Skip to main content

பல ரூபங்களில் காந்தி: முடி திருத்துபவர் | அனு பந்தோபாத்யாயா

காந்திஜி தென் ஆப்பிரிக்காவுக்கு வந்து ஒருவார காலம் ஆகி இருந்தது. அவரது பாரிஸ்டர் பணியின் நிமித்தம் அவர் வேறு ஒரு பெரிய ஊரில் ஓர் இரவு தங்க நேர்ந்தது. கோச் வண்டி ஓட்டியிடம் தன்னை அந்த ஊரின் பிரபலமான ஹோட்டலுக்கு இட்டுச் செல்லும்படி பணித்தார். ஹோட்டல் மானேஜரைச் சந்தித்து தங்குவதற்கு ஒரு அறை வேண்டும் என்று கேட்டார். அவரை ஏற இறங்க ஒருமுறை நோட்டம் விட்ட மானேஜர், அறை ஏதும் காலி இல்லை என்று கூறிவிட்டார். காந்திஜி, அவ்வூரில் அவருக்குத் தெரிந்த ஓர் இந்திய நண்பரின் கடையில் அன்றைய இரவுப் பொழுதைக் கழித்தார். அடுத்த நாள், அந்த நண்பரிடம் தனது ஹோட்டல் அனுபவத்தைக் கூறியபோது, அவர் "உங்களுக்கு ஹோட்டலில் இடம் கிடைக்கும் என்று எப்படி நம்பினீர்கள்?'' என்று கேட்டார். "ஏன், ஹோட்டலில் ரூம் கேட்டதில் என்ன தவறு?'' என்று காந்திஜியும் வியப்புடன் எதிர்க் கேள்வி கேட்டார். "எல்லாம் உங்களுக்குப் போகப் போகத் தெரியவரும்," என்று அந்த நண்பரும் கூறினார். இந்தியர்களுக்கு தென் ஆப்பிரிக்காவில் இழைக்கப்பட்டு வந்த பல அநீதிகள், அவமானங்கள் பற்றி காந்திஜி கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்துகொண்டார். அவர் ஓடும் ரயிலிலிருந்து அடிக்கப்பட்டு, உதைக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். தெருவில் நடந்து செல்லும் போதுகூட கன்னத்தில் அறையும் உதையும் அவருக்குக் கிடைத்தன. அப்போதும் அவருக்கு வெள்ளையர்கள், ஏன் கறுப்பர்களை வெறுக்கிறார்கள், துன்புறுத்துகிறார்கள் என்பது புரியவில்லை. "எல்லோருமே ஒரே கடவுளின் குழந்தைகள்தானே! கிறிஸ்தவ மதமும் அன்பைத்தானே போதிக்கிறது'' என்றெல்லாம் சிந்தித்தார் அவர்.
ஒருநாள் முடிவெட்டிக்கொள்வதற்காக ஒரு முடி திருத்தும் கடைக்கு அவர் சென்றார். அங்கிருந்த வெள்ளைய முடி திருத்துபவர் "உங்களுக்கு என்ன வேண்டும்?'' என்று காந்திஜியைக் கேட்டார்.
"நான் முடி திருத்திக்கொள்ள வந்திருக்கிறேன்'' என்றார் காந்திஜி.
"மன்னிக்க வேண்டும். நான் உங்களுக்கு முடி திருத்த முடியாது. நான் கறுப்பர்களுக்கு முடி திருத்தத் தொடங்கினால் வெள்ளையர்கள் என்னிடம் வரமாட்டார்கள்.''
இந்த அவமதிப்பை காந்திஜியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதையே மனதில் எண்ணி எண்ணிப் புலம்புவதாலோ, செய்தித்தாளுக்குக் கடிதம் எழுதுவதாலோ பிரச்சினை தீரப்போவதில்லை. நாம் பிறரைச் சார்ந்திருத்தல் கூடாது. நமது தேவைகளை நாமே பூர்த்தி செய்துகொள்ள வேண்டும், என்றெல்லாம் சிந்தித்த காந்திஜி, கடைக்குச் சென்று கத்தரிக்கோலை வாங்கி வந்தார். கண்ணாடி முன்பாக நின்று தானே தனது முடியைத் திருத்திக்கொண்டார். நிச்சயமாக அது ஒரு பாரிஸ்டர் செய்யக்கூடிய பணி அல்ல பின்னந்தலையைக் கரையான் அரித்த மாதிரி செய்துவிட்டார்! அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் அடுத்த நாள் வழக்கம்போல் நீதிமன்றத்திற்குச் சென்றார். அவருடைய விசித்திரமான தலைமுடியைப் பார்த்து நண்பர்கள் வாய்விட்டுச் சிரித்தனர். ஒரு நண்பர் "உங்கள் தலைமுடிக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டே விட்டார். ''எலிகள் கடித்து விட்டனவோ?" என்றும் கிண்டல் செய்தார். "இல்லை ஒரு வெள்ளைய முடி திருத்துபவர் ஒரு கறுப்பனின் கறுப்பு முடியைக் கையால் தொடமாட்டேன் என்று கூறிவிட்டார். அதனால் எப்படி ஆனாலும் சரி என்று எண்ணி, நானே எனது முடியைத் திருத்திக்கொண்டேன்,'' என்றார் காந்திஜி.
தனது 28வது வயதில் முடி திருத்திக்கொள்வதில் இது காந்திஜியின் முதல் முயற்சி ஆகும். அதற்குப்பின் பல தடவைகள் அவர் கத்தரிக்கோலை பயன்படுத்தினார். காந்திஜியின் ஆசிரமவாசிகள் ஒருவர் முடியை மற்றவர் திருத்திக்கொண்டனர். காந்திஜி, ஆசிரம மாணவர்கள் எளிய வாழ்க்கை முறையை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்பினார். ஆடம்பர வாழ்க்கை முறை, உடை, உணவு போன்றவை ஆசிரமத்தில் அனுமதிக்கப்படவில்லை. ஒரு தடவை ஞாயிற்றுக்கிழமையன்று காலை நேரத்தில் மாணவர்கள் குளிப்பதற்காகச் சென்று கொண்டிருந்தனர். காந்திஜி அவர்களை ஒவ்வொருவராகக் கூப்பிட்டு முடி திருத்திவிட்டார். காந்திஜி முடியை ஒட்டவெட்டிவிட்டது நிறையப் பேருக்குப் பிடிக்கவில்லை. ஒரு தடவை இரண்டு சிறுமிகளின் நீண்ட முடியைக்கூட அவர் திருத்திவிட்டார்.
தென் ஆப்பிரிக்கச் சிறைகளில் சீப்புகள் வழங்கப்படுவதில்லை. இரண்டு மாதம் அல்லது அதற்கு மேலாக தண்டனை பெற்றவர்களின் முடி ஒட்ட வெட்டப்பட்டது; மீசையும் மழிக்கப்பட்டது. காந்திஜிக்கும், அவருடைய சகாக்களுக்கும் இவ்வழக்கத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் காந்திஜியோ சிறையின் வழக்கங்களை முற்றிலுமாக அனுபவிக்க விரும்பினார். தான் முடி திருத்திக்கொள்ள விரும்புவதாக காந்திஜி எழுத்து மூலம் தெரிவித்ததை அடுத்து, அவருக்கும் கத்தரிக்கோல் வழங்கப்பட்டது. காந்திஜியும் அவரது ஒன்றிரண்டு நண்பர்களும் தினந்தோறும் இரண்டு மணிநேரத்திற்கு முடி திருத்தும் பணி செய்துவந்தனர்.
அவர் ஆகாகான் சிறையில் இருந்தபோது ஒரு பெண்மணியும் அச்சிறையில் இருந்தார். "எனக்கு ஒரேயடியாக முடி உதிர்கிறது. நான், எனது முடியைத் திருத்திக்கொண்டு மருந்துகளைப் போட்டுக்கொள்ளட்டுமா?" என்று காந்திஜியிடம் அப்பெண்மணி கேட்டார். அவர் உடனேயே கத்தரிக்கோலைக் கொண்டுவரச் சொல்லி அப்பெண்மணிக்கு முடி திருத்திவிட்டார். அப்போது அந்த முடி திருத்திய மகாத்மாவின் வயது 75.
சுதேசி இயக்கத்தின் போது காந்திஜி வெளிநாட்டு ஷவரக் கத்திகளைத் தூக்கி எறிந்துவிட்டு இந்தியாவில் தயார் செய்த கத்திகளைப் பயன்படுத்தத் தொடங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக அதைக் கொண்டு முகத்தை மழித்துக்கொள்ளப் பயின்றார். சிறிது காலத்திற்குப்பின் கண்ணாடி, சோப்பு, பிரஷ் ஏதும் இல்லாமலேயே முகத்தை மழித்துக் கொள்ளவும் அவரால் முடிந்தது. அவர் இப்போது தாம் முடி திருத்தும் பணியில் தேர்ச்சி பெற்றுவிட்டதாகக் கருதினார். ஒருமுறை ஒரு நாவிதருக்கு இப்படி ஒரு சான்றிதழையும் அளித்தார். முன்னிலால் எனக்கு சிரத்தையுடன் நல்லமுறையில் முகத்தை மழித்துவிட்டார். இதற்கு அவர் இந்தியாவில் தயாரித்த ஷவரக் கத்தியையே பயன்படுத்தினார். மேலும், சோப்பை உபயோகிக்கவில்லைகாந்திஜியின் பல நண்பர்களுக்கு இந்த ஏற்பாடு பிடித்துவிட்டது. முகத்தை மழித்துக்கொள்வது அவர்களுக்கு எளிதாகவும் திருப்தியாகவும் இருந்தது.
கிராமத்து நாவிதர்கள் அறுவை சிகிச்சை நிபுணர்கள் என்பது காந்திஜிக்குத் தெரியும். கொப்புளங்களை அறுப்பதிலோ, காலில் தைத்த முள்ளை வெளியே எடுப்பதிலோ அவர்கள் வல்லவர்கள். ஆனால், அவர்கள் அணியும் உடை அசுத்தமாக இருந்தது. அவர்களது உபகரணங்களும் துருப்பிடித்தவையாக இருந்தன.
ஒரு தடவை சேவாகிராமில் காந்திஜியின் ஒரு ஹரிஜன் உதவியாளர் "நான் வார்தாவுக்குப் போகவேண்டும்" என்று சொன்னார். காந்திஜி அங்கு எதற்காகப் போகவேண்டும் என்று கேட்டதற்கு முகத்தை மழித்துக்கொள்வதற்காகஎன்று பதில் கொடுத்தார்.
"இந்த கிராமத்திலேயே முகத்தை மழித்துக்கொள்ள முடியாதா?"
''ஜாதி இந்துக்கள் எனக்காக இப்பணியைச் செய்யமாட்டார்கள். இந்த ஊரில் ஹரிஜன நாவிதர் யாரும் கிடையாது."
"அப்படியானால் அந்த இந்து நாவிதரிடம் நான் எப்படி முகத்தை மழித்துக்கொள்ளலாம்?" என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டார், காந்திஜி. உடனடியாக அந்த நாவிதரிடம் செல்வதை காந்திஜி நிறுத்திக்கொண்டார்.
காந்திஜி அடிக்கடி பல கிராமங்களுக்கு பயணம் செய்யும் சமயங்களில் அவருக்குத் தானே முகத்தை மழித்துக்கொள்ள நேரம் கிடைக்காத காரணத்தால் முடி திருத்தகங்களுக்கு அவ்வப்போது காந்திஜி செல்வது உண்டு.
ஒரு கதர்ப் பயணத்தின் போது கதர் ஆடை அணிந்த நாவிதர் அவரது முகத்தை மழித்துவிட வேண்டும் என்று காந்திஜி விரும்பினார். உதவியாளர்கள் அப்படி ஒரு நாவிதரைத் தேடி இங்கும் அங்கும் ஓடினார்கள். காந்திஜி அவர்களிடம் சொல்வார் ''நமது சுதேசி இயக்கத்தில் முடி திருத்துபவர்களையும் சலவைத் தொழிலாளிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக முடி திருத்துபவர்கள் சரியான அரட்டைக்கல்லிகள். சுதேசி இயக்கத்தின் நோக்கங்களையும் செய்திகளையும் பரப்புவதற்கு சரியான ஆட்கள்.''
மற்றொரு சந்தர்ப்பத்தில், ஒரிஸ்ஸாவில் காந்திஜி முடி திருத்துபவரின் வருகைக்காகக் காத்திருந்தார். முகத்தை மழிப்பதற்கான உபகரணங்களுடன் ஒரு பெண்மணி அங்கு தோன்றினார். அவர் காதில் பெரிய வளையங்களையும், மூக்கில் மூக்குத்தியும், கழுத்தில் நெக்லசும், காலில் கொலுசும், கைகளில் அரக்கு வளையல்களையும் அணிந்திருந்தார். காந்திஜி அவரிடம் முதலில் கேட்டார் "நீங்கள்தான் எனது முகத்தை மழித்துவிடப் போகிறீர்களா?'' என்று. அப்பெண்மணி "ஆம்" என்று சிரிப்புடன் தலையை ஆட்டிவிட்டு கத்தியைத் தீட்டத் தொடங்கினார். காந்திஜி மறுபடியும் கேட்டார் "நீங்கள் ஏன் இவ்வளவு ஆபரணங்களை அணிந்துள்ளீர்கள்? இவற்றால் உங்கள் அழகு கூடியதாகத் தெரியவில்லை. அவை அசிங்கமாகவும் அழுக்காகவும் உள்ளனவே!" என்று. அப்பெண்மணிக்கு அழுகை வந்துவிட்டது. "உங்களுக்கு எப்படிப் புரிய வைப்பது, இப்பொன்னான சந்தர்ப்பத்திற்காக நான் இந்த நகைகளை இரவல் வாங்கி வந்திருப்பதை. ஒரு பெரிய மனிதனது முகத்தை மழிப்பதற்கு வரும்போது நகைகளை அணியாமல் வருவது முறையாகாதே,'' என்று கூறிய வண்ணம் தன்பணியை அப்பெண்மணி செய்து முடித்தார். காந்திஜி அப்பெண்மணியிடம் கொடுத்த காசை அவர் காந்திஜியின் பாதங்களில் சமர்ப்பித்து அவரை வணங்கிவிட்டுச் சென்றுவிட்டார்.
- தமிழில்: எம். ஆர். ராஜகோபாலன்


Comments

Most Popular

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