Skip to main content

காந்தி: சத்திய சோதனைக்குப் பின் - 20(காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் வருடவாரியாக இத்தளத்தில் வெளியாகிறது. சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் குறிப்புகள் மகாத்மா காந்தி நூல்கள் வரிசையில், தொகுதி மூன்றில் சேர்க்கப்பட்டன.)

1948 (வயது 79)

ஜனவரி 10-ஆம் தேதியன்று காந்திஜி பிரார்த்தனை ஸ்தலத்துக்கு நடந்து வந்தபோது, பஹாவல்பூரைச் சேர்ந்த அகதிகள் கோபாவேசத்துடன் கோஷங்களைக் கோஷித்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பஹாவல்பூரில் உள்ள 70,000 ஹிந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் உதவி புரிய வேண்டுமெனக் கோரினர். ஆனால், காந்திஜி பிரார்த்தனை மேடையில் உட்கார்ந்ததும் அவர்கள் அமைதியாக இருந்தார்கள். இதைக் காந்திஜி பாராட்டியதுடன், அவர்கள் பொறுமையை இழந்துவிடக் கூடாது என்றும், சாத்தியமான சகல உதவிகளையும் இந்திய சர்க்கார் செய்து வருகிறதென்றும் கூறினார்.

ஜனவரி 11-ஆம் தேதி பிரார்த்தனைக் கூட்டத்தில், ஆந்திராவில் இருந்து வந்த ஒரு கடிதத்தின் சில பகுதிகளை வாசித்துக் காட்டினார். சட்டசபையின் காங்கிரஸ் அங்கத்தினர்கள் லஞ்சம் வாங்குவதிலும், லைசென்ஸ்களை வாங்கி விற்பதிலும், கள்ள மார்க்கெட் வியாபாரம் நடத்துவதிலும், நீதி நிர்வாகங்களில் தலையிடுவதிலும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றும், பொதுமக்கள் இதனால் கஷ்டப்படுகிறார்கள் என்றும் அக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பனவற்றை ஊர்ஜிதம் செய்யும் கடிதம் ஒன்று ஆந்திராவின் முதுபெரும் நண்பர் ஒருவரிடமிருந்து காந்திஜிக்குக் கிடைத்தது.

காங்கிரஸ்காரர்களானாலும், கம்யூனிஸ்டுகளானாலும், சோஷியலிஸ்டுகளானாலும், எல்லோரும் தங்கள் சொந்த நலன்களைக் கவனிக்காமல், தேச நலனுக்கே பாடுபட வேண்டுமென்று காந்திஜி கேட்டுக்கொண்டார்

டில்லியில் முஸ்லிம்களுக்கு, நடந்து திரிவதற்குக்கூடப் பாதுகாப்பில்லாமல் போய்விட்டது என்றும், அதே சமயத்தில் பாகிஸ்தானில் மைனாரிடி சமூகத்தினர் படும் துன்பங்களைத் தாம் நன்கு அறிந்திருப்பதாகவும், அவர்களுடைய துன்பத்தைத் தீர்க்கப் பாகிஸ்தானுக்குத் தாம் போக விரும்பினாலும், டில்லியில் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு இல்லாதபோது தாம் எந்த முகத்தோடு அங்கே போக முடியும் என்றும், தம்மால் எதுவும் செய்ய இயலாதிருக்கும் இந்த நிலையில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் காந்திஜி அறிவித்தார். இந்த உண்ணாவிரதம் சம்பந்தமாக நேருவையோ பட்டேலையோ காந்திஜி கலந்து ஆலோசிக்கவில்லை. சமூக ஒற்றுமைக்காக ஜனவரி 13-ஆம் தேதியிலிருந்து காலவரையறையின்றி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக முதல் நாள் பிரார்த்தனைக் கூட்டத்தில் தெரிவித்தார். ''என் முயற்சியை ஆதரித்து, எனக்காக என்னோடு பிரார்த்தனை செய்யுமாறு உங்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்" என்றார் காந்திஜி. ஆந்திரா காங்கிரஸ் சட்டசபை அங்கத்தினர்களில் பலர் தகாத வழிகளில் ஈடுபட்டுப் பணம் திரட்டுவதில் இறங்கியிருப்பதாகத் தேசபக்த கொண்டா வெங்கடப்பையா எழுதிய கடிதத்தின் சில பகுதிகளைக் காந்திஜி வாசித்துக் காட்டினார்.

ஜனவரி 13-ஆம் தேதி காலை 11 மணிக்கு உண்ணாவிரதம் ஆரம்பமாயிற்று. அன்று நேரு, பட்டேல், ஆஸாத் ஆகியோர் வந்து காந்திஜியுடன் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுச் சென்றனர். அன்று மாலை பிரார்த்தனைக் கூட்டத்தில் பேசியபோது, டில்லியில் உண்மையிலேயே அமைதி நிலவத் தொடங்கினால் தமது உண்ணாவிரதம் முடிவடையும் என்று காந்திஜி கூறினார்.

ஜனவரி 14-ஆம் தேதி பிராத்தனைக் கூட்டத்தில் காந்திஜி கூறியதாவது: ''கராச்சியில் சீக்கியர்கள் கோழைத்தனமாகத் தாக்கப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு பாவமும் அறியாத ஆடவரும், பெண்டிரும், குழந்தைகளும் வெட்டி எறியப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய உடைமைகளைக் கொள்ளையடித்திருக்கிறார்கள். மற்றவர்கள் ஓடிவரவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அகதிகளை ஏற்றிக்கொண்டு வந்த ஒரு ரெயில் குஜ்ராத்தில் (பாகிஸ்தானைச் சேர்ந்த ஊர்) தாக்கப்பட்டு, ஏராளமானவர்கள் கொல்லப்பட்டதாகவும், பெண்கள் கடத்திச் செல்லப்பட்டதாகவும் செய்தி வந்திருக்கிறது. இது எனக்கு வேதனை அளிக்கிறது. எவ்வளவு காலத்துக்கு இதையெல்லாம் இந்திய யூனியன் சகித்துக்கொண்டிருக்க முடியும்? நான் உண்ணாவிரதம் இருந்தபோதிலும், எவ்வளவு காலத்துக்கு ஹிந்துக்கள், சீக்கியர்கள் ஆகியோரின் பொறுமைக்கு அணைபோட முடியும்? இந்த நிலைமைக்குப் பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்."

ஜனவரி 15-ஆம் தேதி வெளியிடப்பட்ட வைத்திய அறிக்கை காந்திஜி மிகவும் பலவீனம் அடைந்திருப்பதாகக் கூறியது. டில்லியிலும், பிற இடங்களிலும் சமாதானக் கூட்டங்கள் நடந்தன.

டில்லியில் ஒரு கூட்டத்தில் பேசிய நேரு, மகாத்மா காந்தியின் உயிரை இழப்பது, இந்தியாவின் ஆத்மாவை இழப்பதாகும் என்றும், சமூக ஒற்றுமையை நிலைநாட்டிக் காந்திஜியின் உயிரைக் காப்பாற்ற வேண்டுமென்றும் கூறினார்.

காந்திஜியின் உண்ணாவிரதம் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள மக்களின் கண்களைத் திறக்க வேண்டுமென்றும், தாங்கள் செய்த காரியங்களுக்காக அவர்கள் வெட்கித் தலைகுனியும்படி செய்ய வேண்டுமென்றும் பாகிஸ்தான் அகதிகள் மந்திரி கஸ்னாபர் அலிகான் கூறினார்.

அத்துடன், தகராறுக்குரிய காரணங்களைப் போக்குவதற்காக இந்தியா, பாகிஸ்தான் தலைவர்களின் கூட்டு மகாநாடு கூட்ட வேண்டும் என்றும் அவர் யோசனை கூறினார்.

ஜனவரி 15-ஆம் தேதி பிரார்த்தனை மேடைக்குக் காந்திஜியால் நடந்துவர முடியவில்லை. அவருடைய செய்தியின் ஹிந்தி மொழிபெயர்ப்பு, பிரார்த்தனைக் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.

இந்தியா பிரிவினை செய்யப்பட்டபோது, சில சொத்துக்களுக்காகப் பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் கொடுக்க இந்திய சர்க்கார் சம்மதித்தது. காஷ்மீர் விவகாரத்தினால், அந்தப் பணத்தைக் கொடுக்காமல் இந்தியா நிறுத்திவைத்திருந்தது. ஆனால், ஜனவரி 15-ஆம் தேதி இரவு, காந்திஜியின் முயற்சியினால், அந்தப் பணத்தைப் பாகிஸ்தானுக்குக் கொடுத்துவிட இந்திய சர்க்கார் முடிவு செய்தது.

ஜனவரி 16-ஆம் தேதி வழக்கம்போல் மாலையில் பிரார்த்தனைக் கூட்டம் நடந்தது. ஆனால், காந்திஜி கூட்டத்துக்கு வரமுடியவில்லை. தம்முடைய படுக்கையில் இருந்துகொண்டே ஒரு மைக்ரோபோன் மூலம் பேசினார். இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் அமைதி நிலவினாலொழியத் தாம் உயிர் வாழ விரும்பவில்லை என்று காந்திஜி சொன்னார்.

ஜனவரி 17-ஆம் தேதியும் காந்திஜி படுக்கையில் இருந்துகொண்டே மைக்ரோபோன் மூலம் பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்தவர்களுக்காகப் பேசினார்.

ஜனவரி 18-ஆம் தேதி காலையில் டில்லி நகரில் உள்ள சகல ஸ்தாபனங்களின் பிரதிநிதிகளும், அகதிகளின் பிரதிநிதிகளும் டாக்டர் ராஜேந்திரப் பிரசாத்தின் தலைமையில் வந்து ஏழு அம்சப் பிரகடனம் ஒன்றில் கையெழுத்திட்டனர். அந்தப் பிரகடனத்தில் உண்ணாவிரதத்தை நிறுத்துவதற்குக் காந்திஜி விதித்திருந்த நிபந்தனைகள் அடங்கியிருந்தன. டில்லியில் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகவும், இதற்குமுன் நடந்த இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாவென்றும் அவர்கள் பிரகடனத்தில் உறுதிமொழியளித்துக் கையெழுத்திடவே, அன்று பகல் 12.45 மணிக்குக் காந்திஜி தமது உண்ணாவிரதத்தை நிறுத்தினார். அன்று பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்தவர்களுக்காக மைக்ரோபோனில் காந்திஜி பேசியபோது, தம்முடைய செய்தி கூட்டத்தில் வாசிக்கப்படும் என்று தெரிவித்தார்.

சமாதானம் நிலவுவதற்காகக் காந்திஜி உண்ணாவிரதம் இருந்ததைப் பாராட்டி மேற்குப் பஞ்சாப் மந்திரி சபை அவருக்கு ஒரு தந்தி கொடுத்தது. காந்திஜியின் உண்ணாவிரதத்தினால், இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள மக்களுக்குப் பரஸ்பரம் நட்புறவு கொள்ள வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டதாக ஐ.நா. சபை பந்தோபஸ்துக் கவுன்சிலில் பாகிஸ்தான் வெளிநாட்டு மந்திரி ஸர் ஜபருல்லாகான் கூறினார்.

ஜனவரி 20-ஆம் தேதி பிர்லா மாளிகையில் பிரார்த்தனை மேடையில் காந்திஜி பேசியபோது, அவர்மீது குண்டு எறிவதற்கு முயற்சி செய்யப்பட்டது. அவர் உட்கார்ந்திருந்த இடத்துக்கு 50 கஜ தூரத்துக்கு அப்பால் குண்டு வெடித்தது. மதன்லால் என்ற ஒரு ஹிந்து இளைஞன் கைது செய்யப்பட்டான். அவனிடம் இருந்த மற்றொரு கைக்குண்டு கைப்பற்றப்பட்டது. அவன் தன்னை ஓர் அகதி என்று சொல்லிக்கொண்டான். குண்டு வெடித்ததனால் காந்திஜியிடம் யாதொரு சலனமும் ஏற்படவில்லை.

