Skip to main content

காந்தி: சத்திய சோதனைக்குப் பின் - 3



(காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் வருடவாரியாக இத்தளத்தில் வெளியாகிறது. சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் குறிப்புகள் மகாத்மா காந்தி நூல்கள் வரிசையில், தொகுதி மூன்றில் சேர்க்கப்பட்டன.)

1922 (வயது) 53

1921, டிசம்பர் மாதத்திலும், 1922, ஜனவரி மாதத்திலும் சுமார் 30,000 பேர் தண்டிக்கப்பட்டனர். ஜனவரி 12-இல் வரிகொடா இயக்கத்தைக் குண்டூர் பிரகடனம் செய்தது.

சமரசத்தை உண்டுபண்ண ஜனவரி 14-இலிருந்து 16 வரை சர்வகட்சி மகாநாடு கூட்டப்பட்டது. அம் முயற்சி தோற்றது.

பிப்ரவரி முதல் தேதி காந்திஜி வைசிராய்க்குக் கடிதம் எழுதி, தமது சொந்த மேற்பார்வையில் பர்டோலியில் சட்ட மறுப்பைத் தொடங்க உத்தேசித்திருப்பதைத் தெரிவித்தார். அடக்குமுறைக் கொள்கை நியாயமானதே என்று கூறி சர்க்காரிடமிருந்து உடனடியாகப் பதில் வந்தது.

பிப்ரவரி 5-ஆம் தேதி ஐக்கிய மாகாணங்களிலுள்ள செளரி செளராவில் 21 கான்ஸ்டபிள்களையும் சப்-இன்ஸ்பெக்டரையும் ஜனக்கூட்டம் போலீஸ் ஸ்டேஷனுக்குள் தள்ளி நெருப்பு வைத்துக் கொளுத்திவிட்டது.

பிப்ரவரி 12-இல் பர்டோலியில் காரியக் கமிட்டி கூடியது. சட்ட மறுப்பு இயக்கம் நிறுத்திவைக்கப்பட்டது. காந்திஜி 5-நாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.

பிப்ரவரி 24, 25-ஆம் தேதிகளில் டில்லியில் நடைபெற்ற . . கா. . கூட்டத்தில், தனி நபர் சட்ட மறுப்பை அனுமதித்துப் பர்டோலித் தீர்மானம் ஊர்ஜிதம் செய்யப்பட்டது.

1920, நவம்பர் 10-ஆம் தேதியிலிருந்து காந்திஜி தாம் கைது செய்யப்படுவதை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். மார்ச்சு 9-ஆம் தேதி அவர், ''ரத்த ஆறு ஓடும்படி சர்க்கார் செய்தாலும், அது என்னைப் பயமுறுத்த முடியாது'' என்று எழுதினார். தாம் கைது செய்யப்படுவதற்காக ஹர்த்தாலோ, ஆர்ப்பாட்டங்களோ செய்யக்கூடாது என்றும், நிர்மாணத் திட்டத்தை நிறைவேற்றிக்கொண்டு சட்ட மறுப்பு இயக்கத்தைப் பலப்படுத்த வேண்டும் என்றும் மக்களுக்குக் கோரிக்கை விடுத்தார்.

'எங் இந்தியா'வில் வெளியான மூன்று கட்டுரைகளுக்காக ராஜத்துவேஷக் குற்றம் சாட்டப்பட்டுக் காந்திஜியும், சங்கர்லால் பாங்கரும் மார்ச்சு 10-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். மார்ச்சு 18-இல் அகமதாபாத்தில் மாபெரும் விசாரணை ஆரம்பமாயிற்று. குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்ட பின் காந்திஜி குற்றத்தை ஒப்புக்கொண்டு ஒரு வாக்குமூலம் கொடுத்தார். அதன் பீடிகையில், “எங் இந்தியாவுடன் தாம் தொடர்புகொள்ளுவதற்கு முன்பே இன்றைய அரசாங்கத்திடம் விசுவாசமின்மை ஏற்படப் பிரசாரம் செய்யத் தொடங்கிவிட்டதாகக் காந்திஜி கூறினார். சென்னை, பம்பாய், சௌரி சௌரா ஆகிய இடங்களில் நடைபெற்ற சம்பவங்களுக்குத் தாமே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். ''நான் நெருப்போடு விளையாடிக்கொண்டிருக்கிறேன் என்பதை அறிவேன். இன்னும் அதைத்தான் செய்வேன். நீதிபதியவர்களே, நீங்கள் செய்யக்கூடிய ஒரே காரியம் என்னவென்றால், உங்கள் பதவியை ராஜிநாமாச் செய்துவிட வேண்டும்; அல்லது எனக்குக் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்'' என்றார் காந்திஜி.

நீதிபதி புரூம்பீல்ட், காந்திஜிக்கு ஆறு வருடச் சிறைவாச தண்டனை விதித்து, ''உங்களை ஸ்ரீ திலகரோடு ஒன்றாக வைத்து எண்ணுவதைச் சரியல்ல என நீங்கள் நினைக்கமாட்டீர்கள் என்று கருதுகிறேன்'' என்றார். தம்முடைய பெயரை லோக மான்யருடன் தொடர்புபடுத்துவதைப் பெரிய கெளரவம் என்று தாம் கருதுவதாகக் கூறி, நீதிபதிக்குக் காந்திஜி நன்றி தெரிவித்தார். மக்கள் அமைதியாக இருந்து நிர்மாணத் திட்டத்தில் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும் என்று ஸ்ரீமதி கஸ்தூரிபாய் காந்தி வற்புறுத்தினார்.

1922-இலிருந்து 1924 வரை சிறைவாசம் செய்தபோது தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகத்தின் முதல் முப்பது அத்தியாயங்களை எழுதினார். சத்திய சோதனையின் வரலாற்றை (சுயசரிதையை)யும் காந்திஜி எழுதத் தொடங்கினார். தம்மோடு இருந்த ஓர் அரசியல் கைதியை எழுதும்படி சொல்லி, தாம் குஜராத்தி மொழியில் சொல்லிக்கொண்டு வந்தார். சிறையில் இருந்த போதும், வெளியே வந்த பிறகும் எழுதப்பட்ட சுயசரிதை "நவ ஜீவன்'' பத்திரிகையில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டது. இதை மகாதேவ தேசாயும், பியாரிலால் நய்யாரும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர். அதைக் காந்திஜி கவனமாகப் பரிசீலனை செய்தார். ஆங்கில மொழிபெயர்ப்புக்கு இறுதி வடிவம் கொடுப்பதில் மீரா பென் (குமாரி ஸ்லேடு) உதவி புரிந்தார்.

சிறையிலிருந்து விடுக்கப்பட்ட ஒரே செய்தி, ''அமைதி, அகிம்சை, கஷ்டப்படுதல் '' என்பதாகும்.

1922-நவம்பர் கடைசிவாக்கில் கெமால் பாஷா துருக்கியில் ஆட்சி நிர்வாகத்தை எடுத்துக்கொண்டார். துருக்கி சுல்தான் பிரிட்டிஷ் கப்பலில் மால்டாவுக்கு ஓடினார். கிலாபத் பிரச்னை எதிர்பாராத விதமாக முடிவடைந்தது.

டிசம்பரில் கயாவில் கூடிய காங்கிரஸ் மகாநாடு காந்திஜியிடமும் ஒத்துழையாமையிடமும் விசுவாசம் தெரிவித்தது. சட்டசபைகளில் பங்கெடுத்துக்கொள்ளுவதை எதிர்த்து 1740 வோட்டுகளும், ஆதரித்து 890 வோட்டுகளும் கிடைக்கவே அத் தீர்மானம் தோல்வியடைந்தது. முதலாவது கதர்க் கண்காட்சி அங்கே நடைபெற்றது. மகாநாட்டின் முடிவில் பிரிட்டிஷ் பத்திரிகைகளும், ஆங்கிலோ - இந்தியப் பத்திரிகைகளும் பொது ஜன இயக்கத்தின் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியமும் ஏமாற்றமும் தெரிவித்தன.
  • (நன்றி: மகாத்மா காந்தி நூல்கள் - தொகுதி மூன்று)

Comments

Most Popular

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.