Skip to main content

இலக்கிய விமரிசனம் - சில சிந்தனைகள் | க. நா. சுப்ரமண்யம்எனக்கு இலக்கிய விமரிசனம் செய்வதிலே அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. இலக்கியத் துறைகளிலே சிலருக்குச் சில துறைகளில்தான் ஈடுபாடிருக்க முடியும். எனக்குச் சிறுகதை, நாடகம், நாவல், கதை என்கிற துறைகளிலே ஈடுபாடு உண்டு. விமரிசனம், கட்டுரை போன்ற துறைகளில் அவ்வளவாக ஈடுபாடு கிடையாதுதான். எனினும் ஒரு இருபத்தைந்து வருஷங்களாகவே நான் இலக்கிய விமரிசனம் செய்துகொண்டு வரவேண்டியதாக இருந்திருக்கிறது. இஷ்டமில்லாமலேதான் நான் இலக்கிய விமரிசனம் செய்து கொண்டு வருகிறேன் - தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்தினால். சில சமயம் நான் ஆழந்தெரியாமல் காலை விட்டுவிடுவதும் உண்டு - ஆனால் நான் சொல்வதெல்லாவற்றையும் என்னளவில் உண்மையென்று நம்பித்தான் சொல்கிறேன். என்னளவில் உண்மைதான். அதனால் உங்களுக்கும் உண்மையாகத்தானே இருக்கவேண்டும்?

இலக்கிய விமரிசனத்தின் அவசியத்தைப்பற்றிப் பலரும் சொல்லிவிட்டார்கள். அவசியம் என்று ஏற்றுக்கொள்ளுபவர்களும்கூட இன்று தமிழில் இலக்கியம் சரியானபடி வளர்ச்சியடையாத தோஷத்தினால் இலக்கிய விமரிசனத்துக்கு அவ்வளவாக அவசியமில்லை என்று எண்ணுவதாகத் தெரிகிறது. ஆனால் சிறுகதை, நாவல், நாடகம் என்பது போல இலக்கிய விமரிசனமும், இலக்கியத்திலே ஒரு பகுதிதான். இலக்கியத்துக்கு அப்பால் நின்று கொண்டு அது எதுவும் சாதித்துவிடாது. இலக்கிய விதிகளுக்குட்பட்டு அதுவும் சிறுகதை, நாவல், நாடகம் போல ஒரு தனித்துறையாக இயங்கவேண்டும். இலக்கிய விமரிசனம் இலக்கியத்தில் ஒரு துறை- வசனத்தில் ஒரு துறை. சிறுகதை, நாவல், நாடகம் போல அதுவும் தவிர்க்க முடியாதது; வளர வேண்டியது.

சமீபகாலம் வரையில் வசனத்தை ஒரு இலக்கியத் துறையாகத் தமிழ்ப் பண்டிதர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம். பெஷியின் தேம்பாவணியைப் பண்டிதர்கள் குறிப்பிடுவார்கள் - அவருடைய பரமார்த்த குரு கதையைச் சொல்லமாட்டார்கள். கிருஷ்ணப்பிள்ளையையும், மனோன்மணீயம் ஆசிரியரையும் இலக்கிய கர்த்தாவாகச் சொல்லுகிறவர்கள், வேதநாயகம் பிள்ளையையும், ராஜமையரையும் இலக்கிய கர்த்தாக்களாகச் சொல்லுவதே கிடையாது. சமீபகாலத்தில்தான் இந்த நிலைமை ஓரளவுக்கு மாறிக்கொண்டு வருகிறது. இன்னமும் முழுவதும் மாறிவிடவில்லை. இன்றைய வசனத் துறைகள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளுகிற காலம் வந்துதான் தீரும் - வந்து கொண்டிருக்கிறது.

விமரிசனத்துக்கும் தமிழில் தொல்காப்பியத்திலே சூத்திரம் இருக்கிறது என்று எடுத்துக்காட்ட நம்மவர்கள் தவறுவதில்லை. தமிழ் இலக்கணமே ஒரு விதத்தில் இலக்கிய விமரிசனம் என்கிற அபிப்பிராயமுள்ளவர்களும் நம்மிடையே உண்டு. இந்தப் பழமை மோகம் ஓரளவுக்கு நல்லது தான். ஆனால் தொல்காப்பியத்தின் 'அதாரிடி'யைக் காட்டி ஒரு சித்தாந்தத்தை ஸ்தாபிப்பதைவிட முக்கியமான காரியம் ஒன்று நமக்காகக் காத்திருக்கிறது. சிறுகதையையும் நாவலையும் இலக்கிய உருவங்களாக மேல் நாட்டிலிருந்து கடன் வாங்கிக்கொண்டு அவற்றிற்குத் தமிழ் உருவம் தர முயன்றது போலவே, நாம் இலக்கிய விமரிசனத்திலும் மேல்நாட்டு உருவத்தைக் கடன் வாங்கிக்கொண்டு, அதற்கு ஒரு தமிழ் உயிர் தரவேண்டும். அதற்கான முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டுதான் வருகின்றன - நடைபெற்றுக்கொண்டே வரும்.

புதுமைப்பித்தன் எழுத்திலும், மெளனியின் எழுத்திலும் சிறுகதை தமிழ் உருவம் பெற்றது. எனக்குத் தாகுரிடம் - அவர் கவிதையிலோ, நாடகங்களிலோ, நாவல்களிலோ அவ்வளவாக ஈடுபாடு கிடையாது. ஆனால் அவர் மேல் நாட்டு இலக்கிய உருவமான சிறுகதைக்கு இந்திய உருவம் தர முயன்றவர் என்று அவரைப் போற்றுகிறேன் நான். சிறுகதைக்கு ஆதாரம் தொல்காப்பியத்தில் இருக்கிறது என்று சொல்பவர்களும்கூட, தொல்காப்பியத்துக்கு முந்தியோ பிந்தியோ கதைகளைச் சொல்ல இயலாமல் 1720-ல் பெஷி எழுதிய பரமார்த்த குரு கதையைத்தான் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. உதாரணமாக இதைக் கலைக் களஞ்சியத்தில் சிறுகதை என்கிற பகுதியில் பார்க்கலாம். ஆகவே, தொல்காப்பிய சூத்திரத்தை விட்டுவிட்டு நாம் இன்றைக்கு, மேலைநாடுகளிலிருந்து கடன் வாங்கிக்கொண்டுள்ள இலக்கிய உருவங்களைத் தமிழாக்கி, தமிழ் ஆன்மாவுடன் சிருஷ்டிக்க முற்படவேண்டியது அவசியம்.

