Skip to main content

காந்தி யார்? - 5 | வெ. சாமிநாத சர்மாகாந்தியடிகளை ஒரு வீரன் என்று முதலில் குறிப்பிட்டோம். வீரமென்பது புறத்தோற்றத்திலே இல்லை. சீலத்திற்கும் சாந்தத்திற்கும் இடங்கொடுத்து அவைகளைப் பத்திரமாகக் காப்பாற்றி வருகிற எந்தத் திண்ணிய நெஞ்சமுண்டோ அந்த நெஞ்சத்திலேதான் வீரத்திற்கு இடமுண்டு. காந்தியடிகள் இத்தகைய நெஞ்சுடையவர். ஆனால், இந்த நெஞ்சத்திலிருந்து, இமயம் போன்ற உறுதியான இந்த இருதயத்திலிருந்து, கருணையானது சதா பிரவாகமெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால்தான் அவருடைய அரசியல் விரோதிகளும் அவரைக் கண்டு அஞ்சவும் அஞ்சுகிறார்கள்; அதே சமயத்தில் பக்தியும் செலுத்துகிறார்கள். ஜான் குந்தர் (John Gunther) என்ற பிரசித்த பிரயாண நூலாசிரியன், காந்தியடிகளைப் பின்வருமாறு மதிப்பிடுகிறான்:

“காந்தியடிகளின் வாழ்க்கை முழுவதும் வீர வாழ்க்கையாகவே இருக்கிறது. ...... அவர் விதியை எதிர்த்துப் போராடினார். அது மட்டுமல்ல, அந்த விதியைக் காட்டிலும் வலிவுள்ள பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையே எதிர்த்துப் போராடினார்.”

காந்தியடிகளிடத்தில் அஞ்சாமை குடிகொண்டிருக்கிறதென்று சொன்னால், அதற்குக் காரணம் என்ன? இதனைச் சிறிது சுருக்கமாக இங்கு எடுத்துக்காட்ட விழைகிறோம். யாரொருவர். தமக்கென்று ஒன்றையும் வைத்துக்கொள்ளாமல், எல்லாம் பிறருக்காகவே என்று வாழ்க்கையை நடத்துகிறாரோ அவர், யாருக்கும் அச்சப்பட வேண்டியதில்லை, உலகத்திற்கு எவனொருவன் அடிமைபட்டுக் கிடக்கிறானோ அவன்தான் அஞ்சி அஞ்சி வாழ்க்கையை நடத்துகிறான். உலகத்தை எவனொருவன் அடிமைப்படுத்திக்கொள்கிறானோ, அவன் யாருக்கும் அஞ்ச வேண்டுவதில்லை. உலகத்திலே தோன்றிய ஒவ்வொரு ஜீவராசியும் ஏதோ ஒரு விதமான அச்சத்துடன்தான் வாழ்கின்றது; அதனால் துன்பத்தையும் அடைகிறது. ஸர் எட்வின் ஆர்னால்ட் (Sir Edwin Arnold) என்ற ஆங்கில அறிஞன் தனது 'ஆசிய ஜோதி' என்ற நூலில், இதை மிக அழகுபடக் கூறியிருக்கிறான். துறவுத் தத்துவத்தின் ரகசியமே இதுதான். அதாவது, எவனொருவன், தனக்கு, தனக்கு என்று எல்லாவற்றையும் இறுக்கிப்பிடித்துக்கொண்டு எல்லாரையும் ஆளப் பார்க்கிறானோ அவன் எல்லாவற்றையும் இழந்து எல்லாருக்கும் அடிமையாகிவிடுகிறான். அதே பிரகாரம் எவனொருவன், தன்னுடைய சர்வத்தையும் பிறருடைய நலனுக்காக அர்ப்பணஞ் செய்கிறானோ அவன் சர்வத்தையும் அடைகிறான்; சர்வமான பேருக்கும் எஜமானனாகிறான். அப்படித் தன்னுடைய தியாகத்தினால் எஜமான பதவியை அடைகிறவன், யாருக்கு அஞ்ச வேண்டும்? அஞ்ச வேண்டிய அவசியமே அவனுக்கு இல்லையே. அஞ்சவும் அவனுக்குத் தெரியாதே. அச்சமில்லாதவிடத்தில் அன்பு குடிகொள்வது இயற்கையல்லவா? இதனாலேயே அஞ்சாமையும் அன்பும் ஒரே மரத்திலிருந்து பிரிகிற இரண்டு கிளைகள் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். அந்த மரம் யாது? அதுதான் துறவு. துறவு என்று சொன்னால், தன்னையே இழந்துவிடுவது என்று அர்த்தமல்ல. தன்னுடையதென்று சொல்லி எதனெதன்மீது பற்று வைத்துக்கொண்டிருக்கிறோமோ அந்தப் பற்றைத் துறந்துவிடுவது என்பதுதான் அர்த்தம். அந்தத் துறவானது. மனிதத் தன்மையிலே வளர்ந்து சேவையாகப் பரிணமிக்க வேண்டும். தன்மீது வைத்திருக்கும் பற்றைத் துறக்கிறவன் பிறர்மீது காதல் கொள்கிறான். இந்தக் காதலுக்கு பிரேமை என்று பெயர். எனவே, துறவு, அஞ்சாமை, அன்பு, சேவை என்பன ஒன்றையொன்று பிணைத்துக்கொண்டிருக்கும் சங்கிலி மாதிரி ஒன்றையொன்று தொடர்கிறது. பர்த்ருஹரி என்ற வடமொழிப் புலவன், தனது 'வைராக்கிய சதகம்' என்ற நூலில், துறவையும் அஞ்சாமையையும் எப்படிப் பொருத்தப்படுத்திக் கூறுகிறான் பாருங்கள்:

