Skip to main content

காந்தி: சத்திய சோதனைக்குப் பின் - 9


(காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் வருடவாரியாக இத்தளத்தில் வெளியாகிறது. சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் குறிப்புகள் மகாத்மா காந்தி நூல்கள் வரிசையில், தொகுதி மூன்றில் சேர்க்கப்பட்டன.)

1930 (வயது 61)

ஜனவரி 25-ஆம் தேதியன்று சட்டசபையில் வைசிராய் பேசும்போது, சுய நிர்ணய உரிமை என்பது ஆகாத காரியம் என்று தெளிவாகச் சொன்னார். அதற்குஎங் இந்தியாவில் காந்திஜி பதில் கூறும்போது, “சூழ்நிலையைத் தெளிவுபடுத்தியதற்காகவும், அவரும் நாமும் எங்கே நிற்கிறோம் என்பதை நாம் நிச்சயமாக அறிந்துகொள்ளும்படி செய்ததற்காகவும் மே. . வைசிராய் ஒவ்வொரு காங்கிரஸ்காரரின் நன்றிக்கும் பாத்திரமாகிறார்என்று எழுதினார்.

ஜனவரி 26-ஆம் தேதியன்று நாடெங்கும் சுதந்திரப் பிரதிக்ஞை எடுத்துக்கொள்ளப்பட்டது. அதிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26-ஆம் தேதி சுதந்திர தினமாகக் கொண்டாடப்பட்டு வந்தது. 1950-இல் அதே  தேதியில் குடியரசு பிரகடனம் செய்யப்பட்டதால், அன்று முதல் ஜனவரி 26-ஆம் தேதி இந்தியக் குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜனவரி 30-இல் "எங் இந்தியா"வில் காந்திஜி தம்முடைய பதினோர் அம்சத் திட்டத்தை வெளியிட்டார்.

சுபாஷ் சந்திர போஸுக்கும் மற்றும் பதினொரு பேருக்கும் ஒரு வருஷக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

காங்கிரஸின் கட்டளைக்கு இணங்க, சட்டசபை அங்கத்தினர் பதவியைக் காங்கிரஸ்காரர்கள் ராஜிநாமாச் செய்தார்கள்.

பிப்ரவரி 14-இலிருந்து 16 வரை சாபர்மதியில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில், பூரண சுயராஜ்யம் பெறுவதற்குச் சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கவேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. உப்புச் சட்டத்தை மீறுவதுபற்றி அங்கத்தினர்களுக்குக் காந்திஜி பூர்வாங்க யோசனை கூறினார். ''நான் கைது செய்யப்படும் பொழுது'' என்ற கட்டுரையை பிப்ரவரி 27-இல் காந்திஜி எழுதினார். ஆனந்தபவன் மாளிகையை மோதிலால் நேரு காங்கிரஸுக்கு நன்கொடையாக வழங்கினார்.

மார்ச்சு 22-ல் இர்வினுக்குக் காந்திஜி ''இறுதி எச்சரிக்கை" கொடுத்தார். அதன் தொடக்கத்தில் அவர், சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்குமுன் வைஸ்ராயைச் சந்தித்து ஒரு வழி காண்பதையே தாம் விரும்புவதாகத் தெரிவித்தார். இந்தக் கடிதத்துக்கு இர்வின் பதில் கொடுக்கும்போது, ''சட்டத்தை மீறுவதற்கு ஸ்ரீ காந்தி உத்தேசித்திருப்பதை அறிந்து" வருத்தமே தெரிவித்திருந்தார். ''ரொட்டி வேண்டுமென்று மண்டியிட்டுக் கெஞ்சினேன். ஆனால் எனக்குக் கல்தான் கிடைத்தது'' என்று காந்திஜி எழுதினார்.

மார்ச்சு முதல் வாரத்தில், ராஸ் என்ற இடத்தில் வல்லப்பாய் பட்டேல் கைது செய்யப்பட்டார்,

உடனடியான சத்தியாக்கிரகத்துக்குக் காந்திஜி தம்மைத் தயார் செய்துகொண்டார். சாபர்மதிக் கரையில் நடைபெற்ற 75,000 பேர் கொண்ட கூட்டத்தில், அகிம்சையையே அனுஷ்டிப்பது என்ற ஒரு நிபந்தனையின் பேரில்சுதந்திரப் போராட்டத்துக்காகச் சட்ட மறுப்பில் கலந்து கொள்ளுமாறு காந்திஜி மக்களைக் கேட்டுக்கொண்டார்.

மார்ச்சு 12-இல், உப்புச் சட்டத்தை மீறுவதற்காக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தண்டி யாத்திரையைக் காந்திஜி தொடங்கினார். ஆசிரமத்தைச் சேர்ந்த 79 தொண்டர்கள் அவரோடு சென்றார்கள். காலை 6-30 மணிக்கு யாத்திரையைத் தொடங்கிய காந்திஜி, "உப்புச் சட்டத்தை ரத்துச் செய்வதில் நான் வெற்றி பெறும் வரையில் ஆசிரமத்துக்குத் திரும்புவதில்லை'' என்ற உறுதியோடு சென்றார். "நான் எதை விரும்புகிறேனோ, அதோடு திரும்புவேன்; அல்லது என் சடலம் சமுத்திரத்தில் மிதக்கும்" என்று கூறினார். யாத்திரையில் பெண்கள் அழைத்துச் செல்லப்படவில்லை.

யாத்திரை தொடங்குவதற்கு முதல் நாள் உண்ணாவிரதம் அனுஷ்டிக்கப்பட்டது; பிரார்த்தனை நடந்தது. காந்திஜியின் தலைமையில் புறப்பட்ட அகிம்சைப் படையினர், மூவர் கொண்ட வரிசையாகத் தங்கள் மூட்டை முடிச்சுக்களைத் தூக்கிக்கொண்டு நடந்தனர். செல்லும் வழியில் அவர்களுக்குப் பூவும் தேங்காயும் கொடுத்து மக்கள் வரவேற்றார்கள். தெருக்களில் தண்ணீர் தெளிக்கப்பட்டு, கொடிகளால் அலங்கரித்திருந்தார்கள். காந்திஜியின் தரிசனத்துக்காகவும், அவருடைய நல்லுரையைக் கேட்பதற்காகவும் தூரப் பகுதிகளில் இருந்தெல்லாம் ஏராளமானவர்கள் வந்த வண்ணமாக இருந்தார்கள்.

காந்திஜி, தாம் தங்கும் ஒவ்வோர் இடத்திலும் பேசும்போது, கதர் கட்டவேண்டும் என்றும், குடியை நிறுத்த வேண்டும் என்றும், சர்க்காருடன் ஒத்துழைப்பதை நிறுத்திச் சத்தியாக்கிரகத்தில் சேரவேண்டும் என்றும் ஜனங்களை வற்புறுத்தினார். கிராம உத்தியோகஸ்தர்கள் 300 பேர் தங்கள் உத்தியோகங்களை ராஜிநாமாச் செய்துவிட்டார்கள்.

200 மைல் யாத்திரைக்குப் பிறகு ஏப்ரல் 5-ஆம் தேதி காலையில் காந்திஜியும் தொண்டர்களும் கடற்கரையிலுள்ள தண்டி என்ற கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

மார்ச்சு 21-ஆம் தேதி அலகாபாத்தில் கூடிய . . கா. . கூட்டத்தில், காந்திஜி கைது செய்யப்பட்ட மாத்திரத்தில் சட்ட மறுப்பைத் தொடங்கவும், அல்லது அவர் கட்டளைக்கு இணங்க, கைது செய்யப்படுவதற்கு முன்பே தொடங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

ஏப்ரல் 6-ஆம் தேதி தண்டியில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்திஜி பேசினார். தாம் கைது செய்யப்பட்டால், அப்பாஸ் தயாப்ஜியின் கட்டளைகளின்படியும், அதன்பின் சரோஜினி நாயுடுவின் கட்டளைகளின்படியும் காங்கிரஸ் நடந்துகொள்ளவேண்டும் என்று சொன்னார். மேலும் அவர் பேசிய தாவது; ''பிரிட்டிஷ் ஆட்சி இந்த நாட்டில் தார்மிக, லெளகிக, கலாசார, ஆன்மிக நாசங்களை உண்டுபண்ணியிருக்கிறது. இந்த ஆட்சியை ஒரு சாபக்கேடு என்றே நான் கருதுகிறேன். இந்த அரசாங்க முறையை ஒழிக்க நான் களத்தில் இறங்கிவிட்டேன். நாம் யாரையும் கொல்லுவதற்குக் கங்கணம் கட்டவில்லை. இந்தச் சர்க்காரின் சாபக்கேட்டை ஒழிப்பது நமது தருமம்."

