காந்திஜி பிச்சைக்காரர்களின்
மன்னராகத் திகழ்ந்தார் என்றால் கொள்ளைக்காரர்களிடையே அவர் இளவரசராகவும்
திகழ்ந்தார்.
இந்தியாவில் நாள்தோறும்
பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவதையும் ஏழைகள் மேலும் ஏழை ஆவதையும் அவர்
பார்த்தார். தனது வழியிலேயே ஒரு சமத்துவ நிலையைக் கொண்டுவர அவர் விரும்பினார்.
கிராம வாழ்க்கையைப் புனரமைத்து கிராம மக்களின் துயரங்களைப் போக்குவது அவரது
லட்சியம்.
காந்திஜி பணக்காரர்களைக்
கொள்ளை அடித்து ஏழைகளுக்கு உதவுவார். அவர் அக்காலத்திய கொள்ளைக்காரர்களைப் போல
தீவட்டியையோ பட்டாக்கத்தியையோ கையில் ஏந்தவில்லை. அவரது கனிவான பேச்சும் அதில்
தொனித்த நியாய உணர்வுமே அவரது ஆயுதங்கள். பணக்காரர்களைத் தங்களது செல்வத்தை வாரி
வழங்கும்படி கேட்டுக்கொள்வார்; பண்டிதர்களைத் தங்களது அறிவைத் தானம் செய்யும்படி
வேண்டுவார்; முதலாளிகளிடம்
தங்களது லாபத்தைத் தொழிலாளிகளுடன் பங்கிட்டுக் கொள்ளும்படி அறிவுறுத்துவார்; ஆட்சியாளர்களிடம்
மக்களுக்குத் தங்களது உரிமைகளை வழங்கும்படி கேட்பார்; சோம்பித் தாழ்வுற்று நின்ற மக்களை சோம்பலை ஒழித்து
நிமிர்ந்து நிற்கும்படி வேண்டிக்கொள்வார். மக்களின் நலனில் சிறிதும் அக்கறை
காட்டாத வெள்ளையர்களது ஆட்சியை அகற்றி நாமே ஆளவேண்டும் என்றும் அவர்களுக்கு
அறிவுறுத்துவார். அவரது பேச்சில் ஒரு மந்திர சக்தி இருந்தது. இளைஞர்களும்
முதியோர்களும் எளிய கிராமவாசிகளும், கெட்டிக்கார வியாபாரிகளும், எல்லோருமே அவரது பேச்சினால் கவரப்பட்டனர். ஒரு புயல்
காற்றைப் போல அவர் இந்தியாவின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்குப் பயணம்
மேற்கொள்வார்.
சென்ற இடங்களில் எல்லாம்
மக்களைத் தங்களது செல்வங்களையும், குடும்ப பந்தங்களையும் துறந்து நாட்டுப் பணியில் தங்களை அர்ப்பணித்துக்கொள்ளும்படி
வேண்டுவார். குழப்பமுற்றிருந்த உள்ளங்களை அவரது பேச்சு உலுக்கியது.
பெற்றோர் தங்களது மக்களை
நாட்டுப்பணிக்காக அர்ப்பணிக்க வேண்டும்; பர்தா அணிந்த மாதர்கள் தங்களது நகைகளை நாட்டுக்காகத் துறக்க
வேண்டும். ஏழைகளும் தங்களது செப்புக் காசுகளை அளிக்க வேண்டும் என்று கேட்பார்.
ஒரு முறை, நாட்டில் மழை பொய்த்து பயிர்
விளைச்சல் பாதிக்கப்பட்டது. விவசாயிகள் துயருற்றிருந்தனர். அப்போதுகூட அரசு
அவர்களை வரியை முழுவதுமாக கட்டும்படி நிர்ப்பந்தம் செய்தது. வரி வசூலுக்கு வந்த
அரசு அதிகாரிகளுக்கு அஞ்சிய விவசாயிகள் தங்களது கலப்பைகளையும் மாடுகளையும் விற்று
வரிகட்ட முனைந்தார்கள். காந்திஜியோ விவசாயிகளிடம் வரிப்பணத்தைக் கொள்ளை
அடிக்கும்படி கூறினார். அதாவது, அரசுக்கு வரி செலுத்த வேண்டாம் என்று கூறினார். இங்குதான்
காந்திஜியின் புகழ்பெற்ற வரிகொடா இயக்கம் தோன்றியது. காந்திஜியின் தலைமையில்
விவசாயிகள் ஒரு பிரமாணம் எடுத்துக்கொண்டனர். ''நாங்களாகவே முன்வந்து இந்த ஆண்டிற்கான வரியைச்
செலுத்தமாட்டோம். எங்களுக்குச் சொந்தமான நிலங்களை - இழக்கவும் நாங்கள்
தயாராகிவிட்டோம்'' அரசும்
விடாப்பிடியாக பயிர்கள் விளைந்திருந்த நிலங்களை ஜப்தி செய்தது. காந்திஜி
விவசாயிகளிடம் அந்த நிலங்களின் மீது அவர்களுக்கு உரிமை உள்ளது என்று
அறிவுறுத்தினார். ஜப்தி செய்யப்பட்ட வெங்காயம் விளைந்திருந்த வயல்களில் இறங்கி
வெங்காயத்தைக் கொள்ளை அடிக்கும்படியும் கூறினார். ஒரு தொண்டர் படை வயல்களில்
இறங்கி வெங்காயத்தை அறுவடை செய்தது, கொள்ளைக் கூட்டத்தின் தலைவராகிய மோஹன்லால் பாண்டியா கைது
செய்யப்பட்டார். அவர் விடுதலை செய்யப்பட்டதும் அவருக்குப் பெரும் வரவேற்பு
அளிக்கப்பட்டு “வெங்காயத்
திருடர்'' என்ற
பட்டமும் சூட்டப்பட்டது. அக்கூட்டத்திற்கு காந்திஜி தலைமை தாங்கினார். திருடரின்
நெற்றியில் வெற்றித் திலகமும் இட்டார்.
வேறு ஒரு சந்தர்ப்பத்திலும்
மோசமான உணவு பற்றாக்குறை ஏற்பட்ட சூழ்நிலையில் காந்திஜி அதேபோல் நடந்துகொண்டார்.
நிலவரி வசூல் ஆகாததால் அரசு அதிகாரிகள் நிலங்களை ஜப்தி செய்து விவசாயிகளை அவர்களது
குடிசைகளிலிருந்து வெளியேற்றினர். விவசாயிகள் சில பாத்திரம் பண்டங்களுடன் தாங்கள்
பரம்பரையாக வசித்துவந்த வீடுகளிலிருந்து வெளியேறத் தொடங்கினர். அரசு அதிகாரிகள்
அவ்விவசாயிகளிடமிருந்து ஜப்தி செய்யப்பட்ட நிலங்களை ஏலம்விட முற்பட்ட போது யாரும்
ஏலம் எடுக்க முன்வர வில்லை. நீண்ட விசாரணைக்குப்பின் விவசாயிகளின் கோரிக்கைகள்
பாதிக்குமேல் ஏற்றுக்கொள்ளப்பட்டு வஜா செய்யப்பட்டது.
சம்பாரனில் வெள்ளைக்கார
முதலாளிகள் விவசாயிகளை அவுரி பயிரிடச் சொல்லி கட்டாயப்படுத்தினர். ஆனால், நியாயமான கூலி தரவில்லை.
அந்த அவுரியிலிருந்து வெள்ளையாகள் கொள்ளை லாபம் அடித்தனர். இன்னலுற்ற ஒரு விவசாயி
காந்திஜியை உதவிக்கு அழைத்தார். காந்திஜி, உடனே சம்பாரனுக்கு வந்து விசாரணை நடத்தினார். விவசாயிகளின்
கூற்றில் நியாயம் இருப்பதையும் உணர்ந்தார். வெள்ளைக்கார முதலாளிகளுடன் பல
சுற்றுக்கள் பேச்சுவார்த்தை நடந்தது. இறுதியில் வெள்ளையர்கள் பெரும் லாபம் ஈட்டியது
குறைந்து விவசாயிகளின் வருமானம் கூடியது. நூறு ஆண்டுகளாக அவுரி விவசாயம் காரணமாக
சம்பாரன் மீது படிந்திருந்த கறை அகற்றப்பட்டது.
இந்தியனின் சராசரி வருமானம்
நாள் ஒன்றுக்கு ஒரு அணா (ஆறு பைசா) என்றிருந்த சூழ்நிலையில் உப்பின் மீது
விதிக்கப்பட்டு வந்த வரி அதிகமாகத்தான் இருந்தது. சில தானியங்களையும் உப்பையும்
மட்டும் உட்கொண்டு வாழ்ந்து வந்த ஏழை மக்கள் வரிச்சுமையினால் பாதிக்கப்பட்டனர்.
நாட்டின் சில பகுதிகளில் உப்புப் பாறைகளிலிருந்து உப்பினை எளிதாகச் சுரண்டி எடுக்க
முடியும். ஆனால், அப்படி
உப்பைச் சுரண்டி எடுப்பது சட்டப்படி குற்றம் ஆகும். இச்சட்டத்தை எதிர்த்துத்தான்
காந்திஜி உப்பு சத்தியாக்ரஹத்தை மேற்கொண்டார். அரசின் இந்த அநியாய வரி
விதிப்பிற்கு காந்திஜி முடிவுகட்டத் தீர்மானித்தார்.
"ஒன்றுநான் கையில் உப்புடன்
திரும்பி வருவேன் அல்லது எனது பிணம் கடலில் மிதக்கும்... நாம் மரணம் அடைந்தால்
சுவர்க்கத்திற்குச் செல்வோம், கைது செய்யப்பட்டால் சிறைக்குச் செல்வோம்; வெற்றி பெற்றால்
வீடுகளுக்குத் திரும்புவோம்.'' சபர்மதி ஆசிரமத்திலிருந்து தொடர்ந்து 25 நாட்களில் 241 மைல் தூரம் (387 கிலோ மீட்டர்) நடந்து தண்டி
கடற்கரையை அடைந்தார். கடல் நீரிலிருந்து உப்பைக் காய்ச்சி கையில் எடுத்தார்.
சரோஜினி நாயுடு சட்டத்தை மீறிய காந்திஜியை வாழ்த்தி மாலையிட்டு, நெற்றியில் திலகம் இட்டார்.
காந்திஜி கூறுவார். ''ஒரு
கை நிறைய உப்பை எடுத்தது சிறுவர்களின் விளையாட்டைப் போன்றது. நான் நாட்டில்
உற்பத்தியாகும் எல்லா உப்பையும் ஒட்டு மொத்தமாக அள்ளப்போகிறேன்.'' இந்தியா முழுவதிலும் மக்கள்
உப்பு எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். சட்ட விரோதமாக எடுக்கப்பட்ட உப்பைக் கைப்பற்ற
போலீஸ் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. பர்தா அணிந்த பெண்கள் பயணம் செய்த
பல்லக்குகள் சோதனைக்குள்ளாயின. ஒருமுறை காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது
சாலையில் ஒரு போலீஸ் காவலர் நிற்பதைக் கண்டார். காரை நிறுத்திய காந்திஜி
அக்காவலரிடம் “என்னிடம்
சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட உப்பு இருக்கிறது. நீங்கள் என்னைத் தடுத்து
நிறுத்தப்போகிறீர்களா?” என்று
கேட்டார்.
காந்திஜி தாரசேனாவில்
அமைந்திருந்த உப்புக் கிடங்கைக் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தார். அவர் கைதாகிச்
சிறையில் அடைக்கப்பட்டதால் அத்திட்டம் நிறைவேறவில்லை. அவருடைய தொண்டர்கள் ஆயுதம்
ஏதுமின்றி உப்புக் கிடங்கை நோக்கி நடந்தனர். பெரும் சண்டை நிகழ்ந்தது. இரும்புப்
பூண் பொருத்தப்பட்ட தடிகளைக் கொண்டு காவலர்கள் தொண்டர்களைத் தாக்கினர். எலும்புகள்
நொறுங்கின, மண்டைகள்
உடைந்தன. காயங்களிலிருந்து ரத்தம் ஆறாய்ப் பெருகியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில்
பல்வேறு உப்புக் கிடங்குகள் கொள்ளை அடிக்கப்பட்டன. ஒரே ஆண்டில் உப்புச்சட்டம்
தளர்த்தப்பட்டது. வீடுகளில் சொந்த உபயோகத்திற்கும், குறிப்பிட்ட கிராமப் பகுதிகளில் விற்பனைக்கும் வரிகள் இன்றி
உப்பு தயாரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஆங்கிலேய அரசாங்கத்திற்கு
காந்திஜி ஒரு ஏற்றமான எதிரியாக விளங்கினார். அவர்களது பொய் பித்தலாட்டத்தைக்
காட்டிலும் காந்திஜியின் கொள்ளை ஒரு படி மேலானது என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.
ஆங்கிலேயர்கள் வியாபாரிகளாக இந்தியாவுக்கு வந்தனர். ஏமாற்று வித்தை மூலம்
இந்தியாவின் சந்தையைப் பிடித்தனர். உலகிலேயே தலை சிறந்து விளங்கிய இந்தியாவின்
நூற்பு மற்றும் நெசவுத் தொழிலை அழித்தனர். ராட்டைகளும், தறிகளும் ஒட்டடை படிந்து வேலையின்றி கிடந்தன. பாதிக்கப்பட்ட
கைவினைஞர்களில் சிலர் விவசாயத் தொழிலை மேற்கொண்டனர். சிலர் வேறு கூலி வேலைகளைத்
தேடிச் சென்றனர். வளங்கள் நிறைந்த நாடு வறுமையில் வாடியது. லங்காஷயரிலிருந்தும்
மான்செஸ்டரிலிருந்தும் துணிகள் இறக்குமதி செய்யப்பட்டதால் இந்திய நாட்டிற்கு
கோடிக்கணக்கான ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டது. வியாபாரிகளின் கையிலிருந்த அளவுகோல்
ஆங்கில அரசின் செங்கோலாக உருவெடுத்தது.
காந்திஜியின் மனதில் அயல்
நாட்டில் தயாரிக்கப்பட்ட துணி, அயல் நாட்டு மதுபானங்கள் மற்றும் அயல் நாட்டுப் பொருள்களை பகிஷ்காரம்
செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவெடுத்தது. அவர் ஓயாமல் மக்களிடம் கையினால் நூற்று
கைத்தறியில் நெசவு செய்து கதர்த் துணியைத் தயாரிக்கும்படி பிரச்சாரம் செய்து
வந்தார். நூற்பு, நெசவு
தொழில்களில் ஈடுபட்டிருந்த பெண் தொண்டர்களை ஒருங்கிணைத்து வெளிநாட்டில் தயாராகிய
துணி மற்றும் மதுபான வகைகளை விற்பனை செய்யும் கடைகளுக்கு முன்பாக மறியல் செய்யத்
தூண்டினார். நகரங்களிலும் கிராமங்களிலும் பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களை தகனம் செய்தார். இதன் விளைவாக
இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட துணியின் அளவு பெரிதும் குறைந்து
அங்குள்ள மில்கள் மூடப்பட்டன. கைராட்டையின் கதிர்கள் துப்பாக்கி ரவைகளாக
உருவெடுத்து இங்கிலாந்து நாட்டின் மில் தொழிலாளர்களைத் தாக்கின! ஆயிரக்கணக்கானோர்
வேலை இழந்தனர். சில ஆண்டுகளுக்குப் பின் காந்திஜி லங்காஷயருக்குச் சென்றபோது மில்
தொழிலாளர்களது கூட்டத்தில் இவ்வாறு உரை நிகழ்த்தினார்.
"இங்கு பலர் வேலைவாய்ப்பின்றி
இருப்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது. உங்களிடையே 30 லட்சம் பேர்கள் வேலை இன்றி இருக்கிறீர்கள். இந்தியாவில் 30 கோடி பேர்கள் ஆண்டில்
ஆறுமாத காலத்திற்கு வேலை இன்றி இருக்கிறார்கள். இங்கு வேலையின்றி இருப்பவர்களுக்கு
மாதந்தோறும் சராசரியாக எழுபது ஷில்லிங் (45 ரூபாய்) உதவித்தொகையாக அளிக்கப்படுகிறது. எங்கள் நாட்டிலோ
சராசரி மாத வருமானமே ஏழரை ஷில்லிங் (5 ரூபாய்) தான். இந்தியாவில் வாழும் ஏழைகளான நூற்போர்
மற்றும் நெய்வோரின் வயிற்றில் அடித்து நீங்கள் வசதியுடன் வாழ விரும்புகிறீர்களா.?" காந்திஜி திறந்த மனதுடன்
இப்படி பேசியதை அந்த மில் தொழிலாளிகள் பாராட்டினர்.
காந்திஜி ஏழைகளுக்கும்
பணக்காரர்களுக்கும் இடையே இருந்த இடைவெளியைக் குறைப்பதற்கு பல முயற்சிகளை
மேற்கொண்டார். துப்புரவுத் தொழிலாளர்களின் கூட்டம் ஒன்றில் ஒரு பெண்மணி தனது
கைகளிலிருந்த இரண்டு தங்க வளையல்களைக் கழற்றி காந்திஜியிடம் அளித்தார். அப்பெண்மணி
கூறுவார்: "இப்போதெல்லாம் கணவன்மார்கள் மனைவிகளுக்காக எதுவுமே தருவதில்லை.
ஏதோ என்னால் இயன்றது இந்தச் சிறு அன்பளிப்புதான். இவை, என்னிடம் கடைசியாக மிஞ்சிய நகைகள். இவற்றை நீங்கள்
ஹரிஜனங்களின் நலனுக்காக பயன்படுத்தலாம்.'' காந்திஜி பதில் சொன்னார்: "நான் சில டாக்டர்களையும்
வக்கீல்களையும், வியாபாரிகளையும்
ஓட்டாண்டிகளாக்கிவிட்டேன். அதற்காக நான் வருந்தவில்லை. வறுமையில் சிக்கி வாழும்
நம் இந்திய நாட்டில் ஒரு பைசா சம்பாதிப்பதற்காக சிலர் மைல் கணக்கில் நடக்கின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் சிலர் விலையுயர்ந்த நகைகளை அணிவது சரியல்ல.'' சில சந்தர்ப்பங்களில் சில
பெண்கள் தங்களது கைகளிலிருந்து வளையல்களைக் கழற்றுவதற்கு சிரமப்பட்டபோது காந்திஜி
அவ்வளையல்களை வெட்டி எடுத்துவிடுவார். சில விமர்சகர்கள் காந்திஜி பெண்களிடமிருந்து
பொதுநலனுக்காக நகைகளைப் பெறுவதை வன்மையாகக் கண்டனம் செய்தனர். காந்திஜி சற்றும்
அசைந்து கொடுக்கவில்லை. "எனது கூட்டங்களில் ஆயிரக்கணக்கான சகோதரிகள்
பங்கேற்று தாங்கள் அணிந்துள்ள நகைகள் அனைத்தையுமோ அல்லது ஒரு சிலவற்றையோ என்னிடம்
தர வேண்டும்'' என்று
கேட்டுக்கொண்டார். ஒரு இளம் விதவை அவரைத் தனது வீட்டிற்கு அழைத்து, தனது நகைகளைத் தானம்
செய்தார். தனது கணவரின் மாத வருமானம் ரூபாய் நாற்பது மட்டும் இருந்த
நிலையிலும்கூட. வேறொரு பெண்மணி காந்திஜி தனது வீட்டிற்கு வந்து தான் வழங்க
இருக்கும் நகைகளைப் பெற்றுச் செல்ல வேண்டும் என்று கோரி உண்ணாவிரதமே
தொடங்கிவிட்டார்.
பொதுக்கூட்டம் ஒன்றில் ஒரு
இளம் பெண் மேடையில் ஏறி தனது தங்க நெக்லஸ், வளையல்கள் மற்றும் காதணிகளைக் கழற்றி காந்திஜியிடம்
வழங்கினார். கொடையாளிகளிடம் காந்திஜி ஒரு வேண்டுகோள் விடுத்தார்: "இப்பெண்கள்
வழங்கிவிட்ட நகைகளை மீண்டும் அவர்களுக்குச் செய்து போடாதீர்கள். ஒரு பெண்ணின்
உண்மையான அணிகலன்கள் அவளது தூய்மையும் நன்னடைத்தையுமே." சின்னஞ்
சிறிசுகளையும் காந்திஜி விட்டுவைக்கவில்லை. ஒரு சிறுபெண் காந்திஜியிடம் மலர்க்
கொத்துகளை வழங்குவதற்காக வந்தபோது அவர் அப்பெண்ணின் கைவிரலிலிருந்த சிறிய மோதிரத்தைப்
பார்த்துவிட்டார். அச்சிறு பெண்ணிடமிருந்து மோதிரத்தை அவர் வாங்கிவிட்டார். ஒரு
பையனின் காதிலிருந்த தங்க கடுக்கன்களையும் அவர் பறித்துக்கொண்டுவிட்டார்.
அப்பையனிடம் "என்னை முறைப்படி வணங்கிவிட்டு ஓடிப் போய்விடு, எனது ரத்த அழுத்தம் 195ஐத் தாண்டிக்கொண்டிருக்கிறது.'' எந்தக் குழந்தையிடமும் அதன்
பெற்றோரின் சம்மதத்தைப் பெறாமல் நகைகளை வாங்கமாட்டார்.
காந்திஜி கொள்ளை அடிப்பதில்
சாமர்த்தியம் வாய்ந்தவர் என்று பெயர் எடுத்திருந்தும்கூட அவரிடம் பொருள்களை
இழப்பதற்குப் பலரும் விரும்பி அவரை வரவேற்றனர். ஒரு அன்பர் காந்திஜி தனது வீட்டில்
தங்க சம்மதித்தால் ஒவ்வொரு நிமிஷத்திற்கும் ரூபாய் 116 அளிப்பதாகக் கூறினார்.
காந்திஜியிடம் போதுமான அவகாசம் இல்லாததால் இரண்டு நிமிஷங்கள் மட்டுமே தங்கினார்.
ஒருமுறை காந்திஜி திடீரென்று
நோய்வாய்ப்பட்டபோது அவருடைய டாக்டர் நண்பர் அவரைப் பார்க்க ஓடோடி வந்தார்.
காந்திஜியோ டாக்டரைக் கிண்டலாக “என்னைப் பரிசோதித்துப் பார்க்க உங்களை நான் அனுமதிக்கிறேன்.
அதற்கு நீங்கள் எவ்வளவு பணம் தருவீர்கள்” என்று கேட்டார். டாக்டர் கட்டணம் ஏதும் வசூலிக்கவில்லை.
தனது கையிலிருந்த பணம் முழுவதையும் காந்திஜியிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்.
மோதிலால் நேருவும் தேசபந்து
(சித்தரஞ்சன்) தாசும் பல்லாயிரக்கணக்கில் வருமானம் தந்துகொண்டிருந்த தங்களது
வக்கீல் தொழிலைத் துறந்து அரண்மனை போன்ற தங்களது வீடுகளையும் நாட்டிற்காக
அர்ப்பணித்தனர். இதுபோல் ஆயிரக்கணக்கான கோடீஸ்வரர்களைப் பிச்சைக்காரர்களாக மாற்றிய
பெருமை காந்தியையே சாரும்.
- தமிழில்: எம். ஆர். ராஜகோபாலன்
Comments
Post a Comment