Skip to main content

காந்தி: சத்திய சோதனைக்குப் பின் - 17


(காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் வருடவாரியாக இத்தளத்தில் வெளியாகிறது. சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் குறிப்புகள் மகாத்மா காந்தி நூல்கள் வரிசையில், தொகுதி மூன்றில் சேர்க்கப்பட்டன.)

1944 (வயது 75)

பிப்ரவரி 20-ஆம் தேதி வெளிவந்த சர்க்கார் அறிக்கை, "கடந்த சில நாட்களாக ஸ்ரீமதி காந்தியின் உடல் நிலை கெட்டுக்கொண்டுவந்து, இப்போது மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது " என்று கூறியது.

பிப்ரவரி 22-ஆம் தேதியன்று இரவு 7.35 மணிக்கு காந்திஜியின் வாழ்க்கைத் துணைவியும் மனைவியுமான ஸ்ரீமதி காந்தி, கஸ்தூரிபாய் ஆகாகான் மாளிகையில் காலமானார். அன்று சிவராத்திரியாகும்.

பிப்ரவரி 23-ஆம் தேதி காலை 10.40 மணிக்குக் கஸ்தூரிபாயின் சடலத்துக்கு ஈமக்கிரியை செய்யப்பட்டது. கடைசிக் குமாரரான தேவதாஸ், அன்னைக்கு இறுதிக்கடன்களைச் செய்தார். காந்திஜியின் உறவினர்களும், நண்பர்களுமாக நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அப்போது அங்கே இருந்தார்கள்.

அநேக நகரங்களிலும், கிராமங்களிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. பொதுக்கூட்டங்களும், ஊர்வலங்களும் நடத்துவதற்கு முயற்சி செய்ததன் பலனாக அநேகர் கைதாயினர்.

மாளவியாவின் வேண்டுகோளின்படி மார்ச்சு 5-ஆம் தேதி நாடெங்கும் கஸ்தூரிபாய் தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.

ஏப்ரல் 6-ஆம் தேதி பம்பாய் சர்க்கார் விடுத்த அறிக்கை கூறியதாவது: ''கடந்த மூன்று நாட்களாக ஸ்ரீ காந்திக்கு மலேரியாக் காய்ச்சல். அவர் பலவீனமாக இருக்கிறார். ஆனால், அவருடைய பொதுவான நிலை எதிர்பார்க்கக்கூடியவாறு திருப்திகரமாக இருக்கிறது.''

ஏப்ரல் 18-ஆம் தேதி அறிக்கை கூறியதாவது: "ஸ்ரீ காந்தியின் உடல் உஷ்ணம் கடந்த 48 மணி நேரமாக மாமூல் பிரகாரம் இருக்கிறது. அபிவிருத்தி திருப்திகரம்.''

ஏப்ரல் 27-ஆம் தேதி காமன்ஸ் சபையில் கேள்விக்குப் பதிலளித்த அமெரி, மேற்கொண்டு தமக்குத் தகவல் வரவில்லை என்றார்.

ஏப்ரல் 28-ஆம் தேதி பம்பாய் சர்க்காரின் அறிக்கை: ''ஸ்ரீ காந்திக்குத் திரும்பவும் ஜூரம் அடிக்காவிட்டாலும், எதிர்பார்த்தபடி அவர் தமது சமீபத்திய உடல் நலிவினின்றும் குணம் அடையவில்லை. அவருடைய பொதுநிலை பலவீனமாக இருக்கிறது; சிறிது கவலையளிப்பதாகவும் இருக்கிறது.''

ஏப்ரல் 29-ஆம் தேதி அறிக்கை: ''பம்பாய் சர்க்காரின் சர்ஜன்-ஜெனரலான மேஜர் ஜெனரல் கேண்டி ஐ. எம். எஸ்., ஸ்ரீ காந்தியைப் பரிசோதனை செய்தார். நேற்றிலிருந்து ஸ்ரீ காந்தியின் நிலை ஓரளவுக்கு நல்ல அபிவிருத்தியடைந்திருப்பதாக அவரது அறிக்கை தெரிவிக்கிறது. அவர் உற்சாகமாக இருக்கிறார். மேற்கொண்டு அதிகச் சத்துள்ள உணவும், டானிக்குகளும் அருந்த வேண்டுமென்று அவருக்கு ஆலோசனை கூறப்பட்டிருக்கிறது.''

ஏப்ரல் 30-ஆம் தேதி அறிக்கை: ''ஸ்ரீ காந்தியின் உடல் நிலை தொடர்ந்து அபிவிருத்தி அடைந்துவருகிறது. அவசியம் ஏற்பட்டாலொழிய உடல் நிலை பற்றி மேற்கொண்டு அறிக்கைகள் வெளியிடப்பட மாட்டா. சந்தர்ப்ப வசமாய்ப் புனா வழியாகக் சென்ற டாக்டர் பி. சி. ராய், ஸ்ரீ காந்தியைப் பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அவருடைய வேண்டுகோள் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.''

மே 2-ஆம் தேதி அறிக்கை: “மேற்கொண்டு விசேஷ நிபுணர்களின் பரிசோதனை நடந்துவருகிறது.''

மே 3-ஆம் தேதி: "ஸ்ரீ காந்தியின் ரத்தச் சோகை நிலை சிறிது மோசமாகியிருக்கிறது; ரத்த அழுத்தம் மேலும் குறைந்திருக்கிறது. அவருடைய பொதுவான நிலை திரும்பவும் மிகமிகக் கவலையை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.''

மே 4-ஆம் தேதி: "ஸ்ரீ காந்தியின் பொது நிலையில் மாறுதல் இல்லை.''

காந்திஜியை விடுதலை செய்யவேண்டுமென்று நாடெங்கும் கிளர்ச்சி நடந்தது.

மே 6-ஆம் தேதி புதுடில்லி அறிக்கை கூறியதாவது: ''ஸ்ரீ காந்தியின் தேகாரோக்கியம் சம்பந்தமாகக் கிடைத்த வைத்திய அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு, அவரை நிபந்தனையின்றி விடுதலை செய்யச் சர்க்கார் தீர்மானித்திருக்கிறது. முழுக்க முழுக்க உடல் நிலையை அடிப்படையாகக் கொண்டே இவ்விதமாக முடிவு செயப்பட்டிருக்கிறது. மே 6-ஆம் தேதி காலை 8 மணிக்கு அவர் விடுதலையாகிறார்.'' சிறைச்சாலைகளின் இன்ஸ்பெக்டர் ஜெனரல், காந்திஜியை ஒரு மோட்டாரில் ஏற்றிப் "பர்ண குடி''க்குக் கொண்டு சென்றார். டாக்டர் சுசீலா நய்யார், டாக்டர் கில்டர், பியாரிலால், மீராபென் ஆகியவர்களும் விடுதலை செய்யப்பட்டார்கள். காந்திஜி, சிறை முகாமை விட்டுப் போவதற்கு முன், மகாதேவ தேசாயின் அஸ்தியும், கஸ்தூரி பாயின் அஸ்தியும் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்துக்குச் சென்று மலர்களை வைத்தார்.

டாக்டர் கில்டரும், டாக்டர் சுசீலா நய்யாரும் கையெழுத்திட்ட வைத்திய அறிக்கை கூறியதாவது: ''ஏப்ரல் 10-ஆம் தேதியிலிருந்து காந்திஜியின் உடல் நிலை கெட்டுவிட்டது. ஏப்ரல் 14-ஆம் தேதி அவருக்குத் திடீரென்று கடுமையான ஐரமும், குளிர் நடுக்கமும் ஏற்பட்டன. மறுநாளும் உடம்பு காய்ந்தது. 16-ஆம் தேதி ஜூரம் மிகவும் உக்கிரமாகி, குளிர் நடுக்கமும் அதிகமாகிவிட்டது. காய்ச்சல் பொரியும்போது, அவர் சுய நினைவை இழந்துவிடுகிறார். ஒருநாள் விட்டு ஒருநாள் முறைக் காய்ச்சல் அடிக்கும் மலேரியா அவருக்குத் தொத்தியிருக்கிறது என்பது ரத்தத்திலிருந்து தெரிகிறது. அவர் மிகவும் பலவீனமாகிவிட்டார். உற்சாகத்துடன் காணப்பட்டாலும் அவருடைய உடம்பும் உள்ளமும் களைத்திருக்கின்றன.''

மே 8-ஆம் தேதியன்று ஆகாகான் மாளிகையைச் சுற்றியிருந்த ஆயுதம் தாங்கிய காவற்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டார்கள்.

மே 11-இல் காந்திஜி பம்பாய்க்குச் சென்றார். ஜூஹுவில் உள்ள காந்தி கிராமத்தில் தங்கினார்.

தொடர்ந்தாற்போல் ஓய்வு பெறவேண்டும் என்பதற்காக மே 14-ஆம் தேதியிலிருந்து இரண்டு வாரம் மௌன விரதம் பூண்டார்.

மே 15-இல் டாக்டர்கள் காந்திஜியைப் பரிசோதித்து, அவருக்குக் கொக்கிப் புழு தொத்தியிருக்கிறது எனக் கண்டார்கள்.

பாதுகாவல் முகாமிலிருந்து 1943, மே 8-ஆம் தேதியன்று காந்திஜி, ஜின்னாவுக்கு எழுதிய கடிதம், இந்த மே 18-ல் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது.

ஏப்ரல் மாதத்தில் பம்பாயில் வெடிமருந்து வெடித்ததனால் நாசமான பகுதிகளை, மோட்டாரில் ஏறிக்கொண்டு 90 நிமிஷ நேரம் காந்திஜி சுற்றிப் பார்த்தார். அப்பொழுதுதான் ஜூஹு குடிசையிலிருந்து காந்திஜி முதல்முதலாக வெளியே வந்தார்.

மே 21-ஆம் தேதியன்று முதல் தடவையாக காந்திஜி ஒரு சினிமாப் படம் பார்த்தார். காந்தி கிராமத்தில் “மாஸ்கோவுக்குத் தூது” என்ற படம் அவருக்காகப் பிரத்தியேகமாகத் திரையிடப்பட்டது.

மே 22-ஆம் தேதி எட்மண்டு பிரிவாத்திடமிருந்து, ''ரோலாந்து செளக்கியம். எங்கள் இருவரின் அன்பு'' என்று ஒரு தந்தி வந்தது. இந்தத் தந்தியில் மார்ச்சு 15 என்று தேதி இடப்பட்டிருந்தது.

மே 29-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குக் காந்திஜி தம் மெளன விரதத்தை முடித்தார். அப்புறம் தாற்காலிகமாக நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் மௌனமாக இருப்பது என்றும், பிற்பகல் 4 மணியிலிருந்து 8 மணி வரையில் மட்டுமே பேசுவதென்றும் முடிவு செய்தார்.

மே 30-ஆம் தேதி ஜெயகருக்கு அவர் எழுதிய கடிதத்தை, 31-ஆம் தேதி வெளியிட்டார். நாடு என்னிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்கிறது. நான் இப்போது விடுதலை செய்யப்பட்டிருப்பது பற்றி நீங்கள் எவ்வாறு அபிப்பிராயப்படுகிறீர்கள் என்பதை நான் அறியேன். நான் கொஞ்சங்கூடச் சந்தோஷமாக இல்லை. எனக்கு அவமானமாகக்கூட இருக்கிறது. நான் நோய்வாய்ப்படக் கூடாது என்றுதான் முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் முடிவில் தோற்றுவிட்டேன். தற்போதைய பலவீனம் என்னை விட்டு நீங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்ட மாத்திரத்தில், என்னைச் சிறையில் வைத்துவிடுவார்கள் என்று கருதுகிறேன். அவர்கள் என்னைக் கைது செய்யாவிட்டால் நான் என்ன செய்ய முடியும்? ஆகஸ்டுத் தீர்மானத்தை என்னால் வாபஸ் பெற முடியாது. நீங்கள் கூறியது போலவே அது தீங்கற்றது. அதன் பலனைப் பற்றி நீங்கள் மாறுபட்ட கருத்துக்கொள்ளலாம். அது எனக்கு உயிச் சுவாசமாகும்.''

காந்திஜி ஜூஹுவில் ஒரு மாத காலம் தங்கியிருந்துவிட்டு, டாக்டர் தின்ஷா மேத்தாவின் வைத்தியசாலையில் தங்குவதற்காக ஜூன் 15-ஆம் தேதி புனாவுக்குப் புறப்பட்டார்.

காந்திஜி சிறையில் இருந்தபோது லின்லித்கோவுடனும், வேவலுடனும் நடத்திய கடிதப் போக்குவரத்தின் ஒரு பகுதி பத்திரிகையில் வெளியாயிற்று.

காந்திஜியும் சர்க்காரும் பரஸ்பரம் எழுதிய கடிதங்கள் அடங்கிய துண்டுப் பிரசாரம் ஒன்றைச் சர்க்கார் வெளியிட உத்தேசித்திருப்பதாக ஜூன் 20-ஆம் தேதியன்று பத்திரிகைச் செய்தி கூறியது.

ஜூன் 17-ஆம் தேதியன்று தாம் எழுதிய கடிதத்தை வெளியிட அனுமதி கோரி வைசிராய்க்கு 27-ஆம் தேதியன்று காந்திஜி தந்தி கொடுத்தார்.

''சர்க்காருக்கு இல்லை என்பதே சுயராஜ்யத்துக்குத் திறவுகோல் ஆகும்'' என்று 29-ஆம் தேதி மகாராஷ்டிரக் காங்கிரஸ் ஊழியர்கள் கூட்டத்தில் 35 நிமிஷ நேரம் பேசிய காந்திஜி கூறினார்.

ஜூன் 17-ஆம் தேதி காந்திஜி எழுதிய கடிதமும், ஜூன் 22-ஆம் தேதி வைசிராய் அனுப்பிய பதிலும் ஜூலை முதல் தேதி பத்திரிகையில் வெளியாயின. ''நம்முடைய அபிப்பிராயங்களில் தீவிரமான வேற்றுமை இருப்பதைக் கவனிக்கும் போது, நம்மிடையே தற்சமயம் சந்திப்பு நிகழ்வதனால் யாதொரு பலனும் இராது'' என்று வைசிராய் எழுதியிருந்தார்.

புனாவில் கஸ்தூரி பாய் தேசீய ஞாபகார்த்த நிதி தர்மகர்த்தாக்களின் கூட்டத்தில் காந்திஜி பேசியபோது, ''கஸ்தூரி பாய் நிதியின் நோக்கம், கிராமப் பெண்கள், குழந்தைகள் ஆகியவர்களின் நலனைப் பேணுவதே'' என்றார்.

ஜூலை 2-ஆம் தேதியன்று ஒய்வு பெறுவதற்காகக் காந்திஜி பஞ்சகனிக்குப் போய்ச் சேர்ந்தார்.

காங்கிரஸ் - லீக் சமரசத்துக்காக ஜின்னாவின் முன் ராஜகோபாலாச்சாரியார் சமர்ப்பித்த திட்டம் ஜூலை 9-ஆம் தேதி வெளியிடப்பட்டது. 1943, மார்ச்சில் அதைப்பற்றிக் காந்திஜியிடம் ராஜகோபாலாச்சாரியார் விவாதித்திருந்தார்.

''நியூஸ் கிராணிக்கிள்'' பத்திரிகை நிருபருக்குக் காந்திஜி அளித்த பேட்டி விவரம் ஜூலை 12-இல் பத்திரிகைகளில் வெளிபட்டது. காரியக் கமிட்டியுடன் தொடர்புகொள்ள வேண்டுமென்று காந்திஜி கேட்டார். தேசீய சர்க்கார் என்ற விஷயத்தை விளக்கும்போது, ''பொறுப்புள்ள மந்திரிகள் ஆலோசனை கூற, வைசிராய், இங்கிலாந்தின் மன்னரைப்போல ஆகிவிடுவார்'' என்றார்.

ஜூலை 13-இல் காந்திஜி கூறியதாவது: "லட்சியத்துக்காகவே நான் வாழ்கிறேன். நான் இறந்தால் லட்சியத்துக்காகவே இருப்பேன்.''

கைதிகளை - அதிலும் வெறும் சந்தேகத்தின் பேரில் பாதுகாவலில் வைக்கப்பட்டோ, நடைமுறைச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் என்று தீர்மானிக்கப்பட்டோ இருக்கும் கைதிகளை - கருணையோடு நடத்தவேண்டும்'' என்று காந்திஜி கேட்டுக்கொண்டார்.

ஜூலை 16-இல் பத்திரிகை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: "நேச நாடுகளின் நடவடிக்கைகளுக்காகத் தேவைப்படுகின்றவற்றைப் பூர்த்தி செய்யக்கூடியவாறு யுத்த முடிவு வரையில் சில வரையறைகளை விதித்துக்கொண்டு, இந்தியா முழுவதற்கும் உடனடியாகப் பூரண சுதந்திரம் அளிக்க வேண்டுமென்று என் திட்டம் கூறுகிறது. கிரிப்ஸ் திட்டமோ, உடனடி ஏற்பாடுகளைவிட எதிர்காலத்தைப்பற்றியே அதிகமாகக் கூறுகிறது.''

தமது திட்டம் நிறைவேறினால், அது இந்த யுத்தத்தை, உலகின் சுரண்டப்பட்ட மக்களின் விடுதலைக்காக நடத்தப்படும் யுத்தமாக மாற்றிவிடும் என்று ஜூன் 19-ஆம் தேதியன்று காந்திஜி கூறினார்.

ஜூலை 25-ஆம் தேதி லார்டுகள் சபையில், உதவி இந்தியா மந்திரி லார்டு மன்ஸ்டர் கூறியதாவது: "கிரிப்ஸ் தூதைத் தகர்த்த அதே கோரிக்கையைத்தான் காந்தி இன்னும் வற்புறுத்திக்கொண்டிருக்கிறார். வைசிராயின் தற்போதைய அதிகாரங்களுடன் கூடிய ஓர் இடைக்கால சர்க்காரை அமைப்பதை ஏற்றுக்கொள்ள இன்றும் அவர் தயாராக இல்லை.''

1942-இல் சர்க்கார் கைப்பற்றிக்கொண்ட நவஜீவன் டிரஸ்ட் கட்டடத்தையும், அச்சகத்தையும், இந்த ஜூலை 26-இல் டிரஸ்டின் மானேஜர் ஜீவன்ஜி தேசாயிடம் சர்க்கார் ஒப்படைத் தது.

ஜூலை 28-ஆம் தேதி காமன்ஸ் சபையில் இந்தியா பற்றிய இரண்டு நாள் விவாதம் தொடங்கியது. உடனடியான நிலை பற்றி காந்திஜி தெரிவித்துள்ள கருத்துக்களே அவருடைய யோசனைளாக இருக்குமென்றால்,  வைசிராயுடனோ, சிறைக்குள் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களுடனோ பயனுள்ள வகையில் விவாதிப்பதற்கு எதுவுமே இல்லை என்று அமெரி பேசினார். சர்ச்சில் இதில் கலந்துகொள்ளவில்லை. சபைக்கு வந்திருந்தவர்களோ மிகமிகச் சொற்பமானவர்கள்.

காந்திஜி பத்திரிகை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நிர்மாணத் திட்டத்தின் முக்கியத்துவத்தைத் திரும்பவும் வற்புறுத்திக் கூறியதோடு, தலைமறைவாக உள்ள காங்கிரஸ்காரர்கள் பகிரங்கமாக வெளியே வரவேண்டுமென்றும், சிறைவாசத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தால் அதற்கும் தயாராக இருக்க வேண்டுமென்றும், அப்படி மேற்கொள்ளும் சிறைவாசமானது சுதந்திர இயக்கத்துக்கு உதவி புரிவதாகக் கருத வேண்டுமென்றும் சொன்னார்.

ஜூலை 29-ஆம் தேதியன்று லீக் கவுன்சில், வகுப்புப் பிரச்னையில் உடன்பாடு காண்பதற்காகக் காந்திஜியுடன் வார்த்தைகள் நடத்த ஸ்ரீ ஜின்னாவுக்கு முழு அதிகாரமும் அளித்தது. காங்கிரஸின் 1942 ஆகஸ்டுத் தீர்மானம், முஸ்லிம்களுக்குத் தீங்கு பயக்கக்கூடியது என்றும், அந்தத் தீர்மானம் ஒழிய வேண்டுமென்றும், காங்கிரஸ்-லீக் ஒத்துழைப்புக்கு முன்னதாக நிபந்தனையின்றிப் பாகிஸ்தானை ஒப்புக்கொள்ள வேண்டுமென்றும், ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியரின் திட்டம் உருச்சிதைந்து செல்லரித்துப்போன பாகிஸ்தானையே லீக்குக்கு அளிக்கச் சித்தமாக இருக்கிறதென்றும் ஸ்ரீ ஜின்னா கூறினார்.

ஜூலை 31-ஆம் தேதி காந்தி - ஜின்னா கடிதப் போக்குவரத்து பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. பஞ்சகனியிலிருந்து ஜின்னாவுக்கு காந்திஜி எழுதிய ஜூலை 17 தேதியிட்ட கடிதம்: " சகோதரர் ஜின்னா, தாய்மொழியில் பேசுமாறு நான் தங்களைத் தூண்டிய காலம் ஒன்று உண்டு. இன்று அதே பாஷையில் தங்களுக்குத் தைரியமாக எழுதுகிறேன். நான் சிறையில் இருந்தபோது என்னை வந்து பார்க்கும்படி தங்களை அழைத்தேன். நான் விடுதலையானதிலிருந்து இதுவரையிலும் தங்களுக்கு எழுதவில்லை. ஆனால் தங்களுக்கு எழுதும்படியாக இன்று என் உள்ளம் சொல்லுகிறது. தாங்கள் விரும்புகிற சமயத்தில் நாம் சந்திப்போம். இஸ்லாத்துக்கோ, இந்நாட்டின் முஸ்லிம்களுக்கோ என்னை விரோதியாகக் கருதாதீர்கள். நான் தங்களுக்கு மட்டுமன்றி உலகம் முழுவதற்குமே நண்பன்; ஊழியன். என்னை ஏமாற்றிவிடாதீர்கள். இந்தக் கடிதத்தின் உருது மொழிபெயர்ப்பை இத்துடன் அனுப்பியிருக்கிறேன். - தங்கள் சகோதரன், காந்தி.''

ஸ்ரீ ஜின்னா 24-ஆம் தேதி ஸ்ரீநகரிலிருந்து பதில் அனுப்பினார்: ''அன்புள்ள ஸ்ரீ காந்தி, பம்பாயிலுள்ள என் வீட்டில் தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்ளுவேன். - தங்கள் அன்புள்ள, எம். ஏ. ஜின்னா .''

ஆகஸ்டு முதல் தேதியன்று காந்திஜி சேவா கிராமத்துக்குச் செல்லும் வழியில் புனாவுக்கு வந்தார். ஆகஸ்டு முதல் தேதியிலிருந்து 6-ஆம் தேதி வரையில் கஸ்தூரிபாய் வாரம் கொண்டாடப்பட்டது.

ஆகஸ்டு 2-ஆம் தேதி கஸ்தூரி பாய், மகாதேவ தேசாய் இவர்கள் சமாதிகளுக்குக் காந்திஜி சென்று பிரார்த்தனை செய்த பின் மலர்களை வைத்தார். பிறகு வார்தாவுக்குப் புறப்பட்டார்.

ஆகஸ்டு 3-ஆம் தேதி காந்திஜியை வரவேற்பதற்காக வார்தா ஸ்டேஷனில் 6,000 பேர் கூடியிருந்தனர். அங்கிருந்து ஒரு மாட்டுவண்டியில் காந்திஜி சேவா கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்தார்; சேர்ந்தபோது காலை 9 மணி.

கஸ்தூரி பாயின் குடிசைக்கு விஜயம் செய்தார். அங்கே கஸ்தூரிபாயின் படம் தொங்கவிடப்பட்டிருந்தது. விளக்கு எரிந்துகொண்டிருந்தது. காந்திஜியின் துக்க மிகுதி வெளிப்படையாகத் தெரிந்தது.

காந்திஜி முதலிய தலைவர்கள் பம்பாயில் 1942-இல் கைது செய்யப்பட்ட ஆகஸ்டு 9-ஆம் நாளை இந்த வருஷம் கொண்டாடுவது பற்றி, ஆகஸ்டு 5-ஆம் தேதியன்று சேவா கிராமத்திலிருந்து காந்திஜி பின் கண்ட அறிக்கையை விடுத்தார்: ''ஆகஸ்டு 9-ஆம் தேதி ஒரு விசேஷமான சந்தர்ப்பம். காங்கிரஸின் நோக்கம் குறித்தும், என்னுடைய நோக்கம் குறித்தும் மிகுந்த தப்பபிப்பிராயம் ஏற்பட்டிருக்கிறது. தவிர்க்கக்கூடிய, தீங்கு பயக்கத்தக்க, சந்தர்ப்பங்களை நான் தவிர்த்தாக வேண்டும். ஆகவே நான் கூறும் யோசனை என்னவென்றால், பம்பாயைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும், அன்றைத் தினம் போலீஸின் விசேஷத் தடையுத்தரவுகளை அலட்சியப்படுத்தக் கூடாது. பம்பாய்க்குப் பம்பாய் மேயர் மூலம் நான் ஏற்கனவே ஆலோசனை கூறிவிட்டேன். மிகவும் ஏற்ற இடமாக நான் பம்பாயைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், நான் அங்கே போவது மிகமிகச் சுலபம் என்பதுடன், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த 1942 ஆகஸ்டுக் கூட்டம் அங்கேதான் நடந்தது என்பதுமாகும். கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன். ஆகஸ்டு 9-ஆம் தேதியன்று, தலைமறைவாயிருப்பவர்கள் வெளியே வரவேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். அன்று ஒவ்வொருவரும் செய்யவேண்டியது என்னவென்றால், அகிம்சையில் நம்பிக்கையிருந்தாலும் இல்லாவிட்டாலும், காங்கிரஸ்காரர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், 14 அம்சத் திட்டம் முழுவதையுமோ, அல்லது ஒரு பகுதியையோ நிறைவேற்ற வேண்டும். உதாரணமாக, இந்தியாவின் நலனைக் கருதி ஒரு பொது உடன்பாட்டுக்கு வருவதற்குக் காயிதே ஆஜமுக்கும், எனக்கும் கடவுள் விவேகத்தைக் கொடுத்தருள வேண்டுமென்று ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனைகள் செய்யலாம். சேவை உணர்ச்சி எல்லா இடங்களிலும் நிலவ வேண்டும். அவர்கள் (ஆங்கிலேயரும், அமெரிக்கரும்), ஆகஸ்டுத் தீர்மானம் வெறுப்பின் பேரில் உருவான ல்ல என்பதை உணரட்டும். அது நாட்டு மக்களின் இயற்கையான உரிமையை அப்பட்டமாக வெளியிடும் அறிக்கையே யாகும்."

லாகூரில் பத்திரிகை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ஜின்னா கூறியதாவது: ''பொதுமக்களில் ஒவ்வொரு பிரிவினருக்கும் சுதந்திரம் இருக்கவேண்டும் என்பதே நமது விருப்பம். நாங்கள் வெகு சீக்கிரத்தில் சந்திக்கப் போகிறோம். நானும் காந்திஜியும் ஓர் உடன்பாட்டுக்கு வர உங்கள் ஆசீர்வாதங்களை வழங்குங்கள்.''

ஆகஸ்டு 8-ஆம் தேதியன்று வார்தா ஜில்லா மாஜிஸ்திரேட், 9, 10-ஆம் தேதிகளில் தமது முன்அனுமதியின்றிப் பொதுக்கூட்டங்களோ, ஊர்வலங்களோ நடத்தக்கூடாது என்று தடை உத்தரவு போட்டார்.

ரவீந்திரநாத டாகுரின் மூன்றாவது சிரார்த்த தினம் சேவா கிராமத்தில் பிரார்த்தனைகளோடு அனுஷ்டிக்கப்பட்டது.

ஆகஸ்டு 9-ஆம் தேதியன்று காலையில் பம்பாயில் ஊர்வலமாகச் சென்ற காங்கிரஸ்காரர்களைப் போலீஸார் கைது செய்து மாலை 7 மணிக்கு விட்டுவிட்டார்கள். ஹர்த்தால் வெற்றிகரமாக நடைபெற்றது. சேவாகிராம் ஆசிரமவாசிகள் உண்ணாவிரதம் இருந்து நூல் நூற்றார்கள்; பிரார்த்தனை செய்தார்கள். வார்தாவில் ஹர்த்தால் வெற்றிகரமாக இருந்தது. ஆர்ப்பாட்டங்கள் எவையும் நடைபெறவில்லை.

காந்திஜியின் உபதேசத்துக்கு இணங்க, 10-ஆம் தேதியன்று தலைமறைவாக இருந்த அநேகக் காங்கிரஸ் ஊழியர்கள் தங்களுடைய இருப்பிடம் முதலிய விவரங்களைப் போலீஸாருக்குத் தெரிவித்தார்கள்.

ஆகாகான் மாளிகையில் காந்திஜி பாதுகாவலில் வைக்கப்பட்டிருந்தபோது அவருக்கு அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கான கடிதங்கள் இப்பொழுதுதான் அவரிடம் சேர்ப்பிக்கப்பட்டன.

காந்தி - ஜின்னா சந்திப்பு வெற்றிபெற வேண்டும் என்று காங்கிரஸ்காரர்களும் முஸ்லிம் லீகர்களும் சேர்ந்து பிரார்த்தனை செய்தார்கள். அலகாபாத், ஆனந்தபவன் மாளிகையில் காங்கிரஸ், லீக் ஆகியவற்றின் முக்கியஸ்தர்கள் ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காகத் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

ஆகஸ்டு 17-ஆம் தேதியன்று காந்திஜிக்கு ஜின்னாவிடமிருந்து வந்த தந்தி: ''மிகவும் வருந்துகிறேன். ஜுரத்துடன் படுத்திருக்கிறேன். தங்களை 19-ஆம் தேதி சந்திக்க இயலாது என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். எனக்கு உடம்பு செளக்கியமானதும் தங்களுக்கு உடனடியாகத் தேதியை அறிவிக்கிறேன்."

ஆகஸ்டு 15-ஆம் தேதியிட்ட வைசிராயின் கடிதம் காந்திஜிக்குக் கிடைத்தது.

ஆகஸ்டு 18-ஆம் தேதியன்று காந்தி - வேவல் கடிதப் போக்குவரத்தைச் சர்க்கார் வெளியிட்டது. ஜூலை 15-ஆம் தேதியன்று காந்திஜி முதல் கடிதத்தை வைசிராய்க்கு எழுதினார். அதில், காரியக் கமிட்டியைத் தாம் கலந்து ஆலோசிப்பதற்கு வசதியளிக்குமாறும், இல்லையென்றால் தமக்கு வைசிராய் பேட்டி அளிக்க வேண்டுமென்றும் கேட்டிருந்தார். அதற்கு ஜூலை 22-ஆம் தேதி வேவல் எழுதிய பதிலில், ''நீங்கள் திட்டவட்டமான, ஆக்ககரமான ஒரு கொள்கையை என்னிடம் சமர்ப்பித்தால் அதை மகிழ்ச்சியோடு ஆராய்வேன்'' என்று தெரிவித்தார். ஜூலை 27- இல் காந்திஜி எழுதிய கடிதம்: "அன்புள்ள நண்பரே! இதுதான் என் திட்டம். உடனடியாக இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிப்பதாகப் பிரகடனம் செய்து, மத்திய சட்ட சபைக்குப் பொறுப்பான தேசீய சர்க்காரை அமைத்தால், நிலைமைகள் மாறியிருப்பதை முன்னிட்டு 1942 ஆகஸ்டுத் தீர்மானப்படி பொதுஜனச் சட்டமறுப்பு நடத்த இயலாது என்றும், யுத்த முயற்சிக்குக் காங்கிரஸ் பூரண ஒத்துழைப்பை அளிக்க வேண்டுமென்றும் அறிவிக்குமாறு காரியக் கமிட்டிக்கு நான் ஆலோசனை கூறத் தயாராக இருக்கிறேன். யுத்த களத்தில் இப்போதைப் போலவே ராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து நடக்க வேண்டும். ஆனால், இந்தியா மீது நிதிப்பளுவைச் சுமத்தக் கூடாது. ஓர் உடன்பாடு காண்பதில் பிரிட்டிஷ் சர்க்காருக்கு விருப்பம் இருக்குமென்றால், கடிதப் போக்குவரத்துக்குப் பதிலாக நட்புணர்ச்சியோடு கூடிய பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும். ஆனால், நான் உங்கள் கையில் இருக்கிறேன். கெளரவமான ஓர் உடன்பாடு காண்பதற்கான ஒரு சிறிது நம்பிக்கை இருக்கும் வரையிலும் நான் தொடர்ந்து (கதவைத்) தட்டிக்கொண்டிருப்பேன்.''

ஆகஸ்டு 15-இல் வேவல் பதில் எழுதினார்: ''நீங்கள் தெரிவித்திருப்பவை போன்ற யோசனைகள் முற்றும் ஏற்றுக்கொள்ள இயலாதவையாகும். அவை உண்மையில் 1942 ஏப்ரலில் ஸர் ஸ்டாபோர்டு கிரிப்ஸிடம் மெளலானா அபுல்கலாம் ஆஸாத் தெரிவித்த யோசனைகளைப்போலவே இருக்கின்றன. ஆனாலும், ஹிந்துக்கள், முஸ்லிம்கள், முக்கியமான சிறுபான்மை வகுப்பினர் ஆகியவர்களுடைய தலைவர்கள் ஓர் இடைக்கால சர்க்காரை நிறுவுவதிலும், தற்போதைய அரசியல் அமைப்பின் கீழ் வேலை செய்வதிலும் ஒத்துழைக்கத் தயாராக இருந்தால் நல்ல முன்னேற்றம் காணலாம். இந்தியத் தலைவர்கள் இப்போதைவிட இன்னும் அதிக நெருக்கம் கொள்ளும் வரையிலும், நானே எந்த உதவியும் செய்ய முடியுமா என்று சந்தேகப்படுகிறன். சிறுபான்மையோர் பிரச்னைகள் சுலபமானவையல்ல என்பதையும் தங்களுக்கு நினைவூட்டுகிறேன். அவை எதார்த்தமானவை. பரஸ்பரம் விட்டுக்கொடுத்து, சகிப்புத்தன்மை காட்டுவதன் மூலமே அவற்றைத் தீர்க்க முடியும்."

காந்திஜிக்குப் பதில் கடிதம் வந்து சேர்ந்த அதே சமயத்தில் கடிதப் போக்குவரத்து முழுவதையும் வைசிராய், பத்திரிகைகளில் வெளியிட அனுமதித்துவிட்டார். அதற்கு மறுநாள் காந்தி - ஜின்னா சந்திப்பு.

வைசிராயின் பதிலைப் பற்றிக் கேட்டபோது காந்திஜி கூறியதாவது: ''பொதுஜன ஆதரவைப் பெறும் நோக்கம் பிரிட்டிஷ் சர்க்காருக்குக் கிடையாது என்பதற்குச் சர்க்காரின் கடைசிக் கடிதமே தக்க சான்றாக இருக்கிறது.''

ஆகஸ்டு 30-இல் ஜின்னாவிடமிருந்து காந்திஜிக்கு வந்த தந்தி: “தங்கள் தந்தி கிடைத்தது. எனது ஆகஸ்டு 26-ஆம் தேதிக் கடிதம் தங்களுக்குக் கிடைத்திருக்குமென நம்புகிறேன். தங்களுக்குச் செளகரியமாக இருந்தால் செப்டம்பர் 7-ஆம் தேதியோ, அதற்குப் பிறகு எந்தத் தினத்திலுமோ தங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்ளுகிறேன். தயவு செய்து தகவல் கொடுங்கள்.''

செப்டம்பர் 1, 2, 3 தேதிகளில் சேவா கிராமத்தில் அகில இந்திய சர்க்கா சங்கக் கூட்டம் நடந்தது. அதில் காந்திஜி பேசினார். அரசியலை மறந்துவிட்டு ராட்டையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அதுதான் உண்மையான அரசியல் - சாத்விக அரசியல் - என்றும், மிகமிகத் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களுக்குக் கஷ்ட நிவாரணமும் சந்தோஷமும் அளிக்கும் சுதந்திரம் அகிம்சையின் மூலமாக, அதாவது ராட்டையின் மூலமாகத்தான் கிட்டும் என்றும் காந்திஜி கூறினார்.

செப்டம்பர் 9-ஆம் தேதி காந்திஜி பம்பாய்க்குப் போய்ச் சேர்ந்தார். பகல் 1 மணிக்கு ஸியோன் ஸ்டேஷனில் இறங்கிப் பிர்லா மாளிகைக்குச் சென்றார். காலையிலிருந்து மலபார் ஹில் பகுதி முழுவதிலும் போலீஸ் பந்தோபஸ்தும், ராணுவப் போலீஸ் பந்தோபஸ்தும் செய்யப்பட்டிருந்தன.

4 மணி அடிக்க ஐந்து நிமிஷம் இருக்கும்போது காந்திஜி பியாரிலாலுடன் ஜின்னாவின் மாளிகைக்குச் சென்றார். அவரை ஜின்னா வரவேற்று உடல் நிலை பற்றி விசாரித்தார். காந்திஜி ஜின்னாவின் தோளைக் கட்டிப்பிடித்துக்கொண்டார். தாம் செளக்கியமாக இருப்பதாகச் சொன்னார். படம் பிடிப்பவர்களுக்காகச் சற்று நிற்கும்படி காந்திஜியை ஜின்னா கேட்டுக்கொண்டார். அப்புறம் இருவரும் உள்ளே சென்று தனி அறையில் மாலை 7 மணி வரை பேசினர். பேசி முடிந்தபின் வெளியே வந்து, பத்திரிகையாளர்களிடம் ஜின்னா கூறியதாவது: ''நாங்கள் மூன்று மணி நேரம் சிநேக பூர்வமாக மனம் விட்டுப் பேசினோம். திங்கட்கிழமை மாலை 5.30 மணியிலிருந்து பழையபடியும் எங்கள் பேச்சைத் தொடருகிறோம். நாளை ரம்ஜானின் 21-ஆவது நாள். அதனால் எல்லா முஸல்மான்களும் அந்தத் தினத்தை அனுஷ்டிக்க வேண்டும். ரம்ஜானின் 21-வது நாளில் பேச்சுவார்த்தைகள் வைத்துக் கொள்ளாமல் இருக்கவேண்டும் என்பதற்குச் சம்மதிக்கும்படி ஸ்ரீ காந்தியை நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.''

"சம்மதிக்கும்படி ஸ்ரீ காந்தியை நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்'' என்ற வார்த்தைகளை ஸ்ரீ ஜின்னா கூறியபோது, காந்திஜி புன்னகை புரிந்துவிட்டு, "சம்மதிக்க அல்ல, சரண் அடையவே தயாராக இருக்கிறேன்'' என்றார்.

செப்டம்பர் 11-ஆம் தேதி பேச்சு வார்த்தைகள் முடிந்தவுடன் நடந்த நிருபர் கூட்டத்தில் காந்திஜி கூறியதாவது: ''இந்தியா முழுவதற்கும் சுதந்திரம் பெறுவது எங்கள் லட்சியம். அதற்காகவே நாங்கள் பிரார்த்திக்கிறோம்; எங்கள் உயிரைப் பணயம் வைக்கவும் பிரதிக்ஞை செய்துகொண்டிருக்கிறோம். நாங்கள் எங்கள் பொறுப்பைப் பூரணமாக உணர்ந்து, ஓர் உடன்பாட்டுக்கு வருவதற்காகச் சகல முயற்சிகளையும் செய்கிறோம்.''

''பி. எம்.'' என்ற அமெரிக்கப் பத்திரிகைக்கு ஸர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ் அளித்த பேட்டியில், காந்தி - ஜின்னா பேச்சு வார்த்தைகளைப்பற்றிக் கூறியதாவது: "ஓர் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி காங்கிரஸையும், லீக்கையும் எந்த வெளிச் சக்தியும் நிர்ப்பந்தப்படுத்த முடியாது. இந்த இரண்டு பிரதானமான கட்சிகளும் ஓர் உடன்பாட்டுக்கு வந்துவிட்டாலும், முக்கியமான சிறுபான்மைச் சமூகங்களுக்குப் புதிய அரசியல் அமைப்பில் தக்க பாதுகாப்பு அளிக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்படும்படி செய்யவேண்டியிருக்கும்.''

செப்டம்பர் 12-ஆம் தேதி காலை 10.30 மணியிலிருந்து 1.மணி வரையிலும், மாலை 5.30 மணியிலிருந்து 7 மணி வரையிலும் காந்திஜியும், ஸ்ரீ ஜின்னாவும் பேசினார்கள்.

செப்படம்பர் 13-ஆம் தேதி, பேச்சு வார்த்தைகளின் நான்காவது நாள். அன்று பகல் 11 மணியிலிருந்து 1 மணி வரையிலும், மாலை 5.30 மணியிலிருந்து 7 மணி வரையிலும் பேசினார்கள்.

செப்டம்பர் 14-ஆம் தேதி ஹிந்துப் பஞ்சாங்கப்படி காந்திஜியின் 75-வது பிறந்த நாள். அன்று பேச்சு வார்த்தைகள் மாலை 5.30 மணியிலிருந்து 7 மணி வரையிலும் நடைபெற்றன.

செப்டம்பர் 15-ஆம் தேதி மாலை 5.30 மணியிலிருந்து 7.மணி வரை பேச்சு வார்த்தைகள்.

செப்டம்பர் 16-ஆம் தேதி, ரம்ஜான் மாதத்தின் பெருநாளானபடியால் அன்று விடுமுறை.

செப்டம்பர் 17-ஆம் தேதி மாலை 5.30 மணியிலிருந்து 7 மணி வரையிலும் பேசினர்.

செப்டம்பர் 18ஆம் தேதி காந்திஜியின் மெளன தினம். மாலை 7 மணி வரையிலும் பேசமாட்டாராதலால், அன்று பேச்சு வார்த்தைகள் நடைபெறவில்லை.

