Skip to main content

அடிமனம் | புதிய கொள்கைக்கு விதை | பெ. தூரன்

படம் - ஹிஸ்டிரியா பற்றி கற்பிக்கும் ஷார்க்கோ
பிராய்டு இதைப் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து அவருடைய மனமும் இதில் ஈடுபட்டது. இந்த முறையைக் கையாண்டு பார்க்க அவருக்கும் ஆசையுண்டாயிற்று. பிராயரும் பிராய்டுமாகச் சேர்ந்து தொழில் செய்யும்போது இந்த மாதிரியான நோயாளிகளை மனவசிய நிலையிலிருக்கச்செய்து அந்த கோய் தொடங்குவதற்கு முதற் காரணமாக இருந்த சம்பவத்தை ஞாபகத்திற்குக் கொண்டுவர முயலுமாறு செய்தனர். அந்தச் சம்பவம் நினைவிற்கு வந்துவிட்டால் அதுவே அந்த நோய் நீங்குவதற்குக் காரணமாக இருப்பதை அவர்கள் கண்டார்கள்.
இந்த சமயத்தில் ஜீன் மார்ட்டின் ஷார்க்கோ (charcot) என்பவர் பாரிஸில் புகழ்பெற்ற வைத்தியராக இருந்தார். மனவசிய முறையைக் கொண்டு மனநோய்களைக் குணப்படுத்த முதன் முதலாக முயன்ற வைத்தியர்களில் இவரும் ஒருவர். இவரிடத்தில் மனவசிய முறையை மேலும் விரிவாகக் கற்றுக்கொள்ளுவதற்காக பிராய்டு 1855-ல் பாரிஸுக்குச் தூய்மைசென்றார்.
பாரிஸிலிருந்து வியன்னாவுக்குத் திரும்பிய பிறகு பிராய்டு மனவசிய முறையைக் கையாண்டு அது அவ்வளவு திருப்தியான பலனையளிப்பதில்லை என்று கண்டார். அந்தக் காலத்தில் மனவசியத்தை சிகிச்சை முறையிற் கையாண்டவர்கள் மனவசியத் தாக்கத்திலிருக்கிற நோயாளிகளைப் பார்த்துச் சில கட்டளைகளையிடுவார்கள். ஒருவனுக்குக் கைவராமலிருந்தால் அவனே மனவசியத் தாக்கத்தில் இருக்கச்செய்து அவனுடைய கையை நீட்டவும் அசைக்கவும் உத்திரவிடுவார்கள். நோயாளி அவ்வாறே செய்வான். மனவசிய உறக்கம் கலைந்த பிறகும் அதைத் தொடர்ந்து செய்வான். ஆனால் இந்த சக்தி நீடித்திருப்பதில்லை. மறுபடியும் பழைய நிலைமை சில நாட்களிலோ சில மாதங்களிலோ ஏற்படத் தொடங்கியது; அல்லது அதே கோளாறு ஏற்படாவிட்டாலும் புதிதாக வேறு ஏதாவது ஒரு கோளாறு தோன்றத் தொடங்கியது. மேலும் எல்லோரையும் மனவசியத் தாக்கத்தில் இருக்கும்படி செய்யவும் முடியவில்லை.
பிராய்டுக்கு பிராயர் ஒரு சமயம் கூறிய சம்பவமே உள்ளத்தில் நன்றாகப் பதிந்திருந்தது. தற்செயலாகக் கண்டுபிடித்த அந்த முறையிலே அவருக்குப் பற்றுதல் ஏற்பட்டது.
மனவசியத் தாக்கத்திலே இருக்கும்போது நோயாளியை அவனுடைய மனத்தில் தோன்றும் எண்ணங்களையெல்லாம் தாராளமாகச் சொல்லும்படி கூறி அதன் வழியாக அந்த மனநோய் ஏற்பட்ட காரணத்தைக் கண்டுபிடிக்க அவர் முயன்றார். அவ்வாறு நோய்க்குக் காரணமான சம்பவத்தை நினைவுக்குக் கொண்டு வந்ததும் நோய் குணமாவதை அவர் மேலும் பல சோதனைகளின் மூலம் கண்டறிந்தார்.
சாதாரணமாக ஒருவனுக்கு ஏற்பட்டிருக்கும் துக்கத்தை மற்றவர்களிடம் எடுத்துக் கூறுவதினலேயே அந்த துக்கம் சற்றுத் தணிகிறது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ளுவார்கள். யாராவது ஒருவர் வீட்டில் ஏற்பட்ட மரணத்திற்காக துக்கம் விசாரிக்கச் செல்லுவதிலும் இந்த உண்மை அடிப்படையாக இருக்கிறது. பலபேர் சென்று துக்கம் விசாரிப்பதால் துக்கப்படுபவர்களின் மனத்திலுள்ள பாரம் குறைகிறது.
கோபம் வந்தவன் மற்றவர்களைத் திட்டுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்படித் திட்டுவதால் அவன் கோபம் தணிகிறது. இவ்வாறேதான் மனத்தில் அழுந்திக்கிடக்கும் சிக்கல்களை மறுபடியும் வெளிக்கொணர்ந்து அவற்றை மறுபடியும் நினைவின் மூலமாக அநுபவிக்கும்படி செய்துவிட்டால் அந்தச் சிக்கல்களினால் ஏற்படும் கோளாறுகள் நீங்கி விடுகின்றன.
இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு மனத்திலுள்ள எண்ணங்களைத் தாராளமாக வெளியில் சொல்லி அதன் மூலம் ஆறுதல் பெறும் முறையை பிராய்டு மேலும் சோதனை செய்ய விரும்பினார்.
பிராய்டும் பிராயரும் சில காலம் சேர்ந்து தொழில் செய்தார்கள். அவர்களுடைய புதிய முறை நல்ல வெற்றியளித்தது. இந்த முறைக்கு அவர்கள் தூய்மையுறும் முறை (Catharsis) என்று பெயரிட்டனர். நோயாளி தன் மனத்திற்கு வரும் எண்ணங்களையெல்லாம் வெளியிலே கூறி ஆறுதல் பெறுவதால் மனத்தின் பாரம் நீங்கித் தூய்மையுறுகிறான்; அவனுடைய மனச் சிக்கல்கள் நீங்குகின்றன.
இந்த முறையின் தோற்றத்திற்கு பிராயர் முதற் காரணமாக இருந்தாலும் அவர் இதைத் தொடர்ந்து கைக்கொள்ளவில்லை; மேற்கொண்டு ஆராய்ச்சி செய்யவும் இல்லை. ஆனால் பிராய்டு தொடர்ந்து இதை ஆராய்ந்தார். அதன் பயனாகப் பல புதிய உண்மைகளைக் கண்டுபிடித்து மனத்தைப் பற்றிய அறிவிலேயே ஒரு புரட்சியை உண்டாக்கி விட்டார்.
நோயாளி தன் மனத்திலே புதைந்து கிடக்கும் பழைய அதிர்ச்சிகளையும், அநுபவங்களையும் நினைவுக்குக் கொண்டுவருவதற்கு மனவசியத் தூக்கமும் அவசியமில்லை என்பதையும், அதை வேறு வகையிலே செய்யலாம் என்பதையும் பிராய்டு தம் அநுபவத்தின் மூலமாகக் கண்டார்.
மங்கலான வெளிச்சம் உள்ள ஒரு அறையிலே நோயாளியைத் தனியாகப் படுக்க வைக்க வேண்டும். யாதொரு விதமான இரைச்சலுமில்லாமல் அமைதியாக இருக்கும்படி செய்ய வேண்டும். நோயாளியைத் தன் கைகால்களைத் தளர்த்திவிட்டு நல்ல ஒய்வு நிலையில் இருக்கச் செய்யவும் வேண்டும், அந்தச் சமயத்தில் ஏதாவது ஒரு கேள்வி அல்லது குறிப்பின் மூலம் நோயாளியின் மனத்தில் எழுகின்ற எண்ணங்களையெல்லாம் கொஞ்சம்கூட ஒளிக்காமல் அவை தோன்றியவுடனே சொல்லிக்கொண்டிருக்கும்படி செய்ய வேண்டும். இப்படித் தாராளமாக எண்ணங்களைச் சொல்லும்போது பழைய அநுபவங்கள், ஆசைகள் எல்லாம் தாமாகவே வெளியாகின்றன. அவற்றின் மூலம், ஒருவனுடைய குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிகள், துன்ப அநுபவங்கள் எல்லாமும் வெளியாயின. நோயாளி அவற்றைக் கூறும்போது அவற்றை மறுபடியும் அநுபவிப்பது போல் உணர்ந்து வெளியிட்டான். இவ்வாறு செய்வதன் மூலம் மனத்தில் ஏற்பட்ட சிக்கல் நீங்கி மனக் கோளாறும் மறைந்தது.
இதிலிருந்து பிராய்டுக்கு ஒரு முக்கியமான உண்மை வெளிப்பட்டது. குழந்தைப் பருவத்திலிருந்து ஏற்பட்ட அதிர்ச்சிகளும், முக்கியமான அநுபவங்களும், அடக்கி வைக்கப்பட்ட இச்சைகளும், எண்ணங்களும் முற்றிலும் மறைந்து போய்விடுவதில்லை. அவை மனத்திற்குள் எங்கேயோ அழுந்திக் கிடக்கின்றன. மனத்தின் அந்தப் பகுதி சுலபமாக வெளிப்படையாகத் தோன்றுவதில்லை. இம்மாதிரியாக மனத்தில் ஒரு பகுதி இருக்க வேண்டும் என்று பிராய்டு கண்டார்; இந்தப் பகுதிக்கு அடி மனம் அல்லது நனவிலி மனம் என்று பெயர் கொடுத்தார். மனத்தின் ஆழ்ந்த பகுதி என்றும், நனவுக்கு எளிதில் வராத இச்சைகள் முதலியவை அழுந்திக் கிடக்கும் பகுதியென்றும் இதை விளக்கலாம்.
நனவிலி மனத்தில் அழுந்திக் கிடக்கும் இச்சைகள் முதலியவைகள் பெரும்பாலும் காமம், சினம், கோபம், அச்சம் முதலான வலிமை மிகுந்த உள்ளக் கிளர்ச்சிகளுடன் நெருங்கிய தொடர்புடையவை. இவைகளெல்லாம் ஏதாவதொரு காரணத்தால் முதலில் அடக்கப்பட்டிருக்கலாம். சமூகம் ஏற்றுக்கொள்ளாத இச்சைகள் அடக்கப்பட்டிருக்கலாம். வேறு எத்தனையோ காரணங்களாலும் இவை அடக்கப்படுகின்றன.
இவ்வாறு அடக்கப்படுவதால் உள்ளத்திலே கோளாறுகள் ஏற்படுகின்றன; கவலை தோன்றுகிறது. இவற்றின் வேகம் மிகுந்து விட்டால் மனநோயும் உண்டாகிறது.
மனநோயுடையவர்களை அவர்கள் நனவிலி மனத்தில் அழுந்திக் கிடக்கும் இச்சைகள், அநுபவங்கள் முதலியவற்றை நனவுக்குக் கொண்டுவருமாறு செய்து அவற்றை மீண்டும் மனத்திலேயே அநுபவிக்கும்படி செய்து விட்டால் மனநோய் நீங்குகிறது. மனம் தூய்மையுறுகிறது.
இவ்வாறு மனத்திற்குக் கொண்டுவதற்கு பிராய்டு கண்டுபிடித்த முறையை மேலே கண்டோம். அதற்கு அவர் “தடையிலாத் தொடர் முறை” என்று பெயர் கொடுத்தார்.
ஒரு பெரிய அதிர்ச்சியானது ஹிஸ்டிரியா முதலிய மனநோயை உண்டாக்குகிறதென்று முன்னரே கண்டோமல்லவா? முன்பெல்லாம் ஹிஸ்டிரியா பெண்களுக்குத்தான் உண்டாகும் நோயென்று நினைத்தார்கள். ஆனால் அது ஆண்களுக்கும் வருவதுண்டு என்பதை முதல் உலக யுத்தத்தின் போது தெளிவாகக் கண்டார்கள்.
பயங்கரமான சப்தத்துடன் ஒரு வெடிகுண்டு எதிரிலேயே வெடிக்கும். அது போர்வீரர்களின் மனத்தில் பெரிய பீதியை விளைவிக்குமல்லவா? உள்ளக் கிளர்ச்சி மிகுந்த வீரர்களை இது பாதிக்கிறது. வெடிகுண்டு நேரடியாக ஒரு தீமையும் செய்யாவிட்டாலும் சிலருக்குத் திடீரென்று கண் தெரியாது போய்விடும்; அல்லது காது கேளாது போய்விடும். இது அந்தக் குண்டு வெடித்ததால் மனத்தில் உண்டான அதிர்ச்சியின் காரணத்தாலேயாகும்.
குண்டு வெடித்த அந்தப் பயங்கர அநுபவத்தை மறுபடியும் நினைவுக்குக் கொண்டுவரும்படி செய்துவிட்டால் இந்த நோய் நீங்கிவிடுகிறது. யுத்தம் முடிந்து சமாதானம் ஏற்பட்டுவிட்டது என்ற செய்தியே சிலருக்கு இந்த வெடிகுண்டு அதிர்ச்சி நோயைக் குணப்படுத்தியிருக்கிறது.
ஹிஸ்டிரியா நோயைக் குணப்படுத்துவதற்கு மனவசிய முறையில் தொடங்கிய சிக்மண்டு பிராய்டு முடிவில் மனப்பகுப்பியல் என்ற மனத்தைப் பற்றிய புதியதோர் உண்மையைக் கூறும் சாஸ்திரத்திற்கு அடிகோலலானார். நூற்றுக்கணக்கான நோயாளிகளைச் சோதனை செய்து பொறுமையோடு அவர் செய்த ஆராய்ச்சிகளே அவருக்கு உதவியாக கின்றன.
அவர் தமது கருத்துக்களை முதலில் வெளியிட்டபோது எத்தனையோ எதிர்ப்புகள் தோன்றின; எத்தனையோ பேர் அவரைப் பரிகாசம் செய்தனர். ஆனால் இன்று அவர் தோற்றுவித்த மனப் பகுப்பியல் பொதுப்படையாக எங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது; மனத்தின் இரகசியங்களை அறிந்துகொள்வதற்கு வழிகாட்டியவர்களில் சிக்மண்ட் பிராய்டுக்கு ஒரு சிறந்த ஸ்தானமும் கிடைத்திருக்கிறது.
பிராய்டு கூறிய விஷயங்கள் எல்லாம் அப்படியே உண்மையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பது மெய்தான். மனத்தைப் பற்றிப் புதிதாக ஒரு கருத்தை வெளியிடும்போது முதலில் கூறிய எல்லா விஷயங்களும் நூற்றுக்கு நூறு உண்மையாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. அதன் அடிப்படை மட்டும் உண்மையாக இருக்கிறதா என்பதைத்தான் நாம் கவனிக்க வேண்டும். பிராய்டே பிற்காலத்தில் தமது கருத்தின் அம்சங்கள் சிலவற்றை மாற்றியமைத்துக்கொண்டிருக்கிறார். அதனால் அவர் மனத்தைப் பற்றிய உண்மைகளை அறிவதற்கு உதவி செய்த பெருமை எவ்வகையிலும் குறைந்து போகாது. உளவியல் என்பதே தத்துவ சாஸ்திரத்திலிருந்து பிரிந்து தனியாக ஒரு சாஸ்திரமாக வளர்ந்து பல ஆண்டுகள் ஆகவில்லை. அது குழந்தைப் பருவத்திலிருக்கும் ஒரு சாஸ்திரம். அதிலே ஒரு பெரிய புரட்சியை உண்டு பண்ணி மனத்தின் மறைவிடங்களைப் பற்றி எல்லாம் சிந்தித்துப் பார்க்கும்படி செய்தவர் சிக்மண்ட் பிராய்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.

Comments

Most Popular

இரு சகோதரர்கள்

  [ அ. கி. கோபாலன், அ. கி. ஜயராமன் நேர்காணல் ] நேர்கண்டவர்: எஸ். குரு படங்கள்: திரு. சுதாகர் நோபல் பரிசு பெற்ற நாவல்களைப் பதிப்பித்த அ. கி. கோபாலன் நீங்கள் பதிப்பாளரானது எப்படி ? தென்னாற்காடு மேலக்குமாரமங்கலம் என் சொந்த ஊர். எங்கள் கிராமத்தில் நான்காவது வகுப்பு படித்தேன். கிராமத்தில் எங்கள் அப்பா விவசாயம் செய்துகொண்டிருந்தார். நிறைய நஞ்சை நிலம் இருந்தது. பங்காளிக் காய்ச்சலினால் எங்கள் சொத்துகள் பறிபோயின. முதலில் என் அண்ணன் அ. கி. ஜெயராமன் சென்னைக்கு வந்து ஒரு ஹோட்டலில் சர்வராகச் சேர்ந்துவிட்டு , அப்புறம் என்னை ஊரிலிருந்து வரவழைத்து , என்னையும் சர்வராகச் சேர்த்துவிட்டார். சைனா பஜார் பழைய ஆரிய பவனுக்கு எதிரே ஆனந்த லட்சுமி பவன் என்று இருந்தது. அங்குதான் சர்வராகச் சேர்ந்தோம். இட்லி அரையணா , காபி முக்காலணா , பீடா காலணா , ஸ்பெஷல் பீடா அரையணா விற்ற காலம் அது. ஹோட்டலுக்கு அருகில் ச. சு. சங்கரலிங்கக் கவிராயர் என்ற நாடகாசிரியர் தங்கியிருந்தார். சங்கரலிங்கக் கவிராயர் , சங்கரதாஸ் சுவாமிகளுக்கு இணையானவர். அவரிடம் நாடகப் பாடல்கள் கேட்டேன். ஹோட்டலில் சக ஊழியர்களிடம் சொல்லிவிட்டு , ஆ...

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல...