Skip to main content

பூதான உதயம் - 3 | வினோபா பாவே

என் பணி சமமாக்குவதே
ஒரு விஷயம் நினைவிலிருக்க வேண்டும். நாம் ஏற்றுள்ள பணி எவரையும் எதிர்ப்பதற்காகவல்ல. சர்வேஷாம் அபி ரோதேன பிர்ம கர்ம ஸமாரபே’ (பிர்ம்மகர்மம் அல்லது கடவுளின் பணி எவரையும் எதிர்த்துத் தோன்றாது). நாம் ஏற்றுள்ளது கடவுள் பணியாகையால் இதில் எவரையும் நாம் எதிர்க்கவில்லை. இதில் அனைவரின் நன்மையும் பொருந்தியிருக்கிறது. இதில் ஒவ்வொருவர் மனத்தையும் மற்றவர் மனங்களுடன் இணைக்கும் முயற்சியுள்ளது. ஆகையால் இதில் எல்லா அரசியல் கட்சியினரும் கலந்துகொள்வார்களென்பது என் நம்பிக்கை. மக்களனைவரின் நன்மைக்காகவே இவ்வேலை நடக்கிறதென்று எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு இடத்தில் கம்யூனிஸ்டுகள் பாபா செய்யும் இந்த வேலை பணக்காரர்களின் நன்மைக்காக நடக்கிறதென்று சொன்னார்கள். இது நடந்தது மூன்று வருஷங்களுக்கு முன்பாகும். இப்பொழுதோ கம்யூனிஸ்டுகளின் மனமும் நமக்குச் சாதகமாய் மாறியுள்ளது. நாம் ஏழைகளுக்காக வேலை செய்வதால் அனைவரின் மனமும் நமக்கு அனுகூலமாயிருக்குமென்று நான் முதலிலிருந்தே சொல்லிவந்தவன். ஆனால் பாபா பணக்காரர்களின் ஏஜெண்ட் என்ற இந்தப் புதிய குற்றச்சாட்டு என் காதில் விழவே எனக்குப் பெருமகிழ்ச்சியுண்டாயிற்று. ஆனால் நான் எத்தகைய ஏஜெண்ட்? இந்த ஏஜெண்டின் ஒரு கையில் பணக்காரர்களின் நன்மையிருந்தால் மறு கையில் அவன் ஏழைகளின் நன்மையையும் வைத்திருக்கிறான். இவன் இருவரையும் இணைக்கும் பாலம் போன்றவன். பாலம் இக்கரையிலுள்ளவர்களை அக்கரையிலும் அக்கரையிலுள்ளவர்களை இக்கரையிலும் கொண்டு சேர்ப்பதைப் போல பாபா ஏழைகளைத் தனவான்களாகவும் பொருள் படைத்தவர்களை எளியோராகவும் செய்வான். இருவரையும் ஒரே தளத்தில் கொணர்ந்து நிறுத்தி பரஸ்பரம் அன்புகொள்ளச் செய்து தான் புரோகிதனாயிருந்து இருவருக்கும் மணம் முடித்து வைத்துவிட்டு அவன் நடையைக் கட்டிவிடுவான். பிறகு அவன் அவர்களிடம் இனி நீங்கள் அன்புடன் உங்கள் காரியங்களை நடத்திக்கொண்டு போங்களென்று சொல்லுவான். இவ்வாறு இந்த இயக்கம் மக்களின் மனத்தை இணைப்பதற்கெனத் தோன்றியதாகும். 
எனது என்ற பற்றை விடுங்கள்
இந்தியா மிகவும் பெரிய தேசம், இதன் சக்தி ஒற்றுமையிலேயே அமைந்திருக்கிறது. நாம் முழு மனதுடன் ஒன்றுசேர்ந்துவிடுவோமாயின் நம் சக்தி பெரிதும் வளர, நம்மை யாரும் அசைக்க முடியாத நிலையை எய்துவோம். ஆனால் நம் மனம் ஒன்றுசேராவிடில் நம் ஜனத்தொகையின் பெருக்கமும் நிலத்தின் பெரும் பரப்புமே நமக்கு யமனாகிவிடும். நான் பணக்காரர்களிடம் நிலம் பெறுகிறேனென்றால் அவர்களுக்கு உதவுவதாகவும் பெற்ற நிலத்தை எளியோருக்கு வழங்கும்பொழுது அவர்களுக்கு உதவுவதாகவும் எண்ணுகிறேன். ஏழைக்கும் தன் கையகலக் கோவணத்தில் பற்றுண்டு. உடைமை உணர்ச்சி அவனுக்கும் இல்லாமலில்லை. இதனால் நான் ஏழை எளியோரிடமும் நீங்கள் உங்கள் குடிசைகளிடம் கொண்டுள்ள பற்றைத் துறந்துவிடுங்களென்கிறேன். தனவான்களும் தம் மாட மாளிகைகளிடம் கொண்டுள்ள பற்றை விடவேண்டிவரும். ஆனால் ஏழைகளாகிய நீங்கள் உங்கள் குடிசைகளின் பற்றை விட மறுத்தால் அவர்களும் தம் மாளிகைகளைப் பற்றிக்கொண்டுதானிருப்பார்கள். ஏழை, பணக்காரரென்று இரண்டு இனங்கள் இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். இருவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களே. தன் உடைமையென்று ஒன்றைக் கொண்டு விடாப்பிடியாய் அதைப் பற்றிக்கொண்டிருப்பவர்பெரியவர்களோ சிறியவர்களோ பணக்காரரோ ஏழையோஅனைவரும் ஒரே இனத்தவரே.
கடவுள் காற்றையும் நீரையும் சூரிய வெளிச்சத்தையும் அனைவருக்குமென உண்டாக்கியிருப்பதைப் போல நிலத்தையும் எல்லோருக்குமென்றே சிருஷ்டித்திருக்கிறார் என்று நான் சொல்லுகிறேன். எனக்கு நல்ல காற்று கிடைக்கிறது; அதனால் உங்களுக்கும் ஒன்றும் கேடு நேருவதில்லை. உங்களுக்கு நல்ல காற்று கிடைப்பதனாலும் எனக்குக் கேடில்லை. ஆனால் ஒருவருக்கு நல்ல காற்று கிடைக்கும் காரணத்தால் இன்னொருவன் தீய காற்றில் இருக்க நேர்ந்தாலும் ஒருவனுக்கு நல்ல நீர் கிடைக்கவேண்டி இன்னொருவன் அழுக்கு நீரைப் பருக நேர்ந்தாலும் பேராபத்தாய்விடும். ஆகையால் சிருஷ்டியிலுள்ள சக்திகளனைத்தும் அனைவருக்குமென அமைந்தவையாகையால் அதற்கேற்ப நாம் நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.
மறுபடியும் ஆந்திரம் வருவேன். இவ்விரண்டு மாதங்களுள் நீங்களனைவரும் ஒன்றுசேர்ந்து பூமிதானப் பணியில் முனைந்து இறங்கி இந்த கோவர்த்தன மலையைத் தூக்கவேண்டுமென்பது என் விருப்பம். கோவர்த்தன மலையைத் தூக்குகிறவன் தூக்கப்போகிறான், நாம் தூக்கப்போவதில்லை. ஆனால் நம் அனைவரின் கோல்களும் அதைத் தாங்கும் பொழுதுதான் கிருஷ்ண பகவான் அதைத் தூக்கிப்பிடிப்பார். ஆகையால் ஆந்திர தேசத்தில் பூமிதான யக்ஞத்திற்கு நிலமளிக்காதவர்களோ சம்பத்து தான யக்ஞத்திற்குப் பொருள் தராதவர்களோ எவரும் இருக்கலாகாது என்பது என் விருப்பம். உங்களிடமிருந்து தொடங்கி, அண்டை அயலில் உள்ளவர்களை அன்புடன் அணுகிக் கேட்பீர்களாயின் அவர்கள் கொடுத்துக்கொண்டு வருவார்கள். யாரையும் எவ்வகையிலும் நிர்ப்பந்தப்படுத்தத் தேவையில்லை. நிர்ப்பந்தம் அறவே கூடாது. இனிமையுள்ளதும் நல்ல விளைவுள்ளதுமான பொருளைப் பற்றி நாம் மக்களுக்கு விளக்கி மட்டும் சொல்லுவோமாயின் அவர்கள் அதைப் புரிந்துகொள்ளுகிறார்கள்
சர்வோதய நூல்களை நீங்கள் அனைவரும் படிக்கவேண்டுமென்பது என் விருப்பம். சர்வோதய தத்துவங்களை நீங்கள் நன்கு சிந்திக்கவும் ஆராயவும் வேண்டும். ஒவ்வொரு நகரிலும் கிராமத்திலும் படிக்கவும், படித்து விளக்கவும் ஏற்பாடு இருக்கவேண்டும்.

