Skip to main content

மகாத்மா ஆவதற்கு முன் | தி. சே. சௌ. ராஜன்


“மனித சிருஷ்டியில் உயர்ந்தவரும் ஒப்பற்றவருமான ஒருவரை இன்று சந்தித்தேன்” என்று அளவற்ற மகிழ்ச்சியுடன் படுக்கையில் படுத்த வண்ணமே சொன்னார் காலஞ்சென்ற தேச பத்த சிரோமணி வ. வே. ஸு. ஐயர். லண்டனில் இந்தியர் விடுதியில் (India House) 1908-ஆம் வருஷம் ஒரு நாள் இரவு நாங்கள் இருவரும் பேசும் பொழுது அவர் சொல்லிய சொற்கள் இப்பொழுதுதான் நேரில் என்னுடன் சொல்லுவது போல் இருக்கின்றன. அக்காலத்தில் ஸ்ரீமான் காந்தி தென் ஆப்பிரிக்காவில் ஒரு பாரிஸ்டர். இந்தியர்களின் சகிக்க முடியாத தொல்லைகளைப் பார்லிமென்ட்டு சபையாருக்கு எடுத்துரைப்பதற்காக வந்த தூதர். அன்றைத் தினம் பகலில் அவரைக் காணவேண்டிப் புறப்பட்டுச் சென்ற ஐயர் இரவு தான் வீடு வந்து சேர்ந்தார்.
“செளந்திரம், அவர் சாமான்ய மனிதர் அன்று. அவருடன் பேசப் பேச என் மனம் அவரிடமே ஈடுபட்டுவிட்டது. என்ன அன்பு, என்ன மரியாதை, என்ன தேசபக்தி, என்ன உண்மை! சொல்லி முடியாது போ” என்றார் ஐயர்.
“ஸ்ரீமான் காந்தியை எங்கே கண்டீர்கள்?” என்று நான் கேட்டேன்.
“பல இடங்களில் அவரை விசாரித்துத் தேடினேன். இந்தியாவிலிருந்து வந்திருக்கும் தலைவர்கள் இறங்கியிருக்கும் பெரிய ஹோட்டல்களில் எல்லாம் அலைந்து திரிந்து, இரண்டு மணி நேரத்திற்கு அப்பால் வண்டி புக முடியாத ஒரு சிறிய சந்தில், இந்தியாவிலிருந்து வந்து சிற்றுண்டிச் சாலை ஒன்றை நடத்திவரும் ஒருவர் வீட்டில் கடைசியாகக் கண்டேன். இரண்டு மூன்று பழைய நாற்காலிகள், ஒரு கிழிந்த ஜமக்காளம், அதன்மேல் ஒரு படுக்கை. இவைகள் அடங்கிய ஒரு சிறிய அறையில் சதா புன்னகை புரியும் முகத்துடன் ஆங்கில உடுப்புடன் ஸ்ரீமான் காந்தியைக் கண்டேன். அவருடன் பேசிய பிறகு மறுபடியும் அவரைக்கண்டு பேசவேண்டும் என்கிற ஆசை அதிகம் ஆகிவிட்டது. நாளைத்தினம் விநாயக ஸாவர்க்கரை அவரிடம் அழைத்துக்கொண்டுபோய் இருவருமாக அவருடன் பேசப்போகிறோம்” என்று சொல்லிவிட்டு அயர்ந்து தூங்கிவிட்டார்.
பிறகு மூன்று நான்கு நாட்களுக்குத் தொடர்ந்து ஐயரும் ஸாவர்க்கரும் காந்தியைக் கண்டு பேசினார்கள். இவ்விருவரும் கேட்ட கேள்விகளும் இவர்களுக்கு விடையளித்த காந்திஜியின் தத்துவமுமே "ஹிந்து ஸ்வராஜ்" என்ற புத்தகத்திற்கு ஆதாரம். காந்திஜி அசைக்க முடியாத வேரூன்றின அஹிம்ஸாவாதி. 'சத்தியத்தைக் காட்டிலும் உயர்ந்த சக்தி உலகில் வேறு இல்லை. அஹிம்ஸையும், சத்தியமும், தெய்வமும் ஒன்றே. எனவே தெய்வ சக்தியை எதிர்க்கக்கூடிய சக்தி உலகில் வேறில்லை'. இதுதான் காந்திஜியின் முடிவான நம்பிக்கை. அதை எள்ளளவேனும் அசைக்க இவ்விருவராலும் முடியவில்லை. தாங்கள் படித்திருந்த சரித்திர ஞானம், மனித இயல்பு, சமூக நடவடிக்கைகள் இவை எல்லாவற்றிற்கும் அஹிம்ஸா முறையில் தகுந்த பதில் அளித்தபடியால், அவரைப் புரட்சி, சதியாலோசனை, யுத்தம் முதலிய விஷயங்களில் ஈடுபடுத்திவிடலாம் என்று கட்சியாடின ஐயருக்கு ஒரு விதமான ஏமாற்றமே உண்டாயிற்று.
“நான்கு நாட்கள் மன்றாடியும் பயன் இல்லை. அவருக்கு அஹிம்ஸையில் பிடிவாதமான மூட நம்பிக்கை. இருந்தபோதிலும் நம் நாடு விடுதலை அடையவேண்டும், நமது அடிமைத்தனம் ஒழிய வேண்டும், நமது கோழைத்தனம் நீங்கவேண்டும் என்ற இத்தகைய எண்ணங்களில் சந்தேகமற்ற முடிவு உள்ளவர். அவர் இந்த அஹிம்சையில் அரசியில் துறையில் வெற்றி பெற்றுவிடலாம் என்று சாதிப்பது மாத்திரந்தான் பொருத்தம் இல்லாமல் இருக்கிறது.” இது தான் ஐயருடைய முடிவான அபிப்பிராயம். எனினும் காந்தியிடத்தில் அளவற்ற அன்பும் பக்தியும் ஏற்பட்டன. அவருடன் பேசுவதில் உத்ஸாகம், அவருடைய எளிய வாழ்க்கையில் ஆச்சரியம், அவர் உண்மையான பேச்சில் ஒரு சக்தி இவைகளைப்பற்றி ஓயாது புகழ்வார்.
அக்காலத்தில் இங்கிலாந்திலும் லண்டன் நகரிலும் மொத்தம் எழுநூறு இந்தியர்களுக்கு மேலாக இருந்தார்கள். அவர்களில் பெரும்பான்மையோர் மாணாக்கர்கள்; செல்வர்களான பெற்றோர்களின் மக்கள். படிப்பைத் தவிர, அந்த நாட்டாருடைய இனிய வாழ்க்கையில் ஈடுபட்டுக் காலத்தைக் கழிப்பதைத் தவிர, நம் நாட்டைப் பற்றியாவது, சமுக தேசீய நிகழ்ச்சிகளைப் பற்றியாவது அநேகருக்குக் கவலை என்பதே இல்லை. ஏதாகிலும் ஒரு காரணத்தை ஒட்டியாகிலும் அவர்கள் எல்லோரையும் ஒன்றாகத் திரட்டி, “நாம் இந்தியர்கள்” என்கிற நினைவை அவர்களுக்கு உண்டுபண்ண வேண்டும் என்கிற எண்ணத்தை ஐயர் தம் மனத்தில் கொண்டு, எல்லோருக்கும் பொதுவாக உள்ள ஒரு பண்டிகையைக் காரணமாக வைத்து ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்தார். ஒரு மாதத்தில் தீபாவளி வர இருந்ததால் லண்டனில் தீபாவளி கொண்டாட வேண்டும் என்று நிச்சயித்தோம். லண்டன் தீபாவளிக்கு மங்கள ஸ்நானம் செய்யமுடியாது, கோடியுடுப்பது சாத்தியமில்லை, ஆகையால் ஒரு விருந்துச் சாப்பாடும் அதன் பிறகு சொற்பொழிவும் நிகழ்த்த முடிவு செய்யப்பட்டது.