செப்டம்பர் 19-ம் தேதி மாலை 5.30 மணியிலிருந்து 7-மணி வரை காந்தி-ஜின்னா பேச்சு தொடர்ந்து நடந்தது. ஈத் பண்டிகையை முன்னிட்டு 21-ஆம் தேதிக்குப் பேச்சுவார்த்தைகள் ஒத்திப்போடப்பட்டன.

செப்டம்பர் 21-ஆம் தேதியிலிருந்து திரும்பவும் தொடங்கி 27-ஆம் தேதி வரையிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள். உடன்பாடு காண முடியாமல் பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றன. "இது எங்கள் முயற்சியின் இறுதி முடிவல்ல என்று நம்புகிறோம்'' என்று ஜின்னாவும், ''பேச்சு வார்த்தைகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவே கொள்ளவேண்டும்" என்று காந்திஜியும் கூறிய போதிலும் இருவரிடையிலும் மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடைபெறவே இல்லை. இருவரும் சந்தித்துப் பேசிய சமயத்தில் இருவரிடையிலும் நடந்த கடிதப் போக்குவரத்துக்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டன, மொத்தம் 24 கடிதங்கள். முஸ்லிம் லீக்கின் லாகூர்த் தீர்மானப்படி தேசத்தைப் பிரிவினை செய்வது ஒன்றே முஸ்லிம்களுக்கும் ஹிந்துக்களுக்கும் நன்மை பயக்கக் கூடியது என்றும், பிரிட்டிஷார் வெளியேறுவதற்குமுன் பாகிஸ்தான் அமைக்கப்பட்டு விட வேண்டுமென்றும், ராஜாஜியின் திட்டம் லாகூர்த் தீர்மானத்தை உருக்குலைத்து அங்கவீனம் ஆக்கிவிட்டதென்றும், அதுவும் காந்திஜியின் நிபந்தனைகளும் பாகிஸ்தான் கோரிக்கையை அடியோடு தகர்ப்பதற்காக யோசனை செய்யப்பட்டவை என்றும், ஜின்னா தமது கடிதங்களில் கூறியிருந்தார். மதம் மாறிய ஒரு கூட்டத்தாரும், அவர்களுடைய சந்ததிகளும் தங்களைத் தாய் இனத்தைச் சேராத வேறு தேசிய இனம் என்று கூறிக்கொள்ளுவது சரித்திரத்திலேயே தாம் கண்டறியாத புதுமை என்று காந்திஜி கூறினார். 22-ஆம் தேதியன்று அவர் ஜின்னாவுக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு கூறியிருந்தார்: "பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரம் போன்ற பொதுவான நலன்களை உத்தரவாதம் செய்யாத பிரிவினைக்கு நான் மனப்பூர்வமாக உடந்தையாக இருக்கமுடியாது.'' ராஜாஜியின் திட்டத்தை ஜின்னா ஏற்றுக்கொள்ள மறுக்கவே காந்திஜி தமது சொந்தத் திட்டத்தைக் கூறினார். அதற்கும் ஜின்னா இணங்கவில்லை.

அக்டோபர் 2-ஆம் தேதி காந்திஜியின் 75-வது பிறந்த தினம். உலகமெங்கும் இந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அன்று ரங்கூனில் நடந்த கொடி வணக்கத்தின்போது இந்தியத் தேசீய ராணுவத்தின் தளபதி நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் பேசுகையில், "எங்கள் நாட்டின் தந்தையே! இந்திய விடுதலைக்கான இந்தப் புனிதப் போருக்குத் தங்கள் ஆசீர்வாதங்களையும் நல்வாழ்த்துக்களையும் நாங்கள் வேண்டுகிறோம்" என்றார்.

சேவா கிராமத்தில் கஸ்தூரி பாய் காந்தி தேசீய ஞாபகார்த்த நிதியின் தருமகர்த்தாக்களும், நிதியை வசூல் செய்தவர்களும் அடங்கிய கூட்டம் நடைபெற்றது. தருமகர்த்தாக்கள் தங்கள் தலைவராகக் காந்திஜியை நியமித்தனர். 80 லட்சத்துக்கு மேற்பட்ட தொகைகளுக்குரிய செக்குகளைக் காந்திஜியிடம் தருமகர்த்தாக்களின் சார்பில் ஸ்ரீமதி சரோஜினி நாயுடு அளித்தார்.

நவம்பர் 19-இல் அகில இந்திய ஆதாரக் கல்விப் பயிற்சி முகாம் சேவா கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஓய்வொழிச்சலில்லாத வேலைகளால் களைத்துப்போயிருந்த காந்திஜி டிசம்பர் 4-ஆம் தேதியிலிருந்து 31-ஆம் தேதிவரை தம்முடைய சகல பொது வேலைகளையும், பேட்டியளிப்பதையும் கடிதங்கள் எழுதுவதையும், பத்திரிகைகள் படிப்பதையும் நிறுத்திவைத்தார்.

1945 (வயது 76)

காங்கிரஸ் தலைவர்களை விடுதலை செய்ய முடியாது என்ற அமெரியின் மறுப்போடு, இந்த வருடம் ஆரம்பமாயிற்று. "சிறைக்குள் இருக்கும் சத்தியாக்கிரகி ஒருபோதும் அழிவெய்த மாட்டான். சிறைவாசம் செய்வதன் மூலம் தன் லட்சியத்துக்காகவே அவன் பாடுபடுகிறான். ஆனால், வெளியில் இருப்பவர்கள் உள்ளே இருப்பவர்களை மறந்துவிடக் கூடாது'' என்றார் காந்திஜி.

ஜனவரி 11-இல் சேவாகிராமத்தில் ஹிந்துஸ்தான் தாலிமி சங்க மகாநாடு ஆரம்பமாயிற்று. இந்தியா முழுவதிலுமிருந்து 200 கல்வித் துறை நிபுணர்கள் இம்மகாநாட்டுக்கு வந்திருந்தார்கள். காந்திஜி தமது சொற்பொழிவில், பாடமொழியாக இருக்க வேண்டியது தாய்மொழியே என்பதை வற்புறுத்திக் கூறியதுடன் ஹிந்துஸ்தானி ஒன்றுதான் தேசிய மொழியாக இருக்க முடியும் என்பதையும் அழுத்தமாகக் கூறினார்.

பிப்ரவரி 15-இல் கஸ்தூரி பாய் ஞாபகார்த்தப் பணியில் சம்பந்தப்பட்ட 150 ஊழியர்கள் அடங்கிய கூட்டத்தில் காந்திஜி பேசினார். கஸ்தூரி பாய் ஞாபகார்த்த நிதியான ஒரு கோடியே 24 லட்சம் ரூபாயை வீண் விரயம் செய்யத் தாம் அனுமதிக்கப் போவதில்லை என்றும், கிராமங்களில் வாழும் பெண்கள், குழந்தைகள் ஆகியோரின் வைத்திய வசதி, கல்வி வசதி, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றிற்காகவே அது பயன்படுத்தப்படும் என்றும் கூறினார்.

பிப்ரவரி மாதக் கடைசியில் வார்தாவில் காந்திஜியின் தலைமையில் அகில இந்திய ஹிந்துஸ்தானி பிரசார சபையின் மகாநாடு நடைபெற்றது.

மார்ச்சு மாதக் கடைசியில் அகில இந்திய சர்க்கா சங்கக் கூட்டம் சேவாகிராமத்தில் நடந்தது.

ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி பம்பாயில் கஸ்தூரிபாய் ஞாபகார்த்த டிரஸ்டின் ஆதரவில் நடந்த பெண் ஊழியர்களின் முகாமில் காந்திஜி பேசினார்.

மே 7-ஆம் தேதி நேச நாடுகளிடம் ஜெர்மனி நிபந்தனையின்றிச் சரணடைந்தது.

லண்டனில் சுமார் 10 வாரங்கள் ஆலோசனை நடத்திவிட்டு ஜூன் 5-ஆம் தேதி வேவல் இந்தியாவுக்குத் திரும்பினார். ஜூன் 15-ஆம் தேதியன்று ரேடியோப் பேச்சு மூலம் சில யோசனைகளை வெளியிட்டார். கவர்னர் ஜெனரல், தலைமைச் சேனாதிபதி ஆகிய இரு பதவிகளையும் தவிர, இந்திய அரசியல் தலைவர்களையே அங்கத்தினர்களாகக் கொண்ட நிர்வாகக் கவுன்சில் அமைக்க வேண்டுமென்றும், ஜாதி ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் அதில் சமதையான எண்ணிக்கையுடன் ஸ்தானங்கள் கொடுக்கப்படுமென்றும், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குப் பூர்வாங்கமாகக் கட்சித் தலைவர்கள், மாகாணப் பிரதமர்கள், முன்னாள் பிரதமர்கள் ஆகியோர் அடங்கிய ஒரு மகாநாட்டை வைசிராய் கூட்டுவாரென்றும், மகாநாட்டில் பங்கெடுத்துக்கொள்ளுவோரிடம் நிர்வாகக் கவுன்சில் அங்கத்தினர்களாக நியமிக்கப்பட வேண்டியவர்களின் பெயர் ஜாபிதாக்களைக் கேட்பார் என்றும், அந்த ஜாபிதாக்களிலிருந்து வைசிராய் நிர்வாகக் கவுன்சில் அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுப்பார் என்றும் 'இன்றைய அரசியல் அமைப்பில் அதிகப்படி முன்னேற்றம் காண்பதற்கு இந்த யோசனைகளே சாத்தியமானவை' என்பது பிரிட்டிஷ் சர்க்காரின் அபிப்பிராயம் என்றும் வைசிராய் தமது பேச்சில் தெரிவித்தார்.

சிறையிலிருக்கும் காங்கிரஸ் காரியக் கமிட்டி அங்கத்தினர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அமெரி அறிவித்தார்.

இந்த யோசனைகள் சம்பந்தமாகக் காங்கிரஸின் கொள்கையை வகுக்க வேண்டியவர்கள் காரியக் கமிட்டி அங்கத்தினர்கள்தான் என்றும், தம்மால் ஆலோசனை மட்டுமே கூற முடியுமென்றும் ஜூன் 15-ஆம் தேதியன்று காந்திஜி ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

வைசிராய், சிம்லாவில் கூட்டும் மகாநாட்டில் கலந்துகொள்ளுவதென ஜூன் 21-இல் பம்பாயில் கூடி காங்கிரஸ் காரியக் கமிட்டி தீர்மானித்தது. அதில் காந்திஜியும் கலந்துகொண்டார். ஜூன் 25-இல் சிம்லா வைசிராய் மாளிகையில் மகாநாடு கூடியது. வைசிராயின் அழைப்பின் பேரில் காங்கிரஸ், லீக் தலைவர்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், சீக்கியர் முதலியோரின் பிரதிநிதிகளும், மாகாணப் பிரதமர்களும், முன்னாள் பிரதமர்களும் மகாநாட்டில் கலந்துகொண்டார்கள். காங்கிரஸுக்கும் லீக்குக்கும் இடையே ஏற்பட்ட அபிப்பிராய பேதத்தால் ஜூலை 14-ஆம் தேதிக்கு மகாநாடு ஒத்திவைக்கப்பட்டது. நிர்வாகக் கமிட்டியில் முஸ்லிம் அங்கத்தினர்கள் அனைவரும் லீக் அங்கத்தினர்களாகவே இருக்கவேண்டுமென்று ஜின்னா பிடிவாதமாகக் கூறினார். இதனால் மகாநாடு தோல்வியில் முடிந்தது.

ஜூலை 26- இல் பிரிட்டனில் தொழிற்கட்சி பதவிக்கு வந்தது. புதிய பிரிட்டிஷ் பிரதமர் அட்லி க் கு க் காங்கிரஸ் தலைவர் மெளலானா அபுல்கலாம் ஆஸாத் வாழ்த்துத் தந்தி அனுப்பினார்.

ஆகஸ்டு 14-இல் நேச நாடுகளிடம் ஜப்பான் சரணடைந்தது.

இந்தியாவில் கூடிய விரைவில் பொதுத்தேர்தல்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 19-இல் பிரிட்டிஷ் பிரதமரும் வைசிராயும், தேர்தல் விரைவில் நடைபெறும் என்றும், தேர்தல் முடிவுகள் வெளியானதும் நிர்வாகக் கவுன்சிலைத் தேர்ந்தெடுக்க வைசிராய்க்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் ரேடியோப் பேச்சின் மூலம் அறிவித்தனர்.

செப்டம்பர் 21-ஆம் தேதியிலிருந்து பம்பாயில் அ. இ. கா. க. கூட்டம் நடைபெற்றது. கடைசி நாள் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானத்தில், வேவலின் யோசனைகள் தெளிவற்றவையாக இருப்பதுடன் திருப்திகரமாகவும் இல்லை என்று கூறப்பட்டிருந்தபோதிலும், தேர்தல்களில் போட்டியிடுவது என்று காங்கிரஸ் தீர்மானித்தது.

காந்திஜி, புனா இயற்கை வைத்தியச் சிகிச்சை ஆஸ்பத்திரியில் மூன்று மாதங்கள் தங்கியிருந்துவிட்டு, நவம்பர் 21-ஆம் தேதியன்று சேவாகிராமத்துக்குத் திரும்பினார்.

டிசம்பர் முதல் தேதி கல்கத்தா போய்ச் சேர்ந்து அன்றே வங்காள கவர்னர் ஸ்ரீ கேஸியைக் கண்டார். அதற்கு முன் பிரார்த்தனைக் கூட்டத்தில் பேசியபோது, வங்காளப் பஞ்சத்தினால் கஷ்டப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்காகவே தாம் வந்திருப்பதாகவும், அரசியலில் பங்குகொள்ளுவதற்கு அல்ல என்றும் காந்திஜி தெரிவித்தார்.

டிசம்பர் 19-ஆம் தேதி சாந்திநிகேதனில் தீனபந்து ஆண்டுரூஸ் ஞாபகார்த்த ஆஸ்பத்திரியின் அஸ்திவாரக்கல் நாட்டும் வைபவத்தைக் காந்திஜி நடத்தினார்.
  • (நன்றி: மகாத்மா காந்தி நூல்கள் - தொகுதி மூன்று)

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர