Skip to main content

பூதான உதயம் - 2 | வினோபா பாவே

சுயநலத்திற்கு உயர்ந்த பயிற்சி
ஒரு நண்பர் பாபா அனைவரையும் பரமார்த்திகளாக்கதுறவிகளாக்க விரும்புகிறாரென்று எழுதியிருந்தார். மனிதனிடம் பரமார்த்த உணர்ச்சி குறைவாயும் சுயநல உணர்ச்சி அதிகமாயும் இருக்கிறதென்று சொல்லப்படுவதை நான் ஒப்பவில்லை. மனிதனைப் பற்றிய இந்தக் கருத்தே தவறென்பது என் அபிப்பிராயம். சமூகத்திற்காகத் தனது என்பதனைத்தையும் துறப்பதில்தான் மனிதனுடைய நலம் அமைந்திருக்கிறது. மனிதன் எந்த அளவுக்குப் பிறருக்காகத் துறக்கிறானோ, தியாகம் புரிகிறானோ அதே அளவுக்குப் பயன் பெறுகிறான் தாய்க்குத் தம் வீட்டில் கிட்டும் இன்பம் எந்த சுயநலமி அல்லது உலோபிக்குக் கிட்டும்? தாய்மாரிடம், “நீங்கள் சமையலானதும் சாப்பிட்டுவிட்டுப் பிறகு குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் உணவளித்தாலென்ன?” என்று கேட்டுப்பாருங்கள். தாய்மார் தம் குழந்தைகளிடம், “நீங்கள் அனைவரும் என்னை அண்டி, என்னை நம்பி இருப்பதால் என் உடல் வலுவாயிருக்கவேண்டும். எனவே நான் முதலில் பால் அருந்துகிறேன், பிறகு நீங்கள் அருந்துங்கள்என்று சொல்வார்களானால், தாய்மார் நவீன பொருளாதார விற்பன்னர்களிடம் சீடர்களாகிய இத்தகைய சுயநலப்பாடம் படித்து அனுஷ்டிப்பார்களானால், அவர்களுக்கு அதனால் என்ன இன்பம் ஏற்படும்? இவ்வாறு வீட்டுக்கு வீடு பரமார்த்தத்தின் உதாரணம் நிதரிசனமாய் இருந்து வருகையில், தியாகம் செய்வோருக்கே இன்பம் கிட்டுகிறது என்று நான் அனுபவத்தில் உணருகையில் நான் அதிகமாய் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. "உங்களுக்கு உங்கள் வீட்டிலேயே இன்பம் பெறுவதற்கான முறை போதிக்கப்படுகிறது. அதற்கான யுக்தி உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. அதையே தம் தம் கிராமங்களில் உபயோகியுங்கள்" என்று மட்டுமே நான் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் வீட்டில் தம் குழந்தைகளைப்பற்றிக் கவலைப்படுவீர்களேயன்றி தம்மைப்பற்றி அவ்வளவு நினைப்பதில்லை, நீங்கள் தம் வீடுகளில் அனுஷ்டிக்கும் அதே நியாயத்தை கிராமத்திலும் அனுஷ்டித்தால் உங்கள் இன்பம் பெரிதும் பெருகும்.
இந்த விஷயத்தைப் புரிந்துகொள்ளுதல் மிகவும் சுலபம். இதை எழுத்து வாசனை இல்லாதவர்களும் புரிந்துகொண்டுவிட்டமையால் கோராபுட் ஜில்லாவில் 350  கிராமத்தில் மக்கள் தம் கிராமங்களனைத்தையும் தானமளித்துவிட்டார்கள். சமூகத்திற்கு உண்மையான சுயநலப் பயிற்சி அளிப்பதாய் நான் உரிமையுடன் கூறுகிறேன். இந்தியன் ஒவ்வொருவனுடைய சுயநலமும் அவன் தனது தனி உடைமைஉரிமையைத் துறப்பதில்தான் அடங்கியிருக்கிறது.
கால்பந்து விளையாட்டு உதாரணம்
கால்பந்து விளையாட்டு எப்படி நடக்கிறதென்று உங்களுக்குத் தெரியும். என்னிடம் பந்து வந்ததும் நான் அதைப் பிடித்து என்னிடமே பத்திரமாய் வைத்துக்கொண்டிருந்தால் ஆட்டம்தான் நடக்குமா, அதனால் இன்பந்தான் ஏற்படுமா? என்னிடம் பந்து வந்தவுடனே நான் அதை இன்னொருவனிடம் உதைத்துத் தள்ளுகிறேன். அப்பொழுதுதான் ஆட்டம் நடக்கிறது, இன்பம் ஏற்படுகிறது. இதே வகையில் நம் கைக்கு வரும் பணத்தை நம்மிடமே கெட்டியாய் வைத்துக்கொண்டிருப்பதில் இன்பமில்லை; அதை சமூகத்திடம் திரும்பச் சேர்ப்பதில்தான் இன்பமிருக்கிறது. உங்களுக்கு ஒரு லாடு கிடைத்து உங்கள் கை, பொருளாதார சாஸ்திரம் பயின்ற வித்வானாகையால் லட்டுவை அது தன்னிடமே மூடி வைத்துக்கொண்டிருந்தால் உணவே இல்லாமற்போய்விடும். ஆனால் அது தன் நலம் அந்த லாடுவை வாயில் போடுவதில்தான் இருக்கிறது என்பதை உணருகிறது. வாய் சுயநலம் காரணமாய் லாடுவை தன்னிடமே வைத்துக்கொண்டிருந்தால் வாயே லாடுவைப் போல உப்பிப்போகுமேயல்லாது அதை உண்ட இன்பம் அதற்கு எவ்வாறு ஏற்படும்? ஆனால் வாய் பரமார்த்த நோக்குடன் லாடுவை வயிற்றினிடம் சேர்த்துவிடுகிறது. வயிறும் சுயநலமியாக லாடுவை கெட்டியாய்ப் பற்றிக்கொண்டிருந்துவிடுமாயின் வயிறு உப்பிப்போய் சஸ்திர சிகிச்சை செய்யவேண்டிவரும். ஆனால் வயிறோ அதை வைத்துக்கொண்டு பெரிதும் உழைத்து ரத்தமாக்கி உடலெங்கும் அனுப்பிவிடுகிறது.
இதே வகையில் பிறரைப்பற்றியே ஓயாது சிந்திப்போர் அடங்கியதே உயிருள்ள சமூகம். கையிடம் வந்த லாடுவை அது உடனே வாயில் போட்டுவிடுவதைப்போல தமக்குக் கிடைத்த செல்வத்தை, பொருளை பிறரிடம் அனுப்பிவிடுவோரைக் கொண்ட சமூகமே உயிருள்ள சமூகம். நிலத்தையும் மற்ற செல்வத்தையும் தம்மிடமே கெட்டியாய்ப் பிடித்துவைத்துக்கொண்டிருப்போர் உள்ள சமூகம் உயிரற்ற சமூகமே. ஒரு சமயம் ஒரு பையன் என்னிடம் வந்து காது நோகிறதென்று சொல்லி அழுதான். நான் குசும்புக்காரனாகையால் அவனிடம் "தம்பி காதல்லவோ நோகிறது? கண்ணில் நீர் வடிவானேன்? கண் அழுவானேன்?" என்று கேட்டேன். ஆனால் காதின் நோவு கண்ணையும் அடைகிறது. இதுவே உயிருள்ள உடலுக்கு அறிகுறி. ஒருவன் காதில் ஒரு முளையை வைத்து அடித்தாலும் கண்ணிலிருந்து துளி நீர் வரவில்லையென்றால் அந்த உடலில் உயிரில்லை, அது பிணமென்று அறியவேண்டும். இதே வகையில் ஒரு கிராமத்தில் ஒரு வீட்டாருக்கு நேர்ந்த துன்பம் அண்டை அயலாரைப் பாதிக்கவில்லையென்றால் அந்த கிராம சமூகத்திற்கு உயிரில்லையென்று உணரவேண்டியதே.
வினேபாவைக் காணவே பயம்!
இது மிகவும் சாதாரண விஷயமாகையால் இதை எல்லோரும் புரிந்துகொள்ளுகிறார்கள். சில பெரிய மனிதர்கள் பாபாவை அணுகவே அஞ்சுகிறார்கள். ஒரு சமயம் ஒரு பெரிய மிராசுதாரிடம், "நம் ஊருக்கு பாபா வந்திருக்கிறாரே, போய்ப் பார்த்துவிட்டு வரலாம் வாருங்கள்" என்று ஒருவர் சொன்னார். அதற்கு அந்த மிராசுதார் "எனக்கு பாபாவிடம் பெருமதிப்புண்டு. நான் அவருடைய நூல்களைப் படித்திருக்கிறேன். ஆனால் இப்பொழுதைக்கு அவரைப் பார்க்க விருப்பமில்லை" என்று பதில் சொன்னாராம். "ஏன்?" என்று கேட்டதற்கு, "பார்க்கப் போனால் அவர் நிலம் கொண்டா என்பார். அவர் கேட்டுவிட்டால் என்னால் இல்லையென்று சொல்ல முடியாது'' என்று பதில் வந்தது. அதற்கு அழைத்தவர் "அவர் கேட்டால் கொடுத்துத்தான் தீரவேண்டுமா? உங்களுக்கு விருப்பமில்லையென்றால் கொடுக்க வேண்டாமே. அவர் சொல்லுவதை காதில் வாங்கிக்கொண்டு வந்துவிடுமே. நிர்ப்பந்தம் செய்து நம் நிலத்தைப் பெறுவதற்கு அவருக்கு அதிகாரமேது? அன்புடன் விரும்பிக் கொடுப்பதைத்தானே அவர் வாங்கிக்கொள்ளுகிறார்." என்று சொன்னார். அப்பொழுது மிராசுதார், "இதில்தானே ஆபத்திருக்கிறது. அவர் அன்பாய்க் கேட்கிறார். அவர் சொல்லுவதெல்லாம் உண்மையாயிருக்கிறது. அதனால்தான் என்னால் அதை மறுக்க முடியாதே என்று அஞ்சுகிறேன்" என்று சொன்னார். என்னிடம் இந்தச் செய்தி வந்தபொழுது நான், "எனக்கு அவருடைய நிலம் கிடைத்துவிட்டது. அவர் என் வார்த்தையை ஏற்றுக்கொண்டுவிட்டாரல்லவா? அதற்குமேல் எனக்கு வேறெதுவும் தேவையில்லை" என்று சொன்னேன். இந்தியாவின் மக்களனைவரும் பாபா சொல்லுவதை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டுவிட்டார்களெனின் அதன் பிறகு பாபாவுக்கு ஒரு ஏக்கர் நிலமும் வேண்டியதில்லை. அப்பொழுது நிலத்தை வாங்கிப் பிறகு அதை விநியோகிக்கும் சிரமம் எனக்கேது? என்னை ஆட்டி அலைக்கழிக்கும் கருத்து உங்கள் உள்ளங்களிலும் இடம்பெற்றுவிடுமாயின் அது உங்களை அமைதியாய் இருக்க விடாது; ஆட்டி அலைக்கழிக்கும்.
ஒரு முஸ்லீம் அன்பரின் தானம்
ஒருசமயம் ஒரு முஸ்லிம் மிராசுதார் என்னைக் காண வந்தார். நான் அவரிடம், “நீங்கள் ஐந்து பேர் சகோதரர்களென்றால் எனக்கு ஆறில் ஒரு பகுதி உங்கள் நிலத்தில் அளியுங்கள்என்று சொன்னேன். அதற்கு அவர், “ஆண்டவன் அருளால் நாங்கள் ஐவரே" என்றார். அதற்கு நான், "ஆண்டவன் ஏவலால் நான் உங்கள் ஆறாவது சகோதரனாகிவிட்டமையால் எனக்கு ஆறில் ஒரு பகுதி வேண்டும்என்றேன். அவர் கெட்டிக்காரர். முஸ்லிம்களாகிய எங்களிடையே சகோதரர்களைப் போலவே சகோதரிகளுக்கும் சொத்தில் சம உரிமை உண்டே" என்றார். அவர் இதைச் சொன்னவுடனே அவர் என் உரிமையை ஏற்றுக்கொண்டுவிட்டாராகையால் எனக்கு வெற்றி தானென்று உணர்ந்தேன். பிறகு, “உங்களுக்கு எத்தனை சகோதரிகள்?” என்று நான் கேட்கவே, "இருவர்'' என்றார் அவர். அப்பொழுது நான், "ஐந்து சகோதரர்கள், இரு சகோதரிகள் சேர்ந்து ஏழாயிற்று. நான் எட்டாமவன். எனக்கு அரைக்கால் பங்கு கொடுத்துவிடுங்கள்" என்றேன். அவர் உடனே அரைக்கால் பங்கு கொடுத்துவிட்டார். இம்மாதிரியான நிகழ்ச்சிகளையெல்லாம் நான் உங்களுக்கு சொல்வதென்றால் அது ஒரு பாரதமாகிவிடும். இம்மாதிரியான ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளை இந்த என் கண்கள் கண்டிருக்கின்றன. இதுவரை 41 லட்சம் பேர் தானமளித்திருக்கிறார்கள். தான மளித்தவர்களுள் கண்ணே தெரியாத குருடரும் உண்டு. ஒரு சகோதரி தானம் வழங்க இரவில் வெகுநேரம் தாழ்த்தி வந்து சேர்ந்தார். அதற்கு முன் நாங்கள் தூங்கப்போய்விடவே அவர் இரவை அங்கேயே கழித்துவிட்டு மறுநாள் காலையில் தானமளித்தபின் விடைபெற்றுச் சென்றார். சிறுபிள்ளைகளும் தம் தந்தையரை வற்புறுத்தி தானம் வழங்கச் செய்திருக்கிறார்கள்.
நாம் உலக சக்தியின் கருவி
சகோதரர்களே, இவற்றிலிருந்தெல்லாம் நாம் அறிவதென்ன? உலகின் சக்தி ஏதோ பெரிய காரியமொன்றை நிறைவேற்ற விரும்பியுள்ளது. நாம் அந்த உலக மகா சக்தியின் கருவிகளே. கிருஷ்ணபகவான் கீதையில் அர்ஜுனனிடம், ''இவர்கள் அனைவரும் என்னால் ஏற்கனவே மடிந்துவிட்டார்கள். நீயொரு வியாஜமாயிருந்து என் ஏவலைச்செய்" என்று சொல்லுகிறார். இவ்வாறே நான் உங்களிடம், இந்தியாவில் நிலத்தில் மக்களின் உடைமை மரித்துப்போய்விட்டது. இப்பொழுது முன்வந்து தானம் வழங்குகிறவர்கள் தாராள மனமுள்ளவர்களென்று ஆகும். இவர்கள் உலக சக்தியின் கருவியாக ஆவார்கள், நன்மை பயக்கும் ஆயுதமாவார்கள். பகவான் கையில் ஜொலித்துக்கொண்டிருக்கும் சுதர்சனச் சக்கரம் போன்றவர்கள் இவர்கள். இல்லையேல் இந்தக் காங்கிரஸ்காரர்களெல்லாம் எதற்காக என்னை அணுகுகிறார்கள்? அவர்களுக்கு பாபாவிடமிருந்து நாலணா சந்தாவாவது கிடைத்திருக்குமென்று எண்ணுகிறீர்களா? மணலைப் பிழிந்து எண்ணை எடுத்தாலும் எடுக்கலாமே தவிர பாபாவிடமிருந்து நாலணா வாங்கிவிட முடியாது. ஆனால் பாபா சொல்லுவது உண்மையாகையால் அதை யாரும் மீறமுடியாதிருக்கிறது. பாபாவுக்கு உலக மகாசக்தியின் மீது, ஆத்ம சக்தியின் மீது, கடவுளின் சக்தியின் மீதுஅதை நீங்கள் எந்தப் பெயரால் வேண்டுமோ அழைத்துக்கொள்ளுங்கள்நம்பிக்கை இருக்கிறது.
- தொடரும்

Comments

Most Popular

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி...

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...

நாகம்மாள்: முன்னுரை

முதல் முதலில் ஸ்ரீ ஷண்முகசுந்தரத்தின் சிறுகதைகளைப் படித்தபொழுது அவற்றில் தென்பட்ட கிராமாந்தர வாழ்க்கை அனுபவத்தைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். அவ்வளவு தேர்ச்சி பெற்றவர் குடியான வாழ்க்கையையே ஆதாரமாகக் கொண்ட நவீனம் ஒன்றை எழுதலாம் என்ற கருத்தை அவருக்குத் தெரிவித்தேன். இரண்டே மாதத்தில் நாகம்மாள் என்ற சிறு நாவலை எழுதி முடித்துக்கொண்டு வந்து காட்டினார். பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் நவீனம் எழுதவேண்டுமென்று வருஷத்திட்டங்கள் போட்டுக்கொண்டு யோசனையளவில் நின்றுகொண்டிருக்கும் பொழுது இளைஞர் ஒருவர் திடீரென்று ஒன்றை எழுதி முடித்துவிட்டதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். நான் எதிர்பார்த்தவாறே அதில் கிராம வாழ்க்கை வெகு நுட்பமாகவும் அனுதாபத்துடனும் சித்தரிக்கப்பட்டிருந்தது. நாகம்மாள் நம் கண்முன் நிற்கிறாள் போல இருக்கிறது. ஒய்யாரமும் தனிப்போக்கும் கொண்ட அவளிடம் நற்குணங்களும் நிரம்பி இருக்கின்றன. சின்னப்பன் , ராமாயி , கெட்டியப்பன் எல்லோரும் தத்ரூபமாக இருக்கிறார்கள். நாராயண முதலி முதல் சின்னப்பன் மாமியார் வரை எல்லோரும் உயிர்பெற்று உலவுகிறார்கள். கிராமப் புனருத்தாரணம் என்கிறோம். கிராமக் கைத்தொழில்கள் மறுப...