைத்த பணத்தை அவர் ஹரிஜனங்களின் மேம்பாட்டிற்காகச் செலவிட்டார்.
காந்திஜி பிரான்ஸ் நாட்டில் வந்திறங்கியபோது அந்நாட்டினர் அவரது 'அரையாடையைக்' கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காந்திஜி சிரித்த வண்ணம் கூறினார்: ''உங்கள் நாட்டினர் தேவைக்கு அதிகமான ஆடைகளை அணிகின்றனர். நான் தேவைக்கு சற்றுக் குறைவான ஆடைகளை அணிகிறேன். அவர் இதே உடையில் லண்டன் சென்று இங்கிலாந்து நாட்டின் மன்னரைச் சந்திப்பாரா? அங்கு நிலவும் குளிரிலும் மற்றவர்கள் அனைவருமே அதற்கேற்ப உடைகளையும் அணிந்திருக்கும் சூழ்நிலையிலும்கூட அவரது உடையில் மாற்றம் இருக்காதா? என்று சிலர் கேட்டனர். காந்திஜியின் சிரிப்பில் அப்போதும் மாற்றம் இல்லை. அவர் கூறுவார்: "மன்னரிடம் உள்ள உடைகள் இருவருக்குமே போதுமானவை.அவர் வட்டமேஜை மகா நாட்டில் பங்கேற்றார். ஆக்ஸ்ஃபோர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களுக்கு விஜயம் செய்தார். இம்மூன்று சந்தர்ப்பங்களிலும் அவர் அரையாடை, ஒட்டுத் தையல் போட்ட சால்வை மற்றும் சாதாரண செருப்பு மட்டுமே அணிந்திருந்தார். சர்ச்சில் கோபத்துடன் "இந்தியாவின் அரை நிர்வாணப் பக்கிரி" என்று காந்திஜியைக் குறிப்பிட்டார். காந்திஜியோ தாம் அப்பட்டத்தைப் பற்றி பெருமைப்படுவதாகக் கூறினார். அவரது சாப்பாட்டுச் செலவு நாள் ஒன்றிற்கு 12 அணாவைத் (75 பைசா) தாண்டவில்லை.
பொருள்களை எந்த விதத்திலும் வீணடிப்பது காந்திஜிக்குப் பிடிக்காத ஒன்று. கிழிந்துபோன பழைய துணிகளை விற்றுவிடலாம் என்பார். பல் துலக்கிய பின் தூக்கி எறியும் குச்சிகளைக்கூட கழுவி வெயிலில் காயவைத்து அடுப்பெரிக்க பயன்படுத்தலாம் என்பார். 24 மணி நேரத்திற்கும் அவர் நிகழ்ச்சி நிரல் வைத்திருந்தார். எந்த சமயத்திலும் எந்த பணிக்கும் அவர் நேரம் தவறியதில்லை. அதே சமயம் எப்போதும் பதற்றமோ பரபரப்போ அடைவதில்லை. வார்த்தைகளையும் அளந்தே பயன்படுத்துவார். அவர் எவ்வளவோ கூட்டங்களில் பேசியுள்ளார். எவ்வளவோ கட்டுரைகளையும் எழுதியுள்ளார். மிகையான அல்லது தேவையற்ற சொற்களைப் பயன்படுத்தியதில்லை. அவருக்கு வரும் கடிதங்களில் காலியாக இருக்கும் பக்கங்களையும் கடிதம் வைக்கப்படும் உறைகளையும் அவர் பத்திரப்படுத்தி வைப்பார். அவற்றின் அளவுகளுக்கேற்ப தனித்தனியாக காகிதங்களைக் கட்டி வைத்திருப்பார். அவற்றையே அவர் கடிதம் எழுதப் பயன்படுத்தினார். அவரது முக்கியமான அறிக்கைகள், கவர்னர் ஜெனரலுக்கும் இங்கிலாந்தின் பிரமுகர்களுக்கும் பிரதமருக்கும் அவர் எழுதிய கடிதங்கள் எல்லாமே இந்த ஒரு பக்கக் காகிதங்களில்தான் எழுதப்பட்டன. பள்ளி மாணவன் அவருக்குப் பரிசாக அளித்திருந்த ஒரு சிறிய பென்சிலும் ஒரு மாக்கல்லும் ஒரு முறை காணாமல் போய்விட்டன. நீண்ட நேரம் தேடி அவற்றைக் கண்டுபிடித்த பின்புதான் அவர் அமைதியானார். சுதந்திரத்திற்குப்பின் மந்திரிகளும், நகராட்சிகளில் முக்கிய பதவி வகித்தவர்களும் சொந்தக் கடிதப் போக்குவரத்திற்கு அலுவலகக் கடிதத்தாளைப் பயன்படுத்துவதையும் அந்த கடிதத்தாள்கள் ஆடம்பரமான முறையில் அதிகச் செலவில் தயாரிக்கப்பட்டிருந்ததையும் அவர் கண்டனம் செய்தார். வெள்ளைக்காரர்களின் பழக்க வழக்கங்களைக் காப்பி அடிப்பதால் நாட்டிற்கு கேடுதான் விளையும் என்று கூறினார். ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்துடன் ஆண்டு அடிமைகளின் மனத்தில் அச்சத்தை ஏற்படுத்த விரும்பினார்கள். அந்த நோக்கில் அவர்கள் கையாண்ட பழக்கங்களை நாம் கைவிட்டுவிட வேண்டும். கையினால் தயாரித்த காகிதத்தில் செய்த கடிதத் தாள்களைப் பயன்படுத்த வேண்டும். அவற்றில் அலுவலகங்களின் பெயர்கள் ஹிந்தியிலும் உருதுவிலும் அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும். மக்களுக்கு சேவை செய்பவர்கள் விலை உயர்ந்த அன்பளிப்புகளையும், பூங்கொத்துக்களையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது.
ஏழைகளுக்காகத் தாம் வசூலித்த ஒவ்வொரு பைசாவையும் அவர் சேமித்து வைத்தார். பணவிடை (மணியார்டர்) கமிஷன், வங்கியில் வரைவோலை (டிராஃப்ட்) மற்றும் காசோலைக்கான கமிஷன் செலவு இவற்றையும் அவர் தவிர்க்க முயன்றார். தொண்டர்களும் சக ஊழியர்களும் பணத்தை வீண்செலவு செய்தால் அவர் கண்டனம் தெரிவிப்பார். 1896ம் ஆண்டு அவர் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்த சமயம் அவருக்கு ரூ.1000 பணமுடிப்பு தரப்பட்டது. அதற்கு அவர் விபரமான கணக்குகளை ஒப்படைத்தார். அதில் சில அயிட்டங்கள் இப்படி இருந்தன: டிராம் வாடகை ஒரு அணா, தண்ணீர் ஆறு பைசா, வேடிக்கை காட்டியவனுக்கு ஆறு பைசா, மந்திரவாதிக்கு எட்டணா, கொட்டகைக்கு (தியேட்டர்) நான்கு ரூபாய்.
நமது போராட்டங்களின்போது ஆடம்பரமும் வீண் செலவுகளும் அறவே கூடாது என்று கூறி வந்தார் காந்திஜி. ''ஒவ்வொரு ஊருக்கும் நான் விஜயம் செய்யும் சமயங்களில் ஊர் மக்கள் விலை உயர்ந்த ஆரஞ்சுப் பழங்களையும் திராட்சைப் பழங்களையும் ஏன் கொண்டுவருகிறார்கள்? நான் ஒரு டஜன் கேட்டால் பத்து டஜன் பழம் ஏன் வருகிறது? நாம் ஏழை மக்களின் அறங்காவலர்களாக விளங்க வேண்டும்" என்று கூறினார் காந்திஜி. அவரது புத்திமதி: உன்னால் நடந்து செல்லக்கூடிய தூரப் பயணத்திற்கு வாகனங்களை பயன்படுத்தாதே.அவர் இதைத் தன் வாழ்க்கையில் கடைப்பிடித்து வந்திருக்கிறார். தென் ஆப்பிரிக்கா வாசத்தின் போது பல நாட்கள் பண்ணையிலிருந்து பக்கத்து ஊருக்கும் கடைகளுக்கும் நடந்தே சென்று திரும்புவார். இதற்காக அவர் நடந்த தூரம் 42 மைல்கள் (67 கிலோ மீட்டர்). அப்படி நடந்து சில ரூபாய்களைச் சேமித்தார். வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நடந்தே சென்று திரும்புவார்.
ஒரு தடவை காந்திஜி ''இனவெறி நாட்டுப்பற்றுக்கு அவசியம்தானா?" என்ற தலைப்பில் ஒரு கூட்டத்தில் பேசினார். அக்கூட்டத்திற்கு டிக்கெட் வாங்கியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அதன்மூலம் கிடைத்த பணம் தேசபந்து நினைவு நிதிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. "உண்மைதான் கடவுள்'' என்ற தலைப்பில் காந்திஜியின் பேச்சு முதன் முறையாக இசைத்தட்டில் பதிவு செய்யப்பட்டது. இசைத்தட்டு கம்பெனி காந்திஜிக்கு ரூ. 65,000 வழங்கியது. அவர் அரை மணிநேரத்தில் அவ்வளவு பெரிய தொகையை சம்பாதித்துவிட்டார்! அதை ஹரிஜன நல நிதிக்கு வழங்கினார்.
காந்திஜிக்குப் பணத்தை சம்பாதிக்கவும் தெரியும், சேமிக்கவும் தெரியும். அரசு அவரது புத்தகங்களுக்குத் தடைவிதித்தபோது தாமே தமது புத்தகங்களை விற்பனை செய்தார். நான்கு அணா (25 காசு) விலையுள்ள 'இந்திய சுயராஜ்யம்' என்ற புத்தகம் ஐந்து ரூபாய், பிறகு பத்து ரூபாய் பிறகு ஐம்பது ரூபாய்க்கு விலை போயிற்று. அவரது புகழ்பெற்ற தண்டி யாத்திரையின்போது தயாரிக்கப்பட்ட உப்பிலிருந்து அரைத் தோலா (அரை ரூபாய் எடை) ரூ. 525க்கு விற்கப்பட்டது. அப்போது அரைத்தோலா தங்கத்தின் விலை 40 ரூபாய்தான். உலகில் எங்குமே எந்த வியாபாரியும் உப்பை அந்த விலைக்கு விற்றதில்லை.
ஜனங்களிடம் தனது கையெழுத்தைப் பெறும் ஆவல் இருந்தது என்பது அவருக்குத் தெரியும். ஒவ்வொரு கையெழுத்திற்கும் அவர் ஐந்து ரூபாய் வசூல் செய்தார். ஆயிரக்கணக்கில் நன்கொடை கொடுத்தவர்களுக்குக்கூட அவர் விதிவிலக்கு அளிக்கவில்லை. அவர்களும் கையெழுத்திற்கு 5 ரூபாய் கட்ட வேண்டி இருந்தது. கதரின் விற்பனையை அதிகரிப்பதற்காக அவரே விற்பனையில் ஈடுபட்டார். வலது கையில் துணியின் அளவுகோலையும் இடது கையில் கதர்த் துணிகளையும் சுமந்த வண்ணம் பில்களில் கையெழுத்திட்டு வெகு வேகமாக விற்பனை செய்தார். 50 நிமிஷங்களில் ரூ.500 மதிப்புள்ள கதர் விற்றுத் தீர்ந்துவிட்டது. (அக்காலத்தில் ஒரு மீட்டர் துணி 10, 12 பைசாவுக்குக் கிடைக்கும். அப்படி என்றால் ரூ.500க்கு அவர் விற்ற துணியின் அளவு 4000 மீட்டர் இருக்கும்). மற்றொரு சந்தர்ப்பத்தில் அவர் ரயில் பயணம் மேற்கொண்டபோது ரயில் நிலையங்களில் கதர் விற்பனை செய்தார். கதர் விற்பனைக்காக பொருட்காட்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்த சமயம் ஒரே வாரத்தில் ரூ. 4000க்கான கதர் விற்பனை செய்யப்பட்டது. அப்போது (அவ்விடத்தில்) ஆண்டு ஒன்றின் மொத்த விற்பனை ரூ. 6,000ஆக இருந்தது. இன்னொரு காதி பண்டாரில் அவரது முயற்சி காரணமாக வருடாந்திர விற்பனை ரூ. 48லிருந்து ரூ.5,312 ஆக அதிகரித்தது. காங்கிரஸ் கட்சி மாநாடுகள் நடக்கும்போது கைவினைப் பொருள்கள் கண்காட்சியும் நடைபெறுவது வழக்கம். தொண்டர்கள் அனைவரையும் கைவினைப் பொருள்கள் விற்பனையை அதிகரிப்பதற்காக விற்பனை ஊக்குவிப்போராகவும் பணியாற்றும்படி கேட்டுக்கொண்டார்.
அயல்நாட்டுத் துணியை பகிஷ்கரிக்கும்படி அவர் கொடுத்த வேண்டுகோள் காரணமாக வங்காளத்தில் மட்டும் அத்துணியின் விற்பனை பாதியாகக் குறைந்துவிட்டது. மற்ற மாநிலங்களிலும் இதே நிலைதான். மொத்தத்தில் அயல்நாட்டு வியாபாரமே ஸ்தம்பிக்கும் நிலைக்கு வந்துவிட்டது. இந்தியாவின் அதிகரிக்கும் தேவைகளுக்கேற்ப எல்லாப் பொருள்களும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறி வந்தார். இந்தியப் பொருள்களின் விற்பனையை பாதிக்காத பட்சத்தில் இங்கிலாந்துடன் வர்த்தகத்தை அனுமதிக்கலாம் என்று அவர் கூறி வந்தார். கதர்த் துணியை மட்டும் அணிந்து ஏனைய தேவைகளுக்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்துவதை அவர் எதிர்த்தார். வெளிநாட்டுப் பொருள்களை நாம் பயன்படுத்துவதன் காரணமாக இந்தியாவின் பெரும் வியாபாரிகளும் தொழில் அதிபர்களும் லாபம் அடைகிறார்கள். இதன் மூலம் ஆங்கிலேயர் நம்மைக் கொள்ளை அடிக்கும் பணிக்கு இந்திய வியாபாரிகள் துணை போகிறார்கள். நாட்டில் அனைவரும் கதர் அணிந்து கிராமங்களில் தயாராகும் ஏனைய பொருள்களையும் பயன்படுத்தி நாட்டின் செல்வம் சூறையாடப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.
அரசு, கதர் - கிராமத் தொழில் கொள்கைக்கு எதிர்ப்பாக இருந்ததால் அரசிடமிருந்து சலுகையோ உதவித்தொகையோ அவருக்குக் கிட்டவில்லை. பெரும்பாலான மக்களும் அசட்டையாகவே இருந்தனர். அந்தச் சூழ்நிலையிலும் மக்கள் தங்களது உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகளுக்கான பொருள்களை தாங்களே உற்பத்தி செய்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தி வந்தார். அகில இந்திய நூற்போர் சங்கமும் அகில இந்திய கிராமத் தொழில்கள் சங்கமும் அமைக்கப்பட்டு நாடு முழுதும் அவற்றின் கிளைகளும் இயங்கின. வார்தாவில் இருந்த மகன் அருங்காட்சியகம் இப்பணிகளின் மையமாகத் துலங்கியது. நூற்பு, நெசவு, காகிதம் தயாரித்தல், தோல் பொருள்கள் தயாரிப்பு, எண்ணெய் ஆட்டுதல், அரிசி அரவை, சோப் தயாரிப்பு, தேனீ வளர்த்தல், தச்சு மற்றும் கொல்லு வேலைகள் ஆகிய எல்லாப் பணிகளுமே அங்கு மேற்கொள்ளப் பட்டன. எப்படி ஒருவனது சொந்தத் தோட்டத்தில் விளைந்த தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவு விலை குறைவாக இருக்குமோ அப்படியே ஒருவன் தன் கையினால் நூற்று தன் கையினால் நெசவு செய்த துணியும் விலை குறைவாகத்தான் இருக்கும் என்று அவர் கூறிவந்தார். "வாழ்க்கையில் பணம் பிரதானமானது அல்ல. வேலையின்மை காரணமாக மக்கள் சோம்பித் திரிவதுதான் எனக்குக் கவலை தருகிறது'' என்பார் அவர். நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு பொருளாதாரம் பற்றிய நமது பார்வையில் மாற்றம் வரவேண்டும் என்று எண்ணினார். அவரது வேண்டுகோள் என்னவெனில் "நாம் ஏராளமான உணவுப் பொருள்களை உற்பத்தி செய்தும்கூட கோதுமையை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகிறோம். நன்கு பாலிஷ் செய்யப்பட்ட சத்தில்லாத அரிசியையும் சத்துள்ள வெல்லத்திற்கு பதில் சத்துக் குறைவான வெள்ளை ஜீனியையும் சாப்பிடுகிறோம். சற்று குறைந்த விலையில் சத்தில்லாத பொருள்களை வாங்கி நம் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்கிறோம். கிராமத்தில் எண்ணை ஆட்டுபவர்களுக்கு நாம் ஆதரவு கொடுக்காமல் விரட்டிவிட்டோம். இன்றைய கிராமவாசிகள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த கிராமவாசிகளைக் காட்டிலும் அறிவிலும் தன்னம்பிக்கையிலும் குறைந்தவர்களாகவே காணப்படுகிறார்கள். அவன் நிறைய பொருள்களை இழக்கிறான். பதிலுக்கு அவன் பெறுவது மிகவும் குறைவு. எனது திட்டங்களை எல்லோரும் மேற்கொண்டால் நகரங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் கிராமங்களில் உற்பத்தி செய்யப்பட்டு கிராம வாசிகளின் இழப்பு தவிர்க்கப்படும்.'' ஜனங்களை அவர்களே நெல்லிலிருந்து கைக்குத்தல் அரிசி தயாரிக்கும்படியும் கோதுமையை தங்களது வீடுகளிலேயே திரிகையில் அரைத்து மாவு தயாரித்துக் கொள்ளும்படியும், ஜீனிக்கு பதிலாக வெல்லத்தை பயன்படுத்தும்படியும், தங்களுக்குத் தேவையான துணிகளைத் தாங்களே தயாரித்துக்கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டார்.
