Skip to main content

விமரிசனக்கலை | க. நா. சுப்ரமண்யம்


இலக்கிய விமரிசனம் ஒரு கலைதான்; சந்தேகத்துக்கிடமேயில்லை. சிறுகதை, நாவல், நாடகம் போல இதுவும் இலக்கியத்தில் ஒரு துறை. கவிதை போன்ற விரிவான விஸ்தாரமான ஒரு துறை. தமிழில் இப்போதுதான் அது தோன்றத் தொடங்கியிருக்கிறது - அதிகமாக வளரவில்லை. வளர்ந்திருக்கிற அளவிலும் கூட அது கலை என்கிற லக்ஷியத்தை நோக்கி வளரவில்லை. ஏதோ பொழுதுபோக்கு; பயன்தரக்கூடியது; வியாக்கியானமாகவும் பற்றி இலக்கியமாகவும் இருக்கக்கூடியது; அல்லது பாட புஸ்தகமாக உபயோகப்படக்கூடியது என்கிற அளவில்தான் வளர்ந்திருக்கிறது.

தமிழ் இலக்கிய மரபிலே இலக்கணம்தான் ஓரளவுக்கு இலக்கிய விமரிசனம் செய்யவேண்டிய காரியத்தையும் செய்ய முற்பட்டு வந்திருக்கிறது. உரையாசிரியர்கள் என்று தோன்றியவர்கள் எல்லோருமே இலக்கணப் பண்டிதர்கள். வார்த்தை, வாக்கியம், கவிதை இவற்றிற்கு இலக்கணம் சொல்லுவதுடன் நின்றுவிடாமல் அவர்கள் பொருளுக்கும் இலக்கணம் சொன்னார்கள். இலக்கணம் என்பது பண்டிதர்களுக்கும், உரையாசிரியர்களுக்கும், பாட புஸ்தகாசிரியர்களுக்கும் உபயோகப்படுகிற அளவு, இலக்கிய கர்த்தாக்களுக்கும், இலக்கிய ரஸிகர்களுக்கும் உபயோகப்படுவதில்லை.

எந்த மொழியிலுமே இலக்கியம் சமைப்பது என்கிற காரியம் இலக்கணப் பண்டிதர்களை மீறியே நடந்து வருகிறது என்று சொல்ல வேண்டும். சிலப்பதிகாரம் என்பது காவியமா அல்லவா என்று ஏதோ ஒரு இலக்கணத்தை வைத்துக்கொண்டு அளந்து பார்ப்பது தவறு. 'அது காவியம் தான் - அதன் இலக்கணம் இது' என்று சொல்ல முற்படுவது இலக்கிய விமரிசகன் செய்யவேண்டிய முதல் காரியம். இலக்கணம் கலையாகாது. பஞ்சாங்கம் நூலாகாது என்கிற மாதிரி; ரெயில்வே அட்டவணை பிரயாண நூலாகாது என்கிற மாதிரி. ஆனால் இலக்கிய விமரிசனம் இலக்கியமேயாகிறது - கலையாகிறது.

எப்படி அது கலையாகிறது என்பதைத் தெளிவாக்குகிற விஷயம் சற்றுச் சிரமமான விஷயம்தான். கடவுளை உதாரணமாக எடுத்துக்கொண்டு அதைச் சொல்லலாம் - அல்லது கடவுளை மறுக்கிற வேதாந்தத்தை பிரம்மவாதத்தை எடுத்துக்கொண்டு அதைத் தெளிவாக்கலாம். எந்தத் தெய்வத்தையுமே, எந்த நிர்க்குணப் பிரம்மத்தையுமே வார்த்தைகளில் அகப்படாதது என்று வர்ணிப்பதுதான் நமது மரபு. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது என்கிற நிர்க்குணப் பிரம்மத்தையும், கடவுளையும் போன்றதுதான் இலக்கியமும். இலக்கியத்துக்கு, அதில் எந்தத் துறைக்கு ஒரு அளவுகோல், இலக்கணம் என்று சொன்னாலும், அதற்கும் அப்பால் போய்விட்டது என்பதை உணர்ந்தேதான் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. இலக்கிய விமரிசனமும் இலக்கியத்தில் ஒரு துறை என்கிற காரணத்தினால், எந்த அளவுகோல் கொண்டு அளந்தாலும், எந்த இலக்கணத்தை வைத்துப்பார்த்தாலும் அளவுகோல்களுக்கும் அப்பாற்போய்த்தான் நிற்கும். அதனால்தான் இலக்கிய விமரிசனம் இதைத்தான் செய்யவேண்டும் என்றும் இதுவரையில்தான் அதன் எல்லை என்றும் யாரும் கண்டு, உலக இலக்கியத்தில் எங்குமே சொல்லிவிடவில்லை. கவிதை. நாடகம், நாவல், சிறுகதை - எல்லாவற்றிற்குமே பொதுவான ஒரு லக்ஷணம் இது.

நம்மில் பலருக்கும் இலக்கிய விமரிசனம் பற்றித் தப்பான அபிப்பிராயங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று சொல்வது மிகையாகாது. ஏதோ ஒரு குறிப்பிட்ட நூலில் குற்றங் குறை காணுவதோ, குணம் நிறைவு காண்பதோதான் இலக்கிய விமரிசனத்தின் நோக்கம் என்று நாம் எண்ணிவிடுகிறோம். அது தவறு. மதிப்புரை எழுதுபவன் ஓரளவுக்கு, ஒரு குறுகிய அளவில், ஓரு நூலைப்பற்றித் தன் அபிப்பிராயத்தைச் சொல்ல முயலுகிறான். இலக்கிய விமரிசனம் செய்பவன் செய்ய முயலுகிற காரியம் அது அல்ல. ஒரு சிறுகதை நூலைப்பற்றி இலக்கிய விமரிசனம் செய்பவன், சிறுகதை இலக்கியம் பூராவையுமே விமரிசிக்கிறான். அது மட்டும் அல்ல. அச்சிறுகதை இலக்கிய விமரிசனத்தை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு மனித குலத்தில் ஒரு பகுதியினரின், ஒரு மொழி பேசுபவரின் பண்பையே அளந்து பார்க்கிறான். ஒரு பகுதியினரின் ஒரு மொழி பேசுபவரின் பண்பையே அளந்து பார்க்கிற காரியத்தையும் அவன் மனித குலத்துக்கும் உரியதாகச் செய்கிறான் - அவனுக்குச் சக்தியுண்டானால்.

இப்படிச் சக்திவாய்ந்த இலக்கிய விமரிசனம் செய்தவர்கள் என்று சமீப காலத்திய ஐரோப்பிய ஆசிரியர்களில் இருவரைத்தான் சொல்லுகிறார்கள் - கதே (Goethe) என்கிற ஜெர்மன் மொழி ஆசிரியரையும், ஸாந்த் போவ் (Sainte Beave) என்கிற ஃபிரெஞ்சு மொழி ஆசிரியரையும் சொல்லுகிறார்கள். ஓரளவுக்கு முயற்சி செய்து பார்த்தவர்கள் என்று ஹென்ரி ஜேம்ஸ் (Henry James) என்பவரையும், கோலரிட்ஜ் (S. T. Coleridge) என்பவரையும், ஆங்கில இலக்கிய விமரிசகர்களிலே, சொல்வது வழக்கம். இது பற்றி மாறுபட்ட அபிப்பிராயங்கள் பலவும் இருக்கலாம். ஆனால் இலக்கிய விமரிசனக் கலை என்பதை நாவல், கவிதை, நாடகம் போன்ற இலக்கியத் துறைகளுடன் உயர்த்துகிற லக்ஷணம் இது என்பதைச் சொல்வதற்காகச் சொன்னேன், அவ்வளவுதான்.

இலக்கிய விமரிசனத்தால் ஏதோ அளவுகோல்களை நிச்சயித்து நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று நினைப்பதும் தவறு. இலக்கியத்தில் எந்தத் துறையிலுமே ஒரே ஒரு விதிதான் உண்டு. அந்த விதி என்னவென்றால். எப்படிப்பட்ட விதியும் இலக்கியாசிரியன் எவனையும் கட்டுப்படுத்தாது என்கிற விதிதான் அடிப்படையான விதி. இலக்கிய விமரிசனத்தின் முதல் நோக்கு இந்த விதியை இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவர்கள் எல்லோருக்கும் எடுத்துச்சொல்வதுதான்.

உதாரணமாக, சிறுகதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சிறுகதை படிப்பவர்கள் எல்லோருக்கும் ஒரு எண்ணம் இருக்கிறது என்பது தெளிவு. ஹென்ரி எழுதுவதுதான் சிறுகதை என்றும், மபஸான் எழுதுவதே சிறுகதை என்றும் கட்சி கட்டுவது சுலபம்தான். மதிப்புரை எழுதுகிறவனுக்கு இந்தக் கட்சி கட்டுவதும், அளவுகோல் காண்பதும் போதும். ஆனால் இலக்கிய விமரிசகனுக்குப் போதாது. செகாவும் சிறுகதை எழுதியவன் தான் - அவன் கதைகளை எந்த அளவுகோல்களைக்கொண்டும் அளந்து சொல்லமுடியாது என்று சொல்வதுடன், எந்த அளவுகோலும் அணுகமுடியாது என்பதே ஒரு தனிப்பெருமை என்றும் எடுத்துக்காட்டுவது இலக்கிய விமரிசனத்தின் வேலை. அதேபோல, ஒவ்வொரு நல்ல ஆசிரியனும் எழுதிய சிறுகதையிலும் ஒரு பகுதி அளக்கமுடியாதது இருக்கிறது என்பதைக் காட்ட வேண்டும்.

மேலைநாட்டு உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போவதனால், நான் மேலை நாட்டு இலக்கிய விமரிசன முறையையே ஆதரிப்பவன் என்று எண்ணக்கூடாது. இலக்கிய விமரிசனத்திலும் சரி, சிறுகதையிலும் நாவலிலும் சரி, ஒரு தமிழ் உயிர் வேண்டும் என்று எண்ணுகிறவன் நான் என்பதையும் சொல்லிவிடுகிறேன். ஆனால், அந்தத் தமிழ் உயிர் உலகத்திலுள்ள எல்லா இலக்கியத்துக்கும் வாரிசாகப் பிறப்பது என்பதையும் நினைவில் வைத்துக்கொண்டு இலக்கிய விமரிசனம் செய்யவேண்டும்.

மேலை நாட்டு முறை என்று நான் சொல்வது என்ன என்பதையும் ஓர் உதாரணத்தால் விளக்கலாம் என்று தோன்றுகிறது, மேலை நாடுகளில் - சிறப்பாக ஆங்கிலத்தில் - lyric என்பது ஒருவகை சிறு கவிதையைக் குறிப்பதாகும். சரித்திரபூர்வமாகப் பார்த்தால், lyre என்று அங்கு வழக்கிலிருந்த ஒரு சங்கீதக் கருவியில் பாடுவதற்காக அமைந்த சிறு கவிதை. அந்த மூலக்கருத்து மறைந்துவிட்டது எனினும், அந்தத் தன்மையை வைத்தே lyric என்கிற இலக்கியப் பகுதி தோன்றி வழக்கிலுள்ளது. அந்த வார்த்தையைத் தமிழ் இலக்கிய விமரிசனத்தில் கொணர முயற்சிகள் செய்யப்படுகின்றன. புறநானூறு, அகநானூறு முதலிய சங்கநூல் கவிதைகள் lyrics என்று சொல்லப்படுகின்றன. இதற்கு அர்த்தம் கிடையாது. குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடுகிற கதைதான் இது.

