பாரத நாடு முழுவதும் காந்தியடிகள் பிறந்த நூறாவது ஆண்டை 1969ல் கொண்டாடினார்கள். அதற்கு முந்திய ஆண்டுகளில் நான் சென்னையிலேயே பெரும்பாலும் தங்கியிருக்கவில்லை. 1968ம் ஆண்டின் இறுதியில் நான் சென்னைக்கு வந்தபோது, சுதேசமித்திரன் நாளிதழில் காந்தி நூற்றாண்டை ஒட்டி என்னைச் சில கட்டுரைகள் எழுதச் சொல்லிக் கேட்டார்கள். காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றையும், அவருடைய இலட்சியங்களைப் பற்றியும் நான் படித்து இருந்தேனே தவிர, நாட்டு விடுதலைப் போரில் எவ்வகையிலேனும் பங்கு கொண்டோ, அப்படிப் பங்கு கொண்டவர்களோடு தொடர்பு கொண்டோ சிறிதும் அநுபவம் பெற்றிருக்கவில்லை. எனவே தயக்கத்துடன் ஒப்புக் கொண்டு அடிகளின் வாழ்க்கையைப் பற்றியும் சத்தியாக்கிரகத் தத்துவத்தைப் பற்றியும் வெளிவந்திருந்த நூல்கள் அனைத்தையும் படித்துப் பார்ப்பதென்று முனைந்தேன்.
டாக்டர் ரங்காச்சாரி வாழ்க்கை வரலாற்றை எழுது முன் சென்னையில் 1931, 32-ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த அந்நியத் துணி மறுப்பு, மதுக்கடை மறியல் போன்ற போராட்டங்களைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தேன். அடுத்து, கோவா விடுதலைப் போரை மையக் கருத்தாக வைத்து நான் நாவல் புனையச் செய்திகள் சேகரிக்கையில் காந்தியடிகளின் சாத்துவிக முறைப் போராட்டத்தைத் துவங்குமுன், அதற்குத் தகுதியான உரிய ஒழுக்கக் கட்டுப்பாடுகளைப் பற்றி, கோவா விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்ற பெரியார் நீலகண்ட கரபூர்க்கர் என்னிடம் விவரித்தார். 'சத்தியாக்கிரகம்' என்ற சொல்லின் உண்மைப் பொருளைப் பற்றிய அவர் உரை என்னை ஆழ்ந்து சிந்திக்கச் செய்தது. கோவா விடுதலைக்கு, வன்முறை ராணுவமே பயன்பட்டது.
அப்போது ஏன் அஹிம்சை முறை பயனற்றுப் போயிற்று? காந்தீய இலட்சியங்கள் செயல் முறைக்குப் பொருந்தாத வெறுங் கனவுகள் தாமா? நாடெங்கும் நாட்டு விடுதலைக்கு முன் புயல்போல் கிளர்ந்த எழுச்சி உண்மையில் நாட்டுப்பற்று என்ற அடிப்படையில் இருந்து எழவில்லையா?
அடிகள் பிறந்த நூறாவது ஆண்டை நாம் கொண்டாடியபோது, அவருடைய இலட்சியங்களிலிருந்து பிறழ்ந்து, நாடு வேறு திசையில் சென்று கொண்டிருப்பதையே அப்போது நடந்த நிகழ்ச்சிகள் விளக்கின. நாடெங்கும் வன்முறைச் செயல்கள் அமைதியைக் குலைத்தன. மானந்தம்பாடி, புல்பள்ளி போன்ற காட்டு மலைப் பிராந்தியங்களில் வன்முறைப் புரட்சியாளர் பயங்கரச் செயல்களில் இறங்கினர். வங்கத்தில் அன்றாட வாழ்க்கையே நிலைகுலைய வன்முறை வெறிச் செயல்கள் திகிலைக் கூட்டின. நாட்டு விடுதலை என்ற இலட்சியத்துக்காக மட்டுமின்றி, சமுதாய மேன்மைக்காகவும் அரிய கொள்கைகளை வகுத்து, தியாகத்தின் அடிப்படையில் உருவாகி ஆலமரமாக வளர்ந்து மக்களிடையே பெருஞ் செல்வாக்கைப் பெற்றிருந்த அரசியல் கட்சி, வலது, இடது என்று இரண்டு சாரிகளாகப் பிரிந்து உடைந்து வலுவிழந்து, அரசியல் வானில் கொந்தளிப்பு மிகுந்தது. சமுதாய மேன்மைகளுக்காக எந்த அந்த அடிநிலைகளை உயரிய மதிப்போடு போற்றி வந்தோமோ, அந்த அடி நிலைகளே ஆட்டம் கண்டன. அரசியற் கட்சிகளின் மீது மக்கள் அவநம்பிக்கை கொள்ளும் வகையில் அவை செல்வாக்கு இழந்து, தனி மனிதர்களின் சண்டை சச்சரவுகளாகச் சீர் குலைந்தன.
நாளிதழுக்குக் கட்டுரைகள் எழுதுவதற்காகவே நான் ஆழ்ந்து சிந்தித்தாலும், கட்டுரைகள் முடிந்த பின்னரும் என்னால் அமைதி காண இயலவில்லை.
புற உலகின் அறைகூவல்களை எதிர்த்து நோக்க என்னுள் ஒரு யமுனா உருவானாள்.
