(காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் வருடவாரியாக இத்தளத்தில் வெளியாகிறது. சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் குறிப்புகள் மகாத்மா காந்தி நூல்கள் வரிசையில், தொகுதி மூன்றில் சேர்க்கப்பட்டன.)
1923 (வயது
54)
வகுப்புவாத வேற்றுமைகளால் அரசியல் சூழ்நிலையில் கறை படிந்தது.
மே, முதல் தேதியன்று காந்திஜி சிறைச்சாலை சூப்பரின்டெண்டென்டுக்கு எழுதி, மற்ற அரசியல் கைதிகளுக்கு விசேஷச் சலுகைகள் அளிக்கப்படாமலிருக்கும் வரையில் தமக்கும் சலுகைகள் வேண்டாம் என்று தெரிவித்தார்.
செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் டில்லியில் காங்கிரஸின் விசேஷ மகாநாடு நடைபெற்றது. மெளலானா ஆஸாத் தலைமை வகித்தார். சட்டசபைப் பிரவேசம் அனுமதிக்கப்பட்டது. சட்ட சபைப் பிரவேசத்தை எதிர்த்து நடந்துவந்த பிரசாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. நிர்மாணத் திட்டம் வற்புறுத்தப்பட்டது. வகுப்புக்களுக்கிடையே உள்ள உறவுகள் சம்பந்தமாகத் தமக்குத்தாமே கட்டுப்பாடு விதித்துக்கொண்டு எழுதுமாறு பத்திரிகைகளுக்கு ஆலோசனை கூறப்பட்டது. கதரை வாங்குவதன் மூலம் அந்நியத் துணியைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. சுதேசிச் சாமான்களை ஆதரித்து, பிரிட்டிஷ் சாமான்களைப் பகிஷ்கரிப்பதற்கான வழிவகைகளைத் தீர்மானிக்கக் கமிட்டி நியமிக்கப்பட்டது.
தமக்கு அளித்து வந்தது போன்ற உணவைச் சகோதரக் கைதி ஒருவருக்கு அளிக்காத காரணத்தால் தம்முடைய உணவையும் கட்டுப்படுத்தும்படி நவம்பரில் சிறை அதிகாரிகளைக் காந்திஜி கேட்டுக்கொண்டார்.
டிசம்பரில் காகினாடாவில் காங்கிரஸ் மகாநாடு நடை பெற்றது. மெளலானா முகம்மது அலி தலைமை வகித்தார். நிர்மாணத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கும், பலமான சட்ட மறுப்பு இயக்கத்துக்குத் தயாராவதற்கும் காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. சட்டசபைகளைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்பது திரும்பவும் ஊர்ஜிதம் செய்யப்பட்டது. அகில இந்தியத் தொண்டர் படை ஸ்தாபனத்திற்கு - ஹிந்துஸ்தான் சேவா தளத்துக்கு - அஸ்திவாரம் போடப்பட்டது.
- (நன்றி: மகாத்மா காந்தி நூல்கள் - தொகுதி மூன்று)
Comments
Post a Comment