கனவு என்பது ஒரு சுவையான அநுபவம். உறங்கும்
நிலையிலே கனவு தோன்றுகிறது. கனவு காணாதவர்களே யாரும் இல்லை என்று கூறலாம். கனவு ஏன்
உண்டாகிறது; அதன் பொருள் என்ன, அதனால் மனிதனுக்கு நன்மையுண்டா என்றெல்லாம் ஆராய்வது
மேலும் சுவையான காரியமாகும்.
ஹிஸ்டிரியா முதலான மனக்கோளாறுகளை ஆராய்ந்து
அவற்றிற்குச் சிகிச்சை செய்யும் தொழிலிலே பிராய்டு ஈடுபட்டிருந்தார். இந்த சிகிச்சை
முறையின் ஆரம்ப நிலையிலே மனவசியம் முக்கியமான சாதனமாக இருந்தது. மனவசிய முறை முற்றிலும்
திருப்தியாக இல்லையென்று அநுபவத்தில் கண்ட பிராய்டு தடையில் தொடர்முறை, கனவுப் பகுப்பு
முறை முதலியவற்றை வகுத்தாரென்றும், அவற்றைப் பயன்படுத்துங் காலத்தில்தான் அவர் மனத்திலே
நனவிலிமனம் என்ற பகுதியிருப்பதைக் கண்டறிந்தாரென்றும் முன்பே அறிந்து கொண்டிருக்கிறோம்.
மனிதன் காண்கின்ற கனவுகளை ஆராய்வதே ஒரு
பெரிய கலையாக ஏற்பட்டுவிட்டது. அதன் பாஷையே தனி. ஏனென்றால் கனவிலே தோன்றுகிற நிகழ்ச்சிகள்
சமீபத்திலே வாழ்க்கையில் ஏற்பட்ட அநுபவங்களைக் கொண்டிருந்தாலும் அவை குறிக்கின்ற விஷயங்கள்
வேறாக இருக்கும். வாழ்க்கை அநுபவங்கள் வெறும் மேற்போர்வைதான்; அவற்றின் மூலம் நனவிலி
மனத்திலிலுள்ள இச்சைகள், போராட்டங்கள் ஆகியவை மாறுவேஷந்தரித்து வெளியாகின்றன. அவற்றின்
வேஷத்திற்குப் பொருள் கண்டுபிடிப்பதே ஒரு நுட்பமான வேலை. அடக்கப்பட்ட இச்சைகள், நிறைவேறாத
ஆசைகள் எல்லாம் மனச்சான்றுக்குத் தப்பித்துக்கொண்டு வெளியே கனவில் தோன்றுவதற்கு இப்படி
மாறுவேஷம் போடுகின்றனவாம். மேலும் கனவிலே தோன்றுகிற பொருள்களைச் சின்னங்களாகப் பல சமயங்களில்
எடுத்துக்கொள்ள வேண்டுமென்று பிராய்டு கூறுகிறார். இந்தச் சின்னங்கள் மூலமாகவும் இச்சைகள்
மனச்சான்றுக்குத் தப்பி வெளிவருகின்றனவாம்.
உதாரணமாகக் கனவிலே தோன்றுகிற பாம்பு ஆணின்
இனப்பெருக்கு உறுப்பைக் குறிக்கின்றதாம். கனவிலே தோன்றுகிற அரசி அல்லது ஆசிரியை அல்லது
வேலைக்காரி ஒருவனுடைய தாயைக் குறிக்கலாம். ஒருவனுடைய சொந்த சகோதரி ஆஸ்பத்திரியில் வேலை
செய்யும் நர்ஸாகக் கனவிலே காணப்படலாம். நர்ஸை சாதாரணமாக சகோதரி என்று அழைப்பது வழக்கமல்லவா?
இவ்வாறு கனவிலே மாறுவேஷங்களும் சின்னங்களும்
தோன்றுகின்றன. இவையெல்லாம் உலகத்திலுள்ள எல்லா நாட்டினருக்கும் பொதுவாக இருக்குமென்று
கருதலாகாது. ஒரு சில பொதுவாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலானவை அந்தந்த காட்டின் நம்பிக்கைகள்,
பழக்க வழக்கங்கள், சமூக சம்பிரதாயங்கள், சமயக் கோட்பாடுகள் முதலானவற்றைப் பொருத்து
அமையும்.
பாம்பு என்கிற சின்னத்தால் நம் நாட்டிலே
குண்டலினி சக்தியைக் குறிப்பிடுகிறோம். பாம்பாட்டிச் சித்தர் பாடலிலே வரும் பாம்பு
இந்தக் குண்டலினி சக்திதான். ஆதலால் இந்தக் கருத்திலே ஊறியிருக்கின்ற ஒருவனுடைய கனவில்
வரும் பாம்பு மனிதனுக்குள்ளே மறைந்து கிடக்கும் ஆன்மிக சக்தியைக் குறிப்பதாக இருக்கலாம்.
ஆகவே கனவுச் சின்னங்களுக்கு ஒருவனுடைய பண்புக்கு ஏற்றவாறு பொருள்கொள்ள வேண்டிய அவசியமும்
இருக்கிறது.
இதைப்பற்றி இன்னும் சற்று விரிவாகப் பார்த்தோமானால்
ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சில கனவுக் குறியீடுகள், சின்னங்கள் வேறுபட்டிருக்கும். அது
அவனுடைய தனிப்பட்ட சூழ்நிலை அநுபவங்கள், பண்பாடு முதலியவற்றைப் பொருத்திருக்கும். இதையும்
கவனத்தில் வைத்துக்கொண்டு கனவின் பொருளை ஆராய முற்பட வேண்டும்.
ஆயிரக்கணக்கான கனவுகளை ஆராய்ந்து அவற்றைப்
பற்றிப் பல கருத்துக்களை பிராய்டு வெளியிட்டிருக்கின்றார். ‘கனவுகளின் விளக்கம்’ என்று
அவர் ஒரு பெரிய நூல் எழுதியிருக்கிறார். அவருடைய கருத்துப்படி ஒவ்வொரு கனவையும் பகுத்துப்
பார்த்து விளக்க முடியும். ‘ஒவ்வொரு கனவுக்கும் குறிப்பான பொருள் இருக்கின்றது என்று
நான் நிச்சயமாகக் கூறுவேன். கனவை விஞ்ஞான முறையில் விளக்குவதும் சாத்தியமானதே’ என்று
பிராய்டு எழுதுகிறார்.
ஒவ்வொரு கனவுக்கும் ஒரு விளக்கம் கண்டுபிடிக்கலாமென்றும்,
கனவில் தோன்றுகின்ற ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் விளக்கம் இருந்தே
தீர வேண்டும் என்றும் பிராய்டு வற்புறுத்துவதைச் சில உளவியல் அறிஞர்கள் ஒப்புக்கொள்ளுவதில்லை.
இருந்தாலும் பொதுப்படையாகப் பார்க்கும்போது பிராய்டின் சித்தாந்தம் ஒரு முக்கியமான
உண்மையை வெளிப்படுத்தியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.
கனவைப் பகுத்துப் பார்த்து அதற்கு விளக்கம்
கூறுவது மிக நுட்பமான காரியம். விஞ்ஞானப் பரிசோதனைக் கூடத்திலே பெளதிகம், ரசாயனம் முதலிய
துறைகளிலே ஆராய்ச்சி செய்வது போலக் திட்டமான முறைகளிலே கனவை ஆராய்வதென்பது சாத்தியமில்லை.
இன்ன கனவுக்கு இன்ன பொருள் என்றும் முன்கூட்டியே சூத்திரங்கள் உண்டாக்கி விட முடியாது.
“ஒரே கனவு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு பொருள் கொண்டிருக்கும்; ஒரே மாதிரியான
கனவை வேறு வேறு மனிதர்கள் கண்டால் அப்பொழுதும் அம்மனிதர்களின் மனப்பாங்குக்கு ஏற்ப
அதற்கு வெவ்வேறு பொருள் இருக்கும்” என்று பிராய்டு கூறியிருக்கிறார்.
ஆதலால் கனவைப் பகுத்து அதன் காரணத்தையும்
அது குறிக்கும் பொருளையும் அறிவதற்கு நுட்பமான திறமையும் அநுபவமும் வேண்டும். மேலும்
கனவைப் பகுத்து ஆராய்வதோடு ஒருவனுடைய நடத்தையையும் கவனிக்க வேண்டும். தடையில் தொடர்
முறையாலும் அவன் மனத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும்போது ஒவ்வொரு வகையான
சோதனையும் மற்றவற்றிற்கு உதவியாக நின்று அவன் மனத்தில் மறைந்துள்ள உந்தலை அல்லது இச்சையை
அறிவதற்குக் காரணமாகின்றது.
கனவை எவ்வாறு பகுத்து ஆராய வேண்டும் என்பதற்கு
உதாரணமாக பிராய்டு தான் கண்ட ஒரு கனவையே எடுத்துக்கொண்டு அதை எவ்வாறு பிரித்துப் பார்க்க
வேண்டும் என்று காட்டுகிறார்.
“இவ்வாறு விளக்கம் கண்டுபிடித்து ஆராயும்போது
ஒவ்வொரு கனவும் ஏதாவதொரு ஆசையை நிறைவேற்றுவதற்காகவே ஏற்படுகிறது” என்று அவர் முடிவுகட்டுகிறார்.
பிராய்டின் கொள்கைகளிலே இதுவும் முக்கியமானது.
இதை விளக்குவதற்கு அவர் சுலபமாகத் தாம் செய்துகாட்டக்கூடிய ஒரு கனவைப் பற்றிக் கூறுகிறார்.
ஆசை நிறைவேற்றத்திற்காகத் தான் கனவு ஏற்படுகின்றது என்பதற்கு அவர் தாமாகவே உண்டாக்கிக்
கொள்ளக்கூடிய அந்தக் கனவு எளியதாக இருந்தாலும் சிறந்த உதாரணமென்கிறார்.
உப்பு நிறையப் போட்டிருக்கும் உணவை இரவு
நேரத்திலே சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கொண்டால் பாதித் தூக்கத்திலே அவருக்கு விழிப்புண்டாகுமாம்.
உப்பு அதிகமாக உணவிலிருந்ததால் தாகமெடுக்கிறது. அதனால் ஒரு கனவு ஏற்படுமாம். அதிலே
அவர் ஏதாவது ஒரு வகையில் தாகவிடாய் செய்து கொள்ளுவது போன்ற சம்பவம் தோன்றுமாம். பிறகு
விழிப்புண்டாகுமாம்.
குழந்தைகளின் கனவு சிக்கல் அதிகமில்லாதது.
ஆதலால் ஆசை நிறைவேற்றம் என்ற தத்துவத்தை அதிலே மிகத் தெளிவாகக் காணலாம் என்று பிராய்டு
கூறுகிறார்.
வயதாக ஆகப் பலவிதமான அநுபவங்களும் இச்சைகளும்
ஏற்படுகின்றன. ஆதலால் அப்பொழுது உண்டாகின்ற கனவை ஆராய்வதற்குத் திறமையும் அநுபவமும்
அதிகமாக வேண்டும்.
கனவு ஒரு வகையிலே உறக்கத்தைப் பாதுகாக்கின்றது.
நனவு நிலையிலே கைகூடாத பல ஆசைகள் கனவிலே கைகூடி விடுகின்றன; அதனால் மனத்திற்கு ஆறுதல்
கிடைக்கிறது. அதனால் ஆழ்ந்த தூக்கமும் ஓய்வும் உண்டாகின்றன; ஆதலால் அந்த வகையிலே கனவு
உறக்கத்திற்கு உதவியாக நிற்கின்றது” என்று பிராய்டு சொல்லுகிறார்.
நனவிலி மனத்திலே பல தகாத இச்சைகள் அடக்கப்பட்டுக்
கிடக்கின்றன என்பதைப் பற்றி முன்பே அறிந்து கொண்டோம். அந்த இச்சைகள் விழிப்பு நிலையிலே
மேலே வந்தால் பெரும்பாலும் மனச்சான்றால் தடுக்கப்பட்டுவிடும். வெற்றி பெறாத காரணத்தால்
அந்த இச்சைகள் வேறு வழிகளிலே வெளிப்பட்டுத் திருப்தி பெற முயல்கின்றன. அதற்கு உறக்கம்
ஒரு நல்ல சாதகமாக அமைகின்றது.
உறக்க நிலையிலும் மனம் வேலை செய்துகொண்டுதானிருக்கிறது.
மனச்சான்றும் காவல் சக்திகளும் அப்பொழுதும் வேலை செய்தாலும் அவற்றின் வலிமை சற்று தளர்ந்து
போகிறது. உறக்க நிலையிலே அவற்றின் கூர்மை கொஞ்சம் மழுங்கிப் போகிறதென்று சொல்லலாம்.
ஆதலால் அந்தச் சமயம் பார்த்து அந்த இழிந்த உந்தல்கள் வெளியேவந்து கனவாகத் தோன்றுகின்றன.
அப்படித் தோன்றுகிறபோதும் வெளிப்படையாக நின்றால் அதீத அகம் தடைசெய்துவிடுமென்று மறைமுகமாக
மாறுவேஷம் போட்டுக்கொண்டு தோன்றுகின்றன. கனவிலே வருகின்ற குறியீடுகளுக்கும், விபரீத
நிகழ்ச்சிகளுக்கும் இதுவே காரணம்.
Comments
Post a Comment