Skip to main content

அடிமனம் | பிராய்டின் ஆராய்ச்சி | பெ. தூரன்



னக்கோளாறுடையவர்களின் மறந்துபோன பழைய அநுபவங்களை வெளிக்கொணர்வது 'தடையிலாத் தொடர் முறை’யின் முக்கிய சிறப்பாகும். இந்த முறையை பிராய்டு உருவாக்குவதற்குக் காரணமாக இருந்தவர் ஜோசப் பிராயர். மனவசிய நிலையில் இருக்கும்போது ஒரு ஹிஸ்டிரியா நோயாளி தனது பழைய அநுபவங்களைக் கூறியதால் அந்த நோய் குணமாகி வந்ததை பிராயர்தான் முதலில் கவனித்து பிராய்டுக்குக் கூறினார். பிறகு இருவருமாக இந்த முறையைக் கையாளத் தொடங்கினார்கள். இதில் நல்ல பலன் கிடைத்தது. ஆனால் பிராயர் இம்முறையைத் தொடர்ந்து பின்பற்றவில்லை. இம்முறையால் நோயாளிக்கும் மருத்துவருக்குமிடையே சில சிக்கல்கள் ஏற்படுவதைக் கண்ட பிராயர் இதைக் கைவிட்டுவிட்டார். பிராய்டுதான் இதைத் தொடர்ந்து பின்பற்றியதோடு மனவசிய நிலை இல்லாமலேயே பழைய அநுபவங்களையும் அதிர்ச்சிகளையும் கனவிலி மனத்திலிருந்து வெளிக்கொண்டுவருவதற்கு முடியும் என்று கண்டார். அவர் வகுத்த முறைக்குத் தடையிலாத் தொடர் முறை என்று பெயரென்பதும் நமக்கு முன்பே தெரியும்.

இவ்வாறு நனவிலி மனத்திற்குள் நுழைந்து ஆராயும் போது பிராய்டுக்கு சில அடிப்படையான உண்மைகள் புலனாயின. வாழ்க்கையிலே ஏற்படும் அநுபவங்களும், அதிர்ச்சிகளும் அழிந்து போவதில்லை என்று அவர் கண்டார். அவை மனத்திலே எங்கோ அழுங்கிக் கிடக்கின்றன. முக்கியமாகக் குழந்தைப் பருவத்திலே ஏற்படுகின்றவை மறைவதே இல்லை. குழந்தை பிறக்கின்றபோது அதன் மனம் மலராத நிலையில் இருக்கிறது. குழந்தையின் மனம் அதற்குக் கிடைக்கும்படியான அநுபவங்களைக்கொண்டு மலர்ச்சியடைய வேண்டும். ஆகவே அந்த இள மனத்திற்கு ஆரம்ப நிலையில் கிடைக்கும் அநுபவங்கள் மிக முக்கியமானவை. அந்த அநுபவங்களே அக்குழந்தையின் பிற்கால வாழ்க்கை எவ்வாறு அமையும் என்பதற்கு அடிப்படைக் காரணங்களாகின்றன. குழந்தைக்குப் பாரம்பரியமாகப் பெற்றோரிடமிருந்து கிடைக்கும் தன்மைகளும் திறமைகளும்கூட வாழ்க்கையிலே பலிதமாவதற்கு இளமைச் சூழ்நிலையும் அநுபவங்களும் உதவி செய்ய வேண்டும். அதிலும் முக்கியமாக ஐந்து ஆண்டுகளுக்குட்பட்ட குழந்தைப் பருவத்து அநுபவங்கள் உதவ வேண்டும். இதைப் பற்றி குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும், குழந்தை உள்ளம் என்ற இரண்டு நூல்களிலே விரிவாக விளக்கியிருக்கிறேனாகையால் இங்கு மீண்டும் அதை விரிவுபடுத்தாமல் குறிப்பாக மட்டும் கூறுகிறேன்.

மனக் கோளாறுடையவர்களை ஆராய ஆராய பிராய்டுக்கு இரண்டு விஷயங்கள் முக்கியமாக உறுதிப்பட்டன. அவற்றைப் பற்றி அவர் மிக அழுத்தமாகப் பேசலானார். அவற்றில் ஒன்று குழந்தைப் பருவ அநுபவங்களேப் பற்றியது. இந்த அநுபவங்கள் அவருக்கு மிக முக்கியமானவையாகத் தோன்றின. அதனால் அவர் ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் அமைப்பு முழுவதும் அவனுடைய குழந்தைப் பருவமான முதல் ஐந்தாண்டுகளிலேயே அநேகமாக உருவாகிவிடுகின்றது என்று தெளிவாகக் கூறுகிறார். உளவியல் ஆராய்ச்சியில் புகழ்பெற்ற ஆட்லர் (Adler) கெஸல் (Gesell) முதலியோரும் இக்கருத்தையே வலியுறுத்தினர்கள். இன்று இக்கருத்துப் பெரும்பாலும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

பிராய்டு தமது ஆராய்ச்சியால் கண்டறிந்து கூறிய மற்றொரு விஷயங்தான் பெரிய விவாதத்திற்கும் கண்டனத்திற்கும் காரணமாக அமைந்தது. ஹிஸ்டிரியா நோயைக் குணப்படுத்துவதில் புகழ் பெற்றிருந்த ஷார்க்கோவிடம் சென்று பிராய்டு ஓராண்டு வேலை செய்தார் என்று முன்பே அறிந்திருக்கிறோம். ஷார்க்கோ ஒரு சமயம் கூறிய வார்த்தைகள் பிராய்டின் மனத்தில் ஆழ்ந்து பதிந்திருந்தன. மனக்கோளாறு, நரம்புக் கோளாறு நோய்களால் வருந்துகின்றவர்களை ஆராய்ந்த தமது அநுபவத்தைக்கொண்டு அவர் ஒரு விஷயம் சொன்னார். “இம்மாதிரி நோய்களிலெல்லாம் பால் சம்பந்தமான சிக்கலே மிக முக்கியமாக இருக்கிறது. அநேகமாக இதையேதான் நான் காண்கிறேன்” என்று அவர் வெளியிட்டார். இது பிராய்டின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது. பிராயரும், சிரோபக் (Chrobak) என்பவரும் இதேமாதிரி கருத்துக்களை பிராய்டுக்குப் பேச்சுவாக்கில் கூறியிருக்கிருர்கள். ஆனால் அந்தக் கருத்தை அடிப்படையாக வைத்து அவர்களில் யாரும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்யவில்லை. அந்த வேலையை பிராய்டே செய்யலானார்.

நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்யும்போது அவர்கள் தங்கள் அந்தரங்கமான அநுபவங்களைக் கூறுவதை பிராய்டு கேட்டார். தடையிலாத் தொடர்முறையும் இதற்கு உதவியாக இருந்தது. அவ்வாறு அந்தரங்க விஷயங்கள் வெளியாகும்போது நோய்க்குக் காரணமாகப் பெரும்பாலும் பாலுணர்ச்சியும் அதன் கோளாறுமாக இருப்பதை அவரே கண்டார். அவர் மேலும் மேலும் பல நோயாளிகளே ஆராய்ந்தபோது பாலுந்தலே வாழ்க்கையில் பிரதானமான ஆதிக்கம் செலுத்துகிறது என்கிற எண்ணம் உறுதிப்படலாயிற்று. அதனால் அவர் பாலுந்தலையே வாழ்க்கைக்கு வேகம் கொடுத்து அதைச் செலுத்தும் சக்தியென்று அழுத்தந்திருத்தமாகக் கூறலானார். பால் சம்பந்தமான வாழ்க்கையில் திருப்தியடைந்திருக்கும் யாருக்கும் மனப்பிரமை போன்ற நரம்பு மண்டலக் கோளாறு வருவது சாத்தியமில்லை என்று அவர் கருதினார். பிராய்டுக்கு முன்னாலும் மனப்பிரமை நோய்களைத் தீர்க்க முயன்றவர்களிற் பலர் அந்நோய்களுக்கும் பாலுந்தலுக்கும் தொடர்பிருக்கலாம் என்று சங்தேகப்பட்டதுண்டு. ஆனால் பிராய்டைப் போலப் பாலுந்தலையே வாழ்க்கையின் வேகசக்தியாக யாரும் கருதவில்லை.

பால் என்றாலும் பாலுந்தல் என்றாலும் என்ன என்று ஒரு சந்தேகம் தோன்றலாம். அவற்றைப் பற்றிச் சுருக்கமாக இங்கே தெரிந்து கொள்ளுவோம். மனிதனை ஆட்டி வைக்கிற சக்திகள் சில அவனுக்குள்ளேயே இயற்கையாக அமைந்து கிடக்கின்றன. இந்த சக்திகள் மனிதனுக்கு ஒரு தனிப்பட்ட வேகம் கொடுத்து அவனை உந்துகின்றன; அவனை உந்திச் செயலிலே புகும்படியாகச் செய்கின்றன. இப்படி உந்துவதால் அந்த சக்திகளையே உந்தல்கள் என்று கூறுவார்கள். இந்த உந்தல்களே வாழ்க்கையின் போக்கை அமைக்கின்றன. பசி என்பது ஓர் உந்தல். இது மனிதனுக்கு வேகம் கொடுத்து அவனைத் தொழில் புரியுமாறு செய்கின்றது. இது ஒரு வலிமை வாய்ந்த உந்தல். இதன் தூண்டுதலால் மனிதன் நல்ல காரியமும் செய்வான்; கெட்ட காரியமும் செய்வான். அவனுடைய மற்ற இயல்புகளுக்கு ஏற்றவாறு அவனுடைய நடத்தை அமையும். இனப் பெருக்கத்திற்குக் காரணமாக ஏற்படுகின்ற ஆண், பெண் கவர்ச்சியைப் பாலுந்தல் என்று பொதுவாகக் கூறலாம். பால் என்பது ஆண், பெண் என்ற பகுப்புக்குப் பொதுப்படையான பெயராக நிற்கின்றது. ஆனால் அதற்கு இங்கே விரிவான பொருள் உண்டு. அது ஆண் பெண் என்ற பிரிவினையை மட்டும் காட்டுவதில்லை. அவர்களுக்குள்ளே ஏற்படும் கவர்ச்சியையும், உடல் சம்பந்தமான இன்ப உணர்ச்சியையும், இனப் பெருக்க விருப்பத்தையும் அந்தச் சொல் குறிப்பாகக் காட்டுகிறது. காமம், காதல் என்றெல்லாம் பேசுகின்றோம். ‘இணைவிழைச்சு’ என்று ஒரு சொல் பழைய நூல்களிலே வழங்குகின்றது. இவற்றின் பொருள்களையெல்லாம் பால் என்ற சொல் தாங்கி நிற்கிறது. இந்த உந்தல்தான் மிக மிக வலிமை வாய்ந்தது. இதுவே வாழ்க்கையமைப்புக்கு அடிப்படை என்பது பிராய்டின் எண்ணம்.

இந்தப் பாலுந்தலானது குழந்தைப் பருவத்திலேயே வேலை செய்கிறதென்று பிராய்டு கூறினார். குமாரப்பருவம் எய்துகின்ற காலத்தில்தான் திடீரென்று இந்தப் பாலுணர்ச்சி தோன்றுகிறதென்பது பொதுவாக அனைவரும் கொண்டிருக்கும் அபிப்பிராயம். அது குழங்தைப் பருவத்திலேயே இருக்கிறதென்று பிராய்டு கூறியதும் அவருடைய கொள்கைக்குப் பல எதிர்ப்புக்கள் தோன்றலாயின.

பிராயர் பிரிந்து போனபிறகு பிராய்டு தனியாகத் தமது ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தினார். இவ்வாறு பத்தாண்டுகளுக்கு மேல் அவர் நடத்திய ஆராய்ச்சிகளின் பயனாக அவர் தமது கொள்கையை உறுதிப்படுத்த முயன்றார். 1905-ஆம் ஆண்டு வாக்கில் இவருடைய கொள்கைகளில் மற்ற உளவியல் அறிஞர்கள் விசேஷ கவனம் செலுத்தலானார்கள். அவற்றை எதிர்த்தவர்கள்கூட வெறும் பரிகாசம் செய்வதோடு நின்றுவிடாமல் தங்கள் ஆட்சேபங்களைத் தெளிவாக வரையறுத்துக் கூற முயன்றார்கள். பிராய்டை ஆமோதித்துப் பின்பற்றியவர்களில் ஆட்லர், யுங் (Jung) ஆகிய இருவரும் முக்கியமானவர்கள். அவர்கள் இருவரையும் பிராய்டின் மாணவர்கள் என்று கூறுவார்கள். ஆனால் ஆட்லர் அதை ஒப்புக்கொள்வதில்லை. அவர் பிராய்டின் கருத்துக்களை ஆரம்பத்தில் ஆமோதித்துச் சுமார் பனிரண்டு ஆண்டுகள் அவரோடு உழைத்திருக்கிறார் என்பது மட்டும் உண்மை. பிராய்டு தமது தொழிலை நடத்திய வியன்னாவில் குறிப்பிடத்தக்க சிலர் அவரைப் பின்பற்றிச் சேர்ந்தார்கள். அவர்களில் மிக முக்கியமானவர்தான் ஆட்லர்.

ஆனால் பிற்காலத்தில் ஆட்லர் பிராய்டுடன் கருத்து வேறுபாடு கொள்ளலானார். வாழ்க்கைப் போக்கில் பாலுணர்ச்சிக்குப் பிரதான இடம் அளிப்பதை அவரால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாலுணர்ச்சியானது வாழ்க்கையில் முக்கிய இடம் பெறுகிறது என்பதை அவர் அநேகமாக ஏற்றுக்கொண்டாலும் அதுவே வாழ்க்கையின் போக்கை அமைக்கிறது என்பதை அவர் சரியென்று கருதவில்லை. வாழ்க்கையின் போக்குக்கு அடிப்படையான வேகம் கொடுத்து அதை அமைப்பது ‘உயர்வுந்தல்’ என்பதே என்று அவர் கருதினார்.

ஒவ்வொருவனும் தான் ஏதாவது ஒரு வகையில் உயர்வடைய வேண்டும் என்ற ஒரு வேகத்தைக் கொண்டிருக்கிறான். தாழ்மை உணர்ச்சிக்கு எதிராக இந்த வேகம் தோன்றுகிறது. இதற்கு ‘உயர்வுத்தல்’ என்று பெயர். இதுவே வாழ்க்கையின் போக்கை அமைப்பதில் தலைமை இடம் வகிக்கிறது என்று கூறி ஆட்லர் ஒரு புதிய பாதையை வகுத்துக்கொண்டார். அதனால் அவர் பிராய்டுடன் ஒத்துழைப்பதிலிருந்து விலகிக்கொண்டார்.[1]

ஆட்லருக்குப் பிறகு யுங்கும் பிராய்டை ஆமோதிப்பதலிருந்து விலகலானார். ப்ளூயிலர் (Bleuler) என்பவரோடு சேர்ந்து யுங் சுவிட்ஸர்லாந்திலுள்ள ஜுரிக்கில் தொழில் செய்துவந்தார். அவர்கள் இருவரும் பிராய்டின் கருத்தை ஏற்று அதைப் பின்பற்றி மனநோய்களுக்குச் சிகிச்சை செய்துவந்தார்கள். உளப்பகுப்பியல் முறையை முதலில் பின்பற்றிய மனநோய் மருத்துவர்களில் இவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். யுங் தம்மைப் பின்பற்றுவதைக் கண்டு பிராய்டும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டிருந்தாரென்று சொல்ல வேண்டும். அமெரிக்காவிலுள்ள கிளார்க் பல் கலைக்கழகத்தில் சொற்பொழிவு நடத்த 1909-ல் பிராய்டு, யுங் ஆகிய இருவருக்கும் சேர்ந்து அழைப்புக் கிடைத்தது. இவ்வாறு அவர்கள் நெருங்கி ஒத்துழைத்து வந்தாலும் நாளடைவில் யுங்கின் கருத்தும் மாறுபடலாயிற்று. பாலுணர்ச்சியே பிரதானம் என்று பிராய்டு வற்புறுத்துவதை நாளாக நாளாக யுங்காலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாலுணர்ச்சிதான் வாழ்க்கையின் போக்கை அமைக்கிறதென்றும், அதுவே வாழ்க்கையின் வேகமாக அல்லது உந்தலாக இருக்கிறதென்றும் பிராய்டு கூறுகிறால்லவா? இந்த உந்தலுக்கு அவர் லிபிடோ (Libido) என்று பெயர் கொடுத்தார்.

ஆகவே லிபிடோ என்பது பிராய்டின் கொள்கைப்படி பாலுணர்ச்சி உந்தலையே முக்கியமாகக் குறிக்கிறது. யுங் இந்த லிபிடோவுக்கு இன்னும் விரிவான பொருள் கொடுக்கலானார். லிபிடோ என்பது வாழ்க்கைக்கு வேகம் கொடுக்கும் ஒரு பொதுவான உந்தலென்றும் அது பாலுந்தலையும் தன்னுள் அடக்கியிருந்தாலும் பாலுந்தல் ஒன்று மட்டுமன்று என்றும் அவர் கூறினர்.

வேறொரு வகையிலும் யுங்கின் கருத்து பிராய்டின் கருத்திலிருந்து மாறுபடலாயிற்று. நனவிலி மனம் என்று மனத்தில் ஒரு பகுதி உண்டென்றும் அதிலே வாழ்க்கை அநுபவங்களும், அதிர்ச்சிகளும், அடக்கப்பட்ட இச்சைகளும் மறைந்து கிடக்கின்றன என்றும் பிராய்டு தமது ஆராய்ச்சிகளின் பயனாகக் கூறினாரல்லவா? இந்த நனவிலி மனமானது குழந்தையின் பிறப்பிலிருந்தே அமைகின்றது என்பது பிராய்டின் எண்ணம். மலர்ச்சியடையத் தொடங்கும் குழந்தை மனத்தில் பதியும் முதல் அநுபவங்களே முக்கியமானவையென்றும், அதனால் குழந்தைப் பருவமே பிற்கால வாழ்க்கையின் போக்கை அமைக்கும் வலிமை வாய்ந்தது என்றும் அவர் கூறியுள்ளதையும் நாம் முன்பே அறிவோம். கனவிலி மனக் கொள்கையை யுங் ஏற்றுக்கொண்டாரென்றாலும் அவர் நனவிலி மனத்திற்கு இன்னும் விரிவான வியாக்கியானம் கொடுக்கத் தொடங்கினார். அந்த கனவிலி மனத்திலே பிராய்டு கூறுகிறவாறு குழந்தைப் பருவம் முதல் ஏற்படுகிற அநுபவங்கள் முதலியவை அமிழ்ந்து கிடப்பதோடு இன்னும் வேறொரு முக்கியமாக அமிசம் அதில் உண்டென்று யுங் சொன்னர். ஒருவனுடைய வாழ்க்கையனுபவம் சிறியது; அதைவிட மிகப் பெரியவை அவனே உள்ளிட்டிருக்கும் மானிட இனத்தின் அநுபவங்கள். மானிட இனத்தின் அநுபவங்களெல்லாம் நனவிலி மனத்தில் மறைந்து கிடக்கின்றன என்று யுங் கூறலானார். இவ்வாறு கருத்து வேறுபடவே அவரும் 1913-லிருந்து பிராய்டை விட்டுப் பிரிந்தார்.

ஆட்லரும், யுங்கும் பிரிந்தது பிராய்டுக்கு வருத்தத்தை உண்டுபண்ணியிருக்குமென்றாலும் அவர் தமது ஆராய்ச்சியின் பயனாகக் கண்ட முடிவை உறுதியோடு வெளியிடுவதிலிருந்து பின்வாங்கவில்லை. பாலுணர்ச்சியே வாழ்க்கையின் பிரதான உந்தல் என்ற எண்ணத்தை எவ்வகையிலும் தளர்த்திக்கொடுக்க அவர் இசையவில்லை.



[1] ஆட்லரின் கொள்கைகளைத் தாழ்வு மனப்பான்மை என்ற நூலில் விரிவாக விளக்கியிருக்கிறேன். ஆதலால் அது பற்றி இங்கு சுருக்கமாகவே கூறியுள்ளேன்.

Comments

Most Popular

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.