சமீபத்தில் நீங்கள் படித்த புத்தகங்களில், உங்களை ஒருமுறைக்கு இருமுறை படிக்கத் தூண்டி,
பக்கத்துக்குப் பக்கம் குறித்து
வைத்து, அதே நினைவில்
நெகிழவைத்த புத்தகம் எது என்று யாராவது என்னைக் கேட்டால், தயக்கமே இல்லாமல் நான் குறிப்பிடும்
புத்தகம் எல். எஸ். கரையாளர் எழுதிய 'திருச்சி ஜெயில்' என்பதாகத்தான்
இருக்கும். 1941-இல் நவயுக பிரசுராலயத்தால்
வெளியிடப்பட்டு, 80
ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மறுபதிப்பு கண்டிருக்கிறது அந்தப் புத்தகம்.
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பள்ளிக்கூட நாள்களில் நிறைய கேள்விப்பட்ட
பெயர் எல். சட்டநாத கரையாளர். சட்டம் படித்த அந்த செங்கோட்டைக்காரர், தனது 27-ஆவது வயதில் கோவில்பட்டியில் காங்கிரஸ் சார்பில்
போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும்,
துணைத் தலைவராகவும் இருந்தவர். தனது 58-ஆவது வயதில் காலமான சட்டநாத கரையாளர்,
தமிழகத்தில் குறிப்பிடத்தக்க
சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் ஒருவர்.
காந்தியடிகள் மீது அவருக்கு இருந்தது மட்டற்ற பக்தி. 1940-ஆம் ஆண்டு சங்கரன்கோவிலில் தனிநபர்
சத்தியாகிரகம் செய்து சிறைதண்டனை பெற்றார். தென்காசி தாலுகா கமிட்டித் தலைவரான
கரையாளர் சங்கரன்கோவிலில் சத்தியாகிரகம் செய்ததற்கு என்ன காரணம் தெரியுமா? சட்டப்பேரவை உறுப்பினராக டி. எஸ். சொக்கலிங்கம் (தினமணி முன்னாள்
ஆசிரியர்) தென்காசியில் சத்தியாகிரகம் செய்யத் தீர்மானித்தார் என்பதுதான்.
'1940 டிஸம்பர் மாதம் 4-ஆம் தேதி நான் கைது செய்யப்பட்டேன். 1941, மே மாதம் 23-ஆம் தேதி விடுதலையடைந்தேன். இதற்கிடையே நான்
கண்டதும் கேட்டதும், நான்
அனுபவித்த சுகமும் கஷ்டமும்தான் இந்நூலாக வெளிவந்திருக்கிறது” - இந்தளவுதான் அவர் புத்தகத்துக்கு
எழுதியிருக்கும் முன்னுரை.
அணிந்துரை தந்திருப்பது யார் தெரியுமா? சென்னை ராஜதானியின் பிரதமர், மத்திய-மாநில அமைச்சர், ஆளுநர் ஆகிய பதவிகளை வகித்த ப. சுப்பராயன்.
சிரிப்பும், சுவாரசியமுமாக
சிறைச்சாலை அனுபவங்களைத் தேர்ந்த எழுத்தாளர் போல சட்டநாதகரையாளர் எழுதியிருப்பதை
மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியதில் வியப்பென்ன இருக்கிறது? அவருடன் வேலூர், திருச்சி சிறைகளில் கழித்த 245 தியாகிகள் குறித்த குறிப்பு அல்லது சம்பவம் இந்தச்
சிறிய புத்தகத்தில் இருக்கிறது. ராஜாஜி, டி. எஸ். சொக்கலிங்கம், இந்தியன்
எக்ஸ்பிரஸ் ஆசிரியர் கே. சந்தானம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்று
அவருடன் சிறையில் இருந்த ஆளுமைகள் குறித்த பதிவுகளைப் படித்தால்தான் ருசிக்கும்.
சொல்லி விளக்கமுடியாது.
ஜாதி, மத பேதமின்றி,
மொழி துவேஷமின்றி விடுதலை வேள்வியில்
ஈடுபட்ட தியாகிகள் உண்மையான சமத்துவ உணர்வுடன் இருந்தார்கள் என்பதை சட்டநாத
கரையாளரின் ‘ஜெயில் டைரி’ படம்பிடித்துக் காட்டுகிறது. படிக்கத் தவறாதீர்கள் என்று
நான் பரிந்துரைக்கும் புத்தகம் இது!
- கலாரசிகன்
(நன்றி: தினமணி, 10-07-2022)
'திருச்சி ஜெயில்' நூல் வாங்க
Azhisi ((12% off + Free Delivery)
CommonFolks (5% off)
Panuval (5% off)
BooksPage
DialForBooks
Comments
Post a Comment