Skip to main content

மனமும் அதன் விளக்கமும் | கற்றுக் கொடுத்தது யார்? | பெ. தூரன்


ப்பொழுதுதான் பிறந்த கன்றுக்குட்டி மெதுவாக முயன்று எழுந்து நிற்கிறது. தாய்ப் பசுவின் பால் சுரக்கும் மடியருகே சென்று பால் குடிக்கத் தொடங்குகிறது. மடியிலே வாயை வைத்துப் பால் குடிக்க அதற்கு யார் கற்றுக் கொடுத்தார்கள்?
வாத்துக் குஞ்சு முட்டையினின்றும் வெளிவருகிறது; தண்ணிரைக் கண்டதும் அதில் உடனே இறங்கி நீந்துகிறது. அதற்கு யார் நீந்தக் கற்றுக் கொடுத்தார்கள்?
குளவி ஒன்று பருவம் அடையும்போது கூடு கட்டத் தொடங்குகிறது. அதில் பக்கத்திலே முட்டையிடுகிறது. புழுவொன்றைப் பிடித்து வந்து கூட்டிலே வைக்கிறது. புழுவைத் தன் கொடுக்கால் கொட்டி அது நினைவற்று ஆனால் உயிரோடு கிடக்கும்படி செய்கிறது. முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவந்த பிறகு அவற்றிற்கு உணவாகப் பக்கத்திலேயே இப்படிப் புழுவை வைத்துக் கூட்டை மூடிவிட்டு வெளியேபோய் இறந்துவிடுகிறது. அந்தக் குளவிக் குஞ்சுகள் பெரிதாகும்போது அவைகளும் இதே போன்று செய்கின்றன. அவற்றிற்கு யார் கற்றுக் கொடுத்தார்கள்? கற்றுக் கொடுக்கத் தாய்க்குளவிகூட இல்லையே? பிறகு எப்படி அந்தக் குஞ்சுகளும் தாய் செய்ததுபோலவே செயல் புரிகின்றன?
இவ்வாறு கற்றுத் தெரிந்துகொள்ளாத செயல்களைச் செய்யும்படி தூண்டும் பிறவி ஆற்றல் ஒன்றிருக்கிறது. அதற்குத்தான் இயல்பூக்கம் (lnstinct) என்று பெயர் வழங்குகின்றது. உணவு தேடூக்கம், கூடி வாழூக்கம், இடம் பெயரூக்கம், கலவியூக்கம் என்றிப்படிப் பல இயல்பூக்கங்கள் இருப்பதாக மெக்டுகல் போன்ற உளவியலறிஞர்கள் குறிப்பிடுகிருர்கள். ஒவ்வொரு இயல்பூக்கத்திற்கும் ஏற்றவாறு உள்ளக் கிளர்ச்சிகளும் உண்டு என்று கூறுவர்.
இயல்பூக்கத்தைப் பற்றி மாறுபட்ட கருத்துக்களுண்டு. இயல்பூக்கம் என்பதே இல்லை என்பாரும் உளர். இயல்பூக்கம் இருந்தாலும் பூச்சிகள் பறவைகள் விலங்குகள் முதலியவற்றிடம் அதன் ஆதிக்கத்தைக் காணலாம்; மனிதனிடத்தில் அதற்கு ஆதிக்கமில்லை என்று கூறுகிறவர்களும் இருக்கிறார்கள்.
இயல்பூக்கமே இல்லையென்று மறுக்கிறவர்கள் தமது ஆராய்ச்சிகளினால் இயல்பூக்கச் செயலாக எண்ணிவந்த சில செயல்களின் காரணத்தைக் கண்டுபிடித்து அச்செயல்கள் சாதாரணமான அனுபவத்தால் அல்லது அறிவினால் ஏற்பட்ட நடத்தை என்று கூறுகிறார்கள்.
கும்மென்று இருண்டு கிடக்கும் குகையினுள்ளே வெளவால் தாராளமாகப் பறந்து வட்டமிடுகிறது. நீட்டிக்கொண்டிருக்கும் கரடுமுரடான கற்களின் மேலே அது மோதிக்கொள்வதே இல்லை. ஒருவேளை இருட்டிலே அதற்குக் கண் நன்றாகத் தெரியுமோ என்று சந்தேகித்து அதன் கண்களே மூடிக் கட்டிப் பறக்கவிட்டார்கள். அப்பொழுதும் அது எதன் மேலும் மோதிக்கொள்ளாமல் இருண்ட குகைக்குள்ளே தாராளமாக வட்டமிட்டது! இதை இயல்பூக்கச் செயல் என்று முதலில் நம்பிக்கொண்டிருந்தார்கள். 1940-ஆம் ஆண்டிலே டொனல்டு கிரிப்பின், ராபர்ட் கலம்பாஸ் என்ற இரண்டு உயிரியலறிஞர்கள் இந்த அற்புதச் செயலின் உண்மையைக் கண்டுபிடித்தார்கள். கண்களை மூடிவிட்டாலும் இருட்டிறையிலே வெளவால் எதன் மேலும் மோதிக்கொள்ளாமல் பறக்கிறது. ஆனால் அதன் காதுகளே முடிவிட்டால் கண்கள் திறந்திருந்தாலும் அது இருட்டில் பறக்கும்போது பல இடங்களில் மோதிக்கொள்கிறது! இந்த ஆராய்ச்சியிலிருந்து ஓர் உண்மை தெரியவந்தது. வெளவாலுக்கு நுட்பமான ஒலியைக் கேட்டு அறிந்துகொள்ளும் ஆற்றல் உண்டு. அதனால் அது பறக்கும்போது உண்டாகும் நுட்ப ஒலிகள் எதிரிலுள்ள தடைகளின் மேல் பட்டுத் திரும்பிப் பிரதிபலித்து வரும்போது அவற்றைச் சற்றுத் தொலைவிலேயே உணர்ந்து தடைகளே விட்டு விலகித் தப்பிச் செல்கின்றது. இங்கே இயல்பூக்கச் செயல் ஒன்றும் இல்லை என்று அவர்கள் கண்டார்கள்.
ஆனல் எல்லா இயல்பூக்கங்களையும் இவ்வாறு ஆராய்ந்து அவற்றிற்குக் காரணங் கூறுவது கடினம். அத்தனை பெரிய ஆராய்ச்சியிலே நாம் ஈடுபட வேண்டியதுமில்லை. இயல்பூக்கங்களைப் பற்றிப் பொதுவாகத் தெரிந்துகொள்வதோடு அவை மனிதனுடைய செயல்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் தெரிந்து கொண்டால் போதும்.
இயல்பூக்கம் என்பது முன் அனுபவம் இல்லாமல் இயல்பாகவே செய்யப்படும் காரியமாகும். கன்று பாலூட்ட முன்பே கற்றுக்கொள்ளவில்லை. இயல்பூக்கமாகக் கன்று அதைச் செய்கிறது. யாரும் கற்றுக் கொடுக்காமல் குளவி கூடு கட்டி அதில் புழுவை வைத்து முட்டையிடுகின்றது. இவ்வாறு ஒரு பிராணியின் நலத்திற்கும், அதன் இனத்தை அழிந்து போகாமல் பாதுகாப்பதற்கும் இயல்பூக்கச் செயல் உதவுகிறது. ஒரே இனத்தைச் சேர்ந்த எல்லாப் பிராணிகளும் ஒரே வகையான இயல்பூக்கச் செயல்களைக் கொண்டிருக்கின்றன. தூக்கணங்குருவிகளில் ஒன்று கூடு கட்டுவது போலவே மற்றத் தூக்கணங்குருவிகளும் கூடு கட்டுகின்றன. இயல்பூக்கத்தின் மற்றொரு தன்மை என்னவென்றால் அனுபவத்தால் பழக்கத்திற்கு வரும் செயல்களுக்கு அது முதலில் தூண்டுகோலாக இருக்கிறது.
விலங்குகள் இயல்பூக்க நிலையிலே பல செயல்களைச் செய்கின்றன. மனிதனும் குழந்தைப் பருவத்தில் அவ்வாறே செய்கிறான். ஆனால் அவன் முதிர்ச்சியடைய அடைய அறிவாலும் அனுபவத்தாலும் இயல்பூக்கச் செயல்கள் மாறுதலடைகின்றன. மனிதனுடைய சிந்தனையால் மாறுதலடையாத இயல்பூக்கச் செயல்களும் குறைந்துவிடும்.
கலவியூக்கம் மிக வலிமையுடையதுதான். ஆனால் மனிதன் விலங்கு போல நடந்துகொள்ளலாமா? அந்த இயல்பூக்கம் பண்புள்ள மனிதனிடத்தே தொழிற்படும் போது அதிலே ஒரு கட்டுப்பாடு வளர்ந்துள்ளது. அதை அவன் மீறினல் சமூகம் அவனைப் போற்றாது.
இயல்பூக்கங்களை ஒடுக்கி அழிக்க முயல்வது வெற்றி பெறாது. ஆனால் விரும்பத்தகாத இயல்பூக்கங்களை வேறு நல்ல துறைகளில் செல்லும்படியாக மாற்றி விடலாம்.
எப்படி மாற்றுவது? அது முடியுமா? முடியும். போரிடும் இயல்பூக்கம் மனித இனத்துக்கு உண்டு என்பார்கள். அந்த இயல்பூக்கத்தால் மிகுதியாக உந்தப்பட்டு ஒருவன் தனது தோழர்களுடனேயே சண்டையிடலாம். அதை மாற்றி அவன் தன் நாட்டிற்காகப் போரிடும்படி செய்யலாம். அல்லது மனித இனத்தைப் பீடிக்கும் கொசு போன்றவற்றை ஒழிக்க அவன் முன்வரலாம்.
இவ்வாறு இயல்பூக்கத்தை மாற்றிவிடுவதற்கு உயர்மடைமாற்றம் (Sublimation) என்று பெயர்.
இயல்பூக்கத்தோடு தொடர்புடைய உள்ளக் கிளர்ச்சிகளைப் பற்றி அடுத்த பகுதியில் விவரிக்கும் போது இந்த உயர் மடைமாற்றத்தைப் பற்றி மேலும் ஆராய்வோம்.

Comments

Most Popular

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி...

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...

நாகம்மாள்: முன்னுரை

முதல் முதலில் ஸ்ரீ ஷண்முகசுந்தரத்தின் சிறுகதைகளைப் படித்தபொழுது அவற்றில் தென்பட்ட கிராமாந்தர வாழ்க்கை அனுபவத்தைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். அவ்வளவு தேர்ச்சி பெற்றவர் குடியான வாழ்க்கையையே ஆதாரமாகக் கொண்ட நவீனம் ஒன்றை எழுதலாம் என்ற கருத்தை அவருக்குத் தெரிவித்தேன். இரண்டே மாதத்தில் நாகம்மாள் என்ற சிறு நாவலை எழுதி முடித்துக்கொண்டு வந்து காட்டினார். பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் நவீனம் எழுதவேண்டுமென்று வருஷத்திட்டங்கள் போட்டுக்கொண்டு யோசனையளவில் நின்றுகொண்டிருக்கும் பொழுது இளைஞர் ஒருவர் திடீரென்று ஒன்றை எழுதி முடித்துவிட்டதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். நான் எதிர்பார்த்தவாறே அதில் கிராம வாழ்க்கை வெகு நுட்பமாகவும் அனுதாபத்துடனும் சித்தரிக்கப்பட்டிருந்தது. நாகம்மாள் நம் கண்முன் நிற்கிறாள் போல இருக்கிறது. ஒய்யாரமும் தனிப்போக்கும் கொண்ட அவளிடம் நற்குணங்களும் நிரம்பி இருக்கின்றன. சின்னப்பன் , ராமாயி , கெட்டியப்பன் எல்லோரும் தத்ரூபமாக இருக்கிறார்கள். நாராயண முதலி முதல் சின்னப்பன் மாமியார் வரை எல்லோரும் உயிர்பெற்று உலவுகிறார்கள். கிராமப் புனருத்தாரணம் என்கிறோம். கிராமக் கைத்தொழில்கள் மறுப...