Skip to main content

இலக்கியப் பரிசுகள் | க. நா. சுப்ரமண்யம்


நாவலுக்கு, சிறுகதைக்கு, நாடகத்துக்கு என்று அடிக்கடி சில ஸ்தாபனங்களின் பெயரால் பரிசுகள் அளிக்கிறார்கள். நிறையத் தொகைகளும் அளிக்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில் அதனால் தாங்கள் சிறப்பாக இலக்கிய சேவை செய்துவிட்டதாகவும் எண்ணிக்கொள்ளுகிறார்கள்.

இலக்கியத்துக்கும் பரிசுகளுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை.

பல ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் நடந்த ஒரு கவிதைப் பரிசுப் போட்டியிலே கவி சுப்பிரமணிய பாரதியார் கலந்துகொண்டார். பரிசு அவருக்குக் கிடைக்கவில்லை. அ. மாதவையாவுக்குக் கிடைத்தது கவிதைப் பரிசு. அதற்காகக் கவியாகப் பாரதியாரின் இலக்கிய அந்தஸ்து குறைந்துவிடவில்லை - மாதவையாவின் வசன அந்தஸ்தும் குறைந்துவிடவில்லை.

குறிப்பிட்ட ஒரு மூன்று, ஐந்து, ஏழு அல்லது ஒன்பது பஞ்சாயத்தார்களைத் திருப்திப்படுத்துகிற எழுத்து சிறந்த எழுத்து என்று சொல்லமுடியாது. இந்தப் பஞ்சாயத்தார்களுடைய இலக்கிய அறிவுபற்றிக்கூட நாம் குறைபட வேண்டாம். ஒரு நல்ல புஸ்தகம் குறிப்பிட்ட ஒரு நபருக்குக்கூடத் திருப்தி தருமா என்பது சந்தேகம்தான். எதிர்பாராத ஒரு இடத்தில் எதிரொலி எழுப்பித் திருப்தி தரும் நூல், குறிப்பிட்ட ஒருவரைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற அவசியமேயில்லை.

தமிழ்நாட்டில் - தமிழ் வளர்ச்சிக் கழகம், ஆனந்த விகடன், நாராயணசாமி ஐயர் பரிசுகள்தான் இப்படி என்றில்லை. உலகத்திலுள்ள எல்லா இலக்கியப் பரிசுகளுக்குமே பொதுவாக உள்ள குறைதான் இது. இலக்கிய மதிப்பீடு அப்படி ஒன்றும் ஓட்டெடுத்துச் சுலபமாகச் செய்துவிட முடியாது.

அரசியல் முதலிய காரணங்களினால் நோபல் இலக்கியப் பரிசுகளில்கூடக் குறைபாடுகள் ஏராளமாக நேர்ந்துவிடுவதுண்டு என்பது தெரிகிறது.

1935 முதல் 1940 வரையில் ஆனந்த விகடனில் மட்டும் சுமார் நூறு பேர்வழிகளுக்காவது பரிசுகள் வழங்கியிருப்பார்கள். அந்தப் பரிசுகள் பெற்றவர்களில் முக்கால்வாசிப் பேர்வழிகள் எழுதுவதையே நிறுத்திவிட்டவர்கள், மற்றவர்களில் பெரும்பகுதியினரின் பெயரையே தமிழகம் மறந்துவிட்டது இந்த சொல்ப காலத்திலேயே என்றும் சொல்லலாம்.

இதனாலெல்லாம் ஒன்றும் நிரந்தரமாக அசைக்கமுடியாதபடி நிர்த்தாரணம் ஆகிவிடவில்லை என்றாலும்கூட, இலக்கியப் பரிசுகள் இலக்கியபூர்வமாக ஒன்றுக்கும் உதவாதவை என்பதுதான் என் அபிப்பிராயம். அதில் ஒரே ஒரு நல்ல அம்சம் இதுதான்: ஏழை ஆசிரியன் ஒருவனுக்கு ஏதோ ஒரு சமயத்தில் மொத்தமாக ஒரு தொகை கிடைத்திருக்கிறது என்பதுதான் அந்த நல்ல அம்சம். மற்றப்படி இலக்கிய ரீதியில் இலக்கியப் பரிசுகள் பற்றி இலக்கிய ரஸிகனோ விமரிசகனோ கவலைப்பட வேண்டியதேயில்லை.

(விமரிசனக் கலை நூலிலிருந்து)

Comments

Most Popular

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ...

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந...

பழங்காலத்து எழுதுகருவிகள் - மயிலை சீனி. வேங்கடசாமி

இந்தக் காலத்திலே உலகம் முழுவதும் காகிதத்தாளும் பேனாவும் எழுதுகருவிகளாகப் பயன்பட்டுவருகின்றன. இவை எழுத்து வேலைக்குப் பெரிதும் வாய்ப்பாகவும் எளிதாகவும் அமைந்திருக்கின்றன. ஆனால், காகிதத்தாள் வருவதற்கு முன்பு, பண்டைக் காலத்திலே இவ்வளவு எளிதானவும் வாய்ப்பானவும் ஆன எழுதுகருவிகள் இல்லை. பண்டைக் காலத்திலே உலக மக்கள் எவ்விதமான எழுதுகருவிகளை வழங்கிவந்தார்கள் என்பது பற்றியும், பின்னர் காகிதத்தாள் எவ்வாறு நடைமுறையில் வந்தது என்பதைப் பற்றியும் ஈண்டுக் கூறுவோம். களிமண் சுவடிகள் சிறிய ஆசியா தேசத்தில் யூப்ரெடிஸ், டைகிரிஸ் ஆறுகள் பாய்கிற இடத்தில் இருந்த கால்டியா, ஸைரியா நாட்டு மக்கள் ஆதிகாலத்தில் களிமண்ணை எழுதுகருவியாகக் கொண்டிருந் தார்கள். களிமண்ணைப் பிசைந்து சிறுசிறு பலகைகளைப்போல் அமைத்து, அப்பலகை காய்ந்து போவதற்கு முன்னமே ஆணி போன்ற கருவியினால் எழுதி உலரவைத்துப் புத்தகமாக உபயோகித்தார்கள்; அவர்கள் எழுதிய எழுத்துகளுக்குக் கூனிபார்ம் எழுத்து என்று பெயர் கூறுவர். அவர்கள் எழுதிய களிமண் சுவடிகளைப் புத்தகசாலையில் வைத்துப் போற்றி னார்கள். அவ்வாறு போற்றி வைக்கப்பட்டிருந்த களிமண் சுவடிகள் பல, சமீப...