விருந்தில் சேருபவருக்குக் கட்டணம் உண்டு. அவ்விதம் சேருவதற்குச் சம்மதித்தவர்கள் நூற்று இருபது பெயர்கள். இதற்குத் தகுந்த தலைவர் வேண்டுமே. அந்தப் பதவிக்கு ஓர் இந்தியரைத் தேர்ந்தெடுப்பதற்காகத் தினந்தோறும் இந்தியத் தலைவர்கள் வந்து இறங்கியிருக்கும் பெரிய இடங்களிலும் தனி விடுதிகளிலும் சென்று அவர்களில் ஒருவரைத் தலைமை வகிக்க வேண்டினோம். அங்கிருந்த இந்தியத் தலைவர்களில் பெரும்பாலோர் ஆங்கிலேயர்களுடைய நன்மதிப்பைப் பெற்று நம் நாட்டுக்கு அரசியல் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்ற விருப்பத்துடன், அவர்களிடம் விண்ணப்பம் செய்து கொள்ள வந்திருப்பவர்கள். அநேகமாக எல்லோரும் சாக்குப் போக்குச் சொல்லி வர மறுத்துவிட்டார்கள். இந்தப் பெரியோர்களில், காலஞ்சென்ற கோக்கலே, விபின் சந்திரபால், லாலா லஜபதிராய், இன்னும் மற்றவர்களும் சேர்ந்தவர்கள். ஐயர் இந்தியர் விடுதியைச் சேர்ந்தவர். புரட்சிக்காரர் என்று பெயர் வாங்கியவர். அவருடன் கலந்தால் தங்கள் எண்ணம் ஒரு சமயம் கைகூடாமல் போய்விடுமோ என்கிற பயமே இதற்குக் காரணமாக இருக்கவேண்டும். ஒரு தலைவர்கூட நமது தீபாவளி விழாவுக்கு இந்நகரிலே கிடைக்கவில்லையே என்று ஐயர் துயரமுற்றுக் கடைசியாகக் காந்தியைக் கேட்கலாம் என்று முடிவு செய்தார். அப்படியே அவரிடம் சென்று கேட்டதில் சில நிபந்தனைகளுடன் அவர் தலைமை வகிக்க ஒப்புக்கொண்டார். அன்றிரவு மனக்கவலையொழிந்து ஐயர் தாம் காந்தியிடம் சென்றதையும் அவர் பதில் அளித்த விவரத்தையும் சொன்னார்.
“கூட்டம் எதற்காக?” என்று காந்தி கேட்டவுடன் ஐயர், "இந்தத் தேசத்தில் சுமார் எழுநூறு பேர்களுக்கு மேல் நம் நாட்டினர் பல வேலைகளை முன்னிட்டு வந்திருக்கிறார்கள். அதில் பெரும்பாலோர் செல்வர்களான மாணாக்கர்கள். அவர்கள் எல்லோரையும் ஒருமுறையாகிலும் பொது விஷயத்தில் ஈடுபடும்படி செய்யவேண்டியது அவசியம். கொஞ்சம் தேசபக்தி புகட்டவும், நம் நாட்டினர் என்ற உணர்ச்சி உண்டாக்கவும் செய்யவேண்டும். அதற்காகத் தீபாவளிப் பண்டிகை கொண்டாட வேண்டும். தாங்கள் அந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகிக்கவேண்டும்” என்று பதில் சொன்னார்.
காந்தி புன் சிரிப்புடன், “அப்படியா! மிகவும் நல்ல யோசனை. நான் வருகிறேன். ஆனால் யாவரும் ஒன்றுகூடி ஒரு ஹோட்டலில் பணம் கொடுத்து ஆங்கில முறையில் உண்டு, கூட்டம் நடத்துவதாக இருந்தால் அதில் எனக்குப் பிரியமில்லை. நாம் இந்தியர்கள் என்பதற்கு நாம் கொண்டிருக்கும் ஏதாவது ஒரு தத்துவம் கொண்டதாக இந்தக் கூட்டம் இருக்கவேண்டும். ஆகையால் அன்று நடக்கும் விருந்து இந்திய உணவாகவும் மாமிசம் இல்லாத அஹிம்ஸா விருந்தாகவும் இருக்கவேண்டும். இதற்கு நீங்கள் உடன்பட்டால் நான் வருகிறேன்” என்று கூறினார்.
ஐயர், “இது மிகவும் கடினமான நிபந்தனை, இருந்தபோதிலும் தாங்கள் வருவதை எண்ணி எப்பாடுபட்டாகிலும் தகுந்த ஏற்பாடு செய்துவிடுகிறோம்” என்றார்.
அடுத்த சனிக்கிழமை இரவு ஏழரை மணிக்கு உணவும் பிறகு சொற்பொழிவும் குறிப்பிட்ட ஓர் இடத்தில் நடத்துவது எனவும் அந்நேரத்திற்குத் தலைவர் வந்தால் போதும் எனவும் காந்திக்கு ஐயர் தெரிவித்துவிட்டார்.
இதற்கென்று ஒரு பெரிய இடம் வாடகைக்கு ஏற்பாடு செய்தோம். இந்தியச் சமையல் செய்வதற்காக நாங்கள் ஆறு பேர்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம், மிகவும் கஷ்டப்பட்டுச் சமையலுக்கு வேண்டியவைகளைக் கடைகடையாகத் தேடித் திரிந்து சேகரித்தோம். விழாவிற்கு முந்திய தினம் தலைவர் காந்திக்கு ஞாபகமூட்டுவதற்காக ஐயர் அவரிடம் சென்றார். சாப்பாடு நடக்கும் இடம், நேரம், செய்திருக்கும் ஏற்பாட்டின் விவரம் எல்லாவற்றையும் கவலையுடன் கேட்ட தலைவருக்குத் தெரிவித்துவிட்டு ஐயர் திரும்பினார்.
அன்றைத்தினம் பகல் ஒரு மணிக்கே சமையல் செய்ய ஆரம்பித்துவிட்டோம். வேலை தெரிந்தவர்களும் தெரியாவிட்டாலும் ஊக்கம் உடையவர்களான ஆறு பேர்கள் அடங்கிய ஒரு கோஷ்டி சமையல் வேலையைத் தொடங்கியது. நானும் என் நண்பர் ஒருவரும் சமையலைச் செய்ய, மற்றவர்கள் உதவி செய்தார்கள். பழக்கம் இல்லாததனால் வேலை சற்றுத் தாமதமாகவே நடந்தது. அன்று வரையில் ஐயரிடமிருந்து கேட்டதைத் தவிர நான் நேரில் காந்தியைப் பார்த்ததில்லை. நாங்கள் வேலை செய்யத் தொடங்கி அரைமணி நேரத்திற்கெல்லாம் நடு வயசுள்ளவரும் பலம் அற்றவர்போலத் தோன்றியவருமான ஒருவர் எங்களுடன் வந்து கலந்துகொண்டார். வேலையில் அவர் காட்டிய ஊக்கமும் ஆர்வமும் மற்றவர்களில் ஒருவருக்குக்கூட இல்லை. அவரைப் பலவித முரட்டு வேலைகளில் விட்டோம். தட்டு, தொட்டி, பாத்திரம் இவற்றைக் கழுவுவது, கறிகாய் நறுக்குவது, தண்ணீர் கொண்டுவந்து கொடுப்பது முதலிய எல்லா வேலைகளையும் சொல்லுவதற்கு முன்பாகவே அறிந்துகொண்டு அவர் செய்தார். இந்தியாவிலிருந்து வந்திருக்கும் ஒரு புதிய ஏழை ஆசாமி என்று அவரை நாங்கள் நினைத்து நன்றாக வேர்க்க வேர்க்க வேலை வாங்கினோம்.
சுமார் ஆறு மணி இருக்கும். ஐயர் சமையல் அறைக்கு வந்தார். “எல்லாம் முடிந்துவிட்டதா?” என்று கேட்டுக்கொண்டே என்னைப் பார்த்துக் கவலையுடன், “இங்கு வந்திருக்கும் இவரை யார் வேலை செய்யச் சொன்னது? இவர்தாம் இன்று கூட்டத்திற்குத் தலைவர் ஸ்ரீமான் காந்தி. இவரை நீங்கள் நடத்தும் முறை மிகவும் அழகாக இருக்கிறது.” என்று சற்றுத் துக்கத்துடன் சொன்னார்.
உடனே நாங்களும் ஐயருடன் சேர்ந்து மன்னிப்புக் கேட்டோம். காந்தி குலுங்க நகைத்து, “நான் யாரை எதற்காக மன்னிப்பது என்று தெரியவில்லை. இந்த வேலையில் முதல் குற்றவாளி நான். இந்த ஊரில் இந்த மாதிரி ஒரு விருந்து நடத்துவது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். எனினும் உங்களைப் போன்ற இளைஞர்கள் இந்த வேலை செய்ய முன்வந்தது எனக்கு எவ்வளவு ஆனந்தத்தைக் கொடுக்கிறது! அதற்காக நான் அல்லவோ உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டும்?” என்றார்.
அதுதான் முதல் தடவை காந்தியை நான் நேரில் சந்தித்தது. எவ்வளவு தடுத்தும் தாம் செய்துகொண்டிருந்த வேலையை அவர் நிறுத்தவில்லை. எல்லோருக்கும் மேஜைகளில் தட்டில் உணவு எல்லாவற்றையும் பரிமாறிய பின் கடைசியாகத் தாமும் தமது இடத்தில் அமர்ந்தார்.
சாப்பிட்ட பிறகு சொற்பொழிவு நடந்தது. முதலில் தலைவர் காந்தி பேசினார். தமக்கும் விநாயக ஸாவர்க்கருக்கும் தேசிய விடுதலை முறையில் மாறுதலான அபிப்பிராயம் இருந்தபோதிலும் இம்மாதிரியான சம்பவங்களில் இந்தியர்கள் எல்லோரும் சேர்ந்து தாம் ஒரு நாட்டினர் என்ற உணர்ச்சியை வளர்க்கவேண்டிய அவசியத்தைப் பற்றிச் சொல்லி, தாம் கேட்டுக்கொண்டபடி விருந்தை நிறைவேற்றியதற்கு வந்தனம் அளித்து, கடைசியாக அஹிம்சையின் மேன்மையையும், அது இந்திய சமூகத்தினருக்கு அழியாத செல்வம் என்பதையும் கூறி முடித்தார். அக்காலத்தில் ஆங்கிலத்தில் சொற்பொழிவு நடத்தக்கூடிய வன்மை அவருக்கில்லை. எனினும் சொல்ல வேண்டியதைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் சொன்னார்.
அவருக்கு வந்தனம் அளிக்கும் முறையில் ஸாவர்க்கர் ஒரு பிரசங்கம் செய்தார். காந்தியைக் காட்டிலும் பேச்சு வன்மை ஸாவர்க்கருக்கு அதிகம். மேலும் இளைஞர் மனத்தை உத்ஸாகப்படுத்தும் முறையை அவர் நன்கு அறிந்தவர். காந்திக்கும் தமக்கும் உள்ள வேற்றுமையை இன்னதென்று விவரிக்க முடியாதென்றும், நம் நாட்டின் பூர்விக சுதந்திர உணர்ச்சியை மட்டிலும் அன்று ஞாபக மூட்டத் தமக்கு விருப்பமென்றும், அதன் புராதனப் பெருமையையும், வீரத்தையும் அப்பெரியார்களுடைய சந்ததியார்களாகிய நாம் இன்று அடிமைப்பட்டு வாடி வதங்கி இருப்பதை அறிந்து, சுதந்திரமடைய முயலவேண்டும் என்றும் வெகு உருக்கமாகவும் உள்ளக் கிளர்ச்சி உண்டாகும்படியும் பேசினார். கூட்டம் இனிது முடிந்தது. நாங்கள் எல்லோரும் ஸாவர்க்கரின் சொற்பொழிவாற்றும் சக்தியைப் புகழ்ந்து கொண்டாடினோம்.
இம்மாதிரியான இரண்டு மூன்று பிரசங்கங்களைக் காந்தி கேட்பாராகில் அஹிம்சையை விட்டு நம்முடன் சேருவது திண்ணம் என்பதாகவும் உறுதி கொண்டோம்.
இன்று ஸாவர்க்கரும் காந்தியும் உயிரோடு இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகளுக்குக் காரணமான வ. வே. ஸு. ஐயர் காலஞ்சென்றுவிட்டார். காந்திஜி அஹிம்சையை விடவே இல்லை. உலகமே கவனிக்கும் முறையில் அதைப் பறைசாற்றி வருகிறார். ஸாவர்க்கரும் தமது பழைய கொள்கைகளை விடவில்லை. ஹிந்து மகாசபைத் தலைவராக விளங்குகிறார்.
(தி. சே. சௌ. ராஜன் எழுதிய 'வ. வே. ஸு. ஐயர்' நூலிலிருந்து.)

Comments

Popular posts from this blog

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி  https://amzn.to/3eOnx2r ஆனந்த்  https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