Skip to main content

காந்தி: சத்திய சோதனைக்குப் பின் - 7


(காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் வருடவாரியாக இத்தளத்தில் வெளியாகிறது. சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் குறிப்புகள் மகாத்மா காந்தி நூல்கள் வரிசையில், தொகுதி மூன்றில் சேர்க்கப்பட்டன.)


1927 (வயது 58)

சைமன் கமிஷன் சம்பந்தமான அறிவிப்பைக் காந்திஜியிடம் வைசிராய் கொடுத்தார். ''விஷயம் இவ்வளவுதானா!'' என்று காந்திஜி கேட்டதற்கு, அவர், ''ஆம்'' என்று பதில் அளித்தார். அந்த அறிவிப்பு நவம்பர் 8-ஆம் தேதி பகிரங்கமாக வெளியிடப்பட்டது.

காந்திஜி பீகார், பேரார், மகாராஷ்டிரம், கொங்கணம் முதலிய பல பகுதிகளில் சுற்றுப் பிரயாணம் செய்துவிட்டு, ஏப்ரல் கடைசி வாரத்தில் மைசூரிலுள்ள நந்திமலைக்குச் சென்றார். அங்கே ஓய்வு எடுத்துக்கொண்டார். உடல் நலம் பெற்ற பிறகு நந்திமலையிலிருந்து புறப்பட்டு ஜூன் மாத மத்தியில் பெங்களூருக்கு விஜயம் செய்தார். மைசூர் சமஸ்தானத்தில் அநேக ஊர்களுக்குச் சுற்றுப் பிரயாணம் செய்தார்.

ஆகஸ்டு 24-ஆம் தேதி தமிழ்நாட்டுச் சுற்றுப் பிரயாணம் ஆரம்பமாயிற்று. காந்திஜி பெங்களூரிலிருந்து வட ஆர்க்காடு ஜில்லாவுக்கு வந்தார். வேலூர், ஆரணி, ஆர்க்காடு, குடியாத்தம் முதலிய பெரிய ஊர்களுக்கும், மற்றும் சிறு கிராமங்களுக்கும் போய்விட்டு, செப்டம்பர் 3-ஆம் தேதி சென்னை நகருக்கு வந்து நான்கு நாட்கள் தங்கியிருந்தார்; அப்போது 17 கூட்டங்களில் பேசினார். அந்தச் சமயத்தில் சென்னை நகரில் நீல் சிலையை அப்புறப்படுத்துவதற்கு இளைஞர்கள் முயன்றுகொண்டிருந்தார்கள். 1857-ஆம் வருஷப் புரட்சியின்போது அநேக மிருகத்தனமான கொடுமைகள் இழைத்ததற்குப் பொறுப்பாளியாக இருந்தவர் ஜெனரல் நீல்.

இளைஞர்களுக்குக் காந்திஜி ஊக்கமும் உற்சாகமும் அளித்தார். சத்தியாக்கிரகத்தில் இறங்கிய சில தொண்டர்கள் கைது செய்யப்பட்டார்கள். 30 பேருக்குத் தண்டனை கிடைத்தது. சத்தியாக்கிரகம் தோல்வியில் முடிந்தபோதிலும், 10 வருஷங்களுக்குப் பிறகு சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் மந்திரிசபை ஆட்சி புரிந்தபோது, நீல் சிலை அப்புறப்படுத்தப்பட்டுக் கண்காட்சிச் சாலையில் கொண்டுபோய் வைக்கப்பட்டது.

சென்னையில் காந்திஜி பேசிய கூட்டங்களில், செருப்புத் தைக்கிறவர்களின் கூட்டமும் ஒன்று. காந்திஜி பிய்ந்த செருப்புக்களைப் போட்டுக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து இரண்டு தொழிலாளிகள் ஒன்று சேர்ந்து ஒரு ஜோடி செருப்புத் தைத்துக்கொண்டு வந்து அவருக்குக் கொடுத்தார்கள். மதுவிலக்குவாதிகளின் கூட்டம் ஒன்றில் காந்திஜி பேசும்போது, மது அருந்தும் பழக்கத்தை மட்டுமன்றி, காபி, தேநீர் ஆகியவற்றைக் குடிப்பதையும், சுருட்டு, சிகரெட்டுகளைப் புகைப்பதையும் கண்டித்து, அந்தப் பழக்கங்களையும் அறவே விட்டொழிக்க வேண்டுமெமென்று வற்புறுத்தினார்.

காந்திஜி, தேவதாசிகளுடனும் பேசினார். தேவதாசிகள் என்ற பெயரே கடவுளின் திருநாமத்துக்கு மாசு கற்பிப்பதாகும் என்றும், சகோதரிகளை இப்படிப்பட்ட இழிதொழிலுக்கு அர்ப்பணம் செய்வது பெருங்குற்றம் என்றும் காந்திஜி கூறியதுடன், இந்தச் சகோதரிகளை மீட்டு நல்வாழ்வளிக்க வேண்டியது நாட்டு மக்களின் கடமை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

செப்டம்பர் 9-ஆம் தேதி காந்திஜி சென்னையை விட்டுத் தெற்கே புறப்பட்டுக் கூடலூருக்கும், சிதம்பரத்துக்கும் சென்றார். சிதம்பரத்தில் நந்தருைடைய பெருமைகளை எடுத்துக்கூறி, அவரைப் பின்பற்ற வேண்டும் என்றார்.

கூடலூரில் பேசுகையில், பிராமணர் - பிராமணரல்லாதார் என்ற வேற்றுமையும், பிணக்கும் இருக்கக் கூடாதென்று சொன்னார். இரு சாராருக்கும் தக்க புத்திமதிகளைக் கூறி ஒற்றுமையை வற்புறுத்தினார்.

கும்பகோணம், மன்னார்குடி, திருச்சிராப்பள்ளி முதலிய நகரங்களுக்கு விஜயம் செய்தபின், காந்திஜி செட்டிநாட்டுக்குச் சென்றார். கானாடுகாத்தானில் உள்ள ஒரு தனவந்தர் வீட்டில் காந்திஜி தங்கினார். அந்தச் சமயத்தில் செட்டியார்கள் சமூகம் முழுவதற்குமாகக் காந்திஜி கூறியதாவது:

இங்கே நான் காண்பது என்ன? 1921-இல் நான் இங்கே கண்டது என்ன? உங்கள் வீடுகளில் வெளிநாட்டு மேஜை நாற்காலி முதலிய தளவாடங்களை அடைத்து வைத்திருக்கிறீர்கள். நானாவித வெளிநாட்டு அலங்கார சாதனங்களைக்கொண்டும் அலங்காரம் செய்திருக்கிறீர்கள். இந்தப் புண்ணிய பூமியில் இடம்பெறக்கூடாத அநேக சாமான்கள் உங்கள் வீடுகளில் இருக்கின்றன. இங்கே வருவதில் நான் மகிழ்ச்சியும், வருத்தமும் கொள்ளுவதாக உங்களுக்குச் சொன்னேன். அளவுக்கு மீறிய நாற்காலி, மேஜை முதலிய சாதனங்களால் நான் திக்குமுக்காடிப் போனேன். அவற்றின் நடுவே மூச்சுவிடக்கூட இடமில்லாமல் இருக்கிறது.......... உங்கள் மாளிகைகள் அனைத்தும், உங்களுக்குள் எவ்வித ஒத்துழைப்பு உணர்ச்சியின்றியும், சமூக நலனைப்பற்றிய எவ்வித உணர்ச்சியின்றியும் கட்டப்பட்டிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. பொதுநலனுக்காகவும், உங்களிடையே வாழும் குடியானவர்களின் நலனுக்காகவும் நீங்கள் செட்டியார்கள் சங்கம் ஒன்றை அமைத்தால், செட்டிநாட்டை நீங்கள் ஒரு சுவர்க்க பூமியாக்கிவிட முடியும். உங்களிடையே நிலவும் அமைதியும், ஒழுங்கும் இந்தியா முழுவதிலுமிருந்து எல்லா மக்களையும் கவர்ந்து இழுக்கும்.”

காந்திஜியின் ஆலோசனைப்படி, அதன் பின் அவர் தங்கியிருந்த வீடுகளில் நாற்காலி, மேஜை முதலிய தளவாடங்கள் குறைக்கப்பட்டு, அவருக்குப் பிடித்த முறையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

அக்டோபர் முதல் வாரத்தில் காந்திஜி செட்டிநாட்டிலிருந்து விடைபெற்றுத் தெற்கே புறப்பட்டார். மதுரை, ராமநாதபுரம் ஜில்லாக்களில் சுற்றுப் பிரயாணத்தை முடித்துக்கொண்டு திருநெல்வேலி ஜில்லாவின் ஒரு பகுதியிலும் சுற்றுப் பிரயாணம் செய்தார். தூத்துக்குடி முதலிய நகரங்களுக்கும் விஜயம் செய்தார்.

ராஜபாளையத்தில் ராட்டை நூற்பவர்களும், நெசவாளிகளும் நிறைய இருந்தது காந்திஜிக்குப் பெரு மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அளித்தது. அந்தப் பகுதியில் ஆயிரம் பேருக்குக் குறையாமல் ராட்டை நூற்றார்கள். நூறு நெசவாளிகள் இருந்தார்கள்.

திருநெல்வேலியிலிருந்து காந்திஜி நாகர் கோவிலுக்குச் சென்றார். நாகர்கோவிலில் பேசும்போது, திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள தீண்டாமையை வன்மையாகக் கண்டித்தார். அவ்விதமே திருவனந்தபுரத்திலும் கண்டித்துப் பேசினார். ஆலப்புழையில் ஈழவர் தூதுகோஷ்டியுடன் பேசும்போது, தீண்டாமை சம்பந்தமாகச் சமஸ்தானத்துக்கு எச்சரிக்கை விடுத்தார்.

அக்டோபர் மத்தியில் கொச்சி சமஸ்தானத்துக்குச் சென்று எர்ணாகுளத்தில் பேசுகையிலும் தீண்டாமையையே கண்டித்துக் காந்திஜி பேசினார். மாணவர் கூட்டம் ஒன்றிலும் பேசினார்.

வைசிராய் லார்டு இர்வினுடைய அழைப்பின் பேரில் டில்லிக்குப் போகவேண்டியிருந்ததால், காந்திஜி அவசர அவசரமாகத் தமது தென் இந்தியப் பிரயாணத்தை முடித்தார்.

மங்களூரிலிருந்து காந்திஜி 1200 மைல் பிரயாணம் செய்து டில்லிக்குச் சென்று வைசிராயைச் சந்தித்தார்.

அதற்கு முதல் நாள் இங்கிலாந்தில் காதரின் மேயோ எழுதிய "மதர் இந்தியா'' என்ற புத்தகம் வெளியாயிற்று. இந்தியாவைப்பற்றி இழிவான முறையில் எழுதப்பட்ட அந்தப் புத்தகத்தை "சாக்கடை இன்ஸ்பெக்டரின் அறிக்கை'' என்று காந்திஜி கூறினார். கடவுளின் ஒவ்வொரு சிருஷ்டியிலும் நல்ல அம்சமும் கெட்ட அம்சமும் இருக்கின்றன என்றும், அன்னப்பறவை நீரை விலக்கிப் பாலை மட்டும் அருந்துவதைப்போல் விவேகமுள்ளவர்கள் கெட்டதை நீக்கி நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளுவார்கள் என்றும் எழுதினார்.

டில்லியிலிருந்து புறப்பட்டு நவம்பர் 13-ஆம் தேதி கொழும்புக்குப் போய்ச் சேர்ந்தார். இலங்கையில் சுற்றுப் பிரயாணம் செய்து, கதர் வேலைக்காகப் பணம் வசூல் செய்தார். கொழும்பு நகரசபை அவருக்கு வரவேற்புப் பத்திரம் வாசித்து அளித்தது. 20-ஆம் தேதி யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டார்.

டிசம்பர் 26-இல் சென்னையில் டாக்டர் அன்ஸாரி தலைமையில் காங்கிரஸ் கூடியது. இந்திய மக்களின் லட்சியம் பூரண தேசீய சுதந்திரம் என்று, ஜவாஹர்லாலின் முயற்சியால் காங்கிரஸின் கோட்பாடு திருத்தம் பெற்றது.

டிசம்பர் 29-இல் ஹக்கீம் அஜ்மல்கான் காலமானார்.
  • (நன்றி: மகாத்மா காந்தி நூல்கள் - தொகுதி மூன்று)

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (