ஒரே
பொருளுடைய இரண்டு சொற்கள் சேர்ந்தது உதகபால வருணன் என்பது. உதகபாலன் என்றால் நீரை
ஆள்பவன் என்பது பொருள். வருணன் என்றாலும் நீர்க்கடவுள் என்பது பொருள். சிங்களவர்
முருகனைக் கந்த குமரன் என்றும் கூறுகின்றனர். கந்தன் என்றாலும் முருகன், குமரன் என்றாலும் முருகன். ஒரே பொருள் உள்ள இரண்டு சொற்களை இணைத்துக்
கந்தகுமரன் என்று கூறுவதுபோலவே, கடல் தெய்வத்தை உதகபால
வருணன் என்று வழங்கினார்கள். உதகபால வருணன் என்னும் சொல் பிற்காலத்தில் சிங்கள
மொழியில் உபுல்வன் என்று மருவி வழங்கிற்று.
இலங்கைத்
தீவிலே உரோகண என்னும் பகுதியைக் கி.பி. 7ஆம் நூற்றாண்டில்
அரசாண்ட தப்புலன் (தாபுளு சேன்) என்னும் அரசனுடைய சாசனம் ஒன்று, அவ்வரசன் உபுல்வன் என்னும் தெய்வத்தை வழிபட்டான் என்று கூறுகிறது.
உபுல்வன் (வருணன்) வழிபாடு இலங்கையில் கி.பி. 15ஆம்
நூற்றாண்டின் முற்பகுதி வரையில் நிகழ்ந்தது. உபுல்வன் கோயில், இலங்கையின் தென்கோடியில் உள்ள தேவுந்தர நகரத்திலே இருந்தது. தேவுந்தர
நகரம் அக்காலத்தில் உலகப் புகழ்பெற்ற துறைமுகமாகவும் இருந்தது. அத்துறைமுகத்தில்
தமிழர், யவனர், அராபியர், சீனர் முதலியோரின் வாணிகக் கப்பல்கள் தங்கின. இந்நகரத்திலிருந்த உபுல்வன்
(வருணன்) கோயில் சீனநாடு வரையிலும் புகழ்பெற்றிருந்தது. (இக்காலத்தில் உலகப்
புகழ்பெற்றுள்ள கொழும்புத் துறைமுகம் அக்காலத்தில் இல்லை. இது பிற்காலத்தில்
போர்ச்சுகீசியரால் உண்டாக்கப் பட்ட து.)
கி.பி.
15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே உபுல்வன், விஷ்ணுவாக மாற்றப்பட்டான். உபுல்வன் எப்படி விஷ்ணுவாக மாற்றப்பட்டான்?
உபுல்வன் என்னும் சிங்களச் சொல்லை உப்பலவண்ணன் என்று சிங்கள
மொழியிலும், உத்பலவர்ணன் என்று சமஸ்கிருத மொழியிலும்
மாற்றினார்கள் என்று முன்னர் சொன்னோம். இவ்வாறு மாற்றப்பட்ட இச்சொல், நீலத் தாமரை நிறமுள்ளவன் அல்லது நீல நிறமுள்ளவன் என்று பொருள் கொண்டது.
உப்பலம் அல்லது உத்பலம் என்றால் நீலத்தாமரைக்குப் பெயர். வண்ணம் என்றாலும் வர்ணம்
என்றாலும் நிறம் என்பது பொருள். எனவே, உத்பல வண்ணன் என்பது
நீலத்தாமரைப்பூ போன்ற நிறமுள்ளவன் என்று பொருள் கொண்டு, அது
நீலநிறமுடைய விஷ்ணுவைக் குறிக்கும் என்று கற்பிக்கப்பட்டது. இவ்வாறு உபுல்வன்
என்னும் வருணன் விஷ்ணுவாக மாற்றப்பட்டான். உபுல்வன் கோயில், விஷ்ணு
(திருமால்) கோயிலாகக் கருதப்பட்டது. ஆனால், வழிபாட்டு
முறையில், வருணனுக்குரிய வழிபாடும் நடைபெற்று வந்தது. இவ்வாறு,
பிற்காலத்திலே உபுல்வன் கோயிலில் வருணன் வழிபாடும் திருமால்
வழிபாடும் நிகழ்ந்தன. பின்னர், கி.பி. 16ஆம் நூற்றாண்டில், போர்ச்சுகீசியர் இலங்கையை ஆட்சி
செய்த காலத்தில் தொமெ-டி-ஸௌஸா என்னும் சேனைத் தலைவன் தனது போர் வீரர்களை
அழைத்துக்கொண்டு போய் (கி.பி. 1558ஆம் ஆண்டு) இந்தக் கோயிலை
இடித்துத் தகர்த்து அழித்துப்போட்டான். அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய இந்தக்
கோயில் இவ்வாறு அழிக்கப்பட்டது. பிறகு, கண்டி நகரத்தில்
இருந்து அரசாண்ட இராஜசிம்மன் (இரண்டாவன்) என்னும் சிங்கள அரசன் (கி.பி. 1635-87)
அந்தக் கோயில் இருந்த இடத்தில் விஷ்ணுவுக்கு ஒரு கோயில் கட்டினான்.
பிற்காலத்திலே,
கடல் தெய்வமாகிய உபுல்வனை விஷ்ணுவுடன் பொருத்தி அக்கடவுளைத்
திருமால் எனக் கற்பித்துவிட்டனர் என்று கூறினோம். உத்பலவர்ணன் என்றால் நீலத்தாமரை
நிறம் என்பது பொருள் என்றும் அது நீலநிறமுடைய விஷ்ணுவைக் குறிக்கும் என்றும்
உத்பலவர்ணன் என்னும் சொல்லைத்தான் சிங்களவர் உபுல்வன் என்று வழங்கினார்கள் என்றும்
பொருத்தங்காட்டினார்கள். இந்தப் பொருத்தம் வெளித்தோற்றத்திற்குச் சரியானதாகத்
தோன்றினாலும் ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்கும்போது உண்மைக்கு மாறான போலிக் காரணம்
என்பது விளங்கும். சிங்கள அறிஞர்கள் இதுபற்றி ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள்.
அவர்கள் கூறும் காரணத்தை இங்கு காட்டுவோம். இந்தக் காரணங்களைக் கொண்டு உபுல்வன்
என்பது திருமால் ஆகிய விஷ்ணு அல்ல என்பதும், அது வருணன்தான்
என்பதும் நன்கு விளங்கிக்கொள்ளலாம்.
1. உத்பலவர்ணன்
என்பது விஷ்ணு என்பது பொருந்தாது. என்னை?
விஷ்ணுவாகிய
திருமால் கருமை நிறமுடையவர். ஆகவே அவருக்குக் கார்வண்ணன், கடல்வண்ணன்,
மேகவர்ணன், பச்சைவண்ணன் என்றெல்லாம் பெயர்
உண்டு. ஆனால், உத்பலவர்ணன் என்னும் பெயர் கூறப்படவில்லை.
விஷ்ணுவுக்குரிய ஆயிரம் பெயர்களில் (சகஸ்ரநாமம்) உத்பலவர்ணன் என்னும் பெயர்
காணப்படவில்லை. ஆகவே, உத்பலவர்ணன் என்பதுதான் உபுல்வன்
ஆயிற்று என்று கூறுவது ஏற்கத்தக்கதல்ல. உபுல்வன் என்பது உதகபால வருணன் என்னும்
கடல் தெய்வத்தைத்தான் குறிக்கும். விஷ்ணுவைச் சுட்டவில்லை.
2. சிங்கள
மொழியில் உள்ள ‘திஸர ஸத்தேஸம்’ கி.பி. 14ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. இது ஒரு தூதுப் பிரபந்தம். இந்நூலின் 18ஆம் செய்யுளில் கீழ்க்கண்ட செய்தி கூறப்படுகின்றது.
''ஸ்ரீயும்
சரஸ்வதியும் மகிழ்ச்சியோடு உபுல்வனிடம் தங்கிய பிறகு, ஸ்ரீயை
(இலக்குமியைப்) பிரிந்த காரணத்தினால் வருத்தம் என்னும் தீயினால் கருகிக் கருநிறம்
அடைந்த விஷ்ணுவைப் போலக் கருநிறம் அடையாமல், பிரமன்
பிரமசரியம் காத்து வெண்ணிறமாகவே இருந்தான்.''
அதாவது,
பிரமன் மனைவியாகிய சரசுவதியும் விஷ்ணுவின் மனைவியாகிய ஸ்ரீயும்
உபுல்வனிடத்திலே (வருணன் இடத்திலே) தங்கிவிட்டபடியினால் விஷ்ணு, ஸ்ரீயைப் பிரிந்த வருத்தத்தினால் கருநிறமானான். ஆனால், பிரமன் சரசுவதியைப் பிரிந்ததனால் வருத்தம் அடையாமல் வெண்ணிறமாகவே
இருந்தான் என்பது மேற்படி செய்யுள் கூறும் கருத்து ஆகும். இதிலிருந்து உபுல்வன்
வேறு விஷ்ணு வேறு என்பது தெரிகிறது. உபுல்வனும் (வருணனும்) உத்பலவர்ணனும் (விஷ்ணுவும்)
ஒருவராகவே இருந்தால், விஷ்ணு தன் மனைவியாகிய ஸ்ரீயைப்
பிரிந்து வருந்தினான் என்று கூறுவதில் பொருள் இல்லை அன்றோ? இதனால்,
உத்பலவர்ணனும் உபுல்வனும் விஷ்ணுவாகிய ஒருவரையே குறிக்கும் என்பது
தவறாகிறது. இதனால், உபுல்வனாகிய வருணன் வேறு, உத்பலவர்ணனாகிய விஷ்ணு வேறு என்பது வெள்ளிடைமலைபோல விளங்குகிறது.
3. ‘கோகில
சந்தேசம்’ என்பதும் ஒரு சிங்கள நூல். இது குயில்விடு தூது.
இதுவும், மேலே கூறப்பட்ட திசர சந்தேசத்தைப் போலவே, தேவுந்தர நகரத்தில் கோயில் கொண்டிருந்த உபுல்வனை (வருணனைப்) புகழ்கிறது.
இந்நூலில் 21ஆம் செய்யுள், உபுல்வன்
விஷ்ணுவுக்கு நிகரானவன் என்று கூறுகிறது. உபுல்வனும் (வருணனும்) உத்பலவர்ணனும்
(விஷ்ணுவும்) ஒருவரே என்றால் இந்த உவமை எப்படிப் பொருந்தும்? உபுல்வன், விஷ்ணுவுக்கு நிகரானவன் என்று
கூறப்படுகிறபடியினாலே, உபுல்வன் வேறு உத்பலவர்ணன் வேறு
என்பதும் இருவரும் ஒருவர் அல்லர் என்பதும் தெரிகின்றன.
4. ‘மயூர
சந்தேசம்’ என்பதும் ஒரு சிங்கள நூல். இது மயில்விடு தூது.
இதுவும் உபுல்வனைப் பற்றிய நூல். இந்நூலின் 151ஆம் செய்யுள்,
தேவுந்தர நகரத்தில் எழுந்தருளியிருந்த உபுல்வனுக்கு இரண்டு கைகள்
இருந்தன என்று கூறுகிறது. உபுல்வன், உத்பலவர்ணனாக
(விஷ்ணுவாக) இருந்தால் அவருக்கு நான்கு திருக்கைகள் கூறப்படவேண்டும்.
விஷ்ணுவுக்குச் சங்கு சக்கரம் ஏந்திய இரண்டு கைகளும் வாத அபயம் அளிக்கும் இரண்டு
கைகளும் ஆக நான்கு கைகள் உண்டல்லவா? இரண்டு கைகளைக்
கூறுகின்றபடியினால் உபுல்வன் வருணனே, விஷ்ணு அல்லன் என்பது
விளங்குகிறது.
5. தேவுந்தர
நகரத்தில் இருந்த பழைய வருணன் கோயில், பிற்காலத்தில் (15ஆம் நூற்றாண்டில்) விஷ்ணு கோயிலாக மாற்றப்பட்ட போதிலும் அக்கோயிலில்
வருணன் வழிபாடு அறவே மறக்கப்படவில்லை. விஷ்ணு வழிபாட்டுடன் பழைய வருணன் வழிபாடும்
நடைபெற்று வந்தது. வருணனுக்குரிய சிறப்புப் பொருள் முத்துக் குடையாகும். வருணன்,
கடல் தெய்வம் ஆகையினால், கடல்படுபொருள்களில்
சிறந்ததும் விலையுயர்ந்ததும் ஆகிய முத்துக் குடை வருணனுக்குரிய சிறப்புப் பொருள்
ஆம். தேவுந்தர நகரத்துக்கோயில் இப்போது விஷ்ணு கோயிலாகக் கருதப்படுகிறபோதிலும் அங்கு
நடைபெறுகிற ஆண்டு விழாக் காலத்தில் வருணனுடைய முத்துக் குடை ஊர்வலம் சிறப்பாகச்
செய்யப்படுகிறது. அன்றியும் அக்கோவிலில் சத்ரக் கிருகம் என்னும் திருவுண்ணாழிகை
உண்டு. சத்ரக் கிருகம் என்றால் குடை இருக்கும் அறை என்பது பொருள். வருணனுடைய
முத்துக் குடை அங்கு வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் உபுல்வன் கோயில் என்பது வருணன்
கோயில் என்பது நன்கு விளங்குகிறது.
விஷ்ணுவுக்குச்
சிறப்புச் செய்வதென்றால், திருவிழாக் காலத்தில்
விஷ்ணுவுக்குரிய சக்கரம் (சக்கரத்தாழ்வார்) அல்லவோ வீதிவலம் வரவேண்டும்? அதுவன்றோ மரபு? அவ்வாறில்லாமல், முத்துக் குடை முதன்மை இடம்பெற்று ஊர்வலம் வருகிறது என்றால், அது வருணனுக்குரிய சிறப்பு விழா என்பதில் ஏதேனும் ஐயம் உண்டோ?
பழமையாகத்
தொன்றுதொட்டு இலங்கையில் தேவுந்தர நகரத்திலே இருந்த வருணன் கோயிலைப் பிற்காலத்தில்
விஷ்ணு கோயிலாக மாற்றிவிட்டபோதிலும், உபுல்வன் முழுவதும்
மறக்கப்படவில்லை. உபுல்வன் (வருணன்) உதகபாலனாகிய வருணனே. உத்பலவருணன் என்பது
உபுல்வன் ஆயிற்று என்பதும் தவறு. உபுல்வன் என்னும் சிங்களச் சொல்லிலிருந்து
உத்பலவர்ணன் என்னும் சொல் கற்பிக்கப்பட்டு, பிறகு அச்சொல்
விஷ்ணுக்குப் பெயர் என்று கூறப்பட்டது. இது ஆராய்ச்சியில் பிழைபடுகிறதென்பது மேலே
விளக்கப்பட்டது.
கி.மு.
3ஆம் நூற்றாண்டிலிருந்து, அசோகச்
சக்கரவர்த்தி காலம் முதல், இலங்கை பெளத்த மத நாடாக
இருந்துவருகிறது. பௌத்த மதத்தில் வருணன் வணக்கம் கூறப்படவில்லை. வருணன் வணக்கம்
பெளத்தருக்குரியதன்று. பௌத்த மதத்துக்கு உரிய கடல் தெய்வம் மணிமேகலை ஆகும். ஆனால்,
மணிமேகலைக்குக் கோயில் அமைத்து வழிபாடு செய்யப்படவில்லை. பெளத்த
நாடாகிய இலங்கைத் தீவிலும் மணிமேகலைக்குக் கோயிலும் வழிபாடும் கிடையாது. வருணன்
என்னும் கடல் தெய்வத்துக்கு மட்டும் இலங்கையில் கோயிலும் வழிபாடும் உண்டு. அப்படியானால்,
இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளாகப் பௌத்த நாடாக இருந்துவருகிற
இலங்கைத் தீவிலே வருணன் வணக்கம் எப்போது நுழைந்தது?
இலங்கைத்
தீவு முன் ஒரு காலத்தில் தமிழ்நாட்டுடன் இணைந்திருந்தது. பின்னர் அவ்வப்போது
கடற்பெருக்கு ஏற்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக நிலம் உடைப்புண்டு இலங்கை தனித்தீவாகப்
பிரிந்து போய்விட்டது. இச்செய்தியை நில நூல் வல்ல அறிஞர்கள் கூறுகிறார்கள். இலங்கை
நூல்களாகிய மகாவம்சம், தீபவம்சம் என்னும் நூல்களும், வெவ்வேறு காலத்தில் இலங்கையில் நிகழ்ந்த இரண்டு பெரிய கடல்கோள்களைக்
கூறுகின்றன. இலங்கையின் மேற்குப் பகுதியிலிருந்த நிலப்பரப்பு இரண்டு பெரிய
கடல்கோள்களினால் அழிந்து போயின என்றும், ஆயிரக்கணக்கான
ஊர்கள் கடலில் மூழ்கிவிட்டன என்றும் அந்நூல்கள் கூறுகின்றன. பண்டைத் தமிழ்
நூல்களும், கன்னியாகுமரிக்குத் தெற்கே நிலப்பரப்பு இருந்தது
என்றும் அங்குப் பாண்டியனுடைய தலைநகரங்கள் இருந்தன என்றும் பிற்காலத்தில் இரண்டு
பெரிய கடல்கோள்களினால் அந்நிலப்பரப்பு கடலில் மூழ்கி மறைந்துவிட்டது என்றும்
கூறுகின்றன. இந்த மூன்று செய்திகளையும் இணைத்து ஆராய்ந்து பார்க்கும்போது, இலங்கைத் தீவும் வேறு சில நிலப்பகுதிகளும் முன்னொரு காலத்தில் தமிழ்நாட்டுடன்
இணைந்திருந்தன என்றும், பின்னர் அவ்வப்போது நிகழ்ந்த
கடல்கோள்களினால் சில பகுதிகள் கடலில் மூழ்கி மறைந்தும் ஒரு பகுதி இலங்கைத் தீவாகப்
பிரிந்தும் போயிற்று என்றும் தெரிகின்றன. இது நிகழ்ந்தது ஏறக்குறைய இற்றைக்கு
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆகும்.
இலங்கை
தனித்தீவாகப் பிரிந்து போவதற்கு முன்னே, அது தமிழ்நாட்டுடன்
சேர்ந்திருந்த காலத்தில், பழைய தெய்வமாகிய வருணன், முருகன், திருமால் ஆகிய தெய்வங்களின் வழிபாடுகள்
அங்குப் பரவியிருக்கவேண்டும். அக்காலத்தில் சிங்களவரும் பெளத்த மதமும்
அப்பகுதியில் இல்லை. அக்காலத்தில் அப்பகுதியில் வாழ்ந்தவர் நாகரும் இயக்கரும்
வேடரும் ஆவர். அவர்கள், தமிழரைப் போலவே வருணன், முருகன், திருமால் முதலிய தெய்வங்களை வழிபட்டு
வந்தனர். பிற்காலத்தில், கடல்கோள்களினால் நிலம் உடைப்புண்டு
இலங்கை, தனித்தீவாகப் பிரிந்து போன பிறகும், இத்தெய்வங்களையே அவர்கள் வணங்கி வந்தார்கள்.
பிறகு
ஏறக்குறைய கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில், விசயன் என்னும்
வடநாட்டரசன் தனது தோழர்களுடன் இலங்கைக்கு வந்து, அங்கிருந்த
இயக்கர், வேடர்களிடமிருந்து நாட்டைக் கைப்பற்றி அரசாண்டான்.
விசயனும் அவனைச் சேர்ந்தவர்களும் பாண்டியன் மகளையும் பாண்டி நாட்டுப் பெண்களையும்
முறையே மணஞ்செய்துகொண்டனர். இவர்களின் சந்ததியார்தான் சிங்களவர். பின்னர் நாகர்,
இயக்கர் முதலியவர்களும் சிங்களவருடன் கலந்து சிங்களவராயினர். ஆனால்,
அந்தக் காலத்திலும் பழைய வருணன், முருகன்,
திருமால் வணக்கம் நிலைபெற்றிருந்தது.
பின்னர்,
கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், இந்திய நாட்டை
அரசாண்ட அசோகச் சக்கரவர்த்தி காலத்தில், பௌத்த மதம், இலங்கையிற் பரவிற்று. பெளத்த மதம், கி.மு. மூன்றாம்
நூற்றாண்டிலிருந்து இன்று வரையிலும் இலங்கையில் நிலைத்து நிற்கிறது. பெளத்தம்,
இலங்கையிலே முக்கிய மதமாக இருந்தபோதிலும், அங்குப்
பழைய தெய்வங்களின் வணக்கமும் இன்றளவும் இருந்துகொண்டிருக்கின்றன. திருமால்,
முருகன், வருணன் ஆகிய பழைய தெய்வங்களைச்
சிங்களவர் இன்றும் மறந்துவிடவில்லை; முருகனைக் கந்த குமரன்
என்றும், திருமாலை விஷ்ணு என்றும் வருணனை உபுல்வன் என்றும்
சிங்களவர் கூறுகின்றனர். தமிழரின் பழங்கடவுளராகிய சேயோனும் மாயோனும் வருணனும்
இலங்கைத் தீவிலே சிங்களவரால் இன்றும் போற்றப்படுகின்றனர்.
ஆனால்,
இந்தத் தெய்வங்கள், புத்தர் பிரானுக்குக்
கீழடங்கிய சிறு தெய்வங்களாகக் கருதப்படுகின்றனர். பௌத்த மதம் செல்வாக்கடைந்த பிறகு
இத்தெய்வங்களின் நிலை சற்று இறங்கிய போதிலும், பௌத்த மதம்
வருவதற்கு முன்பு இத்தெய்வங்கள் முதன்மை பெற்றிருந்தன. இந்தத் தமிழ்த் தெய்வங்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையில் வணங்கப்பெற்றன என்பதில் சிறிதும்
ஐயமில்லை.
- தமிழ்ப் பொழில், துணர் 34, மலர் 5, 1958
மயிலை சீனி. வேங்கடசாமியின் 'இலங்கை வரலாறு' நூலிலிருந்து
நூலைப் பெற, https://amzn.to/3dhmUNZ
Comments
Post a Comment