Skip to main content

சேலையும் வளையலும் | மனுபென் காந்தி

1947 டிசம்பர் மாதம், இரு கைகளிலும் வளையல்கள் அணிந்து சேலை உடுத்தியிருந்தேன். பாபூ சேலையைப்பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் கையிலுள்ள வளையல்களுக்குப் பதிலாக நானே நூற்ற நூல் இழைகளை அணியச் சொன்னார். அதற்கு நான், "இந்த வளையல்கள் பெண்களின் அடிமைத்தனத்தின் அறிகுறி என்று நீங்கள் கருதுவதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இந்தச் சேலை உடுத்தியிருக்கும்போது இந்த வளையல்களைப் பூணாது போனால் அழகாயிராதே. ஆனால் ஆசிரமத்திலுள்ள மற்றப் பெண்கள் அவ்வாறு நினையார் என்று நீங்கள் சொல்லக்கூடும். அவர்கள் உங்களைத் திருப்தி செய்யவே இவ்வாறு கூறுவரென்று நான் தைரியமாகச் சொல்லுவேன். உங்கள் யோசனைப்படி நான் நடந்தால் நீங்கள் திருப்தி கொள்வதைக் கண்டு மற்றப் பெண்களும் அது போலவே நடக்க முற்படுகின்றனர். ஆனால் அவர்கள் இஷ்டம் போல் இருக்கவிட்டால், சமயம் வாய்க்கும்போது அடக்கிக்கொண்டுள்ள தம் விருப்பங்களை வெளிப்படுத்திச் சற்று அளவு கடந்தும் செல்வர். இது உங்களையும் உங்கள் வேலையையும் உங்களை அண்டினவரையும், ஏன், நாட்டையுமே பாதிக்கும். இயற்கையுடன் ஒட்டி அணி அலங்காரமின்றி இருக்குமாறு எனக்குப் போதித்திருக்கிறீர். நான் எதையும் உங்களிடம் மறைக்க விரும்பவில்லை. ஏதோ காரணமாகத்தான் இதை இன்று அணிந்துள்ளேன். உள்ளத்தில் கொண்ட ஓர் உறுதியின் விளைவாகத் தோன்றும் ஓர் எளிமையை நான் போற்றுவேன். ஆனால், விருப்பத்திற்கு மாறாகவோ, புரிபடாமலோ இப்படி எளிமையுடன் விளங்குவதும் உங்களைத் திருப்தி செய்யும் பொருட்டே. இதன்படி ஒழுகுவதும் உள்ளக் கரவே அன்றி வேறில்லை. நீங்களும் சரி, உங்களுடன் பணி ஆற்றும் நண்பர்களும் சரி, நாங்கள் கேட்காமல் இருக்கும்போது வேண்டிய உபதேசங்களைத் திணிக்கின்றீர்கள். ஆகவே நீங்கள் எங்களை விடத் தவறு செய்தவராகிறீர்கள். எங்களுக்குள்ள பலவீனத்தையோ, வலிமையையோ நாங்கள் தானே உணர்ந்து அதன்படி ஒழுகவேண்டும். ஒரு கட்டிற்கு உட்பட்ட உபதேசங்களைப் புகட்டினால் நாங்கள் அவற்றின்படி நடக்க முயல்வோம். உங்களுக்கும் உதவியாக இருக்கும். இவ்வாறு உங்கள் பணியும் மேலும் மேலும் எங்கிலும் பயன் பெறுவதாக அமையும். இன்று உங்களுக்கு எதிலும் நம்பிக்கை குறைந்து வருகிறது. எல்லோரும் கை நழுவவிட்டதாக நினைக்கிறீர். இதற்குக் காரணம் இதுவே: உங்களுடன் இந்த 25 ஆண்டுகள் சேர்ந்து பணி புரிந்தவர்களை நோக்குவீர். இன்று அவர்களும், அவர்களது நற்பண்பும், சமூகமும், நீங்களுந்தான் தூஷணைக்கு ஆளாகியிருக்கிறீர்கள். இதுபோன்ற செய்திகள் வெளியிடத்திலிருந்து வருவதைக் கேட்டு நான் திகைப்புறுகிறேன். இதையெல்லாம் உங்களுக்கு யார் எடுத்துச் சொல்லுகிறார்கள்?'' என்றேன்.
நான் கூறுவதையெல்லாம் பொறுமையுடன் கேட்டுக்கொண்டார் பாபூ. வெகு நாட்களாகவே ஒரு வகை ஆத்திரம் என்னுள் குமுறிக்கொண்டே இருந்தது. பஞ்சாபி ஆடையை விட்டு நான் சேலையை அணியத் துணிந்ததற்குக் காரணமும் அதற்கான அத்தாட்சியும் பாபூவிடம் தெரிவிக்கவே உறுதி கொண்டேன். கடைசியில் அவர் சொன்னதாவது: "எனக்கு இதையெல்லாம் நீ விளக்கமாக எடுத்துச் சொன்னதைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். வளையலுடன் நீ சேலையையும் அணிவது குறித்தும் மகிழ்ச்சியே. நீ சொல்வதே சரி. அவரவர் விருப்புக்கு ஏற்றவாறு நடப்பதே நல்லதென்பதை நான் வற்புறுத்திக் கூறுபவன். ஆனால் காந்திஜிக்குத் திருப்தி அளிக்குமே என்று எந்தக் காரியத்தையும் செய்யத் தேவையில்லை.'' மேலும் தொடர்ந்தார்: "இப்படி மனத்தில் உள்ளதை பயமின்றித் தெளிவாக வெளிப்படுத்தும் பெண்கள் ஐந்து பேர் என் பக்கத்தில் இருப்பின் நான் ஏற்றுள்ள பணி எவ்வளவோ எளிதாக நிறைவேறியிருக்குமே. ஒரு சந்தோஷம். நீயாவது ஒருத்தி இருக்கிறாயே."
இதற்குள் பெல்ஜியம் நாட்டு இளவரசி அங்கு வந்தாள். என்னை அறிமுகப்படுத்த பாபூ அவளிடம், "இந்தப் பெண் இப்போதுதான் அவள் பாட்டனாருக்கு ஒரு பெரிய சொற்பொழிவு நிகழ்த்தினாள்'' என்றார். அவளைச் சந்தித்த பிறகு உடனேயே நான் என் சேலையைக் கலைத்துப் பஞ்சாபி ஆடையைப் பூண்டேன். என்ன ஏதாவது உனக்குப் பைத்தியமா?'' என்று பாபூ சொன்னார். அவருக்கு எச்சரிக்கை செய்ய அந்த ஆடையை அணியவேண்டியதாயிற்றுஎன்றேன். பாபூ, நிகழ்ந்ததை அப்படியே அவ்விளவரசியிடம் மொழியவே, அவளும் மகிழ்ச்சியுற்றாள். "இந்தப் பெண் இன்று அணிந்த அந்தச் சேலை என்னை எவ்வளவோ சிந்திக்க வைத்துவிட்டது'' என்றார் பாபூ.
***
பாபூஜியின் நினைவுக் கோவை | குஜராத்தியில், மனுபென் காந்தி | தமிழில், த. நா. குமாரஸ்வாமி
https://amzn.to/35YS1ed

Comments

Most Popular

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந