Skip to main content

காந்தி: சத்திய சோதனைக்குப் பின் - 8


(காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் வருடவாரியாக இத்தளத்தில் வெளியாகிறது. சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் குறிப்புகள் மகாத்மா காந்தி நூல்கள் வரிசையில், தொகுதி மூன்றில் சேர்க்கப்பட்டன.)

1928 (வயது 59)

சர் ஜான் சைமனின் தலைமையில் பம்பாயில் ஒரு கமிஷன் வந்து இறங்கியதும் அதைப் பகிஷ்கரிப்பதில் சகல அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்தன. அந்தத் தினத்தில் இந்தியா முழுவதிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. எங்கும் கறுப்புக் கொடிகள் காட்டி, ''சைமனே, திரும்பிப்போ!" என்று கோஷித்தனர். இந்தியர்கள் ஒத்துழைத்தாலும் ஒத்துழைக்காவிட்டாலும் சைமன் கமிஷனின் விசாரணை நடைபெறவே செய்யும் என்று பிப்ரவரி 22-ஆம் தேதி லார்டு இர்வின் அறிவித்தார்.

பகிஷ்காரம் வெற்றிகரமாகவே நடந்தது. சர்க்கார் பலாத்காரத்தையும், பயங்கரமான அடக்குமுறையையும் பிரயோகித்தது. 64 வயதான லாலா லஜபதிராய், ஜவாஹர்லால் நேரு உட்பட ஏராளமானவர்கள் லத்திக்கம்பு அடி வாங்கினார்கள். அடிபட்டதன் காரணமாக நவம்பர் 17-இல் லஜபதிராய் காலமானார்.

பிப்ரவரி 12-இல் பர்டோலி சத்தியாக்கிரகம் ஆரம்பமாயிற்று. காந்திஜியின் ஆசீர்வாதத்துடன் வல்லபாய் பட்டேல் தலைமை தாங்கிச் சத்தியாக்கிரகத்தை நடத்தினார். வரிகொடா இயக்கத்தை நசுக்கப் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் சகல சக்திகளும் பிரயோகிக்கப்படும் என்று பம்பாய் சர்க்கார் அறிவித்தது. ஆனால், சீக்கிரத்தில் சமரசம் காணப்பெற்றது.

நேரு கமிட்டி அறிக்கையைப் பரிசீலனை செய்ய ஆகஸ்டு 28-இலிருந்து 30 வரை லட்சுமணபுரியில் சர்வ கட்சி மகாநாடு நடைபெற்றது.

டிசம்பரில் கல்கத்தாவில் காங்கிரஸின் வருடாந்தரக் கூட்டம் நடைபெற்றது. தலைமை தாங்கிய மோதிலால் நேரு, குடியேற்ற நாட்டு அந்தஸ்து வேண்டுமென்று கோரினார். 1929 முடிவுக்குள் குடியேற்ற நாட்டு அந்தஸ்துக் கொடுக்கப்படாவிட்டால், பூரண சுதந்திரமே வேண்டுமென்று கோரி, ஜவாஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸின் ஆதரவோடு தீர்மானத்தைச் சமர்ப்பித்தார். இதைக் காந்திஜி பிரேரேபித்தார். காங்கிரஸ் மைதானத்தில் தேசியக்கொடியின் கீழ் 50,000 ஊழியர்கள் அணிவகுப்பு நடத்தினர். சுதந்திரம் கோரும் தீர்மானத்தை அவர்கள் நிறைவேற்றிக் கொடி வணக்கம் செய்தார்கள்.

. . கா. . காரியாலயத்தின் கிளையாகத் தொழிலாளர் ஆராய்ச்சி இலாகா திறக்கப்பட்டது.

1929 (வயது 60)

அழைப்பின் பேரில் 1929-இல் காந்திஜி ஐரோப்பாவில் சுற்றுப் பிரயாணம் செய்வதாக இருந்தது. ஆனால் பிப்ரவரி முதல் வாரத்தில் அவர் பின்வருமாறு கூறினார்:

''போகவேண்டுமென்று என் அந்தராத்மா கூறவில்லை. மேலும், காங்கிரஸின் முன் ஆக்ககரமான ஒரு தீர்மானத்தைச் சமர்ப்பித்து, அதற்கு அனைவருடைய ஆதரவையும் பெற்றுக்கொண்டபின், நான் இப்போது ஐரோப்பாவுக்குப் போனால் தீர்மானத்தைக் கைவிட்டு விட்ட குற்றத்துக்கு உள்ளாவேன் என்று தோன்றுகிறது. …... எல்லாவற்றையும்விட, அடுத்த வருடப் போராட்டத்துக்கு நான் என்னைத் தயார் செய்துகொள்ள வேண்டும். போராட்டம் எந்த உருவத்தை மேற்கொண்டாலும் சரி.''

மார்ச்சு 20-ஆம் தேதி சர்க்கார் திடீரென்று தொழிலாளர் ஸ்தாபனத்தைத் தாக்கியது. பிரபலமான தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். மீரத் விசாரணை ஆரம்பமாயிற்று. இது நாலரை வருடங்கள் நடைபெற்றது.

காந்திஜி பர்மாவுக்குச் சென்றார். ரங்கூன் நகர சபை அவருக்கு வரவேற்புப் பத்திரம் வாசித்தளித்தது. பர்மாவுக்குப் புறப்படுவதற்கு முன், அந்நியத் துணி தகனம் சம்பந்தமாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அங்கிருந்து திரும்பி வந்தபின் அவருக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

சைமன் கமிஷனின் வேலைகள் ஏப்ரலில் முடிவடைந்தன. மே மாதத்தில் இங்கிலாந்தில் நடந்த பொதுத்தேர்தல்களில் கன்ஸர்வேடிவ் கட்சி தோல்வியுற்றது. ராம்ஸே மெக்டானல்டைப் பிரதமராகக் கொண்ட தொழிற்கட்சி மந்திரி சபை பதவி ஏற்றது.

சுபாஷ் சந்திர போஸும், மற்றப் பிரபல காங்கிரஸ் தலைவர்களும் விசாரணையில் இருந்தார்கள். சிறைச்சாலைகளில் இந்தியர்களைப் பாரபட்சமாக நடத்துவதை ஆட்சேபித்து ஆகஸ்டில் உண்ணாவிரதம் தொடங்கிய ஜதீந்திர நாத் தாஸ் 61-ஆவது நாள், செப்டம்பர் 13-ஆம் தேதியன்று காலமானார்.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குள் பொறுப்பாட்சி வழங்குவதே இந்தியாவில் பிரிட்டிஷ் கொள்கை என்று அக்டோபர் 31-ஆம் தேதியன்று இர்வின் பிரகடனம் செய்தார். லண்டனில் வட்ட மேஜை மகாநாடு கூட்டும் உத்தேசத்தையும் வெளியிட்டார். இந்தியாவுக்குக் குடியேற்ற நாட்டு அந்தஸ்து வழங்குவது அக்கிரமமான காரியம் என்று சர்ச்சில் பிரசாரம் செய்யத் தொடங்கினார்.

டிசம்பரில் ஜவாஹர்லால் நேருவின் தலைமையில் லாகூர் காங்கிரஸ் நடைபெற்றது. டிசம்பர் 31-ஆம் தேதி நள்ளிரவில் காந்திஜியினுடைய யோசனையின் பேரில், குடியேற்ற நாட்டு அந்தஸ்து என்ற அபிப்பிராயம் காலாவதியாகிவிட்டதென்றும், காங்கிரஸ் கோட்பாட்டில் சுயராஜ்யம் என்பது பூரண சுதந்திரம் என்று பொருள்படும் என்றும் காங்கிரஸ் அறிவித்தது.
  • (நன்றி: மகாத்மா காந்தி நூல்கள் - தொகுதி மூன்று)

Comments

Most Popular

இராவணன் இலங்கை - மயிலை சீனி. வேங்கடசாமி

தமிழ் நாட்டை அடுத்துள்ள இலங்கைத் தீவினை, இராவணன் ஆண்ட இலங்கை என்று மக்கள் கருதி வந்தனர்; வருகின்றனர். ஆழ்வார்களும் ஏனையோரும் இலங்கையைத் தென் இலங்கை என்று கூறியிருக்கிறபடியால், சிங்களத் தீவாகிய இலங்கைதான் இராவணன் ஆண்ட இலங்கை என மக்கள் தவறாகக் கருதி வருகின்றனர் போலும். 'தென் இலங்கை' என்பதற்குத் தமிழ் நாட்டிற்குத் தெற்கிலுள்ள இலங்கை என்று பொருள் கூறுவது சரித்திரத்துக்கு முரண்பட்டது. தென் இலங்கை என்பதற்கு, 'அயோத்திக்குத் தெற்கிலுள்ள இலங்கை' என்று பொருள் கொள்வதுதான் சரித்திரத்திற்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமானது. ஆனால், தமிழ் நாட்டை அடுத்துள்ள சிங்களத் தீவாகிய இலங்கைதான் இராவணன் ஆண்ட இலங்கை என்று பல நூற்றாண்டுகளாகக் கருதப்பட்டு வருகிறது. இத்தவறான கருத்து சங்க நூல்களிலும் இடம் பெற்றுவிட்டது. சங்க நூல்கள் கூறுவன தமிழ் நாட்டிலுள்ள கோடிக்கரை (தனுஷ்கோடி) என்னும் கடற்கரையருகில், ஓர் ஆலமரத்தின்கீழ் இராமர் தங்கி, சீதையை மீட்கும் வழியை வானர வீரர்களுடன் கலந்து யோசித்தார் என்று கடுவன் மள்ளனார் என்னும் புலவர் கூறுகிறார். "வென்வேற் கவுரியர் தொன்முது கோடி, முழங்கிரும் பெளவம...

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி...

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...