- நிறைவு

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந...

சிறுகதை என்றால் என்ன? | க. நா. சுப்ரமண்யம்

சி றுகதை என்றால் என்ன ? உருவத்தால் சிறியதாக இருக்கவேண்டும் என்றும் , கதையாக இருக்கவேண்டும் என்றும் சட்டென்று பதில் கூறிவிடலாம். ஓரளவு திருப்தி தருகிற பதில் மாதிரித்தான் இருக்கிறது. ஆனால் யோசித்துப் பார்க்கும்போது தோன்றுகிறது - உருவத்தில் சிறியது என்றால் எவ்வளவு சிறியது என்றும் , கதை என்றால் என்ன என்றும் கேள்விகள் தோன்றுகின்றன. இரண்டாவது கேள்விக்குப் பதில் முதலில் சொல்லிப் பார்க்கலாம். அத்தைப் பாட்டி கதையிலிருந்து , கம்பராமாயணத்தின் கருப்பொருள் வரையில் , ஏசாப்புக் கதைகளிலிருந்து மஹாபாரதத்து குருக்ஷேத்திரம் வரையில் , எல்லாமே கதையை ஆதாரமாகக் கொண்டவைதான். நாவல் , நாடகம் என்கிற இலக்கியத் துறைக்கும் ஆதாரமான விஷயம் கதைகள்தான். சிறுகதைக்கு ஆதாரமான கதை என்ன ? எப்படியிருக்க வேண்டும் ? ஓ. ஹென்றியின் கதைகளிலே பல சம்பவங்கள் அடுக்கடுக்காக வந்து கடைசியில் ஒரு திருப்பம் திரும்பி ஒடித்து வக்கிரமாக நிற்கும். மோபஸான் கதைகளிலே அடுக்கடுக்காகப் பல விஷயங்கள் சொல்லப்பட்டு , ஒரு சம்பவத்தைச் செயற்கை முத்தைப்போல உருட்டித் திரட்டித் தரும். சம்பவங்களை நம்புகிற இந்த இரண்டு கதைகளுக்கும் அப...

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...