Skip to main content

காந்தி: சத்திய சோதனைக்குப் பின் - 18


(காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் வருடவாரியாக இத்தளத்தில் வெளியாகிறது. சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் குறிப்புகள் மகாத்மா காந்தி நூல்கள் வரிசையில், தொகுதி மூன்றில் சேர்க்கப்பட்டன.)

1946 (வயது 77)

ஜனவரி 9-ஆம் தேதி காந்திஜி கெளஹத்திக்குச் சென்று அஸ்ஸாமில் ஒரு வாரம் தங்கினார்.

ஜனவரி 21-ஆம் தேதி காந்திஜி சென்னைக்கு விஜயம் செய்தார். 24-ஆம் தேதி நிர்மாண ஊழியர்கள் மகாநாட்டைத் திறந்து வைத்துப் பேசினார். அப்போது, இந்தியர்கள் தமக்குள் தாய்மொழியிலோ ராஷ்டிர பாஷையிலோதான் பேசிக்கொள்ள வேண்டுமென்றும், ஆங்கிலத்தில் பேசக் கூடாதென்றும் புத்திமதி கூறினார்.

ஜனவரி 25-ஆம் தேதி சென்னை ஹிந்தி பிரசார சபை என்ற பெயரை ஹிந்துஸ்தானி பிரசார சபை என்று மாற்றவேண்டும் மென்று சிபார்சு செய்தார். இந்தியாவின் சுயராஜ்யத்துக்காக, இந்திய மக்களின் நலனுக்காக மக்கள் ஹிந்துஸ்தானியைக் கற்றுக்கொள்ள வேண்டுமெனக் கூறினார்.

ஜனவரி 26-ஆம் தேதி சுதந்திர தினம். மறுவருடம் ஜனவரி 26-க்குள் சுதந்திரம் பெற்றுவிடுவோம் என்று நம்புவோமாக என்று காந்திஜி பேசினார். தமிழர் - ஆந்திரர் போட்டி கூடாதென்றும், தமிழர்களும், ஆந்திரர்களும், கன்னடியர்களும், மலையாளிகளும் ஒரு மரத்தின் கிளைகள் போன்றவர்கள் என்றும், இதை உணர்ந்தால் தான் அவர்கள் சுதந்திரத்துக்குத் தகுதியானவர்கள் ஆவார்கள் என்றும் கூறினார்.

ஜனவரி 27-ஆம் தேதி ஹிந்தி பிரசார சபையின் பட்டமளிப்பு விழாவுக்குக் காந்திஜி தலைமை தாங்கினார்.

பிப்ரவரி 3-ஆம் தேதி மதுரைக்கும், 4-ஆம் தேதி பழனிக்கும் விஜயம் செய்தார்.

மூன்றரை வருஷங்களுக்குப் பிறகு பிப்ரவரி 10-ஆம் தேதி ஹரிஜன் பத்திரிகை திரும்பவும் ஆரம்பிக்கப்பட்டது. முதல் இதழின் எல்லாக் கட்டுரைகளையும் காந்திஜியே எழுதினார்.

பிப்ரவரி 19-ஆம் தேதி காந்திஜி புனாவுக்குப் போய்ச் சேர்ந்தார். அன்றைத் தினம் ராயல் இந்தியக் கடற்படையினர் தங்கள் கோரிக்கைகளைச் சமர்ப்பித்தனர். இதை எதிர்பார்த்தவர்போல ஒரு வாரத்துக்கு முன்பே காந்திஜி ஹரிஜனில் பின்வருமாறு எழுதினார்: ''எங்கும் வெறுப்பு நிலவுகிறது. பொறுமையற்றவர்களாக உள்ள தேசபக்தர்கள் இந்த நிலையைப் பயன்படுத்திக்கொள்ளுவார்கள். முடிந்தால், நாட்டின் சுதந்திரத்துக்காகப் பலாத்கார வழியில் இறங்குவார்கள். அது எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்த இடத்திலும் தவறு என்று நான் கூறுகிறேன்."