"செல்வத்திலே வறுமை பயம், அறிவிலே அறியாமை பயம், அழகிலே வயோதிகம் என்ற பயம், புகழிலே புறங்கூறுகிறவர்களைப் பற்றின பயம், வெற்றியிலே பொறாமை என்கிற பயம், தேகாபிமானத்திலே மரண பயம், இப்படி உலகத்திலுள்ள எல்லாவற்றிலும் பயம் குடிகொண்டடிருக்கிறது. எவனொருவன் எல்லாவற்றையும் தியாகஞ் செய்துவிடுகிறானோ அவன்தான் பயப்படாதவன்."

இத்தகைய அஞ்சாமை காந்தியடிகளிடத்தில் நிரம்பியிருக்கிறது. இதனாலேயே, அஹிம்சை என்பது அவருக்குச் சர்வ சாதாரணமான ஓர் ஆயுதமாயிருக்கிறது.

உத்தம வீரர்களுடைய லட்சணம் என்னவென்றால், ‘அவர்கள் ஆபத்துக்குப் புறமுதுகு காட்டமாட்டார்கள்; ஆனால் ஒரு கொசுவினிடத்திலும் இரக்கங் காட்டுவார்கள்’. அவர்கள் ‘ராட்சத பலமுடையவர்கள்; அந்தப் பலத்தைத் தமது நலத்திற்காக உபயோகிக்கவேமாட்டார்கள்’. அவர்களுடைய ஒவ்வொரு செயலிலும் மனிதத்தன்மை குடிகொண்டிருக்கிறது. சுமார் ஒரு தலைமுறைக்கு முன்னர் காந்தியடிகளுக்கு எதிரியாயிருந்த 'தளபதி ஸ்மட்ஸ், (General Smuts) "அவருடைய (அதாவது காந்தியடிகளுடைய) எந்தக் காரியத்திலும் ஒருவித மனிதத்தன்மை குடிகொண்டிருந்ததையே இங்கு வற்புறுத்திக் கூற விரும்புகிறேன். அவர் தென்னாப்பிரிக்காவில் சிறையிலிருந்த போழ்து என்னுடைய உபயோகத்திற்கென்று ஒரு ஜதை மிதியடிகளைத் தயாரித்து, விடுதலையானவுடன் எனக்குச் சன்மானமாக அளித்தார்!'' என்று பாராட்டிச் சொல்லியிருப்பதை இங்கு வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

காந்தியடிகளின் ஒவ்வொரு செயலிலும் மனிதத்தன்மை ஒளிவிட்டு வீசுவதாலேயே அவரை ஒரு மனிதர் என்று அழைக்கிறோம். வெளிப்பார்வைக்கு அவர் எல்லோரையும் போல் ஒரு சாதாரண மனிதராகவே காணப்படுகிறார். எல்லா மகான்களும், எல்லா வீரர்களும், எல்லாத் தியாகிகளும் இப்படித்தான் காணப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் உள்ளமானது, எவ்வித சஞ்சலத்திற்கும் இடங்கொடாமல் சாந்தமாக இருக்கிறது. ரோமெய்ன் ரோலந்து, (Romain Rolland) காந்தியடிகளைப் பற்றிக் கூறும் ஒரு வாக்கியம் இங்குக் கூர்ந்து நோக்கத்தக்கது:

"அவருடைய அறிவு, அமைதியாகவும் தெளிவாகவும் இருக்கிறது. அவருடைய இருதயம், தான் என்ற அகங்காரமில்லாமல் இருக்கிறது, மற்றெல்லா மனிதர்களைப்போல அவரும் ஒரு மனிதரே.''


மகா புருஷராகவும், வீரராகவும், மனிதராகவும் முக்கோணத்திலிருந்து நமக்குக் காட்சியளிக்கிற காந்தியடிகள் இன்று எழுபத்து மூன்றாவது வயதையடைந்திருக்கிறார். அவருடைய வயது முதுமையாகிக்கொண்டு போகிறது; ஆனால், அவருடைய வாழ்வு இளமையாகிக்கொண்டு வருகிறது. வயதாக ஆக, வாழ்க்கையைச் சுருக்கிக்கொள்ள வேண்டுமென்று சொல்வார்கள். ஆனால், அவருடைய வாழ்க்கை, வயதாக ஆக விரிந்துகொண்டு போகிறது. அவர் ஒரு ஞானி போலிருக்கிறார். ஆனால், உலகமெல்லாம் அவருக்குக் குடும்பமாயிருக்கிறது. அவர், பொன்னும் பொருளும் வேண்டுமென்று பிச்சை கேட்கிறார். ஏன்? இந்தியாவிலுள்ள கோடிக்கணக்காண ஏழை மக்கள் கையேந்திப் பிச்சை கேட்காமலிருக்கும் பொருட்டு. அவர் அடிக்கடி உபவாசம் இருக்கிறார். ஏன்? லட்சக்கணக்கானவர்களுடைய நிரந்தர உபவாசத்தைத் தடுப்பதற்காக. அவர் ஒற்றை ஆடை அணிந்துகொண்டிருக்கிறார். ஏன்? மற்றவர்களுக்கு முழு ஆடை வழங்குவதற்காக. அவர் ஊன்றுகோலுடன் நடக்கிறார். ஏன்? மற்றவர்களுக்குத் தாம் ஓர் ஊன்றுகோலாயிருக்க வேண்டும்மென்ற ஆவலினால். அவர், கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படுகிறார். ஆனால், அவர் சத்தியமாகிற ஒரே பொருளைத்தான் வணங்குகிறார். அவருடைய லட்சியத்திலே, அதாவது பாரத ஜாதியின் மகோன்னத வாழ்விலே நமது பார்வையைத் திருப்பி, அந்த நல்வாழ்வுக்காக நமது வாழ்வை அர்ப்பணம் செய்வதன் மூலம் அவரை வணங்குவோமாக.

(நிறைவு)

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி  https://amzn.to/3eOnx2r ஆனந்த்  https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும