Skip to main content

அடிமனம் | ஆழ்ந்த பகுதி | பெ. தூரன்

மனத்தை மூன்று முக்கியமான பகுதிகளாகப் பிரித்து ஆராயலாம் என்று முன்பே கண்டோம். சாதாரணமாகத் தொழிற்படுவது மனத்தின் மேல் பகுதியாக உள்ள நனவு மனம். அதைச் சேர்ந்தாற்போல அதன் அடிப்பாகமாக இருப்பது இடைமனம் அல்லது நனவடி மனம். அதற்கும் கீழே இருப்பது அடிமனம். இதைத்தான் கனவிலி மனம் என்று கூறுகிறோம். இப்பகுதியில் உள்ள அநுபவங்களும் இச்சைகளும் நனவுக்கு எளிதாக வருவதில்லை. இவ்வாறு ஆராய்ச்சிக்காக மூன்று முக்கியப் பகுதிகளாக நாம் பிரித்துக்கொண்டாலும் இத்தகைய பிரிவினை எதுவும் மனத்தில் இல்லை என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
மனத்தை இவ்வாறு பிரித்து ஆராயலாம் என்கிற விஷயம் சிக்மண்ட் பிராய்டின் ஆராய்ச்சிகளின் பயனாகவே தெளிவடைந்தது. அதற்கு முன்பெல்லாம் உளவியலறிஞர்கள் மனத்தை நனவுமனம் என்கிற ஒரே பகுதியாகவே கருதி ஆராய்ந்தார்கள். பிராய்டுக்கும் கனவிலி மனமாகிய அடிமனத்தைப் பற்றிய எண்ணம் நாளடைவில்தான் உறுதியடைந்தது. மனநோயால் துன்புறுகின்றவர்களைத் ‘தடையிலாத் தொடர்முறை’யால் ஆராய்கின்றபோது மறந்துபோன இளமைப் பருவத்து அநுபவங்களும் அதிர்ச்சிகளும் வெளியாயின. குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட சில அநுபவங்கள் கொஞ்சம்கூட நினைவில் இல்லாமலிருந்தும் பிராய்டின் புதிய சோதனை முறையால் அவை வெளியாயின. உதாரணத்திற்கு இங்கு ஒரு சுவையான சம்பவத்தைக் கூறுகிறேன்.
தடையிலாத் தொடர் முறையால் ஒரு இளைஞனைப் பரிசோதனை செய்தார்கள். வெளிப்புறத்திலிருந்து எவ்வித சத்தமோ வேறு தொந்தாவுகளோ இல்லாத அமைதியான ஓர் அறையில் அவர் ஒரு மஞ்சத்தில் படுத்திருக்கிறார். மங்கலான ஒளி அந்த அறையில் பாவியிருந்தது. ஒரே நிசப்தம். அவர் நிம்மதியாக, உடலுறுப்புக்களையெல்லாம் தளர்த்திவிட்ட நிலையில் படுத்திருக்கிறார். சோதனை செய்பவர் ஏதோ ஒன்றிரண்டு சொற்களைக் கூறினார். அந்தச் சொற்களைக் கேட்டவுடன் அந்த இளைஞருடைய மனத்தில் என்னென்ன எண்ணங்கள் உண்டாகின்றனவோ அவற்றையெல்லாம் உடனுக்குடனே வெளிப்படையாக எவ்வித யோசனையோ தடையோ இல்லாமல் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் என்று முன்கூட்டியே ஏற்பாடு. பரிசோதனை செய்பவரிடம் நம்பிக்கையும், அவரோடு சேர்ந்து ஒத்துழைக்க வேண்டுமென்ற ஆவலும் அந்த இளைஞருக்குண்டு. ஆகையால் அவர் தமது மனத்திலே தோன்றியவற்றையெல்லாம் ஒன்று விடாமல் அப்படி அப்படியே வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டேயிருந்தார். அவர் கூறியதிலிருந்து கீழ்க்கண்ட ஒரு சம்பவம் வெளியாயிற்று.
அவருக்கு இரண்டு வயதாக இருக்கும்பொழுது அவர் தமது தாய்க்குப் பக்கத்தில் ஒரே படுக்கையில் படுத்துக்கொண்டிருந்தாராம். தாய் குழந்தையோடு கொஞ்சிக்கொண்டிருந்திருக்கிறாள். அவர்கள் இருந்தது ஒரு பட்டிக்காடு. பட்டிக்காட்டிலே ஒரு கூரை வீடு. அப்படி அவர்கள் படுத்திருக்கும்போது கூரையிலிருந்து ஒரு பாம்பு குழந்தை மேலே தொப்பென்று விழுந்தது. தாய் அதைக் கண்டு வீரிட்டுக் கதறிவிட்டாள். தாய் கதறுவதைப் பார்த்துப் பையனும் பயந்து நடுங்கிக் கதறியிருக்கிறான். நல்ல வேளை. பாம்பு யாரையும் கடிக்கவில்லை. அதுவும் பயத்தால் வேகமாக மறைவிடம் தேடி ஓடியிருக்க வேண்டும். இரண்டாம் வயதில் ஏற்பட்ட அந்த பயங்கர அதிர்ச்சி அந்த இளைஞரின் மனத்திலே அத்தனை காலமாக எங்கோ மறைந்து கிடந்து அப்பொழுது வெளியாயிற்று. அதற்கு முன்பு அதைப் பற்றிய நினைவே அவருக்குக் கிடையாது. இந்த அநுபவம் வெளியானதைக் கண்டு அவருக்கே ஆச்சரியமாக இருந்தது.
தடையிலாத் தொடர் முறையால் இவ்வாறு அநுபவங்கள் வெளியாவதைக் காணக் காண பிராய்டுக்கு ஒரு யூகம் பிறந்தது. இந்த அநுபவங்கள் புதிதாக மனத்துக்குள் உண்டாகவில்லை. அவை மனத்திலேயே இருந்திருக்கின்றன. ஆனால் நினைவுக்கு வராமல் எங்கோ இருந்திருக்கின்றன. அப்படியானால் இவ்வாறு மறைந்து கிடக்கும் அநுபவங்களும் இச்சைகளும் இருக்கும்படியான ஒரு பகுதி மனத்தில் இருக்க வேண்டுமல்லவா? அந்தப் பகுதியைத்தான் பிராய்டு மறைமனம் அல்லது கனவிலி மனம் என்று பிரித்துக் கூறலானார். இந்தப் பிரிவினையே மன ஆராய்ச்சியில் மனப் பகுப்பியல் என்ற ஒரு புதிய கிளை உண்டாவதற்கு அடிப்படையாக அமைந்தது.

Comments

Most Popular

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...

ஐரோப்பியர் வருகை - மயிலை சீனி. வேங்கடசாமி

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, மேல் நாட்டார் நமது இந்தியா தேசத்துடன், சிறப்பாகத் தென் இந்தியாவுடன், வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிகிறது. யவனர் (உரோமர், கிரேக்கர்) என்னும் ஐரோப்பிய ஜாதியார், சேர நாட்டின் கடற்கரைப் பட்டினங்களிற் பண்ட சாலைகள் அமைத்து, அவற்றில் நமது நாட்டுச் சரக்குகளைச் சேமித்து வைத்துக் கப்பல்கள் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டு போனார்கள். மதுரை, புகார், (காவிரிப்பூம் பட்டினம்) முதலிய நகரங்களிலும் யவனர் வசித்து வந்ததாகத் தமிழ் நூல்களினால் அறிகிறோம். கி.மு. 22 இல் மதுரையில் அரசாண்டிருந்த பாண்டிய மன்னன், அகஸ்தஸ் ஸீஸர் (Augustus Ceasar) என்னும் யவன அரசனிடம் தூதுவர்களை அனுப்பினான் என்று ஸ்த்ராபோ (Starbo) என்னும் மேல் நாட்டாசிரியர் எழுதியிருக்கிறார். தமிழருக்கும் யவனருக்கும் இருந்த இவ்வர்த்தகத் தொடர்பு, கி.பி. 47 முதல் மேன்மேலும் அதிகப்பட்டது. ஏனென்றால், அந்த ஆண்டில் ஹிப்பலஸ் (Hippalus) என்பவர், இந்து சமுத்திரத்தில் வீசுகிற வட கிழக்கு தென் மேற்குப் பருவக் காற்றைக் கண்டுபிடித்தார். இப்பருவக் காற்று வீசுகிற காலங்களில் பிரயாணம் செய்வதால் மாலுமிகள் விரைவாகக் க...

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...