நீலகிரி மலைத்தொடரின் பல நிலைகளிலும் வாழும் வாய்ப்பும் அநுபவமும் எனக்கு இயைந்திருந்தன. 'குறிஞ்சித் தேனு'க்காக நான் மலை வாழ் மக்களைப் பற்றிய செய்திகளைச் சேகரிக்கையில் ஒட்டியிருந்த அண்டை மாநிலமாகிய கேரளப் பகுதியில் வாழும் மக்களைப் பற்றிய செய்திகளையும் அறிந்திருந்தேன். குறிப்பாக, மானந்தம்பாடி, வயநாடு பிராந்தியங்களில் வாழும் அடியர், பணியர் வாழ்வு பற்றிய பல கட்டுரைகளை மலையாளத்தில் இருந்து மஞ்சரி இதழ்களுக்குத் தமிழாக்கம் செய்திருந்தேன். எனவே, அந்தச் சூழல் பற்றிய செய்திகள் எனக்கு 'வேருக்கு நீர்' புதினத்துக்கான பகைப் புலத்தைத் தீட்ட உதவின.
அந்த ஆண்டின் இறுதியில் நான் வங்கத் தலைநகர், கல்கத்தாவுக்குச் சென்றேன். அங்கே நான் நேரில் கண்ட காட்சிகளையும் அநுபவங்களையுமே கதையில் சித்தரித்திருக்கிறேன்.
அந்த அமைதி குலைந்த அன்றாட வாழ்க்கையைப் பல கோணங்களிலிருந்தும் காணும் வண்ணம், பீகார் மாநிலத்திலும் பிரயாணம் செய்தேன்; பாட்னாவில் இரண்டு மாத காலம் தங்கினேன். அரசியல் நிலைக்குக் காரணமான அறியாமையும் வறுமையும் இசைந்துவிட்டால், வன்முறைக் கிளர்ச்சிகள் தோன்றாமலிருக்க முடியாது. அந்நாளில் உயர்மட்டத்தில் விருந்து போன்ற வைபவங்களில் ஒழுக்கச் சிதைவு ஒன்றே குறியாக இருப்பதைக் கண்கூடாகக் காணும் வாய்ப்பும் பெற்றேன். தனிமனித ஒழுக்கம் சமுதாயத்துக்கு என்ற அடிப்படையான காந்திய இலட்சியங்கள், நழுவிப் போய்விட்டன. அந்நாள், எனக்கேற்பட்ட மனக்கிளர்ச்சியும் துயரமும் இந்நவீனத்தைப் புனையத் தூண்டு கோலாயின. இந்நவீனத்தைப் பலதரப்பட்ட மக்கள், ஆய்வாளர், அரசியலார் படித்து, பல வகையில் என்னிடம் கருத்துக்களையும் ஐயங்களையும் கேட்டிருக்கின்றனர். புறவாழ்வில் ஏற்படும் பாதிப்புகளினால் எனது, மன அரங்கில் ஏற்படும் கருத்துக்களும் கிளர்ச்சிகளும் எனது இலக்கியப் படைப்புகளுக்கு உந்துதல்களாக இருந்து வருகின்றன. 'நாவல்' என்ற இலக்கிய உருவை நான் எனது கருத்து வெளியீட்டு மொழியாகக் கொண்டிருக்கிறேன். அந்த வகையில் அந்நாளில் கல்கத்தாவிலும் பீகாரிலும் நான் சந்தித்த மக்களையே கதாபாத்திரங்களாகவும் உலவ விட்டிருக்கிறேன்; அவர்கள் யாவரும் தனிமனிதர்களாகத் தோன்றாமல், சமுதாயத்தின் பிரதிநிதிகளாகவே தோன்றுவார்கள். தனிமனிதப் பிரச்னைகளை வளர்த்துக் கொண்டு செல்கையில் கதையமைப்பு வேறு விதமாக இருக்கக் கூடும். இங்கோ, நிகழ்ச்சிகள், நடப்புகள், கற்பனையல்ல.
இந்த நவீனத்துக்கு அந்நாள் (1973) மத்திய சாகித்ய அகாதமி நிறுவனப் பரிசு பெறும் சிறப்பும் கிடைத்தது.
பீகார் மாநிலத்தில் அன்று நான் கண்ட அரசியல் கோளாறுகளும், மக்களின் பிரச்னைகளும், முறுக்கேறி நாட்டின் ஆட்சியை மாற்றும் அளவுக்கு நிகழ்ச்சிகள் தொடர்ந்திருக்கின்றன.
கங்கை தன் வண்மைக்கரம் கொண்டு தழுவும் இந்த மண்ணில், இந்நாவலில் குறிப்பிட்ட, பிரச்னைகளும், நெருக்கடிகளும் புதிய வலிமைகள் பெற்றிருக்கின்றன. "நீங்கள் காந்தீயக் கொள்கைகளை ஆதரிக்கவில்லையா அம்மா?" என்று என்னைப் பலர் இந்த நூலைப் படித்துக் கேட்டிருக்கின்றனர்.
பலதரப்பட்ட மக்கள் கொண்ட மிகப் பெரிய பாரத சமுதாயம் இது. இலக்கிய ஆசிரியர்கள், சிந்தனையாளர், ஒதுங்கியிராமல், தத்தம் வழியிலே நாம் கொண்டிருக்கும் நடைமுறையில், கொள்கைகளில் வெற்றி பெற்ற அம்சம் எது, மறுபரிசோதனைக்குரிய அம்சம் எது என்று சிந்தனை செய்வது அவசியமாகிறது; அதை மக்களிடம் கொண்டு செல்வதும் கடமையாகும் என்று கருதுகிறேன்.
இந்நூலுக்குச் சிறப்பளித்தவர்களுக்கும், வெளியீட்டாளருக்கும் இதனைப் படித்துக் கருத்துரை கூறியவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாசக பெருமக்கள் மக்களாட்சி நிலவும் இந்நாட்டில் ஆற்றல் மிகுந்தவர்கள். அவர்களைச் சிந்திக்கச் செய்ய வேண்டும் என்பதே என் அவா.
அன்புடன்
ராஜம் கிருஷ்ணன்
Comments
Post a Comment