காந்திஜி எழுதிய கடிதமாவது:
என் அன்பார்ந்த மகனே,
மாதம் ஒரு தடவை கடிதம் எழுதவும், ஒரு கடிதம் பெறவும் எனக்கு உரிமை உண்டு. இந்தக் கடிதம் நான் யாருக்கு எழுதுவது என்பது பற்றி ஒரு கேள்வி பிறக்கிறது. ஸ்ரீ ரிட்சுக்கா (‘இந்தியன் ஒப்பினியனின்’ ஆசிரியர்), ஸ்ரீ போலக்குக்கா, உனக்கா என்று நினைத்து உன்னையே தேர்ந்தேன். ஏனென்றால், நீயே என் சிந்தனையில் எப்போதும் இருக்கிறாய். என்னைப்பற்றி எதையும் சொல்லிக்கொள்ள நான் அனுமதிக்கப்படவில்லை. நான் நிம்மதியாகத்தான் இருக்கிறேன். என்னைப்பற்றிக் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை.
இப்போது உன் அம்மாவுக்கு உடம்பு பூரண குணமென்று நம்புகிறேன். உன்னிடமிருந்து பல கடிதங்கள் வந்துள்ளன என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவை என்னிடம் சேர்ப்பிக்கப்படவில்லை. சிறை டெபுடி கவர்னர் மட்டும் நல்லவர். அவள் தேறி வருகிறாள் என்று என்னிடம் சொன்னார். சௌக்கியமாக நடமாடுகிறாளா? அவளும் நீங்களும் காலை வேளையில் தொடர்ந்து பாலும் சவ்வரிசியும் உட்கொள்கிறீர்களென நம்புகிறேன்.
சாஞ்சி எப்படி இருக்கிறாள்? (ஹீராலாலின் மனைவியான குலாபின் செல்லப் பெயர்) நான் அன்றாடம் அவளைப்பற்றி நினைக்காமல் இருப்பதில்லை என்று அவளிடம் சொல்லு. அவள் உடலில் கண்டிருந்த சிரங்குகள் ஆறியிருக்கும், அவளும் ராமியும் உடல் நலத்துடன் இருப்பார்கள் என நினைக்கிறேன்.
ராமதாஸ், தேவதாஸ் சௌக்கியமென நினைக்கிறேன். பாடம் சரிவரப் படிக்கிறீர்களா? யாருக்கும் உபத்திரவம் தரவில்லையே? ராமதாஸுக்கு இருமல் குணமாகிவிட்டதா?
வில்லி உங்களிடம் தங்கியிருந்தபோது சரிவர உபசரித்தீர்களா? கோர்ட்டஸ் விட்டுச்சென்ற உணவுப் பொருள்கள் ஏதாவது மிகுதி இருந்தால் அவரிடமே அதைத் திருப்பித் தந்துவிடவேண்டுமென்பது என் விருப்பம்.
இப்போது உன்னைப்பற்றி. நீ எப்படி இருக்கிறாய்? நான் உன்மீது சுமத்தியுள்ள குடும்ப பாரத்தை மகிழ்ச்சியுடனேயே சமாளித்து வருகிறாய் என்று நினைக்கிறேன். நான் உனக்குச் சொல்லியதைவிட நேர் வழி காட்ட ஒருத்தர் உன்னிடம் இருக்கவேண்டும் என்பதை உணர்கிறேன். உன் படிப்பு பற்றிச் சரியான அக்கறை எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று சில சமயம் நீ குறைப்பட்டிருக்கக்கூடும். இப்போது சிறையில் நான் எத்தனையோ நூல்களைப் படித்து வருகிறேன். எமர்ஸன், ரஸ்கின், மாஜினி இவர்களுடைய நூல்களைப் படித்துக்கொண்டு வருகிறேன். உபநிஷத்துக்களையும் படிக்கிறேன். வெறும் எழுத்து அறிவு மட்டும் கல்வியாகிவிடாது. நல்நடத்தையை விருத்தி செய்துகொள்வதுதான் உண்மையான கல்வி. கடமை பற்றிய அறிவென்பதே இதன் பொருள். நம் குஜராத்தி மொழியிலும் (கேளவணி), இந்தச் சொல்லுக்கு பயிற்சி என்பது சரியான அர்த்தம். என் மனசுக்கு இது உண்மையெனப் படுகிறது. கிடைக்கக்கூடிய நல்ல கல்விப் பயிற்சியே நீ பெற்று வருகிறாய். அன்னைக்குப் பணி செய்வது, அவள் கோபித்துக்கொண்டாலும் இன்முகத்துடன் சகித்துக் கொள்வது, சாஞ்சியைக் கவனித்துக்கொள்வது, அவளுடைய தேவைகளை முன்னதாக அறிந்து, ஹீராலாலை விட்டுப் பிரிந்திருக்கும் அவள் துயர் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுவது, ராமதாஸ், தேவதாஸ் இவர்களைக் கவனிக்கும் பொறுப்பை அவளுக்கு விடாமல் நீயே கவனித்துக்கொள்வது, இவற்றைவிட அரிய வாய்ப்புக்கள் வேறு என்ன வேண்டும்? இந்தக் கடமைகளைச் சரிவரச் செய்தாலே உண்மையான கல்வியைப் பாதிக்குமேல் அறிந்தவன் ஆவாய்.
உபநிஷத்துக்கு நாதுராம்ஜி வரைந்துள்ள முடிவுரையில் ஒரு பகுதி என்னை வெகுவாய்க் கவர்ந்துவிட்டது. பிரம்மசரிய ஆசிரமம் அதாவது வாழ்க்கையின் முதல் நிலை, கடைசி நிலையான சந்நியாசத்தைப் போலவே இருக்கிறது என்கிறார். இது முற்றிலும் உண்மை. வேடிக்கை விளையாட்டெல்லாம் ஒன்றும் அறியாத பன்னிரண்டு வயதுக்குட்பட்ட வாலிபப் பருவத்தில்தான். புத்தி தெரியும் வயது வந்தவுடன் கடமை, பொறுப்பெல்லாம் உணர்வதற்கான வழி போதிக்கப்படுகிறது. இந்தப் பிராயம் தொடங்கி மனத்திலும் செயலிலும் புலனடக்கம் உண்மையை அறிவதற்கு ஆவல், பிற உயிர்க்குத் தீங்கு நினையாமை இவற்றைப் பழக்கத்தில் கொண்டுவர வேண்டும். இந்த எண்ணமோ, பயிற்சியோ அத்தகையவனுக்குச் சள்ளையாக இருக்கவே கூடாது. இயல்பாகவே இருத்தல் வேண்டும். இவை அவன் மகிழ்வதற்குரியனவாக இருக்கவேண்டும். ராஜ்கோட்டிலிருந்த பல பிள்ளைகளைப் பற்றிய நினைவு வருகிறது. இப்போது நீ இருப்பதைவிட இன்னும் இளமையான வயது அப்பொழுது எனக்கு. தந்தைக்குப் பணிவிடை செய்வதே எனக்கு இன்பம் தரும் விஷயம். பன்னிரண்டு வயதுக்கு மேல் வேடிக்கை, விளையாட்டு எதையும் நான் அறியேன். என் வரைக்கும் சொல்லவேன்: நீ உன் கல்விப் பயிற்சியை இவ்வழிகளில் முடித்துக்கொள்வாயானால் நம்பு - இந்த உலகத்தில் எந்த இடத்திற்குச் சென்றாலும் உனக்கு ஒரு குறைவும் வராது. ஆத்ம தத்துவத்தை அறிவதற்கும், உன்னையே நீ தெரிந்து கொள்வதற்கும், கடவுளைப் பற்றிய உண்மையை ஆராய்வதற்கும் வழி ஏற்படும். இதனால், எழுதப்படிக்கவேண்டியதே இல்லை என்பது அர்த்தமல்ல. அதைத்தான் நீ செய்துகொண்டு இருக்கிறாயே. நீ குறைப்பட்டு வருந்துவதே கூடாது. உனக்கு வேண்டிய பொழுது இருக்கிறது, இதையும் பூர்த்தி செய்துகொள்ள. நான் சொல்லுவது போன்ற நல்லுரைகள் உனக்கு மிக அவசியம். இதில் நீ அடையும் பக்குவம் பிறர்க்கும் உதவியாக இருக்கும். கவனித்துக்கொள்.
இனிமேல் ஏழைமையே நமக்குள்ள நிலை என்பதைத் தயவுசெய்து நினைவுபடுத்திக்கொள். இதைப்பற்றி எவ்வளவுக்கெவ்வளவு நான் சிந்திக்கிறேனோ அவ்வளவுக்கவ்வளவு, பணக்காரனாக இருப்பதைவிட ஏழையாக இருப்பதே பாக்கியம் என்று நான் உணருகிறேன். செல்வத்தைவிட ஏழைமையின் உபயோகங்கள் இன்பமானவை.
நீ பூணூல் போட்டுக்கொண்டிருக்கிறாய். அதற்கு ஏற்றாற்போல நீ வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன். பிரார்த்தனை சரியானபடி இருப்பதற்குச் சூரிய உதயத்திற்கு முன்னாலேயே படுக்கையை விட்டு எழ வேண்டியது முற்றிலும் இன்றியமையாதது என்று தெரிகிறது. ஆகையால் குறிப்பிட்ட நேரத்தில் அதைச் செய்வதற்கு முயற்சி செய். இதைப்பற்றி நான் அதிகம் சிந்தனை செய்திருப்பதோடு கொஞ்சம் படித்துமிருக்கிறேன். சுவாமிஜி செய்துவரும் பிரசாரத்தில் நான் மரியாதையுடனேயே மாறுபடுகிறேன். பூணூல் போடுவதை அநேக சந்ததிகளாகக் கைவிட்டுவிட்டவர்கள் திரும்பவும் பூணூல் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது தவறு என்று எண்ணுகிறேன். இப்பொழுது இருக்கிறபடியே, சூத்திரர்களுக்கும் மற்றவர்களுக்குமிடையே அதிகமான போலி வேற்றுமைகளைக் கொண்டிருக்கிறோம். ஆகையால் பூணூல் இன்று இடையூறாக இருக்குமேயல்லாமல் உதவியாக இராது. இந்தக் கருத்தை விவரமாக விளக்கிக்காட்ட விரும்புகிறேன்; ஆனால், இப்பொழுது முடியாது. தமது வாழ்நாளெல்லாம் இவ்விஷயத்தைப் பற்றி ஆராய்ந்த ஒருவர் முன்பு நான் இந்தக் கருத்துக்களைக் கூறுகிறேன் என்பதை அறிவேன். என்றாலும், என் சிந்தனையிலிருப்பதைச் சுவாமிஜிக்குத் தெரிவிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். காயத்திரியைப் படித்திருக்கிறேன். அதன் சொற்கள் நன்றாக இருக்கின்றன. சுவாமிஜி, எனக்குக் கொடுத்த புத்தகத்தையும் படித்தேன். அதைப் படித்ததினால் அதிக நன்மையையே அடைந்திருக்கிறேன். சுவாமி தயாநந்தரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதனால் எனக்கு உண்டாகியிருக்கிறது. காயத்திரிக்கும், வாஜஸனேய உபநிஷத்தில் பல மந்திரங்களுக்கும் அவர் கூறியிருக்கும் வியாக்கியானம், வைதிகப் போக்குள்ளவர்கள் கூறியிருக்கும் வியாக்கியானங்களுக்கு முற்றிலும் மாறுபட்டது. இப்பொழுது எந்தப் பொருள் சரியானது? எனக்குத் தெரியாது. சுவாமி தயானந்தர் கூறியிருக்கும் புரட்சிகரமான வியாக்கியான முறையை எடுத்த எடுப்பில் ஏற்றுக்கொண்டுவிட நான் தயங்குகிறேன். சுவாமிஜியின் வாய் மூலமே அதிகமாகத் தெரித்துகொள்ள நான் விரும்புகிறேன். நான் சிறையிலிருந்து வெளிவருவதற்கு முன்னால் அவர் புறப்பட்டுவிட்டாலும் முடிந்தவரை நூல்களைக் கொடுத்துவிட்டுப் போவார் என்றும் எண்ணுகிறேன்; அல்லது இந்தியாவிலிருந்தும் அவர் அனுப்பலாம். சுவாமி தயானந்தரின் போதனைகளைப்பற்றி வைதீகப் போக்குடையவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதையும் அறிய விரும்புகிறேன். கையினால் செய்யப்பட்ட மேசோடையும் கையுறையையும் எனக்கு அனுப்பியதற்காகச் சுவாமிஜிக்கு என் நன்றியைக் கூறவும். இந்தியாவில் அவர் விலாசத்தையும் அறிந்து வைக்கவும். இக்கடிதம் முழுவதையும் சுவாமிஜிக்குக் காட்டி அவர் என்ன சொல்லுகிறார் என்பதை எனக்கு அறிவிக்கவும்.
மீண்டும் உனக்குச் சொல்லுகிறேன். தோட்ட வேலையில் அதிகமாக ஈடுபடு. நீயே மண்ணை அகழ வேண்டும். மண்வெட்டியால் கொத்த வேண்டும். பிற்காலத்தில் இதை நம்பித்தான் நாம் ஜீவிக்க வேண்டியிருக்கிறது. குடும்பத்தில் நீ கைதேர்ந்த தோட்டக்காரனாய் இருக்கவேண்டும். உன் கருவிகளைத் துடைத்து அதனதனிடத்தில் நன்றாக வைத்துக்கொள். உன் பாடங்களுள் கணிதத்திலும் சம்ஸ்கிருதத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். பின்னால் சொன்னது உனக்கு மிகவும் அவசியம். வயதான பிறகு இவை இரண்டும் சுலபமாகக் கற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்களல்ல. சங்கீதத்தைப் புறக்கணித்துவிடாதே. ஆங்கிலத்திலோ, குஜராத்தியிலோ, ஹிந்தியிலோ உள்ள நல்ல வாக்கியங்கள், தோத்திரங்கள், பாடல்கள் இவற்றை ஒரு நோட்டுப் புத்தகத்தில் நல்ல கையெழுத்தில் வரைந்து தொகுத்து வை. வருட இறுதியில் இந்தத் திரட்டு மிகவும் பயனுடையதாக இருக்கும். கிரமமாகச் செய்தால் இவையெல்லாம் சுலபமாகவே அமையும். எப்போதும் பரபரப்படையாதே. எவ்வளவோ காரியம் செய்யவேண்டியிருக்கிறதே, எதை முன்னால் செய்வது என்றெல்லாம் கவலைக்கு இடம் தராதே. பொறுமையுடன், ஒரு விநாடிகூட வீணாக்காமல் இருந்தால் நடைமுறையில் இது எவ்வளவு எளிதாக முடியும் என்பதைக் காண்பாய். வீட்டுக்காகும் செலவுக் கணக்கில் தம்படிகூட விடாமல் சரியாகக் குறித்து வை.
எமர்ஸனின் கட்டுரைகளை நான் படிக்கச் சொன்னதாக மகன்லால்பாயிக்குச் சொல்லு. டர்ஹாமில் ஒன்பது பென்ஸுக்கு இப்புத்தகம் கிடைக்கும். இன்னொரு மலிவுப்பதிப்பும் வெளியாகியிருக்கிறது. இக்கட்டுரைகள் ஆழ்ந்து ஆராய்வதற்கு உகந்தவை. இவற்றைப் படித்து முக்கியமான பகுதிகளைக் குறித்து வைத்துக் கடைசியாக ஒரு நோட்டில் இவற்றை எழுதிக்கொள்ளச் சொல். இந்தக் கட்டுரைகள், மேல்நாட்டு உடையில் இருந்த போதிலும் இந்திய ஞானிகளின் அறிவுரைகளே என்று என் மனத்திற்குத் தோன்றுகின்றன. முற்றிலும் வேறான பாணியில் அவற்றைப் பெறுவது அதிசயப்படக்கூடிய விஷயம். டால்ஸ்டாயின் 'கடவுளின் உலகு உன்னிடமே இருக்கிறது' என்ற நூலையும் அவர் படிக்கவேண்டும். அது யுக்திவாதம் நிரம்பியதொரு நூல். அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு எளிதில் புரிந்துகொள்ளக்கூடியது. இன்னும் என்ன, டால்ஸ்டாய் தாம் சொன்னதைச் செயலிலும் காட்டுகிறார்.
[இந்தக் கடிதத்தின் நகல்களை எடுத்துப் போலக்குக்கு ஒன்று, கால்லென்பாக்குக்கு ஒன்று, இந்தியாவுக்குத் திரும்பிய ‘சுவாமி’க்கு ஒன்றுமாக அனுப்பச் சொல்லுகிறார். போலக் கால்லென்பாக் இவர்களிடமிருந்து கிடைக்கும் பதில்களை அந்தக் கடிதத்துடன் அனுப்பச் சொல்லுகிறார். “ஆனால், போராட்டத்தைப் பற்றி யாதொரு விஷயமும் அதில் இருக்கக்கூடாது” என்று குறிப்பிடுகிறார். தணிக்கை செய்வோர் இதை அனுமதிக்கவில்லை. கடைசியாக காந்திஜி, “எந்தப் பதிப்பானாலும் சரி, பீஜகணிதப் புத்தகம் ஒன்று வேண்டும்” என்று எழுதுகிறார்.]
இப்போது இதை முடித்துக்கொள்கிறேன். ராமதாஸ், தேவதாஸ், ராமி இவர்களுக்கு என் அன்பும் முத்தங்களும்.
- அப்பாவிடமிருந்து
மற்றோர் கடிதம்
1909-ஆம் ஆண்டு நடுவில் மணிலாலுக்குக் காந்திஜி எழுதிய கடிதமாவது:
அன்புள்ள மணிலால்,
இனி என்ன செய்யப் போகிறோம் என்பதை எண்ணி நீ மனச் சோர்வு அடைந்திருக்கிறாய். அக்கேள்விக்கு உனக்காக நான் பதில் சொல்லிவிடுவதாயின், உன் கடமை எதுவோ அதையே நீ செய்ய வேண்டும் என்று சொல்லுவேன். உன்னுடைய பெற்றோரைக் கவனித்துக் கொள்ளுவதே இப்பொழுது உனக்குள்ள வேலை. அதற்கு மேல் நீ கவலைப்பட வேண்டியதே இல்லை. மற்றவைகளைப் பற்றி உன் பெற்றோர்கள் கவனித்துக் கொள்வார்கள். அவர்கள் இல்லாது போய்விட்டபோதுதான் உனக்குப் பொறுப்பு ஏற்படும். வக்கீலாகவோ அல்லது டாக்டராகவோ நீ தொழில் நடத்தப்போவது கிடையாது; அதைப் பொறுத்தவரையில் நீ நிச்சயமாக இருக்கலாம். நாம் ஏழைகள்; ஏழைகளாகவே இருக்க விரும்புகிறோம். பணத்தின் அவசியம் சாப்பாட்டுக்கு மாத்திரமே. போனிக்ஸின் அபிவிருத்தி நமது கடமை. ஏனெனில், அதன் மூலமே நாம் நம்மை அறிந்துகொள்ள முடிவதோடு நம் நாட்டுக்கும் சேவை செய்ய முடியும். நீ நன்றாக இருக்கவேண்டும் என்பதே எப்பொழுதும் என் மனத்தில் இருந்துவருகிறது என்பதை நீ நிச்சயமாக நம்பு.
மனிதனின் உண்மையான தொழில், அவன் தன்னுடைய ஒழுக்கத்தை விருத்தி செய்துகொள்ள வேண்டும் என்பது. பணத்தைச் சம்பாதிப்பதற்காக விசேடமாக எதையும் படித்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியமே கிடையாது. ஒருவர் நேர்மையான மார்க்கத்தை மாத்திரம் பின்பற்றுவாராயின் அவர் பட்டினி கிடக்கவே நேராது. அப்படிப்பட்டதோர் நிலைமையே ஏற்பட்டுவிட்டாலும், அச்சமின்றி அதைச் சமாளிக்கவும் தயாராக இருப்பார்.
அமைதியான மனத்துடன் நீ எதைப் படிக்க முடியுமோ அதையெல்லாம் தொடர்ந்து படித்துக்கொண்டு வரவேண்டும். நான் உன்னைப் பார்க்க முடியாமலிருப்பதால் இதை எழுதும்போதே என் கண்களில் நீர் பெருகுகிறது. உன் தந்தை உன்னிடம் அன்பில்லாமல் என்றும் இருந்துவிடமாட்டார் என்று உனக்கு உறுதி கூற விரும்புகிறேன். நான் செய்வதெல்லாம் உன் நன்மைக்காகவே. பிறருக்கு நீ சேவை செய்துகொண்டிருக்கும் வரை திக்கற்றவனாக நீ இருக்கவே மாட்டாய். இதை உறுதியாக நீ உணர்ந்திருக்க வேண்டும்.
இன்னுமொரு கடிதம்
முந்திய கடிதத்திற்குச் சற்றேறக்குறைய அதே சமயத்தில் மணிலாலுக்குக் காந்திஜி மற்றோர் கடிதம் எழுதினார். அக்கடிதம் கூறுவதாவது:
அன்புள்ள மணிலால்,
அப்படியானால் எந்த வகுப்பில் படிக்கிறாய் என்று நீ பதில் சொல்ல முடியவில்லையல்லவா? அடுத்த முறை இக்கேள்வியை உன்னிடம் கேட்டால், பாபுவின் வகுப்பில் இருக்கிறேன் என்று நீ சொல்லிவிடலாம். உன் படிப்பைப் பற்றி நீ ஏன் கவலைப்பட்டுக்கொள்ளுகிறாய்? பிழைப்புக்குச் சம்பாதிப்பதற்காகப் படிக்க வேண்டும் என்று நீ விரும்பினால், அது சரியே அல்ல. ஏனெனில், ஒவ்வொருவருக்கும் படியளப்பவர் கடவுள். உடலை உழைத்து ஏதோ சிறு வேலை செய்து பிழைப்புக்கு நீ சம்பாதித்துக்கொள்ளலாம். ஆனால் பிழைப்புக்குச் சம்பாதிப்பதற்கு இடம் வைக்காத வகையில் போனிக்ஸுக்கோ அல்லது அது போன்ற வேலைக்கோ நாம் நம்மை அர்ப்பணம் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. உன் நாட்டின் நன்மைக்காகப் நீ படிக்க விரும்பினால், இப்பொழுது நீ அதைத்தானே செய்துகொண்டிருக்கிறாய். தன்னைத்தானே அறிந்துகொள்வதற்காக நீ படிக்க விரும்பினால், நல்லவனாக இருக்க நீ கற்றுக்கொள்ள வேண்டும். நீ நல்லவனாக இருக்கிறாய் என்றே எல்லோரும் சொல்லுகிறார்கள். அதிக வேலை இருக்கவேண்டும் என்பதற்காக நீ படிக்க விரும்புகிறாய் என்று இருக்கலாம். இதற்காக நீ அவசரப்படவே வேண்டியதில்லை. போனிக்ஸில் நீ செய்யக்கூடியதையெல்லாம் தொடர்ந்து செய்துகொண்டு வா. மற்றதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். நான் எப்பொழுதும் உன்னை நினைத்துக்கொண்டு இருக்கிறேன் என்பதில் உனக்கு நம்பிக்கை இருந்தால், கவலைப்பட்டுக்கொண்டிருப்பதை விட்டுவிடு.
[ரெய்காஸ் காந்தி எழுதிய 'காந்திஜியுடன் என் குழந்தைப் பருவம்' என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது]
Comments
Post a Comment