கதர்த்துணி மில் துணியுடன் போட்டி போட முடியும் என்பதை மறந்துவிடும்படி காந்திஜி நாட்டு மக்களிடம் கூறினார்: மில் சொந்தக்காரர்கள் போட்டிக்காக எப்படியும் துணியின் விலையைக் குறைக்கவே முயற்சிப்பார்கள். நாம் நேர்மையான வழியில் சென்று கதர் ஊழியர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும். இல்லாவிடில் நாம் நம்மை அறியாமலேயே கதர் ஊழியர்களைச் சுரண்டிய குற்றத்திற்கு ஆளாவோம்." குடிசைத் தொழிலில் காகிதம் தயாரித்துக்கொண்டிருந்த ஒரு நபர் தொழிலாளர்களுக்கு ஆறு பைசா மட்டுமே ஊதியம் வழங்கி காகிதத்தைக் குறைந்த விலைக்கு விற்பதாகக் கூறினார். குறைந்த விலைக்கு அவரிடம் தன்னால் காகிதம் வாங்க இயலாது என்று காந்திஜி கூறிவிட்டார்.
விவசாயிகளையும் கிராமத்து கைவினைஞர்களையும் ஒட்டுண்ணி போல் உறிஞ்சி வாழ்ந்துகொண்டிருந்த இடைத்தரகர்களை அகற்றிவிட அவர் விரும்பினார். பயிர்களை உற்பத்தி செய்து வரும் விவசாயிகளுக்கு நியாயமான வருவாய் கிடைக்கவில்லை என்ற உண்மை - அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. நுகர்வோர் ஒரு தானியத்திற்குக் கொடுக்கும் விலையில் ஒரு சிறிய பங்கே விவசாயியைச் சென்றடைகிறது. அவர்களது (விவசாயிகளது) பிரச்சினை தானியங்களின் குறைந்த விலை அல்ல. இடைத்தரகர்கள்தான். உணவு மற்றும் துணிகளின் விலைகளை சட்டத்தின் மூலம் கட்டுப்பாட்டில் வைப்பதையும் அவர் விரும்பவில்லை. அப்படிச் செய்வதினால் கறுப்புச் சந்தை பெருகி பல வியாபாரிகள் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள். அவர் மக்களை ஏமாற்றிப் பணம் குவிக்கும் வியாபாரிகளைச் சாடினார். தவறான முறையில் சம்பாதித்த பணத்தின் ஒரு பகுதியை தர்ம காரியங்களுக்குச் செலவிடுவதன் மூலம் அவர்கள் பாவத்திலிருந்து தப்பிவிட முடியாது என்றார். வியாபாரிகளைக் கண்டித்து இவ்வாறு கூறினார்: பெரும் வியாபாரிகளும் முதலாளிகளும் ஆங்கிலேய அரசாங்கத்திற்கு எதிராகக் குரல் எழுப்புகிறார்கள். ஆனால், உண்மையில் அந்த அரசாங்கத்துடன் ஒத்துழைக்கிறார்கள். ஆங்கிலேய அரசாங்கத்திற்கு 95 சதவீதம் பங்கும் இந்திய வியாபாரிகளுக்கு 5 சதவீதமும் கிடைக்கிறது. சுதேசி இயக்கத்தின் தோல்விக்குக் காரணம் இந்திய வியாபாரிகள் வெளிநாட்டுச் சரக்குகளைப் பொய்யாக இந்திய சரக்குகள் என்று முத்திரை குத்தி விற்பனை செய்ததுதான். இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்புக்கு வியாபாரிகள்தான் காரணம். அதே வியாபாரிகளைக் கொண்டு இந்தியாவை முன்னேற்றப் பாதையில் நாம் கொண்டு செல்ல வேண்டும்
- தமிழில்: எம். ஆர். ராஜகோபாலன்

Comments

Most Popular

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.