இலக்கிய விமரிசனத்தின் அவசியத்தை விளக்க இன்னொரு உதாரணமும் சொல்லலாம். தமிழில் மட்டும்தான் பண்டை இலக்கியங்கள் பல அழிந்துவிட்டன என்பதில்லை. பல மொழி இலக்கியங்களில் எத்தனையோ நூல்கள் பல காரணங்களால் அழிந்துபட்டிருக்கின்றன. ஸோஃபாக்ளிஸ் என்கிற கிரேக்க நாடக மேதை எழுதிய நாடங்களில் ஒரு ஏழெட்டுத்தான் கிடைத்திருக்கின்றன. அவர் நூறு இருநூறு நாடகங்கள் எழுதினார் என்றும், அவை வெற்றிகரமாகவே நடிக்கப்பட்டன என்றும் தகவல் கிடைக்கிறது - உரைகாரர்களின் கூற்றுக்களிலிருந்து. நமக்குப் பல தமிழ் பண்டைய நூல்களைப் பற்றித் தகவல் கிடைக்கிற மாதிரி. அதேபோல் காலத்திய நாகரிகத்தைச் சேர்ந்த கில்காமெஷ் காவியத்தைப் பற்றிய செய்திகள், விமரிசனமூலம், ஹீப்ரூ மற்றும் எகிப்திய மொழி மூலம் நமக்குக் கிடைக்கின்றன. ஆதி காவியம் என்று சொல்லவேண்டிய, ஐயாயிரம் ஆறாயிரம் வருஷங்களுக்கு முந்திய கில்காமெஷ் காவியத்தைச் சமீபத்தில்தான் புதைபொருள் ஆராய்ச்சியாளர் கண்டிருக்கிறார்கள். கவிதையில் அவற்றின் பெயர்கள் காப்பாற்றப்படாவிட்டால் நமக்கு லங்காபுரியையோ மிதிலையையோ ட்ராயையோ பற்றி ஒன்றும் தெரியாது என்று கவிகள் வர்ணிப்பது வழக்கம். அதேபோல பல நூல்களைப்பற்றியும் செய்திகளையாவது தெரிந்து கொள்வதற்கு நமக்கு இலக்கிய விமரிசனம் உபயோகப்பட்டிருக்கிறது.

மேல் நாட்டிலே மிகச் சிறப்பான கலையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இலக்கிய விமரிசனம் பெரிதாக வளர்ந்திருப்பதாக நாம் எண்ணுகிறோம். ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களின் எண்ணிக்கையைப்போலப் பத்து மடங்கு, நூறு மடங்கு எண்ணிக்கையுள்ள நூல்கள் மேல் நாடுகளில் வந்திருக்கின்றன என்பதும் உண்மைதான். ஆனால் அதேபோலத் தமிழிலும் பற்றி நூல்கள் வராமல் இல்லை. குறளையும், சங்க காலத்து இலக்கியங்களையும் பற்றிய நூல்கள் இந்த அறுபது எழுபது வருஷங்களில் ஆயிரக்கணக்கில் வந்திருக்கின்றன. ஆனால் அவற்றை இலக்கிய விமரிசனமாக ஏற்றுக்கொள்ள முடியுமா என்று கேட்டால், முடியாது என்றே சொல்லவேண்டும். ஒரே சுவட்டில், சொன்னதைத் திருப்பித் திருப்பிச் சொல்கிற நூல்களாகத்தான் அவை அமைந்திருக்கின்றன. புதுச் செய்திகள், புது நோக்குகள் எதையும் அவற்றில் காண இயலாது. பழசையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. பழசையும் புதிய இலக்கியக் கண்ணோட்டத்தோடு பார்க்க நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் இலக்கிய விமரிசனம் வளரும். பழசை மீறிப் புதுச் சிருஷ்டியில்லை. நான் படித்திருக்கிறேனோ இல்லையோ - முறையாக எந்த மொழி இலக்கியத்தையுமே படிப்பதில் நம்பிக்கையற்றவன் நான்; முறையாகப் படிப்பதினாலேயே ரஸனை ஓரளவு மழுங்கிவிடுகிறது என்றும் நினைப்பவன் நான் - பழசு எல்லாவற்றிற்கும், சிலப்பதிகாரத்துக்கும், கம்பராமாயணத்துக்கும் சங்ககாலத்து நூல்களுக்கும் வாரிசுதான் நான். அதேபோல உலகத்தில் எந்த மொழியில் எழுதப்பட்ட இலக்கியத்துக்குமே - இன்றைய இலக்கிய கர்த்தா என்கிற ரீதியில் நான் வாரிசுதான். இலக்கியத்தில் தப்பமுடியாத விதி இது. பழசில்லாமல் புதுசு இல்லை. அந்தப் பழமையை இன்றையப் புதுமையாகச் செய்துகொள்ள நமக்குத் தமிழில் இலக்கிய விமரிசனம் உதவவேண்டும். அவரவர் சக்திக்கேற்ப இந்த இலக்கிய விமரிசனத்தை ஒவ்வொரு இலக்கியாசிரியனுமே - சொல்லாமல் - செய்கிறான். இலக்கிய விமரிசகன் சொல்லிச் செய்யவேண்டிய காரியம் இது.

தமிழிலே இடைக்காலப் பண்டிதர்களின் சில காரியங்களினால் பழசுக்கும், புதுசுக்கும் இடையே ஒரு பிளவு ஏற்பட்டுவிட்டது. இந்தப் பிளவை மூடவேண்டியது இலக்கிய விமரிசகனின் பொறுப்பு என்றே நான் எண்ணுகிறேன். புதுமை, மறுமலர்ச்சி எழுத்தாளர்கள், 'பழசா, அது எங்களுக்கு வேண்டாம்' என்றும் பண்டிதர்கள், புலவர்கள், 'புதுசா, அதைத் திரும்பிப் பார்க்கமாட்டோம்' என்றும் கூறுகிற இன்றைய நிலை மாறுவதற்குத் தமிழ் இலக்கிய விமரிசகர்கள் பெரிதும் உதவ முடியும்.

இலக்கிய விமரிசனத்துக்குத் தமிழ் உருவம் கொடுக்கக் செய்யப்படுகிற முயற்சியிலே, பழசைக் கற்றவர்கள் உதவ முடியும். உதாரணமாக ஒன்று சொல்லுகிறேன் அது எத்தனை தூரம் இன்று ஒரு விமரிசன ரீதியாக ஆட்சி செலுத்த முடியும் என்பது பின்னர் பிரயோகத்தினால் தெளிவாக வேண்டிய விஷயம். ஆனால் மனத்தில் தோன்றியதை இங்கு அப்படியே, உடனடியாகச் சொல்லுகிறேன். ஜப்பானிய இலக்கிய கர்த்தாக்கள் சிலருடன் ஒரு சமயம் பேசிக்கொண்டிருக்கும்போது அவர்கள் தங்கள் சிறுகதையிலே இரு பகுதிகள் விமரிசன ரீதியாகக் காண்பதாகச் சொன்னார்கள் - I-Stories. non I - Stories என்று. அதாவது நான் என்று ஆசிரியரோ அல்லது மற்ற ஒருவரோ முன்னின்று தன்னைப்பற்றியே சொல்லிக்கொள்கிற கதைகள் ஒரு ரகம். மற்றது, இந்த 'நான்' வராத கதைகள் அதே போலப் பண்டைத் தமிழ் இலக்கியத்தில் அகம், புறம் என்ற துறைகளை இன்றையச் சிறுகதைகளுக்குப் பிரயோகிக்கக் கூடாது என்று யார் சொல்லமுடியும்? மரபுக்கு ஒத்து வருகிற தமிழ் இலக்கிய விமரிசனமாக இது வளரலாமே!

அதற்குப் பதிலாக நாம் செல்வகேசவராய முதலியார், .வே.ஸு. ஐயர் முதலியவர்களைப் போலவே ஆங்கில இலக்கிய விமரிசனத்தைப் பின்பற்ற முயலுகிறோம். அவர்கள் காலத்தில் பிரமாதமாகத் தோன்றிய Mathew Arnold என்பவருடைய விமரிசன ரீதியை அவர்கள் பின்பற்ற முற்பட்டார்கள். அந்த மாதிரி ஆங்கில, மேலை நாட்டு வழியிலே இலக்கிய விமரிசனம் செய்ய முற்படுவது தவறு என்றே நான் நினைக்கிறேன். ஆனால் அதற்காக நாம் மேலை நாட்டு இலக்கிய விமரிசனத்தைப் படிக்கக்கூடாது என்றோ அதிலிருந்து நமக்குத் தேவையான பாடங்களைக் கற்றுக்கொள்ளக்கூடாது என்றோ அர்த்தமில்லை. ஆனால் தமிழில் செய்யப்படுகிற இலக்கிய விமரிசனமெல்லாம் தமிழ் மரபை ஒட்டி இருக்க வேண்டும். Lyric என்கிற பதத்துக்கோ, Stream of Consciousness என்கிற பதத்துக்கோ, realism. என்கிற பதத்துக்கோ, நேரான தமிழ் அர்த்தம் கண்டுபிடித்துச் சொல்வதுதான் தமிழ் இலக்கிய விமரிசகனின் வேலை என்று எடுத்துக்கொள்வது சரியல்ல. lyre என்கிற ஐரோப்பிய சங்கீதக் கருவிக்கு ஏற்பட்ட ஒரு இசை அளவு கோலைக் கொண்டு, lyric என்பது ஒரு கவிதை உருவமாகப் பிற்காலத்தில் ஏற்பட்டது. lyre என்கிற கருவியே நமக்குத் தெரியாது - lyric என்று நமது கவிக்கு மாறு பெயரிட்டு அழைப்பதால் யாருக்கு என்ன லாபம்? Stream of Consciousness என்பது ஒரு குறிப்பிட்ட மனோதத்துவ அறிவுக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு இலக்கிய உத்தி. அதை ஒரு தமிழ் விமரிசகர் - அவரும் பண்டிதர் தான் - ஏதோ தெரிந்த மாதிரி எடுத்துக் கையாளுகிற போது, அதைக் 'குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடுகிற கதை' என்றேதான் சொல்லவேண்டும். இந்தப் பண்டிதருக்கு மேலை நாட்டு இலக்கிய ரீதிகளில் இன்றையக் கொழுந்து என்று சொல்லக்கூடிய Stream of Consciousness என்பது பற்றித் தெரிந்த விஷயமே குறைவுதான். அதை நனவோடை இலக்கியம் என்று ஒரு உத்தியை இலக்கியமேயாக்கி - அவர் தமிழில் சொல்லுகிறபோது, 'ஐயோ! இதெல்லாம் வேண்டாமே. பழைய தமிழை மாசுபடுத்துவதுடன் நிறுத்திக் கொள்ளுங்களேன்' என்று சொல்லத்தான் என் போன்றவர்களுக்குத் தோன்றுகிறது. Realism என்கிற இலக்கிய விமரிசக வார்த்தைக்கு அர்த்தம், யார் அதை உபயோகிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது - எந்த சந்தர்ப்பத்தில் உபயோகிக்கிறார்கள் என்பதையும் பொறுத்தது. அதிலிருந்து தமிழர்கள் என்ன புரிந்துகொண்டு என்ன சொல்கிறார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம். இப்படி எத்தனையோ வார்த்தைகளைத் தமிழில் கொண்டுவர முயற்சிகள் நடக்கின்றன. அதற்கு அவசியமேயில்லை. முழுவதும் தமிழாகவே இலக்கிய விமரிசனம் செய்யமுடியும் - செய்தே தீர வேண்டும். நாவல், சிறுகதை, கவிதை இவற்றில் தமிழ் விமரிசனம் செய்யப் போதிய வளம் இன்று உண்டு. வளம் போதாது - விமரிசனம் வேண்டாம் என்று சொல்பவர்கள், வசதிக் குறைவினால் இன்றைய இலக்கியத்தைப் படிக்காதவர்கள் என்றுதான் நான் சொல்லுவேன்.

மேலை நாடுகளில் இலக்கிய விமரிசனத்தையும், நூல்களை மதிப்புரை செய்வதையும் பிரித்துப் பார்க்கிறார்கள். அது நியாயம் என்றுதான் சொல்லவேண்டும். நூல்களை மதிப்பிடுவது இலக்கிய விமரிசனத்தின் ஒரு சிறு பகுதிதான். காவிய கர்த்தாக்களிலே சிறப்பாக ஷேக்ஸ்பியர், ஹோமர், டாண்டே என்றும், நாவல் இலக்கியக் கர்த்தாக்களிலே டாஸ்டாவ்ஸ்கி, டால்ஸ்டாய், மெல்வில், டிக்கன்ஸ், பால்ஸாக் என்றும் சொல்லுகிற மாதிரி, இருவரே தான் இலக்கிய விமரிசனத்தை இந்த இரண்டாயிரம் வருஷங்களில் சிறப்பாக, மஹோந்நதமாகச் செய்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். தத்துவ ரீதியில் இலக்கிய விமரிசனம் செய்வதில் கதே என்கிற ஜெர்மானியரும் சரித்திர ரீதியில் இலக்கிய விமரிசனம் செய்வதில் ஸாந்த் போவ் என்கிற ஃபிரெஞ்சுக்காரரும்தான் இலக்கிய விமரிசன மேதைகள் என்று மேல் நாட்டில் கருதப்படுகிறது. ஆங்கில இலக்கியத்தில் கோலரிட்ஜையும், ஹென்றி ஜேம்ஸையும் சிறப்பாகச் சொல்வார்கள். அந்த அளவுக்குத் தமிழில் இலக்கிய விமரிசனம் வளரவேண்டும், இலக்கியத்தில் சிறப்பான ஒரு துறையாக வேண்டும் என்பதே என் ஆசை.

எதையும் அநுதாபத்தோடு பார்க்கவேண்டும் என்று சொல்கிறார்கள். இலக்கியத்தில் அநுதாபம் தேவையேயில்லை. எந்த இலக்கியாசிரியனுக்கும் யாருடைய அநுதாபமும், ஊக்குவித்தலும் தேவையில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

இலக்கிய விமரிசகன் பற்றற்றவனாக, நடுநிலைமையில் நிற்பவனாக இருக்கவேண்டுமென்று பலரும் சொல்கிறார்கள். அது சாத்தியமேயல்ல. இலக்கிய விமரிசகனுக்கு நான் சொல்லக்கூடியதெல்லாம் இதுதான்: பற்றுக்களை வளர்த்துக்கொள். ஒன்றல்ல, நூறல்ல, ஆயிரமல்ல - பத்தாயிரம், லக்ஷம் என்று பற்றுக்களை வளர்த்துக்கொள். பார்ப்பானுடைய நோக்கையும், அதற்கெதிர்மாறானதாக இன்று கருதப்படும் பார்ப்பானல்லாதவனுடைய நோக்கையும் புரிந்து செரித்துக்கொள்ளக் கற்றுக்கொள். அதேபோல பண்டை நோக்கையும் இன்றைய நோக்கையும், கம்யூனிஸ்டின் நோக்கையும், கம்யூனிஸ்டை எதிர்ப்பவனுடைய நோக்கையும் அறிந்துகொள்ள, நிதானம் தவறாமல் அநுபவிக்கப் புரிந்துகொள். இப்படிப் பற்றுக்களை வளர்ப்பதே இலக்கிய விமரிசகனின் தகுதியை வளர்க்கும். இலக்கியத்துக்கும், வாழ்க்கைக்கும் சாட்சிபூதமாக நிற்பதைத்தான் தன் இலக்கிய விமரிசனத்துக்கு ஆதாரமாகக் கொள்ள வேண்டும் இலக்கிய விமரிசகன். பற்றறுத்துக்கொள்வது சாத்தியமல்ல - பற்றை வளர்த்துக்கொண்டு, இலக்கியத்தை ஆயிரம் கோணங்களிலிருந்து ஒருங்கே பார்த்து அநுபவிக்கத் தெரிந்தவன் தான் நல்ல இலக்கிய விமரிசகன்.

தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதரவில் (16-8-58) பேசிய ஒரு பேச்சின் ஆதாரமான கருத்துக்கள் -

Comments

Most Popular

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர