Skip to main content

மனமும் அதன் விளக்கமும் | உள்ளக் கிளர்ச்சி | பெ. தூரன்

னம் என்பது மாயமாக இருந்தாலும் அதில் எத்தனை எத்தனை குமுறல்கள், கொந்தளிப்புகள், கிளர்ச்சிகள் தோன்றுகின்றன! சினம் பிறக்கிறது, அச்சம் உண்டாகிறது - இப்படி எத்தனை விதமான அனுபவங்கள்! சினம், அச்சம், காதல், காமம், துக்கம், வெறுப்பு முதலியவைகளுக்கு உள்ளக் கிளர்ச்சிகள் என்று பெயர்.
குழந்தை அழுகிறது; அடுத்த விநாடியிலே மகிழ்ச்சியால் சிரிக்கிறது. குழந்தைகள் தங்கள் உள்ளக் கிளர்ச்சிகளை உடனே வெளிப்படுத்திவிடுகின்றன. விரைவிலே அவை மறைந்தும் போகின்றன.
கண்ணம்மா ஓடிவருகிருள். “அம்மா, அடுத்த வீட்டுக் கிட்டுவுக்கு மிட்டாய் கொடுக்க வேண்டாம்” என்று அவன் மேலே வெறுப்போடு பேசுகிறாள். ஆனால் சிறிது நேரத்திற்குள்ளே இரண்டு பேரும் சேர்ந்து விளையாடத் தொடங்கி விடுகிறார்கள். கண்ணம்மா தன்னிடமிருந்த் மிட்டாயை அவனுக்குக் கொடுக்கிறாள். கிட்டுவின் மேல் ஏற்பட்டிருந்த வெறுப்பை அவள் மறந்தே விடுகிறாள்.
இந்தக் குழந்தைகளைப் போல் உலக மக்கள் இருக்கக்கூடாதா என்றுகூடச் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் மனிதன் தனது உள்ளக் கிளர்ச்சிகள் அனைத்தையும் குழந்தைகளைப்போலத் திடீர் திடீரென்று உடனே வெளிப்படுத்தலாமா? சமூக வாழ்க்கையிலே அது முறையாகுமா?
வேகம் வேகமாக ஒருவன் ரெயில் வண்டிக்குள்ளே நுழைகிறான். செருப்புக் காலால் உனது கால் விரலை நன்றாக மிதித்துவிடுகிறான். வலி பொறுக்க முடியாமல் உனக்குக் கோபம் பொங்கி வருகிறது. வந்தவன் கன்னத்திலே அறையலாம் என்றுகூடத் தோன்றுகிறது. உடனே அடித்துவிடலாமா? அல்லது வாயில் வந்தபடியெல்லாம் அவனைப் பேசத்தான் செய்யலாமா?
ஒரு நாடு மற்றொரு நாட்டிற்கு ஏதோ ஒரு தவறு செய்துவிடுகிறது. அதற்காக உடனே போர் தொடுத்துவிடலாமா?
காமம் குரோதம் பொறாமை இப்படி எத்தனையோ உள்ளக் கிளர்ச்சிகள் இருக்கின்றன. அவற்றிற்கெல்லாம் ஆட்சி அதிகாரம் கிடைத்துவிட்டால் சமூக வாழ்க்கையே நிலைகுலைந்து போகும்.
மனிதன் தனது உள்ளக் கிளர்ச்சிகள் பலவற்றைக் கட்டுப்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவன் விலங்குகளைப்போல நடக்க முடியாது. சில விலங்குகள்கூட ஓரளவு தமது உள்ளக் கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்தப் பழகிக் கொள்ளுகின்றன என்று தோன்றுகிறது. மனிதன் அவற்றைவிடத் தாழ்வாக நடக்க முடியாது. அவனுடைய நாகரிகம், அவனுடைய பண்பாடு அவற்றின் பெருமையெல்லாம் அழியாதிருக்க வேண்டுமானால், சமூக வாழ்க்கை நிலைக்க வேண்டுமானால் மனிதன் தனது இழிந்த கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும்.
இயல்பூக்கங்களை அடக்கி அழித்துவிட முடியாது என்று கண்டோம். இயல்பூக்கங்களுடன் சேர்ந்து பல உள்ளக் கிளர்ச்சிகள் தோன்றுகின்றன. ஆகவே, உள்ளக் கிளர்ச்சிகளையும் அடியோடு அழித்துவிட முடியாது. அப்படி முயலும்போதுதான் மறைமனக் கோளாறுகள் பல உண்டாகின்றன என்று கூறுகிறார்கள். ஆனால், இழிந்த உள்ளக் கிளர்ச்சிகளையும் இயல் பூக்கங்களையும் வேறு நல்ல வகையில் திருப்பிவிட்டு உயர்மடைமாற்றம் செய்யலாம். காம இச்சையை மாற்ற முயலும் ஒருவன் அவன் பக்தனாக இருந்தால் அதைக் கடவுளிடத்தே உயர்ந்த பக்தியாக மாறச் செய்கிறான்; அல்லது பிராணிகளிடத்தே அளவு கடந்த அன்பாக மாற்றி அவற்றின் சேவையிலே ஈடுபடுகிறான். அவன் கலைஞனாக இருந்தால் அழகிய கலைப்படைப்பின் மூலம் அதை மாற்றுகிறான்.
இச்சைகள் நிறைவேறாத காலத்தில் இப்படிப்பட்ட மடைமாற்றமும் இல்லாவிட்டால்தான் மனக் கோளாறுகள் ஏற்பட அவை காரணமாகின்றன.
மறிவினையாக மனிதன் சில செயல்களைப் புரிகிறான். மறிவினை (Reflex action) என்பது ஒரு புதிய சொல். ஆனால் அதைப் புரிந்துகொள்வது எளிது. ரெயிலில் பயணம் செய்யும்போது கரித்தூளொன்று கண்ணிலே விழுகிறது. கண் உடனே மூடிக்கொள்கிறது; கண்ணிர் மளமளவென்று வருகிறது; அப்படி வந்து கண்ணுக்கு ஏற்பட்டுள்ள தொந்தரவைத் தவிர்க்க முயல்கிறது. கண் மூடுவதும், கண்ணீர் பெருகுவதும் நாம் நினைத்துப் பார்த்துச் செய்த செயல்கள் அல்ல. அவை தாமாகவே நிகழ்கின்றன. அப்படிப்பட்ட செயல்களுக்குத்தான் மறிவினைகள் என்று பெயர். தும்முதல், குறட்டை விடுதல் போன்ற செயல்களெல்லாம் மறிவினைகளே.
இயல்பூக்கத்தாலும், உள்ளக் கிளர்ச்சியாலும் மனிதன் பல செயல்களில் ஈடுபடுகின்றான். அறிவைக்கொண்டு எண்ணித் துணிந்து பல செயல்கள் புரிகின்றான். பழக்கத்தின் வலிமையால் சில செயல்களைச் சிந்தனையின் துண்டுதலில்லாது இயல்பாகவே செய்யவும் கற்றுக்கொள்ளுகிறான். "காலையில் படுக்கையிலிருந்து எழுந்தது முதல் இரவில் படுக்கப்போகும் வரை செய்யும் பல செயல்கள் பழக்கத்தின் பயனாக இயல்பாகவே நடைபெறுகின்றன. உண்பது, ஆடை அணிவது, நண்பர்களை வரவேற்றுப் பேசுவது எல்லாம் பல நாட்களில் ஏற்பட்ட பழக்கத்தினால் மனத்தின் தூண்டுதலில்லாமல் ஒழுங்காக அமைகின்றன” என்று வில்லியம் ஜேம்ஸ் என்ற உளவியலறிஞர் கூறுகிறார்.
பழக்கத்தினால் செய்யும் வினைக்கும் மறிவினைக்கும் வேறுபாடு உண்டு. பழக்கத்தினால் செய்யும் வினையை முதலில் தொடங்கும்போது மனத்தின் தூண்டுதலால் அதன் துணிவுப்படி செய்தோம். பிறகு பல தடவை அவ்வாறே எண்ணிச் செய்ததால் அது இயல்பான பழக்கமாக நாளடைவில் ஆகிவிடுகிறது. அந்த நிலையில் மனத்தின் தூண்டுதல் தேவையில்லையென்றே கூறலாம். இவ்வாறு பல எளிய செயல்களைப் பழக்கத்திற்குக் கொண்டு வந்துவிடுவதால் மனத்திற்கு வேறு உயர்ந்த செயல்களைப் பற்றி எண்ணித் துணிய ஒழிவும் ஆற்றலும் கிடைக்கும்.
பழக்கத்தின் வலிமையாலே இயல்பாகவே பல செயல்களைச் செய்துவிடலாம் என்பதனால் பழக்கத்தை உண்டுபண்ணிக் கொள்வதில் மிகுந்த எச்சரிக்கை வேண்டும். நல்ல பழக்கங்களைத் தொடக்கத்திலிருந்தே ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் நமது பழக்கங்களே நமக்குத் தீமையாக முடிந்துவிடும். ஆகவே, மனிதன் இயல்பூக்கத்தாலும், உள்ளக் கிளர்ச்சியாலும், பழக்கத்தாலும், எண்ணித் துணிவதாலும் மிகப் பல செயல்களைப் புரிகிறான் என்று ஏற்படுகிறது. மறிவினையாகவும் சிலவற்றைச் செய்கிறான். சில செயல்கள் பழக்கத்தின் வலிமையால் மறிவினை போலவே அமைந்துவிடுகின்றன. ஓடும்போது கால் இடறி ஒருவன் கீழே விழுகிறான். அவனுடைய மார்புக்கூடோ, தலையோ தரையில் மோதாதபடி கை முதலில் தரையில் ஊன்றித் தடுத்துக்கொள்ளுகிறது. கையைத் தரையில் ஊன்றி மற்ற உறுப்புக்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கையை நாம் ஊன்றுவதில்லை. இளம் வயதிலிருந்து ஏற்பட்ட பழக்கத்தின் வலிமையால் மறிவினை போலவே இது நடைபெறுகிறது. இதை ‘அரை மறிவினை’ என்று சிலர் சொல்வார்கள்.
மேலே கூறியவற்றிலிருந்து மனிதனுடைய செயல்களுக்கு அவனுடைய மனம், எந்த அளவுக்குக் காரணமாக இருக்கிறதென்று தெரிகிறது. மறிவினைச் செயல்களைக்கூட மனத்தின் சிந்தனை வலிமையால் ஓரளவு மாற்றியமைக்க முடியும். மனத்தின் வலிமையால் நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ளலாம். இயல்பூக்கமும் உள்ளக் கிளர்ச்சியும் உயர்மடைமாற்றம் பெற்றுச் சிறப்பாக அமையுமாறு செய்யலாம். அவ்வாறு செய்வதால் மனிதனுடைய வாழ்க்கை உயர்வடைகின்றது.

Comments

Popular posts from this blog

சிறுகதை என்றால் என்ன? | க. நா. சுப்ரமண்யம்

சி றுகதை என்றால் என்ன ? உருவத்தால் சிறியதாக இருக்கவேண்டும் என்றும் , கதையாக இருக்கவேண்டும் என்றும் சட்டென்று பதில் கூறிவிடலாம். ஓரளவு திருப்தி தருகிற பதில் மாதிரித்தான் இருக்கிறது. ஆனால் யோசித்துப் பார்க்கும்போது தோன்றுகிறது - உருவத்தில் சிறியது என்றால் எவ்வளவு சிறியது என்றும் , கதை என்றால் என்ன என்றும் கேள்விகள் தோன்றுகின்றன. இரண்டாவது கேள்விக்குப் பதில் முதலில் சொல்லிப் பார்க்கலாம். அத்தைப் பாட்டி கதையிலிருந்து , கம்பராமாயணத்தின் கருப்பொருள் வரையில் , ஏசாப்புக் கதைகளிலிருந்து மஹாபாரதத்து குருக்ஷேத்திரம் வரையில் , எல்லாமே கதையை ஆதாரமாகக் கொண்டவைதான். நாவல் , நாடகம் என்கிற இலக்கியத் துறைக்கும் ஆதாரமான விஷயம் கதைகள்தான். சிறுகதைக்கு ஆதாரமான கதை என்ன ? எப்படியிருக்க வேண்டும் ? ஓ. ஹென்றியின் கதைகளிலே பல சம்பவங்கள் அடுக்கடுக்காக வந்து கடைசியில் ஒரு திருப்பம் திரும்பி ஒடித்து வக்கிரமாக நிற்கும். மோபஸான் கதைகளிலே அடுக்கடுக்காகப் பல விஷயங்கள் சொல்லப்பட்டு , ஒரு சம்பவத்தைச் செயற்கை முத்தைப்போல உருட்டித் திரட்டித் தரும். சம்பவங்களை நம்புகிற இந்த இரண்டு கதைகளுக்கும் அப

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி  https://amzn.to/3eOnx2r ஆனந்த்  https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.