Skip to main content

என் அத்தை | டி. கே. சி.

 

ஸ்ரீமான் வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் என்றால் சென்னையிலே ஒரு தத்துவம். மேல்நாட்டு இலக்கியமோ, கலையோ, நம்முடைய இலக்கியமோ கலையோ அனுபவிக்கப் பெறவேண்டுமானால், ஆதரவு பெறவேண்டுமானால், ‘லக்ஷ்மி விலாசம்’ தான் இடம். பிரபலமான ஹைக்கோர்ட் வக்கீல்தான். புகழ் படைத்த ஹைகோர்ட் ஜட்ஜ்தான். ஆனால், அந்த வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்காரைப் பற்றி இப்போது பேச வரவில்லை. மேல் நாட்டுக்கலை விற்பன்னர்களும், வடமொழிப் புலவர்களும், தமிழ்மொழிப் புலவர்களும் சதா சுற்றப்பட ஒழுகும் ஸ்ரீனிவாச ஐயங்காரைப் பற்றித்தான் பேச்சு.

லக்ஷ்மி விலாசத்துத் தோட்டத்துக்குள் போவோமானால், குண்டஞ்சி வேஷ்டிகளையும் காஷ்மீர் சால்வைகளையும் போர்த்துக்கொண்டு, வீட்டுக்குள் நுழைவோரும், வராந்தாவில் உலாவுவோரும், மரத்து நிழலில் நிற்போருமான மனுஷர்களைப் பார்க்கலாம். விசாரித்தால், அவர்கள் சாஸ்திரிகள், வித்துவான்கள், பண்டிதர்கள் என்று தெரியவரும். அவர்களுள் ஒருவர் பாலசரஸ்வதி கிருஷ்ணமாச்சாரியார் என்ற தமிழ்ப் புலவர்.

பாலசரஸ்வதி கிருஷ்ணமாச்சாரியார் தமிழ் இலக்கியங்களை அனுபவித்து அறிந்த புலவர். முக்கியமாக, கம்பராமாயணத்தைக் கவி இதயத்தோடு ஒட்டி வாசித்து அனுபவித்தவர். அவர் கம்பருடைய கவிகளைப் பாடி விளக்கிக் காட்டும்போது கேட்போர் எல்லோரும் கவிகளின் உள்ளக்கிடையான பாவத்திலேயே அழுந்திப் பரவசமாவார்கள். அவர் மூன்று வருஷகாலம் ஸ்ரீமான் வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்காருடன் இணைபிரியாமல் இருந்து வந்தார் என்று சொல்லக்கூடிய விதமாக சதா உடன் வசித்து வந்தார். வீட்டில் எப்போதும் உடன் வசித்தார் என்பது சொல்லவேண்டியதில்லை. கடற்கரைக்குச் சவாரி போனால், மோட்டார் வண்டியிலே பக்கத்தில்தான் இருப்பு. பெரிய பெரிய கேஸுகளுக்காகத் தஞ்சாவூருக்கோ, மங்களூருக்கோ, திருநெல்வேலிக்கோ போகிறதாயிருந்தால், பாலசரஸ்வதி கிருஷ்ணமாச்சாரியும் கூடவே போவார். கேஸ் சம்பந்தமாக அல்லவே அல்ல; அலங்காரத்துக்கும் அல்ல; கம்பராமாயணத்தின் ரஸத்தை அனுபவித்து அளவளாவிக்கொண்டிருக்கவே.

அவர்கள் இருவரையும் கொண்டு பண்டைக்காலத்து வள்ளல்களுக்கும் அவர்களுடைய புலவர்களுக்கும் இடையே இருந்த நட்பு எத்தகையது என்று அறிந்துகொள்வது எளிது. ஸ்ரீமான் ஐயங்காருக்குப் புலவரிடத்தில் அதிகம் பிரியமா, புலவருக்கு ஐயங்காரிடம் பிரியத்தில் அதிகமா என்று அளவிட்டுச் சொல்ல முடியாது. ஆனாலும், உண்மையை வெளியாக விளக்கக்கூடிய திறம் வாய்ந்தவர் புலவர் என்று சொல்லிவிடலாம்.

ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீமான் ஐயங்கார் வீட்டுக்கு நான்போய்ப் பல விஷயங்களைப் பற்றி அளவளாவிக் கொண்டிருக்க நேர்ந்தது. கலைகளைப் பற்றியும் கவியின் தத்துவத்தைப் பற்றியும் பேச நேர்ந்தது. கடைசியாக ஆண்டாள் பாசுரங்களைப் பற்றிப் பேச்சு வந்தது.

திருமங்கை ஆழ்வாரும் நம்மாழ்வாரும் காதல்த் துறையில் எத்தனையோ பாசுரங்கள் பாடியிருக்கிறார்கள். ஆனால் அவற்றில்க் காதலின் உண்மையான தத்துவம் அவ்வளவாகக் காண்கிறோம் என்று சொல்ல முடியாது. ஆண்டாள் பாசுரத்தில்தான் உண்மையான காதல் தத்துவம் வெளியாகிறது; ஏன், ரொம்பவும் துலாம்பரமாக வெளியாகிறது. கண்ணபிரான் வாயில்வைத்து ஊதிய வெண்சங்கை நோக்கி, ‘திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ? . . . சொல்லாழி வெண்சங்கே!’ என்று கோபிகை ஏக்கத்தோடு சொல்லும்போது, காதல் தத்துவம் எவ்வளவு ஆழத்தில் கிடப்பது, எவ்வளவு வேகத்தோடு கூடியது என்பது தெளிவாகிறது. இந்த விஷயத்தைப் பெண்பாலாகிய நாச்சியார் பாடினாள் என்று சொல்லுவது மரபு. இந்த மரபைக் கொஞ்சம் மறந்துவிடுவோம்.

ஆடவராகிய பெரியாழ்வார் தம்மைத் தாயாக வைத்துக் கொண்டு, கண்ணனைத் தன் குழந்தையாகப் பாவித்து அருமையாகப் பிள்ளைக் கவிகளைப்பாடியிருக்கிறார். இதே விதமாக அவர் தம்மைக் கோபிகையாக வைத்துக்கொண்டு கிருஷ்ணபகவானைக் காதலனாகப் பாவித்து வெண்சங்கை நோக்கி இந்தப் பாசுரங்களைப் பாடினார் என்று சொல்லுவோமானால், மனோதத்துவம் ஓடி ஆடிப் பறப்பதற்கு எளிதாயிருக்கும். அதுவே உயர்ந்த சிருஷ்டி தத்துவம் ஆகும்; ஸ்தூல தத்துவத்தை விட்டு உண்மையான உணர்ச்சி உலகத்துக்குப் போவதாகும்; காதல்த் தத்துவத்தையே கையினால்ச் சுட்டிக் காட்டியதாகும்.

இவ்விதமாக, கவி என்னும் விஷயத்தைப் பற்றிச் சில வார்த்தைகள் சொல்லி நிறுத்தினேன். ஸ்ரீமான் ஐயங்கார் நான் சொன்னதை ஆமோதித்துப் பின்வருமாறு பேசினார்.

“நானும் என் தம்பி தங்கையரும் குழந்தைப் பருவமாய் இருந்தபோதே எங்கள் தாய் தந்தையர் காலஞ்சென்று விட்டார்கள். எங்களை வளர்த்து அருமை பாராட்டியதெல்லாம் எங்கள் அத்தைதான். அத்தைக்கு வேறு குழந்தை கிடையாது. நாங்கள்தான் எல்லாமாய் இருந்தோம். அவள் எங்களிடம் வைத்திருந்த ஆசையும் அன்பும் இன்னதென்று சொல்ல முடியாது. ரொம்ப முதிர்ந்த வயசு வரையில் இருந்து காலமானாள். வயசு அதிகம் ஆகித் தளர்ந்துபோய் இருந்ததால், அவள் இறந்த அன்றைக்கு எங்களுக்குத் துயரம் அவ்வளவாக உண்டாய்விடவில்லை. இறந்து பதின்மூன்று நாள்களும் முறைப்படி அபரக்கிரியைகள் நடந்தன.

“கிரியைகள் முடிவாகும் பதின்மூன்றாம் நாள் சாயங்காலம் வைதிக முறைப்படி பிரபந்தப் பாடல்கள் பாடினார்கள். பிறகு, அங்கு வந்திருந்த சமஸ்கிருத பண்டிதர்கள் தாம் பாடியிருந்த சரமசுலோகங்களை வாசித்தார்கள். அவை எல்லாம் முடிந்தான பிறகு, பாலசரஸ்வதி கிருஷ்ணமாச்சாரியார் சபைக்கு வந்து, தாம் பாடிவந்த ‘என் அத்தை’ என்ற தமிழ்ப் பாடல்களைப் பாடினார். அவ்வளவுதான். எல்லோருக்கும், உட்கார்ந்திருந்தவர் நின்றவர் ஆண் பெண் எல்லோருக்குமே, கண்ணிலிருந்து கண்ணீர் துளிக்க ஆரம்பித்துவிட்டது. அத்தையம்மாள் இறந்துபோன அந்தத் தருணத்தில் கண்ணீர் வராத எங்களுக்குப் பதின்மூன்று நாள் கழிந்த பிறகு மனங் கலங்கிக் கண்ணீர் பெருகி விட்டது. அத்தை முறை கொண்டாடாதவர்களே கண்ணீர் விட்டார்கள் என்றால், அத்தை முறை கொண்டாடும் உரிமையுடைய எங்கள் பாடு இன்னதென்று சொல்ல வேண்டியதில்லைதானே!”

இவ்வாறு ஸ்ரீமான் ஐயங்கார் சொல்லி, கண்ணாடிச் சட்டம் போட்டு வைத்திருந்த பாடலை உள் வீட்டிலிருந்து கொண்டுவரச் செய்து என்னிடம் கொடுத்தார். அதுதான் கீழே சொல்லப்போகும் கவி.

உண்மையான கவி ஒன்று பாடப்படுமானால் கவிஞன் செய்த புண்ணியம் என்று மாத்திரம் சொல்லக்கூடாது; அந்தப் பாஷையும் பாஷைக்குரிய மக்களுமே சேர்ந்து செய்த புண்ணியம் என்று சொல்லவேண்டும். பாலசரஸ்வதி கிருஷ்ணமாச்சாரியாருக்குத் தமிழ்ப் பாஷையே வந்து பாடும்படித் தூண்டி உதவியும் புரிந்தது என்று சொல்லத் தோன்றுகிறது. அவ்வளவு எளிமை, அவ்வளவு பாவம், அவ்வளவு சொல் வாய்ப்பு.

என் அத்தை

“பித்தை தனைக்கோதிப்

   பின்னிப் பெருமணிப்பூங்

கொத்தை முடித்துக்

   குலவத் திலகம்இட்டு

தத்தை மொழிபயிற்றித்

   தாலாட்டிச் சீராட்டி

அத்தை தனைப்போல

   ஆதரிப்பார் ஆரேயோ!

(பித்தை – தலைமுடி)

முத்தைப் பழித்தொளிரும்

   மூரல் முதிரைவகை

மத்தைக் கொடுகடைய

   வந்த நறுவெண்ணெய்

சத்தைத் தரும்நெய்

   தயிர்பால் இவற்றுடனே

அத்தை தனைப்போல்

   அமுதளிப்பார் ஆரேயோ!

(மூரல் - அன்னம்; முதிரை – பருப்பு.)

முத்தை மணியை

   முழுக்கனகச் சங்கிலியின்

கொத்தை அணிந்து

   குழை அணிந்து பட்டுடுத்திப்

புத்தைத் தடுக்கும்

   புதல்வன்இவன் என்றெண்ணி

அத்தை தனைப்போல்

   அலங்கரிப்பார் ஆரேயோ”

(புத்து - புத்திரன் இல்லாதவர் போகும் நரகம்.)

ஆதரித்தாள், அமுதளித்தாள், அலங்கரித்தாள். எப்படிப் புத்திமதி கூறினாள் என்று பார்ப்போம்:

“இத்தைச் செய்யாதே

   இதனை இயம்பாதே

சொத்தைப் பரிபாலி

   சோம்பித் திரியாதே

வித்தை விரும்பென்று

   நாளும் விதம்விதமாய்

அத்தை தனைப்போல்

   அறிவுறுப்பார் ஆரேயோ!”

ஆசீர்வதிக்கும்போது ஏற்படுகிற ஆத்திரந்தான் என்ன?

வித்தை தலைஎடுக்க

   வேண்டாதார் கண்முன்னே

மெத்தைப் பெருவீடு

   கட்டி விபவமுடன்

சொத்தைப் பெருக்கிச்

   சுகமாக வாழ்வைஎன

அத்தை தனைப்போல

   ஆசிசொல்வார் ஆரேயோ!


வித்தை அளித்து

   விபவம்மிக உண்டாக்கி

தத்தை மொழியாள்

   தனிமணமும் செய்வித்து;”

இந்த இடத்திலே ஆர்வம் துள்ளிக் குதித்துப் பொங்கி வருகிற அதிசயத்தைப் பார்க்க வேண்டும்:

“எத்தைத் தருவ(து)

   எனஇன்றி, எல்லாமும்

அத்தை தனைப்போல்

   அருள்செய்வார் ஆரேயோ!”

அடுத்த கவியில், அதாவது கடைசிக் கவிக்கு முந்தின கவியில், எதுகை மாறுகிறது. மாறுகிறதனால் உண்டான பயனும் தெரியவரும்:

“என்னத்தைக் கண்டாய்

   இளம்பிள்ளை நீயறியாய்

சொன்னத்தைக் கேளாய்!”

இந்தக் கோபமெல்லாம் எப்படி இளகி விடுகிறது, அடுத்த வரும் வார்த்தையில்!

    “துரையே! எனக்கொஞ்சிக்

கன்னத்தை முத்தம்இட்டு

   கட்டி அணைத்(து) எனக்கு

என்னத்தை போல

   இதம்சொல்வார் ஆரேயோ!”

இந்தக் கவி கடாக்ஷத்தினால் வந்தது, புலவருக்குச் சம்பந்தம் இல்லை என்றுகூடச் சொல்லலாம். இனி, கடைசிக் கவியில், உற்றாரை எல்லாம் விலக்கிவிட்டு, இதயத்தில் தனியிடம் அத்தைக்கு அமைக்கிற அழகு தனியான அழகு;

முத்தைப் பழிக்கும்

   முளைமுறுவல்க் காதலியும்

பித்தைத் தரும்செல்வப்

   பிள்ளைகளும் பின்னவனும்

தத்தைக்(கு) இணையாகத்

   தங்கைகளும் தாம்இருக்க,

அத்தை தனைப்போல்

   அரியவர்தாம் ஆரேயோ!”

(முறுவல் - பல். பித்தை - மயக்கத்தை.)

இந்தப் பாடல்களைக் கேட்டால் யாருக்குத்தான் மனங் கலங்காது, கண்கலங்காது? அத்தையின் மனதில்த் தோன்றிய ஆசைகளையும் கிளர்ச்சிகளையும் மலையிலிருந்து விழும் அருவிபோல் எவ்வளவு அழகாகத் துள்ளித் துள்ளி இறங்கச் செய்கிறார் புலவர்! ஸ்ரீமான் ஐயங்காரின் இதயத்துக்குள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து விடுகிறார். பாடல்களில் உள்ள எதுகைகள் எல்லாம் ‘அத்தை! அத்தை! என் அத்தை!’ என்று ஏங்குகின்றன, கதறுகின்றன. நம்முடைய இதயங்கள் போலவே தமிழ்ச் சொற்களும் அத்தையை நோக்கிச் செல்கின்றன. ஆயிரக்கணக்கான வருஷங்களாகப் பழுத்தது தமிழ் என்பதைச் சுவைத்தே உணர்ந்து விடுகிறோம்.

உண்மையை எல்லாம் குறை வைக்காமல் சொல்லிவிடக் கவிஞருக்குத்தான் உரிமை. மருமகனாகிய ஸ்ரீமான் ஐயங்காருக்கு இல்லையே!

“வேண்டாதார் கண்முன்னே

மெத்தைப் பெருவீடு

கட்டி

என்று சொல்லிவிடக் கவிஞருக்கு உரிமை உண்டு. “தத்தை மொழியாள்”, “முத்தைப் பழிக்கும் முளைமுறுவல்க் காதலி”, “பித்தைத் தரும் செல்வப் பிள்ளைகள்”, “தத்தைக் கிணையான தங்கைகள்” - இவர்களைப்பற்றிய உண்மையான இதயச் சாயலைப் பல வர்ணப் படங்களோடு பிரகாசித்து விளங்கச் செய்கிறார். என்ன எளிமை, என்ன இன்னிசை, என்ன ஆர்வம்! இம்மூன்றும் சேர்ந்தால்த்தானே கவி? தொன்மை தழுவிய கவி ஒன்று தமிழருக்குக் கிடைத்தது. பெரிய பாக்கியம்.

(அக்டோபர் 1937 - இதய ஒலி’ நூலிலிருந்து)

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி  https://amzn.to/3eOnx2r ஆனந்த்  https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும

பாண்டியர் நிறுவிய தமிழ்ச் சங்கம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்க காலத்திலே, மதுரை மாநகரத்திலே பாண்டிய மன்னர் மூன்று தமிழ்ச் சங்கங்களை நிறுவித் தமிழை ஆராய்ந்தார்கள் என்று இறையனார் அகப்பொருள் உரை முதலிய நூல்கள் கூறுகின்றன. அச்சங்கங்களில் இயல், இசை, நாடகம், என்னும் முத்தமிழ்கள் ஆராயப்பட்டன. பத்துப் பாட்டு, எட்டுத் தொகை முதலிய செய்யுள்கள் கடைச் சங்கப் புலவர்களால் பாடப்பட்டன. கடைச் சங்கம் கி.பி. 300க்கு முன்பு இருந்தது என்று சரித்திரம் கூறுகிறது. ஆனால், இக்காலத்தில் சிலர், தமிழ் வரலாற்றினையும், நாட்டு வரலாற்றினையும் நேர்மையாகவும் சரியாகவும் ஆராய்ந்து பாராமல், தமிழ்ச் சங்கம் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது என்றும், அந்தத் தமிழ்ச் சங்கத்தில் தொல்காப்பியம் தோன்றியது என்றும் கூறுகின்றனர்; எழுதுகின்றனர். இவ்வாறு பிழைபட்ட ஆராய்ச்சியைக் கூறுகிறவர்களில் முதன்மை யானவர் அண்மையில் காலஞ்சென்ற திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள். வையாபுரிப் பிள்ளையவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சித் துறைத் தலைவராக இருந்தபடியால், அவர் கூறுவன எல்லாம் உண்மை என்று பாமர மக்கள் நினைக்கிறார்கள். பாமர மக்கள் மட்டும் அல்லாமல் படித்தவர்கள் கூட, ஆராய்ந்து பார்த்