20, 21-ஆம் தேதிகளில் இந்தியக் கடற்படையினர் பிரிட்டிஷாரால் சுடப்பட்டபோது, அவர்களும் பதிலுக்குச் சுட்டார்கள். இதன் காரணமாகப் பம்பாய் நகருக்குள்ளேயும் கலகங்கள் நடந்தன. அவை மற்ற நகரங்களுக்கும் பரவின. 22-ஆம் தேதி காந்திஜி விடுத்த ஓர் அறிக்கையில், "கடற்படையில் பணிபுரிவது தங்களுக்கு அவமானம் உண்டுபண்ணத்தக்கதாக இருந்தால் அவர்கள் ஏன் தொடர்ந்து அங்கே பணிபுரிய வேண்டும்! அதிலிருந்து விலகிவிடுவது அகிம்சாபூர்வமான ஒத்துழையாமையாகும். ஆனால், இப்போது அவர்கள் செய்யும் காரியம் இந்தியாவுக்கு ஒரு கெட்ட உதாரணமாகவே இருக்கிறது '' என்று கூறினார்.

மார்ச்சு 15-ஆம் தேதி பம்பாயில் காரியக் கமிட்டிக் கூட்டம் நடந்தது. அதில் காந்திஜியும் கலந்துகொண்டார்.

மார்ச்சு 30-ஆம் தேதி ஹரிஜனில் காந்திஜி எழுதிய ஒரு குறிப்பில், நேத்தாஜி உயிரோடு இருப்பதாகவே அதுவரை தாம் நம்பி வந்ததாகவும், ஆனால், பிறகு கிடைத்த ஆதாரங்களின்படி அவர் காலமாகிவிட்டதாகத் தாம் கருதுவதாகவும் தெரிவித்தார்.

ஏப்ரல் முதல் தேதி காந்திஜி டில்லிக்குச் சென்று, ஹரிஜனங்கள் வசிக்கும் பகுதியில் தங்கினார். அதே தேதியில் பிரிட்டிஷ் மந்திரி சபையின் தூது கோஷ்டியைச் சேர்ந்த லார்டு பெதிக் லாரன்ஸ், ஸர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ், ஸ்ரீ ஆல்பெர்ட் அலெக்ஸாண்டர் ஆகியோர் இந்தியத் தலைவர்களை முதல் முதலாகச் சந்தித்துப் பேசினார்கள்.

ஏப்ரல் 12-ஆம் தேதியிலிருந்து 18-ஆம் தேதி வரையிலும், 25-இலிருந்து 30 வரையிலும், டில்லியில் கூடிய காரியக் கமிட்டி, அரசியல் நிர்ணய சபையும் இடைக்காலத் தேசீய சர்க்காரும் ஏற்படுத்துவது சம்பந்தமாகப் பிரிட்டிஷ் தூது கோஷ்டியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டியதைப்பற்றி ஆலோசித்தது. மேற்கொண்டும் சிம்லாவில் பேச்சுவார்த்தைகள் நடத்துவதென்றும் ஏற்பாடாகியிருந்தது.

மே 4-ஆம் தேதி காந்திஜி சிம்லாவிலிருந்து விடுத்த ஓர் அறிக்கையில், பிரிட்டிஷ் தூது கோஷ்டியினர் இந்தியாவின் மீதுள்ள தங்கள் பிடியை விட்டுவிட வேண்டுமென்ற உறுதிகொண்டிருக்கிறார்கள் என்றும், அவர்கள் வார்த்தையைத் தாம் நம்புவதாகவும், அப்படியே எல்லோரும் நம்ப வேண்டுமென்றும் கூறினார்.

சிம்லா மகாநாட்டில் வெற்றி காணாது போகவே பிரிட்டிஷ் தூது கோஷ்டியினரும், வைசிராயும், காங்கிரஸ் - லீக் தலைவர்களும் மே 12-ஆம் தேதி டில்லிக்குத் திரும்பினார்கள்.

மே 18-ஆம் தேதி பிரிட்டிஷ் கோஷ்டியின் அறிக்கை வெளிவந்தது. இந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்த யோசனைகளைக் காந்திஜி பாராட்டி வரவேற்றார்.

தூது கோஷ்டியார், ஒரு சுதந்திரத் தனிராஜ்யமாகப் பாகிஸ்தானை ஸ்தாபிக்கும் யோசனையை நிராகரித்துவிட்டனர். மாகாணங்களும் சமஸ்தானங்களும் அடங்கிய ஐக்கிய சுதந்திர இந்தியாவையே அவர்கள் ஆதரித்தனர். இந்த யோசனைகளை மாற்றுவது, நிராகரிப்பது முதலிய சகல பொறுப்புக்களையும் இனிமேல் கூட்டவிருக்கும் அரசியல் நிர்ணய சபையின் பொறுப்பில் விட்டுவிட்டனர். ஆகவே, கூடிய சீக்கிரத்தில் அரசியல் நிர்ணய சபையை அமைக்கவும், இடைக்கால சர்க்காரை நிறுவவும் வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.

தூது கோஷ்டியின் பேச்சு வார்த்தைகள் நடுவில் சிறிது காலம் நின்றிருந்தமையால், அந்த இடைக்காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு தேகாரோக்கியம் பெறுவதற்காகக் காந்திஜி மே மாதக் கடைசியில் முஸூரிக்குச் சென்றார். ஜூன் 8-ஆம் தேதி நள்ளிரவுக்குப் பின் அங்கிருந்து டில்லிக்குப் புறப்பட்டார். 9-ஆம் தேதியன்று டில்லியில் காரியக் கமிட்டி கூடியது.

மந்திரி சபை அமைப்பதில் வைசிராய்க்கு உதவி புரியும்படி கோரி 14 பேருக்கு அழைப்புக்கள் அனுப்பப்பட்டிருப்பதாக ஜூன் 16-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. காங்கிரஸும் லீக்கும் கருத்தொற்றுமை கொள்ளும்படி செய்வதில் தூது கோஷ்டியார் தோல்வியடையவே, முட்டுக்கட்டையைத் தீர்க்க அவர்கள் வேறு வழியைக் கண்டுபிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஜூன் 29-ஆம் தேதி இரவு காந்திஜி டில்லியிலிருந்து புனாவுக்கு தனி ரெயிலில் பிரயாணம் செய்துகொண்டிருந்த போது, நேராலுக்கும், கார்ஜத்துக்கும் இடையே தண்டவாளங்களின்மீது வைக்கப்பட்டிருந்த பாராங்கற்களில் ரெயில் மோதியது. ரெயிலைக் கவிழ்க்க வேண்டுமென்ற நோக்கத்துடனேயே இந்தக் கற்கள் வைக்கப்பட்டிருந்தன. டிரைவர் உரிய காலத்தில் வண்டியை நிறுத்தியிராவிட்டால், வண்டி முழுவதும் நாசமாகியிருக்கும்; பிரயாணிகளும் கொல்லப்பட்டிருப்பார்கள். நல்ல வேளையாக எஞ்சினுக்குச் சேதம் ஏற்பட்டதோடு நின்றது. இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு ரெயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. காந்திஜி அப்போது தூங்கிக்கொண்டிருந்தார். மறுநாள்தான் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டார்.

ஜூன் 30-ஆம் தேதி புனாவில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்திஜி பின்வருமாறு கூறினார்: ''மரணத்தின் வாயிலிருந்து கருணை மிக்க ஆண்டவனால் நான் காப்பாற்றப்படுவது இது ஏழாவது தடவை என்று நினைக்கிறேன். நான் எந்த மனிதனுக்கும் தீங்கிழைத்ததில்லை; யாரிடத்திலும் பகைமை கொண்டது கிடையாது. அப்படியிருக்கும்போது, என்னைக் கொல்வதற்கு யாரும் எதற்காக விரும்ப வேண்டும் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. இந்தக் கடைசி விபத்து, நான் 125 வயது வரை வாழலாம் என்ற என் நம்பிக்கையைப் பலப்படுத்துகிறது.''

காரியக் கமிட்டிக் கூட்டத்தில் கலந்துகொள்ளுவதற்காக ஜூலை 5-ஆம் தேதி காந்திஜி பம்பாய்க்குச் சென்றார். அங்கே நடைபெற்ற அ. இ. கா. க. கூட்டம், ஜூன் 26- இல் காரியக் கமிட்டி நிறைவேற்றிய தீர்மானத்தை அங்கீகரித்தது. அதன்படி, இடைக்கால சர்க்கார் அமைப்பது பற்றிய பிரிட்டிஷ் தூது கோஷ்டியின் யோசனைகள் நிராகரிக்கப்பட்டன; அரசியல் நிர்ணய சபையை அமைப்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஜூலை 13-ஆம் தேதி காந்திஜி பஞ்சகனிக்குச் சென்றார். அங்கே இரண்டு வாரங்கள் தங்கிவிட்டு, புனாவுக்கு வந்து மூன்று நாட்கள் இருந்தார். புனாவில் நடைபெற்ற காங்கிரஸ் கல்வி மந்திரிகளின் மகாநாட்டில், ஆதாரக் கல்வியை வற்புறுத்திப் பேசினார். பின்பு உருலிகாஞ்சன் கிராமத்துக்குச் சென்று 4 நாட்கள் தங்கிவிட்டு, ஆகஸ்டு 6-ஆம் தேதி சேவாகிராமத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கே 8-ஆம் தேதி காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. அரசியல் நிர்ணய சபையில் பங்கெடுத்துக்கொள்ளுவதில்லை என்று முஸ்லிம் லீக் தீர்மானித்திருப்பது குறித்துக் காரியக் கமிட்டி வருத்தம் தெரிவித்தது.

உடனடியாக இடைக்கால சர்க்கார் அமைக்கும் வைசிராயின் யோசனையைக் காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. கூட்டுச் சர்க்கார் அமைக்கலாம் என்று யோசனை தெரிவித்து ஜின்னாவுக்குக் காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் நேரு கடிதம் எழுதினார். ஆனால், லீக் செய்த முடிவை மாற்றுவதற்கில்லை என்று ஜின்னா பதில் எழுதிவிட்டார்.

ஆகஸ்டு 16-ஆம் தேதி முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை தினத்தை அனுஷ்டித்ததன் பயனாக கல்கத்தாவில் 90 பேர் கொல்லப்பட்டனர். 1000 பேர் காயமடைந்தனர். மற்ற இடங்களிலும் பலாத்காரச் செயல்கள் நடைபெற்றன.

ஆகஸ்டு 24-ஆம் தேதி ஜவாஹர்லால் நேருவைத் தலைவராகக் கொண்ட முதலாவது தேசீய இடைக்கால சர்க்காரின் மந்திரிகளுடைய பெயர் ஜாபிதா அறிவிக்கப்பட்டது. முஸ்லிம் லீக் தனது தீர்மானத்தைப் புனராலோசனை செய்ய வேண்டுமென்றும், பலாத்காரப் பேச்சுக்களையும் செயல்களையும் கைவிட வேண்டுமென்றும் வைசிராய் தமது ரேடியோப் பேச்சில் கேட்டுக்கொண்டார். இடைக்கால சர்க்காரில் ஒரு மந்திரியாக நியமிக்கப்பட்ட ஸர் ஷாபட் அஹமத்கானை ஆகஸ்டு 25-ஆம் தேதியன்று சில முஸ்லிம் இளைஞர்கள் குத்திக் காயப்படுத்தினார்கள்.

நேரடி நடவடிக்கை தினத்திலும், அதற்குப் பிறகும் நடந்த மிருகத்தனமான கொலைகளையும், மற்றப் பலாத்காரச் செயல்களையும் டில்லியில் ஆகஸ்டு 27-ஆம் தேதியிலிருந்து 30-ஆம் தேதி வரை கூடிய காரியக்கமிட்டி கண்டனம் செய்தது.

நேரு சர்க்காரை ஸ்தம்பிக்க வைப்பதே நேரடி நடவடிக்கையின் நோக்கம் என்று டில்லியில் கஸ்னாபர் அலிகான் கூறினார். லீக்கின் ஒத்துழைப்பின்றி அமைக்கப்பட்ட இடைக்கால சர்க்காரை முஸ்லிம்கள் தங்கள் ரத்தத்தைக்கொண்டு எதிர்ப்பார்கள் என்று பிரிட்டனை எச்சரித்து முஸ்லிம் லீக் கூட்டத்தில் ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

செப்டம்பர் 2-ஆம் தேதி நேருவும் இடைக்கால சர்க்காரின் மற்ற மந்திரிகளும் பதவியேற்றார்கள். இது பூரண சுயராஜ்யத்துக்கான ஒரே நடவடிக்கை என்று காந்திஜி கூறினார். நீண்ட நாள் பிரச்னையைச் சமாதான முறையில் தீர்த்த பிரிட்டிஷ் சர்க்காரையும் வாழ்த்தினார்.

பிறகு, முஸ்லிம் லீக் இடைக்கால சர்க்காரில் சேர்ந்தது.

கிழக்கு வங்காளத்தில் அக்கிரமச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டு வந்தன. கொலை, கொள்ளை, பெண்களைக் கடத்தல், கட்டாய மதமாற்றம், கற்பழித்தல் போன்ற கொடுமைகளினால் ஹிந்துக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார்கள். அக்டோபர் 28-ஆம் தேதி காந்திஜி கல்கத்தாவுக்குப் புறப்பட்டார். கல்கத்தாவுக்குப் போய்ச் சேர்ந்த பின் நோவாகாலிக்குப் புறப்பட ஆயத்தமானார். இதற்கிடையில் பீகாரில் முஸ்லிம்கள் ஹிந்துக்களால் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்ற செய்தி கிடைத்தது. உடனே காந்திஜி, பிரதம மந்திரி நேருவுக்குத் தந்தி கொடுத்தார். நேரு, மூன்று மந்திரிகளோடு பாட்னாவுக்குப் புறப்பட்டார்.

நவம்பர் 6-ஆம் தேதி காந்திஜி நோவாகாலிக்குப் புறப்படுவதற்குச் சற்றுமுன்னதாகப் "பீகாருக்கு'' என்ற தலைப்பில் விடுத்த ஓர் அறிக்கையில், பீகார்வாசிகள் நல்ல விதமாக மாறி இந்தக் கொடுமைகளை நிறுத்தாவிட்டால், தாம் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகத் தெரிவித்தார்.

வங்காள சர்க்கார் ஏற்பாடு செய்த தனி ரெயிலில் காந்திஜி நோவாகாலிக்குப் புறப்பட்டபோது, வங்காளத்தின் மந்திரி ஒருவரும், முதல் மந்திரியின் பார்லிமென்டரிக் காரியதரிசியும் அவரோடு புறப்பட்டுச் சென்றனர். நவம்பர் 6-ஆம் தேதி மாலை சாந்த்பூருக்குப் போய்ச் சேர்ந்தனர். அங்கே முஸ்லிம் லீகர்களின் தூது கோஷ்டி ஒன்றும், ஹிந்துக்களின் தூது கோஷ்டி ஒன்றும் காந்திஜியைச் சந்தித்தன.

கொடுமைக்கு அஞ்சிக் கோழைகள் ஆகிவிடுவதோ, கிழக்கு வங்காளத்திலிருந்து வெளியேறுவதோ கூடாது என்றும், அகிம்சை வழியில் எதிர்த்து நிற்கத்தான் வேண்டுமென்றும், இப்போது நடக்கும் அக்கிரமங்களுக்காக ஹிந்துக்கள் வெட்கப்பட வேண்டும் என்றும், இஸ்லாத்துக்கு இது அவமானத்தை உண்டுபண்ணுகிறது என்றும் காந்திஜி கூறினார். நோவாகாலியில் முஸ்லிம்கள் செய்யும் அக்கிரமச் செயல்களுக்காக, பீகாரில் ஹிந்துக்கள் பழிவாங்குவது கோழைத்தனமான காரியம் என்றும் சொன்னார்.

நவம்பர் 7-ஆம் தேதி சௌமுஹானிக்குக் காந்திஜி ரெயிலில் புறப்பட்டார். சாந்த்பூரிலிருந்து 30 மைல் தூரத்திலுள்ள லக்ஸம் என்ற ஊரில் அகதிகள் முகாம் ஒன்று இருந்தது. ரெயில்வே ஸ்டேஷனில் கூடியிருந்தவர்களை நோக்கிக் காந்திஜி பேசியபோது, அகதிகளை மனக்கண்முன் நிறுத்தியே பின்வருமாறு கூறினார்: ''பிரசாரம் செய்வதற்காகப் புயல் வேகத்தில் பிரயாணம் செய்ய நான் இங்கே வரவில்லை. உங்களோடு தங்கியிருக்க, உங்களில் ஒருவனாக இருக்கவே, நான் வந்திருக்கிறேன். என்னிடத்தில் மாகாண உணர்ச்சி எதுவும் கிடையாது. நான் ஓர் இந்தியன். குஜராத்தியாக இருப்பதைப்போல ஒரு வங்காளியாகவும் நான் இருக்கிறேன். இங்கேயே தங்கியிருக்கவும், அவசியமானால் இங்கேயே உயிரை விடவும் நான் பிரதிக்ஞை செய்துகொண்டிருக்கிறேன். கொடுஞ் செயல்கள் யாவும் இறுதியாகக் குழிதோண்டிப் புதைக்கப்படும் வரையில், ஒரு ஹிந்துப் பெண் தனிமையில் முஸ்லிம்களிடையே தாராளமாக உலாவுவதற்கு அஞ்சும் வரையில், நான் வங்காளத்தை விட்டுப் போகமாட்டேன். எனக்கு நீங்கள் செய்யக்கூடிய மாபெரும் உதவி, உங்கள் உள்ளத்திலிருந்து பயத்தைப் போக்குவதே."

நவம்பர் 7-ஆம் தேதி சௌமுஹானிக்குப் போய்ச் சேர்ந்து, அங்கே தாற்காலிகமாகத் தமது தலைமை நிலையத்தை வைத்துக்கொண்டார். அன்று நடந்த பிரார்த்தனைக் கூட்டத்துக்கு 15,000 பேர் வந்திருந்தனர். அவர்களில் 80 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள்.

நவம்பர் 8-ஆம் தேதி கோபேர்பாக் என்ற கிராமத்துக்குக் காந்திஜி மோட்டாரில் சென்றார். அங்கே ஹிந்துக் குடும்பங்கள் தங்கியிருந்த குடிசைகள் பாழாகிக் கிடந்தன. அங்கே வசித்தவர்களைக் கொன்று பிணங்களை முற்றத்தில் அடுக்கிக் கொளுத்திவிட்டார்கள். ரத்தக் கறைகளும் அங்கே காணப்பட்டன. ஒரு வீட்டிலிருந்து மூன்று பெண்கள் கடத்திச்செல்லப்பட்டிருந்தனர். அவர்களில் இருவர் இருக்கும் இடம் இன்னும் தெரியவில்லை.

நவம்பர் 9-ஆம் தேதி காந்திஜி தமது முகாமை தத்தபாராவுக்கு மாற்றினார். 11-ஆம் தேதி மெளன தினம். அப்படியிருந்தும் மோட்டாரிலும் படகுகளிலும் பிரயாணம் செய்து நோவாகாலா, சோனாச்சகா, கீல்பாரா ஆகிய கிராமங்களுக்குச் சென்றார். நோவாகாலாவில் பதினைந்து வயதுப் பள்ளிச் சிறுவன் உட்பட 8 பேர் கொலை செய்யப்பட்டிருந்தனர். நான்கு மண்டையோடுகள் கிடந்தன. வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டிருந்தன. ஓர் ஊமையின் குடுமி கத்தரிக்கப்பட்டு அவன் பலவந்தமாக மதம் மாற்றப்பட்டிருந்தான். காந்திஜி சென்றபோது அங்கிருந்த பெண்கள் அழுதுகொண்டிருந்தார்கள். அன்று பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்திஜி பேசவில்லை. அதற்குப் பதிலாக அவர் எழுதியிருந்த பிரசங்கம் மற்றவர்களால் வாசிக்கப்பட்டது. இந்தப் பாதகச் செயல்களை முஸ்லிம் சகோதரர்கள் கண்டனம் செய்யவேண்டுமென்றும், ஹிந்துக்கள் திரும்பி வந்து தங்கள் வீடுகளைத் திரும்பக் கட்டும்போது முஸ்லிம்கள் உதவி புரிய வேண்டுமென்றும் காந்திஜி தமது சொற்பொழிவில் கூறியிருந்தார்.

நவம்பர் 13-ஆம் தேதி காலையில் காந்திஜி தம்முடன் பிரயாணம் செய்யும் கோஷ்டியினருக்குத் தமது முக்கியமான முடிவு ஒன்றை அறிவித்தார். அதாவது, தம் கோஷ்டியைச் சேர்ந்த பெண் ஒவ்வொருவரையும் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கிராமத்திலும் போய்த் தங்கியிருந்து, அவசியப்பட்டால் தங்கள் உயிரைக் கொடுத்தாவது ஹிந்து மைனாரிடியினரைக் காப்பாற்ற வேண்டுமென்றும், தம்முடைய முடிவு யாரையும் கட்டுப்படுத்துவதல்ல என்றும், இதை விரும்பாதவர்கள் விலகிச்சென்று வேறு ஆக்க வேலைகளில் ஈடுபடலாம் என்றும் தெரிவித்தார்.

நவம்பர் 14-ஆம் தேதி காந்திஜி தத்தபாராவிலிருந்து காஸிர்கில்லுக்குத் தமது ஜாகையை மாற்றினார். போகும் வழியில் ஷஹாபூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். காஸிர்கில்லில் பேசியபோது, ''ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்தவனுக்கு இரண்டு கிளாஸ் தண்ணீர் கொடுப்பதில் பெருமையில்லை. தீமை செய்தவனுக்கும் நன்மை செய்வதே பெருமை. அதைத்தான் சிறந்த பழிக்குப் பழியாக நான் கருதுகிறேன் '' என்றார்.

சில முஸ்லிம்கள் காந்திஜியைப் பார்த்து, ''நீங்கள் ஏன் பீகாருக்குப் போகவில்லை?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர் பதில் சொன்னபோது, பீகாரில் அப்போது அமைதி நிலவுவதாக நேரு முதலியவர்களிடமிருந்து தகவல் கிடைத்திருப்பதாகவும், அதனால் தாம் அங்கே போகவேண்டிய அவசியமில்லை என்று அவர்கள் தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.

தாம் ஒரு முஸ்லிம் லீகரின் வீட்டில் தங்கியிருக்க விரும்புவதாகவும் காந்திஜி தெரிவித்தார்.

நவம்பர் 17-ஆம் தேதி காஸிர்கில்லிலிருந்து இரண்டு மைல் தூரத்திலுள்ள தஸ்காரியா என்ற கிராமத்துக்குக் காந்திஜி சென்றார். அங்கே ஏராளமான மாதர்கள் வந்து அவரைப் பார்த்தனர். பலவந்தமாக மதம் மாற்றப்பட்டிருந்த அம் மாதர்கள் பழையபடியும் தங்கள் சொந்த மதத்துக்கு இப்போது திரும்பினார்கள். கட்டாய மத மாற்றத்தைச் சட்டம் அங்கீகரிக்காது என்று ஜில்லா மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

நவம்பர் 19-ஆம் தேதி மதுப்பூர்ப் பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்திஜி பேசினார்.

நவம்பர் 20-ஆம் தேதி காஸிர்கில்லிலிருந்து 4 மைல் மேற்கே உள்ள ஸ்ரீராம்பூருக்குப் படகில் புறப்பட்டுச் சென்றார். அப்போது அவருடன் சென்றவர்கள் வங்காளி மொழிபெயர்ப்பாளர் ஒருவரும், மலபாரைச் சேர்ந்த ஒருவருமே. வேறு சகாக்கள் யாருமின்றிக் காந்திஜி தனியாகச் சென்று, பாழாக்கப்பட்ட அந்தக் கிராமத்தில் தங்கினார். பாலங்களையும் சதுப்புப் பகுதிகளையும் கடந்து செல்லுவதற்குக் காந்திஜி ஒரு மூங்கில் கழியை வைத்துக்கொண்டார்.

அந்த 77-ஆவது வயதில் காந்திஜி நாள் ஒன்றுக்குப் பதினெட்டு மணி நேரம் வேலை செய்தார். காலை 4 மணிக்குத் துயிலெழுந்து, பிரார்த்தனை செய்வார்; அப்புறம் 8 அவுன்ஸ் வெந்நீரில் 1 அவுன்ஸ் தேனையும், 5 கிரெய்ன் உப்புச் சோடாவையும் கலந்து குடித்துவிட்டு, மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படிப்பார்; அல்லது எழுதுவார். அதன் பின் வங்காளி மொழி கற்றுக்கொள்ள உட்காருவார். ஆறரை மணிக்குத் தம் சகாக்களுடன் உலாவப் புறப்பட்டு ஒரு மணி நேரத்துக்குப் பின் திரும்புவார். ஸ்ரீ ராம்பூருக்கு வந்த பின் உலாவும் நேரத்தையும், வேகத்தையும் அதிகமாக்கிக்கொண்டார்.

9 மணிக்குத் திரும்பி வருவார். ஒரு மணி நேரம் அவருடைய உடம்பு பிடித்துவிடப்படும். அப்புறம் வெயிலில் இருந்துவிட்டு, வெந்நீரில் குளிப்பார். 11 மணிக்குச் சாப்பாடு. அவருடைய ஆகாரம், 8 அவுன்ஸ் ஆட்டுப்பால், வேகவைத்த காய்கறிகள், சுமார் 3 தோலா சப்பாத்திகள், சில பழங்கள் ஆகியவையாகும். சில சமயங்களில் சப்பாத்திக்குப் பதிலாகச் சாதத்தோடு வேக வைத்த காய்கறிகளைச் சாப்பிடுவார்.

சாப்பிடும்போது கடிதம் எழுதும் வேலையைச் செய்து முடிப்பார். பிற்பகலில் அரைமணி நேரம் தூங்குவார். குறித்த காலத்தில் எழுந்து 12 அவுன்ஸ் இளநீர்த் தண்ணீரும், தேங்காய் வழுக்கையும் சாப்பிடுவார். இரண்டு மணிக்கு நூல் நூற்க ஆரம்பிப்பார். அப்போது பத்திரிகைகளை வாசிக்கச் சொல்லிக் கேட்பார்; அல்லது பார்க்க வந்தவர்களோடு சம்பாஷிப்பார். மூன்றரை மணிக்கு அன்றைய தினத்தின் கடைசி ஆகாரத்தைச் சாப்பிட்டுவிட்டு, நான்கு மணிக்குப் பிரார்த்தனைக்குப் புறப்படுவார். பிரார்த்தனை முடிந்த பின் திரும்பவும் உலாவச் செல்லுவார். திரும்பி வந்ததும் வேலை செய்யத் தொடங்குவார். எட்டரை மணிக்குத் தூங்கப் போவார். அவர் காலை 4 மணிக்குத் தான் எழுந்திருப்பது வழக்கம். என்றாலும், சில நாட்களில் 2 மணிக்கே விழித்தெழுந்து கடிதங்களுக்குப் பதில் எழுதுவார்.

ஒவ்வொரு நாளும் கால்நடையிலோ, படகிலோ சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவார். ஏழைகளை அவர்களுடைய குடிசைகளில் சென்று பார்ப்பார். அகதிகள் முகாம்களுக்குச் சென்று ஆறுதல் கூறுவார். ஒவ்வொரு கண்ணிலிருந்தும் கண்ணீரைத் துடைப்பதையே தமது லட்சியமாகக் கொண்டு வேலை செய்தார்.

ஸ்ரீராம்பூரில் சிறிது சிறிதாக ஹிந்துக்களுக்கு ஜீவன் பிறந்தது. கோவில்களில் மணிகள் முழங்கின. பிரார்த்தனையில் மக்கள் கலந்துகொண்டு கீதங்கள் பாடினார்கள். செத்த உயிர்கள் மீண்டதைக் கண்டு காந்திஜி மகிழ்ந்தார்.

டிசம்பர் 27-ஆம் தேதி நேரு அங்கே வருவதாகக் காந்திஜி கிறிஸ்துமஸ் தினத்தன்று கூறினார்.

நேருவும் ஆச்சாரிய கிருபளானியும் சென்று அரசியல் அமைப்புப் பிரச்னைகள் சம்பந்தமாகக் காந்திஜியுடன் கலந்து ஆலோசனை செய்துவிட்டு, அவருடைய யோசனைகளை ஏற்றுச் சென்றார்கள்.
  • (நன்றி: மகாத்மா காந்தி நூல்கள் - தொகுதி மூன்று)

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