Skip to main content

கணக்கும், கண்டிப்பும் | ஜி.டி. பிர்லா


காந்தியடிகள் இருக்குமிடத்தில் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைத்துக்கொள்ளப்படுகிறது. சிறு பிராயம் முதலே ரூபாயின் கணக்கு ஜாக்கிரதையாக வைத்துக்கொள்வது காந்தியடிகளுடைய பழக்கம். அவருக்கு ஒழுங்கில் மிக்க பற்றுண்டு. ஆகையால் அவருடைய குடில் சுத்தமாக மெழுகிப் பூசி ஒழுங்காக வைக்கப்பட்டிருக்கிறது. இடுப்பிலுள்ள கச்சமும் கச்சிதமாகத்தான் கட்டப்பட்டிருக்கிறது. காந்தியடிகள் கிழவர்தான். ஆயினும், அவருடைய சரீரம் பளபளவென்று வாலிபர்களுடையது போல் இருக்கிறதென்று ஒரு ராஜப்பிரதிநிதி கூறினார். அவர் தேக ஆரோக்கியத்தை நன்றாகக் கவனித்துக்கொள்கிறார் என்பது உண்மை. ஒவ்வொரு விஷயத்திலும் செட்டு செய்யப்படுகிறது. கடிதங்களில் குண்டூசி குத்தியிருந்தால் அதையும் ஜாக்கிரதையாக எடுத்து வைத்துக்கொள்வார்.
லண்டனுக்குப் போகும்பொழுது கப்பலில் ஒரு வெள்ளைக்காரன் தினந்தோறும் வந்து காந்தியடிகளைத் திட்டிவிட்டுப் போவது வழக்கம். ஒருநாள் அவன் காந்தியடிகளைப் பற்றிச் சில விநோதமான கவிதைகள் எழுதி அவரிடம் எடுத்து வந்தான். அவைகளை அவரிடம் கொடுத்தவுடன் அவர் அவைகளைக் கிழித்துக் குப்பைக் கூடையில் எறிந்துவிட்டார். ஆனால் அவைகளில் குத்தப்பட்டிருந்த குண்டூசியை ஜாக்கிரதையாக எடுத்துத் தம் டப்பியில் வைத்துக்கொண்டார். அவன் "காந்தி, படித்துப் பாரேன். இதில் ஒன்றும் சாரமில்லையா?'' என்றான். ''ஆமாம்! இருந்த சாரத்தை எடுத்து டப்பியில் வைத்துவிட்டேனே!'' என்று பதிலளித்தார். இதைக் கேட்டு எல்லோரும் சிரித்தனர். அவன் வெட்கிப்போனான்.
காந்தியடிகள் சிறிய உபயோகமுள்ள பொருளையும் கெட்டுப்போக விடுவதில்லை. ஒரு கெஜம், இரண்டு கெஜம் நீளமுள்ள சணற் கயிறுகளை ஜாக்கிரதையாய் வைத்திருந்து மாதங்கள் சென்ற பிறகும், அவசியம் நேரும் பொழுது நினைவாக எடுத்துத் தருவார். அவருடைய ராட்டையின் கீழே வைக்கப்பட்டிருக்கும் கருப்புத்துணியின் சிறு துண்டு 12 வருஷங்களாக ஒன்றே இருந்து வருகிறதைப் பார்க்கிறேன். வரும் கடிதங்களிலுள்ள எழுதாத பாகங்களைக் கிழித்து பை செய்து உபயோகிக்கிறார். இந்தக் காரியங்கள் முதல் தரமான கருமியையும் தோற்கடிப்பவையாயிருக்கின்றன.
லண்டனில் நடந்த விஷயம். காந்தியடிகள் தங்குமிடம் நகரத்திலிருந்து வெகு தூரத்தில் கிழக்குப் பக்கத்திலிருந்தது. அதிலிருந்து மேற்கே ஏழெட்டு மைல் தூரத்தில் ஆபீஸிருந்தது. பகல் போஜனம் ஆபீஸிலேயே நடந்து வந்தது. தங்குமிடத்திலிருந்து தினமும் ஆகாரங்கள் ஆபீஸுக்குக் கொண்டுவரப்பட்டு வந்தன.
சாப்பாடுடன் காந்தியடிகள் சில சமயங்களில் தேனும் சேர்த்துக்கொள்வதுண்டு. நாங்கள் இங்கிலாந்துக்குச் செல்லும் வழியில், எகிப்தில் தங்கிய பொழுது, எகிப்தியர் ஒரு ஜாடி நிறையத் தேன் கொடுத்தனர். அதிலிருந்து சிறிது தேன் தினந்தோறும் சாப்பிட்டு வந்தார். அன்றைய தினம் சாப்பாடுடன் தேன் கொண்டுவர மறந்துவிட்டதால், ஸ்ரீமதி மீராபாய் நான்கணாக் கொடுத்து ஒரு சீசா தேன் வாங்கி வந்து, உணவுடன் வைத்திருந்தார். காந்தியடிகள் சாப்பிட உட்கார்ந்ததும் தேன் சீசாவைக் கண்டார். ''இந்த சீசா ஏது?'' என்று கேட்டார். தேன் வாங்க நேர்ந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது. அவ்வளவுதான்; புயலைப்போல் கோபம் பொங்கி எழுந்தது. "ஏன் இப்படிக் காசை வீணாக்குகிறீர்கள்? ஜனங்கள் கொடுக்கும் பொருளை நாம் இப்படியா வீண் செலவு செய்வது? ஒருநாள் தேன் இல்லையானால் நான் பட்டினியாயிருந்து விடுவேனா?” என்றார்.
இந்தியாவைப் பற்றிய பெரிய சிக்கலான பிரச்சினைகள் முன்னால் இருந்தன. அவைகளை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, தேனைப் பற்றி வெகுநேரம் வரை உபந்நியாஸமும், கண்டனமும் நடந்துகொண்டிருந்தன. பக்கத்திலிருந்தவர்களுக்கு அருவருப்பாயிருந்தது. ஆனால் காந்தியடிகளுக்கோ பெரிய விஷயங்களைப் போன்றே சிறியவையும் முக்கியமானவையே. இதில் சில சமயங்களில் அவருக்குப் பெரிது சிறிது என்ற வித்தியாசமே தெரியவில்லை போலத் தோன்றும். பக்கத்திலிருப்பவர்களுக்கு ஆத்திரம் வரும். ஆனால் காந்தியடிகள் இவைகளிலொன்றையும் பொருட்படுத்துவதில்லை.
துணிகளை மிகவும் ஜாக்கிரதையாக வைத்துக்கொள்கிறார். சிறிது கிழிந்ததும் ஒட்டுப்போட்டுவிடுகிறார். ஒவ்வொரு பொருளையும் சுத்தமாய் வைத்திருக்கிறார். செட்டோ சொல்ல வேண்டியதில்லை. தண்ணீரைக்கூட வீண் செலவு செய்யமாட்டார். முகம், கை கழுவுவதற்கு மிகவும் கொஞ்சம் தண்ணீரே உபயோகிக்கிறார். குடிப்பதற்குக் காய்ச்சின தண்ணீர் ஒரு சீசாவில் வைத்திருக்கிறார். அதையே அவசியமேற்படும் பொழுது குடிக்கவும், முகம் கழுவவும் உபயோகிக்கிறார்.
(கன்ஷ்யாம் தாஸ் பிர்லா எழுதிய 'பாபூ அல்லது நானறிந்த காந்தி' நூலிலிருந்து. மின்னூலை வாசிக்க, )


பாபூ அல்லது நானறிந்த காந்தி


Comments

Most Popular

ஐரோப்பியர் வருகை - மயிலை சீனி. வேங்கடசாமி

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, மேல் நாட்டார் நமது இந்தியா தேசத்துடன், சிறப்பாகத் தென் இந்தியாவுடன், வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிகிறது. யவனர் (உரோமர், கிரேக்கர்) என்னும் ஐரோப்பிய ஜாதியார், சேர நாட்டின் கடற்கரைப் பட்டினங்களிற் பண்ட சாலைகள் அமைத்து, அவற்றில் நமது நாட்டுச் சரக்குகளைச் சேமித்து வைத்துக் கப்பல்கள் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டு போனார்கள். மதுரை, புகார், (காவிரிப்பூம் பட்டினம்) முதலிய நகரங்களிலும் யவனர் வசித்து வந்ததாகத் தமிழ் நூல்களினால் அறிகிறோம். கி.மு. 22 இல் மதுரையில் அரசாண்டிருந்த பாண்டிய மன்னன், அகஸ்தஸ் ஸீஸர் (Augustus Ceasar) என்னும் யவன அரசனிடம் தூதுவர்களை அனுப்பினான் என்று ஸ்த்ராபோ (Starbo) என்னும் மேல் நாட்டாசிரியர் எழுதியிருக்கிறார். தமிழருக்கும் யவனருக்கும் இருந்த இவ்வர்த்தகத் தொடர்பு, கி.பி. 47 முதல் மேன்மேலும் அதிகப்பட்டது. ஏனென்றால், அந்த ஆண்டில் ஹிப்பலஸ் (Hippalus) என்பவர், இந்து சமுத்திரத்தில் வீசுகிற வட கிழக்கு தென் மேற்குப் பருவக் காற்றைக் கண்டுபிடித்தார். இப்பருவக் காற்று வீசுகிற காலங்களில் பிரயாணம் செய்வதால் மாலுமிகள் விரைவாகக் க...

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...