பிரார்த்தனை முடிந்ததும், ஏப்ரல் 6-ஆம் தேதி காலை 6 மணிக்குக் காந்திஜி தொண்டர்களோடு கடலில் குளிப்பதற்குச் சென்றார். அவர்களுடன் சரோஜினி நாயுடு உள்ளிட்ட பெருங் கூட்டம் சென்றது. காலை 8-30 மணிக்குக் கடற்கரையில் உப்பு எடுப்பதன் மூலம் காந்திஜியும் தொண்டர்களும் உப்புச் சட்டத்தை மீறினார்கள். அங்கே போலீஸ்காரர்களே இல்லை.

அதன் பின் உடனடியாகக் காந்திஜி பத்திரிகைகளுக்குப் பின்வருமாறு அறிக்கை விட்டார்:

"இப்போது உப்புச் சட்டத்தை மீறும் சடங்கு நடைபெற்றுவிட்டது. கைதாவதற்குத் தயாராக இருக்கும் யாரும் இப்போது தங்களுக்கு விருப்பமாக இருக்கும் இடத்தில், அல்லது செளகரியமாக இருக்கும் இடத்தில் உப்புக் காய்ச்சலாம். ......... உப்புச் சட்டத்தைப் பற்றிய முழு விவரங்களையும், சட்டத்தை மீறும் முறையையும் கிராம ஜனங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். ........ சுதந்திரம் பெறுவதில் ஆண்களை விடப் பெண்கள் அதிகப் பங்கு ஆற்ற முடியும் என்ற கருத்து நாளுக்கு நாள் என்னிடம் பலம் பெற்று வருகிறது.''

தண்டி யாத்திரைத் திரைப்படத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.

தேசமெங்கும் ஒரே பரபரப்பு. லட்சக் கணக்கானவர்கள் அடங்கிய பொதுக்கூட்டங்கள் ஒவ்வொரு நகரிலும் நடைபெற்றன.

ஏப்ரல் 14-இல் ஜவாஹர்லால் நேரு கைது செய்யப்பட்டார். பெஷாவரில் ராணுவம் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் பலர் மாண்டனர். சென்னையிலும் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. வங்காளச் சட்டம் ஏப்ரல் 23-இல் புதுப்பிக்கப்பட்டது. கராச்சி, ஷிரோடா, ரத்னகிரி, பாட்னா, கல்கத்தா, ஷோலாப்பூர் ஆகியவை செய்திகளில் முக்கியத்துவம் பெற்றன.

ஏப்ரல் 27-இல் வைசிராய் பத்திரிகைச் சட்டத்தைப் பிரகடனம் செய்தார். ஜாமீன் தொகை கட்டுவதைவிட நவஜீவன் அச்சகத்தைப் பறிமுதல் செய்யும்படி விட்டுவிடலாம் என்று காந்திஜி தெரிவித்தார். நவஜீவன் அச்சகத்தைச் சர்க்கார் எடுத்துக்கொண்டது. “எங் இந்தியாபத்திரிகை சைக்ளோஸ்டைல் அச்சில் வெளியிடப்பட்டது.

சட்ட சபைத் தலைவர் பதவியையும், அங்கத்தினர் பதவியையும் விட்டல் பாய் பட்டேல் ராஜிநாமாச் செய்துவிட்டார்.

காந்திஜியின் நடவடிக்கைகள் தணியாத வேகத்துடன் தொடர்ந்து நடைபெற்று வந்தன. மே 4-ஆம் தேதி சூரத்தில் பெண்கள் கூட்டத்தில் பேசியபோது, தக்ளி இல்லாமல் தம்முடைய கூட்டங்களுக்கு யாரும் வரவேண்டாம் என்று அவர் கூறினார். வைசிராய்க்கு அனுப்ப வேண்டிய இரண்டாவது கடிதத்தைக் காந்திஜி தயாரித்தார். தர்ஸனா, சார்ஸ்டா ஆகிய இடங்களிலுள்ள உப்பு டிப்போக்களை முற்றுகையிடப் போகும் உத்தேசத்தைத் தெரிவித்தார். இயற்கையாகக் கிடைக்கும் உப்பு, காற்றைப் போலவும் தண்ணீரைப் போலவும் பொதுச்சொத்து என்று வாதாடினார். பிரிட்டிஷாருக்கு விரோதிகளாக உள்ளவர்கள் மீது பிரயோகிக்கும் 1827-ஆம் வருஷத்திய பம்பாய்ச் சட்டத்தின் 25-ஆவது பிரிவின் கீழ்க் காந்திஜி கைது செய்யப்பட்டார்.

ஜில்லா மாஜிஸ்திரேட்டும், ஜில்லா போலீஸ் சூப்பரின்டெண்டென்டும் ஆயுதம் தாங்கிய 20 போலீஸ்காரர்களுடன் இரவு 12-45 மணிக்குக் கராடிக்குப் போய்ச் சேர்ந்தனர். காந்திஜி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த கட்டிலருகே சென்று அவரை எழுப்பி, கட்டிலைச் சூழ்ந்துகொண்டனர். அவரை ஒரு லாரியில் வைத்து எராவ்டா சிறைக்குக் கொண்டு சென்றனர்.

காந்திஜி கைது செய்யப்பட்டதும், உலகமெங்கும் எதிரொலிகள் கிளம்பின. நியூயார்க் நகரில் மதகுருவான ஜான் ஹேய்னஸ் ஹோம்ஸ் தலைமையில் கூடிய 102 குருமார்கள், பிரிட்டிஷ் பிரதமர் காந்திஜியோடும், இந்திய மக்களோடும் சமரசத்துக்கு வந்து மனித வர்க்கத்துக்குப் பெருநாசம் ஏற்படாமல் காக்க வேண்டுமென்று வற்புறுத்தினர். பனாமாக் கால்வாயில் வேலை செய்துவந்த இந்தியர்கள் 24 மணிநேரம் அனுதாப ஹர்த்தால் செய்தார்கள். காந்திஜியைப்பற்றிய செய்திகள் பிரெஞ்சுப் பத்திரிகைகளை நிரப்பின.

இந்தியா முழுவதிலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. பம்பாயில் 50,000 மில் தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்தார்கள். ரெயில்வேத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் சேர்ந்தார்கள். ஜவுளி வியாபாரிகள் 6 நாட்கள் கடை அடைத்தார்கள். கெளரவ உத்தியோகஸ்தர்களும், சர்க்கார் ஊழியர்களும் ராஜிநாமாச் செய்த செய்திகள் அடிக்கடி வெளிவந்த வண்ணமாக இருந்தன.

ஷோலாப்பூர் குழப்பங்களின் பயனாக ஆறு போலீஸ் ஸ்டேஷன்கள் தீக்கிரையாயின. போலீஸ் துப்பாக்கிப் பிரயோகத்தினால் 25 பேர் கொல்லப்பட்டனர். நூறு பேர் காயம் அடைந்தனர். கல்கத்தாவிலும் போலீஸ் துப்பாக்கிப் பிரயோகம் நடந்தது.

மே மாதத்தில் அலகாபாத்தில் காரியக் கமிட்டி கூடி, சட்ட மறுப்பு இயக்கத்தை விஸ்தரித்தது.

உப்புச் சத்தியாக்கிரகம் தொடர்ந்து நடைபெற்றது. தென் ஆப்பிரிக்காவில் காந்திஜியின் பழைய சகபாடியாக இருந்த 63 வயதான இமாம் சாகிப்பின் தலைமையில் 2500 பேர் தர்ஸனா உப்பு டிப்போவை முற்றுகையிட்டனர். போலீஸ் தடியடியால் ஒருவர் கொல்லப்பட்டார்; 290 பேர் காயம் அடைந்தார்கள்.

வாடலா உப்பு டிப்போ பல முறை முற்றுகையிடப்பட்டது. உப்புச் சட்டத்தை மீறும் அதே சமயத்தில் தடை உத்தரவுகளையும் மீறினர். பேராரிலும், மற்ற இடங்களிலும் வனச் சட்டங்கள் மீறப்பட்டன. வரி கொடா இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அந்நியத் துணி பகிஷ்காரம், மதுபானக் கடை மறியல் ஆகியவை அதிக அளவில் நடைபெறலாயின. இதில் அதிகப் பங்கு எடுத்துக்கொண்டவர்கள் பெண்களே. பம்பாயில் மட்டும் ரூ. 30 கோடி பெறுமானமுள்ள அந்நியத் துணி காங்கிரஸால் முடக்கப்பட்டது. மதுபான வரிகளால் கிடைக்கும் வருமானம் 70 சதவிகிதம் - ரூ. 60 லக்ஷம் - குறைந்தது. வனங்களின் வருமானத்தில் 16 லக்ஷம் ரூபாய் குறைந்தது. நிலவரியில் ரூ. 5 லக்ஷம் வசூல் ஆகவில்லை. பர்டோலியில் குடியானவர்கள் சர்க்காருக்கு வரி செலுத்த மறுத்து, பயிர்களைக் கொளுத்திவிட்டுப் பரோடாவுக்குக் குடிபெயர்ந்து போனார்கள். மிதுனபுரியில் சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்கள் கிடைக்கவில்லை.

சர்க்கார் கடுமையான நடவடிக்கை எடுத்தது. வருடம் முடிவதற்கு முன்பாக வைசிராய் சுமார் 12 புதிய சட்டங்களைப் பிறப்பித்தார். நீதிமன்றங்களில் தண்டிக்கப்பட்டவர்களின் மொத்தத் தொகை ஒரு லட்சத்தையும் தாண்டிவிட்டது. இவர்களில் 12,000 பேர் முஸ்லிம்கள்.

ஜூன் மாதம் முதல் தேதியில் வாடலா முற்றுகையில் 15,000 தொண்டர்களும், முற்றுகையைப் பார்க்க வந்தவர்களும் கலந்துகொண்டார்கள்.

ஜூன் 30-ஆம் தேதி மோதிலால் நேரு கைது செய்யப்பட்டு, 6 மாதச் சிறைவாச தண்டனை விதிக்கப்பட்டார்.

பொதுக்கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஜூலை 15-இல் பெஷாவரில் துப்பாக்கிப் பிரயோகம் நடந்தது. கான் அப்துல் கபார்கான் தலைமையில் எல்லைப்புற மாகாணம் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியது. பெண்கள் முகத்திரைகளைக் களைந்துவிட்டு, ஆண்களோடு சரிநிகர் சமானமாக நின்று போராடினர். அடக்குமுறையின்போது, கார்வாலி சோல்ஜர்கள் சிலர் மக்களை நோக்கிச் சுட மறுத்ததால், அவர்களுக்கு ராணுவக் கோர்ட்டுகளில் தண்டனை விதிக்கப்பட்டது. பத்திலிருந்து பதினான்கு வருடச் சிறைவாசம் வரை அவர்களுக்கு விதிக்கப்பட்டது.

ஸர் தேஜ் பகதூர் ஸப்ரூ, ஸ்ரீ எம். ஆர். ஜெயகர் ஆகியோருடைய வேண்டுகோளின் பேரில் காந்திஜி, மோதிலால், லவாஹர்லால் ஆகியவர்களைப் பேட்டி காண்பதற்குரிய வசதிகளை வைசிராய் அனுமதித்தார். ஆகஸ்டு 14, 15-ஆம் தேதிகளில் பேட்டி கண்டார்கள், பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

நவம்பர் 12-இல் காங்கிரஸின் பிரதிநிதித்துவம் இல்லாமலே வட்ட மேஜை மகாநாடு கூடியது.

எல்லாத் தலைவர்களும் சிறையில் இருந்ததால், டிசம்பரில் காங்கிரஸ் நடைபெறவில்லை.
  • (நன்றி: மகாத்மா காந்தி நூல்கள் - தொகுதி மூன்று)

Comments

Most Popular

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.