இதேபோல realism, naturalism போன்ற வார்த்தைகள் நம்மிடையே, இலக்கிய விமரிசகர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களிடையே, அடிபடுகின்றன. அவற்றிற்கெல்லாம் அர்த்தம் மேலை நாடுகளிலேயே அப்படியொன்றும் முடிவாகத் தீர்மானமான விஷயம் அல்ல. ஏதோ ஓர் அளவில் பாகுபாட்டுக்காக உபயோகிறார்களே தவிர இலக்கிய விமரிசன முடிவுகளிலே இந்த வார்த்தைகளுக்கு அர்த்தமேயில்லை. ஒரு குறிப்பிட்ட கோஷ்டியினர் தங்கள் சிருஷ்டிகளுக்கு Symbolism, Surrealism என்று பெயர் வைத்துக்கொள்ளுகிறார்கள். Symbolism, Surrealism, Stream of Consciousness என்பதெல்லாம் இலக்கிய யுத்திகளே தவிர, இலக்கியம் அல்ல - இலக்கியப் பிரிவுகள் அல்ல என்பதை அறியாமல் நம்மில் பலர் (விமரிசகர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள்தான்) உபயோகிக்கிறார்கள். இத்தனைக்கும் மேலாக idealism, mysticism இவையெல்லாம்கூட இலக்கிய விமரிசன வார்த்தைகளாக அடிபடுகின்றன. அவை கருத்தைப் பிரித்துச் சொல்லுகிற வார்த்தைகளே தவிர இலக்கிய ரீதிகள் அல்ல - இலக்கிய விமரிசனபூர்வமாக. ஒரு தமிழ்ப் பேராசிரியர் naturalism என்றால் இயற்கையை வர்ணிப்பதுதான் என்று கூட எழுதியிருக்கிறார். சங்க இலக்கியமே naturalism தான் என்று எழுதுகிறார்.

தமிழ் இலக்கிய விமரிசனம் இப்படி வளருவது சரியல்ல. தமிழ் உயிர் பெற்று இயங்க வேண்டும் என்று நான் சொல்வதையும் ஓர் உதாரணத்தால் விளக்கலாம் என்று தோன்றுகிறது. புதுமைப்பித்தன் எழுதிய கதைகளில் ஒன்றின் பெயர்மனக்குகை ஒவியங்கள்’. இந்தக் கதையின் ஆதாரத்தை வைத்துக்கொண்டு, நாம் மெளனி, லா. . ராமாமிருதம் முதலியவர்கள் எழுதுகிற சிறுகதைகளில் சிலவற்றை மனக்குகை ஓவியங்கள் என்றே சொல்லலாம். புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதைகளில் 'கயிற்றரவு' 'செல்லம்மாள், 'நினைவுப் பாதை' முதலிய கதைகளை ஏன் நினைவுப் பாதைக் கதைகள் என்று சொல்லக்கூடாது? இந்த மாதிரிப் பாகுபாடுகள் நாம் செய்து தமிழ் இலக்கிய விமரிசனத்தை வளர்க்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.

இலக்கியத் துறைகளில் வளர்ச்சி ஏற்பட ஏற்பட அவற்றுடன் இலக்கிய விமரிசனமும் வளர்ந்தே வருகிறது - வளர்ந்தே வர வேண்டும். இலக்கிய சிருஷ்டிக் காரியத்திலேயே ஓரளவுக்கு இலக்கிய விமரிசனக் காரியமும் கலந்திருக்கிறது - எந்த விஷயத்தைக் கையாளுவது, எதை விடுவது என்று இலக்கியாசிரியன் தீர்மானிப்பதே இலக்கிய விமரிசன அடிப்படையில்தான் நடக்கிறது என்று சொல்ல வேண்டும். ராஜம் ஐயர் ஏன் தன்கமலாம்பாளைஇப்படி எழுதினார், அப்படி எழுதவில்லை என்று கவனிப்பதும், மாதவையாவின் நோக்கைப் புரிந்து கொள்வதும், கவி பாரதியாரை வசனகர்த்தாவாக மதிப்பிடும் நாம் செய்து இலக்கிய விமரிசனக் கலையை வளர்க்கவேண்டும். அதே சமயம் இலக்கிய விமரிசன நோக்குடன் சங்க கால இலக்கியம் முதல் இன்று வரை பார்த்து. பலவிதமான நோக்கங்களை அநுசரித்துப் பார்த்து நமது இலக்கிய அறிவையும் பரப்பையும் விஸ்தரித்துக்கொள்ள வேண்டும். இதெல்லாம் பற்றி ஒரு நோக்குத்தான் உண்டு என்று பண்டித நோக்கு நமக்குச் சொல்லுகிறது. அதைத் தவிர நூறு விதமான நோக்குகள் உண்டு - அத்தனையும் நியாயமானவை என்று இலக்கிய விமரிசனம் நமக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.

இந்தக் காரியத்தை ஒரு சிலர் இப்போது செய்ய முற்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய இலக்கிய விமரிசனக் கலை வெகுதூரம் முன்னேறும் என்றே நான் எதிர்பார்க்கிறேன். தமிழ்ச் சிறுகதை, நாவல் போல் (நாடகத்தைப் பற்றிப் பேசி என்ன பயன்?) தமிழ் இலக்கிய விமரிசனமும் வளரக் காலதேவன் அருளட்டும்.

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி  https://amzn.to/3eOnx2r ஆனந்த்  https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும

மொழிபெயர்ப்பு | க. நா. சுப்ரமண்யம்

மொழிபெயர்ப்பு என்பதைச் சாதாரணமாக ஒரு கலை என்று சொல்வது வழக்கமில்லை. கலையோ , தொழிலோ - மொழிபெயர்ப்பு என்பது இலக்கியத்திலே ஒரு தனித் துறை. அது மிகவும் அவசியமானது. இலக்கிய வளர்ச்சியின் அடிப்படையான காரியங்களிலே மொழிபெயர்ப்பும் ஒன்று. மொழிபெயர்ப்புகள் அதிகம் இல்லாத காலத்திலே இலக்கிய வளர்ச்சி வேகமாக நடைபெறுவதில்லை என்பது சரித்திரபூர்வமாக நமக்குத் தெரிகிற உண்மை. தமிழிலே மொழிபெயர்ப்புகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தோன்றிவிட்டன. கம்பனை மொழிபெயர்ப்பு நூல் என்று சொல்லமுடியாது ; ஆனால் திருக்குறளின் ஒரு பகுதி மொழிபெயர்ப்பு நூல் என்று திடமாகச் சொல்லலாம். மனு , பரதர் , கெளடில்யர் முதலியவர்களின் சம்ஸ்கிருத சூத்திரங்களைக் குறளாசிரியர் மொழிபெயர்த்துத் தமிழாக்கித் தந்திருக்கிறார். தமிழாக்கி என்று சொல்வதிலே ஒரு விஷயம் அடங்கியிருக்கிறது. தமிழிலே வெளிவருகிற மொழிபெயர்ப்புகள் தமிழாகத்தான் இருக்கவேண்டுமா என்று என்னை யாராவது கேட்டால் , வேண்டாம் இருக்கக்கூடாது என்றே நான் பதில் சொல்லுவேன். எந்த மொழிபெயர்ப்புமே முதல் நூல் போலாகிவிடக்கூடாது - முழுதும் தமிழாகிவிடக்கூடாது. மொழிபெயர்ப்பாசிரியன் முத