Skip to main content

பல ரூபங்களில் காந்தி: தையல்காரர் | அனு பந்தோபாத்யாயா


தென் ஆப்பிரிக்காவில் காந்திஜி வசித்த காலத்தில் அவருக்கு இரண்டு தடவை கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. சில வாரங்கள் வரை அவர் நாள் ஒன்றுக்கு ஒன்பது மணி நேரம் கிழிந்த போர்வைகளையும், சட்டைகளுக்குப் பைகளையும் தைத்து வந்தார். அவருக்குத் தரப்பட்ட பணிகளை காலக்கெடுவுக்குள் முடித்துக் கொடுத்ததோடு அல்லாமல், மேலும் பணி வேண்டும் என்று கேட்பது அவரது வழக்கம். 
இந்தியச் சிறையில் சில நாட்களுக்கு ஸிங்கர் தையல் எந்திரத்தில் தையல் வேலை செய்தார். சிறைப் பணிகளை அவர் தாமாகவே ஏற்றுக்கொண்டு செய்து வந்தார். மனிதர்களுக்கு வேலை கிடைக்காமல் செய்து வரும் எந்திரங்களுக்கு மனிதன் அடிமையாகிவருவதை அவர் எதிர்த்தார். மனித உழைப்பை அகற்றித் தேவையற்றதாக்கிவிடும் எந்திரங்களை நாம் பயன்படுத்தக் கூடாது என்ற கருத்தை அவர் வலியுறுத்தி வந்தார். இந்தியாவைப் பொருத்தவரை கோடிக்கணக்கான மக்களுக்கு ஓய்வு நேரம் எப்போது கிடைக்கும் என்பது பிரச்சினை அல்ல; அவர்கள் பணி ஏதும் இன்றி ஓய்ந்து கிடக்கிறார்கள்; அந்த நேரத்தை எப்படிப் பயனுள்ள முறையில் செலவழிக்க முடியும் என்பதுதான் பிரச்சினை. தையல் எந்திரத்திற்கு மட்டும் காந்திஜி விதிவிலக்கு அளித்தார். ஏனெனில் அது ஒரு பயனுள்ள கண்டுபிடிப்பு என்று அவர் எண்ணினார். தனது மனைவி ஊசியையும் நூலையும் வைத்துக்கொண்டு மணிக்கணக்கில் போராடுவதைப் பார்த்து, “அவள்மீது கொண்டிருந்த அன்பு காரணமாக ஒரு தையல் எந்திரத்தை ஸிங்கர் கண்டுபிடித்தார். அந்த எந்திரத்தின் பின்னணியில் அன்பு உள்ளது" என்று காந்திஜி கூறுவார். 
காந்திஜி ஒரு தடவை ஒரு ஆசிரமவாசியான பெண்மணிக்கு எழுதிய கடிதத்தில் "உனது சல்வார் கமீஸ் தைப்பது பற்றிக் கவலை கொள்ள வேண்டாம். அவற்றை என்னால் தயார் செய்துவிடமுடியும். ஒரு ஸிங்கர் எந்திரத்தை நாம் இரவல் வாங்குவோம். சில மணி நேரங்களில் உடுப்புகள் தயாராகிவிடும்." தனது தையல் பணி பற்றி அவருக்கு மிகவும் பெருமை. அவரே துணியை வெட்டி தனது மனைவியின் ரவிக்கைகளைத் தைத்துவிடுவார். ராட்டையில் நூல் நூற்று, நூற்ற நூலைத் தறியில் நெய்து, அத்துணியைக் கொண்டு தனது சட்டையைத் தானே தைத்துக்கொள்வார். புகழ்பெற்ற தையல் வல்லுநர்களும், செருப்பு தயாரிப்பவர்களும் ஆசிரமவாசிகளுக்கு இலவசமாகப் பயிற்சி அளித்து வந்தனர். 
சம்பாரனில் விவசாயிகள் நியாயமற்ற, குறைந்த கூலியில் அவுரியைப் பயிரிடும்படி கட்டாயப்படுத்தப்பட்டபோது அதற்கெதிரான போராட்டத்தில் காந்திஜி ஈடுபட்டது நமக்குத் தெரிந்த விஷயம். அப்போது ஒரு ஆங்கிலேயப் பத்திரிகையாளர், “காந்திஜி, கிராமத்து விவசாயிகளைக் கவர்வதற்காகவே மேலை நாட்டு உடைகளைத் துறந்து இந்திய உடையை அணிந்துள்ளார்'' என்று கூறி அவரை அவமதித்தார். பதிலடியாக காந்திஜி, "சுதேசிக் கொள்கையை ஏற்று சபதம் எடுத்தபின் நான் கையினால் நூற்று கையினால் நெய்து, என்னாலோ என் சக ஊழியர்களாலோ தைக்கப்பட்ட துணியை மட்டுமே அணிவேன்" என்று பதில் கொடுத்தார். 
காந்திஜி சிறிது காலத்திற்குப்பின் சட்டையையும் துறந்துவிட்டார். இடுப்பில் ஒரு அரையாடையை மட்டுமே அணிந்தார். அப்போதும்கூட, தனது கைக்குட்டை, துண்டு, அரையாடை ஆகியவற்றின் மூலைகளை அவர் தைத்து வந்தார். துணிகளைத் தைத்த வண்ணம் தனது செயலாளருக்குக் கடிதங்களையும் 'டிக்டேட்' செய்வார் காந்திஜி. ஆகாகான் அரண்மனையில் சிறைவாசம் செய்த சமயத்தில் சிறையின் மேற்பார்வையாளருக்கு பிறந்த நாள் பரிசாகக் கதர்க் கைக்குட்டைகளை காந்திஜி வழங்கினார். 74 வயதான காந்திஜி ஒவ்வொரு கைக்குட்டையிலும் சிறையின் மேற்பார்வையாளரது இனிஷியல்களையும் பின்னல் (எம்ப்ராய்டரி) செய்திருந்தார். 
தனது மேற்பார்வையில் ஒரு பெண்மணியைத் தனது சால்வையைப் பல துண்டுக் கதர்த்துணிகளை இணைத்துத் தயாரித்து அளிக்கும்படி காந்திஜி கோரினார். பாரத நாட்டின் ஏழைப் பங்காளர் என்ற முறையில் அந்தச் சால்வையை அணிந்து வட்டமேஜை மகாநாட்டிற்குப்பின் இங்கிலாந்து அரசி அளித்த விருந்தில் காந்திஜி கலந்துகொண்டார். அவருக்கு ஆடம்பரம் அறவே பிடிக்காது. அதே சமயம், கசங்கிய அல்லது கிழிந்த உடைகளை யாராவது அணிவதும் அவருக்குப் பிடிக்காது. ஒரு தடவை அவர் கலந்துகொண்ட கூட்டத்தில் அவரது சகாவின் மேலாடையில் ஓர் ஓட்டை காணப்பட்டது. அதைப் பார்த்த காந்திஜி அவருக்கு இப்படி ஒரு குறிப்பை அனுப்பினார்: கிழிந்த உடைகளை அணிவது சோம்பலுக்கு அடையாளம். வெட்கப்பட வேண்டிய விஷயம். மாறாக, ஒட்டுத் தையலுடன் கூடிய துணியை அணிவது எளிமை அல்லது தியாகத்திற்கு உதாரணம். உங்களது மேலாடையில் உள்ள ஓட்டை அருவருப்பாக உள்ளது. அது ஏழ்மையையோ எளிமையையோ காட்டவில்லை. மாறாக, அது காட்டுவது என்னவென்றால் உங்களுக்கு மனைவி இல்லை; அல்லது உங்கள் மனைவி மோசமானவள் அல்லது நீங்கள் ஒரு சோம்பேறி"
- தமிழில்: எம். ஆர். ராஜகோபாலன்

Comments

Most Popular

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி...

புதுமையும் பித்தமும் - 3 | க. நா. சுப்ரமண்யம்

புதுமையும் பித்தமும் - 2 | க. நா. சுப்ரமண்யம் இந்தப் பகுதியில் பொதுவாக இலக்கியத்தைப் பற்றியும் , சிறப்பாகத் தமிழ்ச் சிறுகதை பற்றியும் புதுமைப்பித்தன் சொல்லிப் போயிருக்கிற சில விஷயங்களைப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அவர் படைப்புகளில் ஆட்சி செலுத்திய கொள்கைகள் , சித்தாந்தங்கள் முதலியவற்றையும் , அவருக்கிருந்த இலக்கிய நோக்கம் , வாழ்க்கை லட்சியங்கள் இவற்றையும் ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள இது உபயோகமாக இருக்கும். இலக்கியம் என்றால் என்ன என்கிற கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்கிற மாதிரி தன் கட்டுரைத் தொகுப்பிற்கு அவர் முன்னுரை எழுதுகிறபோது சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். ‘வாழ்வு , வாழ்க்கை என்று இரண்டு பதங்கள் உண்டு. இவற்றிடையே உள்ள தொடர்பையோ தொடர்பற்ற தன்மையையோ விளக்குவது , மனித சிந்தனையின் சாரம். வாழ்வு எனில் தோற்றம் , ஸ்திதி , மறைவு என முக்கூறாகத் தோன்றும் பிரபஞ்சத்தன்மை. வாழ்க்கை என்பது தனிப்பட்ட ஜீவராசியின் உயிர்ப் பாசத்தினால் நிகழும் அவஸ்தை. இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுவது மனித சிந்தனையின் சாரம். அது தத்துவமாக உருவாகிறது. வாழ்வின் நியதி ஒன்று , சூத்திரம் ஒன்று என்று வற்பு...

தமிழில் வசனநடை | க. நா. சுப்ரமண்யம்

எல்லா மொழிகளிலுமே இலக்கிய ரீதியாகக் கவனிக்கும்போது கவிதை என்பதை ஒட்டிப் பின்னர்தான் வசன நடை என்பது எழுந்திருக்கிறது என்பது வெளிப்படை . தமிழும் அதற்கு விலக்கல்ல . தமிழ்க் கவிதை கி . மு . ஐந்தாயிரத்தில் தோன்றியது என்று வைத்துக்கொண்டால் , கவிதை தோன்றி ஆறாயிரத்து எழுநூற்றிருபது வருஷங்களுக்குப் பிறகுதான் வசன நடை தோற்றிற்று . தமிழ்க் கவிதை தோன்றியது கி . பி . மூன்றாம் நூற்றாண்டை ஒட்டியே என்று ஏற்றுக்கொண்டால் , வசனம் தோன்றியது ஒரு ஆயிரத்தி நானூறு வருஷங்களுக்குப் பிறகு என்றுதான் சொல்ல வேண்டும் . நான் இந்த இரண்டாவது காலவரையே நியாயமானது என்று எண்ணுபவன் . எஸ் . வையாபுரிப் பிள்ளை அவர்களின் ஆராய்ச்சிகளும் இதையே வற்புறுத்துகின்றன என்று தான் சொல்லவேண்டும் . உரை என்று சொல்லப்படுவதும் வசனமும் ஒன்றுதான் என்று அபிப்பிராயம் தெரிவித்துக்கொண்டிருப்பதில் சாரமில்லை . உரை இருந்திருக்கிறது . தமிழர்கள் ஊமைகள் அல்ல , ஆரம்ப காலத்திலிருந்தே உரையாடிக்கொண்டுதான் வந்திருக்கிறார்கள் என்று சொல்வது ஹாஸ்யமாகப் பொருத்தமாக இருக்கும் . உ...