Skip to main content

அடிமனம் | லிபிடோ | பெ. தூரன்


பாலுணர்ச்சியை பிராய்டு லிபிடோ என்று குறிப்பிட்டாரென்று முன்பே அறிவோம். பாலுணர்ச்சி என்ற தொடரை ஆண் பெண் உடலுறவை நாடி ஏற்படுகின்ற தூண்டுதல் என்ற குறுகிய பொருளில் பிராய்டு வழங்கவில்லை. அதற்கு இன்னும் விரிவான பொருளை அவர் கொடுத்தார். அதை உணர்ந்து கொள்ளாமலேயே பலர் அவருடைய கொள்கையை எதிர்த்தனர். லிபிடோ என்பது வெறும் கலவி உணர்ச்சியல்ல; அது ஒருவன் அல்லது ஒருத்தியின் அன்பு வாழ்க்கையைக் குறிக்கிறது என்று பிராய்டு கூறுகிறார். அன்பு வாழ்க்கை என்பதில் உடல் சம்பந்தமான இன்பமும் அடங்கியிருந்தாலும் அது அந்த இன்பத்தோடு முடிந்துவிடுவதல்ல.
இவ்வகையான பரத்த பொருளில்தான் பாலுணர்ச்சியைக் கொள்ள வேண்டும். குழந்தைகளிடமும் இப்பாலுணர்ச்சியிருக்கின்றது என்கிறபோதும் இப்பரந்த பொருளை மறந்துவிடக்கூடாது.
ஒருத்தி தனது மணவாழ்க்கையிலே அதிகமான அன்புகாண முடியவில்லை. அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையால் அவளுடைய அன்பு வாழ்வு மலர்ச்சியடைந்தது. அவள் ஒருவிதமான கோளாறுமின்றி வாழ்க்கையை நடத்தி வந்தாள். ஆனால் அந்தக் குழந்தை நோய் கண்டு இறந்துவிட்டது. அவளுடைய அன்பு வாழ்வு வறண்டுவிட்டது. விரைவிலே அவளிடத்தில் நரம்பு மண்டலக் கோளாறுகள் தோன்றலாயின.
மேலே கூறிய உதாரணத்திலே கலவி விருப்பம் என்கிற அம்சமே இல்லை. இருந்தாலும் அவளுடைய நோய்க்கு அடிப்படையான காரணம் பாலுணர்ச்சியென்றுதான் பிராய்டு கூறுவார். இதிலிருந்து அவர் பாலுணர்ச்சிக்குக் கொடுத்த விரிவான பொருளை நாம் யூகித்துக்கொள்ளலாம்.
குழந்தையிடமும் பாலுணர்ச்சியுண்டு என்பதையும் இவ்வாறே விரிவான முறையில் பொருள் கொள்ள வேண்டும். ஒரு வீட்டிலே கணவனுக்கும் மனைவிக்கும் ஏதோ மனத்தாங்கல் ஏற்பட்டுவிட்டது. மனைவி கோபித்துக்கொண்டு, சொல்லாமல் தன் பிறந்த வீட்டிற்குப் போய்விட்டாள். கணவனும் அவளைச் சமாதானப்படுத்தி அழைத்துவர உடனே முயற்சி செய்யவில்லை. அவனும் கொஞ்சம் பிகுவாகவே இருந்தான். வீட்டிலுள்ள வயதான குழந்தைகள் தாயின் பிரிவினால் அதிகமாகக் பாதிக்கப்படவில்லை. அவர்கள் வாழ்க்கையில் பலவிதமான இன்பங்களைக் காணப் பழகியிருந்தார்கள். வீதி விளையாட்டு, நண்பர்கள் சேர்க்கை என்றிப்படிப் பல வழிகளில் அவர்கள் சமாளித்துக்கொண்டார்கள். ஆனால் நான்கு வயது நிரம்பாத குழந்தைதான் தாயின் பிரிவால் பாதிக்கப்படலாயிற்று. தாய் இயல்பாகவே குழந்தைகளிடம் மிகுந்த அன்புடையவள். அந்த அன்பை இழந்த கடைசிக் குழந்தையின் நடத்தை சிலநாட்களில் மாறத் தொடங்கியது. ஒழுங்காகக் குளிப்பதும், உண்பதும், மற்ற காரியங்களைச் செய்வதுமாக இருந்த அந்தக் குழந்தை பிடிவாதம் பிடிக்கத் தொடங்கியது. குளிக்கச் செய்வதும், உண்ணச் செய்வதும் பெரும் பிரச்சினையாக முடிந்தது. ஏன் அப்படிச் செய்கிறதென்று யாருக்குமே புரியவில்லை. உடம்புக்கு சரியில்லையோ என்று கூடச் சந்தேகித்து மருத்துவரை அழைத்து வந்து பரிசோதனை செய்தார்கள். உடம்பிலே எவ்விதத் தொந்தரவும் இருக்கவில்லை. கடைசியில் தாய் பிணக்குத் தீர்ந்து திரும்பிய பிறகே குழந்தையின் பிடிவாதம் மறையலாயிற்று.
குழந்தையிடம் பாலுந்தல் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
பிராய்டு தமது மனப்பகுப்பியல் என்ற புதிய மனத்தத்துவப் பகுதியில் பாலுந்தலைப் பிரதானமாக வற்புறுத்திக் கூறுவதைப் பலர் ஆட்சேபித்தார்கள் என்பதை முன்பே கண்டோம். அவ்வாறு ஆட்சேபித்தவர்களில் மிக முக்கியமானவர்கள் அவரோடு பல காலம் ஒத்துழைத்த ஆட்லரும், யுங்குமாவர். வாழ்க்கைக்கு வேகம் கொடுக்கும் பிரதான சக்தி ‘உயர்வுத்தல்’ என்று ஆட்லர் கூறினார். இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் உளவியலில் “தனிநபர் உளவியல்” (Individual Psychology) என்ற ஒரு புதிய கிளையைத் தோற்றுவித்தார்.
லிபிடோ என்பது பாலுந்தல் மட்டுமல்ல; அது வாழ்க்கைக்கு வேகங்கொடுக்கும் வேறு சக்திகளையும் தன்னகத்தே கொண்டது என்று யுங் கூறலானர். மேலும் அவர் நனவிலி உளத்திலே ஒருவனுடைய அநுபவங்களும் இச்சைகளும் அழுந்திக் கிடப்பதோடு மனித இனத்தின் அநுபவங்களும் அழுந்திக் கிடக்கின்றன என்று வியாக்கியானம் செய்தார். இவற்றைப் பற்றி முன்பே குறிப்பிட்டேன். ஒருவன் காணும் கனவுகளை ஆராயும்போது அவனுடைய வாழ்க்கை அநுபவங்களையும் இச்சைகளையுமே அவற்றில் மறைந்துகிடக்கக் காண முயல்வது சரியல்ல என்பது அவருடைய கருத்து. கனவுகள் மனித இனத்தின் வாழ்க்கை அநுபவங்களையும் மறைமுகமாகக் காண்பிக்கும் என்று அவர் சொன்னர். நாடோடிக் கதைகளும், புராணக் கட்டுக்கதைகளும் இந்த மனித இன நனவிலி உளத்தின் தோற்றமே என்பது அவர் கருத்து. இவ்வாறு அவர் பிராய்டுடன் மாறுபட்டு ‘பகுமுறை உளவியல்' (Analytic Psychology) என்ற மற்றொரு உளவியற் கிளையைத் தோற்றுவித்தார்.
இவ்வாறு பலர் பிராய்டுடன் மாறுபட்டாலும் இவர்களுக்குள் அடிப்படையான ஒரு விஷயத்தில் கருத்தொற்றுமை இருப்பதை நாம் கவனிக்க வேண்டும். நனவிலி உளம் என்று மனத்தில் ஒரு பகுதியுண்டென்பதை இவர்கள் யாரும் மறுக்கவில்லை. பிராய்டு கண்டு வெளியிட்ட இந்தக் கருத்து உளவியலில் இன்று முக்கியமான இடம் பெற்றுவிட்டது. பாலுந்தல் என்னும் சக்தியானது வாழ்க்கையின் போக்கை நிறுவுவதில் பெரியதோர் பங்கு கொள்ளுகின்றது என்பதையும் அனைவரும் ஒப்புக்கொள்ளுகிறார்கள்; அதுவே தலைமை ஸ்தானம் வகிக்கிறது என்பதை மறுத்தாலும் அதை அறவே ஒதுக்கிவிட யாரும் முற்படவில்லை. இன்றும் இது உளவியலில் பெரிதும் கவனிக்கப்படுகிறது.
பிராய்டு வகுத்த உளப்பகுப்பியலானது உளவியலில் ஒரு புரட்சியை உண்டு பண்ணியதோடு இன்று வெவ்வேறு துறைகளில் பெரிதும் பேசப்படுகிறது. இலக்கியம், கலைகள், சமூகம் முதலான துறைகளிலும் அது நுழைங்திருப்பதைக் காணலாம். நனவிலி மனக்கோளாறுகளை அடிப்படையாகக்கொண்டே புதிய வகையான இலக்கியமும் கலையும் வளரத் தொடங்கியுள்ளன. குழந்தை வளர்ப்பு, மனநோய் மருத்துவம் முதலிய துறைகளில் இதன் முக்கியத்தை யாரும் இன்று மறுப்பதில்லை.

Comments

Most Popular

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல...

சுதந்திரத்துக்குப் பிறகு மொழிபெயர்ப்புகள் | க. நா. சுப்ரமண்யம்

தமிழிலக்கியத்தில் போதுமான அளவுக்கு இலக்கியபூர்வமான மொழிபெயர்ப்பு நூல்கள் வந்துள்ளனவா என்று கேட்டால் , இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டும். அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்கிற அளவுக்குக்கூட மொழிபெயர்ப்புகள் வெளியாகவில்லை. அதுவும் சமீபகாலத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் எந்த மொழிபெயர்ப்பும் என் கண்ணில் படவில்லை. 1935 க்குப் பிறகு 1950 வரையில் சரசரவெனப் பல உலக இலக்கிய நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பெற்று ஓரளவுக்கு வாசகர்களிடையே ஓர் ஆர்வத்தையும் தூண்டின. அப்போதுங்கூட இலக்கிய வேகத்தை உண்டாக்கித் தாங்கக்கூடிய அளவுக்கு மொழிபெயர்ப்புகள் வந்ததாகச் சொல்வதற்கில்லை. அந்தக் காலகட்டத்தில் மொழிபெயர்ப்புகள் செய்து வெளியிட முன்வந்தவர்கள் ஓரளவுக்குத் தங்கள் ரசனையினால் தூண்டப்பெற்றவர்களாக , இந்த நூல் தமிழில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணி , அதனால் தங்களுக்கு லாபம் என்ன கிடைக்கும் என்கிற எண்ணத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டனர். அந்த அளவுக்குச் சுதந்திரத்திற்குப்பின் ஓர் உந்துதல் , ஈடுபாடு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பிளேட்டோ , ரூஸ்ஸோ , டால்ஸ்டாய் மற்றும் ப...