தாம் பாகிஸ்தானுக்குப் போகக்கூடும் என்று ஏற்கனவே பிரஸ்தாபித்திருந்ததைக் காந்திஜி குறிப்பிட்டு, தம்மை ஒரு சமாதான புருடராகவும், முஸ்லிம்களுக்கு நண்பராகவும் பாகிஸ்தான் சர்க்கார் நம்பினால்தான் தாம் அங்கே போக விரும்புவதாகவும், ஆனாலும் பிரயாணத்துக்குத் தமது ஆரோக்கியம் இடம் கொடுக்கும் வரை தாம் காத்திருக்க வேண்டும் என்றும் சொன்னார். தமது உடல் நிலை சரியாவதற்கு மேற்கொண்டு பதினைந்து நாட்களாவது ஆகும் என்று டாக்டர்கள் கூறுவதாகவும் காந்திஜி சொன்னார்.

21-ஆம் தேதி பிரார்த்தனைக் கூட்டத்தில் பேசியபோது, முதல் நாள் குண்டு எறியப்பட்டதைக் காந்திஜி பிரஸ்தாபித்தார். குண்டு எறிந்த வாலிபனுக்குப் பின்னணியில் இருப்பவர்கள் இப்படிப்பட்ட செயல்களை விட்டுவிட வேண்டுமென்றும், ஹிந்து மதத்தைக் காப்பதற்கு இது வழியல்ல என்றும் கூறினார். குண்டு எறிந்த ஹிந்து வாலிபனைக் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று தாம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலிடம் கூறியிருப்பதாகவும் காந்திஜி சொன்னார்.

உண்ணாவிரதத்துக்குப் பிறகு காந்திஜி முதல்முதலாக 22-ஆம் தேதியன்று பிரார்த்தனை மேடைக்கு நடந்து வந்தார். சிறிது சிறிதாகத் தமது உடம்பு தேறி வலுப்பெற்று வருவதாக்க கூறினார்.

நிறுத்தினார். அன்று பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்தவர்களுக்காக மைக்ரோபோனில் காந்திஜி பேசியபோது, தம்முடைய செய்தி கூட்டத்தில் வாசிக்கப்படும் என்று தெரிவித்தார்.

சமாதானம் நிலவுவதற்காகக் காந்திஜி உண்ணாவிரதம் இருந்ததைப் பாராட்டி மேற்குப் பஞ்சாப் மந்திரி சபை அவருக்கு ஒரு தந்தி கொடுத்தது. காந்திஜியின் உண்ணாவிரதத்தினால், இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள மக்களுக்குப் பரஸ்பரம் நட்புறவு கொள்ள வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டதாக ஐ.நா. சபை பந்தோபஸ்துக் கவுன்சிலில் பாகிஸ்தான் வெளிநாட்டு மந்திரி ஸர் ஜபருல்லாகான் கூறினார்.

ஜனவரி 20-ஆம் தேதி பிர்லா மாளிகையில் பிரார்த்தனை மேடையில் காந்திஜி பேசியபோது, அவர்மீது குண்டு எறிவதற்கு முயற்சி செய்யப்பட்டது. அவர் உட்கார்ந்திருந்த இடத்துக்கு 50 கஜ தூரத்துக்கு அப்பால் குண்டு வெடித்தது. மதன்லால் என்ற ஒரு ஹிந்து இளைஞன் கைது செய்யப்பட்டான். அவனிடம் இருந்த மற்றொரு கைக்குண்டு கைப்பற்றப்பட்டது. அவன் தன்னை ஓர் அகதி என்று சொல்லிக்கொண்டான். குண்டு வெடித்ததனால் காந்திஜியிடம் யாதொரு சலனமும் ஏற்படவில்லை.

தாம் பாகிஸ்தானுக்குப் போகக்கூடும் என்று ஏற்கனவே பிரஸ்தாபித்திருந்ததைக் காந்திஜி குறிப்பிட்டு, தம்மை ஒரு சமாதான புருடராகவும், முஸ்லிம்களுக்கு நண்பராகவும் பாகிஸ்தான் சர்க்கார் நம்பினால்தான் தாம் அங்கே போக விரும்புவதாகவும், ஆனாலும் பிரயாணத்துக்குத் தமது ஆரோக்கியம் இடம் கொடுக்கும் வரை தாம் காத்திருக்க வேண்டும் என்றும் சொன்னார். தமது உடல் நிலை சரியாவதற்கு மேற்கொண்டு பதினைந்து நாட்களாவது ஆகும் என்று டாக்டர்கள் கூறுவதாகவும் காந்திஜி சொன்னார்.

21-ஆம் தேதி பிரார்த்தனைக் கூட்டத்தில் பேசியபோது, முதல் நாள் குண்டு எறியப்பட்டதைக் காந்திஜி பிரஸ்தாபித்தார். குண்டு எறிந்த வாலிபனுக்குப் பின்னணியில் இருப்பவர்கள் இப்படிப்பட்ட செயல்களை விட்டுவிட வேண்டுமென்றும், ஹிந்து மதத்தைக் காப்பதற்கு இது வழியல்ல என்றும் கூறினார். குண்டு எறிந்த ஹிந்து வாலிபனைக் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று தாம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலிடம் கூறியிருப்பதாகவும் காந்திஜி சொன்னார்.

உண்ணாவிரதத்துக்குப் பிறகு காந்திஜி முதல்முதலாக 22-ஆம் தேதியன்று பிரார்த்தனை மேடைக்கு நடந்து வந்தார். சிறிது சிறிதாகத் தமது உடம்பு தேறி வலுப்பெற்று வருவதாக்க கூறினார்.

23-ஆம் தேதி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள். அவர் வகுப்பு வேற்றுமை, மாகாண வேற்றுமை முதலியவை இன்றி அரும்பணியாற்றியதைக் குறிப்பிட்டுக் காந்திஜி பேசினார். 25-ஆம் தேதிப் பிரார்த்தனைக் கூட்டம் பிரம்மாண்டமானகாக இருந்தது. டில்லியில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சிநேக பாவத்துடன் பழகுவதை அறிந்து தாம் மனம் மகிழ்வதாகவும், ஒவ்வொரு ஹிந்துவும் சீக்கியரும் குறைந்தபட்சம் ஒரு முஸ்லிமையாவது பிரார்த்தனைக் கூட்டத்துக்கு அழைத்து வர வேண்டுமென்றும் காந்திஜி கூறினார். டில்லி மக்கள் தம்மை வார்தாவுக்குப்போக விடுவார்கள் என்று நம்புவதாகவும், ஆனால், தாம் இல்லாத சமயத்தில் டில்லியில் நிலைமை நல்ல விதமாக இருக்கும் என்ற புனிதமான உத்தரவாதத்தின்பேரில்தான் தாம் போகமுடியும் என்றும் சொன்னார்.

ஜனவரி 26-ஆம் தேதி சுதந்திர தினம். காந்திஜியின் பேச்சு, பிரார்த்தனைக் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. கிராமவாசி, நகரங்களுக்கு அடிமைப் பணி புரிவதற்காகப் பிறந்தவன் அல்ல என்பதை அவனுக்கு எடுத்துக் காட்டவேண்டும் என்று காந்திஜி தமது பேச்சில் குறிப்பிட்டிருந்தார்.

ஜனவரி 27-ஆம் தேதி ஸ்ரீ கிங்ஸ்லி மார்ட்டினுக்கு அளித்த பேட்டியில் அகிம்சையின் ஆற்றலையும், பெருமையையும் காந்திஜி விவரித்துக் கூறினார். காஷ்மீரை இரண்டாகப் பிரித்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒவ்வொரு பகுதியைக் கொடுத்துவிடுவதன் மூலம் காஷ்மீர்ப் பிரச்னைக்குப் பரிகாரம் காணும் யோசனையை மார்ட்டின் தெரிவித்தபோது, அந்த யோசனை சரியானது அல்ல என்று காந்திஜி நிராகரித்துவிட்டார்.

ஜனவரி 28-ஆம் தேதி மாலையில் ராஜகுமாரி அமிருத கெளரி வழக்கம்போல் காந்திஜியைப் பார்க்க வந்தார். ''பாபு, உங்கள் பிரார்த்தனைக் கூட்டத்தில் ஏதேனும் இரைச்சல்கள் இருந்தனவா?'' என்று அமிருத கெளரி கேட்டார். அதற்குக் காந்திஜி பின்வருமாறு பதிலளித்தார்: ''இரைச்சல்கள் இல்லை. உங்கள் கேள்வியைப் பார்க்கும்போது, என்னைப்பற்றி நீங்கள் கவலைப்பட்டுக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஒரு பைத்தியக்காரனின் துப்பாக்கிக் குண்டினால் நான் இறக்க நேரிட்டால், புன்னகை செய்துகொண்டே இறக்க வேண்டும். என்னிடத்தில் கோபமே இருக்கக் கூடாது. என் உள்ளத்திலும் உதடுகளிலும் இறைவன் குடிகொண்டிருக்க வேண்டும்.''

ஜனவரி 29-ஆம் தேதி பன்னுவிலிருந்து சுமார் 40 அகதிகள் காந்திஜியைப் பார்க்க வந்தார்கள். அவர்கள் மிகவும் துன்பத்துக்கு உள்ளான ஏழைகள். தங்கள் துன்பங்களுக்குக் காந்திஜியே காரணம் என்று ஓர் அகதி சொன்னான். காந்திஜி இமயமலைக்குப் போய்விட வேண்டுமென்றும் கோபத்துடன் சொன்னான். சிலர் காந்திஜியைத் திட்டவும் ஆரம்பித்தார்கள். ஆனால், வந்திருந்தவர்களில் பலர் காந்திஜியின் முயற்சிகளைப் பாராட்டிப் பேசினார்கள். இந்த விஷயங்களைக் காந்திஜி அன்றையப் பிரார்த்தனைக் கூட்டத்தில் தெரிவித்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்: "யாரும் சொல்லி நான் மனித சமூகத்துக்குச் சேவை புரியத் தொடங்கவில்லை. யாரும் சொல்லி அந்தச் சேவையை நான் கைவிடப்போவதும் இல்லை. நான் எப்படி இருக்க வேண்டும் மென்று கடவுள் விரும்புகிறாரோ அப்படியே இருக்கிறேன். அவர் கட்டளைப்படி நடக்கிறேன். அவர் என் விஷயத்தில் தம் இஷ்டப்படி எது வேண்டுமானாலும் செய்யட்டும். அவர் விரும்பினால், என்னைக் கொல்லலாம். அவருடைய கட்டளைப்படி நான் நடப்பதாகவே கருதுகிறேன். இமயமலையில் வசிப்பதை நான் பெருமகிழ்ச்சியோடு அனுபவிப்பேன். அங்கே எனக்கு அன்னபானாதிகளுக்கோ, ஆடைக்கோ கஷ்டம் ஏற்படாது. அது அமைதியான இடமாகவும் இருக்கும். ஆனால், அப்படிப்பட்ட அமைதியை நான் விரும்பவில்லை. என்னுடைய இமயமலை இங்கே இருக்கிறது. நீங்கள் எல்லோரும் இமயமலைக்குச் சென்றால், என்னையும் உங்களோடு அழைத்துச் செல்லலாம்.''

ஜனவரி 29-ஆம் தேதியன்று காந்திஜி அதிகமான வேலைகளில் ஈடுபட்டிருந்ததால், இரவில் மிகவும் களைத்துப் போய்விட்டார். காங்கிரஸின் புனரமைப்புக்காக அன்று மாலையிலிருந்து சட்ட விதிகளைத் தயாரித்துக்கொண்டிருந்தார். அவற்றை எப்படியும் தயாரித்து முடித்துவிட வேண்டும் என்று கூறி வேலையில் ஈடுபட்டிருந்தார். 9.15 மணிக்குப் படுக்கைக்குச் சென்றார்.

கடைசி நாள்

ஜனவரி 30-ஆம் தேதி. வெள்ளிக்கிழமை. காந்திஜி வழக்கம் போலக் காலை 3.30 மணிக்குத் தூக்கத்திலிருந்து எழுந்தார். 3.34 மணிக்குப் பிரார்த்தனை செய்துவிட்டு வேலை செய்ய உட்கார்ந்தார். 4.45 மணிக்கு எலுமிச்சம் பழ ரசமும் தேனும் கலந்த ஒரு டம்ளர் வெந்நீர் குடித்தார். 5 மணிக்கும் 6 மணிக்கும் இடையில் 16 அவுன்ஸ் மோசாம்பிச் சாற்றைப் பருகினார். சிறிது நேரம் படுத்து உறங்கி 6 மணிக்கு எழுந்து வந்தார். அமெரிக்காவுக்குச் செல்ல விருந்த ஸ்ரீமதி ராஜன் நேருவுக்குப் பேட்டியளித்தார். இதன் பின் அறைக்குள்ளேயே சிறிது உலாவினார். 8 மணிக்குப் பியாரிலாலிடம், காங்கிரஸின் புனரமைப்பு விதிகளைக் கொடுத்து, அவற்றை நன்றாகப் பரிசீலனை செய்து பார்க்கும்படி காந்திஜி கூறினார். எங்காவது விஷயங்கள் விடுபட்டிருந்தாலும் அவற்றைப் பூர்த்தி செய்யும்படி கூறினார்.

காந்திஜி மேஜையில் படுத்துப் பத்திரிகைகள் படித்துக்கொண்டிருந்தபோது அவருக்கு உடம்பு பிடித்துவிடப்பட்டது. அரை மணி நேரத்துக்குப் பிறகு குளிக்கச் சென்றார். அதற்கு முன்னதாகப் பியாரிலாலிடம், காங்கிரஸ் புனரமைப்பு விதிகளைப் படித்துப்பார்த்தாகிவிட்டதா என்று விசாரித்தார். சென்னை ராஜ்யத்தில் உணவுப் பிரச்னையைச் சமாளிப்பது எப்படி என்பது குறித்து, நோவாகாலி அனுபவத்தை ஒட்டி, ஒரு குறிப்புத் தயாரிக்கும்படி சொன்னார். அப்போது காந்திஜி கூறியதாவது: “உணவு மந்திரி காரியாலயம் பயப்படுகிறது. தென்னை, பனை, வேர்க்கடலை, வாழை ஆகியவற்றுடன் பலவிதமான கிழங்குகளையும் இயற்கை ஏராளமாக வழங்கியிருக்கும் சென்னையைப் போன்ற ஒரு மாகாணத்தில், உணவுக்கான இயற்கை வளங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை மட்டும் மக்கள் அறிந்தால் அவர்கள் பட்டினி கிடக்க வேண்டியதில்லை என்றே நான் கூறுவேன்.''

அடுத்து நடைபெறவிருந்த காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்துக்காகக் காந்திஜி தயாரித்திருந்த காங்கிரஸின் புனரமைப்பு விதிகளில் காங்கிரஸ் ஸ்தாபனத்தை லோக சேவா சங்கமாக மாற்றி, கிராமப் பஞ்சாயத்துக்களை அமைத்து, கிராம சேவைக்காக ஊழியர்களை நியமிக்கும் ஆலோசனை கூறப்பட்டிருந்தது. லோக சேவா சங்கத்தின் வேலைகளுக்குக் கிராமவாசிகளிடமும், மற்றவர்களிடமும், குறிப்பாக ஏழை மக்களிடமும், பணம் வசூலித்துக்கொள்ள வேண்டுமென்றும் காந்திஜி தாம் தயாரித்த விதிகளில் கூறியிருந்தார்.

குளித்துவிட்டு வந்து 9.30 மணிக்கு வங்காளிமொழிப் பாடங்களைக் கற்கலானார். நோவாகாலி யாத்திரையிலிருந்து காந்திஜி தினமும் வங்காளி மொழி கற்றுவந்தார். பின்பு காலை உணவு அருந்தினார். 12 அவுன்ஸ் ஆட்டுப் பால், பச்சை முள்ளங்கி, தக்காளிப் பழங்கள், பச்சடி, நான்கு ஆரஞ்சுப் பழங்களின் ரசம், வேக வைத்த காய்கறிகள், இஞ்சிச்சாறு ஆகியவையே அன்று காந்திஜி உட்கொண்ட காலை உணவு. அப்பொழுது பியாரிலால் வந்து காங்கிரஸ் புனரமைப்பு விதிகளைக் கொடுத்தார். அதைக் காந்திஜி நுட்பமாகப் படித்துப் பார்த்தார். பியாரிலால் புதிதாகச் சேர்த்திருப்பவற்றையும், அவர் செய்திருந்த மாறுதல்களையும் நன்கு பரிசீலனை செய்தார். அதன்பின் படுத்து உறங்கினார். அவருடைய உள்ளங்கால்களில் நெய் தடவப்பட்டது.

12-மணிக்குக் காந்திஜி எழுந்து தேன் கலந்த வெந்நீர் ஒரு டம்ளர் குடித்தார். டில்லியின் முஸ்லிம் மதத் தலைவர்கள் சிலருக்குப் பேட்டியளித்தார். தாம் மறுநாள் சேவா கிராமத்துக்குப் போகப்போவதாகவும், பிப்ரவரி 2-ஆம் தேதியன்று அங்கே ஒரு மகாநாடு நடைபெறப்போகிறதென்றும், பிப்ரவரி 4-ஆம் தேதி தாம் திரும்பவும் டில்லிக்கு வரப்போவதாகவும் காந்திஜி அவர்களிடம் கூறினார். அப்பொழுது, கடவுள் வேறு விதமாக நினைத்தாலொழிய, எதிர்பாராத விதமாக ஏதாவது நினைத்தாலொழிய, தாம் டில்லிக்கு வெளியே சில நாட்கள்தான் இருக்கப்போவதாகக் காந்திஜி சொன்னார்.

பிஷன் என்பவரை அழைத்து, ''எனக்கு வந்துள்ள முக்கியமான கடிதங்களைக் கொண்டுவா; இன்று அவற்றிற்கு நான் பதில் எழுதியாக வேண்டும். நாளை நான் இல்லாமல் போனாலும் போகலாம் '' என்றார்.

சுதிர்கோஷுடனும் பியாரிலாலுடனும் காந்திஜி பேசிக்கொண்டிருந்தார்.

2.15 மணிக்கு நித்திய வழக்கம்போல காந்திஜி பேட்டிகள் அளிக்கத் தொடங்கினார். அன்று காந்திஜியைப் பேட்டி கண்டவர்களில் இலங்கையைச் சேர்ந்த டாக்டர் டி-சில்வாவும் ஒருவர். அவருடன் அவருடைய மகளும் வந்திருந்தாள். பிப்ரவரி 14-ஆம் தேதியன்று இலங்கை சுதந்திரம் பெறுவதால், அன்றைத் தினத்துக்குக் காந்திஜியிடம் விசேடச் செய்தி பெற்றுச் செல்ல டாக்டர் டி-சில்வா வந்திருந்தார். அவருடைய மகள் காந்திஜியிடம் கையெழுத்து வாங்கினாள். காந்திஜி போட்ட கடைசிக் கையெழுத்து அதுதான்.

3 மணிக்குப் பேராசிரியர் ராதாகுமுத முக்கர்ஜி வந்து காந்திஜிக்குத் தம்முடைய புத்தகம் ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்தார். ஒரு பிரெஞ்சுப் போட்டோகிராபர், காந்திஜிக்குப் போட்டோப் படங்களின் தொகுப்பு ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்தார். வேறு சிலரும் வந்து பேட்டி கண்டார்கள். 4-மணிக்குப் பேட்டிகள் முடிந்தன. அப்போது சர்தார் வல்லபபாய் பட்டேல் வந்தார். காந்திஜியும் அவரும் தனியே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது பட்டேலின் மகள் மணிபென் பட்டேலும் உடன் இருந்தார். 4.30 மணிக்குக் காந்திஜிக்கு ஸ்ரீமதி ஆபா காந்தி மாலை உணவு எடுத்துச் சென்றார். காந்திஜி 12 அவுன்ஸ் ஆட்டுப்பால், 12 அவுன்ஸ் மரக்கறி சூப், 3 ஆரஞ்சுப் பழங்களின் ரசம், வேக வைத்தவையும் பச்சையானவையுமான காய்கறிகள் ஆகியவற்றைச் சாப்பிட்டார்.

மாலை 5 மணி ஆயிற்று. காந்திஜி அப்போது பிரார்த்தனை மேடையில் இருக்க வேண்டும். ஆனால் பட்டேல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்ததால் 10 நிமிஷம் தாமதமாகி 5.10 மணிக்குக் காந்திஜி எழுந்து செருப்பை மாட்டிக்கொண்டு வெளியே வந்தார். பேத்திகளான மனு காந்தி, ஆபா காந்தி ஆகிய இருவரின் தோள்களிலும் சாய்ந்துகொண்டு காந்திஜி நடந்துவரும்போது, ஆபா காந்தியுடன் தமாஷாகப் பேசிக்கொண்டு வந்தார். 10 நிமிஷம் தாமதம் ஆகிவிட்டதால் வேகமாகவும் நடந்தார். சுமார் 500 பேர் பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்திருந்தார்கள், புல் தரையில் காந்திஜி நடந்துவரலானார். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்திருந்த பலர் எழுந்து நின்றார்கள். காந்திஜிக்கு வழி விலகிக் கொடுத்தார்கள். எல்லோரும் வணங்கவே, காந்திஜியும் கைகுவித்து நமஸ்கரித்துக்கொண்டு வந்தார்.

திடீரென்று ஒருவன் இடது பக்கத்திலிருந்து கூட்டத்தை விலக்கிக்கொண்டு வந்தான். அவன் காந்திஜியை நோக்கி வருவதைப் பார்த்ததும், காந்திஜியின் பாதங்களைத் தொட்டு நமஸ்கரிக்கவே அவன் வருவதாக நினைத்து, மனு காந்தி அவன் கையைப் பிடித்துத் தடுக்க முயன்றார். பாதங்களைத் தொட்டு வணங்குவது காந்திஜிக்குப் பிடிக்காத காரியம். அவன் மனு காந்தியை அப்பால் தள்ளிவிட்டான். அந்தப் பெண்மணியின் கையிலிருந்த காந்திஜியின் நோட்டுப் புத்தகம், ஜபமாலை, எச்சில் படிக்கம் ஆகியவை கீழே விழுந்துவிட்டன. அவற்றைப் பொறுக்கி எடுப்பதற்காக மனு காந்தி குனிந்தார். அப்போது அவன் காந்திஜிக்கு எதிரே இரண்டு அடி தூரத்தில் வந்து நின்றுகொண்டு கைத் துப்பாக்கியால் மூன்று முறை சுட்டான். மூன்று குண்டுகளும் காந்திஜியின் மார்பில் பாய்ந்தன. இரண்டு ஊடுருவிச் சென்றுவிட்டன. ஒரு குண்டு அவருடைய இருதயத்துக்குள்ளேயே இருந்துவிட்டது.

முதல் குண்டு பாய்ந்ததும் காந்திஜியின் கால் தடுமாறியது. நமஸ்கரித்த கரங்கள் கீழே சரிந்தன. இரண்டாவது குண்டு பாய்ந்ததும், ''ஹே, ராமா!'' என்று இரண்டு முறை சொன்னார். அவருடைய உடையில் ரத்தக்கறை படிந்தது. முகம் வெளுத்துவிட்டது. மூன்றாவது குண்டு பாய்ந்ததும் கீழே ஈர மண்ணிலும் புல்லிலும் விழுந்து அமரத்துவம் அடைந்தார். அப்போது மணி 5.17. அவருடைய மூக்குக் கண்ணாடி கீழே விழுந்தது. செருப்புக்கள் பாதங்களிலிருந்து நழுவின. ஐந்தாறு நிமிடங்களுக்குள் இவ்வளவும் நடந்துவிட்டன.

காந்திஜியின் சடலத்தைப் பிர்லா மாளிகைக்குள் எடுத்துக் சென்றார்கள்.

சில நிமிடங்களுக்கு முன் அங்கிருந்து சென்ற வல்லபபாய் பட்டேல் திரும்பவும் வந்து, காந்திஜியின் நாடியைத் தொட்டுப் பார்த்தார். இலேசாக நாடி துடிப்பதுபோன்ற ஒரு பிரமை அவருக்கு ஏற்பட்டது. சுடப்பட்ட பின் பத்து நிமிட நேரத்துக்குள் டாக்டர் டி. பி. பார்க்கவா வந்து சேர்ந்தார். அவர் வந்து பரிசோதித்துப் பார்த்து, காந்திஜி உயிர்நீத்துப் பத்து நிமிஷங்கள் ஆகிவிட்டன என்று தெரிவித்தார். அப்புறம் டாக்டர் ஜீவராஜ மேத்தாவும் வந்து காந்திஜியின் மரணத்தை ஊர்ஜிதம் செய்தார். ஜவாஹர்லால் நேரு விரைந்து ஓடி வந்தார். காந்திஜியின் அருகில் முழந்தாளிட்டு, காந்திஜியின் ரத்தம் படிந்த ஆடையில் தமது முகத்தைப் புதைத்துக்கொண்டு நேரு அழுதார். அதன் பின் காந்திஜியின் கடைசிப் புதல்வரான தேவதாஸ் காந்தியும், மௌலானா அபுல்கலாம் ஆஸாத்தும், மற்றப் பிரமுகர்களும் வந்து சேர்ந்தார்கள்.

வெளியே நின்ற மாபெரும் ஜனத்திரள் காந்திஜியைப் பார்க்க வேண்டுமென்று துடித்துக்கொண்டிருந்தது. அதற்காக அறைக்கு வெளியே சில மேஜைகளை நெருக்கமாகப் போட்டு, அதன்மேல் காந்திஜி வழக்கமாகப் படுத்து உறங்கும் பலகையை வைத்தார்கள். அதில் காந்திஜியின் சடலம் கிடத்தப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஏற்பாடு திருப்திகரமாக இல்லாது போகவே, பிர்லா மாளிகையின் மாடி முகப்புக்குக் காந்திஜியின் சடலத்தைக் கொண்டுசென்று, எல்லோரும் தரிசிக்கக் கூடிய முறையில் வைத்தார்கள். துக்க சாகரத்தில் மூழ்கிய மக்கள் மகாத்மாவுக்குத் தங்கள் கடைசி அஞ்சலியைச் செலுத்தினார்கள்.

நள்ளிரவில் சடலம் திரும்பவும் கீழே கொண்டுவரப்பட்டது. 2 மணிக்கு அவருடைய சடலத்துக்கு நீராட்டப்பட்டது. அப்போது அப்புறப்படுத்தப்பட்ட அவருடைய கம்பளிப் போர்வையில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த மூன்று சிறு துவாரங்கள் இருந்தன. அவருடைய அரைஞாண் கயிற்றில் நூலினால் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த கைக்குட்டை ரத்தத்தால் நனைந்திருந்தது. கம்பளிப் போர்வையில் மண்ணும் புல்லும் ஒட்டிக்கொண்டிருந்தன.

நீராட்டிய பின் சடலத்துக்குக் கதராடை கட்டி, கழுத்தில் கதர் நூல் மாலையும், ஜபமாலையும் சூட்டினார்கள். நெற்றியிலும், கழுத்திலும் மார்பிலும் சந்தனமும், குங்குமமும் இடப்பட்டன. சடலத்தைச் சுற்றி ரோஜா இதழ்களைத் தூவி, தலைமாட்டில் ''ஹே, ராமா!'' என்ற எழுத்துக்களையும், கால்மாட்டில் "ஓம்'' என்ற எழுத்தையும் பூவிதழ்களால் அடுக்கினர். இரவெல்லாம் நெய் விளக்கு எரிந்துகொண்டிருந்தது.

சடலத்தை எண்ணெயில் இட்டு நிரந்தரமாக வைத்திருப்பது என்ற யோசனையையும், சில நாட்களுக்காவது வைத்திருப்பது என்ற யோசனையையும் தேவதாஸ் காந்தியும், பியாரி லாலும் ஆட்சேபித்துவிட்டனர். மறுநாளே சடலத்தைத் தகனம் செய்துவிட முடிவு செய்யப்பட்டது.

காலை 3.30 மணிக்கு, சடலத்தைச் சுற்றி அமர்ந்து அழுது கொண்டிருந்தவர்கள் பிரார்த்தனை செய்யத் தொடங்கினார்கள். எப்பொழுதும் காந்திஜி பிரார்த்தனைக்காகக் கண் விழித்து எழும் நேரம் அதுதான்.

பிரார்த்தனை முடிந்தது; கீதை வாசிக்கப்பட்டது. அதன் பின் சீக்கியர் மதக் கிரந்தமான கிரந்த சாஹிப் வாசிக்கப்பட்டது.

மறுநாள்

காலை ஆறு மணி. பல நாடுகளையும் சேர்ந்த ஸ்தானீகர்கள் வந்து காந்திஜிக்கு இறுதி மரியாதை தெரிவித்தார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு, மக்கள் தரிசிப்பதற்காகக் காந்திஜியின் சடலம் திரும்பவும் மாடி முகப்பில் கொண்டுபோய் வைக்கப்பட்டது.

11 மணிக்குக் காந்திஜியின் மூன்றாவது குமாரர் ராமதாஸ் காந்தி நாகபுரியிலிருந்து விமானத்தில் வந்து சேர்ந்தார்.

சடலத்தைக் கீழே கொண்டுவந்து, மூவர்ணக் கொடியால் போர்த்து, ராணுவப் பீரங்கி வண்டியில் வைத்தார்கள். முகம் மட்டும் திறந்த வைக்கப்பட்டிருந்தது. அந்த வண்டியில் நேரு, பட்டேல் முதலிய தலைவர்களும், காந்திஜியின் நெருங்கிய சகபாடிகளும் இருந்தார்கள். இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றைச் சேர்ந்த 200 பேர் நான்கு கனமான கயிறுகளைப் பிடித்து வண்டியை இழுத்துச் சென்றார்கள். 11.45 மணிக்குக் காந்திஜியின் அந்திம யாத்திரை ஆரம்பமாயிற்று. 2 மைல் நீள ஊர்வலத்தில் 15 லட்சம் பேர் நடந்து சென்றார்கள். "மகாத்மா காந்திக்கு ஜே!'' "தேசபிதாவுக்கு ஜே!'' என்ற கோஷங்கள் வானைப் பிளந்தன. இடையிடையே, "ரகுபதி ராகவ'' கீதத்தை ஆயிரக்கணக்கானவர்கள் பாடிக்கொண்டு சென்றார்கள். மூன்று டகோட்டா விமானங்கள் ஊர்வலத்துக்கு மேலாக ரோஜா இதழ்களைத் தூவிக்கொண்டு பறந்தன. வண்டியின் முன்னும் பின்னும் நாலாயிரம் சிப்பாய்களும், ஆயிரம் விமானப் படையினரும், ஆயிரம் போலீஸாரும், நூறு கடற்படையினரும் நடந்து சென்றனர்.

ஊர்வலம் 5 மைல் தூரம் சென்று மாலை 4.20 மணிக்கு யமுனை நதிக்கரைக்கு அருகில் உள்ள ராஜகட்டத்தை அடைந்தது. சந்தனக் கட்டைகளால் ஆன சிதையில் காந்திஜியின் சடலம் வடபக்கம் தலையை வைத்துக் கிடத்தப்பட்டது. 4.45-க்கு ராமதாஸ் காந்தி கர்ப்பூரத்தைக் கொளுத்திச் சிதைக்குத் தீ மூட்டினார். கூட்டத்தினர் அழுதனர். சில நிமிஷங்களுக்குள் சந்தனக் கட்டைகள் கொழுந்துவிட்டு எரிந்தன. மகாத்மாவின் பூத உடம்பு சாம்பலாயிற்று.

சிதை பதினான்கு மணி நேரம் எரிந்த பின் நெருப்புத் தணிந்தது. அதுவரை தொடர்ந்து பிரார்த்தனை செய்தார்கள். கீதை முழுவதும் வாசிக்கப்பட்டது. இருபத்தேழு மணி நேரத்துக்குப் பின், நெருப்பு முழுவதும் ஆறியபின், சாம்பலையும், எலும்புத் துண்டுகளையும் சேகரித்து, ஒரு கதர்ப்பைக்குள் வைத்தனர். அஸ்தியில் ஒரு துப்பாக்கிக் குண்டு அகப்பட்டது. யமுனையின் தீர்த்தத்தை எலும்புகளில் தெளித்தனர். அஸ்தியை ஒரு ஜாடியில் வைத்து ராமதாஸ் காந்தி பிர்லா மாளிகைக்குச் சுமந்து சென்றார்.

பதினான்காம் நாள்

பர்மா, திபேத், இலங்கை, மலாயா ஆகிய நாடுகளுக்கும் சிறிது அஸ்தி அனுப்பப்பட்டது. பதினான்காம் நாள் இந்தியாவின் புண்ணிய நதிகளிலும், சமுத்திர கட்டங்களிலும் அஸ்தி கரைக்கப்பட்டது.

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் கலக்கும் திரிவேணி சங்கமத்தில் நேரு, பட்டேல், ஸ்ரீமதி சரோஜினி நாயுடு, ஆஸாத் ஆகியோர் முன்னிலையில் அஸ்தி கரைக்கப்பட்டது. உலக மகா புருடரின் பூத உடல் பரிபூரணமாக உலகிலிருந்து மறைந்தது.

உலக நாடுகள் காந்திஜியின் நினைவுக்கு அஞ்சலி செலுத்தின. ஐக்கிய நாடுகள் சபை துக்கம் தெரிவிப்பதற்காகத் தனது கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டது. வெளிநாடுகளிலிருந்து இந்திய சர்க்காருக்குத் துக்கம் தெரிவித்து 3441 செய்திகள் வந்தன.

பொய்யா விளக்கு

காந்திஜி சுடப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் வானொலியில் பேசிய நேரு பின்வருமாறு கூறினார்:

''நம்முடைய வாழ்வின் விளக்கு அணைந்துவிட்டது. எங்கும் இருள் சூழ்ந்திருக்கிறது. ....... நம்முடைய அன்புக்குரிய தலைவர், பாபு என்று நாம் அழைத்த தேசபிதா இப்போது இல்லை. ....... இத்தனை வருடங்களாக நாம் அவரைப் பார்த்ததுபோல் இனி மேல் பார்க்க முடியாது. ஆலோசனையையோ, ஆறுதலையோ நாடி அவரிடம் இனி நாம் போவதற்கில்லை. எனக்கு மட்டும் அல்ல, இந்நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கும் இது பயங்கரமான அடி. நானோ, மற்ற யாருமோ, உங்களுக்குக் கூறக்கூடிய எந்தப் புத்திமதியினாலும் இந்த அடியின் வேதனையை மட்டுப்படுத்த முடியாது.

"விளக்கு அணைந்துவிட்டது என்று சொன்னேன். அது தவறுதான். ஏனென்றால், இந்நாட்டில் சுடர்விட்டு எரிந்த இந்த விளக்கு சாதாரண விளக்கல்ல. பல ஆண்டுகளாக இந்நாட்டுக்கு ஒளியூட்டிய இந்த விளக்கு இன்னும் பல்லாண்டு காலத்துக்கு இந்நாட்டுக்கு ஒளி பெய்துகொண்டிருக்கும். ஆயிரம் வருஷங்களுக்குப் பிறகும் இந்தத் தேசத்தில் இந்த விளக்கைக் காண்போம்; உலகம் இதைக் காணும். இவ்விளக்கு எண்ணற்ற இதயங்களுக்கு ஆறுதல் அளிக்கும். ஏனென்றால், இந்த விளக்கு உயிர் வாழும் உண்மைக்குப் பிரதிநிதியாக விளங்கியது............''

இவ்வாறு நேரு பேசினார்.

கீதையின் எட்டாவது அத்தியாயத்தில், ஐந்தாவது சுலோகத்தில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்:

''கடைசி நிமிஷத்தில் என்னை மட்டுமே நினைவில் கொண்டு சரீரத்தை உதறுகிறவன், என்னுடன் ஐக்கியமாகிறான். அதில் யாதொரு சந்தேகமும் இல்லை.''

காந்திஜி பூத உடலைத் துறந்தபோது, ''ஹே ராமா!" என்று ராமநாமத்தையே இரண்டு முறை உச்சரித்தார்.

காந்திஜியின் வாழ்க்கைக் குறிப்புகள் முற்றிற்று.

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (