Skip to main content

அடிமனம் | அரக்கனின் ஆதிக்கம் | பெ. தூரன்


மனிதனுடைய அடிமனம் (நனவிலி மனம்) எது என்பது பற்றியும் அதிலே அழுந்திக் கிடக்கிற உந்தல்கள், இச்சைகள் பற்றியும் பொதுவாகத் தெரிந்துகொண்டோம். அடிமனம் எப்படியெல்லாம் தனது வல்லமையை வெளிப்படுத்துகின்றது என்றும் கண்டோம்.
இந்த அடிமனத்தின் வேலையால் மனிதனுடைய நடத்தை பாதிக்கப்படுகிறது. அதனால் அவன் எல்லாச் சமயங்களிலும் ஏற்ற முறையிலே காரியம் செய்வதில்லை. பகுத்தறிவுக்கு ஒவ்வாத வகையிலும் அவன் நடக்கிறான்.
இவ்வாறு பலர் பல விதங்களிலே நடப்பதன் விளைவாகவே சமூகம் அமைகின்றது. பிறகு அந்தச் சமூகம் வருங்கால மக்களைப் பாதிக்கின்றது. குழந்தைகள் சமூகச் சூழ்நிலையால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த மாதிரியாக சமூகமும் மனிதனும் மாறிமாறிப் பாதிப்பதால் முன்னேற்றம் தடைப்படுகிறது. யாராவது ஒரு சில மக்களே இந்தக் தடைகளையெல்லாம் மீறி நின்று உயர்வடைகிறார்கள். அப்படி விடுதலை பெற்று நிற்பவர்களை உலகம் போற்றுகின்றது; மகான்கள் என்று கொண்டாடுகின்றது.
பெரும்பாலான மக்கள் கட்டுண்டே கிடப்பதால் சமூகத்திலே விரைவான முன்னேற்றம் ஏற்படுவதில்லை என்று பிராய்டு கருதுகிறார். சமூகம் ஒரே நிலையில் சுழன்றுகொண்டுதானிருக்கும்; அதை மீறி நின்று ஒரு சிலரே மேன்மையடைய முடியும்; அவர்கள் ஏற்படுத்துகின்ற இயக்கங்கள், எண்ணப் புரட்சிகள் ஓரளவு சமூகத்தை விழிப்படையச் செய்யும்; ஆனால் அது பெரியதோர் அளவிற்கு முன்னேற்றத்தை உண்டாக்குவதில்லை; அப்படி உண்டாக்க முடியுமானால் புத்தர், இயேசு போன்ற மகான்களாலும், அவர்களைப் போலவே உண்மை ஞானம் பெற்ற மற்ற மகான்களாலும் நமக்குக் கிடைத்துள்ள உதாரணங்களும் உபதேசங்களுமே போதாவா என்று கேட்பவர்களுண்டு. இவர்கள் சமூகத்தின் முன்னேற்றத்திலே நம்பிக்கை குறைந்தவர்கள்.
இந்த நிலையிலிருந்து சமூகம் விடுபட வேண்டுமானால் குழந்தைகளை வளர்க்கும் முறையிலும், அவர்களுக்குக் கல்வியளிக்கும் முறையிலும் மனவியல் தத்துவங்களை நன்கு கடைப்பிடிக்க வேண்டும் என்று பிராய்டு கருதுகிறார். அதற்கு முதற்படியாகப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மனவியலைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். இன்னும் ஒரு முக்கியமான விஷயத்தை நாம் இங்கு கவனிக்க வேண்டும். அடிமனத்தில் இழிந்த இச்சைகளும், உந்தல்களும், இயல்பூக்கங்களும் பதுங்கியிருக்கின்றன என்றும், அவை எவ்வாறு வெவ்வேறு வழிகளில் வெளியாகித் திருப்தி பெற முயல்கின்றன என்றும் கண்டோம்.
மனத்திற்குள்ள ஆற்றல் ஒரு குறிப்பிட்ட அளவுடையதுதானென்றும், அந்த ஆற்றல் இத், அகம், அதீத அகம் ஆகிய மூன்று பெரும் பிரிவுகளிலே ஒரு சந்தர்ப்பத்தில் பல வேறு அளவுகளில் இருக்கின்றது என்றும் முன்பே குறிப்பிட்டேன். இத்தின் ஆற்றல் அதிகப்படுகின்றபோது மற்ற இரண்டின் ஆற்றல் அந்த அளவுக்குக் குறைந்துபோகும். அதீத அகம் முன்பே எச்சரிக்கையாக இருந்து இத்தின் போக்கைத் தடைசெய்யாவிடில் இத்தின் ஆற்றல் மிகுந்து விடுகிறது.
காம இச்சைகளைக் கட்டுப்படுத்தி உள்ளத்தை ஆன்ம ஞானத் தேட்டத்திலே சதா ஈடுபடச்செய்ய விரும்பியவர்கள் பழங்காலத்திலே மனித சஞ்சாரமற்ற காடுகளுக்குச் சென்றதில் நிறைந்த பொருள் இருக்கிறது. இத்தின் இழிந்த உந்தல்கள் மேலோங்குவதற்குத் தூண்டுதல்களாக இருக்கும் சூழ்நிலையைத் தவிர்க்க வேண்டும் என்பதையே அவர்கள் முக்கியமாகக் கருதினார்கள். உணவுக் கட்டுப்பாடு செய்ததும், சாத்துவிக உணவுமுறையை அனுஷ்டித்ததும் இந்த நோக்கத்தைக் கொண்டேதான்.
இதிலிருந்து சமூகத்தில் வாழும் நாம் ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ளக் கூடும். இழிந்த உணர்ச்சிகளுக்கு ஆதரவாக அவற்றை மேலெழுப்பும் காட்சிகளைக் காண்பதோ நூல்களைப் படிப்பதோ இத்தின் ஆற்றலுக்கு வலிமை தேடுவதாக முடிகிறது. அது நமது சமூகத்திற்குப் பாதகம் செய்வதாக அமையுமென்பதை நாம் எளிதில் கண்டுகொள்ளலாம்.
புதிய பாரத சமுதாயத்தை நமது பண்பாட்டின் அடிப்படையிலே உருவாக்க முனைந்திருக்கும் நாம் இன்று இந்த விஷயத்தைப் பற்றித் தீவிரமாக ஆலோசிக்க வேண்டும். வாழ்க்கை முறையிலே சில லட்சியங்களை அடிப்படையாக நமது நாடு கொண்டிருக்கிறது. அந்த லட்சியங்களைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர்களையே இந்த நாடு போற்றுகிறது. அந்த லட்சியங்களையே அஸ்திவாரமாகக்கொண்டு சமூகத்தை அமைக்கவும் விரும்புகிறது.
அப்படியிருக்கும்போது அதற்கு விரோதமான இச்சைகள் வளர்வதற்குத் தூண்டுகோலாக இருக்கும் எதையும் நாம் அநுமதிக்க முடியுமா?
சமூகத்தைப் பாதிக்கும் விஷயங்கள் சிலவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளுவதற்கு உதவுவது போலத் தனிப்பட்டவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் அடிமன உந்தல்களைப் பற்றி அறிந்து முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பதற்கும் பிராய்டின் கொள்கைகள் உதவுகின்றன. அவர் கூறுவதில் சில கருத்துக்கள் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்படாமலிருக்கலாம்; தவறு என்றுகூட எதிர் காலத்தில் நிரூபிக்கப்படலாம். ஆனால் அவர் ஆராய்ந்து கண்ட அடிப்படைக் கருத்துக்களிலே சந்தேகமில்லை. அவை மனத்தின் தன்மைகளை அறிந்து கொள்வதிலே ஒரு பெரிய முன்னேற்றத்தை உண்டாக்கிவிட்டன.
அவற்றைத் தெரிந்துகொண்டால் ஒவ்வொருவனும் தனது வாழ்க்கையைத் திருத்திக்கொள்ளுவதற்கு அநுகூலமுண்டாகும். மனம் என்பது குரங்குக்குச் சமானம் என்று பெரியவர்கள் ஏன் கூறியிருக்கிறார்கள் என்பதும் நமக்கு விளங்கும்.
மனத்தின் தன்மைகளை அறிந்து அம்மனத்தை விவேகத்தால் நல்வழியில் செல்லுமாறு செய்வதே வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றியாகும்.

Comments

Most Popular

சுதந்திரத்துக்குப் பிறகு மொழிபெயர்ப்புகள் | க. நா. சுப்ரமண்யம்

தமிழிலக்கியத்தில் போதுமான அளவுக்கு இலக்கியபூர்வமான மொழிபெயர்ப்பு நூல்கள் வந்துள்ளனவா என்று கேட்டால் , இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டும். அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்கிற அளவுக்குக்கூட மொழிபெயர்ப்புகள் வெளியாகவில்லை. அதுவும் சமீபகாலத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் எந்த மொழிபெயர்ப்பும் என் கண்ணில் படவில்லை. 1935 க்குப் பிறகு 1950 வரையில் சரசரவெனப் பல உலக இலக்கிய நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பெற்று ஓரளவுக்கு வாசகர்களிடையே ஓர் ஆர்வத்தையும் தூண்டின. அப்போதுங்கூட இலக்கிய வேகத்தை உண்டாக்கித் தாங்கக்கூடிய அளவுக்கு மொழிபெயர்ப்புகள் வந்ததாகச் சொல்வதற்கில்லை. அந்தக் காலகட்டத்தில் மொழிபெயர்ப்புகள் செய்து வெளியிட முன்வந்தவர்கள் ஓரளவுக்குத் தங்கள் ரசனையினால் தூண்டப்பெற்றவர்களாக , இந்த நூல் தமிழில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணி , அதனால் தங்களுக்கு லாபம் என்ன கிடைக்கும் என்கிற எண்ணத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டனர். அந்த அளவுக்குச் சுதந்திரத்திற்குப்பின் ஓர் உந்துதல் , ஈடுபாடு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பிளேட்டோ , ரூஸ்ஸோ , டால்ஸ்டாய் மற்றும் ப...

இலக்கியத்தில் உருவங்கள் | க. நா. சுப்ரமண்யம்

இலக்கியத்தில் பல பல உருவங்கள் உண்டு. அவை முதல் முதலாகப் பல பல மொழிகளில் தோன்றி இலக்கிய உருவம் பெற்று சிறப்பாகச் சில மொழிகளில் பிரமாதமான இலக்கிய அந்தஸ்து பெற்றவை. இந்த உருவம் இந்த மொழியைச் சேர்ந்தது என்று யாரும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அப்படிச் சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. கிணற்றுத் தவளைகள்தான் இந்த மாதிரிப் பெருமை தேடிக்கொண்டு, தங்கள் தங்கள் மொழியே உலகிலுள்ள எல்லா இலக்கியத்துக்கும் ஆதாரம் என்று கட்சி கட்டிக்கொண்டு பெருமை பாராட்டிக்கொண்டிருக்க முடியும். இன்றைய தமிழ் இலக்கியாசிரியன் உலகிலுள்ள எல்லா மொழி இலக்கியங்களுக்கும் உருவங்களுக்கும் வாரிசு. தெரிந்தோ தெரியாமலோ அவன் தமிழ்ப் பழமைக்கெல்லாம் வாரிசாகிறான். - சிலப்பதிகாரத்தையும், சங்க நூல்களையும், கம்பராமாயணத்தையும், தேவாரம் திருவாச கத்தையும் அறிந்தோ அறியாமலோ, அவன் மனம் அந்த மரபிலேதான் சமைகிறது. தமிழனாகப் பிறந்த தோஷத்தினால் அவன் விடுகிற மூச்சே தமிழ் மரபு மூச்சு என்றுதான் சொல்லவேண்டும். இதிலே பிற மொழிகளின் மரபு எங்கே எப்படி வருகிறது என்று கேட்கலாம். சம்ஸ்கிருத முதல் நூலை அறிந்ததாகக் காட்டிக்கொள்கிற கம்பனும், ஐரோப்பிய நாவ...

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...