(காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் வருடவாரியாக இத்தளத்தில் வெளியாகிறது. சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் குறிப்புகள் மகாத்மா காந்தி நூல்கள் வரிசையில், தொகுதி மூன்றில் சேர்க்கப்பட்டன.)
1925 (வயது 56)
பெல்காம் காங்கிரஸுக்குப் பிறகு கத்தியவார், மத்திய இந்தியா, வங்காளம், மலபார், திருவாங்கூர் ஆகிய பகுதிகளில் காந்திஜி நீண்ட பிரயாணம் செய்தார். மார்ச்சு-ஏப்ரலில் தென் இந்திய விஜயம் நிகழ்ந்தது. வட இந்தியச் சுற்றுப் பிரயாணத்தை முடித்துக்கொண்டு, மார்ச்சு 7-ஆம் தேதி சென்னைக்கு வந்து, 9-ம் தேதி திருவாங்கூரிலுள்ள வைக்கத்துக்குச் சென்றார். அங்கே அதற்கு ஒரு வருஷ காலத்துக்கு முன்பிருந்தே சத்தியாக்கிரகம் தொடங்கி நடைபெற்று வந்தது. அதற்குக் காந்திஜியே ஆலோசனை கூறினார். தீண்டாமையின் கொடுமையை முதல் முதலில் இந்தியாவுக்குத் தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டியது வைக்கம் சத்தியாக்கிரகமே. வைக்கத்திலுள்ள ஒரு பொதுப் பாதையில் நடந்து செல்லத் தீண்டாதார் அனுமதிக்கப்படவில்லை. இதை எதிர்த்துச் சத்தியாக்கிரகம் நடைபெற்றபோது, வைதிக சமூகத்துக்குச் சமஸ்தான சர்க்கார் போலீஸ் உதவி அளித்தது. காந்திஜி அங்கே சென்றது, பிரச்னை தீருவதற்கு உதவி புரிந்தது. அந்தச் சமயத்தில் காந்திஜி திருவனந்தபுரத்துக்கும் கன்னியாகுமரிக்கும் விஜயம் செய்தார்.
அந்த அழகுமிக்க நாடு காந்திஜியின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அங்கே ஆபரணங்களின்றி, தூய வெள்ளை உடையணிந்து வாழும் பெண்களை அவர் பாராட்டினார். ''... அஸ்ஸாமைத் தவிர, இந்தியாவில் வேறு எங்கும் மலபார் மாதர்களைப் போல எளிமையாகவும், லாகவமாகவும் உடை உடுத்துபவர்களை நான் பார்த்ததில்லை. தங்கள் புடவைகளுக்குக் கரை இருக்க வேண்டுமென்றுகூட அவர்கள் விரும்பவில்லை. புடவையின் நீளமோ நான்கு கெஜங்கள் தான். கிழக்குக் கரையில் வசிக்கும் தமிழ்ச் சகோதரிகளுக்கோ, ஏறக்குறையப் பத்துக் கெஜத்தில் கெட்டிச் சாயப்புடவைகளாக வேண்டியிருக்கிறது. மலையாள மாதர்கள் எனக்குச் சீதையை ஞாபகப்படுத்தினார்கள். சீதை, தன் அழகிய வெறுங்கால்களால் நடந்து சென்று இந்தியாவின் வயல்களையும், வனங்களையும் புனிதப்படுத்தியபோது இப்படித் தான் உடை உடுத்தியிருந்திருக்க வேண்டும்'' என்று காந்திஜி எழுதினார். மலையாளப் பெண்களைப்போல அவ்வளவு அதிகச் சுதந்திரத்தோடு வாழும் பெண்கள் இந்தியாவில் கிடையாது என்றும் கூறினார்.
தென் இந்தியாவிலிருந்து காந்திஜி கல்கத்தாவுக்குச் சென்றார். 'ராட்டையின் பொருளாதார, ஆத்மிக மதிப்பைப் பற்றி ரோட்டரி சங்கத்தில் சொற்பொழிவாற்றினார்
.
மே, 29-ஆம் தேதி சாந்திநிகேதனுக்குச் சென்று டாகுரைச் சந்தித்தார்.
ஜூன் 16-இல் தாஸ் காலமானதற்காகக் குல்னாவில் காந்திஜி உருக்கமான பிரசங்கம் செய்தார். வங்காளத்தில் தங்கும் காலத்தை அதிகப்படுத்தினார். தாஸின் வீட்டைப் பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான ஆஸ்பத்திரியாக மாற்றுவதற்குப் பத்து லக்ஷ ரூபாய் வசூலித்தார்.
செப்டம்பர் 22-இல் பாட்னாவில் கூடிய அ. இ.கா.க. கூட்டம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அகில பாரத சர்க்கா சங்கத்தை ஸ்தாபித்தது. கையினால் நூற்பதையும், கதரையும் அபிவிருத்தி செய்வதற்காகக் காங்கிரஸின் ஓர் அங்கமாக இது நிறுவப்பட்டது. இதற்குப் பிரதான ஆதரவாளர் காந்திஜி.
ஆசிரமத்தில் சில குறைகள் இருப்பதைக் காந்திஜி அறிந்தார். இதற்காக நவம்பர் 24-இல் ஏழு நாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.
டிசம்பர் 26-இல் கான்பூரில் காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது. ஸ்ரீமதி சரோஜினி நாயுடு தலைமை வகித்தார். காந்திஜி தமது ஐந்தாண்டு வேலையை விமர்சனம் செய்து ஐந்து நிமிஷம் நேரம் பேசினார்.
"மக்களிடத்தில் துடிப்பும் ஆவேசமும் இருக்குமென்றால், நான் இன்றே சட்டமறுப்பு இயக்கத்தை ஆரம்பித்துவிடுவேன்" என்று சொன்னார். அரசியல் மெளனம் பூணுவதற்குப் பிரதிக்ஞை செய்துகொண்டார்.
காங்கிரஸ் மகா சபைக் கூட்டம், அ. இ. கா. க. கூட்டம் ஆகியவற்றில் ஹிந்துஸ்தானி மொழியை உபயோகிப்பது என்று தீர்மானம் ஆயிற்று. வெளிநாடுகளில் இந்தியர்களின் நலன்களைக் கவனித்துக்கொள்ளுவதற்காக வெளிநாட்டு இலாகாக்களைத் திறக்க அ. இ. கா. கமிட்டிக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.
1926 (வயது 57)
சீன மாணவர்களின் அழைப்பின் பேரில் காந்திஜி சீனாவுக்குப் போக நினைத்தார்; தமது சாத்விக எதிர்ப்பு முறைகளை அங்கே பரப்புவதற்கும் உத்தேசித்தார். ஆனால், இந்தியாவில் அவருக்கு இருந்த வேலைகள் சீன விஜயத்துக்கு அவகாசமில்லாமல் செய்துவிட்டன.
டிசம்பர் 26-இல் கெளஹத்திக் காங்கிரஸ், ஸ்ரீனிவாச ஐயங்கார் தலைமையில் நடைபெற்றது. நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் கிடந்த சுவாமி சிரத்தானந்தரை ஒரு முஸ்லிம் சுட்டுக்கொன்றதாகச் செய்தி வெளியாயிற்று. அவரது மரணத்துக்காகத் துக்கம் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்று, காங்கிரஸில் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தைக் கொண்டுவந்தவர் காந்திஜி; ஆமோதித்தவர் முகமது அலி. சுதந்திரத் தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. இதைக் காந்திஜி எதிர்த்தார். காந்திஜியின் அரசியல் மெளனப் பிரதிக்ஞை கைவிடப்பட்டது.
- (நன்றி: மகாத்மா காந்தி நூல்கள் - தொகுதி மூன்று)
Comments
Post a Comment