Skip to main content

காந்திய நாவல்களில் சிறந்தது - கோவை ஞானி


இன்று நான் குறிப்பிட எடுத்துக் கொண்ட புத்தகம்: R. K. Narayan எழுதிய ‘Waiting for Mahatma’.
ஏற்கனவே நீர் படித்த புத்தகம். எனக்கு, இது பற்றி நீர் கூறவில்லை. ஆகவே சிலவற்றை நான் கூற விரும்புகிறேன்.
காந்தியடிகளைப் பற்றிய படப்பிடிப்புத்தான் இந்நூலில் நான் விரும்பும் முதற்பண்பு. காந்தியாரைப் பற்றி நமது கருத்து எப்படியிருந்த போதிலும், இதை விடச் சிறந்ததொரு, உண்மையான கவர்ச்சியான படப்பிடிப்பு வேறு, இவ்வளவு சுருங்கிய முறையில் தர முடியாது.
பாத்திரங்களில் Sriram, Bharati முதன்மையானவர்கள். பாரதியின் உறுதியான காந்தியப் பற்றுக்கு மேலாக அவரது இனிய கலகலப்பான பண்பு மறக்கமுடியாது.
ஸ்ரீராம், பாரதியைப் பெறுவதற்காக காந்திய நெறியில் புகுகின்றான். சில சமயம் இவன் கேலிக்குரியவனாகவும், எல்லாச் சமயங்களிலும் பாரதியின் பாதையிலேயே கிடப்பவனாகவும், காண்பிக்கப்படுகிறான். ஜகதீசன் ஒரு தீவிரவாதி நேதாஜியின் அன்பன்.
நகராண்மைக் கழகத் தலைவர். சாதியப் பற்று வாணிகப் பற்றாக இருப்பது பற்றிய விளக்கம். காந்தியின் இயக்கம் பற்றி அரசின் கண்காணிப்பு. காந்தியாரின் இயக்கம் பற்றிப் பொது மக்களின் அக்கறையின்மை, அச்சம் ஆகியவை உண்மையாகச் சித்தரிக்கப்படுகின்றன.
ஸ்ரீராமின் பாட்டி, சுடலையிலின்று எழும் காட்சி வியப்புத் தருகிறது.
நாராயணின் சிறந்த நாவல்களில் ஒன்று இது என்பதில் ஐயமில்லை .
காந்திய நாவல்களில் நா. பா.வின் ஆத்மாவின் தரிசனங்களைவிடச் சிறந்த நாவல் இது. அதில் வரும் போதை இதில் இல்லை. இதில் தெளிவு இருக்கிறது.
('வானம்பாடிகளின் கவிதை இயக்கம்' நூலிலிருந்து)

Comments

Most Popular

பழங்காலத்து எழுதுகருவிகள் - மயிலை சீனி. வேங்கடசாமி

இந்தக் காலத்திலே உலகம் முழுவதும் காகிதத்தாளும் பேனாவும் எழுதுகருவிகளாகப் பயன்பட்டுவருகின்றன. இவை எழுத்து வேலைக்குப் பெரிதும் வாய்ப்பாகவும் எளிதாகவும் அமைந்திருக்கின்றன. ஆனால், காகிதத்தாள் வருவதற்கு முன்பு, பண்டைக் காலத்திலே இவ்வளவு எளிதானவும் வாய்ப்பானவும் ஆன எழுதுகருவிகள் இல்லை. பண்டைக் காலத்திலே உலக மக்கள் எவ்விதமான எழுதுகருவிகளை வழங்கிவந்தார்கள் என்பது பற்றியும், பின்னர் காகிதத்தாள் எவ்வாறு நடைமுறையில் வந்தது என்பதைப் பற்றியும் ஈண்டுக் கூறுவோம். களிமண் சுவடிகள் சிறிய ஆசியா தேசத்தில் யூப்ரெடிஸ், டைகிரிஸ் ஆறுகள் பாய்கிற இடத்தில் இருந்த கால்டியா, ஸைரியா நாட்டு மக்கள் ஆதிகாலத்தில் களிமண்ணை எழுதுகருவியாகக் கொண்டிருந் தார்கள். களிமண்ணைப் பிசைந்து சிறுசிறு பலகைகளைப்போல் அமைத்து, அப்பலகை காய்ந்து போவதற்கு முன்னமே ஆணி போன்ற கருவியினால் எழுதி உலரவைத்துப் புத்தகமாக உபயோகித்தார்கள்; அவர்கள் எழுதிய எழுத்துகளுக்குக் கூனிபார்ம் எழுத்து என்று பெயர் கூறுவர். அவர்கள் எழுதிய களிமண் சுவடிகளைப் புத்தகசாலையில் வைத்துப் போற்றி னார்கள். அவ்வாறு போற்றி வைக்கப்பட்டிருந்த களிமண் சுவடிகள் பல, சமீப...

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந...

இலக்கியத்தில் உருவங்கள் | க. நா. சுப்ரமண்யம்

இலக்கியத்தில் பல பல உருவங்கள் உண்டு. அவை முதல் முதலாகப் பல பல மொழிகளில் தோன்றி இலக்கிய உருவம் பெற்று சிறப்பாகச் சில மொழிகளில் பிரமாதமான இலக்கிய அந்தஸ்து பெற்றவை. இந்த உருவம் இந்த மொழியைச் சேர்ந்தது என்று யாரும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அப்படிச் சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. கிணற்றுத் தவளைகள்தான் இந்த மாதிரிப் பெருமை தேடிக்கொண்டு, தங்கள் தங்கள் மொழியே உலகிலுள்ள எல்லா இலக்கியத்துக்கும் ஆதாரம் என்று கட்சி கட்டிக்கொண்டு பெருமை பாராட்டிக்கொண்டிருக்க முடியும். இன்றைய தமிழ் இலக்கியாசிரியன் உலகிலுள்ள எல்லா மொழி இலக்கியங்களுக்கும் உருவங்களுக்கும் வாரிசு. தெரிந்தோ தெரியாமலோ அவன் தமிழ்ப் பழமைக்கெல்லாம் வாரிசாகிறான். - சிலப்பதிகாரத்தையும், சங்க நூல்களையும், கம்பராமாயணத்தையும், தேவாரம் திருவாச கத்தையும் அறிந்தோ அறியாமலோ, அவன் மனம் அந்த மரபிலேதான் சமைகிறது. தமிழனாகப் பிறந்த தோஷத்தினால் அவன் விடுகிற மூச்சே தமிழ் மரபு மூச்சு என்றுதான் சொல்லவேண்டும். இதிலே பிற மொழிகளின் மரபு எங்கே எப்படி வருகிறது என்று கேட்கலாம். சம்ஸ்கிருத முதல் நூலை அறிந்ததாகக் காட்டிக்கொள்கிற கம்பனும், ஐரோப்பிய நாவ...