Skip to main content

காந்தி: சத்திய சோதனைக்குப் பின் - 13


(காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் வருடவாரியாக இத்தளத்தில் வெளியாகிறது. சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் குறிப்புகள் மகாத்மா காந்தி நூல்கள் வரிசையில், தொகுதி மூன்றில் சேர்க்கப்பட்டன.)

1936 (வயது 67)

ஜனவரி முதல் வாரத்தில் ஜப்பானியக் கவிஞர் யோனே நோகுச்சி சேவா கிராமத்துக்கு வந்தார். சில வாரங்களுக்குப் பிறகு டாக்டர் தோமிகா கோரா, காந்திஜியை ஜப்பானுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பதற்கு அங்கே வந்தார்.

கர்ப்பக் கட்டுப்பாடு இயக்கத் தலைவி ஸ்ரீமதி மார்கரட் சாங்கர் ஜனவரிக் கடைசி வாரத்தில் வார்தாவுக்கு வந்து காந்திஜியைப் பார்த்தார். “பெண்களுக்கும் சுதந்திரம் உண்டு என்ற உண்மையைப் பெண்களே உணரும்படி செய்ய என்னால் முடிந்தால் அப்புறம் இந்தியாவில் கர்ப்பக் கட்டுப்பாட்டுப் பிரச்னையே இராது” என்றார் காந்திஜி.

பத்து வாரங்களுக்கும்  மேலாகவே காந்திஜிக்கு உடல் சோர்வு ஏற்பட்டிருந்தது.

மார்ச்சு முதல் வாரத்தில் சாவ்லியில் காந்தி சேவா சங்கத்தின் இரண்டாவது வருடராந்தரக் கூட்டம் நடைபெற்றது. அதற்குத் தலைமை வகித்த காந்திஜி, "காந்தியம் என்று ஒன்று இல்லை. எனக்குப் பின்னால் நான் எந்தப் புதியதோர் சமயத்தையும் விட்டுச்செல்ல விரும்பவில்லை'' என்று கூறினார்.

மார்ச்சு இரண்டாவது வாரத்தில், நீக்ரோ தூது கோஷ்டிக்குப் பர்தோலியில் காந்திஜி இரண்டு மணிநேரம் பேட்டியளித்தார்.

மார்ச்சு முதல் வாரத்தில் லட்சுமணபுரியில் காங்கிரஸ் மகாநாடு நடந்தது. அப்போதுதான் ஐரோப்பாவிலிருந்து திரும்பிவந்த ஜவாஹர்லால் நேரு, அம்மகாநாட்டுக்குத் தலைமை வகித்தார். 1935-ஆம் வருடத்து சட்டம், மக்களின் உரிமைகளை நசுக்கும் அரசியல். அடக்குமுறைக்குத் துணையாகச் சுமத்தப்பட்ட ஒன்று அது எனக் கண்டனம் செய்யப்பட்டது.

மார்ச்சு 22-இல் லட்சுமணபுரியில் அகில இந்திய நூற்போர் சங்கமும், அகில இந்தியக் கிராமக் கைத்தொழில் சங்கமும் நடத்திய கதர், கிராமக் கைத்தொழில் கண்காட்சியைக் காந்திஜி திறந்து வைத்தார்.

காந்திஜி, சேவா கிராமத்துக்கு விஜயம் செய்து, அங்கேயே வாசம் செய்வதற்குத் தாற்காலிகமாக முடிவு செய்தார்.

ஏப்ரல் மாதக் கடைசியில் நாகபுரியில் அகில இந்திய இலக்கிய மகாநாட்டுக்குக் காந்திஜி தலைமை வகித்தார். “என்னிடத்தில் மட்டும் சக்தி இருக்குமென்றால், வகுப்புவாதம், வெறி, துவேஷம் முதலியவற்றை வளர்க்கும் இலக்கியம் முழுவதையுமே சபித்து ஒழித்துவிடுவேன்'' என்றார் காந்திஜி.

ஏப்ரல் 30-ஆம் தேதி அதிகாலையில் மகன்வாடியிலிருந்து சேவா கிராமத்துக்குச் சுமார் 5 மைல் தூரமும் காந்திஜி நடந்தே சென்றார். அவருடைய குடிசை இன்னும் தயாராகவில்லை. ஆகவே, உட்கார்ந்து வேலை செய்வதற்கு மூங்கில் பாய்களைக்கொண்டு மரத்து நிழலில் ஒரு தாற்காலிக இருப்பிடம் தயாரிக்கப்பட்டது. மறுநாள் மாலைப் பிரார்த்தனைக்குப் பிறகு கிராமவாசிகளுக்கு நூல் நூற்பது எப்படி என்பதைக் காட்டினார். டாக்டர் அம்பேத்காருக்குப் பேட்டியளித்தார்.

மே 10-ஆம் தேதி டாக்டர் அன்ஸாரி காலமானார்.

மே மாதம் மூன்றாவது வாரத்தில் மகன்வாடியில் கிராம ஊழியர்களுக்குப் பயிற்சிப் பள்ளியைத் திறந்து வைத்தார்.

ஜூன் மாதத்தில் அப்பாஸ் தயாப்ஜி காலமானார்.

ஆகஸ்டில் காங்கிரஸ், பொதுமக்களுக்கு தேர்தல் வேண்டுகோளை விடுத்தது.

அக்டோபரில் தேசியக் கல்வி மகாநாட்டுக்குக் காந்திஜி தலைமை வகித்தார்.

நவம்பர் முதல் வாரத்தில் அகமதாபாத்தில் குஜராத்தி இலக்கிய மகாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். ''கோடிக்கணக்கான மக்களோடு பேசக்கூடிய இலக்கியத்தையும், கலையையுமே நான் விரும்புகிறேன். நம்முடைய இலக்கியம், கஷ்டம் தரும் சமாசாரமாக இருக்கிறது'' என்றார் காந்திஜி.

டிசம்பர் கடைசி வாரத்தில் பெயிஸ்பூர் காங்கிரஸின்போது அங்கே கதர், கிராமக் கைத்தொழில் கண்காட்சி நடைபெற்றது. அலங்கார வேலைகள், ஓவியர் நந்தலால் போஸிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அதைக் காந்திஜி திறந்து வைத்தார். காங்கிரஸ் மகா சபை ஒரு கிராமத்தில் கூடுவது இதுதான் முதல் தடவை. இதில் பணிபுரிந்த தொண்டர்களும் கிராமங்களிலிருந்து திரட்டப்பட்டவர்களே. ஜவாஹர்லால் நேரு மகாநாட்டுக்குத் தலைமை வகித்தார். ஐரோப்பாவில் பாஸிஸ அபாயம் வளருவதையும், ஸ்பெயின் உள்நாட்டுப் போரையும், இந்தியாவுக்கு அரசியல் நிர்ணய சபை வேண்டியதன் அவசியத்தையும், தொழிலாளிகளும் விவசாயிகளும் நல்வாழ்வு வாழ வகை செய்ய வேண்டும் என்பதையும் நேரு தமது தலைமைப் பிரசங்கத்தில் விவரமாக எடுத்துக் கூறினார்.

1937 (வயது 68)

தீண்டாமை ஒழிப்புப் பணிக்காக ஜனவரியில் காந்திஜி திருவாங்கூருக்கு விஜயம் செய்தார். சாலைகளும், கோவில்களும் ஹரி ஜனங்களுக்குத் திறந்து விடப்பட்டன. கோவில்களில் காந்திஜி சொற்பொழிவாற்றினார். திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரிக்குச் சென்றார்.

