Skip to main content

பல ரூபங்களில் காந்தி: சலவைத் தொழிலாளி | அனு பந்தோபாத்யாயா


பாரிஸ்டர் காந்தி சீரான முறையில் ஐரோப்பிய உடைகளுடன் கோர்ட்டுக்குச் சென்று வந்தார். தினந்தோறும் அவரது சட்டைக்குப் பொருந்தும் விதத்தில் காலரும் தேவைப்பட்டது. சட்டையை ஒவ்வொரு மூன்றாவது நாளும் அவர் மாற்றி வந்தார். சலவைக்கு அவர் நிறையப் பணம் செலவழிக்க வேண்டி வந்தது. சலவைத் தொழிலாளி, துணிகளைத் தாமதமாகவே கொண்டுவந்துகொண்டிருந்தார். இதனால், காந்திஜிக்கு நிறைய உடைகளை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. முப்பத்தாறு சட்டைகளும் காலர்களும்கூட சலவைத் தொழிலாளியின் தாமதத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
காந்திஜி தனது செலவுகளைக் குறைக்க எண்ணினார். ஒரு நாள், அவர் சலவைக்குத் தேவையான உபகரணங்களுடன் வீட்டிற்குத் திரும்பினார். துணிகளைச் சலவை செய்வது பற்றி ஒரு புத்தகத்தையும் வாங்கிப் படித்தார். இவ்வாறு தன்னைத் தயார் செய்துகொண்ட பின், துணிகளை வெளுக்க முனைந்தார் காந்திஜி. கஸ்தூர்பா, காந்திஜி செய்யும் பணியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க அனுமதிக்கப்படவில்லை. அவருக்கும் சலவைப் பயிற்சி அளிக்கப்பட்டது. காந்திஜியின் தினசரிப் பணிகளில் இன்னும் ஒரு வகை கூடியது. ஆனால், வேலைப் பளுவைப் பற்றி காந்திஜி எப்போதுமே மலைத்ததில்லை. சலவைத் தொழிலாளியின் "கொடுங்கோன்மையிலிருந்து'' விடுதலை பெறுவதுதான் அவருக்கு முக்கியமாகப் பட்டது. முதல் நாள், அவர் காலரைச் சலவை செய்து கஞ்சி போட்டு உலர்த்தினார். அனுபவமின்மை காரணமாக இஸ்திரிப் பெட்டி சூடேறுவதற்கு முன்பாகவே, போதிய அழுத்தமும் தராமல் இஸ்திரி தேய்த்துவிட்டார். அதிகச் சூடு அல்லது அழுத்தத்தில் துணி எரிந்துவிடும் என்று அவர் பயந்தார். அன்று நீதிமன்றத்திற்கு அந்தக் காலருடன்தான் அவர் சென்றார். கஞ்சி அதிகமாக இருந்ததால் காலர் அதிகமான விரைப்புடன் காணப்பட்டது. அவரது நண்பர்கள் அதைப் பார்த்து சிரித்தனர். காந்திஜி அதைப் பொருட்படுத்தவில்லை. ''துணி வெளுப்பதில் எனக்கு இது முதல் அனுபவம். அதனால்தான், கஞ்சி சற்று அதிகமாகிவிட்டது. ஆனாலும் பரவாயில்லை. உங்களுக்கெல்லாம் என்னைப் பார்த்து சிரிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அல்லவா, அதுவே போதும்,'' என்றார் காந்திஜி.
"லாண்டரிகள் இல்லாமலா போய்விட்டன?" என்று வினா எழுப்பினார் ஒரு நண்பர்.
"லாண்டரிகள் இருக்கின்றன. கட்டணம்தான் அதிகமாக உள்ளது. ஒரு காலரை வெளுப்பதற்கு அவர்கள் கேட்கும் கட்டணத்தில் இன்னொரு காலரே வாங்கிவிடலாம். மேலும் நாம் சலவைத் தொழிலாளியின் தயவில் இருக்க நேரிடுகிறது. எனது துணிகளை நானே சலவை செய்துகொள்வதையே நான் விரும்புகிறேன்," என்று காந்திஜி விடையளித்தார். சிறிது காலத்திற்குள் காந்திஜி ஒரு சிறந்த சலவைத் தொழிலாளியாகவும் உருவெடுத்துவிட்டார்.
காந்திஜியின் குருவான கோகலே, ஒரு தடவை அவருடன் தங்கி இருந்தார். கோகலே ஒரு விருந்தில் கலந்துகொள்ள வேண்டி இருந்தது. அவரது கழுத்துப் பட்டி கசங்கி இருந்தது. காந்திஜி அவரிடம், “நான் அதை இஸ்திரி போட்டுத் தரட்டுமா?”. என்று கேட்டார். கோகலேயோ "உனது வழக்காடும் திறமையில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் சலவை-இஸ்திரி விஷயத்தில் நம்பிக்கை இல்லை. நீ அதைச் சரியாக செய்யாவிட்டால் என்ன ஆகும்?'' என்று பதில் கொடுத்தார். காந்திஜி பிடிவாதமாக அந்தக் கழுத்துப்பட்டியை இஸ்திரி செய்து கொடுத்தார். கோகலேக்கு காந்திஜியின் பணி திருப்தி அளித்தது. காந்திஜிக்கு அதில் மிக்க மகிழ்ச்சி. "இனிமேல் எனக்கு யாருடைய சான்றிதழும் தேவை இல்லை! கோகலேயே என் பணியில் திருப்தி அடைந்துவிட்டாரே!'' என்று கூறினார் காந்திஜி.
தென் ஆப்பிரிக்காவில் காந்திஜி நிறுவிய ஆசிரமங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவி வந்தது. துணிகளை வெளுப்பதற்காகப் பெண்கள் நீரைத்தேடி வெகு தொலைவு நடக்க வேண்டி இருந்தது. அப்போது காந்திஜி அவர்களுக்கு உதவி வந்தார். கதர் உற்பத்தியின் ஆரம்ப கட்டத்தில் தயாராகிய புடவைகள் மிகவும் கனமாக இருக்கும். காந்திஜியின் விருப்பத்திற்கிணங்க பெண்கள் அவற்றை அணிந்தார்கள். ஆனால், அவற்றைத் துவைப்பதற்கு சிரமப்பட்டார்கள். காந்திஜி தாமே அவர்களது துணிகளைத் துவைத்துத்தர முன்வந்தார். பிறருடைய துணிகளை வெளுத்துத் தருவது பற்றி அவர் சிறிதும் வெட்கமோ தயக்கமோ காட்டவில்லை. ஒரு தடவை அவர் ஒரு தனவந்தரின் வீட்டில் விருந்தாளியாகத் தங்கி இருந்தார். குளியலறையில் நுழைந்தபோது வெள்ளை வேஷ்டி ஒன்று தரையில் கிடப்பதைப் பார்த்தார். தனது துணிகளுடன் சேர்த்து அதையும் அவர் துவைத்து உலர்த்திவிட்டார். ''வெள்ளைத் துணிகளை நல்ல சூரிய வெளிச்சத்தில் உலர்த்தினால்தான் அவை பளிச்சிடும், கிருமிகளும் அழிந்துபோகும்'' என்று காந்திஜி கூறிவந்தார். அந்த தனவந்தருக்கு சங்கடமாகப் போய்விட்டது. "பாபுஜி, ஏன் இப்படிச் செய்தீர்கள்?'' என்று கேட்டார். "ஏன்? இதில் என்ன தவறு? குளியலறையில் கீழே கிடந்த அந்த வெள்ளைத் துணி அழுக்காகி இருக்கும். அதை நான் துவைத்து வைத்தேன். அழுக்குத் துணியை வெளுத்தது பற்றி நான் வெட்கம் அடைவதில்லை'' என்று காந்திஜி கூறினார். காந்திஜிக்கு வெட்கம் ஏற்படவில்லை. ஆனால் அந்த தனவந்தருக்கு ஏற்பட்டது.
முதுமைப் பருவத்திலும்கூட சிறைவாசத்தின்போது, தனது அரையாடை, துண்டு, கைக்குட்டை ஆகியவற்றைத் தாமே சலவை செய்து, தனது சக ஊழியர்களுக்கு அந்த வாய்ப்பு அளிப்பதைத் தவிர்த்து வந்தார். ஆகாகான் அரண்மனையில் அன்னை கஸ்தூர்பாவின் இறுதி காலத்தில் அவரது கைக்குட்டைகளை அண்ணலே துவைத்து வைப்பார்.
தனது உடைகளில் எப்போதுமே அவர் கவனம் செலுத்தி வந்தார். சிறுவனாக இருந்தபோதே தனது வேஷ்டி மற்ற சிறுவர்களின் வேஷ்டியைக் காட்டிலும் வெண்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணி நன்றாகத் துவைப்பார். கிணற்றில் தண்ணீர் இறைத்து துணிகளை அவர் வெளுப்பார். பிறரின் எளிமையை காந்திஜி பாராட்டுவார். ஆனால், அழுக்கான கசங்கிய உடைகளை அவர் வெறுத்தார். தனது அரையாடை, மேல்துணி, துண்டு ஆகியவற்றை அழுக்கு, கறை ஏதும் இன்றி மிகவும் சுத்தமாகவும், இஸ்திரி செய்தும் அவர் வைத்திருப்பார். தூய்மையின் மொத்த உருவமாக காந்திஜி விளங்கிவந்தார்.
- தமிழில்: எம். ஆர். ராஜகோபாலன்

Comments

Most Popular

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி...

புதுமையும் பித்தமும் - 3 | க. நா. சுப்ரமண்யம்

புதுமையும் பித்தமும் - 2 | க. நா. சுப்ரமண்யம் இந்தப் பகுதியில் பொதுவாக இலக்கியத்தைப் பற்றியும் , சிறப்பாகத் தமிழ்ச் சிறுகதை பற்றியும் புதுமைப்பித்தன் சொல்லிப் போயிருக்கிற சில விஷயங்களைப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அவர் படைப்புகளில் ஆட்சி செலுத்திய கொள்கைகள் , சித்தாந்தங்கள் முதலியவற்றையும் , அவருக்கிருந்த இலக்கிய நோக்கம் , வாழ்க்கை லட்சியங்கள் இவற்றையும் ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள இது உபயோகமாக இருக்கும். இலக்கியம் என்றால் என்ன என்கிற கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்கிற மாதிரி தன் கட்டுரைத் தொகுப்பிற்கு அவர் முன்னுரை எழுதுகிறபோது சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். ‘வாழ்வு , வாழ்க்கை என்று இரண்டு பதங்கள் உண்டு. இவற்றிடையே உள்ள தொடர்பையோ தொடர்பற்ற தன்மையையோ விளக்குவது , மனித சிந்தனையின் சாரம். வாழ்வு எனில் தோற்றம் , ஸ்திதி , மறைவு என முக்கூறாகத் தோன்றும் பிரபஞ்சத்தன்மை. வாழ்க்கை என்பது தனிப்பட்ட ஜீவராசியின் உயிர்ப் பாசத்தினால் நிகழும் அவஸ்தை. இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுவது மனித சிந்தனையின் சாரம். அது தத்துவமாக உருவாகிறது. வாழ்வின் நியதி ஒன்று , சூத்திரம் ஒன்று என்று வற்பு...

தமிழில் வசனநடை | க. நா. சுப்ரமண்யம்

எல்லா மொழிகளிலுமே இலக்கிய ரீதியாகக் கவனிக்கும்போது கவிதை என்பதை ஒட்டிப் பின்னர்தான் வசன நடை என்பது எழுந்திருக்கிறது என்பது வெளிப்படை . தமிழும் அதற்கு விலக்கல்ல . தமிழ்க் கவிதை கி . மு . ஐந்தாயிரத்தில் தோன்றியது என்று வைத்துக்கொண்டால் , கவிதை தோன்றி ஆறாயிரத்து எழுநூற்றிருபது வருஷங்களுக்குப் பிறகுதான் வசன நடை தோற்றிற்று . தமிழ்க் கவிதை தோன்றியது கி . பி . மூன்றாம் நூற்றாண்டை ஒட்டியே என்று ஏற்றுக்கொண்டால் , வசனம் தோன்றியது ஒரு ஆயிரத்தி நானூறு வருஷங்களுக்குப் பிறகு என்றுதான் சொல்ல வேண்டும் . நான் இந்த இரண்டாவது காலவரையே நியாயமானது என்று எண்ணுபவன் . எஸ் . வையாபுரிப் பிள்ளை அவர்களின் ஆராய்ச்சிகளும் இதையே வற்புறுத்துகின்றன என்று தான் சொல்லவேண்டும் . உரை என்று சொல்லப்படுவதும் வசனமும் ஒன்றுதான் என்று அபிப்பிராயம் தெரிவித்துக்கொண்டிருப்பதில் சாரமில்லை . உரை இருந்திருக்கிறது . தமிழர்கள் ஊமைகள் அல்ல , ஆரம்ப காலத்திலிருந்தே உரையாடிக்கொண்டுதான் வந்திருக்கிறார்கள் என்று சொல்வது ஹாஸ்யமாகப் பொருத்தமாக இருக்கும் . உ...