விரும்பினால் விலகிக்கொள்ளும் உரிமையோடு கூடிய டொமினியன் அந்தஸ்து வழங்குவதாக இருந்தால் அதைத் தாம் ஏற்றுக்கொள்ளத் தயார் என்று பிப்ரவரியில் ஸ்ரீ போலக்குக்குக் காந்திஜி எழுதினார்.

பிப்ரவரியில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸுக்கு அமோக வெற்றி கிடைத்தது. இந்தியாவின் 11 மாகாணங்களில் 8 மாகாணங்களில் காங்கிரஸ், ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கான பலத்தைத் தேர்தல்களில் சம்பாதித்தது.

நிர்வாகப் பொறுப்பை ஏற்பதற்கு அதிகாரம் அளிக்கும் தீர்மானம் ஒன்று மார்ச் மாதத்தில் நடந்த அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், கவர்னர்கள் தங்களுடைய விசேஷ அதிகாரங்களை உபயோகித்துத் தலையிடமாட்டார்கள் என்ற உறுதி ஏற்படும் வரையில் மந்திரிப் பதவிகளைக் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்தச் செயல்முறையை காந்திஜியே வகுத்தார். காங்கிரஸின் சட்டசபை நடவடிக்கைகளை மேல்பார்க்கப் பார்லிமென்டரி உப-கமிட்டி அமைக்கப்பட்டது.

ஏப்ரல் மாதத்தில் சென்னையில் ஹிந்தி சாஹித்ய சம்மேளனத்தில் காந்திஜி பேசினார். பாரதீய சாஹித்ய பரீஷத்துக்குத் தலைமை வகித்தார். ''மாகாண மனப்பான்மையையும், குறுகிய புத்தியையும் விட்டொழிக்கும் விஷயமே இது. இதில் கஷ்டங்களே இல்லை. இலக்கியத்தை இலக்கியத்துக்காக மட்டும் நான் விரும்பவில்லை.'' என்றார் காந்திஜி.

ஏப்ரலில், கர்னாடகத்தில் ஹுப்லி கிராமத்தில் காந்திஜி சேவா சங்க வருடாந்தரக் கூட்டத்தில் பேசியபோது, ''சட்ட சபைகளைப் பகிஷ்கரிப்பது, சத்தியத்தைப் போலவும், அகிம்சையைப் போலவும் நிரந்தரமான தத்துவமல்ல. அங்கே நமது சத்தியத்தையும், அகிம்சையையும் நாம் நிலை நிறுத்த வேண்டும்'' என்று கூறினார்.

ஜூலை மாதத்தில் பல மாகாணங்களில் காங்கிரஸ், ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. ''யோக்கியப் பொறுப்பும், தன்னலமின்மையும், உழைப்பும், விழிப்பும் உடைய மந்திரிகளுக்குக் கோடிக்கணக்கான ஏழை மக்களின் உண்மையான நல்வாழ்வுக்காகப் பாடுபடுவதற்கு மிகப்பெரிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது'' என்று மகாத்மா சொன்னார்.

மதுவிலக்கு, குடியானவர்களுக்குக் கஷ்ட நிவாரணம், ஆதாரக் கல்வி, சிறைச்சாலைகளைச் சீர்திருத்தும் சாலைகளாக மாற்றுவது ஆகியவை அவசரசமாகச் செய்யவேண்டிய சீர்திருத் தங்கள் என்று காந்திஜி கூறினார்.

அக்டோபர் முதல் தேதியிலிருந்து சேலத்தில் பரீட்சார்த்த மதுவிலக்குத் தொடங்கப்பட்டது.

அக்டோபரில் நடந்த அ. இ. கா. க. கூட்டத்தினிடம் காந்திஜிக்கு அதிருப்தி ஏற்பட்டது. அக்கூட்டத்தில், மைசூர் அடக்குமுறை சம்பந்தமாக வருந்தத்தக்க வார்த்தைகள் அடங்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை "ஹரிஜன்'' பத்திரிகையில் காந்திஜி வன்மையாகக் கண்டித்தார்; ஜவாஹர்லால் நேரு ராஜிநாமாச் செய்துவிட நினைத்தார்.

கல்கத்தாவில் சுபாஷ் சந்திர போஸுடன் காந்திஜி தங்கியிருந்தபோது, ரவீந்திரநாத டாகுர் தாம் நோய்வாய்ப்பட்டிருந்துங்கூடக் காந்திஜியைப் பார்க்க வந்தார்.

அக்டோபர் 17-இல் லட்சுமணபுரியில் நடைபெற்ற அகில இந்திய முஸ்லிம் லீக் மகாநாட்டில், சுதந்திரமே அதன் லட்சியம் என்று தீர்மானிக்கப்பட்டது.

அக்டோபர் 22, 23 தேதிகளில் வார்தாவில் கல்வி மகாநாடு நடைபெற்றது. தலைமை வகித்த காந்திஜி, ஆதாரக் கல்விக் கொள்கையை விளக்கினார்.

நவம்பர் 20-ஆம் தேதி ஹரிஜனில், தொழிலாளர் தகராறுகளிலும், வகுப்புக் கலகங்களிலும் காங்கிரஸ் மந்திரி சபை பலாத்காரத்தைப் பிரயோகித்ததைக் காந்திஜி கண்டனம் செய்தார்.

தேகாரோக்கியத்துக்காக டிசம்பரில் சேவாக் கிராமத்திலிருந்து ஜுஹுவுக்குச் சென்றார்.

டிசம்பரில் அகமதாபாத்தில் சாவர்க்கர் தலைமையில் நடந்த ஹிந்து மகாசபை மகாநாட்டில், பூரண சுயராஜ்யமே அதன் லட்சியம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • (நன்றி: மகாத்மா காந்தி நூல்கள் - தொகுதி மூன்று)

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி  https://amzn.to/3eOnx2r ஆனந்த்  https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும

மொழிபெயர்ப்பு | க. நா. சுப்ரமண்யம்

மொழிபெயர்ப்பு என்பதைச் சாதாரணமாக ஒரு கலை என்று சொல்வது வழக்கமில்லை. கலையோ , தொழிலோ - மொழிபெயர்ப்பு என்பது இலக்கியத்திலே ஒரு தனித் துறை. அது மிகவும் அவசியமானது. இலக்கிய வளர்ச்சியின் அடிப்படையான காரியங்களிலே மொழிபெயர்ப்பும் ஒன்று. மொழிபெயர்ப்புகள் அதிகம் இல்லாத காலத்திலே இலக்கிய வளர்ச்சி வேகமாக நடைபெறுவதில்லை என்பது சரித்திரபூர்வமாக நமக்குத் தெரிகிற உண்மை. தமிழிலே மொழிபெயர்ப்புகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தோன்றிவிட்டன. கம்பனை மொழிபெயர்ப்பு நூல் என்று சொல்லமுடியாது ; ஆனால் திருக்குறளின் ஒரு பகுதி மொழிபெயர்ப்பு நூல் என்று திடமாகச் சொல்லலாம். மனு , பரதர் , கெளடில்யர் முதலியவர்களின் சம்ஸ்கிருத சூத்திரங்களைக் குறளாசிரியர் மொழிபெயர்த்துத் தமிழாக்கித் தந்திருக்கிறார். தமிழாக்கி என்று சொல்வதிலே ஒரு விஷயம் அடங்கியிருக்கிறது. தமிழிலே வெளிவருகிற மொழிபெயர்ப்புகள் தமிழாகத்தான் இருக்கவேண்டுமா என்று என்னை யாராவது கேட்டால் , வேண்டாம் இருக்கக்கூடாது என்றே நான் பதில் சொல்லுவேன். எந்த மொழிபெயர்ப்புமே முதல் நூல் போலாகிவிடக்கூடாது - முழுதும் தமிழாகிவிடக்கூடாது. மொழிபெயர்ப்பாசிரியன் முத